புதிய ரஃபேல் ஒப்பந்தம் மிக அதிக விலையில் போடப்பட்டதற்கு வங்கி உத்தரவாதம் இல்லை என்பதை ஒத்துக் கொண்டதே காரணம்

என். ராம்

தி ஹிந்து

2019 மார்ச் 06


பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட இந்தியக் குழுவின் (INT) இறுதி அறிக்கை இந்தியாவின் பேரம் பேசுகின்ற தன்மை எவ்வாறு பலவீனமடைந்தது என்பதையும், அப்போது நடைபெற்ற இணை பேச்சுவார்த்தைகளின் மூலமாக பிரான்சின் நிலைப்பாடு எவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.  

ஏழு உறுப்பினர்கள் கொண்ட இந்திய பேச்சுவார்த்தைக் குழு  2016 ஜூலை 21 அன்று  பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பித்த இறுதி அறிக்கையில் பிரான்ஸ் அரசாங்கத்தின் ஆதரவுடன் இருந்த பிரான்ஸ் வர்த்தகர்கள் செலுத்த மறுத்து விட்ட வங்கி உத்தரவாதங்களை ஏற்றுக் கொள்வதற்காகும் செலவு 57.4 கோடி யூரோ அளவிற்கு இருந்ததாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அதைக் கொண்டு பார்க்கும் போது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் 2016 செப்டம்பர் 23 அன்று போட்ட ஒப்பந்தத்தில் போர் விமானம் மற்றும் ஆயுதங்களுடன் கூடிய முப்பத்தியாறு  ரஃபேல் விமானங்களை வாங்குவதற்காக 787 கோடி யூரோ என்ற அளவில் இருந்த தொகை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையைக் காட்டிலும் 24.61 கோடி யூரோ  அதிகமாக இருக்கிறது.    

விரிவான ஆவணம்

‘இந்திய விமானப்படைக்கு முப்பத்தியாறு ரஃபேல் விமானங்களைக் கொள்முதல் செய்வது குறித்த இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் அறிக்கை’ என்ற அந்த விரிவான ஆவணம் தி ஹிந்து பத்திரிகைக்கு கிடைத்தது. அந்த அறிக்கையின் அறுபத்தி ஒன்பதாவது பாராவில் ‘இறுதி விலை 787.898 கோடி யூரோ (கூடுதல் ஆயுதப் பொருட்களைக் கட்டாயமாகத் தருவதற்கான 1.055 கோடி யூரோ இல்லாமல்) என்றிருந்தது. இருபத்தி மூன்றாவது பாராவில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி உத்தரவாதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால், அந்த விலை பல்நோக்கு நடுத்தர போர் விமானத்திற்கான விலையான 820.587 கோடி யூரோவைக் காட்டிலும் 32.789 கோடி யூரோ குறைவாகவே இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

போர் விமானங்களின் விலை எவ்வாறு மதிப்பிடப்பட்டது?

வங்கி உத்தரவாதத்திற்கான தொகையாக 57.4 கோடி யூரோ என்ற தொகை எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் பேச்சுவார்த்தைக் குழுவின் அறிக்கையில் உள்ள 21, 22, 23 பாராக்களில் விளக்கப்பட்டுள்ளன. இந்திய வங்கிகளால் பெறப்படும் உறுதிப்படுத்தல் கட்டணம் உட்பட இரண்டு சதவிகிதம் வருடாந்திர வங்கி கமிஷன் ஆகியவற்றிலிருந்து வங்கி உத்தரவாதங்களுக்கான தொகை, ஒப்பந்தத் தொகை மதிப்பில் 7.28 சதவிகிதம் என்றிருக்கும் என்று பாரத ஸ்டேட் வங்கி 2016 மார்ச் 02 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கணக்கிடப்பட்டிருந்தது. இந்த வங்கி உத்தரவாதம் விமானத்தின் விலை மீது ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும் சேர்த்து கணக்கிடப்பட்ட ஒருங்கிணைந்த விலையானது இறுதியாகப் பேசி முடிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் குறைவாக இருப்பதாக அட்டவணை 1 காட்டுகிறது. இந்த அட்டவணை தங்களுடைய அதிருப்தியை பேச்சு வார்த்தைக் குழுவில் இருந்த நிபுணர்கள் பதிவு செய்த குறிப்புகளில் இடம் பெற்றுள்ளது.

