கீதா பிரஸுக்கு காந்தி அமைதி விருது - மனித அவலத்தின் அடியாழத்திற்கு இந்தியாவை இட்டுச் செல்லும் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சியாளர்கள்
சம்சுல் இஸ்லாம்
கௌண்டர் கரண்ட்ஸ்
2023 ஜூன் 22
1995ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 125வது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட
வேளையில் இந்திய அரசால் நிறுவப்பட்ட மதிப்புமிக்க சர்வதேச விருதான காந்தி அமைதி விருது
2021ஆம் ஆண்டிற்கு கோரக்பூரில் அமைந்துள்ள கீதா பிரஸுக்கு வழங்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விருதானது மகாத்மா காந்தி முன்னிறுத்திய லட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதில்
முக்கியமான பங்கையாற்றிய தனிநபர்கள்/நிறுவனங்களுக்கே வழங்கப்பட வேண்டும். யாருக்கு
அந்த விருதை வழங்குவது என்பதைத் தேர்வு செய்கின்ற நடுவர் குழுவில் இந்தியப் பிரதமர்
(குழுவின் தலைவர்), எதிர்க்கட்சித் தலைவர், இந்தியத் தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர்
ஆகியோர் இடம் பெறுவர். 2022ஆம் ஆண்டு காந்தி அமைதி விருதிற்காக கீதா பிரஸை ஒருமனதாகத்
தேர்ந்தெடுத்ததாக தேர்வுக் குழு அறிவித்திருந்த போதிலும், அந்தக் குழுவில் உறுப்பினராக
இருந்தும் விருதிற்காகத் தேர்வு செய்யும் கூட்டத்திற்குத் தன்னை அழைக்கவில்லை என்று
மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு
செய்திருந்தது கவனிக்கத் தகக்து.
‘கடந்த நூறு ஆண்டுகளாக மக்கள் மத்தியில் சமூகம் மற்றும் கலாச்சார மாற்றங்களை மேம்படுத்துவதில் பாராட்டத்தக்க பணிகளை கீதா பிரஸ் செய்து வந்திருக்கிறது’ என்று 2021ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசைப் பெற்றதற்காக கீதா பிரஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கீதா பிரஸ் தனது நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.
காந்தியின் சமகாலத்தவர்களான கீதா பிரஸ் நிறுவனத்தின் நிறுவனர்களான
சேத் ஹனுமன் பிரசாத் போதார் (1892-1971), சேத் ஜெய்தயாள் கோயந்த்கா (1885-1965) ஆகியோர்
1948 ஜனவரி 30 அன்று காந்தியைக் கொலை செய்வதற்கான சதி செய்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றவர்கள்
என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சூத்திரர்களின் நிலைமையை மேம்படுத்துவதை, குறிப்பாக
ஹிந்துக் கோயில்களுக்குள் அவர்கள் நுழைவதை வலியுறுத்தி மேற்கொண்டு வந்த பணியின் காரணமாகவே
அவர்கள் காந்தியை வெறுத்து வந்தனர். 1949 டிசம்பர் 22 அன்று (இரவு 11.00 மணி) பாபர்
மசூதியில் திடீரென்று ராமர், சீதை சிலைகள் தோன்றியதன் பின்னணியில் மற்றவர்களுடன் இணைந்து
கீதா பிரஸ் நிறுவனர்களும் செயல்பட்டனர் என்பது பரவலாக அறியப்படாத தகவலாகும்.
கீதா பிரஸுக்கு காந்தி அமைதி விருது வழங்கப்பட்டுள்ள செய்தி
காந்திய விழுமியங்கள், மனிதநேயம், நாகரிக நெறிமுறைகளைப் போற்றுகின்ற அனைவரையும் அதிர்ச்சிக்குள்
ஆழ்த்தியுள்ளது. அந்த விருது இதற்கு முன்பு காலனித்துவம், நிறவெறி, சர்வாதிகாரத்திற்கு
எதிராகப் போராடிய தான்சானியாவின் ஜூலியஸ் கே. நைரேரே (1995), நெல்சன் மண்டேலா
(2000), பேராயர் டெஸ்மண்ட் டுட்டு (2005), சேக் முஜிபுர் ரஹ்மான் (2020) போன்றோருக்கு
வழங்கப்பட்டுள்ளது. காந்தி அமைதி விருது பெற்றவர்களில் தொழுநோய்க்கு எதிரான போராட்டத்தில்
முன்னணியில் இருந்து செயல்பட்ட கெர்ஹார்ட் பிஷ்ஷர் (1997), பாபா ஆம்தே (1999), யோஹெய்
சசகாவா (2018) ஆகியோரும் அடங்குவர்.
