ஹே ராம்! உன்னுடைய அயோத்தி ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது?

பிரிஜேஷ் சிங்

தெஹல்கா இதழ்

அயோத்தி  ராம ஜென்ம பூமி கோவில் பூசாரி லால்தாஸ் கொலை செய்யப்பட்ட  வேளை ராமர் கோவில் போராட்டம், அதிலிருந்து எழுந்த அரசியல் சூறாவளி என்றிருந்த காலமாக இருந்ததால் புதிய பூசாரி ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டிய மிகப் பெரிய அழுத்தம் நிர்வாகத்திற்கு அப்போது ஏற்பட்டது. அந்த பொறுப்பில் அமர்த்துவதற்காக நிர்வாகம் நல்லவர் ஒருவரைக் கண்டறிய வேண்டியிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் எந்தவொரு குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் ஆளாகாத, அரசியல் சாய்வுகள்  எதுவுமில்லாத  சாது ஒருவரைக் கண்டறிய வேண்டியிருந்தது. அது உண்மையில் மிகப்பெரும்  பிரச்சனையாகவே இருந்தது. அவ்வாறான சாது ஒருவர் கூட அயோத்தியில் காணப்படவில்லை. அடையாளம் காணப்பட்ட எவராயினும் அவர் மீது ஏதாவதொரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது, இல்லையென்றால் அரசியல் கட்சியுடன் தொடர்புடையவராக அவர் இருந்தார். பல தேடல்களுக்குப் பிறகு நிர்வாகம் சத்யேந்திர தாஸைக் கண்டுபிடித்தது. இன்று அவர்தான் ராமஜென்ம பூமி கோவில்  பூசாரியாக உள்ளார்.     

லால்தாஸ், சத்யேந்திர தாஸ்

துப்பாக்கிச் சூடு

2013  ஜூலை 21 - அயோத்தியில் உள்ள சிறிய அளவிலான நிலம் மீதான உரிமை குறித்து பவ்நாத் தாஸ், ஹரிஷங்கர் தாஸ் என்ற இரண்டு பூசாரிகள் தங்களுக்குள்ளாக மோதிக் கொண்டனர். தங்கள் ஆதரவாளர்களுடன் ஒருவர் மீது ஒருவர் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டனர். அந்த வன்முறையில் ஒருவர் உயிரை இழந்தார். பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 

ஏறக்குறைய இருபதாண்டுகளாக நடைபெற்று வருகின்ற இது போன்ற சம்பவங்கள் ராமஜென்ம பூமி - பாபர் மசூதி சர்ச்சைகளுக்கு சாட்சியாக இருக்கின்ற அயோத்தி குறித்து சொல்லப்படாது இருக்கின்ற இருண்ட கதையை நமக்குச் சொல்கின்றன. ராமரின் பெயரை உச்சரிக்கின்ற பூசாரிகளுக்கான சாட்சியாக விளங்குகிற இந்த ராம நகரத்தில் தங்களுடைய கையில் மாலையை வைத்திருக்க வேண்டிய துறவிகளிடம் மதுபானமும், துப்பாக்கியும் மட்டுமே  காணப்படுகின்றன. அனைத்திற்கும் மேலானவர்கள் என்று மக்கள் கருதுகின்ற இந்த துறவிகள் எப்போதும் மற்றொரு கோவிலின் சொத்தை அபகரிக்கின்ற மனநிலையுடனே இருக்கின்றனர். புலன்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்க வேண்டிய இந்த பாபாக்கள் மீது மைனர் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தங்களுடைய குருவை பிரம்மா, விஷ்ணு, மகேஷ்வரன் என்றழைத்து வந்த இந்த சாதுக்கள் - தங்களுடைய குருக்களை கொன்று விட்டார்கள் என்று இப்போது குற்றம் சாட்டப்பட்டு நிற்கின்றனர்.        

ராவணனை நம்பிய சீதை

அயோத்தியின் எஸ்எஸ்பியாகவும், பரேலி பகுதியின் டிஐஜியாகவும் இருந்த ஆர்கேஎஸ் ரத்தோர் ‘பெரும்பாலான அயோத்தி சாதுக்கள் பல்வேறு வகையான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்’ என்று கூறுகிறார். நீண்ட காலமாக பைசாபாத்தில் பணியில் இருந்து வருகின்ற தர்மேந்திர சிங் ‘எஸ்எஸ்பியாக நான் அங்கே இருந்த போது, சொத்து அல்லது அதுதொடர்பான வேறு ஏதாவது சர்ச்சையுடன் அயோத்தியைச் சேர்ந்த பாபாக்களில் யாராவது ஒருவர் என்னிடம் வராமல் எந்தவொரு நாளும் கடந்தது கிடையாது. உண்மையில் அந்த நிலைமை வருத்தம் அளிப்பதாகவே இருந்தது. அப்போது நான் இவ்வாறு செய்யும் ஒருவர் துறவியாக மாற வேண்டுமா என்று எனக்குள்ளாக நினைத்துக் கொள்வேன்’ என்கிறார். அயோத்தி வட்ட அதிகாரி தாராகேஷ்வர் பாண்டே ‘ராவணன் சீதையைக் கடத்துவதற்காக வெவ்வேறு வகையிலே ஐநூறு வடிவங்களை எடுத்திருக்கலாம்.  ஆனாலும்  ராவணன் போட்ட முனிவர் வேடத்தை மட்டுமே சீதை நம்பினாள்’ என்று கூறுகிறார். அன்றாட உலக விஷயங்களிலிருந்து தங்களை அயோத்தியில் உள்ள சாதுக்கள் பலராலும் விலக்கி வைத்துக் கொள்ள முடியவில்லை. அவர்களில் ஏறத்தாழ பாதிப் பேர் இறைச்சி, சாராயம், பெண்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கும் குற்றவாளிகளாகவே இருக்கின்றனர்.          

சரயு கஞ்ச்  ராம் ஜானகி  கோவிலின் பூசாரி கிஷோர் ஷரன் சாஸ்திரி 'பகத் தான் உலகம், பகத் தான் துறவி, துறவிகள் தான் இறைவன் என்று சொல்கிறார்.   மற்றொரு துறவியோ ‘அவர் அழுத்தம் கொடுத்து துறவியாகி விட்டார், பாரம்பரியத்தையும், வேத நூல்களையும் மறந்து கழுத்தை நெரித்து தலைமைப் பூசாரியாகி விட்டார்’ என்ற சுவாரஸ்யமான பாடல் வரியைக் கூறினார். இன்றைக்கு அதைப் போன்ற பல வரிகள் அயோத்தியில் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கின்றன. அந்த வரிகள் உள்ளூர் துறவிகள் சமூகத்தில் இருக்கின்ற பெரும்பாலானோருக்கு முழுமையாகப் பொருந்திப் போகின்றன.        

ஹனுமன்காரி திரிபுவன் தாஸ்

நகரின் புகழ்பெற்ற கோவிலான ஹனுமன்காரியைச்  சேர்ந்த தலைமைப் பூசாரி ஹரிஷங்கர் தாஸ் சில காலத்திற்கு முன்பு ஆறு தோட்டாக்களைக் கொண்டு சுடப்பட்டார். அவரைத் தாக்கியதாக ஹரிஷங்கரின் சீடர் ஒருவர் மீதே குற்றம் சுமத்தப்பட்டது.

ஹனுமன்காரியைச் சேர்ந்த கடின்ஷின் தலைமைப் பூசாரியான ரமேஷ் தாஸ் கடந்த ஆண்டு தான் கொலை செய்யப்படப் போவது குறித்த அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஹனுமன்காரியில் தன்னிச்சையாக வேலை செய்ய முயலும் சாது சமூகத்தைச் சேர்ந்த சிலர் தன்னைக் கொல்லத் திட்டமிட்டுள்ளதாக அவர் அப்போது கூறியிருந்தார்.

அதேபோன்று அகில நிர்வாணி அனி  அகாடாவின் அனைத்திந்திய பொதுச் செயலாளரும், ஹனுமன்காரியின் பூசாரியுமான கவுரி ஷங்கர் தாஸும் தான் கொலை செய்யப்படப் போவதான அச்சத்துடனே இருந்தார். தன்னுடைய  குருவான ராமாஜ்ய தாஸைக் கொன்ற தலைமைப் பூசாரி திரிபுவன் தாஸ் இப்போது தன்னையும் கொலை செய்ய முயல்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

கோண்டா அருகே 2012ஆம் ஆண்டில் நடந்த மோதலில் ஹனுமன்காரியின் பூசாரியான ஹரிநாராயண் தாஸ் காவல்துறையினரால் கொல்லப்பட்டார். அவர் மீது கொலை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் பதிவாகி இருந்தன.      

இதுபோன்ற சம்பவங்களின் பட்டியல் மிகவும் நீண்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களுடன் இருக்கின்ற அயோத்தியில் உள்ள பெரும்பாலான மடங்களும், கோவில்களும் இன்றைக்கு மிகவும் மோசமான குற்றங்கள் நடைபெறுகின்ற மையங்களாக மாறியிருப்பது தெளிவாகத் தெரிய வருகிறது. கோவிலில் உள்ள சீடர்கள் ஆங்காங்கே தலைமைப் பூசாரிகளைக் கொலை செய்வதாக, கோவில்களிலிருந்து அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், கடந்த சிலஆண்டுகளாக அயோத்தி காவல்துறையினருடன் நடந்திருக்கும் நேரடி மோதலில் சாதுக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இருநூற்றைம்பதிற்கும் மேற்பட்ட சாதுக்கள், தலைமைப் பூசாரிகள் மீது மிக மோசமான கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட கொலை வழக்குகள் அவர்களில் பலருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

பல்வேறு கிரிமினல் வழக்குகளில் சிறைக்குச் சென்றிருக்கும் பாபாக்களும் அயோத்தியில் இருந்து வருகின்றனர். சிறையிலிருந்து திரும்பி வந்து மீண்டும் தலைமைப் பூசாரி நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களும் உள்ளனர். துறவி ஒருவர் மீது மற்றொரு மடம், கோவிலை குற்றவாளிகளின் உதவியுடன் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தலைமைப் பூசாரி ஒருவரைக் கொல்வதன் மூலம் அல்லது ஏற்கனவே அங்கே இருக்கின்ற ஒருவரை வெளியேற்றுவதன் மூலம் தலைமைப் பூசாரிகளை குற்றவாளிகள் உருவாக்கித் தருகின்ற நிகழ்வுகளும் அயோத்தியில் நடைபெறுகின்றன. ஆசைகள், அச்சத்திலிருந்து விடுபட்டவர்களாகவே பெரும்பாலும் துறவிகள் அடையாளம் காணப்படுகிறார்கள். ஆனால் இன்றைக்கு சட்டரீதியிலான வழக்குகளை எதிர்கொள்வது, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மெய்க்காப்பாளர்களை வைத்திருப்பது போன்ற செயல்பாடுகளே அயோத்தி சாதுக்களின் பொதுவான  நடைமுறையாக இருக்கின்றது.     

திரிபுவன் தாஸ்

அயோத்தி இவ்வாறு குற்றமயமாக்கப்பட்டிருப்பது 1960களில் தொடங்கிய விவரமறிந்தவர்கள் இன்றைக்கு அது அதிகரித்து உச்சத்தைத் தொட்டிருக்கிறது என்கின்றனர். அயோத்திக்குள் இவ்வாறு குற்றவாளிகள் நுழைந்ததை உஜ்ஜயின் பகுதியைச் சார்ந்த ஹனுமன்காரியின் தலைமைப் பூசாரி திரிபுவன் தாஸ் என்பவரே ஆரம்பித்து வைத்ததாகக் கூறுகின்ற வைராகி சாது ராமானந்த், தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக திரிபுவன் தாஸே அயோத்தியில் குற்றவாளிகளின் உதவியை முதன்முதலாக நாடினார் என்று குறிப்பிடுகிறார். ஜாதாவில் கைத்துப்பாக்கி ஒன்றைக் கையாண்ட திரிபுவன் தாஸின் குற்றவியல் நடவடிக்கைக்குப் பிறகே ஹனுமன்காரியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார் என்று ராமானந்த் விளக்குகிறார். அதற்குப் பிறகு தனக்கென்று சொந்த மடத்தை நிறுவிக் கொண்ட திரிபுவன் தாஸ், அந்த மடத்திலிருந்து கொண்டே குற்றச் செயல்களைப் புரியத் தொடங்கினார். ஹனுமன்காரியின் மகாராணி கௌரி ஷங்கர்தாஸ் ‘அயோத்தியில் நடந்த பெரும்பாலான கொலைகளில் திரிபுவன் தாஸுக்கு பங்கு இருந்தது. இதுவரையிலும் அயோத்தியில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதுக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அயோத்தியில் குற்றங்களுக்கான களத்தை திரிபுவன் தாஸே உருவாக்கினார்’ என்கிறார்.   