  

அட்டவணை 1

பொருள்

வங்கி உத்தரவாதம் இல்லாமல் ஒருங்கிணைந்த விலை

(கோடி  யூரோவில்)

வங்கி உத்தரவாதம் இல்லாமல் பிரான்ஸ்  பக்கமிருந்து இறுதியாக சொல்லப்பட்ட விலை (கோடி யூரோவில்)

விமானம்

734.158*

716.900

ஆயுதங்கள்

71.829

71.045#

மொத்தம்

805.987

787.945

வங்கி உத்தரவாதம் மூலம் ஏற்படும் நிதி தாக்கம்

57.400

 

மொத்தம்

748.587

787.945

 

*உதிரிப் பாகங்களுக்காக பிரெஞ்ச் பக்கம் இருந்து தரப்பட்ட சலுகை காரணமாக மாற்றியமைக்கப்பட்ட விலை

# இந்திய விமானப் படைக்குத் தேவைப்படும் பயிற்சி மற்றும் விமானத்தை இயக்குவதற்கு கூடுதலாகத் தேவைப்படுகின்ற எம்பிடிஏவால் பரிந்துரைக்கப்படுகின்ற ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களைத் தவிர்த்து

ஆதாரம்: இந்திய பேச்சு வார்த்தைக் குழுவில் இருந்த மூன்று வல்லுநர்கள் தங்களுடைய அதிருப்தியைப் பதிவு செய்து அளித்த கருத்துக்களில் நான்காவது பக்கத்தில் இந்த அட்டவணை இடம் பெற்றுள்ளது

 

வங்கி உத்தரவாதத்தைத் தருமாறு பிரான்ஸ் பக்கம் இருந்து பேசியவர்களிடம் இந்தியப் பேச்சுவார்த்தைக் குழுவில் இருந்தவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளதை பேச்சு வார்த்தைக் குழுவின் இறுதி அறிக்கை தெரிவிக்கிறது.  

‘இந்த கொள்முதலுக்காக மிகப் பெருமளவிலான பணம் இந்த ஒப்பந்தத்தின் மூலம் கொடுக்கப்படுவதாக இருப்பதாலும், விமானங்களும் மற்ற சேவைகளும் வழங்கப்படுவதற்கு முன்னதாகவே முன்கூட்டியே பணம் செலுத்தப்படுவதாக இருப்பதாலும் பிரான்ஸ் பக்கம் இருந்து அரசாங்கத்தின் சட்டரீதியான பாதுகாப்பு அல்லது போதுமான உத்தரவாதங்கள் பெறப்பட வேண்டும்’ என்று எழுத்துப்பூர்வமாக 2015 டிசம்பரில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியிருந்தது. பேச்சுவார்த்தைகளின் போது முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை பிரான்ஸ் பக்கம் இருந்து பேசியவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து, நிராகரித்தனர். இந்திய பக்கம் இருந்து பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் வங்கி உத்தரவாதங்களைப் பெறுவதற்கு மிகவும் சிறப்பாகச் செயல்பட்டனர். அவ்வாறான நிபந்தனை நடுத்தர போர் விமானங்களைத் தருவதற்காக தஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனத்தால் தரப்பட்டிருந்த (MMRCA) முன்மொழிவிலும் சேர்க்கப்பட்டிருந்தது.      

ஒரு பயனுமில்லை

ஒரு கட்டத்தில் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்திடம் இருந்த கவலைகள், வங்கி உத்தரவாதங்கள் போன்ற பிரச்சனைகளில் இருதரப்பிற்கும் இருந்த கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டுமென்றால் வங்கி உத்தரவாதங்கள், ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்கான கட்டணம் ஆகியவற்றை இந்தியா ஏற்றுக் கொள்வதே சிறந்த வழி என்று இந்திய பேச்சுவார்த்தைக் குழு வாதிட்டது. இது எந்தப் பயனுமற்றது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது.   

