ஃபிளேவியா ஆக்னஸ்
எக்கனாமிக் அண்ட் பொலிட்டிகல்
வீக்லி
பாஜக, விஎச்பி தலைவர்களுக்கு எதிரான பாபர்
மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐயின் முக்கிய சாட்சியும், அயோத்தி கோவிலின் முன்னாள்
பூசாரியுமான பாபா லால்தாஸ் படுகொலை செய்யப்பட்டது குறித்து சுயாதீனமான உண்மை கண்டறியும்
குழு விசாரித்தறிந்தது. அந்த
விசாரணைக் குழுவில் திபாங், நரேஷ் பெர்னாண்டஸ் என்ற இரு பத்திரிகையாளர்கள்,
ஃபிளேவியா ஆக்னஸ் என்ற வழக்கறிஞர், ஷிகா திரிவேதி என்ற ஆய்வாளர் இடம் பெற்றிருந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் தேர்தலுக்குச் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக - 1993 நவம்பர் 16 அன்று இரவு - அயோத்தியிலிருந்து இருபது கி.மீ தொலைவில் உள்ள பஸ்தி மாவட்டம் சாவ்னி என்ற காவல் நிலையத்தைச் சார்ந்த ராணிபூர் சத்தர் என்ற கிராமத்தில் ராம ஜென்ம பூமி கோவிலின் முன்னாள் பூசாரியும், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக மூத்த பாஜக மற்றும் விஎச்பி தலைவர்கள் மீது சிபிஐயால் தொடரப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவருமான பாபா லால்தாஸ் படுகொலை செய்யப்பட்டார். இரவு ஒன்பதரை மணியளவில் அந்தப் படுகொலைச் சம்பவம் நிகழ்ந்திருந்த நிலையில் - நவம்பர் 17 அன்று அதிகாலை ஒரு மணியளவில் பைசாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பாபா லால்தாஸ் இறந்து போனதாகக் கூறப்பட்டது.
மூன்று ஆண்டுகளாக இருந்து வந்த நிலப்பிரச்சனையே
அந்தக் கொலைக்கான நோக்கம் என்ற ஊகத்தின் அடிப்படையிலேயே அரசு வழக்குத் தொடர்ந்திருந்தது.
நிலத்தகராறு என்ற அந்தக் கருத்தை மையமாகக் கொண்டு செயலில் இறங்கிய காவல்துறையினர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த
சிவ்தாஸ் சவுத்ரி, ராம் சுமேரன் சவுத்ரி என்று இருவரைக் கைது செய்தனர்.
லால்தாஸ், அவரது சீடரான அவ்தேஷ் ஆகியோரிடம் இருந்த ஏழரை பிகாஸ் (சுமார் நான்கரை
ஏக்கர்) நிலத்தை மீட்பதற்காக சிவில் வழக்கு ஒன்றை சிவதாஸ் தாக்கல் செய்திருந்தார்.
அவருடன் லால்தாஸ் சட்டப் போரில் ஈடுபட்டிருந்தார். லால்தாஸுக்கும் அவரது
எதிராளியான சிவ்தாஸுக்கும் இடையே சட்டப்போர் இருந்து வந்த நிலையிலும், அவர்கள்
இருவருக்குமிடையே வெளிப்படையான விரோதப் போக்கு எதுவும் இருந்ததில்லை என்றே
ராணிப்பூர் கிராம மக்கள் கூறினர். அந்த மக்களைப் பொறுத்தவரை சிவ்தாஸ்தான் பாபா லால்தாஸை நீதிமன்றத்திற்கு
இழுத்துச் சென்றிருந்தார். உண்மையில் சட்டவழியில் இல்லாமல் வேறு வழியில் அந்த
சர்ச்சையைத் தீர்க்க விரும்பியிருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே - பாபா
அதிகாரம் வாய்ந்தவராக இல்லாதிருந்த போதே - அவரால் அதைச் செய்து முடித்திருக்க
முடியும்.
பெரும்பாலான பத்திரிகைகளில் ஒரு சில வரிகளில் மிகச்
சுருக்கமாக காவல்துறையின் நிலைப்பாட்டை மேற்கோள் காட்டி லால்தாஸின் மரணம் குறித்த
செய்தி வெளியாகி இருந்தது. தேர்தல் பணிகளில் அப்போது மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்த
அரசியல் தலைவர்கள் அந்தப் படுகொலைச் சம்பவத்தின் மீது சிறிதளவிலேயே தங்கள் கவனத்தைச்
செலுத்தினர். பத்திரிகைகளில் அவ்வாறு மிகவும் மேலோட்டமாக வெளியான செய்திகளை
அறிந்து கவலையுற்ற மதச்சார்பின்மைக்கான மக்கள் இயக்கம், பம்பாய் மற்றும் தில்லியைச்
சேர்ந்த ஏக்தா அமைப்பினர் நிலப்பிரச்சனை குறித்தே அந்தக் கொலை நிகழ்ந்தது என்று காவல்துறையிடமிருந்த
அணுகுமுறை குறித்து விரிவாக அறிந்து கொள்ளும் வகையில் விசாரணைக் குழுவொன்றை அயோத்திக்கு
அனுப்பி வைத்தனர். 1993 நவம்பர் 26, 27 ஆகிய நாட்களில் அயோத்திக்குச் சென்றிருந்த அந்த
விசாரணைக் குழுவில் இரண்டு பத்திரிகையாளர்கள், ஆய்வாளர் ஒருவர், வழக்கறிஞர் ஒருவர்
என்று நான்கு பேர் இடம் பெற்றிருந்தனர்.