திரிபுவன் தாஸ் எந்தக் கொலையையும் அவரே ஒருபோதும் செய்ததில்லை. அவர் அதுபோன்ற வேலைகளைச் செய்வதற்கு தன்னுடைய சீடர்களின் உதவிகளையே அவர் பயன்படுத்திக் கொண்டார் என்று கூறப்படுகிறது. 'திரிபுவனின் சீடர்கள் அனைவரும் குற்றவாளிகளாகவே வளர்ந்தனர். முனிவர்களால் மனிதன் ஒருவன் துறவி ஆகிறான். ஆனால் திரிபுவனுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மிஞ்சுகின்ற வகையிலே அதீத குற்றவாளிகளாகவே வளர்ந்தனர். பெரும்பாலும் சிறையிலேயே இருந்த திரிபுவன் தன்னுடைய  பெரும்பாலான சீடர்களையும் சிறைக்கு அனுப்பி வைத்தார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அந்தக் குற்றவாளிகள் அனைவரும் அருகில் இருக்கும் அயோத்திக்கே நேரடியாக வருவார்கள்’ என்று கௌரிஷங்கர் கூறுகிறார். ‘திரிபுவன் ஏராளமான குற்றவாளிகளை தனது மடத்துக்கு அழைத்து வந்தார்.  பெரும்பாலும் பீகாரில் இருந்து வருகின்ற குற்றவாளிகளுக்கான அடைக்கலமாக அவரது மடமே இருந்தது’ என்று ராம்சரிதமானஸ் பவனின் தலைமைப் பூசாரியான அர்ஜுன் தாஸ் கூறுகிறார். திரிபுவன் தாஸ் இன்னும் உயிருடன் இருக்கிறார். அயோத்தியில்தான் இருக்கிறார். இன்றளவிலும்கூட அவர் மீது  பத்திற்கும் மேற்பட்ட கடுமையான குற்ற வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளன.  

ராமஜென்ம பூமி  நியாஸின் நிருத்யா கோபால் தாஸ்     

ராமஜென்ம பூமி நியாஸின்  தலைவரும், ராம சந்திர பரமஹம்சாவின் வாரிசுமான தலைமைப் பூசாரி நிருத்யா கோபால் தாஸ்  மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.  உயிருக்குப் பயந்து தன்னுடைய பெயரைக் கூற விரும்பாத அயோத்தியின் பெரிய தலைமைப் பூசாரி ஒருவர் ‘அந்த மனிதன் துறவியே கிடையாது. அயோத்தியில் இன்று நடக்கின்ற குற்றம், அராஜகம் அனைத்திலும் குண்டராக, நில மாஃபியாவாக அவர் தொடர்பில் இருந்து வருகிறார். அவர்கள் உங்களுடைய நிலம் அல்லது கோவிலை விரும்பினால், அவர்களிடம் அவற்றை ஒப்படைப்பதைத் தவிர வேறு வழி எதுவும் உங்களுக்குக் கிடையாது. அவர்களிடம் உங்கள் நிலத்தைக் கொடுத்து விட வேண்டும் அல்லது  இறந்து போவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்ற நிலைமையே இன்றைக்கு இருந்து வருகிறது’ என்கிறார்.      

நிருத்யா கோபால் தாஸ் 

'அயோத்தியின் பிரமோத் வனப்பகுதியில் இருந்த, ஓய்வுபெற்ற அரசு பெண் ஊழியர் ஒருவரின் வீட்டை நிருத்யா கோபால் தாஸ் மிகவும் விரும்பினார். அவர் பலமுறை அந்த வீட்டைத் தான் வாங்கிக் கொள்வதாக வீட்டு உரிமையாளரான  ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்குத் தகவல் அனுப்பி வந்தார். ஆனால் அந்தப் பெண் தன்னுடைய வீட்டை விற்பதற்கு விரும்பவில்லை. சில நாட்களுக்குப் பிறகு அடையாளம் தெரியாத சிலர் அந்தப் பெண்மணியைத் தாக்கினார்கள் என்ற செய்தி வெளியானது. அந்தச் சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண்  தன்னுடைய குடும்பத்துடன் வேறு மாநிலத்திற்குச் சென்று விட்டார்’ என்று நிருத்யா கோபால் தாஸுடன் தொடர்புடைய அந்தச் சம்பவம் குறித்து 'போர்ட்ரெய்ட்ஸ் ஃப்ரம் அயோத்தி' என்ற தனது புத்தகத்தில் சாரதா துபே குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.        

மற்றொரு சம்பவம் மணிராம் தாஸின் முகாமுக்கு அருகே அமைந்துள்ள  பிந்து சரோவர் கோவிலுடன் தொடர்புடையது. திரிவேணி தாஸ் என்பவர் அங்கே தலைமைப் பூசாரியாக இருந்தார். கோவில் தொடர்பான சில விஷயங்களில் அவர் நிருத்யா கோபால் தாஸுடன் இயைந்து போகாததால் அதிருப்தி உருவானதாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு திரிவேணி தாஸ் வழக்கம் போல் அதிகாலை நான்கு மணிக்கு சரயு நதியில் குளிக்கச் சென்றார். சென்ற வழியில் வந்த லாரி அவர் மீது மோதியது. அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அயோத்தியில் உள்ள பலரும் அந்தச் சம்பவத்தின் பின்னணியில் கோபால் தாஸ் இருந்ததாகச் சொல்கின்றனர்.            

நிருத்யா கோபால் தாஸ் மற்றவர்களின் சொத்துக்களைப் பறித்தார் என்று அவர் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளில் மிகப் பெரியதாக மார்வாரி தர்மசாலாவின் உடைமை தொடர்பான குற்றச்சாட்டு உள்ளது. ‘ அயோத்தியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த எழுபது முதல் எண்பது சிறுவர்கள் இந்த தர்மசாலாவில் 1990களில் தங்கியிருந்தனர். அவர்கள் அனைவரும் கல்லூரிக்குச் சென்றிருந்த ஒருநாள் பிற்பகலில் அந்த தர்மசாலாவை ​​ஆயுதமேந்திய சாதுக்கள் கைப்பற்றிக் கொண்டனர். மாணவர்களின் புத்தகங்கள், ஆவணங்கள், உடைகள் என்று அங்கிருந்த பல பொருட்களும் தீக்கிரையாக்கப்பட்டன’ என்று அந்தச் சம்பவத்திற்கு சாட்சியாக இருந்த சாது பிரேம் சங்கர் தாஸ் கூறுகிறார். அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதற்காக நிருத்யா கோபால் தாஸ் மற்றும் பலருக்கு எதிராக  347, 348 மற்றும் 436 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதே போன்று பிற வழக்குகளும் கோபால் தாஸுக்கு எதிராக இருக்கின்றன என்று பிரேம் சங்கர் தாஸ்  கூறுகிறார். 

இவ்வாறு அயோத்தியில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த கோபால் தாஸுமே அங்கே நடந்து வருகின்ற வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒருவராகவே இருந்தார். 2001 மே மாதத்தில் ஒரு நாள் அதிகாலை ஐந்து மணியளவில் தனது சீடர்களுடன் சரயு நதியில் குளிக்கப் போன அவர் மீது நாட்டு வெடிகுண்டுகள்  வீசப்பட்டன. அந்த தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார். 

அந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ இருந்தது என்று அவர் கூறிக் கொண்டார். ஆயினும் தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே அவரது சொந்த சாது சமாஜ் சமூகத் துறவிகளில் ஒருவரான தேவராம் தாஸ் வேதாந்திக்கு அந்த தாக்குதலில் தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அந்தத் தாக்குதல் நடப்பதற்கு முன்பாக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வேதாந்தியை ராம் வல்லப கோவிலின் தலைமைப் பூசாரி பதவியில் இருந்து நிருத்யா கோபால் தாஸ் நீக்கியிருந்தார். வேதாந்தி அதற்குப் பழிவாங்குவதற்காகவே நிருத்யா கோபால் தாஸைத் தாக்கினார் என்று சொல்லப்படுகிறது. வேதாந்தியும் சளைத்தவரல்ல. பீகார் பகல்பூரில் உள்ள ஹோட்டலில் ஒரு சிறுமியுடன் இருந்த அவரை 1995ஆம் ஆண்டில் காவல்துறையினர் கைது செய்திருந்தனர். அந்தச் சிறுமியைக் கடத்திச் சென்றதாக வேதாந்தி மீது குற்றம் சுமத்தப்பட்டது. அப்போது அவரிடமிருந்து ஸ்பானிஷ் கைத்துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது.       

ரங் நிவாஸ் கோவில் மன்மோகன் தாஸ்

2002 ஜூன் மாதத்தில் அயோத்தியில்  உள்ள ரங் நிவாஸ் கோவிலைச் சார்ந்த எண்பது வயதான ராம்ரூப் தாஸ் மிகவும் தகுதி வாய்ந்த தன்னுடைய சீடரான ரகுநாத் தாஸ் என்பவரைத் தலைமைப் பூசாரியாக அறிவித்தார். பீகாரில் சமஸ்திபூரிலும் ரங் நிவாஸ் கோவிலுக்கென்று பல கோவில்கள் இருக்கின்றன. அயோத்தியில் இருந்த கோவிலின் பொறுப்பை சீடரான ரகுநாத்திடம் ஒப்படைத்த பின்னர் சமஸ்திபூரில் இருந்த கோவிலைக் கவனித்துக் கொள்ளும் நோக்கத்துடன் ராம்ரூப் தாஸ்  சமஸ்திபூருக்குச் சென்று விட்டார்.  ரகுநாத்  இறந்து போன செய்தி ஐந்து மாதங்களுக்குப் பிறகுதான் அவருக்குக் கிடைத்தது. அந்தச் செய்தியைக் கேட்டு அயோத்திக்கு விரைந்த ராம்ரூப் தாஸ் ஆயுதமேந்திய நாகா சாதுக்கள் கோவிலின் அனைத்து பக்கங்களையும் சூழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டார்.     

அதற்குப் பிறகு தன்னுடைய கோவிலுக்குள்ளேயே அவரால் நுழைய முடியவில்லை. தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் அருகிலுள்ள கோவிலில் தஞ்சமடைந்த அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்ற முயற்சியில்    ஈடுபட்டார்கள். ‘எனது சீடர் இறந்து போன பிறகு, எனது கோவிலை உள்ளூர் பாஜக தலைவரான மன்மோகன் தாஸ் கைப்பற்றிக் கொண்டார் என்று கூறப்படுகிறது. அவர்கள் என்னை என்னுடைய கோவிலுக்குள் நுழைவதற்கே அனுமதிக்கவில்லை. எனது சீடர் இறந்து போன பிறகு அந்தக் கோவிலின் தலைமைப் பூசாரி பதவிக்கான உரிமை உண்மையில் எனக்கு மட்டுமே இருக்கிறது’ என்று அவர்  கூறுகிறார்.           

ஆனால் ரகுநாத்துக்குப் பிறகு அந்தக் கோவிலின் தலைமைப் பூசாரி ஆவதற்கு தனக்கே உரிமை இருக்கிறது என்று மன்மோகன் தாஸ் கூறுகிறார். ரங் நிவாஸ் கோயிலுக்கு வருவதற்கு முன்பாகவே ரகுநாத் தாஸ் ஹனுமன்காரியில் உள்ள தனது குருவான சத்யநாராயண் தாஸின் சீடராக இருந்தார் என்று கூறும் மன்மோகன், தாங்கள் இருவரும் ஒரே குருவின் சீடர்களாக இருப்பதால் தனது குருவின் சீடர் ஒருவர் இறந்த பிறகு தலைமைப் பூசாரி ஆவதற்கான உரிமை  தனக்கு  மட்டுமே இருக்கிறது  என்கிறார்.    

ஆனால் ராம்ரூப் தாஸ் 'நான் பல்லாண்டுகளாக இந்தக் கோவிலின் தலைமைப் பூசாரியாக இருந்தவன். அந்த உரிமையை என் சீடருக்கு நான் அளித்திருந்தேன். இப்போது அவர் உயிருடன் இல்லை. நான் உயிருடன் இருப்பதால் தலைமைப் பூசாரி பதவி இயல்பாக என்னிடமே திரும்பி வர வேண்டும்’ என்கிறார். மேலும்  தனது சீடரின் மரணம் இயற்கையானது என்று அவர் கருதவில்லை. ‘என் சீடர் நாற்பத்தைந்து வயதுக்கும் குறைவானவர். அவர் எப்படி இறந்தார் என்று இன்னும் எனக்குத் தெரியவில்லை. பல ஆண்டுகளாக அவர் என்னுடன் இருந்து வந்தார். நல்ல ஆரோக்கியத்துடன் தகுதியானவராக இருந்த அவர் நிச்சயம் கொலை செய்யப்பட்டிருப்பார் என்பதே எனக்கிருக்கும் சந்தேகமாகும்’ என்றே ராம்ரூப்  கூறுகிறார்.       

