ரஃபேல் விவகாரம் : தி ஹிந்து - தேச விரோதப் பத்திரிக்கை!

 ப.சிதம்பரம்

முன்னாள் நிதி அமைச்சர்

இந்தியன் எக்ஸ்பிரஸ்

2019 மார்ச் 10


ரஃபேல் சர்ச்சை இனி நம்மை விட்டுப் போகப் போவதில்லை! புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல், அதனைத் தொடர்ந்து இந்திய விமானப்படை மூலம் பதிலடி கொடுத்தல் என்று நடந்த விஷயங்கள் இந்த ரஃபேல் சர்ச்சையை பின்னுக்குத் தள்ளியிருந்த போதும் ‘ரஃபேல் விமானம் இப்போது இருந்திருந்தால்....’ என்ற தன்னுடைய  கூற்றின் மூலமாக பிரதமர் மோடி அதனை மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்திருக்கிறார்.  

அவருடைய இந்தக் கருத்து வெளியான இரண்டு நாட்களுக்குள் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான மற்றுமொரு புலன்விசாரணைக் கட்டுரையை தி ஹிந்து பத்திரிக்கை வெளியிட்டது அவரது துரதிர்ஷ்டம். தாங்கள் நடத்திய பேரத்தின் மூலமாக தங்களால் ஒன்பது முதல் இருபது சதவிகிதம் வரை மலிவாகவே ஒப்பந்தம் போடப்பட்டது என்ற அரசாங்கத்தின் கூற்று - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் போட்ட ஒப்பந்தத்தில் இருந்த விலையானது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் ஒப்பந்தத்தில் இருந்த விலையைக் காட்டிலும் 2.86 சதவீதம் குறைவாக இருந்தது என்று இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் சமர்ப்பித்த அறிக்கையின் மூலமாக நிராகரிக்கப்பட்டிருந்தது. இப்போது ஹிந்து பத்திரிக்கையில் வெளியாகி இருக்கும் புலனாய்வுக் கட்டுரை சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டவற்றையும் இல்லாமல் செய்து விட்டது.  

எந்த ஒப்பந்தம் மலிவானது?

இதற்கான பதிலைச் சொல்வது மிகவும் எளிதானது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தில் தஸ்ஸோ நிறுவனம் வங்கி உத்தரவாதம், செயல்திறன் உத்தரவாதம் ஆகியவற்றைத் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் போட்ட ஒப்பந்தத்தில் அவ்வாறான நிபந்தனை தேவையில்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டது. உத்தரவாதம் வழங்கப்படும் போது ​​ வங்கி அதற்கான கட்டணத்தை வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்கும். இந்த ஒப்பந்தத்தைப் பொறுத்த வரை அவ்வாறான கட்டணத்தை தஸ்ஸோ நிறுவனம் செலுத்த வேண்டும். உத்தரவாதத்திற்கான 'செலவு' என்பது அனைத்து வியாபாரிகளும் நன்கு அறிந்த ஒன்றாகும். ரஃபேல் ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட அறுபதினாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருப்பதால் மிக அதிகமாகவே இந்த உத்தரவாதக் கட்டணங்கள் இருந்திருக்கும்.

உத்தரவாதக் கட்டணங்களுடன் கூடிய ஒப்பந்தம், உத்தரவாதக் கட்டணங்கள் இல்லாத மற்றுமொரு ஒப்பந்தம் - இவை இரண்டின் விலைகளையும் ஒப்பிடப்படுவதற்கு முன்னதாக, உத்தரவாதக் கட்டணங்களுடன் இருக்கின்ற முதல் ஒப்பந்தத்தில் உள்ள உத்தரவாதக் கட்டணங்களை நீக்கி விட்டே ஒப்பீடு செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்வதற்கு மிகமிகச் சாதாரண அறிவே போதும். இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளருக்கு கிடைத்த எண்களைக் கொண்டு இந்தக் கட்டணங்களை அவர் இரண்டு பிரிவுகளாகக் கணக்கிட்டார்:

வங்கி உத்தரவாதக் கட்டணங்கள்

AAB1 மில்லியன் யூரோ

செயல்திறன் உத்தரவாதம் மற்றும் உத்தரவாதக் கட்டணம் 

AAB2 மில்லியன் யூரோ

மொத்தம்

AAB3 மில்லியன் யூரோ

விலை குறித்த தகவலை திருத்தியமைத்தே வெளியிடுவோம் என்று அரசாங்கத்திற்கு உறுதியளித்திருந்ததால், இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் எண்ணெழுத்துக்களைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு மிகப் பெரிய உதவியை செய்திருந்தார்.  

