ஜனவரி 14 - பேராசிரியர் பி.கே.ராஜன் மறைந்த நாள்
கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர்
(2000-2004) பி.கே.ராஜன் எழுதிய ‘இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த திசை நோக்கிப் பயணிக்க
வேண்டும்’ என்ற கட்டுரையை தி ஹிந்து பத்திரிகை 2004ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்தக் கட்டுரை
மாநில மொழிகளையும், ஆங்கிலத்தையும் முழுமையாக அழித்தொழித்து விட்டு ஹிந்தியை மட்டுமே
முன்னிறுத்தி வருகின்ற இன்றைய அரசியல் நிலைமைகளை கடந்த வரலாற்றுடன் இணைத்துப் பார்க்கின்ற
மிகச் சிறந்ததொரு கட்டுரையாகத் திகழ்கிறது.
இந்திய
ஆங்கிலக் கல்வி எந்த திசை நோக்கிப் பயணிக்க வேண்டும்?
பி.கே.ராஜன்
தி ஹிந்து,2004
இப்போது இந்தியாவில் நடைமுறையில் இருந்து
வருகின்ற ஆங்கிலக் கல்வி எந்த திசையில் பயணிப்பது என்றறியாமல் குறுக்குச் சாலையில்
நின்று கொண்டிருக்கிறது. ஆங்கில மொழி காலனித்துவத்துடன் தொடர்புடையதாக, அழிக்க முடியாத
கறையை தன்னிடத்தே கொண்டிருந்த போதிலும், இன்றளவிலும் இந்தியாவில் தொடர்வதற்கான பொருத்தம்
கொண்டதாகவே அந்த மொழி இருக்கிறது. எதிர்காலத்தில் அது இன்னும் கூடுதல் முக்கியத்துவம்
வாய்ந்த பங்கை வகிக்கப் போவதாகத் தோன்றுகின்ற போதிலும், இந்தியாவில் நடைபெற்று வருகின்ற ஆங்கிலக் கல்விக்கான
தளங்கள் புதிய சவால்கள், பொறுப்புகளை எதிர்கொள்ளும் வகையிலேயே இருந்து வருகின்றன.
இந்தியாவில் ஆங்கில மொழியின் எதிர்காலம் இதுபோன்ற சவால்களை அது எவ்வாறு வெற்றிகரமாக
எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்தே பெரும்பாலும் நிச்சயிக்கப்படும். மாறி வருகின்ற
தற்போதைய சூழலுக்கு வழிவிட வேண்டிய பொறுப்புடனே கடந்த காலம் இருக்கிறது
ஆங்கிலக் கல்வியில் வரலாற்றுக் காரணிகளால்
ஏற்படுகின்ற வெளிப்படையான மாற்றங்கள் அவற்றின் இயல்பான போக்கிலேயே நடைபெறுகின்ற போதிலும்,
தங்களுடைய பணியில் தோன்றுகின்ற அத்தகைய மாற்றங்கள் குறித்து அலட்சியம் கொண்டவர்களாகவே
நமது ஆங்கில ஆசிரியர்கள் இருந்து வருவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது.
பல்கலைக்கழக மட்டத்தில் பணியாற்றி வருகின்ற ஆங்கில ஆசிரியர்களின் கவனக் குவிப்பு
பெரும்பாலும் மரபுவழியாகக் கற்பிக்கும் பணியைத் தொழிலாக மேற்கொள்வதற்கான குறைந்தபட்சத்
தேவைகளின் மீதே இருக்கிறது. அவர்களிடம் தங்களுடைய தொழில் குறித்த பிரச்சனைகளுக்கான
தீர்வை நோக்கிய விவாதங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் போதாத அளவிலேயே இருப்பது
வெளிப்படையாகத் தெரிகிறது. இருப்பினும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள்
அவர்களை இந்தப் படுகுழியில் இருந்து மீட்டெடுத்து வருகின்றன. மேலும் இப்போது நடைமுறையில்
இருந்து வருகின்ற ஆங்கிலக் கல்வி தீவிரமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான முக்கியமான தளமாக
மாறியுள்ளது. தங்களுடைய தொழிலில் மிகப் பெரிய அளவிலே ஏற்பட்டு வரும் மாற்றங்களின்
அடிப்படையில் ஏற்பட்டுள்ள சுய-முன்னோக்குக்கான தேடல்களின் மூலமாகவும், புகழ்பெற்ற
கல்வியாளர்கள் பலரிடமிருந்து பெறப்படுகின்ற
உள்ளீடுகளாலும் பாராட்டத்தக்க வகையிலே பல படைப்புகள் உருவாகியுள்ளன.