இந்த விருதை வழங்குவதற்கான அளவுகோல் கடந்த காலங்களிலும் இதேபோன்று
சமரசம் செய்து கொள்ளப்பட்டுள்ளது என்னவோ உண்மைதான். ஹிந்து சகோதரத்துவத்தின் ஒரு பகுதியாக
இயங்கி வருகின்ற, காந்திய தத்துவத்துடன் எந்தவிதத்திலும் தொடர்பைக் கொண்டிராத ராமகிருஷ்ணா
மிஷன் (1998), பாரதிய வித்யா பவன் (2002) விவேகானந்த கேந்திரா (2015) அக்சய பாத்ரா
அறக்கட்டளை (2016), ஏகல் அபியான் டிரஸ்ட் (2017) போன்ற அமைப்புகளும் இதற்கு முன்னர்
தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த விருதைப் பெற்றுள்ளன.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு
(இஸ்ரோ 2014), ஓமானின் சுல்தான் கபூஸ் பின் சைத் அல் சைத் (2019) என்ற வளைகுடா மன்னருக்கும்கூட
அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரோ, சுல்தான் கபூஸ் போன்றவர்கள் காந்தியின் கொள்கைகளை
எந்த வகையில் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கின்றனர் என்பது இதுவரையிலும் விளக்கிடப்படாத
ரகசியமாகவே இருந்து வருகிறது.
கீதா பிரஸைப் புனிதப்படுத்தும் இதுபோன்ற செயல் உண்மையில்
2022ஆம் ஆண்டிலேயே ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சியாளர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. கீதா பிரஸ்
நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தலித் இனத்தைச் சார்ந்த அப்போதைய
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2022 ஜூன் 4 அன்று கோரக்பூரில் உள்ள அந்த நிறுவனத்தின்
தலைமையகத்திற்கு நேரில் சென்றிருந்தார். உத்தரப்பிரதேச ஆளுநர், முதலமைச்சர் முன்னிலையில்
அப்போதைய குடியரசுத் தலைவர் உரையாற்றியது குறித்து அப்போது பத்திரிகை தகவல் அலுவலகம்
(https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1831175) பின்வருமான செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது:
‘தனது வெளியீடுகள் மூலம் மக்களிடம் இந்தியாவின் ஆன்மீகம்
மற்றும் கலாச்சார அறிவைக் கொண்டு செல்வதில் கீதா பிரஸ் மிக முக்கியமான பங்கையாற்றியுள்ளது...’.
பகவத் கீதை தவிர ராமாயணம், புராணங்கள், உபநிடதங்கள், பக்த சரித்திரம் போன்ற புத்தகங்களை
கீதா பிரஸ் வெளியிட்டிருக்கிறது என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். ‘இந்த நிறுவனம்
இதுவரையிலும் எழுபது கோடிக்கும் அதிகமான புத்தகங்களை வெளியிட்டு சாதனை படைத்திருக்கிறது.
அது ஹிந்து மதம் சார்ந்த புத்தகங்களை வெளியிடும் உலகின் மிகப்பெரிய நிறுவனம் என்ற பெருமையைப்
பெற்றுள்ளது. நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மிகக் குறைந்த விலையில் மதம் தொடர்பான
புத்தகங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது’ என்று கீதா பிரஸை குடியரசுத் தலைவர் பாராட்டினார்.
அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் கீதா பிரஸைப்
பாராட்டியதைத் தொடர்ந்து ‘கீதா பிரஸ் வெளியிட்டு வரும் கல்யாண் இதழ் ஆன்மீகப் பார்வையில்
சேகரித்து வைத்துக் கொள்ளக்கூடிய இலக்கியமாக மதிப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளது. கீதா
பிரஸின் மிகவும் பிரபலமான வெளியீடுகளில் ஒன்றாகத் திகழும் அந்த இதழ் இந்தியாவில் மிகவும்
பரவலாக வாசிக்கப்படுகின்ற மதம் சார்ந்த இதழாக இருக்கிறது. கீதா பிரஸின் தற்போதைய
1850 வெளியீடுகளில் 760 வெளியீடுகள் சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளன.
மீதமுள்ள வெளியீடுகள் குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, பெங்காலி, ஒரியா, தமிழ், கன்னடம்,
அசாமி, மலையாளம், நேபாளி, உருது, பஞ்சாபி, ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் வெளியாகியிருப்பது
வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது இந்தியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது’
என்று குறிப்பிட்டார். கிழக்கிலிருந்து மேற்கு மற்றும் வடக்கிலிருந்து தெற்கே என்று
அனைத்து இடங்களிலும் மதம் மற்றும் ஆன்மீகத்திற்கான அடித்தளம் இந்தியக் கலாச்சாரத்தில்
ஒரே மாதிரியாகவே உள்ளது’ என்றும் அவர் கூறினார்.