பாபர் மசூதிக்குள் இருந்த ராம ஜென்ம பூமி
கோவிலின் தலைமைப் பூசாரியாக 1981ஆம் ஆண்டு பாபா லால்தாஸ் நியமிக்கப்பட்டார். விஎச்பியின்
நிலைப்பாட்டை அவர் ஒருபோதும் ஆதரித்தவரில்லை. ஆனந்த் பட்வர்தனின் ஆவணப்படமான ‘ராம்
கே நாம்’ (ராமனின் பெயரில்) உள்ள நேர்காணல் உட்பட பல நேர்காணல்களில் அவர் பொருள்
மீதான பேராசை உள்ளிட்ட விஎச்பியின் பல்வேறு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி
இருந்தார். பாபர் மசூதியை இடிப்பதற்கு அவர்கள் மேற்கொண்ட சதி குறித்து உறுதியான ஆதாரங்கள் லால்தாஸிடம் இருந்தன.
தன்னிடம் இருந்த ஆதாரங்களை மசூதி இடிக்கப்பட்டது குறித்து விசாரிப்பதற்காக
அமைக்கப்பட்ட தில்லியில் உள்ள குடிமக்கள் தீர்ப்பாயத்தின் முன்பாக 1993 ஜூன் மாதம்
அவர் சமர்ப்பித்தார். மசூதியை இடிப்பதற்கான சதித்திட்டம் குறித்து விசாரித்து வந்த
சிபிஐ வழக்கில் அவர் முக்கிய சாட்சியாக
இருந்தார்.
லக்னோ உயர்நீதிமன்றத்தால் பாபா லால்தாஸ் பூசாரியாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டிருந்த போதிலும், மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு தலைமைப் பூசாரி பதவியில் இருந்து அவரை உடனடியாக நீக்கிவிட்டு புதிதாக, தன்னிடம் நெகிழ்வாக இருக்கும் ஒருவரைக் கோவிலின் தலைமைப் பூசாரியாக்கியது. நீதிமன்றத்தால் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட தன்னை நீதிமன்ற உத்தரவு இல்லாமல் பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்ற அடிப்படையில் பாபா லால் தாஸ் தான் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு இன்னும் லக்னோ உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
பாபாவின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்ததால்
அவரது பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு காவல்துறையினர் அவருக்கென்று
மெய்க்காப்பாளர்களை ஒதுக்கியிருந்தனர். உண்மையிலேயே அவரது உயிருக்கான அச்சுறுத்தல்
இருந்த நிலையிலும் அவ்வாறு நியமிக்கப்பட்ட மெய்க்காப்பாளர்களை கல்யாண்சிங்
தலைமையிலான பாஜக அரசாங்கம் திரும்பப் பெற்றுக் கொண்டது. கொலை செய்யப்படுவதற்கு ஒரு
வாரத்திற்கு முன்பு (நவம்பர் 27) கரண்ட் பத்திரிகை ஆசிரியருக்கு அளித்த நேர்காணலில்
‘ராம ஜென்ம பூமியை இடிக்க யார் உத்தரவிட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே நிச்சயம்
அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள்’ என்று லால்தாஸ் கூறியிருந்தார். மசூதி
இடிப்பிற்கான சதித் திட்டத்தை முறியடிக்கப் போவதாக உறுதியளித்திருந்த ஒன்றிய அரசும்
தனக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கத் தவறி விட்டது என்ற கசப்புணர்வுடனே அவர் இருந்து
வந்தார். நீதிமன்றத்தில் தன்னுடைய வாக்குமூலங்கள் இல்லாமல் ஒன்றிய அரசின் வாதங்கள்
நிற்காது என்பதை அவர் நன்கு உணர்ந்தே இருந்தார்.
அயோத்தி பிரச்சனையின் உண்மைக் கதையை அறிந்த ஒரு
சிலரில் பாபா லால்தாஸும் ஒருவர். ராமஜென்ம பூமி நியாஸின் பெயரால் வசூலிக்கப்பட்ட மிகப்பெரிய
தொகை முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது என்று அவர் குற்றம் சாட்டினார். அவ்வாறு
குற்றம் சுமத்திய பூசாரி அவர் ஒருவர் மட்டுமே கிடையாது. ஹனுமன்காரியின் பூசாரியான
ஞான்தாஸ், விஸ்வநாத் பிரசாத் ஆச்சார்யா போன்ற சிலரும் விஎச்பி பல கோடி ரூபாய்
வசூலித்தது என்று குற்றம் சுமத்தியிருக்கின்றனர். பாபர் மசூதியைச் சுற்றியுள்ள
சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலத்தில் அமைந்திருந்த ஏராளமான கோவில்களை அழித்ததற்காக
விஎச்பியை நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்ற சாக்ஷி கோபால் கோவிலின் பூசாரி ராம்
கிருபால் தாஸ், சீதா ரசோய் கோவிலின் பூசாரி சுக்ராம்தாஸ் ஆகியோருக்கும் லால்தாஸ் தன்னுடைய ஆதரவை அளித்து
வந்தார்.
லால்தாஸை அமைதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்
அவருக்கு எதிராக ஊழல், கிரிமினல் முறைகேடு தொடர்பாக பல வழக்குகளை அவரது எதிரிகள் பதிவு
செய்தனர். ஆயினும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும்
நிரூபிக்கப்படவில்லை. தேர்தலில் நின்ற வேட்பாளர்கள் பலருக்கு ஆதரவு அளிக்க
வேண்டுமென்ற அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்த லால்தாஸ் அயோத்தியை விட்டு சில
நாட்கள் வெளியேறி - அங்கிருந்து இருபது கி.மீ தொலைவில் உள்ள ராணிபூர் கிராமத்தில் உள்ள தனது குடிசையில்
தங்குவது என்று முடிவு செய்தார் என்று அவரது சீடர்கள் கூறுகின்றனர். அங்கே அவரது கிராமத்தில்தான் லால்தாஸ் படுகொலை
செய்யப்பட்டார்.