சமகாலத்தில் நடைபெற்று வரும் விவாதங்களின்
மூலம் ஆங்கிலக் கல்வியில் பல்வேறு அணுகுமுறைகள் உருவாகியுள்ளன. ஆங்கிலத்தை இந்தியாவில்
தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வின் முக்கியத்துவம் சிறிதும் குன்றாமலே
இருந்து வருகிறது. மொழி பன்முகத்தன்மையைக் கொண்டிருக்கும் நமது நாட்டில் இணைப்புமொழியாக
ஆங்கிலம் இருக்க வேண்டும் என்று காலம் காலமாக இருந்து வருகின்ற கருத்து இன்றளவில்
மிகவும் பொருத்தமுள்ளதாகவே தொடர்கிறது. பிராந்திய மொழிகள் மற்றும் அவற்றில் உள்ள
இலக்கியங்களின் வளர்ச்சி குறித்து முன்வைக்கப்படுகின்ற ஜனநாயகக் கோரிக்கைகள் ஓர்
இணைப்பு மொழியாக ஆங்கிலத்தின் பங்கை எந்த வகையிலும் குறைத்து விடப் போவதில்லை. உலகைப்
பார்க்க உதவும் சன்னலாக ஆங்கிலம் இருக்கிறது என்று கூறப்பட்டு வருகின்ற மற்றுமொரு
வழக்கமான கருத்தை ஏற்றுக் கொள்வதற்கு சிலர் மறுத்து வருகின்ற போதிலும், இன்றளவிலும்
நிலவுகின்ற சூழ்நிலை அந்தக் கருத்தை மேலும் வலியுறுத்துவதாகவே இருக்கிறது. மேலும்
இந்தியாவில் ஆக்கப்பூர்வ வெளிப்பாடுகளுக்கான ஊடகமாக இருந்து வருகிறது என்று தனக்கான
அங்கீகாரத்தை தன்னிடம் உள்ள இலக்கியங்களின் மூலமாக ஆங்கிலம் வென்றெடுத்திருக்கிறது, நாட்டின் கலாச்சார
வாழ்வில் முக்கியமானதொரு இடத்தைப் பெற்றிருப்பது மட்டுமல்லாது, இந்திய மொழிகளில்
அதுவும் ஒன்று என்ற நம்பிக்கையையும் ஆங்கிலம் வலுப்படுத்தியிருக்கிறது.
ஆங்கில மொழி இனிமேலும் இங்கிலாந்தை மட்டுமே
மையமாகக் கொண்ட மொழியாக இருக்கப் போவதில்லை. உண்மையாகப் பார்த்தால் ஆங்கிலம் பேசுபவர்கள்
இங்கிலாந்தைக் காட்டிலும் அதிகமானோர் இந்தியாவில் இருக்கின்றனர். மிகச் சிறந்த ஆங்கில
இலக்கியங்கள் இங்கிலாந்திற்கு வெளியே அமைந்துள்ள நாடுகளில் இருந்தே படைக்கப்படுகின்றன.