தங்கள் நிறுவனத்தின் கிளைகளை வெளிநாடுகளிலும் உருவாக்குவது
என்ற எதிர்காலத் திட்டத்தில் கீதா பிரஸ் பெரும் வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்திய
குடியரசுத் தலைவர் ‘அத்தகைய விரிவாக்கத்தின் மூலம் ஒட்டுமொத்த உலகமும் இந்தியக் கலாச்சாரம்
மற்றும் தத்துவத்தின் பலன்களைப் பெறும்’ என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார். அவர் ‘உலகை
நம் நாட்டுடன் இணைத்து வைக்கின்ற இந்தியக் கலாச்சாரத்தின் தூதர்களாக வெளிநாடுகளில்
வசித்து வருகின்ற புலம்பெயர் இந்தியர்களுடனான உறவை கீதா பிரஸ் மேம்படுத்திக் கொள்ள
வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார்.
‘இந்தியாவின் ஆன்மீக, கலாச்சார அறிவைப்’ பரப்புகின்ற கீதா
பிரஸின் கருத்தியல் பங்களிப்பின் மீது குடியரசுத் தலைவர் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்
என்பதையே உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகக் கருதப்படும் இந்தியக் குடியரசின் தலைவரின்
அந்த உரை தெளிவாகக் காட்டியது. குடியரசுத் தலைவரைப் பொறுத்தவரை இந்தியா என்பது ஹிந்து
இந்தியா என்றே பொருள்படுவதாலேயே அவர் தன்னுடைய
உரையில் கீதா பிரஸ் ‘ஹிந்து மதம் சார்ந்த புத்தகங்களை வெளியிடும் உலகின் மிகப்பெரிய
பதிப்பகம்’ என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியிருந்தார். கீதா பிரஸின் வெளியீடுகளின் எண்ணிக்கையை
1850 என்றும், பதிப்பகத்தின் வெளியீடுகளின்
எண்ணிக்கை எழுபது கோடிக்கும் அதிகமான பிரதிகள் என்றும் மிகச் சரியாகத் தகவலை அவர் பகிர்ந்து
கொண்டிருந்தார்.
சதி, பெண்களைத் தாக்குவது போன்ற செயல்களைப் போற்றுகின்ற ஹிந்து
நூல்களைப் பிரசுரித்து வரும் கீதா பிரஸை இந்தியக் குடியரசுத் தலைவர் - ஜனநாயக-மதச்சார்பற்ற
இந்தியக் குடியரசின் பாதுகாவலராக இருப்பவர் பாராட்டியது மட்டுமல்லாது அதனைப் புனிதப்படுத்தவும்
செய்தார். அந்த நாள் ஜனநாயக-மதச்சார்பற்ற இந்தியக் குடியரசைப் பொறுத்தவரை மிகவும் துயரமான
நாளாகும். கீதா பிரஸ் விதவைகள் / விவாகரத்து செய்தவர்கள் / கைவிடப்பட்ட பெண்களின் மறுமணத்தை,
அவர்கள் வேலை தேடுவதை மற்றும் பாலியல் பலாத்காரம் குறித்து செய்திகள் வெளியிடுவதை எதிர்க்கின்ற
வெகுஜன ஹிந்து நூல்களை வெளியிட்டு வருகிறது. அதுவே ஹிந்துப் பெண்கள் சொர்க்கத்தை அடைவதற்கான
ஒரே வழியாக இருப்பதாக அவர்களுடைய வெளியீடுகள் கூறுகின்றன.
இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியை வகிப்பதற்காக இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தின் அறுபதாவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ‘நான் [பெயர்] கடவுளின் பெயரால்
சத்தியம் செய்கிறேன் / இந்தியக் குடியரசுத் தலைவர் என்ற பதவியை (அல்லது குடியரசுத்
தலைவருக்கான செயல்பாடுகளை) உண்மையாக நிறைவேற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன். என்னால்
முடிந்தவரை அரசியலமைப்பு மற்றும் சட்டம் ஆகியவற்றைப் பேணவும், பாதுகாக்கவும், காப்பாற்றவும்
உறுதியேற்கிறேன். இந்திய மக்களுக்கான சேவை, நல்வாழ்வுக்காக என்னை அர்ப்பணித்துக் கொள்வேன்’
என்று தான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை குடியரசுத் தலைவர் கோவிந்த் அன்றைய தினம் துரதிர்ஷ்டவசமாக
மறந்து போனார்.
அரசியலமைப்பின் முகப்புரையில் விளக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சியமைப்பின்
தன்மை மிகத் தெளிவுடனே இருக்கிறது. ஜனநாயகக் குடியரசாக இருக்கின்ற இந்தியாவின் குடிமக்கள்
அனைவருக்குமான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காகவே
இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அரசியலமைப்பின் கடமையிலிருந்து குடியரசுத்
தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு எந்தவொரு விலக்கும் நிச்சயமாக அளிக்கப்படவில்லை. ஆயினும்
சட்டப்பூர்வமான அந்த உறுதிப்பாட்டை முற்றிலுமாக நிராகரித்து கோரக்பூரில் உள்ள கீதா
பிரஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு அந்த நிறுவனத்தை அவர் வாய்விட்டுப்
பாராட்டியிருந்தார்.