அந்தக் கதை இத்துடன் முடியவில்லை. கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்ட  ராம்ரூப் தாஸ் தனக்கு நேர்ந்த சோகத்தைப் பற்றி  சாதுக்கள்,  தலைமைப் பூசாரிகளிடம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்த போது, அவரை அணுகிய  அயோத்தி இளம் சாதுவான அர்ஜுன் தாஸ்  தன்னால் அவருக்கு உதவ முடியும் என்று அவரிடம் கூறினார். ஆனால் அதற்காகப் பணம் செலவிட வேண்டியிருக்கும் என்றார். பணம் தருவதற்கு அவர்கள் தயாரானார்கள். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு ராம்ரூப் தாஸுக்குப் பதிலாக அர்ஜுன் தாஸே தலைமைப் பூசாரியாகி விட்டார். அது குறித்து பேசிய ராம்ரூப் தாஸ் 'அவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடன் என்னால் போராட முடியவில்லை. சண்டை போடுவதற்காக என்று என்னுடைய வாழ்க்கையில் அதிக நேரத்தைச் செலவிட நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது எனக்கு விதிகளைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. எனவே அர்ஜுன் எனக்கு உதவுவதாகச் சொன்ன போது நான் அதை உடனடியாக ஏற்றுக் கொண்டேன். இப்போது அவர்தான் என்னுடைய வாரிசு’ என்றார்.         

கோவிலைக் கைப்பற்றிய மன்மோகன் அதை விஸ்வ ஹிந்து பரிஷத்துடன் தொடர்பில் இருந்த சாது ராஜ்குமார் தாஸிடம் கொடுத்தார். அவருக்கு எதிராக பல கொலை வழக்குகள் நடந்து வருகின்றன. ரங் நிவாஸ் கோவிலின் விவகாரம் நீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கிறது. அந்த வளாகம் தற்போது காவல்துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.     

ஹனுமன்காரி சாதுக்கள்

ஹனுமன்காரி அயோத்தியில் உள்ள  மிகப் பெரிய  கோவில். இங்கு சுமார் எழுநூறு நாகா முனிவர்கள் தனித்து வாழ்ந்து வருகின்றனர். அயோத்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற குற்றங்களில் பெரும்பான்மையானவை ஹனுமன்காரி  பகுதியிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. தலைமைப் பூசாரி ஹரிபஜன் தாஸ் அவரது சீடர்களால் 1984ஆம் ஆண்டு  சுடப்பட்டார். 1992ஆம் ஆண்டு கடின்ஷின் தலைமைப் பூசாரி தீன்பந்து தாஸ் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தொடர்ச்சியான தாக்குதல்களால் கலங்கிப் போன அவர் தன்னுடைய அரியணையை விட்டு வெளியேறினார். யாராலும் கவனிக்கப்படாத நிலையில் அயோத்தியில் வாழத் தொடங்கினார். கோவில் வளாகத்தில் நவீன் தாஸ் என்ற சாது மற்றும் அவரது நான்கு நண்பர்கள் சேர்ந்து காரியின் தலைமைப் பூசாரியான ராம்க்யா தாஸை 1995 செப்டம்பரில் கொன்றனர். 2005ஆம் ஆண்டு ஒருவரையொருவர் வெடிகுண்டுகளால் தாக்கி கொண்ட இரண்டு நாகா சாதுக்கள் பலத்த காயமடைந்தனர். 2010ஆம் ஆண்டு காரியின் சாதுவான பஜ்ரங் தாஸ், ஹர்பஜன் தாஸ் ஆகியோர் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  

ஹனுமன்காரி

ஹனுமன்காரியைச் சேர்ந்த தலைமைப் பூசாரி பிரஹலதா தாஸ் வாழ்ந்த காலம் வரையிலும் அவரது அடையாளம் நீண்ட காலத்திற்கு 'குண்டா பாபா' என்பதாகவே இருந்து வந்தது. பைசாபாத் உள்ளூர் நிர்வாகம் பிரஹலதாவின் மீது குண்டர் சட்டத்தைப் போட்டிருந்ததே அதற்கான காரணமாக இருந்தது. பிரஹலதா மீது  கொலை உட்பட பல கடுமையான குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தன. பிரஹலதா தாஸ்  2011ஆம் ஆண்டு ஒரு சாது கும்பலால் சுட்டுக்  கொல்லப்பட்டார்.        

என்கவுண்டரில் கொல்லப்பட்ட சாதுக்கள்

இவையனைத்தும் சாதுகளுக்கிடையே நடந்த பரஸ்பர சண்டைகளாகும். இவை தவிர அயோத்தியில் காவல்துறை நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்ட சாதுக்களின் நீண்ட பட்டியலும் இருக்கிறது. கடந்த ஆண்டு கோண்டா அருகே நடந்த மோதலில் ஹனுமன் காரியின் சாது ஹரிநாராயண் தாஸ்  காவல்துறையினரால் கொல்லப்பட்டார். ஹரிநாராயண் மீது கொலை உட்பட பல குற்றங்களில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அயோத்தியின் பர்ஹாட்டா மஜா பகுதியில் 1995இல் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தலைமைப் பூசாரி ராம்பிரகாஷ் தாஸ் இறந்தார். பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த சாது ராம்ஷங்கர் தாஸும் காவல்துறையால் கொல்லப்பட்டார். கடந்த பத்தாண்டுகளில் அயோத்தியில் மட்டும் இருநூறுக்கு மேற்பட்ட சாதுக்கள் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. 

சாதுக்கள் ஏன்  குற்றங்களுக்கு வழிவகுத்துக் கொடுக்கிறார்கள்

சாதுக்கள் இவ்வாறு குற்றங்களில் ஈடுபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. தலைமைப் பூசாரி ஆவதற்கான பேராசையே முக்கியமான மிகப்பெரிய காரணம் என்று விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். மூத்த பத்திரிகையாளரான கிருஷ்ண பிரதாப் சிங் ‘இன்றைக்கு அயோத்தியில் இருக்கின்ற வயதான சாதுக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கிறார்கள். அரியணைக்காக தங்களுடைய சீடர்களே தங்களைக் கொன்று விடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர்’ என்று தெரிவித்தார். ‘இப்போது தலைமைப் பூசாரியின் இறுதி மூச்சு அடங்குவதற்கு முன்பாகவே சீடர்கள் பொறுமையிழந்து போகின்றனர். அவர்களை சீடர்களே மறுமைக்கு அனுப்பி விடுகிறார்கள். சீக்கிரம் தலைமைப் பூசாரி ஆகி விட வேண்டும் என்றே அனைவரும் நினைக்கிறார்கள்’ என்று சாது ராம்நாராயண் தாஸ் கூறுகிறார். அயோத்தியில் உள்ள சீடர்கள் தங்களுடைய பாதையில் குறுக்கே நின்றிருந்த குருக்களை அகற்றிய நிகழ்வுகள் பல இருக்கின்றன. குரு இறந்து விட்டதாகக்  காட்டி மோசடியாக அவருடைய சீடர் அரியணையைக் கைப்பற்றிக் கொண்ட வழக்குகள் ஏராளமாக உள்ளன. தலைமைப் பூசாரியின் சிம்மாசனத்தை தாங்கள்  கைப்பற்றுவதற்காக சீடர்கள் கோவிலிலிருந்து தங்கள் குருவை வலுக்கட்டாயமாக  வெளியேற்றிய  சில நிகழ்வுகளும்  நடந்தேறி உள்ளன.     

ஜானகி காட்டின் தலைமைப் பூசாரி மைதிலி ராம்ஷரன் தாஸின் அழுகிய சடலம் அவரது அறையில் கண்டெடுக்கப்பட்டது. அவரைக் கொலை செய்ததாக அவரது சீடரான ஜன்மே ஜெய ஷரன் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவர் இப்போது தலைமைப் பூசாரியாக மாறி விட்டார்.  

ராம்கிலோன் கோவிலின் கதையும் இதுபோன்றே இருக்கிறது. ‘தன்னை தலைமைப் பூசாரியாக அறிவிக்க வேண்டுமென்று அந்தக் கோவிலின் தலைமைப் பூசாரி மீது அழுத்தம் கொடுத்து வந்த அவரது சீடர் சங்கர் தாஸ் தனது குருவை கோவிலிலிருந்து வெளியேற்றினார். அடுத்த பத்து ஆண்டுகள் சரயூ நதிக் கரையிலேயே அந்த ஏழை குரு வசித்து வந்தார்’ என்று ஸ்ரீபிதேஜா துல்ஹா கஞ்சின்  சாதுவான பிம்லா பிஹாரி ஷரன் கூறுகிறார்.      

தங்களுடைய குரு அயோத்தியிலிருந்து சிறிது காலம் வெளியே சென்றாலே அவரது மரணம் குறித்த வதந்திகளைப் பரப்பி விட்டு சீடர்கள் கோவிலைக் கைப்பற்றிக் கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. அது மட்டுமல்ல… ‘இறந்து போன’ குருஜியின் நினைவாக விழாவெல்லாம் நடத்தி முடித்த வேளையில் மீண்டும் திரும்பி வந்த குருவை உயிருடன் இருக்கிறார் என்று நம்புவதற்கு யாருமே தயாராக இல்லாத நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.     

அயோத்தியில் சாதுக்களிடையே அதிகரித்து வரும் குற்றவியல் போக்கு குறித்து ஜன்மோர்ச்சா என்ற நாளிதழின் ஆசிரியர் ஷீத்லா சிங் கூறுகையில், ‘அயோத்தியில் உள்ள ஏராளமான தலைமைப் பூசாரிகள் தங்கள் குருவைக்  கொலை செய்தே அந்தப் பதவியைப் பெற்றுள்ளனர். பணமும் அதிகாரமும் மட்டுமே சமுதாயத்தில் மரியாதை, நன்மதிப்பிற்குத் தேவையான அடிப்படை என்று மாறியுள்ளதால் சாதுக்களும் அவ்வாறே மாறி விட்டனர். அதிகாரம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பணம் தேவைப்படுகிறது. அதுவும் மிக விரைவாகத் தேவைப்படுகிறது. இந்த சாதுக்கள் காவி உடை அணிந்திருக்கிறார்கள், தாடி வளர்த்திருக்கிறார்கள், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருக்கிறார்கள். ஆனால் அதன் மூலம் மட்டுமே அவர்களால் துறவிகளாகக் காட்சி தர முடிகிறது. உண்மையில் அவர்களின் மனம் முழுமையாகக் கறை படிந்தே இருக்கிறது’ என்று  கூறுகிறார்.   

முமுக்‌ஷ் பவனில் கொல்லப்பட்ட சுவாமி சுதர்சனாச்சார்யா

தலைமைப் பூசாரி ஆவதற்காக தங்கள் குருவுடன் சில சீடர்கள் சண்டையிடவும் செய்கின்றனர். சில இடங்களில் தலைமைப் பூசாரி, கோவில் மீதான ஏகபோகத்தை நிலைநிறுத்துவதற்கான போராட்டம் குருவின் சீடர்களுக்கிடையே நடக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதுபோன்றதொரு சம்பவம் அயோத்தி முழுவதையும் உலுக்கியது. சுவாமி சுதர்சனாச்சார்யா முமுக்‌ஷ் பவனின் தலைமைப் பூசாரியாக இருந்தார். திடீரென்று ஒரு நாள் அவர் கோவிலிலிருந்து காணாமல் போய் விட்டார். அவரைக் கண்டு பிடிப்பதற்காகத் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல்கள் அனைத்தும் வீணாகிப் போயின. குரு இல்லாத நிலையில், அவரது சீடர்களில் ஒருவரான ஜிதேந்திர பாண்டே கோவிலின் தலைமைப் பூசாரி ஆனார். அவரால் ஒரு மாதம் கூட தலைமைப் பூசாரியாக இருக்க முடியவில்லை. ஜிதேந்திராவும் ஒரு  நாள் காலை கோவிலில் இருந்து காணாமல் போய் விட்டதாகக் கண்டறியப்பட்டது. ஆனால் சுவாமி சுதர்சனாச்சார்யாவைப் போல அவர்  தனியாக மறைந்து விடவில்லை.  அந்தக் கோவிலுக்குச் சொந்தமான தங்கம், வெள்ளி, பணம் என்று அனைத்தையும் அள்ளிக் கொண்டே அவர் காணாமல்  போயிருந்தார்.  

சுதர்சனாச்சார்யா

தனது சகோதரர் காணாமல் போன செய்தியைக் கேட்டு ஹரித்துவாரில் இருந்து சுவாமி சுதர்சனாச்சார்யாவின் சகோதரர் அந்தக் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். கோவிலில் அவர் சில கட்டுமானப் பணிகளைச் செய்யத் தொடங்கினார். ஒரு நாள் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொழிலாளர்களை அவர்  வரவழைத்திருந்தார். அந்த தொட்டி திறக்கப்பட்ட போது, அவர்கள் ​​அந்த தொட்டி மண்ணால் நிரப்பப்பட்டிருந்ததைக் கண்டனர். அந்த மண்ணின் கீழ் ஏதோ இருக்கிறது என்று சந்தேகித்த அவர் உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். காவல்துறையினர் வந்து மண்ணை அகற்றிப் பார்த்த போது இரண்டு பேரின் சடலங்கள் அங்கே கண்டெடுக்கப்பட்டன. சடலங்கள் பல துண்டுகளாக வெட்டப்பட்டு அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த சடலங்களில் ஒன்றாக இரண்டு மாதங்களாகக் காணாமல் போயிருந்த சுதர்சனாச்சார்யாவின் உடல் இருந்தது. மற்றொன்று அவரது பெண் சீடருடையதாக இருந்தது.

