வெளிப்படைத் தன்மையற்றுப் போயிருக்கும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்

சுஜாதா

தி ஹிந்து


உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான பொறுப்புள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் இப்போது அனைவரின் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது


மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள் அனைத்தும் பொதுப் பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் அறிவித்த கொள்கையை தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை சில வாரங்களுக்கு முன்பாகத் திரும்பப் பெற்றுக் கொண்டது. தங்களுக்கு விருப்பமில்லை என்றால் தன்னாட்சிக் கல்லூரிகள் பொதுப் பாடத்திட்டத்தைப் பின்பற்றத் தேவையில்லை என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திட்டங்களை வகுத்துத் தருகின்ற, வகுக்கப்படுகின்ற திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்ற, உயர்கல்வி மற்றும் ஆய்வுகளை மேம்படுத்த கல்வி நிறுவனங்களிடையே ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள உயர்நிலை அமைப்பான தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் (TANSCHE) உயர்கல்வித் துறை அறிவித்த அந்தக் கொள்கைக்கான ஒப்புதலை அதற்கு முன்பாக வழங்கியிருந்தது.

1992ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் பதினைந்து உறுப்பினர்களுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தை உருவாக்கிய சட்டத்தில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அந்த மன்றம் கூட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டிருக்கின்றது. ஆயினும் அந்த விதியை இந்த மன்றம் ஒருபோதும் பின்பற்றியதே இல்லை. சட்டத்தின் படி செயல்படாத அந்த உயர்கல்வி மன்றம் தயாரித்த பாடத்திட்டத்தை அனைத்து கல்லூரிகளும்  கட்டாயம் பின்பற்ற வேண்டுமென்று அரசு வலியுறுத்திய செயல் பல்வேறு பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சார்ந்த பேராசிரியர்களிடம் கோபத்தை மட்டுமே ஏற்படுத்தியது.    

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கான இணையதளம் முற்றிலும் செயலிழந்து போயிருக்கிறது. இணையதளத்தில் உள்ள கடைசிப் பதிவேற்றம் பத்தாண்டுகளுக்கும் முந்தையதாக இருக்கிறது. அந்த இணையதளத்தில் மாநில உயர்கல்வி மன்றத்தின் அதிகாரிகளாகப் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளவர்கள் ஓய்வு பெற்றுச் சென்று விட்டவர்களாகவே இருக்கின்றனர். திறமைவாய்ந்த நபர்களை மன்றத்தில் நியமிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி  மன்றம் உருவாக்கப்பட்டதிலிருந்தே மன்றத்தின் உறுப்பினர்-செயலாளர், துணைத் தலைவர் போன்ற பொறுப்புகளை வகிக்கும் அதிகாரிகளின் நியமனங்கள் அரசியல் சார்ந்த நியமனங்களாகவே இருந்து வருகின்றன.   

உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர்கள் குறித்த விவரங்களைத் தருகின்ற வகையிலே எந்தவொரு இணையதளமும் இல்லாத காரணத்தால் மன்றத்தின் உறுப்பினர்-செயலாளர், துணைத் தலைவர் ஆகியோர் சட்டத்தால் அவசியமாக்கப்பட்டுள்ள மன்றத்தை உருவாக்கியிருக்கிறார்களா, மன்றத்தின் உறுப்பினர்கள் யார் யார், அவர்கள் அனைவரும் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்ற பேராசிரியர்கள் அதிகம் கவலையடைந்துள்ளனர்,.

உயர்கல்வித் துறை அதிகாரிகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட அரசியல் பிரச்சனைகளால் மனோன்மணியம் சுந்தரனர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் 2013-14ஆம் ஆண்டில் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் என்று கூறுகின்ற கல்வியாளர்கள் அப்போதிலிருந்தே உயர்கல்வி மன்றத்தின் செயல்பாடுகள் வீழ்ச்சியடையத் துவங்கி விட்டன  என்கிறார்கள்.  

உயர்கல்வி மன்றத்தின் மீதான நம்பிக்கை குறைந்து போன நிலைமையிலும், 2018ஆம் ஆண்டு அரசு ஆவணம் உயர்கல்வி மன்றத்தால் தன்னுடைய நம்பகத்தன்மையைப் பராமரித்துக் கொள்ள முடிந்திருப்பதைக் காட்டுகிறது. பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றுவது, கல்லூரிகளில் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் குறித்த நடவடிக்கைகள், கூடுதலாக மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது, உயர்கல்விக்கான திட்டங்களை உருவாக்குவது  போன்ற பல்வேறு முக்கியமான பிரச்சனைகளில் உயர்கல்வி மன்றம் கூடி விவாதங்களை மேற்கொண்டு உரிய தீர்வுகளைக் கண்டிருக்கிறது.  