புதிய ஒப்பந்தத்தின் பேரில் ஏற்படுகின்ற செலவினங்களையும், நடுத்தர போர் விமானங்களுக்கென ஏற்கனவே இருந்த முன்மொழிவுகளையும் ஒப்பிட்ட வேளையில், அந்தக் குழுவின் இறுதி அறிக்கை வங்கி உத்தரவாதங்களை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் வணிகரீதியிலான தாக்கம் குறித்து எதுவும் கூறாமலே அமைதி காத்தது. ஒருங்கிணைக்கப்பட்ட விலை குறித்த ஒப்பீட்டில் அந்த முக்கியமான காரணி விடுபட்டுப் போகுமாறு செய்யப்பட்ட அதே தவறு 2019 பிப்ரவரி 13 அன்று நாடாளுமன்றத்தில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையிலும் காணப்பட்டது.

வங்கி உத்தரவாதங்களின் வணிகரீதியான தாக்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதில் இந்த இரண்டு அறிக்கைகளும் காட்டிய மோசமான மௌனத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது ஒன்றும் கடினமான காரியமாக இருக்கப் போவதில்லை. பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றிருந்த பெரும்பாலான உறுப்பினர்களுக்குத் தெரியாமலேயே 2015ஆம் ஆண்டில் பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரைக் கொண்டு மற்றுமொரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகம், பேச்சு வார்த்தைக் குழு ஆகியவற்றிற்குத் தெரியாமலேயே பிரதமர் அலுவலக அதிகாரிகளால் நடத்தப்பட்ட இந்த ‘இணை பேச்சுவார்த்தைகளுக்கு’ எதிராக 2015 நவம்பர் 24 அன்று பாதுகாப்பு அமைச்சகம் எழுதிய குறிப்பை இப்போது கவனத்திற்கு கொண்டு வரலாம்.   

பாதுகாப்பு அமைச்சகத்தின் குறிப்பில் ‘பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பேச்சுவார்த்தைக் குழு ஆகியவற்றின் பேரம் பேசுகின்ற திறனை அந்த இணை பேச்சுவார்த்தை பலவீனப்படுத்தியது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ‘இதை பாதுகாப்புத் துறை அமைச்சர் தயவுசெய்து கவனிக்க வேண்டும். பிரதமர் அலுவலகத்தால் நடத்தப்படும் இதுபோன்ற பேச்சுவார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் இது நாம் அதிகாரப்பூர்வமாக நடத்துகின்ற பேச்சுவார்த்தையை இழிவுபடுத்துவதாக இருக்கிறது’  என்று தன் கைப்பட எழுதிய அப்போதைய பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஜி.மோகன் குமார் அந்த எதிர்ப்பிற்கான தன்னுடைய ஒப்புதலைப் பதிவு செய்திருந்தார்.   

எவரொருவர் மீதும் குற்றம் சுமத்தாமல் அந்த இறுதி அறிக்கை ‘2016ஆம் ஆண்டு முழுவதும் தொடர்ந்த அந்த இணை பேச்சுவார்த்தை, இரு அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் வரையிலும் தொடர்ந்ததன் விளைவாக, இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் நிலைமை மிகவும் பலவீனமடைந்தது. பிரான்ஸ் பக்கம் இருந்து பேசியவர்களுக்கே அது பயனளித்தது’ என்று கூறுகிறது. பிரதமர் அலுவலக அதிகாரிகள். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் நடத்திய இணை பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்டவற்றையோ அல்லது இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்திற்கான முன்வரைவில் குறிப்பிடப்பட்டவற்றையோ அல்லது 2017 ஜனவரி 25 அன்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையையோதான் இந்த ஒப்பந்தத்தில் ஏற்பட்ட முடிவாக பிரான்ஸ் பக்கம் இருந்து பேசியவர்கள் நம்பியிருந்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக இந்திய பேச்சுவார்த்தைக் குழுவில் இருந்தவர்கள் 2016 மார்ச் 31 அன்று, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் சட்ட ஆலோசனையை மேற்கோள் காட்டி வங்கி உத்தரவாதங்களைக் கொண்டு வருவதற்கான அழுத்தத்தை கொடுத்தனர். அப்போது பிரான்ஸ் பக்கம் இருந்து பேசியவர்கள் ‘வங்கி உத்தரவாதங்கள் குறித்து ஏற்கனவே பலமுறை விளக்கப்பட்டு விட்டது. அது இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்கு இணக்கமாக இருக்கவில்லை. வங்கி உத்தரவாதங்கள் எங்களால் ஏற்கத்தக்கவை அல்ல’ என்று தெரிவித்தனர்.    

விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ​​வங்கி உத்தரவாதங்களை ஏற்றுக் கொள்வது குறித்து ஏன்  அமைதி காக்கப்பட்டது என்பதற்கான மிக முக்கியமான காரணமாக 2015 ஏப்ரல் 10 அன்று வெளியிடப்பட்ட இந்தோ-பிரெஞ்சு கூட்டு அறிக்கை இருக்கிறது. ‘இந்திய விமானப்படைக்கு பல்நோக்கு விமானங்களுக்கான  அவசியத் தேவை இருப்பதைக் கருத்தில் கொண்டு, பறப்பதற்குத் தயாரான நிலையில் இருக்கின்ற முப்பத்தியாறு ரஃபேல் போர் விமானங்களை உடனடியாகப் பெற்றுக் கொள்ள தான் விரும்புவதாக இந்திய அரசாங்கம் பிரான்ஸ் அரசாங்கத்திடம் தெரிவித்தது. தனிப்பட்ட முறையில் செயல்படுத்தப்பட்ட வழிமுறையின் ஒரு பகுதியாக தஸ்ஸோ ஏவியேஷன் கூறியதற்கு மேலானதாக போர் விமானங்களைத் தருகின்ற வகையில், இரண்டு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தை நிறைவு செய்ய இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இந்திய விமானப் படையால் சோதிக்கப்பட்டு, ஒப்புக் கொள்ளப்படுகின்ற வகையில், நீண்ட காலத்திற்கான  பராமரிப்புப் பொறுப்பையும் பிரான்ஸ் எடுத்துக் கொண்டு இந்திய விமானப் படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கேற்ப இருக்கின்ற காலக்கெடுவிற்குள் போர் விமானம், அதனுடன் இணைந்த அமைப்புகள் மற்றும் ஆயுதங்களை வழங்கிட வேண்டும்’ என்பதாக இருந்த அந்த கூட்டு அறிக்கை புதிய ரஃபேல் ஒப்பந்தம் எவ்வாறு உருவாகப் போகிறது என்பதைச் சுட்டிக் காட்டியது.   

அந்த விலை ஒப்பீடுகளில் வங்கி உத்தரவாதங்களையும் சேர்க்கும் போது, பல்நோக்கு நடுத்தர போர் விமாங்களை வாங்குவதற்கான பழைய முன்மொழிவில் இருந்த விலையைக் காட்டிலும் புதிய ஒப்பந்தம் சிறந்ததாக இருப்பதான முடிவு, இந்திய பேச்சுவார்த்தைக் குழுவால் சிறந்த விதிமுறைகளை நிர்ணயிப்பதற்கான வழிகாட்டியாக  இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்தோ-பிரெஞ்சு கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்குறுதியுடன் நேரடியாக முரண்படுகிறது.   

இருப்பினும் 2019 பிப்ரவரி 13 அன்று தி ஹிந்து பத்திரிகையில் நான் கூறியிருந்ததைப் போல், இந்த ஒப்பந்தம் பற்றி தங்களுக்கிருக்கும் அதிருப்தி குறித்து இந்திய பேச்சுவர்த்தைக் குழுவில் இருந்த மூன்று வல்லுநர்கள் எழுதிய எட்டு பக்க குறிப்புகள் குழுவின் இறுதி அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன. ‘பிரான்ஸ் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற இறுதி விலை, பல்நோக்கு நடுத்தர போர் விமாங்களை வாங்குவதற்கான பழைய முன்மொழிவில் இருந்த விலையைக் காட்டிலும் 'சிறந்ததாக' உள்ளதாகக் கருத முடியாது என்பதால், கூட்டு அறிக்கைக்கான தேவை ஏற்படவில்லை’ என்ற முடிவிற்கு வருவதற்கு அந்த வல்லுநர்களிடம் எவ்விதத் தயக்கமும் இருக்கவில்லை.