‘ஹிந்து’ வாழ்வியல்
முறையை ஹிந்துப் பெண்களுக்குக் கற்றுத் தருகின்ற வெளியீடுளை மிகப் பெரிய எண்ணிக்கையில்
வெளியிட்ட இந்தியாவின் மிகப் பெரிய பதிப்பகம் கீதா பிரஸ் என்று இந்தியக் குடியரசுத்
தலைவர் மிகச் சரியாகவே கூறியிருந்தார். அவர்களால் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் நாடு
முழுவதும் குறிப்பாக ஹிந்தி பேசுகின்ற பகுதிகளில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
ரயில் நிலையங்களில் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டிருக்கும் கடைகளில், அரசாங்கத்தின் சாலையோரக்
கடைகளில் அந்த வெளியீடுகள் விற்கப்படுகின்றன.
இந்த விஷயம் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை கீதா
பிரஸ் வெளியிட்டிருக்கிறது. ஹனுமன் பிரசாத் போதார் எழுதிய ‘பெண்களுக்கான கல்வி’ (நாரி
சிக்க்ஷா), சுவாமி ராம்சுக்தாஸ் எழுதிய ‘குடும்ப
வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது’ (கிரஸ்த் மெய்ன் கைசே ரஹென்) ஜெய் தயாள் கோயந்த்கா எழுதிய
‘பெண்களுக்கான கடமைகள் பற்றிய கல்வி’ (ஸ்ட்ரையோன் கே லியே கர்தவ்யா சிக்க்ஷா), ‘பெண்களுக்கான
மதம்’ (நாரி தர்மம்) போன்ற நூல்கள் அவற்றில் முக்கியமானவையாகும். அவை தவிர பெண்களுக்கென்று
வெளியான கல்யாண் இதழின் சிறப்பு இதழ்களும் இருக்கின்றன. இவையனைத்தும் ஆங்கிலம் மற்றும்
பிற இந்திய மொழிகளிலும் கிடைக்கின்றன. ஆங்கிலப் பதிப்புகள் வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே
மிகவும் பிரபலமாக உள்ளன.
அந்த நூல்களின் ஆசிரியர்கள் சிவபுராணம், மனுஸ்மிருதி போன்ற
பண்டைய நூல்களிலிருந்து விரிவாக மேற்கோள்களை எடுத்துக் காட்டியுள்ளனர். அவை தவிர மற்ற
பிற ‘புனித’ நூல்களிலிருந்தும் பெருமளவிற்கு
கடன் பெற்றுக் கொண்ட அவர்கள் ஆண்களுக்குக் கீழ்ப்படிந்த பெண்ணை/மனைவியையே மிகச் சிறந்த
ஹிந்துப் பெண் என்று தங்களுடைய நூல்களில் நிலைநிறுத்தி இருக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக ‘குடும்ப வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது’
என்ற தலைப்பில் கேள்வி-பதில் வடிவத்தில் வெளியான புத்தகத்தில் 'கணவன் மனைவியை அடித்து
தொந்தரவு செய்தால், அந்த மனைவி என்ன செய்ய வேண்டும்?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டு தாக்குதலுக்குள்ளான
மனைவி மற்றும் அவளுடைய பெற்றோருக்கு பதில் அளிக்கப்பட்டிருந்தது. ‘தன்னுடைய பூர்வ ஜென்மக்
கடனை தீர்த்துக் கொண்டதாக, அதன் மூலம் தன்னுடைய பாவங்கள் அனைத்தையும் தொலைத்து விட்டு
இப்போது தூய்மையடைந்திருப்பதாக அந்தப் பெண்
நினைத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மோசமான நடத்தையை எதிர்கொள்வதற்கான தைரியத்தை
தங்கள் மகளுக்கு அளிக்காத காரணத்தால் இது குறித்து தெரிய வந்ததும் அவளை தங்களுடைய வீட்டிற்கே
பெற்றோர்கள் அழைத்துச் சென்று விடலாம்’ என்ற அறிவுரையை சுவாமி ராம்சுக்தாஸ் வழங்கியிருந்தார்.
ஒருவேளை தங்கள் மகளை அந்தப் பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை என்றால், ‘அப்படிப்பட்ட
சூழ்நிலையில்... தன்னுடைய கடந்த காலச் செயல்களுக்கான பலனை அவள் அறுவடை செய்து தானாக
வேண்டும். கணவனின் அடிகளை பொறுமையுடன் அவள் பொறுத்துக்கொள்ள வேண்டும். அந்த அடிகளைச்
சுமப்பதன் மூலம் தன்னுடைய பாவங்களிலிருந்து அவள் முற்றிலுமாக விடுபடுவாள். அதற்குப்
பிறகு அவளுடைய கணவன் அவளை நேசிக்கத் தொடங்கலாம்’ என்பதாக சுவாமிஜி கூறிய அறிவுரை இருந்தது.