‘ஜன் மோர்ச்சா’ என்ற உள்ளூர் ஹிந்தி நாளேட்டின் ஆசிரியர் ஷீத்லாசிங், நிருபர்
சுமன் ஆகியோரையும் விசாரணைக் குழுவினர் சந்தித்தனர். விசாரணைக்குழு
உறுப்பினர்களுடன் சேர்ந்து பஸ்தி மாவட்டத்தில் உள்ள ராணிபூர் சத்தருக்கு அவர்கள் சென்றனர். ஷீத்லாசிங் காவல்
நிலையத்திலிருந்து பாபா லால்தாஸின் சீடர்கள் செய்தி பெற்றதும் சம்பவம் நடந்த
இடத்திற்கு அழைக்கப்பட்டவர். பாபா இறந்த நேரத்தில் அங்கே இருந்தவர்.
தனது வாழ்க்கையின் கடைசி இருபது நாட்களில் லால்தாஸ்
வாழ்ந்த இடம் கூரையால் வேயப்பட்ட மிக எளிமையான குடிசையாகும். அந்தக் குடிசையில்
சமையலறையாகப் பயன்படுத்தப்பட்ட மூலையில் மட்டுமே சுவர்கள் இருந்தன. மீதமுள்ள
பகுதிகள் கதவுகள் அல்லது சுவர்கள் எதுவுமில்லாமல் திறந்தே இருந்தன. ‘சர்பாய்’
எனப்படும் மிக எளிமையான கட்டில், சில பாத்திரங்கள் என்று ஒரு சில அத்தியாவசியப்
பொருட்கள் மட்டுமே அந்தக் குடிசைக்குள் இருந்தன. அந்த படுகொலைக்கான ஒரே சாட்சியாக கடந்த
ஆறு மாதங்களாக பாபாவிடம் வேலை செய்து வந்த சுமார் ஐம்பது வயதான அவரது வேலைக்காரர் ராம்
சுக் மட்டுமே இருந்தார்.
கொலை நடந்த அந்த இரவில் நடந்த நிகழ்வுகள்
குறித்த கேள்விகளை எதிர்கொண்ட அவர் அன்றைக்கு நடந்தவற்றை மீண்டும் உருவாக்கி இவ்வாறாக
விளக்கினார்:
‘குடிசைக்கு அருகே கொளுத்தப்பட்ட
நெருப்பிலிருந்து தீப்பிழம்புகள் ஒன்றரை அடி உயரத்திற்கு எழும்பின. அந்த நெருப்பைச்
சுற்றி பாபா லால்தாஸ், வேலைக்காரர் ராம்சுக் இருவரும் ஒருவருக்கொருவர் எதிராக
அமர்ந்திருந்தனர். ராம்சுக்கின் தலைக்குப் பின்னால் இருந்த மரக் கம்பம் ஒன்றில்
விளக்கு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. குடிசைக்கு உள்ளே மற்றுமொரு மண்ணெண்ணெய்
விளக்கு எரிந்து கொண்டிருந்தது’.
குற்றம் நடந்த இடம் குறித்த இந்த விரிவான
விவரிப்பு கொலை நடந்தபோது அங்கே போதுமான வெளிச்சம் இருந்ததையும், தாக்குதலை நடத்தியவர்களை ராம்சுக் தெளிவாகக் காணும் நிலை இருந்ததையும்
சுட்டிக் காட்டுகிறது. மிக நெருங்கிய
தூரத்திலிருந்தே துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டன என்று கூறிய ராம்சுக் பயம்
காரணமாகவே தன்னால் சுட்டவர்களின் முகங்களைக் கவனிக்க இயலவில்லை என்றார். பாபாவின்
தலை, பின்புறத்தில் காயம் ஏற்பட்டிருந்ததையும், அவர் கீழே விழுந்ததையும் தான்
பார்த்ததாக ராம்சுக் கூறினார்.
அந்தக் கட்டத்தில் அவர் சற்றே தடுமாறிப் பேச
ஆரம்பித்தார். தான் மயக்கம் அடைந்து விட்டதாகவும், தாக்கியவர்களைப் பார்க்கவில்லை
என்றும் முதலில் கூறிய அவர், பயந்து போன தான் உதவி கேட்டு அருகிலுள்ள வீட்டிற்கு
ஓடியதாகவும், அவ்வாறு ஓடிய போது மீண்டும் இரண்டு முறை துப்பாக்கி சப்தத்தைக்
கேட்டதாகவும் பின்னர் கூறினார். பாபா கீழே விழுந்து கிடப்பதைக் கண்டதாகவும், பாபாவின் கால்கள் அப்போது நெருப்பிற்குள்
சிக்கிக் கொண்டதாகவும் முதலில் கூறிய அவர், பாபாவுக்கு என்னவானது என்பதைக் கவனித்துப்
பார்க்கின்ற அளவிற்கு அந்த இடத்தில் தன்னால் காத்திருக்க முடியவில்லை என்றும், கண்களை
மூடிக் கொண்டு அந்த இடத்திலிருந்து தான் ஓடிவிட்டதாகவும், சில கிராமவாசிகளுடன்
திரும்பிய போதுதான் பாபாவின் கால்கள் தீக்குள் இருப்பதைக் கவனித்ததாகவும் பின்னர் கூறினார்.
அவ்வாறு கூறிய ராம்சுக் மீண்டுமொரு முறை தனது வாக்குமூலத்திலிருந்து பிறழ்ந்து
பேசினார்.
பூசாரியின் இரு கால்களிலும் தீயால் எரிந்த
காயங்கள் இருந்ததை பிரேத பரிசோதனை உறுதிப்படுத்தி இருந்தது. ஆனாலும் கடைசித் தருணம்
வரை பாபா பேசும் நிலையில் நனவோடுதான் இருந்தார் என்பது கொஞ்சம் புரியாத மர்மமாகவே
இருக்கிறது. பேசுகின்ற நிலையில் இருந்த அவர் ஏன் தனது கால்களை நெருப்பிற்குள்ளேயே வைத்து
எரித்துக் கொண்டார்? இருந்த ஒரே சாட்சியும் அந்த இடத்திலிருந்து ஓடிச் சென்று
விட்ட பிறகு, அவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குடிசையில் எவ்வளவு நேரம் தங்கியிருந்தார்கள், முதல் சுற்று
துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு அவர்கள் எவ்வளவு நேரம் பூசாரியை மோசமாகத் தாக்கினர்
என்பது குறித்து அறிந்து கொள்வதற்கான வழி எதுவும் இருக்கவில்லை.
