நூல் திறனாய்வு: தேசியக் கல்விக் கொள்கை - பின்னணி மர்மங்கள்

பெ.க. பெரியசாமி ராஜா

புதிய ஆசிரியன்

சந்திராயன் குறித்து நாடு முழுவதும் எழுந்த மகிழ்வான, பெருமிதமான உரையாடல்கள் அனைத்தும் இத்தகைய அறிவியல் ஆக்கங்களுக்குக் காரணமான அறிவியலாளர்கள் கல்வி கற்றது என்னவோ தற்போது  நடைமுறையில் இருந்து வருகின்ற கல்வி முறையில்தான் என்பதையே நமக்கு நினைவுபடுத்துகின்றன. குறிப்பாக அணு விஞ்ஞானியான அப்துல்கலாம்,  சந்திரயானை ஏவிய இஸ்ரோ  நிறுவனத்தின்  தலைவரான  சிவன் போன்றோர் தங்களுடைய பள்ளிக் கல்வியை மாநில அரசின் தமிழ்வழிக் கல்வியின் மூலமே பெற்றுள்ளனர்  என்பதும் இயல்பாக நமது கவனத்திற்கு வருகிறது.  

தேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019 குறித்து வெளிவந்துள்ள நூல்களில் இருந்து பெரிதும் வேறுபட்டதாக  இந்த நூல் உள்ளது.  இந்த கல்விக் கொள்கை வரைவில் சுதந்தரத்திற்கு முன்பும் பின்பும் ஏற்படுத்தப்பட்ட கல்விக் குழுக்கள் முன்வைத்த கல்விக் கொள்கைகள், நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றி எதுவும் பேசப்படாததை கவனப்படுத்துகிற இந்த நூல் நான்கு முக்கியமான காரணிகளினால் கவனிக்கப்பட வேண்டிய தன்மையைக் கொண்டதாக இருக்கிறது எனலாம்.  

இந்த ஆய்வு நூல் தனித்தன்மை பெறுகிற கூறுகளில் முதலாவதும் பிரதானமானதுமான காரணமானது, இதன் அடிப்படை சான்றாதாரப் பின்புலமாகும்.  எவருக்கும் காணக் கிடைக்கிற விதமாக இணையவெளிகளில் கொட்டிக் கிடக்கின்ற தகவல்கள், ஆய்வுக்குரிய தரவுகளாக மாறி இந்த நூலின் பலமாகி  இருக்கின்றன. அதிகாரம் சார்ந்து சொல்லப்படும் எவற்றிற்கும் எவரும் எந்தச் சான்றுகளும் கேட்பதில்லை. அவை குறித்த கேள்விகளை  எழுப்புவதில்லை. எடுத்துக்காட்டாக வடமொழி, வேத காலம் குறித்த தகவல்கள் சார்ந்த விவாதங்களில் மிகத் தெளிவாக, மௌனமாய்க் கடந்து விடுபவர்கள்கூட தமிழ், ஆதிச்சநல்லூர், கீழடி குறித்து பேசுபவர்களின் மீது பாய்ந்து ஆதாரங்களைக் கேட்டு குதறி விடுவதைக் காணத்தானே செய்கிறோம். அவ்வாறானவர்களுக்கும் விளக்கமளிக்கும் வகையில், இந்த நூலின் ஒவ்வொரு எழுத்தும் சான்றாதாரங்களுடன் உள்ளது. 

இரண்டாவதாக, கல்விக்குழு அமைக்கப்பட்டது தொடர்பாக நடந்தவை குறித்து காலமுறை வரிசைப்பட்ட தரவுகள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளன. கல்விக்கொள்கையை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டவர்களின் பின்னணிகளை  விரிவாக  விளக்குகிற இந்த நூலில், குழுவில் இருந்த சிலரின்  தனிப்பட்ட பார்வைகள் எவ்வளவு அறிவியல்பூர்வமற்ற வகையில் உள்ளன என்பதைக் காண முடிகிறது.