எனவே ஆங்கிலத்தை இந்திய மொழிகளில் ஒன்றாக முன்வைக்கப்படுகின்ற வாதம் மறுக்கவியலாத
ஒன்றாகவே மாறியிருக்கிறது. ஆங்கிலத்தைத் தூக்கியெறிவதற்காக அரசியல் அதிகாரம் கொண்ட
பழமைவாத மையங்களும், அவற்றைப் போலவே அதிகஅதிகாரங்களைக் கொண்ட மறுமலர்ச்சி இயக்கங்களும்
தங்களுடைய கரங்களைக் கோர்த்துக் கொண்டிருக்கின்றன. ஆயினும் ஒப்பீட்டளவில் ஆங்கில
மொழி வெகுஜன அடிப்படையில் பயன்படுத்தப்படாத மொழியாக இருக்கின்ற போதிலும் இந்தியாவின்
வாழ்க்கைக் கலாச்சாரத்தோடு முரணியல்பின்றி
ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது போன்ற சிறப்புமிக்க காரணங்களால் அவ்வாறான இயக்கங்கள்
தோல்வியையே கண்டிருக்கின்றன. ஆங்கிலமொழி காலனித்துவ மரபின் ஒரு பகுதி என்பது உண்மைதான்
என்றாலும், நம்முடைய நாட்டை வடிவமைப்பதில் ஆங்கிலத்தின் பங்கு புரியாத புதிராக முரண்பாடுடனே
இருக்கிறது. காலனித்துவ மேலாதிக்கத்தை ஏற்படுத்திய ஆற்றல்மிக்க கருவியாக இருந்த அதே
வேளையில், ஆங்கிலம் காலனித்துவத்தை நாட்டிலிருந்து அகற்றுவதற்கான ஆயுதமாகவும் இருந்துள்ளது
என்பதே நமக்குக் கிடைத்திருக்கும் மிகச்சிறந்த அனுபவமாகும்.
துணைக்கண்டத்தின் மீது காலனித்துவ சக்திகள்
கொண்ட படிப்படியான வெற்றியில் ஆங்கில மொழி மிகமுக்கியமான கருவியாக இருந்தது என்பதில்
எவ்விதமான சந்தேகமும் இருக்கப் போவதில்லை. ஏகாதிபத்திய அமைப்பில் ஆட்சியாளர்களாக இருந்தவர்கள்
தங்களுடைய நுட்பமான திட்டங்களை ஆங்கிலக் கல்வியின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள
முயன்றனர். 1857ஆம் ஆண்டு மெக்கலே எழுதிய பிரபலமான குறிப்புகள், 1854இல் வுட்
அனுப்பி வைத்த கடிதம், 1857இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட மூன்று பிரிட்டிஷ்-முன்மாதிரி
பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றால் ஏற்பட்ட தொடர் விளைவுகள் நமது நாட்டில் ஆங்கிலக்
கல்வியை அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் ஏகாதிபத்தியத்திற்கு இருந்த நோக்கங்களையே
சுட்டிக்காட்டுகின்றன. அந்த ஆட்சியாளர்களை இந்திய மண்ணில் நிலைநிறுத்துவதற்குக் காரணமாக
இருந்த அந்த அன்னிய மொழியே, காலனித்துவ சக்திகளின் அஸ்திவாரங்களை அழிப்பதற்கு முயன்றவர்களுக்கான
பலத்தைக் கொடுத்து, அவர்கள் தன்னுடைய ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள உதவுகின்ற வேலையையும்
செய்து கொடுத்தது!