கணவன்மார்கள் மனைவிகளை அடிப்பது குறித்து சற்றும்
கவலைப்படாத சுவாமிஜி அது சொர்க்கத்தில் நிர்ணயிக்கப்பட்டது என்றே கூறினார்.
‘வீட்டில் வசிக்கும் எலிகள், பல்லிகள், கொசுக்கள், பூச்சிகளுடன்
ஒருவர் எவ்வாறு இருப்பது?’ என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் உயிரினங்கள் மீது கருணை
காட்ட வேண்டும் என்பதாகவே அவரது அறிவுரை இருந்தது.
அந்த உயிரினங்களுக்கு எந்தவொரு தீங்கும் இழைக்கப்படுவதை சுவாமிஜி விரும்பவில்லை. ‘மனிதர்கள்
அந்த உயிரினங்களைத் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களாகவே கருத வேண்டும். ஏனென்றால் அவை மனிதர்களின் வீட்டில் தங்களுக்கான வீட்டை உருவாக்கி
வாழ்ந்து வருகின்றன. அதில் வாழ்வதற்கு அவற்றிற்கு முழு உரிமை உண்டு. முடிந்தவரை அவற்றிற்கு
ஊட்டமளிக்கப்பட வேண்டும் ... சிலர் செய்வதைப் போல அவற்றைக் கொன்றுவிடுவது சரியான காரியமல்ல’
என்று அவர் தீர்ப்பளித்திருந்தார்.
பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கும், அவளுடைய
கணவருக்கும் அவர் வழங்கிய மற்றொரு அறிவுரை பின்வருமாறு இருந்தது: ‘பாலியல் வல்லுறவு
செய்யப்பட்ட பெண் கூடுமானவரை மௌனமாக இருப்பதே நல்லது. அவளுடைய கணவருக்கு அதுகுறித்து
தெரிய வரும் போது அவரும் அமைதியாகவே இருக்க வேண்டும். இருவரும் அமைதியாக இருப்பதே மிகவும்
பலனளிப்பதாக இருக்கும்’.
பெண்கள் மறுமணம் செய்து கொள்ளலாமா என்ற கேள்விக்கான பதில்
மிகவும் நேரடியாக ‘ஒரு பெண்ணை அவளுடைய பெற்றோர்கள் ஒரு முறை திருமணம் செய்து கொடுத்து
விட்டார்கள் என்றால், அதற்குப் பிறகு அவள் கன்னியாக இருக்க மாட்டாள். ஆகவே அவளை வேறு
ஒருவருக்கு எவ்வாறு திருமணம் செய்து தர முடியும்? அந்தப் பெண்ணை மறுமணம் செய்து கொள்வது
மிருகத்தனமான செயலாகும்’ என்றிருந்தது. ஆனால் ஆண்கள் மறுமணம் செய்து கொள்ளலாமா என்ற
கேள்வியைப் பொறுத்தவரை எந்தவொரு பிரச்சனையும் இருக்கவில்லை. ‘முதல் மனைவியிடமிருந்து
எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றால் - வேதவிதிகளின்படி தங்களுடைய பெற்றோர்களுக்குச்
செலுத்த வேண்டிய கடன்களிலிருந்து விடுபடுவதற்காக ஆண்கள் இரண்டாவதொரு மனைவியை வைத்துக்
கொள்ளலாம்’. அதுமட்டுமே ஆண்களின் மறுமணம் அனுமதிக்கப்படுவதற்கான
காரணமாக இருக்கவில்லை. ‘இன்பத்தின் மீதான ஆசை அற்றுப் போகாத ஆண் மறுமணம் செய்து கொள்ளலாம்.
ஏனென்றால் மறுமணம் செய்து கொள்ளாவிட்டால் அவன் விபச்சாரத்தில் ஈடுபடுவான். விபச்சாரிகளிடம்
சென்று மோசமான பாவத்தைச் செய்வான். எனவே பாவத்திலிருந்து தப்பிக்கவும், தனக்கான மரியாதையைக்
காப்பாற்றிக் கொள்ளவும் சாஸ்திர விதிகளின்படி அவன் மறுமணம் செய்து கொள்ளலாம்’ என்று
ஆணின் மறுமணத்திற்கு தாராளமான அனுமதி வழங்கப்பட்டது.