ராம்சுக் ஓடிச் சென்று பார்த்த பக்கத்து வீட்டு
பகவதி சிங்கை விசாரணைக் குழு உறுப்பினர்கள் சந்தித்தனர். ‘குண்டு வெடிப்பு பாபா
லால்தாஸைக் கொன்று விட்டது’ என்று ராம்சுக் கூச்சலிட்டதாக பகவதி சிங், ராம் கரண்
கும்பர் ஆகியோர் கூறினர். மற்ற கிராமவாசிகளை அழைத்து வருவதற்காக பகவதி
சிங் சென்ற போது கும்பர், பிரதான் ராம்
பால் யாதவ் ஆகியோர் அந்த இடத்தைச் சென்றடைந்திருந்தனர். ரத்தக்குளத்தில் மூழ்கிக் கிடந்த
பாபாவின் கால்கள் தீக்குள் கிடந்ததை அவர்கள் கண்டனர். நெருப்பிலிருந்து அவரை அகற்ற
முயன்ற போது ‘என்னைக் கொன்று விடாதீர்கள்’
என்று பாபா அவர்களிடம் கெஞ்சினார். முதல்
சுற்று துப்பாக்கி சூட்டிற்குப் பிறகு பூசாரியின் கால்கள் தீக்குள்
வைக்கப்பட்டதற்கான மற்றொரு குறிப்பாகவே இந்தக் கூற்று உள்ளது. பாபாவைக் கட்டிலில்
கிடத்திய கிராமவாசிகள் அங்கிருந்து இரண்டு கி.மீ தூரத்தில் பரபரப்பான
பஸ்தர்-கோரக்பூர் சாலையில் அமைந்திருக்கும் விக்ரம்ஜோத் என்ற இடத்திலுள்ள
புறக்காவல் நிலையத்திற்கு அவரைக் கொண்டு சென்றனர்.
விக்ரம்ஜோத் புறக்காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியான
சிவ் பிரசாத் ராயை விசாரணைக் குழுவினர் சந்தித்தனர். ‘பிரபலமான ஆளுமை என்பதால் பாபாவைப்
பற்றி எனக்கு நன்கு தெரியும்’ என்று ராய் கூறினார். காயத்துடன் பாபா அங்கே கொண்டு
வரப்படும் வரையிலும் அந்தக் கிராமத்தில்தான் பாபா வசித்து வருகிறார் என்பது
தனக்குத் தெரியாது என்றார். காயமடைந்திருந்த பாபாவை கட்டிலில் கிடத்தி இரவு பதினோரு
மணியளவில் புறக்காவல் நிலையத்திற்கு கிராமவாசிகள் கொண்டு வந்ததை அவர் உறுதிப்படுத்தினார்.
பாபாவின் குடும்பத்தினருக்கு செய்தியைத் தெரிவிப்பதற்காக ராய் அயோத்தியில் உள்ள
நயாகட் காவல் நிலையத்திற்கு உடனடியாக வயர்லெஸில் செய்தி அனுப்பினார்.
ராயிடமிருந்து அந்த வயர்லெஸ் செய்தியைப் பெற்றுக்
கொண்ட அயோத்தி நயாகட் காவல்நிலையத்தில் இருந்த அனில் ராயிடம் விசாரணைக் குழு
பேசியது. காவல்நிலையத்திலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் இருந்த குடும்ப
உறுப்பினர்களுக்கும், குர்மி கோவிலில் இருந்த சீடர்களுக்கும் அந்தச் செய்தி
தெரிவிக்கப்பட்டது. ராயின் வயர்லெஸ் செய்தி பெறப்பட்ட நேரம் அயோத்தி நயாகட் காவல்
நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற பதிவுப் புத்தகத்தில் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
பஸ்தி மாவட்டத்திலேயே புறக்காவல் நிலையம்
இருந்த போதிலும் விரைவாகச் சென்றடைய
முடியும் என்ற காரணத்தாலேயே பாபாவை பைசாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு
செல்வது என்று சிவ் பிரசாத் ராய் முடிவு செய்தார். உடனடியாக தனியார் ஜீப் ஒன்றைக்
கொண்டு வருமாறு அவர் கட்டளையிட்டார். காயமடைந்திருந்த பாபாவுடன் பைசாபாத்திற்கு அவர்கள்
விரைந்தனர். செல்லும் வழியில் அயோத்தியில் உள்ள பாபாவின் இல்லத்தில் நிறுத்தி, பாபா
தனது மகனைப் போல நடத்தி வந்த இருபத்திமூன்று வயதான அவ்தேஷ் சிங் எனும் சீடர் ஒருவரையும்
அவர்கள் தங்களுடன் அழைத்துக் கொண்டனர்.
மிகுந்த வேதனையுடன் நல்ல நினைவுடன் பாபா இருந்தார்
என்றாலும் அவரால் பேச முடியவில்லை என்று அவ்தேஷ் சிங் கூறினார். யார் அவரைச் சுட்டது
என்று கேட்ட போது பாபா அதுகுறித்து பின்னர்
சொல்வதாக கூறிநார் என்று அவ்தேஷ் தெரிவித்தார். ஆனால் பைசாபாத் சிவில்
மருத்துவமனையை அடைவதற்கு முன்பாகவே பாபா இறந்து விட்டார். மருத்துவமனைக்குக்
கொண்டு வரும் போதே பாபா இறந்து விட்டதாகவும், அங்கே கொண்டு வரப்பட்டபோது அவரது
உடலில் இருந்த ஏராளமான சிறு சிறு குண்டு துகள்களால் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்ததாகவும்
சிவில் மருத்துவமனையில் இருந்த மருத்துவர் கூறினார். டாக்டரின் கூற்றுப்படி பாபாவின்
உடலிலிருந்த குண்டு துகள்களின் எண்ணிக்கை மற்றும் ராம்சுக் காயமடையவே இல்லை போன்றவற்றைக்
கணக்கில் கொண்டு பார்க்கும் போது மிக நெருக்கமான
தூரத்திலிருந்தே பாபா சுடப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அப்படியென்றால்
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களால் தாக்குதல்
நடத்தியவர்களின் முகங்களை நிச்சயம் பார்த்திருக்க முடியும் என்பதே உண்மை.
