பிரக்யா சிங்
அவுட்லுக்
இந்தியா
நமது பிரதமர் தான் பேசிக் கொண்டிருக்கும் போது தன்னுடைய உரையில் குறுக்கிடும் பாராளுமன்ற
உறுப்பினர்களைக் கண்டிப்பது அல்லது அவர்களைப் பேச விடாமல் செய்வது என்று
தீர்மானித்து விட்டார் என்றால், அதுபோன்றவர்களைத் தடுத்து நிறுத்துகின்ற வகையில் தன்னுடைய
கொத்தளத்தில் ஏராளமான ஆயுதங்களைக் கொண்டவராகவே அவர் இருக்கிறார். இந்த வாரத்
துவக்கத்தில் மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் பேச்சிற்கு இடையே அந்த அவையின்
சுவர்களில் மோதி எதிரொலித்த பலத்த சிரிப்புடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினரான ரேணுகா
சௌத்ரி குறுக்கிட்டார். பிரதமர் அந்த நேரத்தில் சற்றும் யோசிக்காமல், பெயர்
எதுவும் குறிப்பிடாமல் தாடகையுடன் ரேணுகாவை ஒப்பிட்டுப் பேசிடத் தலைப்பட்டார் (ராமாயணத்தில்
அசிங்கமான தோற்றம் கொண்ட பெண்ணாக அகத்திய முனிவரால் சபிக்கப்பட்ட தாடகையுடன்
ஒப்பிட்டே பிரதமர் பேசினார் என்று பெரும்பாலும் ஊகிக்கப்படுகிறது). பிரதமரின் அந்தப் பேச்சிலே தைரியமான பெண்களை
அவமானப்படுத்தி, அடிபணியச் செய்வதற்காக நவீன காலத்தில் சொல்லப்படுகின்ற வகையில் ராமாயணத்தில்
வருகின்ற அரக்கியுடன் ரேணுகா சௌத்ரியை ஒப்பிடுவதற்கான சாத்தியம் இருந்தது.
அடிக்கடி, மிகவும் சத்தமாக அல்லது பொதுவெளியில் சிரித்து, பிறரது கவனத்தைத் தன்னை நோக்கி ஈர்த்துக் கொள்கின்ற பெண்ணை சமூகநெறிகளை மீறுபவள் என்று இந்தியாவில் உள்ள பலரும் எந்தவொரு சந்தேகமுமின்றி இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் நடந்த சம்பவத்திற்கு முற்றிலும் பொருந்தாத வகையில் பிரதமரால் குறிப்பிடப்பட்ட அந்தக் கதையில் ராமனின் உதடுகளில் இருந்த அமைதியான புன்முறுவலின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாத அரக்கியாக இருந்த சூர்ப்பனகை தன்னை ராமனின் சகோதரன் லட்சுமணன் கேலி செய்து சிரித்ததையும் புரிந்து கொள்ள முடியாதவளாகவே இருந்தாள். உண்மையில் அந்த இடத்தில் சிரித்தவர்கள் ஆண்களாக இருந்த போதிலும், தன்னைக் கேலி செய்து சிரித்ததை உணர்ந்து ஆத்திரமடைந்த பெண்ணுக்கு மட்டுமே உடல்ரீதியான தண்டனை வழங்கப்பட்டது. புராணத்தில் – மன்னிக்கவும் அவர்கள் சொல்கின்ற வரலாற்றில் - இடம் பெற்றுள்ள அந்தக் கதை, ஆணாதிக்கச் சமூகம் வரம்பை மீறுகிற பெண்களுக்கு வித்தியாசமான, கொடூரமான தண்டனை வழங்குவதைக் கூறுகிறது. அதே போன்ற குற்றத்தைத் திரும்பவும் செய்யத் துணிபவர்கள் உண்மையில் பாராளுமன்றத்தில் இப்போது போதுமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். அவர்கள் அந்தக் கதை தங்களுக்குப் பெரும் மகிழ்வை அளிப்பதாகவே கருதுகின்றனர்.
துரியோதனனின் பெருமையையும், தன்முனைப்பையும் திரௌபதியின்
சிரிப்பு காயப்படுத்தி விட்டது என்று கூறுகின்ற மற்றுமொரு இதிகாசமான மகாபாரதத்தில்
இருக்கின்ற புராணக்கதையை இதைவிடச் சிறந்த கதை என்றே எடுத்துக் கொள்ளலாம்.
திரௌபதியின் துகிலை உரிந்த அந்த நிகழ்வு நடந்த அரங்கு பல வசதிகள் கொண்டிருந்தது.