சிறிது காலம் கழித்து காவல்துறையினர் ஜிதேந்திராவைக் கைது செய்தனர் என்று ஜிதேந்திர பாண்டேவின் குருவாக இருந்தவரும், கோவிலின் அப்போதைய  தலைமைப் பூசாரியுமான ராமச்சந்திர ஆச்சார்யா கூறுகிறார். காவல்துறை விசாரணையில் கூலிப்படைக் குண்டர்களை வைத்து தலைமைப் பூசாரியைத் தானே கொன்றதாக ஜிதேந்திரா ஒப்புக் கொண்டார். குருஜி கொலைக்குச் சாட்சியாக இருந்த சீடரையும் அவர் கொலை செய்திருந்தார். தலைமைப் பூசாரி ஆவதற்கான பொறுமை இல்லாதிருந்த ஜிதேந்திரா தன்னை தலைமைப் பூசாரி வாரிசாக்கி கொள்ள மாட்டார் என்று பயந்தார். தலைமைப் பூசாரியாக வேண்டும் என்ற பேராசையே அவருக்கு வெறியேற்றியது’ என்று கூறினார். அயோத்தியில் தலைமைப் பூசாரிகள் கொலை செய்யப்படுவது மிகவும் சாதாரணமாகி விட்டது  என்று ராமஜென்மபூமி கோவிலில் உதவி பூசாரியாக இருந்த ராமச்சந்திரா கூறுகிறார்.     

ஆனால் இவ்வாறு சாதுக்கள் குற்றங்களைச் செய்வதற்கு தலைமைப் பூசாரியாக வேண்டும் என்ற அவர்களுடைய ஆசை மட்டுமே காரணமாக இருக்கவில்லை. மற்றொருவரின் கோவிலைக் கையகப்படுத்துவது, தன்னுடைய ஆளை சாதுவாக மாற்றுவதற்கு என்று பல்வேறு வகையான குற்றச் சதித்திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற குற்றச் செயல்பாடுகளால் அயோத்தி நிரம்பி வழிகிறது. அவ்வாறான நிகழ்வே ரங் நிவாஸிலும் நடந்தது. அங்கிருந்த ஒரு குழுவினர் தனது கோவிலுக்குள் தலைமைப் பூசாரி நுழைவதையே தடுத்து நிறுத்தினர். அந்த கோவிலின் மடாதிபதியாக பல்லாண்டு காலம் இருந்து வந்த அந்த நபர்  இன்று  அயோத்தியில்  இலக்கு எதுவுமின்றி அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்.     

தலைமைப் பூசாரிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

தலைமைப் பூசாரிகளைத் தேர்ந்தெடுக்கின்ற வழிமுறை என்று எதுவுமே அயோத்தியில் உள்ள சாது சமாஜிடம் இல்லை என்று கூறி விட முடியாது. ஏற்கனவே அயோத்தியில் தலைமைப் பூசாரிகளைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஒரு பாரம்பரியம் இருந்து வருகிறது. தான் உயிருடன் இருக்கும் போதே தலைமைப் பூசாரி தன்னுடைய சீடர் ஒருவரை தலைமைப் பூசாரியாக அறிவிக்க வேண்டும் அல்லது தனக்குப் பிறகு தன்னுடைய வாரிசாக அந்த சீடரே இருப்பார் என்று அறிவிக்க வேண்டும் என்பதே சாதாரணமாக இருந்து வருகின்ற நடைமுறையாகும். அவ்வாறு அறிவிக்கப்படவில்லை என்றால், அயோத்தி சாதுக்கள் குழுவே அந்த கோவிலுக்கான அடுத்த தலைமைப் பூசாரியைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கும்.        

அயோத்தியில் பல்வேறு மடங்கள், கோவில்களில் தலைமைப் பூசாரிகள் உள்ளனர். இங்கேதான் செல்வாக்கு செலுத்துகின்ற, அணிதிரட்டுகின்ற வேலை தொடங்குகிறது. அனைத்து சாதுக்களும் சாதுக்கள் குழுவில் உள்ள தலைமைப் பூசாரிகளை தங்களுக்குச் சாதகமாக்கி தாங்களே தலைமைப் பூசாரிகளாகி விட முயல்கிறார்கள். மறுபுறத்தில் அயோத்தியில் தங்களுக்கான செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்பதால் அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் நம்பிக்கைக்குரியவர்களில் யாரையாவது அந்தக் கோவிலின் தலைமைப் பூசாரியாக மாற்றுவதற்குத் தவறான வழிகளில் முயல்கிறார்கள். இத்தகைய செயல்பாட்டில் அனைத்து வகையான தவறுகளும் பின்பற்றப்படுகின்றன.  

அயோத்தியில் வசித்து வருகின்ற ஒப்பந்தகாரர் ஒருவர் தன்னுடைய  அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் ‘எனது நண்பர் ஒருவர் அயோத்தியில் உள்ள ஒரு கோவிலில் சாதுவாக இருக்கிறார். அவருடைய குரு இறந்து போனார்.  இறப்பதற்கு முன்பாக அந்தக் குரு தனது வாரிசு என்று எந்தவொரு சீடரையும் நியமிக்கவில்லை. எனவே அந்த விஷயம் சாதுக்கள் குழுவிடம் சென்று சேர்ந்தது. அந்தக் கோவிலுக்கான தலைமைப் பூசாரியை நியமிப்பதற்கென்று நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தலைமைப் பூசாரியாக ஆவதற்கான தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து என்னுடைய நண்பர் என்னை அணுகினார். அந்த நேரத்தில் கோவிலில் பல மூத்த சாதுக்கள் இருந்தனர். தலைமைப் பூசாரியை நியமிக்க குழு அமைக்கப்பட்டு விட்டது. நான்கு பேர் கொண்ட அந்தக் குழுவின் உறுப்பினர்களில் இருவர் எனது நண்பருக்கு ஆதரவாக இருந்தனர். மற்ற இருவர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அவர்கள் இருவரில் ஒருவரின் மனதை மாற்றி விட்டால் வேலை முடிந்து விடும் என்ற சூழல் இருந்தது. அந்த திசையில் வேலை செய்யத் துவங்கினேன். அந்த நேரத்தில் புதிதாக நோக்கியா மொபைல் போன் ஒன்று வந்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் அயோத்தியில் எந்தவொரு சாதுவிடமும் மொபைல் போன் இருக்கவில்லை. நான் ஒரு மொபைல் போனை வாங்கினேன். அந்தக் குழுவில்  எனது நண்பருக்கு எதிராக இருந்த ஒருவரிடம் சென்று 'மகராஜ், இந்த மொபைலின் ஐந்து செட் மட்டுமே இந்தியாவுக்கு வந்துள்ளது. உங்களுக்காக நான் வெளிநாட்டிலிருந்து ஆறாவதாக ஒன்றைத் தருவித்திருக்கிறேன். இந்தியாவில் இந்த மொபைலை வைத்திருக்கும் ஆறாவது மனிதராக நீங்கள் இருப்பீர்கள்’ என்றேன். அந்த மகாராஜ் முதலில் என்னைக் கொஞ்சம் சந்தேகத்துடன் பார்த்தார். பின்னர் அந்தப் போனை தன்னுடைய கைகளில் எடுத்துத் திருப்பிப் பார்க்கத் தொடங்கினார். பின்னர் அதை அவர் தனது படுக்கைக்கருகே வைத்துக் கொண்டார். சிறிது நேரம் கழித்து அவரிடம் ‘நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்' என்று கேட்டேன். மொபைலைப் பார்த்துக் கொண்டே எழுந்த அந்த பாபா ‘இதைக் காட்டிலும் நல்லதாக வந்தால் கொண்டு வாருங்கள்’ என்றார். அவ்வாறு சொல்லி விட்டு தலைமைப் பூசாரியைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்திற்கு அவர் சென்று விட்டார். கூட்டத்தில் மூன்று பேர் எனது  நண்பருக்கு ஆதரவான முடிவை நிறைவேற்றினர். என்னுடைய நண்பர் அந்தக் கோவிலின் தலைமைப் பூசாரியாகி விட்டார்' என்று கூறினார்.   

மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சாதுக்கள்

1998 நவம்பர் 12.  காலை ஆறு மணி. துப்பாக்கிச் சூடு சப்தம், அதனைத் தொடர்ந்து மக்கள் எழுப்பிய கூக்குரலைக் கேட்டு பைசாபாத் நகரிலிருந்து ஐந்து கி.மீ தூரத்தில் உள்ள குப்தர் காட் அருகே வசித்து வரும் மோகன் நிஷாத் எழும்பினார். வெளியே சென்று பார்த்த அவரால் தன்னுடைய கண்களையே நம்ப முடியவில்லை. மீனவர்கள் நிறைந்த அந்த கிராமத்தில் கையில் துப்பாக்கிகளுடன் நான்கு சாதுக்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். தாங்கள் பார்த்தவற்றை எல்லாம் நேருக்கு நேராக அவர்கள் சுட்டுக் கொண்டிருந்தனர். ‘தோட் நிஷாத்தை சுட்டுக் கொன்ற சாது தரையில் விழுந்த நிஷாத்தின் கைகளை தனது வாளால் வெட்டினார்’ என்று மோகன் கூறினார். அப்போது அந்த சாதுக்களின் முன் வந்த ராம்ஜி நிஷாத், லால்ஜி நிஷாத் என்ற இரண்டு சகோதரர்களும் சுடப்பட்டனர். லால்ஜியின் கண்ணில் துப்பாக்கி குண்டு பட்டது. அவருடைய கண்ணிலிருந்து ரத்தம் வழிந்தது. ராம்ஜியின் இடது கண்ணில் புகுந்த துப்பாக்கி குண்டு வெளியேறியது. அவர் அந்தக் கண்ணில் பார்வையை இழந்தார். ராம்ஜி, லால்ஜி ஆகியோருன் அவர்களுடைய பதினைந்து வயது சகோதரியும் அந்த சாதுக்களால் சுடப்பட்டார். சம்பவ இடத்திலேயே அவர் இறந்து போனார். அதே தாக்குதலில் சுக்ரீவா நிஷாத் கையில் சுடப்பட்டார். சாதுக்கள் நிகழ்த்திய அந்தப் படுகொலையில் மொத்தம் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.         

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜிங்கூர் நிஷாத் கூறுகையில் ‘அந்த ஐந்து கொலைகாரர்களும் குப்தர் காட்டில் உள்ள யாகயாசாலா பஞ்சமுகி ஹனுமன் கோவிலைச் சார்ந்த சாதுக்கள் ஆவர். அந்தக் கோவிலின் மடாதிபதியாக மௌனிபாபா இருந்தார். அவர் அந்தச் சம்பவம் நடப்பதற்கு சற்று முன்பாக அந்த மீனவர் குடியிருப்பில் இருந்த மக்களிடம் ‘நீங்கள் குடியேறியுள்ள நிலம் கோவிலுக்குச் சொந்தமானது. அதைக் காலி செய்து விட்டு வெளியேறுங்கள்’ என்று சொல்லத் தொடங்கினர். குடியிருப்பிற்கு வருகின்ற அந்த சாதுக்கள் குடியிருப்பைக் காலி செய்யாவிட்டால் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அங்கிருந்த மக்களை அச்சுறுத்துவதற்காக துப்பாக்கி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தப்படுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.     

சாதுக்களால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களால் மக்கள் கலக்கமடைந்தனர். அவர்களில் யாருமே சாதுக்கள் அவ்வாறு செய்வார்கள் என்று கருதவில்லை. கிராமவாசிகளைக் கொன்ற பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய ​​அந்த சாதுக்கள் பைசாபாத்தில் இருந்து சுமார் பத்து கி.மீ தூரத்தை அடைந்த போது, புரளகந்தர் காவல் நிலையம் அருகே காவல்துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்தனர். காவல்துறைப் படை மீதும் அந்த சாதுக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பதிலிருந்தே அந்த சாதுக்களின் தைரியத்தை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இறுதியில் பிடிபட்ட அவர்கள் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் அந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கிய போது, அவர்கள் ஐந்து பேருக்கும் பிணை கிடைத்தது. கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்தது. சிறிது காலம் கழித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த ஐந்து சாதுக்களுக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அப்போது அந்த ஐவரும் பிணையில் இருந்தனர். தண்டனை குறித்து அறிந்து கொண்டதும், தப்பிச் சென்று விட்ட அவர்கள் அனைவரும் இன்றுவரையிலும் திரும்பி வரவில்லை. அவர்களில் யாரையும் காவல்துறையாலும் கைது செய்ய முடியவில்லை. அவர்களைப் பிடித்துத்  தருபவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் என்ற வகையில்  வெகுமதி  தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.     