எந்தவொரு விதவைக்கும் மறுமணம் செய்து கொள்வதற்கான அனுமதி
கிடையாது. இருப்பினும் அவர்களை ஆண்கள் தங்களுக்கான ஆசைநாயகிகளாகத் தேர்வு செய்து கொள்வதை
அனுமதிக்கலாம். ‘ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாக்க
முடியாவிட்டால் அந்தப் பெண் அங்குமிங்கும் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக
ஆண் ஒருவனுடனான உறவை ஏற்றுக்கொண்டு அவனுடைய பாதுகாப்பில் வாழ்ந்து வரலாம்’.
பெண்கள் தங்களுக்கென்று சம உரிமை கோருவது முறையாகுமா? அந்தக்
கேள்விக்கான பதில் ‘இல்லை. அவ்வாறு கேட்பது சரியாகாது. உண்மையில் பெண்ணுக்கு ஆணுடன்
சம உரிமை என்பதே கிடையாது... ஆணை ஒத்த சம உரிமைக்கு ஒரு பெண் ஆசைப்படுவது உண்மையில்
அறியாமை அல்லது முட்டாள்தனமாகவே இருக்கும். பெண்/ஆண் என்று யாராக இருந்தாலும் குறைவான
உரிமைகளுடன் அதிகக் கடமைகளையாற்றி திருப்தி அடைபவரே புத்திசாலியாக இருப்பார்’ என்று
மிகவும் தெளிவாக இருந்தது.
ஹிந்துப் பெண்களுக்காக எழுதி வெளியிடப்பட்ட புத்தகம் சதி
என்ற கொடூரமான பழக்கம் குறித்து மிகவும் வெளிப்படையாகப் பேசி அதனைப் புனிதப்படுத்தியது.
‘சதி ப்ரதா' (இறந்து போன கணவனின் உடலுடன் உயிருடன் உள்ள மனைவியின் உடலையும் தகனம் செய்யும்
மரபு) முறையானதா அல்லது முறையற்றதா? என்ற கேள்விக்கு ‘இறுதிச் சடங்கில் கணவனின் உடலுடன்
மனைவியையும் தகனம் செய்வது மரபு அல்ல. எந்தவொரு பெண்ணின் மனதில் உண்மையும், உற்சாகமும்
வருகிறதோ அவள் நெருப்பின்றியே எரிவாள். அவ்வாறு எரியும் போது அவளுக்கு எந்தவொரு வலியும்
ஏற்படாது. அவள் அப்படிச் செய்ய வேண்டும் என்பது
மரபு அல்ல என்றாலும் அது உண்மை, நீதி மற்றும் வேதங்கள் மீதான அவளுடைய நம்பிக்கை…
அதன் பொருள் அது ஒரு மரபு அல்ல. மதத்தின் மீது அவளுக்கிருக்கும் கிளர்ச்சி. இதுகுறித்து
பிரபுதத்தா பிரம்மச்சாரிஜி ‘கணவனின் சடலத்துடன் மனைவியைத் தகனம் செய்வது ஹிந்து மதத்தின்
முக்கிய ஆதாரம்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதனை அவசியம் படிக்க வேண்டும்’ என்ற
பதில் அளிக்கப்பட்டிருந்தது.
சதி முறையை மீட்டெடுக்கக் கோரும் போது இந்தவகையில் வெளியான
புத்தகங்கள் மூலம் சுவாமிஜி ‘தகனம் செய்யும்
இடத்திற்கு இறந்து போன கணவனை மகிழ்ச்சியோடு பின்தொடரும் ஒரு பெண் தான் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியிலும் அஸ்வமேத யாகத்திற்கான பலன்களைப் பெறுகிறாள் என்பதில் சந்தேகமில்லை
(அஸ்வமேதா என்றால் சமஸ்கிருதத்தில் குதிரை என்று பொருள். அஷவ்மேத யாகம் என்பது வேத
பாரம்பரியத்தில் குதிரையைப் பலி கொடுப்பதாகும். பண்டைய இந்திய மன்னர்கள் தங்கள் ஏகாதிபத்திய
இறையாண்மையை நிரூபித்துக் காட்ட அந்த யாகத்தைச் செய்தனர்)… சதியை ஏற்ற்றுக் கொள்ளும்
பெண் எமதூதர்களின் (மரண தேவதைகள்) கைகளில் இருந்து தன் கணவனைப் பறித்து அவனை சொர்க்கலோகத்திற்கு
அழைத்துச் செல்கிறாள். அந்தப் பதிவிரதையைக் காணும் போது எமதூதர்கள் அந்தக் கணவனை விட்டு
விலகி ஓடிவிடுகிறார்கள்’ என்று நமக்கு விளக்கமளிக்கிறார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் தன்னுடைய உரையில் புனிதப்படுத்தி
பாராட்டிய கீதா பிரஸ் 'சதியின் மகத்துவம்' என்ற தலைப்பிலான அத்தியாயத்துடன் தொடங்குகின்ற
நாரி சிக்க்ஷா என்ற புத்தகத்தை மட்டுமல்லாது சதியைப் போற்றி ஹிந்தி இதழான கல்யாணின்
சிறப்பு இதழையும் வெளியிட்டிருந்தது.