பல்நோக்கு நடுத்தர போர் விமாங்களை வாங்குவதற்கான பழைய முன்மொழிவில் இருந்த விலையைக் காட்டிலும் நல்ல விலையில் போர் விமானங்களைப் பெறுவதற்கான ரஃபேல் ஒப்பந்தத்தை தாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம் என்ற வாதத்தை உச்சநீதிமன்றத்தின் முன்பு  ஒன்றிய அரசு வைத்தது. ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி தணிக்கை அறிக்கையின் இரண்டாம் தொகுதியிலும் இவ்வாறான கூற்று இடம் பெற்றிருக்கிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு அரசாங்கம் பிரான்ஸிடமிருந்து போர் விமானங்களை வாங்குவதற்காகப் போட்டிருந்த ஒப்பந்தத்தைக் காட்டிலும் 2.86% குறைவான தொகையில் புதிய ஒப்பந்தத்தை மோடி அரசாங்கம் போட்டிருப்பதாக, வங்கி உத்தரவாதங்களுக்கான தொகையைக் கணக்கிட்டு, அதனை அந்த அட்டவணையில் சேர்க்காமல் தனியாக வைத்து விட்டு, தன்னுடைய தணிக்கை அறிக்கையில் சிஏஜி தெரிவித்திருந்தது.    

இருப்பினும் சிஏஜி அறிக்கை பின்வரும் எச்சரிக்கையை முன்வைத்தது: ‘விற்பனையாளர் இத்தகைய செலவினங்களை விமானத்திற்கான விலைக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது அப்போதைய நிபந்தனையாக இருந்ததால் 2007இல் தஸ்ஸோ ஏவியேஷன் அளித்திருந்த முன்மொழிவில் நிதி மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்காக வழங்கப்பட்டிருந்த உத்தரவாதங்களுக்கான தொகையை, அவர்கள் அறிவித்திருந்த விலைக்குள்ளாகவே உள்ளடக்கியிருந்தனர். ஆனால் 2015ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட முன்மொழிவில் - அது இருநாடுகளுக்கிடையிலான ஒப்பந்தமாக இருந்ததால் - அவ்வாறான எந்தவொரு உத்தரவாதமும் இடம் பெற்றிருக்கவில்லை. இவ்வாறான வங்கி கட்டணங்களைச் செலுத்தாதன் மூலம் விற்பனையாளருக்கு கிடைக்கின்ற ‘AAB3’ மில்லியன் யூரோ தொகை அமைச்சகத்திடம் அளிக்கப்பட வேண்டும். வங்கி உத்தரவாதங்கள் குறித்த தணிக்கை கணக்கீடுகளை அமைச்சகம் ஒப்புக் கொண்டது. ஆனாலும், வங்கி உத்தரவாதக் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டியதில்லை என்பதால், அதனை அமைச்சகத்திற்கான சேமிப்பு என்று அமைச்சகம் வாதிட்டது. இருப்பினும் 2007க்கு முந்தைய முன்மொழிவோடு ஒப்பிடும் போது, ​​இது தஸ்ஸோவிற்கு கிடைக்கின்ற சேமிப்பாகும் என்றே தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது’.