இன்றைக்கும் அந்த மீனவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தல்களைப் பெற்று வருகின்றனர். ‘எங்களிடம் வெவ்வேறு நபர்கள் வந்து நல்லிணக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். வழக்கைத்  திரும்பப்  பெறுங்கள், இல்லையென்றால் அவர்கள் மீண்டும் வந்து உங்களைக் கொன்று விடுவார்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அது போக இப்போது நீங்கள் குடியேறியிருக்கும் நிலம் கோவிலின் நிலம் என்று மோகன் தாஸ் அச்சுறுத்தியதைப் போலவே மோகன் தாஸுக்குப் பதிலாக யக்னவாக்யா கோவிலின் புதிய தலைமைப் பூசாரியாகி இருக்கும் சந்த மகாராஜ் ‘இங்கிருந்து வெளியேறி விடுங்கள். இல்லையெனில் அதன் விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருங்கள்’ என்று அச்சுறுத்துகிறார்' என்று மோகன் கூறினார்.      

மொபைல் மூலம் தலைமைப் பூசாரி ஆனது ஒன்றும் விதிவிலக்கானது அல்ல. பணத்தைச் செலவழித்து எந்தவொரு துறவியாலும் இங்குள்ள எந்தவொரு கோவில் அல்லது மடத்திற்குத் தலைமைப் பூசாரியாகி விட முடியும் என்றே உள்ளூர்த் துறவிகளும் மக்களும் கூறுகிறார்கள். தலைமைப் பூசாரியான கிஷோர் ஷரன் சாஸ்திரி கூறுகையில் ‘அயோத்தியில் பெரிய அளவிலான சாதுக் கும்பல் இது போன்ற வேலைகளைச் செய்து வருகிறது. பணம், உடல் பலத்தின் மூலம் அவர்களால் தலைமைப் பூசாரிகளை உருவாக்க முடிகிறது. அதிகத் தொகைக்கு யார் ஏலம் கேட்பவர்களுக்கே தலைமைப் பூசாரி பதவி கிடைக்கிறது' என்றார்.    

அயோத்தியில் நடைபெறும் குற்றங்களுக்கு பல்வேறு ஆசிரமங்களுக்கிடையில் இருந்து வருகின்ற போட்டியும் முக்கியமான காரணமாகி இருக்கிறது. ‘உங்கள் கடவுள், உங்கள் இடத்தைக் காட்டிலும் என்னுடைய கடவுள், எனது இடமே மிகச் சரியானதாக, செல்வாக்கு மிக்கதாக இருக்கிறது என்ற மனநிலையுடனே பலரும் தங்கள் மடங்களையும், கோவில்களையும் நடத்தி வருகின்றனர். கோவில்-மடத்தை பாண்டாக்கள் மூலம் தீர்மானிக்கும் நடைமுறை முழு வீச்சில் இருந்து வருகிறது. அயோத்தியில் ஏராளமான பாண்டாக்கள் பல்வேறு கோவில்களுடன் தொடர்பில் உள்ளனர். இந்த பாண்டாக்கள் கமிஷன் தொகையைப் பெற்றுக் கொண்டு வேலை செய்து தருகின்றனர். ரகுவர் ஷரன் ‘கோவில்கள் முடிந்தவரையிலும் அதிக எண்ணிக்கையிலான மக்களை தங்களிடம் அழைத்து வருவதற்கான ஒப்பந்தங்களை பாண்டாக்களுக்கு வழங்கியுள்ளன. தலைமைப் பூசாரிகளுக்கிடையேயும் போட்டி உள்ளது. பக்தர் ஒருவரைக் கோவிலுக்குள் அழைத்து வருவதற்கு ஒரு தலைமைப்  பூசாரி பாண்டாக்களுக்கு முப்பது ரூபாய் கொடுத்தார் என்றால், மற்றொருவர் முப்பத்தைந்து ரூபாய் கொடுப்பதாகக் கூறுகிறார். இவ்வாறு சந்தைக்கடையாக கோவில்கள் மாறுகின்ற போது​​, அங்கே ஆன்மீகமும், மதமும் எந்த நிலையிலே இருக்கும் என்பதை உங்களால் மிக எளிதில் புரிந்து கொள்ள முடியும்' என்று சாது ரகுவர் ஷரன் சுட்டிக் காட்டுகிறார்.

காவி உடையில் குற்றவாளிகள்

அயோத்தியில் நடக்கும் குற்றங்களுக்கு காவி உடைக்குள் ஒளிந்திருக்கும் குற்றவாளிகளும் மற்றுமொரு முக்கிய காரணமாக இருக்கின்றனர். ஹனுமன்காரியைச் சேர்ந்த தலைமைப் பூசாரி ஞான் தாஸ் கூறுகையில் ' முனிவர்கள், சாதுக்களின் பெயரில் குற்றவாளிகளே அயோத்தியில் குடியேறியுள்ளனர். துறவிகளாக நடித்து  மக்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள். சாதுக்கள் என்ற போர்வையில் இருக்கின்ற அந்தக் குற்றவாளிகள் இன்று இல்லையென்றாலும் என்றாவது ஒருநாள் தங்களுடைய குணத்தை நிச்சயம் வெளிக்காட்டுவார்கள்’ என்கிறார்.  

ஞான் தாஸ்

சாது வேடமிட்டு அயோத்திக்குள் தஞ்சம் புகுவது நீண்ட நெடிய வரலாறுடன் இருக்கிறது. அந்த வரலாறு பீகாரில் உள்ள பெகுசராயின் மோசமான தாதாவான காம்தேவ் சிங்கிடமிருந்தே தொடங்குகிறது. தனது பகுதியில் இருந்த இடதுசாரிகள் அனைவரையும் கொன்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. துறவியாக வேடம் தரித்திருந்த காம்தேவ் நீண்டகாலம் அயோத்தியில் தஞ்சம் புகுந்திருந்தார். பீகாரில் குற்றம் இழைத்திருந்த அவர் அயோத்திக்கு வந்து துறவியாக மாறியிருந்தார். காவல்துறையுடன் 1983ஆம் ஆண்டு நடந்த மோதலில் அவர் இறந்தார்.   

கொலை செய்து விட்டு துறவி வேடத்தை அணிந்து அயோத்தியில் ஒளிந்து கொள்ளலாம் என்ற காம்தேவின் அந்த யோசனை குற்றவாளிகள் அனைவரும் விரும்பும் வகையில் இருந்தது. ‘காம்தேவிடமிருந்து தொடங்கிய அந்தப் பாரம்பரியம் மிகவிரைவாகப் பரவியது. அயோத்தியைத் தாங்கள்  தஞ்சமடையும் இடமாகக் குற்றவாளிகள் தேர்வு செய்து கொள்ளத் தொடங்கினர். காவல்துறை ஒருபோதும் மடத்திற்குள் வந்து சோதனைகளை நடத்தாது என்பதையும், கடந்தகால வாழ்க்கையைப் பற்றி கேள்வியெழுப்புவது துறவிகளை அவமதிக்கும் செயல் என்று கருதப்படுவதால் அவ்வாறு யாரும் செய்ய முனைய மாட்டார்கள்  என்பதையும் அந்தக் குற்றவாளிகள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். தங்கள் பெயரையும் முகவரியையும், கடந்த காலத்தையும் வெளிப்படுத்தாமலேயே அவ்வாறான குற்றவாளிகளால் கோவிலுக்குள் நீண்ட காலம் தங்கிக் கொள்ள முடிந்தது’ என்று காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிறார். தங்கள் இருண்மையான செயல்களுக்கு காவி நிறத்தைப் பயன்படுத்திக் மொண்ட குற்றவாளிகள் ‘தேவையற்ற, சாயமிடப்பட்ட துறவியின் துணி’ என்று கபீர் கூறியதை நியாயப்படுத்திக் காட்டினர்.  

காவல்துறையுடன் நடந்த மோதலில் இறந்த காம்தேவ்

மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் லால் வர்மா கூறுகையில் ‘இன்று நாட்டின் எந்தப் பகுதியில் குற்றங்களைச் செய்தாலும், தங்களைத் துறவிகளாக மறைத்துக் கொள்கின்ற குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தரும் வகையிலேயே  அயோத்தியில் உள்ள பெரும்பாலான கோவில்கள் இருக்கின்றன. அவ்வாறு தங்களை மறைத்துக் கொள்பவர்கள் தங்கள் அரசியல் எஜமானர்களின் உதவியுடன் பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகளுக்குள் தலைமைப் பூசாரிகளாக மாறி விடுகின்றனர் அல்லது தங்கள் மீது பதிவு  செய்யப்பட்ட  வழக்குகளின் சூடு தணிந்து போன பிறகு மீண்டும்  தங்கள் சொந்த இடத்திற்கே திரும்பிச்  சென்று விடுகின்றனர்’ என்கிறார்.  

காம்தேவின் மரணத்திற்குப் பிறகு அவரது கும்பலில் இருந்த பலரும் துறவி வேடம் தரித்து அயோத்திக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களில் ராம் கிருபால் தாஸ் என்பவர் வெடிகுண்டுகள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர். அயோத்திக்கு வந்த ராம் கிருபால் தாஸ் அங்கே தனது குற்ற ராஜாங்கத்தை நிறுவினார். அவர் ஹனுமன்காரியில் உள்ள பசாந்தியா பகுதியைச் சார்ந்த  தலைமைப் பூசாரி லக்ஷ்மன் தாஸின் சீடராக மாறினார். துறவியான ராம சுபக்தாஸ் ‘அவர் ஒரு குற்ற வணிகர்’ என்று அவரைப் பற்றி கூறுகிறார். ராம்கிருபால் குற்றங்களை அயோத்தியில் நிறுவியது மட்டுமல்லாது, வெற்றிகரமான வணிகமாகவும் அதை மாற்றிக் காட்டினார். அவரைப் பார்த்து பலரும் குற்றச் செயல்களின்பால் ஈர்க்கப்பட்டனர். ராம்கிருபால் அயோத்தியில் நிலம், கோவில்களைக் கைப்பற்றுதல், துறவிகள் மற்றும் சாதுக்களை மிரட்டிப் பணம் பறிப்பது, கொலை செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டார். கோவிலுக்கு வரும் போது அவரைக் கண்டு துறவிகளும், சாதுக்களும் எழுந்து நிற்பதைப் பார்த்து அவர் மீது பயம் அதிகமாக ஏற்பட்டது என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். ராம்கிருபால் 1996ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.         

குற்றவாளிகளுக்கு அயோத்தி சாதுக்கள் அடைக்கலம் கொடுத்து வருகின்றனர் என்று கடந்த சில ஆண்டுகளாகவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. பைசாபாத் மாவட்டத்தில் நீண்ட காலம் பணியில் இருந்த மூத்த காவல்துறை அதிகாரி ‘இரண்டு லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த மிகவும் மோசமான குற்றவாளியான ஸ்ரீபிரகாஷ் சுக்லா வெகுநாட்களுக்கு முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான பீரேந்திர பிரதாப் ஷாஹியை இங்குள்ள மடாலயத்தில் கொலை செய்தார்’ என்று கூறுகிறார். இங்கே அவர் தஞ்சம் புகுந்தது அந்த ஒருமுறை மட்டும் நடந்த நிகழ்வல்ல. அதற்குப் பின்னர் லக்னோவில் காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொன்று விட்டு மீண்டும் அவர் இங்கே வந்து ஒளிந்து கொண்டார். அயோத்தி அவருக்கு மிகவும் பாதுகாப்பான புகலிடமாக இருந்தது. பெரிய தலைமைப் பூசாரி ஒருவரின் ஆலோசனையின் பேரிலேயே சுக்லா 1996ஆம் ஆண்டு ராம் கிருபால் தாஸைக் கொன்றார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ரன்வீர் சேனாவின் நிறுவனரான பிரம்மேஷ்வர் முகியா பீகாரில் இருந்த தலைமைப் பூசாரி ஒருவரின் ஆசிரமத்திற்கு சென்று அங்கே பல மாதங்கள் தங்கியிருந்தைப் பற்றி உள்ளூர் மக்கள் ஏராளமாகச் சொல்கிறார்கள்.        

குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தரும் சாதுக்கள்

தலைமைப் பூசாரி கவுரி ஷங்கர் தாஸ் ‘அயோத்தியில் உள்ள சாதுக்கள் குற்றவாளிகளுடன் நேரடியாக இணைந்து வேலை செய்வதில்லை.  அவர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவு அளிப்பதன் மூலமே ஆதாயம் அடைகிறார்கள்’ என்று கூறுகிறார். அதிக எண்ணிக்கையிலான குற்றவாளிகளுக்கு தஞ்சமளிப்பது யார் என்ற போட்டி சாதுக்களிடையே நிலவுகிறது என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். அதிக எண்ணிக்கையில் குற்றவாளிகளுக்குத் தஞ்சம் அளித்திருப்பவரால் - கூடுதல் குற்றவாளிகளை வைத்திருப்பவர் என்ற முறையில் - அயோத்தியில் உள்ள பிற சாதுக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது. 

‘அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றவாளிகளின்  உதவியுடன் தங்களுடைய வேலைகளைச் செய்து முடிப்பதைப் போலவே அயோத்தியில் உள்ள சாதுக்களும் குற்றவாளிகளிடமிருந்து இப்போது உதவிகளைப் பெறத் தொடங்கியுள்ளனர்’  என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார். 'அயோத்தியின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. பெரும்பாலான குற்றவாளிகள் இங்கு துறவி வேடத்தில் சுற்றித் திரிகின்றனர். அயோத்தியைச்  சேர்ந்த சாதுக்கள் பலரும் பல்வேறு குற்றச் செயல்களிலும், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்’ என்று அயோத்தியில் உள்ள சாகேத் கல்லூரியின் ஹிந்தி துறை இணைப்பேராசிரியரும், சமூக சேவகருமான அனில் சிங் கூறுகிறார்.