மூன்றாவதாக,  இதுவரையிலும் பழமைவாதத்தைத்  தூக்கிப் பிடிப்பதாகவோ அல்லது தனியார்மயத்தை வழிமொழிவதாகவோ  மட்டுமே இந்த வரைவறிக்கை குறித்து தனித்துச் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு மாறாக, இந்த இரண்டையும் வரைவறிக்கை நுட்பமாக எவ்வாறு ஒரு புள்ளியில் இணைக்கிறது என்பதை இந்த நூல் தெளிவாக  உணர்த்துகிறது.  அதாவது, சம்ஸ்கிருதம், வேதக் கல்வி, குருகுலக் கல்வி, நாளந்தா, தட்சசீலம் எனப் பழமையைத் தூக்கிப் பிடிப்பது போன்று தோற்றம் தருகின்ற அதே அறிக்கை, அயல்நாடான  அமெரிக்காவின் 'ஐ வி  லீக்' பள்ளிகளை  மாடல் பள்ளிகள் என்று பரிந்துரைப்பதை இந்த நூல் கவனப்படுத்துகிறது. 

நான்காவது காரணமானது,  இன்றைய காலத்தின் தேவையாக உள்ளதான  மன  உணர்வு தொடர்பானதாகும்.  ஒரு கருத்தை முன்வைப்பவர்கள் கொண்டிருக்கும் அதே மனநிலையில் அதற்கு மாற்றான கருத்தை முன்வைப்பவர்களும் கொண்டுள்ள தொடக்க நிலை அரசியல் சார்பு நிலைக்கு வெளியேயான தன்மையுடன் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. தெளிவான அரசியல்  பார்வைக்கு இந்த நூலை முன்னுதாரணமாகச் சொல்லலாம். ஏனெனில் என்ன சொல்ல வருகிறார்கள்  என்பதைவிட,  வாசித்து முடிக்கையில்  அது தொடர்பாக  என்னவாக உணர வைக்கப்படுகிறோம் என்பதே மிக முக்கியமானதாகும்.   இவ்வளவு தெளிவாக பின்னணி மர்மங்கள் விளக்கப்பட்ட பின்பும் வாசிப்பவர்களுக்கு எந்தவொரு சிறு அவநம்பிக்கையும் ஏற்பட்டு விடாமல் நூலானது கவனமாகத் தொகுக்கப்பட்டிருப்பதை அவசியம் குறிப்பிட வேண்டும்.   இதனையே நூலின் முழு வெற்றி எனலாம்.  

நூலின்  வரிசை ஒழுங்கமைவு நம்மை நூலினுள் முழுவதுமாக இணைத்துக் கொள்ள உதவுகிறது. தமிழில் எழுதப்பட்டுள்ள இந்த நூலின் மையமானது  தமிழுடன்  மட்டுமே நின்றுவிடாமல்  இருக்க வேண்டும். பங்காளம், மலையாளம், கன்னடம், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும். குறைந்தபட்சம் வரைவு அறிக்கை முழுமையாக வெளியிடப்பட்ட ஆங்கிலம், ஹிந்தியில் மொழிபெயர்ப்பு வருவது தேசத்தின் நலனுக்கானதாகும். அனைவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் என்பதை வாசித்து முடிக்கிற ஒவ்வொருவரையும் உணர வைக்கும் வகையில் தேசியக் கல்விக் கொள்கை - பின்னணி  மர்மங்கள் என்ற இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இது போன்ற ஆக்கங்களை நூல் ஆசிரியர் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே வாசித்து முடிக்கையில் தோன்றிய எண்ணமாகும்.  

தேசியக் கல்விக் கொள்கை - பின்னணி  மர்மங்கள் 
பேராசிரியர் தா.சந்திரகுரு 
பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் 272 விலை: ரூ 250

Comments