நமது நினைவிலிருந்து அகன்று போன அயோத்தி பூசாரி விடுத்துச் சென்றிருக்கும் அமைதிக்கான செய்தி இன்றைக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது
வலே சிங்
தி வயர் இணைய இதழ்
பாபா லால்தாஸின் இருபத்தியாறாவது நினைவு நாளில் (1993 நவம்பர் 16) அவரைப் பற்றிய நினைவுகள் அயோத்தியிலிருந்து கிட்டத்தட்ட முழுமையாக
அழிக்கப்பட்டு விட்டன. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்), விஸ்வ ஹிந்து
பரிஷத் (விஎச்பி) போன்ற அமைப்புகளைக் கடுமையாக எதிர்த்து வந்த லால்தாஸ்
அயோத்தியிலிருந்து இருபது கி.மீ தொலைவில் உள்ள ராணிபூர் சத்தார் என்ற கிராமத்தில்
1993 நவம்பர் 16 அன்று நள்ளிரவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையிலிருந்த
மர்மம் காவல்துறையினரால் தீர்க்கப்படவே இல்லை. நிலப்பிரச்சனை தொடர்பாகவே அவர் கொலை
செய்யப்பட்டார் என்று கூறி அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
உயிருடன் இருந்தபோது உண்மையில் வேறொரு நிலத் தகராறுடன் தொடர்புடையவராகவே லால்தாஸ் இருந்தார்.
பாபர் மசூதியின் மத்திய குவிமாடத்தின் கீழ் அமைந்திருந்த சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி
கோயிலின் தலைமைப் பூசாரியாக அவர் 1981ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்று அறியப்பட்ட லால்தாஸ்
விஎச்பியின் ராம ஜென்ம பூமி பிரச்சாரத்தை - அந்தப் பிரச்சாரத்தின் துவக்க
காலமான 1984ஆம் ஆண்டிலிருந்தே - தொடர்ந்து எதிர்த்து வந்தவர்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கான 419 இடங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களை 1991 ஜூன் மாதம் தேர்தலில் வென்றெடுத்த பாரதிய ஜனதா கட்சி கல்யாண் சிங்கை மாநிலத்தின் முதலமைச்சராக்கியது. ‘பெரிய அளவிலே ராமர் கோவிலைக் கட்டுகின்ற தங்கள் திட்டத்திற்கு ஒரு சில தடைகள் இருந்து வருவதை விஎச்பி அடையாளம் கண்டது. அவர்களைப் பொறுத்த வரை சர்ச்சைக்குரிய இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கோவிலின் தலைமைப் பூசாரி என்ற முறையில் பாபர் மசூதிக்கு அடுத்து இரண்டாவது மிகப் பெரும் தடையாக லால்தாஸ் இருந்தார்’ என்கிறார் பைசாபாத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் சுமன் குப்தா.
கல்யாண் சிங் அரசாங்கம் 1992 மார்ச் மாதம் - 1992ஆம் ஆண்டு
டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக -
கோவிலின் தலைமைப் பூசாரி பதவியில் இருந்து லால்தாஸை நீக்கியது. லால்தாஸுக்குப் பிறகு
ராம ஜென்ம பூமி கோயிலின் தலைமைப் பூசாரியாக வந்த பூசாரி சத்யேந்திர தாஸிடம் தொலைபேசியில்
பேசிய போது ‘அவருக்கு எதிராக
ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்ததாலேயே லால்தாஸ் நீக்கப்பட்டார். தொடர்ந்து சர்ச்சைக்குரிய
மனிதராகவே இருந்து வந்த அவர் அயோத்திக்குப் பொருத்தமற்றவராக மாறிப் போனார். எனவேதான்
அவர் தலைமைப் பூசாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நீண்ட காலத்திற்கு முன்பாக இறந்து
போனவரைப் பற்றி இப்போது ஏன் கேட்கிறீர்கள்?’ என்று கேள்வியெழுப்பினார். பதவியில்
இருந்து தன்னை நீக்கியதற்கு எதிராக லால்தாஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் இன்னும் நிலுவையில்
உள்ளது.