இந்திய பேச்சு வார்த்தைக் குழுவின் இறுதி அறிக்கையில் இருந்த கணக்கீடுகள்

இந்திய பேச்சு வார்த்தைக் குழுவின் இறுதி அறிக்கையில் தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை மூலம் ஏற்பட்ட புதிய உடன்படிக்கையால் பிரான்ஸ் பக்கம் இருந்து தரப்படாத வங்கி உத்தரவாதங்களுக்கான தொகை 57.4 கோடி யூரோ என்ற அளவில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வங்கி உத்தரவாதங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் ஒப்பந்தம் 32.789 கோடி யூரோ குறைவாக இருந்ததாக அந்த அறிக்கையின் அறுபத்தியொன்பதாவது பாராவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘வங்கி உத்தரவாதத்தின் தாக்கம்’ என்று தலைப்பிடப்பட்ட பிரிவில் ’முன்பணம் வழங்குவது’, 'செயல்திறன் பத்திரம்', 'உத்தரவாதம் மற்றும் எம்டிபிஎஃப் தொடர்பிலான பத்திரம்' ஆகியவற்றின் மீது வங்கி உத்தரவாதங்களின் வணிகரீதியிலான தாக்கத்தை இந்திய பேச்சுவார்த்தைகள் குழு கணக்கிட்டிருந்தது. 2016 மார்ச் 02 அன்று பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்திய வங்கிகளால் பெறப்படுகின்ற உறுதிப்படுத்தல் கட்டணம் உட்பட இரண்டு சதவிகித வருடாந்திர வங்கி கமிஷன் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்பட்டு, வங்கி உத்தரவாதங்களுக்கான கட்டணம் என்பது ஒப்பந்தத் தொகை மதிப்பில் 7.28 சதவிகிதம் என்றிருப்பதாகக் கணக்கிடப்பட்டது. அதன் மூலம் விற்பனைத் தொகையான 789 கோடி யூரோவிற்கு, வங்கி உத்தரவாதக் கட்டணம் 57.4 கோடி யூரோ என்றும் கணக்கிடப்பட்டது.


இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் அறிக்கை ‘பேச்சுவார்த்தைகளின் போது இந்திய வங்கிகளால் உறுதிப்படுத்தப்படாத 0.5% வருடாந்திர கமிஷன் எனும் விகிதத்தில் வங்கி உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்வதற்கான தொகை 14.3 கோடி யூரோ என்பதாக தங்களுடைய கணக்கீடுகளை பிரான்சின் பக்கம் இருந்து பேசியவர்கள் தெரிவித்தனர்’ என்று கூறுகிறது. அதன் பிறகு இந்திய பேச்சுவார்த்தைக் குழுவால் ‘வங்கி உத்தரவாதக் கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதால் வங்கி உத்தரவாதங்களுக்கான கட்டணங்களை பிரான்ஸ் பக்கம் இருந்தும், உறுதிப்படுத்துதல் கட்டணத்தை இந்தியாவின் பக்கத்தில் இருந்தும் வழங்கலாம்’ என்ற ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரான்ஸ் பக்கம் இருந்து பேசியவர்களுக்கு அந்த ஆலோசனையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை.    

பிரான்ஸ் பக்கம் இருந்து வங்கி உத்தரவாதக் கட்டணத்தையும், இந்தியா பக்கம் இருந்து உறுதிப்படுத்துதல் கட்டணத்தையும்  வழங்கலாம் என்று சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது.

மூல வங்கியின் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு வங்கி உத்தரவாதத்தின் பாதிப்பைக் கணக்கிட்டு வங்கி உத்தரவாதத்திற்கான தொகை குறித்த பரிந்துரைகளைத் தருமாறு பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்துதல் குழு (DAC) 2016 ஜூலை 14 அன்று கேட்டுக் கொண்டது.