சதியைப் புனிதப்படுத்துவதைத் தவிர, ‘ஹிந்து’ வேதங்களிலிருந்து
சுலோகங்களை மேற்கோள் காட்டுகின்ற நாரி தர்மம் என்ற கீதா பிரஸின் வெளியீடு பெண்கள் சுதந்திரத்தை
அனுபவிக்கும் திறன் கொண்டவர்கள் அல்ல என்பதை நிறுவுகிறது. பெண்களின் சுதந்திரத்திற்கான
இயலாமை (ஸ்வதந்தர்தா கே லியே ஸ்ட்ரையோன் கி அயோகேதா) என்ற அத்தியாயத்துடன் அந்தப் புத்தகம்
துவங்குகிறது. 'அறிவார்ந்த, திறமையான, தைரியமான, மதத்தின் மீது விருப்பமுள்ள மகனைப்
பெற்றெடுப்பதற்காக கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சடங்குகளின் நீண்ட பட்டியலை
வகுத்துக் கொடுத்திருப்பது அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றுமொரு குறிப்பிடத்தக்க
அம்சமாகும்.
பெண்களுக்கு எதிரான இத்தகைய புத்தகங்களைப் பகிரங்கமாக வெளியிடுவதற்கான
அனுமதி இந்திய ரயில்வே அனுமதித்துள்ள புத்தகக் கடைகள் மூலமாக கீதா பிரஸுக்குக் கிடைத்திருக்கிறது.
2014ஆம் ஆண்டு ஆகஸ்டு எட்டாம் நாள் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த ஒன்றிய
இணையமைச்சர் மனோஜ் சின்ஹா ரயில் நிலையங்களில் தங்கள் வெளியீடுகளை விற்பனை செய்து கொள்ளும்
வகையில் சமூக/மத அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட 165 கடைகளில் கீதா பிரஸுக்கு மட்டும்
நாற்பத்தைந்து கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அமைச்சர் அளித்த விவரங்களிலிருந்து ஹிந்து மதம் சார்ந்த மற்றும்
காந்திய அமைப்புகளுக்கு மட்டுமே அந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
மேலும் ஐஎஸ்பிடி (தில்லியில் உள்ள காஷ்மீரி கேட் பேருந்து
முனையம்) போன்ற முக்கிய பேருந்து நிலையங்களிலும் கீதா பிரஸுக்கு கடைகள் இருக்கின்றன.
கீதா பிரஸின் மொபைல் வேன்கள் பெண்களுக்கு எதிரான
இதுபோன்ற அருவருப்பான புத்தகங்களை உச்ச நீதிமன்ற வளாகத்திலும் (இத்தகைய புத்தகங்களுடனான
முதல் அறிமுகம் எனக்கு இந்தியாவின் உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள கீதா பிரஸ் மொபைல்
ஸ்டாலில் இந்த புத்தகங்களில் சிலவற்றை வாங்கியபோதுதான் கிடைத்தது), ஜனநாயக இந்தியாவை
ஆள்கின்ற புதுதில்லியில் அமைந்துள்ள ஒன்றிய அரசின் செயலகத்திலும் விற்பனை செய்து வருகின்றன.
கீதா பிரஸின் வெளியீடுகள் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தால் நடத்தப்படுகின்ற புத்தகக்
கடைகளிலும் கிடைக்கின்றன.
காந்தி அமைதிப் பரிசை வழங்குவதன் மூலம் கீதா பிரஸிற்குத்
தங்களுடைய ஆதரவை வழங்கியிருப்பவர்கள் எவ்வித வெட்கமுமின்றி இந்திய தண்டனைச் சட்டம்
(ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம், பாலின நீதி மற்றும் பெண்களைத் துன்புறுத்துவதைத்
தடுப்பதற்காக இயற்றப்பட்டிருக்கும் இந்தியச் சட்டங்கள் பலவற்றுடன் முரண்பட்டு அவையனைத்தையும்
மீறியுள்ளனர். கீழே குறிப்பிட்டுள்ள சட்டங்களை குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்றத்தின்
தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர் ஆகியோர் அறிந்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
1. இந்திய தண்டனைச் சட்டம் 498A ‘திருமணமான பெண்ணுக்கு எதிராக
கொடுமைகளை இழைக்கும் கணவர் அல்லது அந்தப் பெண்ணின் உறவினருக்கு மூன்று ஆண்டுகள் வரை
சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்’ என்று கூறுகிறது.
2. இந்திய தண்டனைச் சட்டம் 375-77 ‘பாலியல் வல்லுறவிற்கான
தண்டனை ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் வரையிலான கடுமையான சிறைத்தண்டனையாக வழங்கப்படலாம்.