அனிலின் கருத்தையொட்டிப் பேசிய தலைமைப் பூசாரி பிமலா பிஹாரி ஷரன் ‘இன்றைக்கு அயோத்தி சாதுக்களுக்குச் சொந்தமானதாக இல்லை, அது காவியுடை தரித்த குண்டர்களுக்கானதாக மாறிப் போயிருக்கிறது’ என்கிறார்.  பெயரைக் குறிப்பிட விரும்பாத புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் அயோத்தியில் வாழும் சாதுக்களில் சுமார் தொன்னூறு சதவீதம் பேர்  போலியானவர்கள் என்கிறார். பெரும்பாலானோர் குற்றவாளிகள். அவர்களுடைய  பின்னணி என்னவென்று எவருக்கும் தெரியாது. ராம ஜென்மபூமி  கோவிலின் தலைமைப் பூசாரியான ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் ‘முன்பெல்லாம் இங்கே ஒருவர் துறவியாவதற்காக வரும்போது, ​​அவர் சீடராவதற்குத் தகுதியானவர்தானா என்பது சோதித்து அறியப்பட்டது. பயிற்சி பெற்றுக் கொள்ளும் அவருக்கு பாடம் கற்பிக்கப்பட்டது. சீடராகும் தகுதி அவருக்கு இருக்கிறது என்று முடிவு செய்யப்பட்ட பிறகே அவர் சீடராக்கப்பட்டார். இப்போதெல்லாம் இன்றைக்கு இங்கே வருகின்ற ஒருவர் எப்படிப்பட்டவர் என்பது இங்கே யாருக்குமே தெரியாத  போதிலும்  அவரால் அடுத்த நாளே துறவியாகி விட முடிகிறது' என்கிறார்.     

வட்டிக்குப் பணம் தரும் சாதுக்கள்

சாதுக்களின் உலகில் பரவியுள்ள குற்றங்களின் மற்றொரு அம்சமாக வட்டிக்குப் பணம் வழங்குகின்ற செயல் உள்ளது. வட்டிக்கு பணம் கொடுக்கின்ற இந்தத் தொழில் மிக நீண்ட காலமாகவே அயோத்தியில் நடந்து வருகிறது. ஹனுமன்காரியின் சாதுக்களும், மகான்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 'கோடிக்கணக்கான சொத்து மதிப்புடைய மடங்கள், கோவில்களுக்கென்று எந்தவொரு செலவும் இல்லை என்பதால், வட்டிக்குப் பணத்தைக் கடனாகத் தருகின்ற வழக்கத்தை சாதுக்கள் தொடங்கியுள்ளனர். கோவில்களுக்கென்று நன்கொடை வருவது அதிகரித்த அதே விகிதத்தில் குற்றங்களும் அதிகரித்துள்ளன’ என்று கூறும் ரஞ்சித் வர்மா ‘இங்கே இருக்கின்ற சாதுக்களிடம் செருப்புகள் கூட இல்லாத காலம் என்ற காலமொன்று இருந்தது. ஆனால் அதே சாதுக்களிடம் இன்றைக்கு இரண்டு முதல் நான்கு கோடி ரூபாய் அளவிற்கு ரொக்கப் பணம் இருக்கிறது. வட்டிக்குப் பணம் கொடுக்கின்ற இந்த நடைமுறையே படிப்படியாக குற்றச் செயல்களுக்கான முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. பணத்தைத் திருப்பிச் செலுத்தத் தவறியவர்களின் வீட்டிற்கு நள்ளிரவில் வருகின்ற நாகா துறவிகள், அவர்களை அடித்து உதைத்து வீட்டில் உள்ள உடைமைகளை எடுத்துச் செல்கின்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன. பணத்தைத் திருப்பித் தர முடியாத பலர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்’ என்று கூறுகிறார். சாதுக்கள் இழைத்த கொடுமைகள், கடன் வாங்கியவர்கள் கொலை செய்யப்பட்டது போன்ற காரணங்களால் அரசு நிர்வாகம் கடன் கொடுத்து வந்த பாபாக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த உரிமம் மீது சற்று கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.    

குற்றங்கள் சாதுக்களின் உலகில் இடம் பிடித்ததற்குப் பிறகு முடிவில் அரசியலும் அங்கே வந்து சேர்ந்தது. சமீபத்தில் ஹனுமன்காரியில் துப்பாக்கிச் சூடு நடத்திய இரு பிரிவுகளில் ஒரு பிரிவின் தலைவரான பவநாத் தாஸ் உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் சாதுக்கள் கிளையின் தேசியத் தலைவராகவும், தலைமைப் பூசாரியான ஹரிஷங்கர் தாஸ் பெஹல்வன் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஆதரவாளராகவும் இருக்கின்றனர். பெரும்பாலான சாதுக்களும், தலைமைப் பூசாரிகளும் இவ்வாறு வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களாக அயோத்தியின் பிரிந்து நிற்கின்றனர்.    

அயோத்தியில் இதுபோன்ற குற்றச் செயல்கள் நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே நடந்து வந்திருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் அதன் வேகம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகே அதிகரித்துள்ளது. எண்பது வயதான துறவி ஹரிநாராயண் தாஸ் கூறுகையில் ‘பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு இங்கே பணமும் அதைத் தொடர்ந்து குற்றவாளிகளும் வந்து குவிந்தனர். அதற்கு முன்பாக யாரும் அயோத்தி மீது குறி வைத்திருக்கவில்லை. ஆனால் பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு இந்த இடம் கழுகுகளின் பார்வைக்குள்ளாகி விட்டது. அந்தக் கழுகுகள் பாபா வேடமிட்டே அயோத்திக்கு வந்து சேர்ந்தன' என்கிறார்.     

குற்றங்களின் பின்னணியில் விஸ்வ ஹிந்து பரிஷத்

அயோத்தியில் குற்றங்கள் பெருகியதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி)  அமைப்பே காரணம் என்று சொல்லக் கூடிய சாதுக்கள் ஏராளமானோர்  அயோத்தியில் உள்ளனர். அவர்களில் ஒருவரான அகாரா பரிஷத்தின் தலைமைப் பூசாரியான ஞான்தாஸ் ‘அயோத்தியில் உள்ள சாதுக்களைப் பிசாசுகளாக மாற்றியதில் விஎச்பிக்கு முக்கிய பங்கு இருக்கிறது’ என்கிறார்.

அயோத்தியில் உள்ள சாது சமூகத்தை தங்கள் பிடிக்குள் கொண்டு வருவதற்கு விஎச்பி ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டது என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அடுத்து தலைமைக்கு யார் வருவது மற்றும் சொத்து குறித்த தகராறுகள் பல்வேறு கோவில்களில் ஏற்பட்ட போது ​​தங்களிடம் வந்தவர்களுக்கு ஆதரவை விஎச்பி வழங்கியதால் ஏராளமான சாதுக்களும், தலைமைப் பூசாரிகளும் விஎச்பி முகாமிற்குச் சென்றனர். அதிகாரம், பணம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்ட விஎச்பி தன்னைச் சார்ந்து இருந்தவர்களை, அல்லது தன்னுடைய முகாமிற்கு வந்தவர்களை கோவில்களில் தலைமைப் பூசாரிகளாக்கிக் காட்டியது. விவரம் அறிந்தவர்கள் அயோத்தியில் குற்றச் செயல்கள் அதிகரித்ததற்கு ராமர் கோவில் இயக்கமே காரணம் என்றும் கூறுகின்றனர். ‘கோவில் இயக்கத்தின் தாக்கம் ஒட்டுமொத்த தேசத்தின் மீது எந்த அளவிற்கு இருந்தது என்பது பற்றி அதிகம் பேசப்பட்டிருந்தாலும், அயோத்தியில் உள்ள சாதுக்கள் மீது அந்த இயக்கம் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து எதுவுமே பேசப்படவில்லை' என்று ரஞ்சித் வர்மா வருத்தப்படுகிறார்.    

காணாமல் போன குருவும்,  துணை நின்ற சீடரும்

பிரிஜ் மோகன் தாஸ் அயோத்தியில் இருக்கின்ற ராம்கோட்டில் உள்ள சௌபூர்ஜி கோவிலின் தலைமைப் பூசாரி. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ராமசரே தாஸ் என்பவர் அந்தக் கோவிலின் தலைமைப் பூசாரியாக இருந்து வந்தார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பீகாருக்குச் சென்ற அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. உண்மையில் பீகாருக்கு அவர் மகிழ்ச்சியுடன் செல்லவில்லை. தன்னுடைய சீடர் பிரிஜ்மோகன் தன்னைக் கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டியிருந்த ராமசரே தாஸ் ‘கோவிலின் சொத்துகள், தலைமைப் பூசாரி தொடர்பான ஆவணங்களில் பிரிஜ்மோகன் மோசடி செய்திருக்கிறார்’ என்று குற்றம் சாட்டினார். சௌபூர்ஜி கோயிலின் தலைமைப் பூசாரி பதவியை விட்டு தான் விலகியதாகவும், தனக்குப் பிறகு பிரிஜ்மோகன் தலைமைப் பூசாரியாக இருப்பார் என்று ராமசரே தாஸ் தெரிவித்தார் என்று கூறப்பட்டதாக அயோத்தியில் உள்ள துறவி ராம்ஜானகி தாஸ் கூறுகிறார்.       

பிரச்சனைகள் எதுவுமின்றி ஓராண்டு காலம் அமைதியாகக் கழிந்தது. அதன்பிறகு கோவிலும், தலைமைப் பூசாரி பதவியும் தனது குருவான ராமசரேவிடம் இல்லை என்பதால் அவர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று பிரிஜ்மோகன் சொல்ல ஆரம்பித்தார். ‘ராமசரேஜியால் அதை முதலில் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அதைப் புரிந்து கொண்ட நேரத்தில் தன்னுடைய கட்டுப்பாட்டை அவர் முற்றிலுமாக இழந்து விட்டார். தன்னால் வேறு எங்கும் செல்ல முடியாது என்று கூறிய அவர் சில நாட்களுக்குப் பிறகு பயங்கரமான தாக்குதலுக்கு உள்ளானார்’ என்று தலைமைப் பூசாரி சுதாகர் தாஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறினார். இது 2011இல் நடந்த விஷயம்.   

இரண்டாவது முறையாக தாக்கப்பட்ட பிறகே ராமசரே தாஸ் பீகாருக்குச் சென்றார். உள்ளூர் பத்திரிகையாளர் சுனில் யாதவ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ‘நடுவில் ஒருமுறை ராமசரேஜி இங்கே வந்திருந்தார். ஆனால் பிரிஜ்மோகன் அவரைக் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. விஷயம் காவல்துறையிடம் சென்றது. ஆனால் பணம், விஎச்பி உதவியுடன் பிரிஜ்மோகன் அவரை முற்றிலுமாக ஒதுக்கி வைத்தார்’ என்று கூறுகிறார்.      

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்த பிரிஜ்மோகன் ‘குரு இந்தக் கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் நில மாஃபியா கும்பலுடன் இணைந்து விற்பதற்குத் தயாராக இருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே தன்னைக் கொல்ல முயல்வதாக அவர் என் மீது குற்றம் சாட்டுகிறார்’ என்று கூறினார். இருப்பினும் தன்னுடைய குரு இன்னும் உயிருடன் இருக்கின்ற போது எவ்வாறு உங்களால் தலைமைப் பூசாரியாக முடிந்தது என்ற கேள்விக்கு பிரிஜ்மோகனால் பதிலளிக்க முடியவில்லை. அவர் தன்னுடைய தலைமைப் பூசாரிக்கு அடிபணிந்து நடந்திருப்பார் என்றால் அவரால் தலைமைப் பூசாரியாக முடிந்திருக்காது.    