நாம் இங்கே ஆம்ஹர்ஸ்ட் பிரபுவிற்கு
1823ஆம் ஆண்டில் ராம்மோகன் ராய் எழுதிய புகழ்பெற்ற கடிதத்தையும், அந்தக் காலகட்டத்தில்
வரவேற்கத்தக்க நவீன தாக்கம் கொண்டதாக ஆங்கில மொழி வளர்ந்து வந்திருப்பதாக புதிய பார்வையைச்
சுட்டிக்காட்டிய கீழ்த்திசை - ஆங்கிலேய விவாதத்தையும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். சீர்திருத்தவாத இயக்கம் சுதந்திரம் குறித்து பல்வேறு வழிகளில்
எழுந்த உணர்வுகளுக்கான தொட்டிலாக இருந்தது. ஆங்கிலக் கல்வியின் விளைவாக வெளியான
சுதந்திரமான கருத்துக்கள் நாடு சுதந்திரம் பெறுவதற்கான ஆவலை உறுதிப்படுத்திக் கொள்ள
உதவின. கோகலே, காந்தி, நேரு, ராஜாஜி போன்ற பலரும் சுதந்திரப் போராட்டத்தின் போது
மிகவும் அருமையான ஆங்கிலத்தில் பேசியது மட்டுமல்லாது காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில்
முக்கியத்துவம் வாய்ந்த வழிகளில் அந்த மொழியைப்
பயன்படுத்திக் கொள்ளவும் செய்தனர். இதனையே ஆப்பிரிக்கச் சூழலில் ‘அடிமைப்படுத்தும்
ஆயுதத்தை எழுச்சியாளர்களுக்கான ஆயுதமாக மாற்றியமைக்கின்ற மாற்றம்’ என்று சோயிங்கா
குறிப்பிடுகிறார்.
இவ்வாறு சொல்வது இந்திய சுதந்திரப் போராட்டத்தில்
ஆங்கிலத்திற்கு அதிகமான முக்கியத்துவம் இருந்தது என்பதை வலியுறுத்துவதற்காக அல்ல. சுதந்திரப்
போராட்டத்தில் ஆங்கில மொழியின் பங்கு குறித்ததாக இருக்கின்ற அனைத்து சிக்கல்களுடனும்
சேர்த்தே இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே இதுபோன்ற கருத்துக்கள்
குறிப்பிடப்படுகின்றன. பொதுவாக நம்முடைய கருத்துக்கள், கல்வி, நீதித்துறை, பழக்கவழக்கங்கள்,
பொருளாதார வாழ்க்கை, மற்றும் அறிவார்ந்த, பண்பாட்டுப் பரிமாற்றங்களில் காலனித்துவ
உலகப் பார்வைகள் மிக நன்றாக ஊடுருவியிருக்கின்றன. சுதந்திரத்திற்குப் பிந்தைய நிலைமையில்
காலனித்துவ நீக்கம் என்பது நமது முக்கிய நோக்கமானதற்கு, நமது வாழ்வின் ஒவ்வொரு நடைமுறையிலும்
பழைய ‘காலனித்துவ கட்டமைப்புகளுக்கு அடிபணிந்து நடப்பது’ தொடர்ந்ததே காரணமாக இருந்தது.
கலாச்சார ஏகாதிபத்திய காலத்தில் நிலவுகின்ற
உலகமயமாக்கல், ஊடகங்களைப் பெருமளவில் கையாளுதல் போன்ற செயல்பாடுகள் காலனித்துவ
அமைப்புகளை வலுப்படுத்தி ஒருங்கிணைக்கின்றன. ஆங்கில மொழி எதிர்மறை விழுமிய அமைப்புகளை
எதிர்க்கும் மொழியாகச் செயல்படுவதற்கான தகுதியுடன் இருக்கிறது. இன்றைக்கு அது இந்திய
மொழிகளில் ஒன்றாகவே இருக்கிறது. அது நமது பிராந்திய மொழிகளுடன் இணைந்திருக்க நன்கு
கற்றுக் கொண்டுள்ளது. தற்போதைய காலகட்டம் நம் முன்பாக வைத்திருக்கும் பல சவால்களை
எதிர்கொண்டு, போர்கள், சமாதானங்கள் என்று இரு தளங்களிலும் ஆங்கிலத்தைத் திறம்படப்
பயன்படுத்துவது நமது கைகளிலேயே இருக்கிறது. அன்னிய மரபுவழியாக வந்தது என்று கூறி ஆங்கிலத்தை
துரத்தி விட நினைப்பது, நமது மரபின் ஒரு பகுதியாக மாறி விட்ட சமஸ்கிருதம், பாரசீகம்
போன்ற மொழிகளின் வரலாறை நாம் மறந்து விட்டதையே குறிப்பதாக இருக்கும்.
