ஸ்டீபன் ஹாக்கிங் - தன்னுடைய வார்த்தைகளுக்குள்ளே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் . . .

 

ஸ்டீபன் ஹாக்கிங்  (08/01/1942 - 14/03/2018)

·         நான் கடவுள் மறுப்பாளன்.

·         ஒரு வேளை கடவுள் இருக்கலாம். ஆனால் படைப்பவர் என்றொருவர் தேவையில்லாத பிரபஞ்சம் இருப்பதை அறிவியலால் விளக்கிட முடியும்.  

·         தன்னுடைய தெய்வீக ஆற்றலைக் கொண்டு படைப்பதற்கு முன்னதாக அந்தக் கடவுள் என்ன செய்து கொண்டிருந்தார்?

·         ‘அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது - அவற்றை நம்மால் மாற்ற முடியாது’ என்று கூறுகின்றவர்கள் நன்கு கவனித்த பிறகே சாலையைக் கடப்பதை நான் கவனித்திருக்கிறேன்.

·         நான் கலிலியோ இறந்து சரியாக முன்னூறு ஆண்டுகள் கழித்து 1942 ஜனவரி 8 அன்று பிறந்தேன். அந்தக் குறிப்பிட்ட நாளில் இன்னும் இரண்டு லட்சம் குழந்தைகள் பிறந்திருப்பார்கள் என்று கணிக்கலாம். ஆனாலும் அன்றைய தினம் பிறந்தவர்களில் யாராவது என்னைப் போன்று வானியல் குறித்த ஆர்வத்துடன் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  

·          பள்ளிக்கூடத்தில் படித்த போது நான் சிறந்த மாணவனாக ஒருபோதும் இருந்ததில்லை. ஆனாலும் என்னுடைய திறமையை உணர்ந்திருந்த என் வகுப்புத் தோழர்கள்  என்னை ஐன்ஸ்டீன் என்றே அழைத்து வந்தார்கள்.    

·         எனது இயலாமையின் காரணமாக எனக்கு உதவி தேவைப்படுகிறது. ஆனாலும் அந்தத் தடைகள் அனைத்தையும் மீறி என்னுடைய வாழ்க்கையை நான் முழுமையாக வாழ்ந்திருக்கிறேன். இந்த உலகம் முழுவதும் - அண்டார்டிகாவில் இருந்து புவியீர்ப்பு விசையே இல்லாத இடம் வரையிலும் நான் பயணம் செய்திருக்கிறேன்.   

·          என்னுடைய கண்டுபிடிப்புகளுக்காக அல்லாமல், ஒருவேளை என்னுடைய இயலாமை. சக்கர நாற்காலியின் காரணமாகவே இவ்வாறு பிரபலம் அடைந்திக்கிறேனோ என்று நான் சில சமயங்களில் ஆச்சரியப்படுவதுண்டு.    

·          விக் மற்றும் கறுப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு பிறரிடமிருந்து என்னை மறைத்துக் கொள்ளும் வாய்ப்பை இந்த சக்கர நாற்காலி எனக்கு வழங்கவில்லை.

·          என்னுடைய இயலாமை என்னுடைய வேலைகளைப் பாதித்ததாக நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. மாறாக உரை நிகழ்த்துவது, சற்றும் ஆர்வமில்லாத குழுக்களில் கலந்து கொள்வது போன்றவற்றிற்கான தேவையை இல்லாமல் செய்ததன் காரணமாக அந்த இயலாமையே நான் என்னுடைய கவனத்தை ஆய்வுகளின் மீது செலுத்த உதவியிருக்கிறது.       

·         கோட்பாட்டு இயற்பியலைப் பொறுத்த வரை மூளைக்குத்தான் வேலை என்பதால், என்னுடைய இயலாமை ஒருபோதும் பெரும் குறைபாடாக இருந்ததில்லை.   

·          எனக்கு நரம்பு தொடர்பான நோய் இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர் அந்த நோய் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் என்னைக் கொன்று விடும் என்றே என்னிடம் கூறியிருந்தார்.

·          ஒரு நாள் இந்த அண்டவெளிக்குள் நான் சென்று விடுவேன்.  

·         தங்களிடமுள்ள அறிவுத்திறம் குறித்து பெருமைப்படுபவர்கள் தோற்றுப் போகிறார்கள்

·         உண்மை என்பதற்கான தனித்த சித்திரம் என்று எதுவுமே இல்லை.

·         எதுவொன்றும் நிலைத்து நிற்கப் போவதில்லை

·         எதிர்பார்ப்புகள் என்று எதுவுமில்லாத போது ஒருவன் தன்னிடம் உள்ள அனைத்தையும் ரசிக்கிறான்.

·         என்னைப் பொறுத்த வரையில் மனித அறிவிற்கு அப்பாற்பட்ட உண்மைகள் என்று எதுவுமே கிடையாது.  

·         பெண்கள் - அவர்கள் ஒரு முழுமையான புதிர்.

·         கடந்த காலங்களில் அறிவியலில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் இருந்தன. அதன் மிச்சங்கள் இப்போதும் சிறிதளவில் இருந்து வருகின்ற போதிலும் முன்னிருந்த நிலைமை இப்போது இல்லை. ஆனாலும் கணிதம், இயற்பியல் ஆய்வுகளில் மிகக் குறைந்த பெண்களே ஈடுபடுவதற்கான காரணமாக அதனைக் காட்ட முடியாது.

·         என்னுடைய புத்தகத்தில் நான் சேர்த்துக் கொள்ளும் ஒவ்வொரு சமன்பாடும், அந்தப் புத்தகத்தின் விற்பனையை பாதியாகக் குறைப்பதாக யாரோ என்னிடம் சொன்னார்கள்.

·          1982ஆம் ஆண்டு என்னுடைய மகளின் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துவதற்காகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணிய போது பிரபஞ்சம் பற்றிய என்னுடைய புகழ்பெற்ற புத்தகத்தை வெளியிடும் சிந்தனை எனக்குள்ளே எழுந்தது.

·          எனக்கான அந்தரங்கம் எதுவுமின்றி பொதுச்சொத்தாக மாறிவிடுகின்ற வாய்ப்புடன் இருப்பதால் என்னுடைய சுயசரிதையை எழுத நான் விரும்பவில்லை.

·         என்னுடைய புத்தகங்கள் விமானநிலையப் புத்தக கடைகளில் விற்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.  

·          என் வாழ்நாளெல்லாம் காலம் குறித்து நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.  

·         அறிவு என்பது மாற்றங்களுக்கேற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்வது.

·          நாம் மிகச் சாதாரணமானதொரு நட்சத்திரத்தில் உள்ள மிகச் சிறிய கோளில் இருக்கும் உயர்ந்த வகை குரங்குகள் என்ற போதிலும், இந்தப் பிரபஞ்சம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளக் கூடியதாக நம்மிடம் இருக்கின்ற திறமையே நம்மை மிகவும் சிறப்பு வாய்ந்தவர்களாக்கியுள்ளது.

·         அண்டவெளிக்குள் செல்லாமல் மனித இனத்திற்கான எதிர்காலம் இல்லை என்றே நான் கருதுகிறேன்.  

·         என்னுடைய இலக்கு மிக எளிமையானது. இந்தப் பிரபஞ்சம் ஏன் இவ்வாறு இருக்கிறது, ஏன் அது இருக்கிறது என்பதை நான் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.


https://www.brainyquote.com/authors/stephen_hawking

Comments

Anonymous said…
ஒவ்வொரு வார்த்தையும் பரவசத்தையும் படபடப்பையும் ஏற்படுத்துகிறது.