காவல்துறையின் தலையீடு
மரணத்திற்குப் பிறகு முதல் தகவல் அறிக்கையை
(எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்வதற்காக தங்களுடன் யாராவது ஒருவர் சாவ்னி காவல்
நிலையத்திற்கு வர வேண்டுமென்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். எனவே ஷீத்லாசிங்
இன்ஸ்பெக்டர் சிவ் பிரசாத் ராயுடன் சென்று தேவையான அனைத்து சம்பிரதாயங்களையும்
முடிக்குமாறு அவ்தேஷிடம் கேட்டுக் கொண்டார்.
அதிகாலை இரண்டரை மணியளவில் அவ்தேஷ் தனது
நண்பர்களான பிங்கு திரிபாதி, சதீஷ் சந்திர
பாண்டே ஆகியோருடன் சாவ்னி காவல் நிலையத்தைச் சென்றடைந்தார். அங்கே அவர்களுக்காக விசாரணை
அதிகாரி கோரக்நாத் யாதவ் காத்திருந்தார். காவல் நிலையத்திற்குச் சென்ற அவர்கள் அங்கே
ராம்சுக் வெளியே ஜீப்பில் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர். அவருடன் மிகச் சுருக்கமாகப்
பேசி விட்டு விசாரணை அதிகாரியை அவர்கள் சந்தித்தனர்.
அவ்தேஷின் பெயரில் முதல் தகவல் அறிக்கையைத்
தாக்கல் செய்யுமாறு விசாரணை அதிகாரி கூறினார். அவர் ‘நீங்கள் யாரையாவது சந்தேகிக்கிறீர்களா’ என்று அவ்தேஷிடம் கேட்டார்.
அதிர்ச்சியில் இருந்த அவ்தேஷால் அப்போது தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. சிவ்தாஸுக்கும்
லால்தாஸுக்கும் இடையிலான நிலப்பிரச்சனை, அரசியல் சக்திகளால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்தது பற்றி அவர் அப்போது குறிப்பிட்டார்.
பின்னர் விசாரணை அதிகாரி வெற்றுத்தாளில்
அறிக்கையை எழுதியதாகவும், அதை தன்னுடைய நண்பர் ஒருவர் நகலெடுத்துக் கொண்ட பிறகு,
தான் அதில் கையெழுத்திட்டதாகவும் அவ்தேஷ் கூறினார். நாட்டில் மோசமாகிக் கொண்டே வருகின்ற
நீதியின் பரிதாப நிலைக்கும், சட்டத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களை அழைத்துக்
கொள்பவர்களால் சட்டம் முழுமையாக மீறப்படுவதற்குமான அப்பட்டமான எடுத்துக்காட்டாகவே அந்த
முதல் தகவல் அறிக்கை (எண் 204/93) அமைந்திருக்கிறது.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட
நேரத்திலிருந்து நடந்தவை அனைத்தும் காவல்துறையினரால் புனையப்பட்ட புனைகதையாகவே
இருக்கின்றன. உண்மையில் அந்த அறிக்கை நவம்பர் 17 அன்று அதிகாலை இரண்டரை மணியளவில்
பதிவு செய்யப்பட்டது. ஆனால் முதல் தகவல் அறிக்கையில், அந்த அறிக்கை பதிவு
செய்யப்பட்ட நேரம் நவம்பர் 16 இரவு 10.35
மணி என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
அறிக்கை பதிவு செய்யப்பட்ட போது பாபா
இறந்து விட்ட போதிலும் முதல் தகவல் அறிக்கை கொலை முயற்சிக்கான ஐபிசி 307
பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டதே தவிர கொலைக்கான தண்டனை குறித்த ஐபிசி 302
பிரிவின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. அந்த முதல் தகவல் அறிக்கையில் அவ்தேஷ், அவரது
இரண்டு நண்பர்கள் சதீஷ் சந்திர பாண்டே, பிங்கு
திரிபாதி ஆகியோர் பாபாவுடன் இருந்ததாகவும், அவர்கள் அந்த சம்பவத்தை நேரில் கண்ட
சாட்சிகள் என்றும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
‘பாபா உட்கார்ந்திருந்த தென்மேற்கு திசையில்
இருந்து குடிசைக்குள் வந்த குற்றம் சாட்டப்பட்டவர் ‘நாங்கள் உங்களைக் கொல்லப்
போகிறோம்’ என்று கூறினார். பின்னர் அவர்கள் பின்னாலிருந்து சுட்டனர். நாங்கள் கத்த
ஆரம்பித்தோம். ஆனாலும் அவர்களைத் துரத்திச் செல்வதற்கு மிகவும் பயமாக இருந்தது.
எங்கள் அழுகுரலைக் கேட்ட கிராமவாசிகள் உதவிக்கு விரைந்து வந்தனர். குற்றம்
சாட்டப்பட்டவர்களை விளக்கு வெளிச்சத்தில் பார்த்த நாங்கள் அவர்களைக் (சிவ்தாஸ், ராம்
சுமேரன் சவுத்ரி) கண்டறிந்தோம். காயமடைந்த
நிலையில் குருஜியை (சாவ்னி காவல் நிலையத்திற்கு) கொண்டு வந்த நான் இந்த
அறிக்கையை எழுதினேன்’ என்று அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுநாள்
காலை ஆறரை மணிக்கு அந்த குற்றச்சாட்டு பிரிவு 307இலிருந்து பிரிவு 302ஆக மாற்றப்பட்டது.