அவாத்துடன் ஒத்திசைவு கொண்ட பன்முக கங்கா - யமுனா கலாச்சார மரபுகளுக்குள் மூழ்கியிருந்த லால்தாஸ் ‘ராமர் கோயில் இயக்கம் ஹிந்து வாக்குகளைப் பெறுவதற்கான சர்ச்சை மற்றும் உணர்வுகளைத் தூண்டி விட்ட அரசியலைத் தவிர வேறொன்றாக இருக்கவில்லை’ என்றார். அயோத்தியின் பெரும்பாலான கோவில்கள் அவாத்தின் முஸ்லீம் ஆட்சியாளர்களின் உதவியுடனே கட்டப்பட்டதையும், ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் 1855ஆம் ஆண்டு நடைபெற்ற மோதலுக்குப் பின்னர் ஹிந்து பூசாரிகளும், முஸ்லீம் பிர்களும் ஒன்றிணைந்து அன்புடன் வாழத் தீர்மானித்தது போன்ற சம்பவங்களையும் லால்தாஸ் அடிக்கடி நினைவுகூர்ந்து வந்தார்.
‘மதச்சார்பற்ற துறவி’ என்று இப்போது அடையாளம் காணப்படுகின்ற
ஹனுமன்காரி கோவில் பூசாரியான ஞான்தாஸ் போன்ற மூத்தவர்கள் உள்ளிட்டு அயோத்தியில் உள்ள
ஒரு சிலர் மட்டுமே லால்தாஸையும், ஹிந்து-முஸ்லீம் நல்லிணக்கத்தைக்
காப்பாற்றுவதற்கான அவரது அரிய முயற்சிகளையும் நினைவில் கொண்டிருக்கின்றனர். ‘அவர்
ஹனுமன்காரியைச் சேர்ந்தவர். மிக நல்ல மனிதர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு எதிரிகளால்
அவர் கொல்லப்பட்டார்’ என்று குறிப்பிட்ட ஞான்தாஸ் வேறெதுவும் லால்தாஸைப் பற்றி பேசுவதற்கு
மறுத்து விட்டார்.
சர்ச்சைக்குரிய இடத்தை (2.77 ஏக்கர்) ராம் லல்லா விராஜ்மானுக்குத்
திட்டவட்டமாக வழங்கியிருக்கும் உச்சநீதிமன்றத்தின் இப்போதைய தீர்ப்பின்
பின்னணியில் பார்க்கும் போது, லால்தாஸின் தோல்வியுற்ற போர் அயோத்தியின் சிக்கலான
வரலாற்றில் ஒரு மிகச் சிறிய அடிக்குறிப்பாக மட்டும் இருப்பதாகவே தோன்றுகிறது.
‘மந்திர் வாஹின் பனாயங்கே’ (அந்த இடத்திலேயே கோவிலைக் கட்டுவோம்) என்று பல
ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வந்த மேலாதிக்க முழக்கத்திற்கு எதிராக மாறுபட்டு நிற்பதற்கான
தைரியம் அயோத்தியில் எந்தவொரு பூசாரியிடமும் இருந்ததே கிடையாது. இன்றைக்கும் அந்தக்
கோவில் நகரத்தில் அதிக செல்வாக்கைப் பெற்றிருக்கும் ஞான்தாஸைப் போன்றவர்கள் கூட - போர் முழக்கமாக எழுப்பப்பட்ட கூக்குரலுக்கு
உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதன் விளைவாக - அயோத்தியின் 'கலாச்சார
எல்லைக்குள்' புதிய மசூதியை அனுமதிக்க விரும்பாத விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்புகளின்
சிந்தனைகளில் இருந்து விலகி நிற்பதற்குத் துணிவார்கள் என்பதற்கு எந்தவொரு சாத்தியமும்
இருப்பதாகத் தெரியவில்லை.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் ஆயிரக்கணக்கான
காவல்துறையினர், மத்திய துணை ராணுவப் படையினர் ஆகியோரின் உதவியுடன் அமைதி நிலைநாட்டப்பட்டது.