ஆயினும் அது மாநிலங்களவையைப் போன்று மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை. திரௌபதியின்
துகில் உரியப்பட்ட அந்த அரங்கில் யார் யாரைப் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்
என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை என்பதால் திரௌபதி குறித்த அந்தக் கதை
சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. அங்கே திரௌபதி மட்டுமே துரியோதனனைப் பார்த்துச்
சிரிக்கவில்லை என்றே பலரும் சொல்கிறார்கள். ஆனாலும் துரியோதனனைப் பார்த்து சிரித்த
பீமனைத் தவிர்த்து விட்டு கௌரவர்கள் ஏன் திரௌபதியின் துகிலை உரிந்தனர் என்பதை அறிந்து
கொள்ள சாதாரணமான இந்தியர்கள் கூகுளில் முயற்சிகளை மேற்கொண்டவாறு இருக்கின்றனர்.
பெண்களின் உதடுகளில் இருந்து வெளியாகும் சிரிப்பு,
ஆண்களை மட்டுமல்லாது இந்தியர்கள் அனைவரின் உணர்வுகளையும் புண்படுத்துகிறது. ஒருவேளை
அவளுடைய சிரிப்பு சமையலறையில் இருந்து நீண்ட நேரம் அவள் ஓய்வு எடுத்துக்
கொண்டிருப்பதாக அவர்களுக்குக் காட்டுவதே அதற்கான காரணமாக இருக்கலாம். ராமனின்
மனைவி சீதை தான் சமைப்பதற்கு வழக்கமாகப் பயன்படுத்திய சமையலறையைப் பற்றி யாரும்
கேள்விப்பட்டிருக்கவில்லை. எனவே ஓரிரு நகைச்சுவைத் துணுக்குகளை உதிர்த்து அவள் சிரித்துக்
கொண்டிருந்ததாக அவளுடைய காலத்து அரசியல் வட்டாரங்களில் யாரும் நிச்சயமாகக் கேள்விப்பட்டிருக்க
மாட்டார்கள்!
மகிழ்ச்சியுடன் இருப்பது குறித்த அளவுகோலில் இந்தியா 155
நாடுகளுக்கு அப்பால் பின்தங்கியிருப்பதில் ஆச்சரியம் அடைய எதுவுமில்லை. இதனைச் சரியான
கண்ணோட்டத்தில் பார்த்தோம் என்றால், ரேணுகா அவ்வாறு பலமாகச் சிரித்ததைக் கண்டு மாநிலங்களவையில்
இருந்தவர்கள் மட்டுமே சிரித்தனர். அதற்காக இந்த நாடு முழுவதும் சிரிக்கவில்லை.
ஒருவேளை அவ்வாறு நாட்டில் உள்ள அனைவரும் சிரித்திருப்பார்கள் என்றால், மகிழ்ச்சிக்கான
குறியீட்டில் இந்தியாவிற்கு நிச்சயம் மிக உயர்ந்த இடம் கிடைத்திருக்கும்.
தொலைக்காட்சியில் எண்பதுகளில் ஒளிபரப்பப்பட்ட
ராமாயணக் கதையை முகம் சுழிக்க வைக்கும் வகையில் அன்றைய தினம் பிரதமர் குறிப்பிட்ட
செயல், இந்தியாவில் புராணங்கள் வரலாற்றைக் காட்டிலும் மிகுந்த ஆற்றல் கொண்டவையாக இருப்பதை
நிரூபித்துக் காட்டியது. பிரதமருடைய அந்தப் பேச்சு ஆண் உறுப்பினர்கள் பாராட்டுகின்ற
விதத்திலேயே அமைந்திருந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆண் உறுப்பினர்கள்
அனைவரும் பிரதமரின் பேச்சைக் கேட்டு சிரித்து மகிழ்ந்தது மாநிலங்களவை நிகழ்ச்சிகளின்
தொலைக்காட்சி ஒளிபரப்பிலிருந்து தெரிய வந்தது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி மட்டும் அதற்கு
விதிவிலக்காக இருந்தார் என்றாலும், அவர் அன்றைய தினம் முழுவதுமே எதற்கும் சிரித்ததாகத்
தெரியவில்லை.
இந்த விஷயத்தில் மேலும் ஓர்
அம்சம் இருக்கிறது.