முதல் தகவல் அறிக்கையில் இருந்த தவறுகள்
குறித்து அந்த விசாரணை அதிகாரி ‘அதிகாரப்பூர்வமாக நான் இப்போது பேசவில்லை.
நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து உங்களுக்கு
எதுவும் தெரியவில்லை. முதல் தகவல் அறிக்கை என்பது மிக முக்கியமான ஆவணம். அது சம்பவம்
பற்றித் தெரிய வந்தவுடனே பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்வதில் ஏதேனும்
தாமதம் ஏற்பட்டால் அது வழக்குக்கு ஆபத்தானது. எனவே நீதி கிடைப்பதற்காக எந்த தவறும்
இடம் பெறாத வகையிலான வழக்கை உருவாக்கிடவே நாங்கள் முயன்றோம். உண்மையை மட்டுமே
எடுத்துக் கொண்டால், இந்த நாட்டில் எந்தவிதமான தண்டனையும் கிடைக்காது. ஆயினும்
பாபாவின் சீடர்தான் சிவ்தாஸ் மீது குற்றம் சுமத்தினார். அவரே நிலத்தகராறு
பற்றியும் எங்களிடம் கூறினார்’ என்று கூறினார்.
அப்போது தான் அதிர்ச்சியில் இருந்ததாக அவ்தேஷ்
கூறுகிறார். தெளிவாகச் சிந்திக்க முடியாத காரணத்தால் காவல்துறையினரின்
வழிகாட்டுதலின் பேரில் மட்டுமே அவர் செயல்பட்டிருக்கிறார். பல்வேறு ஹிந்துத்துவச்
சக்திகளால் பாபாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததைக் குறிப்பிட்டேன்
என்று கூறும் அவ்தேஷ், ஆனால் அது குறித்து எதுவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு
செய்யப்படவில்லை என்கிறார். உண்மைகளைப் பதிவு செய்வதற்காக கூடுதலாக இன்னுமொரு
அறிக்கையை காவல்துறையினரிடம் பதிவு செய்ய விரும்புவதாக விசாரணைக் குழுவிடம் அவ்தேஷ்
தெரிவித்தார்.
‘அரசியல் நோக்கம்’ இருந்தது என்ற கருத்தை காவல்துறையினர் ஏன் கருத்தில் கொள்ளவில்லை என்று கேட்டபோது, அந்தக் கருத்தை முற்றிலுமாக நிராகரித்த
விசாரணை அதிகாரி ‘அரசியல் சதி இருந்திருந்தால், அந்த இடத்திலேயே அவரைச் சுட்டுக் கொன்றிருக்கக்கூடிய தொழில்
வல்லுநர்களே அந்தப் பணியில் அமர்த்தப்பட்டிருப்பார்கள். ஆனால் தாக்குதலை
நடத்தியவர்கள் ‘சிறு குற்றவாளிகள்’ என்பதாலேயே தங்களுக்குத் தரப்பட்ட வேலையை அவர்களால்
சரியாகச் செய்து முடிக்க முடியவில்லை’ என்றார். இந்த தகவல் உண்மையில் மரணம்
நிகழ்ந்து விட்ட பிறகு பிரிவு 370இன் கீழ் கொலை செய்ய முயன்றதாக காவல்துறை ஏன்
வழக்கைப் பதிவு செய்தது என்ற கேள்விக்குப் பதிலளிப்பதாகவே இருக்கிறது. ஒருவேளை
அரசியல் நோக்கத்துடன் ஈடுபடுத்தப்பட்ட குற்றவாளிகளால் அந்தக் கொலை நிகழ்த்தப்படவில்லை
என்ற கருத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் அவ்வாறு கூறப்பட்டு இருக்கலாம். ‘அரசியல்தான் நோக்கம் என்றால், அந்தக் கொலை அயோத்தியில்
செய்யப்பட்டிருக்கலாம்’ என்பதையும் அவர்
வலியுறுத்திக் கூறினார்.
கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சியான ராம்சுக்
புறக்கணிக்கப்பட்டது காவல்துறை மீது சந்தேகத்தை எழுப்புகின்றது. விசாரணை
அதிகாரிகளான கோரக்நாத் யாதவ், சிவ் பிரசாத் ராய் ஆகிய இருவரும் ராம்சுக்கைப் பற்றி
மிகவும் இரக்கத்துடனான தொனியிலேயே பேசினார்கள். அவர்களிடம் இரண்டு வெவ்வேறு
இடங்களில் இரண்டு வெவ்வேறு நாட்களில் நேர்காணல் நடத்தப்பட்ட போதிலும் அவர்கள் ‘ராம்சுக்
ஏழை, கல்வியறிவற்றவர், தாழ்ந்த சாதியைச் சார்ந்தவர். பயந்து போய் இருக்கிற அந்த
ஏழையால் எங்களிடம் என்ன சொல்ல முடியும்?’ என்ற ஒரே விளக்கத்தையே அளித்தனர்.
உத்தரப் பிரதேச மாநில கிராமத்தின் காவல் நிலையத்தில் தாழ்ந்த சாதி, வர்க்கத்தைச்
சேர்ந்த ஒருவர் மீது இந்த அளவிற்கு இரக்கம் இருப்பதற்கான இடம் இருப்பதாகத்
தெரியவில்லை.