ஒரு ஜனநாயக சமுதாயமாக இந்தியா மாறியிருக்கும்
நிலையில், ஆங்கிலத்தின் பங்கு குறித்து ஜனநாயகரீதியான மறுவரையறையை மேற்கொள்வது மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முதலாவதாக
ஆங்கிலக் கல்வி உள்ளார்ந்த மேன்மை கொண்டிருப்பதாக பாரம்பரியமாக நமக்குச் சொல்லப்பட்டு
வருகின்ற செயற்கையாக ஊதிப் பெருக்கப்பட்ட கருத்துகளை நாம் நிராகரிக்கக் கற்றுக் கொள்ள
வேண்டும். அதிகாரப்படிநிலை கொண்ட சமுதாயத்தில் உள்ள மனப்போக்குகளை அழித்தொழிக்க வேண்டும்
என்று பேசுவது மிகவும் எளிது என்றாலும், அதைச் செயலில் காட்டுவது எளிதான காரியம் அல்ல.
காலனித்துவ உளவியலால் ‘உயர்வான பெருமைக்குரியது’ என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அது கலாச்சாரத்தின் முக்கிய வேர்களை மறுப்பதற்கு சமமானதாகும் என்ற உணர்தல் நம்மிடையே
இருக்க வேண்டும். சமதளத்தில் நின்று கொண்டு
பேசுவதற்கு நாம் கற்றுக் கொள்வேமேயானால், ஒப்பீட்டு இலக்கியத்தில் இத்தகைய அணுகுமுறைகள் மிக மோசமான அளவிற்குத் தோன்றுவதற்கு
வழியே இல்லை. ஒப்பீட்டு இலக்கிய ஆய்வானது இந்தியாவைப் பொறுத்த வரையில் ‘சோர்ந்த நிலையில்
இருக்கும் இலக்கியக் கலாச்சாரம் கொண்ட சமுதாயம் செயலார்ந்த இலக்கியக் கலாச்சாரம்
குறித்து அறிந்து கொள்வதற்காக மேற்கொள்கின்ற ஆய்வாக’ இருக்கிறது என்று ஜி.என். டெவி
மிகச்சரியாகக் குறிப்பிடுகிறார். தாழ்வு மனப்பான்மை கொண்ட மக்கள் தங்களுடைய சொந்த
இலக்கியக் கலாச்சாரத்தை மிக உயர்ந்த பண்பாடு என்று அழைப்பது குறித்து மேற்கொள்ளப்படுகின்ற
ஆய்வுகளாகவே அத்தகைய ஆய்வுகள் உள்ளன (1993:In Another Tongue,167). இது போன்ற அன்னியமான தத்துவங்களை எவ்வித விமர்சனமுமின்றி
ஏற்றுக் கொள்ளும் பழக்கத்தைக் கைவிடுவதற்கான
காலம் நெருங்கி விட்டது என்றே தோன்றுகிறது. விமர்சனக் கோட்பாட்டில் மேற்கத்திய மரபுகளைப்
பின்பற்றி அதனை மறுஉருவாக்கம் செய்து கொள்கின்ற தற்போதைய போக்கு நமக்கென்று இருந்து
வருகின்ற நமது சொந்த, பிராந்திய மரபுகளைக் கைவிட்டு அடிபணிவதன் வெளிப்பாடாகவே இருக்கிறது.