2021-22 மற்றும் 2022-23ஆம் ஆண்டிற்கான அரசின் கொள்கைக் குறிப்புகள் தொற்றுநோய் இருந்த காலகட்டத்தில் உயர்கல்வி மன்றம் மேற்கொண்ட பணிகள் குறித்த விரிவான பார்வையை வழங்குகின்றன. எனவே கோவிட்-19 தொற்று நோயின் காரணமாக உயர்கல்வி மன்றத்தால் மூன்று ஆண்டுகளுக்குச் சரிவரச் செயல்பட முடியவில்லை என்ற கூறப்படுகின்ற காரணம் நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கிறது. அவ்வாறான நிலைமையில் அண்மையில் வெளியிடப்பட்ட 2023-24ஆம் ஆண்டிற்கான கொள்கைக் குறிப்பில் உயர்கல்வி மன்றத்தின் செயல்பாடுகளுக்காக  ஒரேயொரு பக்கம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அது கடந்த ஆண்டு தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் பொதுப் பாடத்திட்டத்தை உருவாக்க முன்மொழிவதாக அறிவித்தது குறித்து இருக்கிறது. அந்த திட்டத்தில் உயர்கல்வி மன்றத்தில் உள்ள அதிகாரிகள் தங்களுக்கு கீழ் செயல்பட்டு வருகின்ற பல்கலைக்கழகங்களைச் சார்ந்த துணைவேந்தர்கள் மற்றும் மூத்த ஆசிரியர்களிடமிருந்து ஒருமித்த கருத்தைப் பெற வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலும்  சென்னையைச் சார்ந்த ஆசிரியர்கள் மட்டுமே பொதுப் பாடத்திட்டத்தை வடிவமைப்பதில் ஈடுபடுத்தப்பட்டதாக  பேராசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பொதுப் பாடத் திட்டத்தை வடிவமைக்கும் முயற்சியில் பங்கேற்பதற்காக உயர்கல்வி மன்றத்தால் அழைக்கப்பட்ட ஆசிரியர்கள் குறித்து எந்தவொரு தகவலும் பகிரப்படவில்லை என்று அந்தப் பேராசிரியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். பொதுப் பாடத்திட்டம் குறித்து மூத்த பேராசிரியர்களிடமிருந்து மட்டுமல்லாது, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களிடமிருந்தும் கிளம்பிய எதிர்ப்பு உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர்கள் தங்களுக்கான பொறுப்புகளைப் பற்றி சிறிதும் புரிந்து கொள்ளாமல் இருந்ததற்கான அறிகுறியாகவே இருந்தது.   

உயர்கல்வி மன்றம் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி ஆசிரியர்களின் ஆய்வுகளுக்கான நிதியாக இருபத்தைந்து கோடி ரூபாய் மானியத்தை அரசிடமிருந்து பெற்று வருகிறது. தங்களுடைய ஆய்வுத் திறனை வெளிப்படுத்துகின்ற மாணவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டில் உயர்கல்வி மன்றம் ஆற்றிய பணிகள் குறித்து மிகச் சில விவரங்கள் மட்டுமே 2023-24ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் கொள்கை ஆவணத்தில் இடம் பிடித்திருக்கின்றன. உயர்கல்வி மன்றம் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான பாடத்திட்டத்தைத் தயாரிப்பதற்காக  தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்திற்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் கொடுத்தது என்றும், ‘ஆய்வுகளில் சமீபத்திய போக்குகள்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் பட்டறை ஒன்றை நடத்தியதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. .  

குடிமக்களுக்கான உரிமைச் சாசனம் இல்லாமலிருப்பது வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து நிதியைப் பெற்று வருகின்ற பொது அமைப்பாக இருக்கின்ற தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் அரசியல் தலையீட்டால் தன்னுடைய பொருத்தப்பாடை இழந்துவிட்டது என்ற சந்தேகத்தை மேலும் தூண்டுவதாக இருக்கிறது. தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்பை அதிகரிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களைச் சார்ந்த ஆசிரியர்களிடம் உள்ள கவலைகளை அகற்றுவதே இப்போது அரசின் தலையாய பொறுப்பாக இருக்கிறது.  

https://www.thehindu.com/opinion/op-ed/the-opaqueness-of-tansche/article67219784.ece#:~:text=It%20is%20supposed%20to%20meet,syllabus%20that%20TANSCHE%20has%20drafted.


Comments