காவல்துறையின் கூற்று குறித்து மேலும்
சந்தேகங்களை எழுப்புகின்ற மற்றொரு வினோதமான அம்சமும் இந்த வழக்கில் உள்ளது. ராணிப்பூர்
சத்தரில் உள்ள பாபாவின் குடிசையில் நவம்பர் 6 அன்று விடியற்காலையில் சுமார் எட்டு
முதல் பத்து பேர் கொண்ட காவல்துறைப் படை சோதனை ஒன்றை மேற்கொண்டது. அந்தச் சோதனை சுமார்
பத்து நிமிடங்களுக்கு நீடித்தது என்றும், அங்கிருந்து காவல்துறையினர் வெறுங்கையுடனே
வெளியேறினர் என்றும் ராம்சுக் உறுதிப்படுத்திக் கூறினார். கிராமவாசிகள் சிலரும் பாபாவின்
குடிசையில் நடத்தப்பட்ட அந்த சோதனையைக் கவனித்துள்ளனர். அதற்குப் பின்னர் சாவ்னி
காவல் நிலையத்திற்குத் தான் சென்றதாக பாபா தன்னிடம் தெரிவித்ததாக அவ்தேஷ் கூறினார்.
அங்கே சென்று கோரக்நாத்திடம் அந்தச் சோதனை ஏன் மேற்கொள்ளப்பட்டது என்று தான் கேட்டதாகவும்,
சட்டவிரோதமான துப்பாக்கிகள் பாபாவிடம் இருப்பதாக தன்னிடம் புகார் அளித்த மூன்று நபர்களின்
பெயர்களை கோரக்நாத் யாதவ் அப்போது தன்னிடம் தெரிவித்ததாகவும் பாபா கூறினார் என்றும்
அவ்தேஷ் கூறினார்.
ஆனால் விசாரணைக் குழு உறுப்பினர்கள் கோரக்நாத்
யாதவிடம் அந்த சோதனை குறித்து விசாரித்த போது அத்தகைய சோதனை குறித்து எந்த
தகவலும் தன்னிடம் இல்லை என்று கூறி ஒட்டுமொத்தமாக அவர் அதனை மறுத்தார். ஆனாலும் கோரக்நாத்
யாதவ் அந்த சோதனைக்குத் தலைமை தாங்கியதை சில கிராமவாசிகள் கண்டதாகக் கூறிய போது, சட்டவிரோத
ஆயுதங்களைக் கைப்பற்றுகின்ற வகையில் அந்தப் பகுதியில் சில தேடல்கள்
மேற்கொள்ளப்பட்டதாக கோரக்நாத் ஒப்புக் கொண்டார். ஆனாலும் பாபாவின் குடிசையில் எந்தவொரு
சோதனையும் நடத்தப்படவில்லை என்றே அவர் மறுத்தார். அது குறித்து மேலும் விசாரித்தபோது
அவ்வாறு
ஏதேனும் சோதனை நடந்தால் அதைப் பற்றிய தகவல் தனக்குத் தெரிவிக்கப்படும் என்பதை அவர்
ஒப்புக் கொண்டார். அந்தச் சோதனை குறித்து அயோத்தியில் உள்ள நயாகட் காவல்நிலையத்திலும்
விசாரணைக் குழுவினர் விசாரித்துக் கொள்ளலாம் என்று கோரக்நாத் யாதவ் பரிந்துரைத்தார்.
ராம ஜென்ம பூமி காவல் நிலையத்தின் கீழ் வருகின்ற
நயாகட் காவல் நிலையத்தைச் சேர்ந்த அனில் ராயிடம் நவம்பர் 6 அன்று நடந்த அந்தச் சோதனை
பற்றி கேட்டபோது ‘பாபா வசித்து வந்த அந்தக் கிராமம் பைசாபாத் மாவட்டத்தில் இல்லை.
தொடர்புடைய காவல் நிலையத்திற்கு முன்னறிவிப்பு
செய்யாமல் எங்களால் வேறு மாவட்டத்தில் எந்தவொரு சோதனையையும் நடத்த முடியாது’
என்று பதிலளித்தார்.
அப்படியென்றால் அந்த சோதனைக்கு யார் உத்தரவிட்டது,
அந்த சோதனையை யார் மேற்கொண்டது? கோரக்நாத் யாதவ் ஏன் அந்தச் சோதனை நடக்கவே இல்லை
என்று மறுக்கிறார்? அது ஒருவித சமிக்ஞை என்றே கிராம மக்கள் நினைக்கின்றனர். உள்ளூர்
பள்ளியின் ஆசிரியரான சிவ் ஷங்கர் சிங் கூறுகையில் ‘பாபா மீது மக்கள் மிகுந்த
மரியாதை வைத்திருந்தனர். கொஞ்சம் பயமும் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்
மிக முக்கியமான, பிரபலமான மனிதராக இருந்தார். ஆனால் அந்த சோதனைக்குப் பிறகு அவர் தன்னுடைய
ஆற்றலை முற்றிலும் இழந்தவராக, எளிதில் பாதிக்கப்படக் கூடியவராகவே தோன்றினார்’
என்றார்.
உண்மையைக் கண்டறிவதற்காக அயோத்தி மற்றும் பஸ்திக்கு
இரண்டு நாட்கள் சென்றதன் முடிவில் விசாரணைக் குழு உறுப்பினர்களின் மனதில்
முக்கியமான கேள்வி ஒன்று தோன்றியது. பாபாவின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்தன
என்ற உண்மையை மீறி நிலத்தகராறு என்ற கருத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி மற்ற
அனைத்து தடயங்களையும் புறக்கணிப்பதில் காவல்துறை ஏன் அதிக ஆர்வம் காட்டியது? அயோத்தியிலும்,
சாவ்னியிலும் இந்த விசாரணைக் குழு சந்தித்த காவல்துறை அதிகாரிகள் அனைவருமே நிலப்பிரச்சனை
என்ற கருத்தையே முன்வைத்தனர். அதுமட்டுமல்லாமல், லால்தாஸின் குணநலன்களை மோசமாகச்
சித்தரிக்கின்ற வகையில் இருந்த கருத்துகளை அவர்கள் வலுவாக எடுத்து வைத்தது
ஆச்சரியம் அளிப்பதாகவும், கொலை குறித்து விசாரித்த காவல்துறையின் நேர்மை மீது
சந்தேகங்களை எழுப்புவதாகவும் இருந்தது. விசாரணைக் குழு சந்தித்த காவல்துறை
அதிகாரிகள் அனைவரும் பாபா குற்றவாளி
என்பதையும், அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன என்பதையும் வலியுறுத்துவதில் மிகுந்த
ஆர்வத்துடன் இருந்தனர் என்றே தோன்றியது. இருந்தாலும் மேற்கொண்டு விசாரித்தபோது அவர்களே
பாபாவின் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பதை
ஒத்துக் கொண்டனர். தங்களால் புனையப்பட்ட பதிவுகளின் மூலம் காவல்துறையினர்
நிரூபிக்க முயன்ற முன்முடிவு செய்யப்பட்ட கதைக்குள் இருக்கின்ற பல தளர்வான இழைகள்
குறித்த முழுமையான விசாரணை தேவைப்படுகின்றது.