விலை நிர்ணயத்தில் வங்கி உத்தரவாதங்களுக்கு இருக்கும் முக்கியத்துவம்

சட்டரீதியான பாதுகாப்பையோ அல்லது உத்தரவாதங்களையோ வழங்குவதற்கு பிரான்ஸ் பக்கம் இருந்து மறுத்து விட்ட நிலையில் பாதுகாப்பு குறித்த அமைச்சரவைக் குழு, வங்கி உத்தரவாதங்களை பிரான்ஸ் வர்த்தகர்களிடமிருந்து கோர வேண்டியதில்லை என்றும், அதற்குப் பதிலாக பிரான்ஸ் பிரதமரிடம் இருந்து சட்டரீதியாகப் பிணைக்கப்படாத ‘ஆறுதல் கடிதம்’ ஒன்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சலுகைகளை வழங்கியது. அதற்கு முற்றிலும் மாறாக, பல்நோக்கு நடுத்தர போர் விமானங்களுக்காக ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்திடம் ஒப்பந்தப் புள்ளிகள் சமர்ப்பிக்கப்பட்ட போது, தஸ்ஸோ ஏவியேஷன் உட்பட அனைத்து நிறுவனங்களும் சர்வதேச பிரசித்தி பெற்ற முதல் வகுப்பு வங்கிகளிடமிருந்து வங்கி உத்தரவாதங்களைப் பெற்றே சமர்ப்பித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

2019 பிப்ரவரி 13 அன்று தி ஹிந்து பத்திரிக்கையில் வெளியானவாறு சட்டரீதியான பாதுகாப்பு அல்லது வங்கி உத்தரவாதம் எதுவும் இல்லாத நிலையில், பிரான்ஸ் அரசாங்கத்தைத் தொடர்புபடுத்தி பணத்தைத் தருவதே மிகவும் பாதுகாப்பான செயலாக இருக்கும் என்று  பாதுகாப்பு சேவைகளுக்கான நிதி ஆலோசகரான சுதான்சு மொகந்தி பரிந்துரைத்திருந்தார். இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் ஏற்படுத்தப்படுகின்ற ஒப்பந்தங்கள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் செயல்படுவதாக இருக்கும் வகையில் இந்திய அரசாங்கம் பிரான்ஸ் அரசாங்கத்தின் பொறுப்பிலிருக்கும் எஸ்க்ரோ கணக்கில் பணத்தைச் செலுத்தலாம் என்ற மொஹந்தியின் பரிந்துரையும் புறக்கணிக்கப்பட்டது. இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் இறுதி அறிக்கையில் உள்ள நாற்பத்தியாறாவது பாராவில் -  தஸ்ஸோ ஏவியேஷன் மற்றும் எம்பிடிஏ பிரான்ஸ் எனும் இரு தனியார் நிறுவனங்களுக்கும் நேரடியாக பிரான்ஸ் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கைஸ் டி டெபோ கன்சைனேஷன்ஸ் (CDC) என்ற வங்கியில் உள்ள அந்த நிறுவனங்களின் நேரடிக் கணக்கில் இந்தியா பணத்தைச் செலுத்தும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.  

பிரான்ஸ் வர்த்தகர்களுக்கு இந்திய அரசாங்கம் முன்கூட்டியே அறுபது சதவிகிதம் பணத்தைச் செலுத்த வேண்டும் என்பதால் வங்கி உத்தரவாதங்கள் பற்றிய கேள்விகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. முப்பத்தியாறு மாதங்களுக்குப் பிறகு அதாவது 2019 செப்டம்பர் மாதத்தில், முதலாவது ரஃபேல் போர் விமானம் இந்தியாவிற்கு வந்து சேரும் என்றாலும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு பதினெட்டு மாதங்களுக்குள், அதாவது 2018 மார்ச் மாதத்திற்குள்ளாக இந்தப் பணம் செலுத்தப்பட வேண்டும் என்றிருந்தது.