இருந்தாலும் அவருக்கு பின்வருமாறு முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ‘ஆகையால், இந்த வங்கி கட்டணங்களைச் செலுத்தாததன் மூலம் விற்பனையாளருக்கு கிடைக்கின்ற AAB3 மில்லியன் யூரோ என்ற அளவில் மிஞ்சுகின்ற மொத்த தொகையும் அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். வங்கி உத்தரவாதங்கள் மீதான தணிக்கைக் கணக்கீடுகளுக்கு ஒப்புக் கொண்டாலும், வங்கி உத்தரவாத கட்டணங்கள் செலுத்தப்படத் தேவையில்லை என்பதால் அது அமைச்சகத்திற்கான சேமிப்பு என்று அமைச்சகம் வாதிட்டது. இருப்பினும் 2007ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட முந்தைய முன்மொழிவுடன் ஒப்பிடுகையில் இது உண்மையில் தஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனத்திற்கான சேமிப்பு’ என்றே தணிக்கை குறிப்பிட்டிருந்தது.

நாட்டை ஏமாற்றிய சிஏஜி  

உத்தரவாதக் கட்டணங்கள் பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டால், இரண்டு ஒப்பந்தங்களின் விலை குறித்த அர்த்தமுள்ள ஒப்பீட்டை யாராலும் மேற்கொள்ள முடியாது. தி ஹிந்து பத்திரிகை இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் அறிக்கையிலிருந்து தகவல்களை எடுத்து வெளியிட்டது. அதில் உத்தரவாதக் கட்டணங்கள் 57.4 கோடி யூரோ என்றிருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் போட்டிருந்த ஒப்பந்தத்தில் இருந்து இந்தத் தொகையைக் கழித்து விட்டு இப்போது இரண்டு ஒப்பந்தங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போட்டிருக்கும் ஒப்பந்தத்தில் 24.611 கோடி யூரோ அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வரும். ஒரு யூரோவிற்கு 80 ரூபாய் என்ற  தற்போதைய நாணய மதிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போட்டிருக்கும் ஒப்பந்தத்தில் போர் விமானங்களின் விலை 1,968 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்தக் கணக்குப்படி பார்த்தால், இவர்களுடைய இந்த ஒப்பந்தத்தின் மூலமாக ஒவ்வொன்றும் 54.66 கோடி ரூபாய் அதிக விலையில் முப்பத்தியாறு விமானங்கள் நமக்கு விற்கப்படும்.


இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் முயற்சிகளை இழிவுபடுத்தும் வகையில் பிரதமர் அலுவலகம் இணை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. ஊழலுக்கெதிரான மூன்று பிரிவுகள் நீக்கம், பாதுகாப்பாகப் பணம் செலுத்துவதற்கான முறைமைகளான அரசாங்க உத்தரவாதம், வங்கி உத்தரவாதம், எஸ்க்ரோ கணக்கு கைவிடப்பட்டது போன்றவை  இன்னும் தீராத மர்மங்களாகவே இருக்கின்றன. தஸ்ஸோ மீது கொண்ட அன்பு, பாசம் ஆகியவற்றாலேயே அவர்கள் இதுபோன்று செய்திருக்க வேண்டும். இவையெல்லாம் முற்றிலும் வேறானதொரு காரணத்திற்காகவே நடந்திருக்க வேண்டும் என்றே உண்மைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த மர்மமான அம்சங்களை ஆய்வு செய்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டிய கடமை சிஏஜிக்கு இருந்தது. ஆனால் நாட்டை சிஏஜி ஏமாற்றி விட்டது.