மேலும் அந்த நபர் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்’ என்று கூறுகிறது.
3. 1856ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று இயற்றப்பட்ட 1856ஆம் ஆண்டு
ஹிந்து விதவை மறுமணச் சட்டம் ஹிந்து விதவைகளின் மறுமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிக் கொடுத்துள்ளது.
4. 1955ஆம் ஆண்டு ஹிந்து திருமணச் சட்டம் ஹிந்துக்கள் இருதார
மணம் செய்வதைத் தடை செய்கிறது. ஏற்கனவே இருக்கும் திருமணத்தை முறித்துக் கொள்ளாமல்
அல்லது முதல் திருமணம் இன்னும் நடைமுறையில் இருக்கும் போதே ஹிந்து ஒருவர் வேறொருவரை
மணந்தால் அவர் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றவியல் வழக்குக்கு உட்படுத்தப்படுவார்.
அந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படும்.
5. 1987ஆம் ஆண்டு சதி (தடுப்பு) சட்டம் முதன்முதலாக ராஜஸ்தான்
மாநில அரசால் 1987ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. 1988ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்றம்
1987ஆம் ஆண்டு சதி (தடுப்பு) சட்டத்தை இயற்றிய பிறகு அது தேசிய சட்டமாக மாறியது. சதி,
தானாக அல்லது வலுக்கட்டாயமாக ஒரு விதவையை எரித்தல்
அல்லது புதைத்தல், அதுபோன்ற செயலைப் புனிதப்படுத்துகின்ற எந்தவொரு விழா, ஊர்வலத்தில்
பங்கேற்பது, நிதி அறக்கட்டளையை உருவாக்குவது, கோவில் கட்டுவது அல்லது சதி மேற்கொண்ட
விதவையின் நினைவைப் போற்றுவதை அல்லது கௌரவிப்பதை அந்தச் சட்டம் தடைசெய்கிறது. சதியை
ஆதரித்து புனிதப்படுத்தினால் குறைந்தபட்சம் ஓராண்டு சிறைத்தண்டனை முதல் ஏழு ஆண்டுகள்
வரையிலான சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாய் முதல் முப்பதாயிரம் ரூபாய்
வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம்.
குடியரசுத் தலைவராக 2017ஆம் ஆண்டில் கோவிந்த் நியமிக்கப்பட்ட
போது, அவரது நியமனம் சாதிவெறி தகர்க்கப்பட்டதற்கான, இந்திய தலித்துகளின் கௌரவம் மீட்டெடுக்கப்பட்டதற்கான
சான்று என்று கருதி வரவேற்கப்பட்டது. இந்திய சமத்துவ அரசியலின் முதன்மை எதிரியாக விளங்குகின்ற
ஆண் பேரினவாத ஹிந்துத்துவாவின் கண்ணோட்டத்திற்கு எதிரான போராட்டத்தைப் பொறுத்தவரையில்
கீதா பிரஸைப் பெருமைப்படுத்திப் பேசியதன் மூலம் அவர் பெரும் ஏமாற்றத்தையே அளித்தார்.
இந்தியக் குடியரசுத் தலைவராக முஸ்லீம் பெண்களுக்கு ‘விடுதலை’
அளிக்கின்ற சட்டங்களில் கையெழுத்திட்ட ஹிந்துப் பெண்களுக்காக இது போன்ற மிகவும் மோசமான
கீதா பிரஸைப் போற்றுகின்ற கோவிந்தின் செயல்
கவனிக்கத்தக்க வேண்டியதாகும். ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சியாளர்களிடம் இருக்கின்ற பாசாங்குத்தனத்தையே
அவரது செயல் தோலுரித்துக் காட்டுகிறது. கோடிக்கணக்கான வெளியீடுகள் மூலம் ஹிந்துப் பெண்களை
இழிவுபடுத்துவது மற்றும் வன்முறை, அடிபணிவது போன்ற காரியங்கள் குறித்து வெட்கக்கேடான
பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்ற கீதை பிரஸை ஆதரிப்பதில் இந்தியாவின் முன்னாள் தலித்
குடியரசுத் தலைவர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த இப்போதைய பிரதமர், ‘தாராளவாத’
பிராமணரான இந்தியத் தலைமை நீதிபதி தனஞ்சய் ஒய்.சந்திரசூட் போன்றவர்களிடம் எந்தவொரு
கவலையும் இருக்கவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும்.
ஜனநாயக-மதச்சார்பற்ற இந்திய ஆட்சியமைப்பை அதன் பாதுகாவலர்களாக
இருக்கும் குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதி, பிரதமர் என்று மூவரும் தகர்க்கும் போது,
வேறு யார் அதனைக் காப்பாற்றுவது?
Comments