‘இணை பேச்சுவார்த்தைகளுக்கு’ எதிரான எதிர்ப்பு பற்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின் 2015 நவம்பர் 24 அன்றைய குறிப்பு பற்றிய என் புலனாய்வுக் கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து ‘அந்த குறிப்பு விலை குறித்ததாக இருக்கவில்லை. அரசின் உத்தரவாதங்கள் மற்றும் பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றியதாகவே அது இருந்தது’ என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் திரு.மோகன் குமார் கூறியிருந்தார். மேலும் அவர் ‘இணை பேச்சுவார்த்தைகள் என்றில்லாமல், இணையான கண்ணோட்டங்கள் என்றே அது இருந்தது. நாங்கள் அவர்களிடம் அத்தகைய விவாதங்களுக்கான அவசியமில்லை என்று சொன்னோம். அந்த குறிப்பை நான் அந்த குறிப்பிட்ட பொருளிலேயே எழுதினேன். அது குறித்து மிகவும் தீவிரமாகப் பேசுவதற்கு வேறு எதுவும் இல்லை. பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டபோதுதான் அவ்வாறு இருந்தது. அதற்குப் ​​பின்னர் அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு விட்டன. இறுதி பேச்சுவார்த்தைகளின் போது பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த விதத்திலும் தொடர்போ அல்லது குறுக்கீடுகளோ இருக்கவில்லை’ '  என்றும் உறுதிப்படுத்தியிருந்தார். ‘அந்த இணை கண்ணோட்டங்கள் இந்த ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும் என்று இந்தியா கருதிய இணை உத்தரவாதங்கள் குறித்தே இருந்தன. நாங்கள் அந்த விவாதத்தைப் பற்றி வேறு வகையான எங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தோம். அத்துடன் அது முடிந்து விட்டது’ என்று அவர் மேலும் விளக்கினார்.     

அந்த இறுதி அறிக்கையிலிருந்த கருத்து வேறுபாடு கொண்ட மூன்று வல்லுநர்கள் அளித்த அதிருப்தி குறிப்புகள், சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்ட ஆலோசனை, சிஏஜி அறிக்கை ஆகியவை திரு.மோகன் குமார் கூறுவதில் உண்மை இல்லை என்பதையே நமக்குக் காட்டுகின்றன.

முதலாவதாக - வங்கி உத்தரவாதங்கள் பற்றி தொடர்ந்து பலமுறை பேச்சுவார்த்தைகளின் போது பேசப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இந்திய பேச்சுவார்த்தைகளின் தன்மையை இழிவுபடுத்தும் வகையில் நடைபெற்ற இணை பேச்சுவார்த்தைகளுக்கு’ எதிராக அதிருப்தி இருந்ததாக பாதுகாப்பு அமைச்சகத்தின் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவதாக - பல்நோக்கு நடுத்தர போர் விமானங்களுக்கான முன்மொழிவின் ஒருங்கிணைந்த பகுதியாக, 2007ஆம் ஆண்டு தஸ்ஸோ ஏவியேஷன் வங்கி உத்தரவாதங்களுக்கான அளித்திருந்த ஒப்புதலை, இப்போது பிரான்ஸ் பக்கத்தில் இருந்தவர்கள் ஏற்க மறுத்து விட்டனர் என்பதே, புதிய ரஃபேல் ஒப்பந்தத்தில் போர் விமானங்களின் விலை கணிசமாக உயர்வதற்கான காரணமாக இருந்தது.  

‘இந்தியா இப்போது ரஃபேல் இல்லாததை உணர்கிறது. நாடு முழுக்க ஒருமித்த குரலில் ரஃபேல் இருந்திருந்தால் விளைவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும் என்று சொல்கிறது’ என்று தன்னுடைய சமீபத்திய உரையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். எதிர்க்கட்சியில் இருப்பவர்களோ அல்லது செய்தி ஊடகத்தில் இருப்பவர்களோ இதுவரையிலும் ரஃபேல் போர் விமானங்களின் தரம் குறித்தோ, தேவை குறித்தோ எந்தவொரு கேள்வியையும் எழுப்பியதே இல்லை. முக்கியமான முடிவுகளை எடுப்பதில் இருந்த செயல்பாடுகள் குறித்த புலனாய்வுகள் அனைத்தும், ராணுவ கொள்முதலுக்கென்று நடைமுறையில் உள்ள இருக்கின்ற மிகச் சிறந்த நடைமுறைகளிலிருந்து விலகிச் சென்றது மற்றும் போர் விமானங்களின் விலை, ஒப்பந்தத்தில் இருக்கின்ற நிபந்தனைகள் போன்ற அனைத்தும் இங்கே கேள்விக்குரியவையாக இருப்பதையே காட்டுகின்றன.   

 

https://www.thehindu.com/news/national/no-bank-guarantees-meant-a-more-expensive-new-rafale-deal/article26441468.ece

 

 

 

                                                                                       


Comments