ரேணுகா சௌத்ரியின் அந்தச் சிரிப்பு உண்மையில் பிரதமரையும்,
பாஜகவையும் காயப்படுத்துவதற்காகவே வெளியானது என்பதை மறுக்க வேண்டிய அவசியமில்லை. பிரதமரின்
அந்த வேண்டத்தகாத பேச்சு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆண் உறுப்பினர்கள் ரசிக்கும்
வகையிலேயே இருந்தது. அவர்கள் அனைவரும் தங்களுடைய மேஜைகளை மிக சப்தமாகத் தட்டி
ரசித்த விதம், அப்போது பெண் உறுப்பினர்கள் எதிர்வினையாற்றியதற்கு
முற்றிலும் மாறாகக் காணப்பட்டது. காவி உடையுடன் அங்கே இருந்த குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சரான
உமாபாரதி பிரதமரின் பேச்சைக் கேட்ட அதிர்ச்சியில் தனது கைகளை
வாய்க்கருகே உயர்த்தியதைக் காண முடிந்தது. சற்றே வித்தியாசமான உணர்வு அவருடைய முகத்தில் தோன்றிய
அடுத்த கணத்தில் அவர் அதை ரசித்ததாகவே தோன்றியது. பாதுகாப்பு அமைச்சர்
நிர்மலா சீதாராமன்
தன்னுடைய முகத்தில் சிறிய அளவிலான புன்னகை அல்லது சிரிப்பு
தோன்றிட அனுமதிக்கவில்லை. ஆனாலும் அவர் எப்போதும் தீவிரமான தோற்றம்
கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
மாநிலங்களவை ஆண் உறுப்பினர்களின் அந்தச் சிரிப்பு ‘அனுமதிக்கப்பட்டுள்ள
வழிகளில்' மட்டுமே பெண்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்
என்று இந்திய ஆண்கள் பலரும் உணர்வதைப் பிரதிபலிக்கின்ற வகையிலே இருந்ததாகவே சொல்லலாம்.
வீட்டில் இருப்பவர்கள் இளம் பெண்களைப்
பார்த்து, ‘மிகவும் பலமாகச் சிரிக்காதே’ என்று கூறுவதில்லையா, மோசமான
நகைச்சுவைத் துணுக்குகளுக்கு தோள்பட்டை, வயிறு குலுங்க, மூச்சடைக்கச் சிரிப்பது
பெண்களுக்கு ஆகாது என்று பெண்களே சொல்வதுண்டு. தன்னுடைய ட்வீட்டில் ‘சாதாரணமாகச் சிரிக்காமல்,
கெக்கலித்து பலமாகச் சிரிக்கின்ற பெண்கள் அது குறித்து
பின்னர் குறை எதுவும் கூறக் கூடாது. அந்த கெக்கலிப்பு இடைக்காலப் பெண்
பேயின் கெக்கலிப்புடன் ஒப்பிடக் கூடியதாக இருக்கிறது’ என்று டவ்லீன் சிங் கூட பதிவிட்டிருந்தார்.
உண்மைதான்.
பாராளுமன்ற உறுப்பினர்களாகவே இருந்தாலும்,
முறையீடுகள், வேண்டுகோள்கள் அல்லது கடிதம் மூலமான கோரிக்கைகளை வைப்பது போன்ற
வழிமுறைகளே பெண்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றன. அவ்வாறில்லாமல் அந்த
அவையே இடிந்து போகும் அளவிற்குப் பலத்த சிரிப்பு அந்தப்
பெண்களிடமிருந்து வெளிப்படும் என்றால், காடுகளை அழிப்பதற்காக ரிஷிகளுக்கும்,
முனிவர்களுக்கும் உதவிய, வில்லும் அம்புகளும் வைத்திருந்த
ராமனும், லட்சுமணனும் ஏறத்தாழ கி.மு.1000 ஆம் ஆண்டில் பெண்களை
நடத்திய வழியிலேயே அந்தப் பெண்கள் நடத்தப்படுவார்கள் என்பதைக் காட்டுகின்ற
வகையிலேயே மாநிலங்களவையில் அந்த நிகழ்வு நடந்தேறியது. அன்றைய தினம் உடல்ரீதியான தாக்குதல்
எதையும் நடத்தி விடாமல், வெறுமனே அவமதிப்பு செய்வதுடன்
அவர்கள் நிறுத்திக் கொண்டது இந்தியாவில் பெண்களின் சிரிப்பை அடக்குவதற்காக
மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் எந்த அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன
என்பதைக் காட்டும் வகையிலேயே அமைந்திருந்தது.
ராமன், அவனது தம்பி
லட்சுமணன் ஆகியோரால் அவமானப்படுத்தப்பட்டு தண்டகாருண்ய
காடுகளில் இருந்து வெளியேறிய சூர்ப்பனகை அவர்களைப் பழிவாங்க விரும்பினாள்
என்று ராமாயணக் கதையிலே குறிப்பிடப்பட்டு இருப்பதை மீண்டும் இங்கே நினைவுறுத்த வேண்டுமா?
2018 பிப்ரவரி 09 அன்று வெளியான கட்டுரை
Comments