ஆயுதங்களும், குற்றங்களும்

கொலை மற்றும் குற்றங்களில் ஈடுபடும்போது புனிதர்களும், மகான்களும் ஆயுதங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் இயல்பானது. ‘அயோத்தி பாபாக்களில் சிலர் ஆயுதங்கள், துப்பாக்கி ஏந்தியவர்களைத் தங்களுடன் வைத்திருக்கின்றனர்’ என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார். ஆயுதங்கள் மீதான காதலால் பெரும்பாலான பாபாக்களும், அவர்களது சீடர்களும் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். இங்கே சட்டரீதியாக முறையான ஆயுதங்களைக் காட்டிலும் சட்டவிரோத ஆயுதங்களே பலமடங்கிற்கும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ‘காவல்துறையினர் மடங்களுக்குள் சென்று தேடுதலை நடத்துவதில்லை என்பதால், மடங்கள் மிகப் பாதுகாப்பான ஆயுதத் தளங்களாக இருக்கின்றன. மடங்கள், கோவில்களுக்குள்ளே அரசு தேடுதல் வேட்டைகளை நடத்தினால் அங்கிருந்து கிடைக்கின்ற ஆயுதங்கள், பொருட்களால் ஏராளமான லாரிகள் நிரம்பி விடும். ஆனால் பாபாக்களின் கோவில்கள், மடங்களைச் சோதனை செய்வதற்கான தைரியம் இங்கே யாருக்கும் இல்லை. பாபாக்கள் பலரும் சட்டவிரோத ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பீகாரின் முங்கரிடமிருந்து ஆயுதங்கள் சாதுக்களிடம் விற்கப்படுகிறது. சாதுக்களால் அனைத்து வகையான ஆயுதங்களையும் எளிதில் பெற்றுக் கொள்ள முடிகிறது. ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட சுதாமா தாஸ், பஜ்ரங் தாஸ், லக்ஷ்மண் தாஸ் என்ற மூன்று சாதுக்கள் அமெரிக்க ரிவால்வர்கள் உள்ளிட்ட பல அதிநவீன சட்டவிரோத ஆயுதங்களுடன் உள்ளூர் காவல்துறையினரால் சற்று நேரத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் ஹனுமான்பாக் நகரைச் சேர்ந்த பூசாரி ஜகதீஷ் தாஸ் என்பவர் போலி முகவரியைக் கொடுத்து ஆயுத உரிமம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் சிறைக்கு அனுப்பப்பட்டார்’ என்று உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.        

இப்போது சாதுக்களிடையே தங்களுடன் துப்பாக்கி ஏந்தி வருபவர்களை வைத்துக் கொள்வதில் போட்டி உருவாகியுள்ளது. ‘ஒருகாலத்தில் தங்களை விமானம் மூலமாகத் தில்லிக்கு பிரதமர் வரவழைப்பது குறித்து இங்கே இருந்த பாபாக்களிடையே போட்டி நிலவியது. ஆனால் இன்றைக்கு அவர்களுக்கிடையிலே தங்களுடன் துப்பாக்கி ஏந்தியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது குறித்தே போட்டி நிலவுகிறது’ என்று கிருஷ்ண பிரதாப் கூறுகிறார். ஹனுமன்காரியின் உஜ்ஜீனியா பகுதி பூசாரியான ராம்தாஸ் ‘எல்லாம் நாடகம். சாலையில் திரியும் நாய்கூட கண்டு கொள்ளாத ஒருவர் தன்னுடன் துப்பாக்கி ஏந்தியவர் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். துப்பாக்கி ஏந்தியவர்களின் துணை அயோத்தியில் யாருக்கும் தேவைப்படுவதில்லை. துறவிகளை யார் மிரட்டப் போகிறார்கள்? அதுபோன்ற துணை இப்போது யாருக்காவது தேவைப்படுகிறது என்றால், நம்மால் என்ன செய்ய முடியும்?’ என்கிறார்.         

தற்காப்புக்காகச் சுடுவது தவறாகுமா?

பாபாக்களில் சிலர் ஆயுதங்களைக் கையாளுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். துறவிகள் என்ற அடையாளத்தைக் காட்டிலும் அவர்களிடம் பயங்கரமான குற்றவாளிகள் என்ற அடையாளமே தெளிவாகத் தெரிகிறது.

ஜென்ம ஜெய ஷரன்

சில காலங்களுக்கு முன்பு படா பிளேஸில் உள்ள ஜானகி காட் பகுதியைச் சேர்ந்த ராசிக் பீதாதிஸ்வர் பூசாரியான ஜென்ம ஜெய ஷரன் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிவித்திருந்த அவர் அமைச்சகம் விரைவில் தன்னுடைய பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய ஒருவரை ஒதுக்கித் தந்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார். பைசாபாத் காங்கிரஸ் எம்.பி.யான நிர்மல் காத்ரி அவரது கோரிக்கையை ஆதரித்து உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதினார். எழுபத்தைந்து வயதான தனது ஆசிரியர் மைதிலி ராமன் ஷரனை இரக்கம் எதுவுமின்றி ஜென்ம ஜெய ஷரன் கொடூரமாகக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜென்ம ஜெய ஷரன் யோகி ஆதித்யநாத்துடன்

உரிமம் பெற்ற ஆயுதங்களுக்கு உரிமையாளராக உள்ள ஜென்ம ஜெய ஷரன் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, மோசடி உள்ளிட்ட பல கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அயோத்தியில் வசிக்கும் பரமானந்த் மிஸ்ராவின் வீட்டை 2004 பிப்ரவரி 19 அன்று ஜென்ம ஜெய ஷரன் தாக்கியதாக வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது. அந்த நிலம் தனது குருவிற்குச் சொந்தமானது என்று ஜென்ம ஜெய சொல்கிறார். ‘அந்த நிலம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தாலும் அதை நான் காலி செய்ய வேண்டியதாயிற்று’ என்று கூறும் பரமானந்த் பிப்ரவரி 19 அன்று தனது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் பற்றிக்கூறிய போது ‘நான் வெளியே சென்றிருந்தேன். வீட்டில் மனைவியும் இரண்டு குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். மதியம் பன்னிரண்டு மணியளவில் பத்துக்கும் மேற்பட்டவர்களுடன் வந்த ஜென்ம ஜெய ஷரன் எனது வீட்டைத் தாக்கினார். அவர்கள் என்னுடைய மனைவியை அடித்தனர். வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்து வெளியே எறிந்தனர். வீட்டின் வாசல் கதவை உடைத்து என்னுடைய நான்கு வயது குழந்தையைக் கிணற்றில் தூக்கி வீசினர்’ என்று விவரித்தார். இருப்பினும் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்த ஜென்ம ஜெய ஷரன் ‘இங்கே பாருங்கள். நிலைமை மிக முக்கியமானது. தேவைப்படுகின்ற போது யாரும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஒருவர் தன்னுடைய தற்காப்புக்காகச் சுடுவது எப்படித் தவறாகும்?' என்று கேட்டார்.  

மது விற்பனையில் சாதுக்கள்

அயோத்தியில் மது தடை செய்யப்பட்டுள்ள போதிலும் அந்தத் தடை காகிதத்தில் மட்டுமே இருக்கிறது. இங்கே மது கிடைக்கவில்லை என்பதை சாமானியர்கள் அல்லது சாமியார்கள் என்று யாருமே உணரவில்லை. பூசாரி பிரேம் நாராயண் தாஸ் கூறுகையில் சரயு நதிக்கரையில் 'சாது சமூகத்தினர் மது அருந்துவதைப் பார்த்து அயோத்தி மக்கள் யாரும் ஆச்சரியப்படுவதில்லை. மதுபான வியாபாரத்தில் அயோத்தியில் உள்ள சாதுக்கள் சமூகம் எந்த அளவிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது உள்ளூர் மக்களுக்கு நன்கு தெரியும். அயோத்தியில் ஆல்கஹால் மற்றும் பிற போதைமருந்துப் பொருட்களின் நுகர்வும், ராம்நகரில் அவற்றின் வருகையும் வேகமாக அதிகரித்துள்ளது’ என்கிறார். காவியுடை அணிந்தவர்கள் மதுவை வாங்கி விற்பனை செய்து வருகிறார்கள். ‘அயோத்தியில் ஒருவர் மதுபானம் விற்பனை செய்வதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் சென்று அவரைப் பிடித்த போது கோவில் ஒன்றின் துறவியாக அவர் இருப்பதைக் கண்டோம்' என்று பைசாபாத் எஸ்எஸ்பியாக இருந்த, தற்போது பரேலியில் டிஐஜியாக இருக்கும் ஆர்கேஎஸ் ரத்தோர் தனது அனுபவத்தை விவரித்தார்.    

திருமணமான துறவிகள்

உலகின் கண்களுக்கு முன்னால் அயோத்தியில் உள்ள ஏராளமான பாபாக்கள் திருமணமாகாதவர்களாகத் தோன்றிய போதிலும், உண்மையில் அவர்கள் திருமணமாகி, குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்களாகவே இருக்கின்றனர். ‘தங்கள் கோவணத்தை உறுதியாக நம்பும் பாபாக்கள் இங்கே மிகக் குறைவு. திருமணமான பாபாக்களே அதிகம் உள்ளனர். தங்கள் தோழிகளுடன் இருக்கின்ற இளைஞர்களைப் போன்ற பாலசாமியார்கள் பலரும் இங்கே இருக்கின்றனர். ஆசிரமத்திற்குள் தங்களுடைய உடல் தேவைக்காக அனைத்து வகையான மக்களையும் தேடுகின்ற அவர்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை’ என்று பெயர் குறிப்பிட விரும்பாத துறவி ஒருவர் கூறுகிறார். ‘கடந்த சில ஆண்டுகளில் அயோத்தியில் பாபாக்களிடம் பணம் அதிகரித்திருக்கும் அதே விகிதத்தில் விபச்சாரமும் மிக வேகமாக அதிகரித்துள்ளது’ என்று கிஷோர் கூறுகிறார். ‘திருமணமான துறவிகளை வெளியே அனுப்புவது என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டால், அயோத்தியிலிருந்து தொன்னூறு சதவீத பாபாக்கள் வெளியேற்றப்பட்டு விடுவார்கள்’ என்று கூறுகின்ற ரஞ்சித் வர்மா ‘பெரிய இடத்து துறவியான ரகுவர் பிரசாத்திற்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். ஆனாலும் அவர் துறவிகள் திருமணமாகாமல் இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியே அதிகம் பேசி வந்தார்‘ என்கிறார். கொலை உட்பட பல கடுமையான வழக்குகளைச் சந்தித்து வந்த ஹனுமன்காரியைச் சேர்ந்த ராம்ஷரன் தாஸ் காவல்துறை என்கவுண்டரில் கொல்லப்பட்டார். 1991ஆம் ஆண்டில் பைசாபாத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தனது காதலியைப் பார்க்கச் சென்ற போதே அவர் காவல்துறையினரால் கொல்லப்பட்டார்.     

இந்த சாதுக்களை அல்லது அவர்களுடைய குழந்தைகளைத் திருமணம் செய்து கொள்வது முக்கியம் என்று கருதப்படுகிறது. எனவே தங்கள் குருக்களைக் கொல்வதற்கு ல்லது அடக்கி வைப்பதற்கான சதிகளை சீடர்கள் மேற்கொள்கிறார்கள். ‘முன்பெல்லாம் சாதுக்கள் திருமணமாகாமலேதான் வாழ்ந்து வந்தார்கள். அவருக்குப் பின்னர் அவரது சீடரே சாதுவானார். ஆனால் அந்த நிலைமை இப்போது மாறிவிட்டது. எல்லா சாதுக்களும், பூசாரிகளும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு குழந்தைகளும் உள்ளனர். அவர் இறந்த பிறகு, அவரது குழந்தையே அவருடைய சீடராகி விடுகிறது. அதன் காரணமாக தங்கள் குருக்களின் மீது சீடர்கள் கோபமடைகிறார்கள். கடந்த காலங்களில் இதுபோன்று பல பூசாரிகளுக்கு எதிராக அவர்களுடைய சீடர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டிருந்தனர்’  என்று சாது ஹரிபிரசாத் கூறுகிறார்.   

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்

சில சாதுக்களுக்கு எதிராக சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டுகள் இருப்பதுவும் இங்கே புதிதல்ல. 2008 டிசம்பரில் ரிக்‌ஷா இழுப்பவர் ஒருவரின் எட்டு வயது மகனைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக சீதா பவன் கோவிலைச் சேர்ந்த பூசாரி கங்காராம் ஷரனை காவல்துறையினர் கைது செய்தனர். தனது குழந்தையை ஆசிர்வதிக்கும் சாக்கில் பல மாதங்களாக தன்னுடைய அறையில் வைத்து அந்த பூசாரி பாலியல் பலாத்காரங்களை மேற்கொண்டார் என்று அந்த ரிக்‌ஷா இழுப்பவர்  குற்றம் சுமத்தியிருந்தார். 

குரு-சீடர்களிடையே பதற்றத்தை உருவாக்குகின்ற மற்றொரு போக்கும் மூத்த சாதுக்களிடையே காணப்படுகிறது. பூசாரி தன்னுடைய பரம்பரையை தனது குடும்ப உறுப்பினர்களிடமே ஒப்படைக்கிறார். அனைத்து பூசாரிகளும் தங்கள் வாரிசுகளாக தங்களுடைய மருமகன்களையோ அல்லது பிற உறவினர்களையோ நியமித்துள்ளனர். பல சாதுக்களும் அதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான காரணம் இருப்பதாகக் கூறுகிறார்கள். கோவிலுக்காக சாதுக்களின் கொலைகள் நடக்கத் தொடங்கிய போது, ​​கோவிலின் கட்டுப்பாடு தங்களுடைய குடும்பத்திடம் இருந்தால், குறைந்தபட்சம் அவர்கள் தங்களைக் கொல்ல மாட்டார்கள் என்று சாதுக்கள் நினைப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.     