இரண்டாவதாக, இந்தியாவில் உள்ள ஆங்கில
இலக்கியக் கல்வி பிரத்தியேகமானதாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்திலிருந்து நாம்
முழுமையாக விடுபட வேண்டும். ஆங்கில மொழி, இலக்கியத்தைப் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் தங்களுடைய சொந்தப்
பாரம்பரிய மரபுகள், வாழும் கலாச்சாரங்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, அந்நிய
உண்மைகளின் உலகுடனே தங்களை அடையாளம் கண்டு கொள்கின்றனர். தம்மைச் சுற்றியுள்ள
சூழலுக்குப் பொருந்தாத வகையில் இருப்பதையே பெரும்பாக்கியம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
கலைத்திட்டங்களும், பாடத்திட்டங்களும்.கூட
பெரும்பாலும் அவர்களுடைய சொந்தச் சூழலில் இருந்து வருகின்ற அவர்களுடைய வாழும்
கலாச்சாரங்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத வகையிலேயே வடிவமைத்துத் தரப்படுகின்றன.
அந்த மாணவர்களை தாங்கள் வாழுகின்ற சூழலில் இருந்து விலக்கி வைப்பது மட்டுமல்லாமல்,
அவை அவர்களின் கருத்துகளை, பாடங்களைப் புரிந்து கொள்ளும் திறனைப் பலவீனப்படுத்தவும்
செய்கின்றன. ‘தாய்மொழியில் நடைபெற்று வருகின்ற இலக்கியம், கலாச்சாரம் குறித்த கற்பித்தல்களோடு,
ஆங்கில இலக்கியம் குறித்த கற்பித்தல் சேரும் போதுதான் அது திறனாய்வு சார்ந்ததாக
இருக்கும்’ என்ற காயத்ரி ஸ்பிவாக்கின் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக
உள்ளது என்கிறார் ராஜேஸ்வரி சுந்தரராஜன் (1987:The Lie of the Land, 295).
இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தின்
அடிப்படையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த களமாக இருந்து வருகின்ற மொழிபெயர்ப்பு
என்ற தளத்தில் நாம் அடைந்திருக்கும் மோசமான சாதனைகளுக்கு, ஆங்கிலப் படிப்புகளுக்கும்,
தாய்மொழி இலக்கியங்களுக்கு இடையில் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் இருப்பதே முக்கிய
காரணமாக இருக்கிறது. அதனாலேயே மிகப் பெரிய அளவில் தரம் வாய்ந்த மொழிபெயர்ப்புகளை
உருவாக்குவதில் முக்கியமான பிரச்சனை நம்மிடையே எழுந்திருக்கிறது. சில விதிவிலக்குகள்
இருந்த போதிலும், பெரும்பாலும் மொழிபெயர்ப்பு தொடர்பான நிபுணத்துவத்திற்கான தேவைகளை
நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்றவாறு ஆங்கில வகுப்புகள் நமது நாட்டில் திட்டமிடப்படுவதில்லை.