இந்த ஒப்பந்தத்தில் மறைக்கப்பட்ட அம்சங்களை ஒன்றொன்றாக தி ஹிந்து பத்திரிக்கை வெளிக் கொண்டு வந்திருக்கிறது. இதற்கு அரசாங்கத்தின் பதில் என்ன? அந்தச் செய்தித்தாள் மீது ‘திருட்டு’ ஆவணங்களைப் பயன்படுத்தியதாகக்  குற்றம் சாட்டுகிற அரசாங்கம், கிரிமினல் குற்றச்சாட்டுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அந்தப் பத்திரிக்கையை அச்சுறுத்துகிறது! இத்தகைய அச்சுறுத்தல்களை விடுப்பதற்கு இந்தியத் தலைமை வழக்கறிஞரை அரசாங்கம் இறக்கி விட்டிருக்கிறது! 

திருடப்பட்ட பிரபல ஆவணங்கள்

2012-14ஆம் ஆண்டில் திருடி எடுக்கப்பட்டு பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்ட சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை இந்திய அரசாங்கம் பெற்றுக் கொண்டது. வருமான வரித்துறை அறிவிக்கைகளை அனுப்பி வரி செலுத்துமாறு கோரி வழக்குத் தொடுத்தது. அப்படியென்றால் 'திருடப்பட்ட ஆவணங்களின்' அடிப்படையில் வருமான வரித்துறை செயல்படுகிறதா? அதேபோல 2016ஆம் ஆண்டில், சட்ட நிறுவனம் ஒன்றின் கணினியில் இருந்து 1.15 கோடி ஆவணங்கள் சுடோய்ட்ஸ் ஸீடுங் எனும் ஜெர்மன் பத்திரிகையில் கசிய விடப்பட்டன (யாரோ ஒருவரால் திருடப்பட்டது?). அவர்கள் அதனை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களைக் கொண்ட சர்வதேச கூட்டமைப்புடன் பகிர்ந்து கொண்டனர். இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பெயர்களை வெளியிடுவது பற்றியோ, அவர்களுக்கு அறிவிக்கைகளை அனுப்புவது பற்றியோ வருமான வரித் துறையிடம் எந்தவிதத் தயக்கமும் இருக்கவில்லை.

புகழ்பெற்ற பென்டகன் ஆவணங்கள் என்றறியப்படுபவை உண்மையில் வியட்நாம் போர் குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளரால் தயாரிக்கப்பட்ட ரகசிய அறிக்கைகளே. அவை 1971ஆம் ஆண்டு வெளியே கசிந்ததன. அந்த அறிக்கைகளை வெளியிடுவதற்கு வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை தயாரான வேளையில், அமெரிக்க அரசாங்கம் அந்தச் செய்தித்தாள் மீது வழக்குத் தொடுத்தது. தி நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிக்கைகள் 6-3 என்ற தீர்ப்பின் மூலமாக, எந்தவிதமான தணிக்கையோ அல்லது தண்டனையோ இல்லாமல் அந்த ஆவணங்களை வெளியிடுவதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது (403 U.S. 713). தேசிய பாதுகாப்பு மீது இருக்கும் அக்கறைக்கும் மேலானதாக பேச்சு சுதந்திரத்தை முன்வைத்த நீதிபதிகள் பிளாக், டக்ளஸ், ப்ரென்னன் ஜூனியர், ஸ்டீவர்ட், வொயிட், மார்ஷல் ஆகியோர் தகவல்கள் பரவுவதே ஜனநாயகச் செயல்பாடுகள் உறுதிப்படுவதற்கு வழிவகுக்கும் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தினர். அவர்களில் ஒருவர்கூட 'திருடப்பட்ட ஆவணங்கள்' என்று குறிப்பிடவில்லை!  

அந்த வரலாறு இந்த முறை இந்தியாவிற்குத் திரும்பியிருக்கிறது. திரு.மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் தி ஹிந்து பத்திரிக்கையை தேசத்திற்கு எதிரானது என்றோ அல்லது மோசமானது என்றோ முத்திரை குத்துவார்கள். அதுபோன்ற வசைமாரிகளைப் பொருட்படுத்தாமல் அந்த செய்தித்தாளை வாசகர்கள் தொடர்ந்து வாசிப்பார்கள். ரஃபேல் விமானம் வந்து சேரும். ஒரு விசாரணை நடைபெறும். உண்மை வெளிவரும். நாடு தொடர்ந்து செல்லும்.


https://indianexpress.com/article/opinion/columns/rafale-deal-the-hindu-modi-congress-the-anti-national-newspaper-cag-report-5618702/

 

Comments