(1)
1993 நவம்பர் 6 அன்று நடைபெற்ற காவல்துறை சோதனைக்கு எந்த காவல் நிலையம்
பொறுப்பானது? பாபா லால்தாஸ் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரிடம் சோதனை
நடத்தப்பட்டது என்ற உண்மையை காவல்துறை ஏன் மறுக்கிறது? அந்த சோதனை தன்னை
தற்காத்துக் கொள்ளக்கூடிய வகையில் துப்பாக்கி அல்லது ஏதேனும் ஆயுதங்களை பாபா வைத்திருக்கிறாரா
என்பதை அறிந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டதா? அந்தச் சோதனை குறித்து காவல்துறையினருக்கு எதுவும் தெரியாது என்றால், விடியற்காலையில்
பாபாவின் வீட்டிற்குள் சோதனையை நடத்துவதற்காக காவல்துறை என்ற பெயரில் நுழைந்தவர்கள்
யார்? அந்த சோதனைதான் அதையடுத்து நடந்த கொலைக்கான ஆரம்ப கட்டமாக இருந்ததா?
(2) இறந்த உடனேயே சம்பவ இடத்திற்கு வந்த
கிராமவாசிகளின் சாட்சிகள் மூலமாகவும், நயாகட் காவல் நிலையத்தின் வயர்லெஸ் செய்தி
பதிவு புத்தகத்தின் மூலமாகவும் சம்பவ இடத்தில் அவ்தேஷ் இருக்கவில்லை என்ற
உண்மையை நிரூபிக்க முடியும் எனும் போது,
வழக்கைப் பலவீனப்படுத்துகின்ற வகையில் தவறான முதல் தகவல் அறிக்கையை காவல்துறை ஏன் நீதிமன்றத்தில்
பதிவு செய்தது?
(3) அரசாங்கமே மெய்க்காப்பாளர்களை நியமிக்கும்
அளவிற்கான அச்சுறுத்தல்கள் பாபாவிற்கு இருந்தது உண்மையாகும். தனது உயிருக்கு
ஆபத்து இருந்ததாலேயே அயோத்தியிலிருந்து வெளியேறி தனது கிராமத்திற்குச் சென்று பாபா
வாழத் தொடங்கினார். தனது பாதுகாப்பு குறித்த கவலையை
கொலைக்கு சில நாட்களுக்கு முன்னர் கரண்ட் இதழின் ஆசிரியரிடம் அவர் வெளிப்படுத்தியும் இருந்தார். பாபாவின்
உயிருக்கு பல அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும், கொலைக்கான அரசியல் நோக்கத்தை
முன்னெடுக்க காவல்துறை ஏன் மறுத்து விட்டது?
(4) வலுவான அரசியல் விரோதிகள்
சம்பந்தப்பட்டதொரு முக்கியமான வழக்கில் காவல்துறையால் தவறான முதல் தகவல் அறிக்கை ஏன் பதிவு
செய்யப்பட்டது? முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதற்கு யார் பொறுப்பு? வேண்டுமென்றே
அரசுதரப்பு வழக்கைப் பலவீனப்படுத்துவதற்காக தவறான அறிக்கை பதிவு செய்யப்பட்டதா?
கொலைத் தாக்குதலை நடத்தியவர்கள் மிகக் கவனமாக,
மிகவும் துல்லியமாக கொலைக்கான நேரத்தை ஒதுக்கியிருப்பது தெரிகிறது. அந்த நேரம் இருந்த
தேர்தல் சுரத்தில் அந்தக் கொலைச் செய்தி காணாமல் போய் விட்டது என்றே தோன்றுகிறது.
பரந்த மதச்சார்பற்ற அமைப்பிற்குள் இருந்த பாபாவின் ஆதரவாளர்கள் ஆரம்பத்தில் மெய்க்காப்பாளர்களை வழங்கி
அவருடைய பாதுகாப்பை உறுதி செய்திருந்தனர். தேர்தலில் முலாயம் சிங் யாதவ் மீண்டும்
அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருந்த நிலைமையில் இன்னும் பத்து நாட்கள்
கழிந்திருந்தால் அந்த ஆபத்திலிருந்து நிச்சயம் பாபா தப்பியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
நடைபெற்றிருக்கும் நேர்மறையான நிகழ்வுகள்,
பரந்த மதச்சார்பற்ற கூட்டணி மாநிலத்தில் பெற்றிருக்கும் வெற்றி போன்றவை இந்த
விசாரணையின் போக்கை மாற்றக் கூடும். இதுவரையிலும் பதிலளிக்கப்படாத சில முக்கியமான
கேள்விகளுக்கான பதிலைப் பெறவும், உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும்
இந்தக் கொலை தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற உயர்மட்ட விசாரணைகள் நிச்சயம் உதவிடக் கூடும்.
1994ஆம்
ஆண்டு வெளியான கட்டுரை







Comments