தங்கள் தாய்மொழியில் எழுதுகின்ற மிகச்சிறந்த
எழுத்தாளர்கள் கூட தங்களுடைய மொழிக்கு அப்பாற்பட்டு நாட்டிற்குள்ளே அல்லது நாட்டிற்கு வெளியில் மிகவும்
அரிதாகவே அறியப்பட்டிருக்கின்றனர். அதன் விளைவாக வெளிநாடுகளில் உள்ள இலக்கிய ஆர்வலர்களைப்
பொறுத்த வரையில், இந்திய இலக்கியம் என்றாலே தாகூர், ஆர்.கே.நாராயண், அருந்ததி ராய்
அல்லது விக்ரம் சேத்! போன்ற சில எழுத்தாளர்களின் படைப்புகள் என்றே பொருள்படும் வகையிலான
நிலைமையே இருந்து வருகிறது. இந்தியக் கல்வியாளர்கள் மத்தியில்கூட ஆங்கில மொழிபெயர்ப்பில்
இருக்கும் இந்திய இலக்கியங்களால் (ILET) எந்தவொரு மரியாதையையும் பெற முடியவில்லை, சில விதிவிலக்கான
நிகழ்வுகளைத் தவிர்த்து நமது பல்கலைக்கழகங்களில் கற்றுத் தரப்படும் ஆங்கிலம் தொடர்பான
படிப்புகளில் அத்தகைய நூல்களுக்கான அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை என்பதையும் நாம்
கவனத்தில் கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக, ஆங்கிலம் என்பது ஒரு மொழியாக
சர்வதேச முனைப்பு கொண்டதாக இருப்பதால், அது அனைத்துலகக் காற்றையும் சுவாசிப்பதாக
இருக்கிறது. அது நமது சமகாலச் சூழலில் மிகவும் பொருத்தமானதாக உள்ளது. இன்றளவில்
இந்திய அரசியல், கலாச்சார சக்திகளால் முன்னெடுக்கப்படும் மறுமலர்ச்சி என்பது இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவில்
தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. சீர்குலைக்கும் நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள்,
சடங்குகள் ஆகியவற்றை உயிர்ப்பித்து நமது மதச்சார்பற்ற தன்மையின் மீது படிப்படியாகப்
பலவீனத்தை ஏற்படுத்துகின்ற வகையிலேயே அது இன்றைக்கு மீண்டு வந்துள்ளது.
இத்தகைய மோசமான செயல்முறைகளை நேரடியாக
எதிர்த்து நிற்பது காலத்தின் கட்டாயமாகும். அந்த மோதலில் நாம் மொழியை ஆற்றல் மிக்க
ஊடகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியச் சூழலில் எழுந்து வருகின்ற புதிய மறுமலர்ச்சியை எதிர்ப்பதற்கான
திறனைக் கொண்டுள்ள மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. மொத்தத்தில் சுருக்கமாகச் சொல்வதானால்,
தேசிய செயற்பாட்டுப் பட்டியலில் இருக்கும் ஜனநாயகமயமாக்கல், காலனித்துவ நீக்கம்
ஆகியவற்றைத் தூண்டுகின்ற நோக்கத்தின் திசையிலேயே இந்திய ஆங்கிலக் கல்வி பயணிக்க வேண்டும்.
ஆங்கில மொழி அதற்கான பங்கை தன்னுடைய வழியில்
அளிக்கக்கூடிய திறன் கொண்டதாக இருக்கிறது. செயல்திறம் கொண்ட மொழியாக இருப்பதால் ஆங்கில
மொழியும், அதன் இலக்கியங்களும் கடந்த ஆண்டுகளில் தீவிர மாற்றங்களுக்கு உட்பட்டு
வருகின்றன. இலக்கியக் கலாச்சாரத்தில் ஏற்பட்டு வருகின்ற தீவிர மாற்றங்களை தன்னுள் இழுத்துக் கொண்டு, பெண்ணியம்,
தலித் மற்றும் பிற புதிய முன்னோக்குகளை ஒருங்கிணைத்து
இந்த தகவல் தொழில்நுட்ப சகாப்தத்தில் தேவைப்படுகின்ற மாற்றங்களை எதிர்கொள்கின்ற திறனைக்
கொண்டதாக ஆங்கிலம் இருக்கிறது.
அடிமைத்தனம் என்ற உளவியலைப் புறந்தள்ளி
விட்டு, மாற்றத்திற்கானதொரு கருவியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கு எது நமக்குத்
தேவைப்படும்? நமக்கென்று உள்ள நமக்குச் சொந்தமான பிராந்திய கலாச்சாரங்களை மதித்து அவற்றின்
சார்பாக இருக்கும் வகையிலே ஆங்கிலக் கல்வியை நாம் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்;
மறுமலர்ச்சியால் உருவாகி வருகின்ற ஆபத்துக்களுக்கு பயனுள்ள மருந்தாகவும் அது பயன்படுத்தப்பட
வேண்டும்.
Comments