கோவில் சொத்துகள்

அயோத்தியில் கோவில்கள், மடங்கள் தொடர்பான சொத்துக்களைக் கைப்பற்றி விற்பனை செய்வதில் பெரிய கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது. பெரும்பாலும் சாதுக்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களே அந்தக் கும்பலை நடத்தி வருகிறார்கள். ‘தனது எஜமானிடமிருந்து பறித்த கோவிலை கொஞ்ச நாளிலேயே ஷங்கர் தாஸ் விற்று விட்டார்’ என்று பிமலா ஷரன் கூறுகிறார். அயோத்தியில் ஷங்கர் போன்ற அடிமைகள் ஏராளமானோர் இருப்பதாக தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

அயோத்தியில் நில மாஃபியாவும் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் பரவியுள்ள ஆயிரக்கணக்கான கோவில்கள், மடங்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலம், சொத்துக்கள் மீது இவர்களைப் போன்றவர்களின் கண்கள் இருக்கின்றன. அயோத்தியில் உள்ள பெரும்பாலான கோவில்களின் சொத்துகள் எந்தவொரு தனிநபரின் பெயரிலும் இருப்பதில்லை. அந்தந்தக் கோவில்களில் உறைந்திருக்கும் கடவுள்களின் பெயரிலேயே அந்த சொத்துகள் அனைத்தும் இருக்கின்றன. அந்தவொரு காரணத்தாலேயே அந்தக் கோவிலின் பூசாரியாக மாறும் ஒருவர் இயல்பாகவே அந்தக் கோவிலுக்குச் சொந்தமான நிலம், சொத்தின் உரிமையாளராகி விடுகிறார். ‘கோவில்களை விற்கும், வாங்கும் பணி அயோத்தியில் மிகவும் மோசமாக நடந்தேறி வருகிறது’  என்று கிருஷ்ண பிரதாப் கூறுகிறார்.    

வழக்கறிஞர் ரஞ்சித் வர்மா பைசாபாத் நீதிமன்றத்தில் உள்ள சிவில் வழக்குகளில் சுமார் தொன்னூறு சதவீதமானவை அயோத்தியுடன் தொடர்புடையவை என்றும், அதில் தொன்னூற்றி ஒன்பது சதவீதம் பாபாக்களுடன் தொடர்புடையவை என்றும் கூறுகிறார். பூசாரிகள், கோவில் சொத்துகளுடன்  தொடர்புடையாகவே பெரும்பாலான வழக்குகள் உள்ளன. கிட்டத்தட்ட அங்கே இருக்கின்ற அனைத்து மடாலயங்களும், சாதுக்களும் ஏதேனுமொரு சட்ட மோதலில் சிக்கியிருக்கின்றன.   

சாதி சாதுக்கள்

சாதுக்களுக்கிடையில் நடந்து வருகின்ற இந்தப் போரில் சாதியும் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. சாதுக்கள் பெரும்பாலும் பூமிஹார், தாக்கூர், பிராமண, யாதவ சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். ஒரு சாதியிலிருந்து வரும் பாபா மற்றொரு சாதியைச் சேர்ந்த பாபாவை இழிவுபடுத்துவதற்குத் தயங்குவதே கிடையாது. அயோத்திக்குள் சாதி அத்துமீறி நுழைந்திருப்பதற்கான ஆதாரங்களை உங்களால் எளிதில் காண முடியும். அயோத்தியில் நௌ கோவில், தச்சர் கோவில், விஸ்வகர்மா கோவில், சாது ரவிதாஸ் கோவில், ஹல்வாய் கோவில், தோபி கோவில், சித்ரகுப்தா கோவில் என்று அனைத்து சாதிகளுக்குமான கோவில்கள் உள்ளன. தெஹெல்காவுடனான உரையாடலில், தன்னைக் கொலை செய்ய மற்றொரு துறவி சதி செய்தார் என்று குற்றம் சாட்டிய பாபா ஒருவர் ‘நீங்கள் பீகாரைச் சார்ந்த பூமிஹார் என்றால், நாங்கள் உத்தரப்பிரதேசத்து பாபா என்று அவரிடம் கூறுவோம். உங்களை ஒன்றுமில்லாமல் செய்து விடுவதற்கு எங்களுக்கு இரண்டு நிமிடங்கள்தான் ஆகும். நீங்கள் ஒன்றுமில்லாமல் தொலைந்து போய் விடுவீர்கள்’ என்று அந்த துறவியிடம் கூறியதாகச் சொல்கிறார்.         

அயோத்தி நிர்வாகமும், காவல்துறையும்

அயோத்தியில் காவல்துறை, நிர்வாகம் ஆகியவற்றின் பங்கும் மிகுந்த  சுவாரஸ்யம் கொண்டதாகவே உள்ளது. தங்களுடைய நேரம் முழுக்க ​​பாபாக்கள் ஏற்படுத்தியிருக்கும் குழப்பங்களைச் சுத்தம் செய்வதிலேயே வீணாகி விடுகிறது என்று இங்கே பணியில் அமர்த்தப்படுகின்ற நிர்வாக அதிகாரிகளில் ஒரு பகுதியினர் நினைக்கின்றனர். அந்த அழுக்கைச் சுத்தம் செய்யச் சென்றால், அரசியல் அழுத்தம் உட்பட அனைத்து வகையான அழுத்தங்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பாவம் அந்த அதிகாரிகள்தான் என்ன செய்வார்கள்? பைசாபாத்தில் பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் காவல்துறை அதிகாரியிடம் தெஹெல்கா கேள்வி எழுப்பிய போது ‘ஒன்றுமில்லை, ***ஐ விட்டு விடுங்கள். வெட்டிக் கொன்று விட்டால் அமைதியாகி விடுவார்கள்’ என்று கூறினார்.

மறுபுறத்தில் நடக்கின்ற குற்றங்களைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க வாய்ப்புகளைத் தேடுகின்ற அதிகாரிகள் சிலரும் அயோத்தியில் உள்ளனர். அதுபோன்ற அதிகாரிகள் பாபாக்களின் காலித்தனத்திற்கு விலக்கு அளிப்பதற்காக அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். ‘அவர்களிடம் ஏராளமாகப் பணம் இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் அவர்களுடைய குற்றங்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கான கட்டணத்தை காவல்துறையினர் கோருகின்றனர்’ என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார். அத்தகைய அதிகாரி ஒருவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘ஐயா இங்கே கோடிகளில் சம்பாதித்திருக்கிறார். குற்றவாளிகளிடமிருந்து வசூலிப்பதைப் போலவே அவர் சாதுக்களிடமிருந்து வசூல் செய்திருக்கிறார். இங்கிருந்து மிகவும் கனத்த இதயத்துடனே ஐயா புறப்பட்டுச் சென்றார்’ என்று அவர் கூறினார்.         

முமுக்ஷு பவனின் பூசாரியான ராமாச்சார்யா தாஸ் கூறுகையில் ‘கோவிலுக்கென்று பூசாரி ஒருவரைத் தயார் செய்வதில் தகராறு ஏற்பட்டபோது, எனக்கு ஆதரவாக இருப்பதற்கு ​​காவல்துறை என்னிடம் பணம் கேட்டது. எனது அனுபவம் அதற்கான விதிவிலக்காக இருக்கவில்லை. பணம் கொடுக்கின்ற நபரின் கைகளுக்குள் நிர்வாகம் இருப்பதே இங்கு இருந்து வருகின்ற  நிலைமையாகும்' என்றார்.    

ஒருபுறம் சாதுக்கள் மற்றும் பூசாரிகளின் வடிவத்தில் அதிகரித்து வரும் குற்றவாளிகள் இருந்து வருகின்ற நிலையில் மறுபுறம் அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுப்பதற்கான எந்தவொரு முயற்சியும் அயோத்தி நிர்வாகம் அல்லது சாதுக்களின் சமூகத்திடமிருந்து காணப்படவில்லை. தாடி வைத்திருக்கும் பாபாக்கள் அனைவருமே குற்றம் சுமத்தக் கூடியவர்களாக இருப்பதன் காரணமாக ஒட்டுமொத்த சாது சமுதாயமும் கேவலப்பட்டு நிற்கிறது.     

சாதுக்களின் உலகில் இந்த கொடூரமான குற்றத்தின் வருகையால் ஏற்பட்டுள்ள  விளைவுகள் மிக ஆபத்தானவையாகவே உள்ளன. ராமஜென்மபூமி-பாபர் மசூதி சர்ச்சைக்குப் பின்னர் அயோத்தி மிகவும் முக்கியமான இடமாக மாறியுள்ளது. அந்த இடத்தின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கொரு முறை  நிலைக்குழு கூடுகிறது. அந்தக் குழுவில் உள்ள ஒன்றிய, மாநில அரசின் பெரிய அதிகாரிகள் ராமஜென்மபூமி வளாகத்தின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் குழுவின் பல கூட்டங்களில் ஈடுபட்டிருந்த மூத்த அதிகாரி ஒருவர் '2005இல் ராமஜென்மபூமி அருகே நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அயோத்தியில் வாழ்கின்ற சாதுக்கள் அனைவரின் பணிகளையும் அடையாளம் கண்டு விரைவாகச் சரிபார்க்க வேண்டும்; அவர் யார், அவர் எங்கிருந்து வந்தவர், அவரது பின்னணி என்ன போன்ற விவரங்களைச் சேகரிக்கத் தொடங்க வேண்டும் என்று நான் அந்தக் குழுவிடம் பரிந்துரைத்தேன். பயங்கரவாதிகள் துறவிகளாக மாறுவேடத்தில் வாழ ஆரம்பித்தால், உங்களால் என்ன செய்ய முடியும் என்று அவர்களிடம் கேள்வியெழுப்பினேன். ஆனாலும் அந்த திசையில் இதுவரையிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று கூறுகிறார். ‘2005ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 2001ஆம் ஆண்டில் அயோத்தியில் உள்ள கல்லு என்ற குக்கிராமத்தில் மக்களுக்கு கடன் கொடுத்து வந்த லஷ்கர் தீவிரவாதியான இம்ரான் கொல்லப்பட்டபோது இந்த அலட்சியம் தெரிய வந்தது’ என்று அந்த அதிகாரி கூறுகிறார்.    

‘அதிக அளவிலே பணம் இருப்பதால் சகோதரத்துவத்தை விட்டு விலகி வந்து பாபாவாக மாற நினைக்கின்ற குற்றவாளிகள் பற்றி தன்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பேசுகின்ற ராஜு ஸ்ரீவஸ்தவா அவர்கள் அச்சுறுத்தலாக இல்லை என்றாலும் இறுதியில் அவர்கள் குற்றவாளிகளாகவே ஆகி விடுகிறார்கள் என்கிறார். அயோத்தியில் உள்ள பெரும்பாலான பாபாக்களிடம் அதுபோன்ற நிலைமைதான் நீடிக்கிறது. உண்மையான சாதுக்கள் இங்கே மிகமிகக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். அவர்களுடைய பின்னணியைச் சரிபார்ப்பது குறித்து நாங்கள் தீவிரமாகச் சிந்தித்து வருகிறோம்’ என்று பைசாபாத்தின் எஸ்எஸ்பி கே.பி.சிங் கூறுகிறார். ஒவ்வொரு துறவியும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஹனுமன்காரியைச் சேர்ந்த பூசாரி ஞான்தாஸ் அறிவுறுத்துகிறார். ‘இங்கே சாதுக்களைக் காட்டிலும் குற்றவாளிகள் பலமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஏழைத் துறவிகளால் அவர்களை எவ்வாறு விரட்டியடிக்க முடியும்? அவர்களிடம் பணம், அதிகாரம் ஏராளமாக இருக்கிறது. அவர்கள் அரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பில் இருக்கின்றனர். யாராலாவது அவர்களுடன் போட்டி போட முடியுமா?’ என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார். அவர்களில் யாருமே எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையுடன் இருக்கவில்லை.

இருப்பினும் ஒருநாள் நிலைமை நிச்சயமாக சீராகும். குற்றங்கள் குறையும். குற்றவாளிகள் ஒழிக்கப்படுவார்கள். ராமராஜ்ஜியம் ராமரின் சொந்த இடத்திற்கு ஒருநாள் நிச்சயம் வந்து சேரும் என்ற நம்பிக்கையுடன் அயோத்தியில் இன்னும் மக்கள் இருப்பது உண்மைதான்!        

இப்போது நாங்கள் சரயு நதிக் கரையில் இருக்கிறோம். அங்கே அமர்ந்திருந்த சாது ஒருவருடன் சாதுக்களிடையே அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து நாங்கள் பேச முயன்றோம். அங்கிருந்து எழுந்த அவர் ‘தங்களை மாறுவேடத்தில் நல்லவர்களாக மறைத்துக் கொண்டிருக்கும் குண்டர்களைப் பார்த்து இந்த உலகம் கம்பீரத்துடன் வணங்குகிறது. ஆனால் ஒரு நாள் அவர்களின் உண்மை நிலை நிச்சயம் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்...’ என்று சொல்லி முடித்தார்.   

தெஹல்கா ஹிந்தி இதழில் 2013 டிசம்பர் 6 அன்று வெளியான கட்டுரை

http://tehelkahindi.com/the-guns-godmen-of-ayodhya/?singlepage=1

 


Comments

Anonymous said…
It runs like a horrid novel. The UP government should take stringent steps to check this menace. What will happen to people who visit the newly built Ramar temple. Ayodhya is a very very unsafe place. Every thing happens in the name of Rama.