உள்ளூர் நிர்வாகம் வகுப்புவாத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் எந்தவொரு
முயற்சியையும் முளையிலேயே கிள்ளி எறிவதை உறுதி செய்திருந்தது.
குழந்தைகள், இளைஞர்களுடன் இணைந்து செயல்படுகின்ற அவாத்
மக்கள் மன்றத்தின் அமைப்பாளரான அஃபாகுல்லா ‘கோவிலையும் நிலத்தையும் ஒருசேரப் பெற்றுள்ள
ஹிந்துக்களுக்கு அவர்கள் வருத்தம் கொள்வதற்கான பிரச்சனை எதுவும் இருக்கவில்லை. அந்த
தீர்ப்பு அவர்களைப் பொறுத்தவரை போதுமானதாகவே இருக்கிறது. பெரும்பான்மைச் சமூகம் இனிமேல்
என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்தே இந்த தீர்ப்பு நல்லதா அல்லது கெட்டதா என்பது
அமையும்’ என்கிறார். இந்த வழக்கில் தொடர்புடைய முஸ்லீம் சமூகத் தலைவர்களான ஹாஜி
மெஹபூப், இக்பால் அன்சாரி ஆகிய இருவரும் ‘தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்க
மாட்டோம்’ என்று அறிவித்துள்ளனர்.
முல்லாக்களையும், மௌல்விகளையும் காவி அணிந்த சாதுக்கள்
கட்டியணைத்துக் கொள்வது போன்று மேலோட்டமாகத் தோன்றினாலும் தொடர்ந்து முஸ்லீம்-விரோத
பேச்சுக்கள், மறைமுகமான அவதூறுகள் அயோத்தியின் அடிவயிற்றில் கனன்று கொண்டேதான் இருக்கின்றன.
தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் அஷர்பி பவன் அருகே சிறிய கோவிலையும்,
உணவகத்தையும் நடத்தி வருகின்ற இரண்டு ஹிந்து சகோதரிகள் தங்களுடைய அண்டை வீட்டில் இருந்த
எட்டு வயதான மன்மோகன் பாண்டே என்ற சிறுவனைத் திட்டிக் கொண்டிருந்ததைக் கேட்க
முடிந்தது. தான் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்த அந்தச் சிறுவன் ‘இது என்ன
பெரிய விஷயம். என்னுடைய வீட்டிலேயே ஒரு ராமர் கோவில் இருக்கிறது’ என்று இப்போது வழங்கப்பட்டிருக்கும்
தீர்ப்பின் மீது உருவாகியிருக்கின்ற மிகைப்படுத்தலைக் கேள்வி கேட்கின்ற வகையில் கூறத்
துணிந்ததுதான் அவன் செய்த மிகப் பெரிய தவறாக இருந்தது. தங்களுடைய முப்பது வயதுகளில்
இருக்கும் அந்தச் சகோதரிகள் அந்தச் சிறுவனிடம் ‘நீ ஒரு முஸ்லீமா அல்லது ஹிந்துவா?’
என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
அந்தக் கோவில் நகரத்தில் உள்ள மக்கள் பிரச்சனை முடிவதற்காகக்
காத்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். இந்த தீர்ப்பு இதுவரை கிடைத்ததைக்
காட்டிலும் தீர்விற்கு மிக அருகே அவர்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
முழுமையானதாக இல்லாத இந்த தீர்ப்பு ஒரு சாராருக்கு அநியாயமானதாக இருக்கிறது
என்றாலும், இருதரப்பினருமே இது ஒரு நடைமுறைத் தீர்வு என்பதையும், மக்களின்
நன்மைக்காக இந்த சர்ச்சையை முடிவிற்கு கொண்டு வருவதற்கான ஒவ்வொரு முயற்சியும்
எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள். கோவிலை அனுமதித்துள்ள நீதிமன்றம்
மசூதிக்கான மாற்று இடத்தை ஊருக்குள்ளேயே தர வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இந்த
இரண்டு பணிகளையும் ஒரே நேரத்தில் தொடங்குவது நியாயமான, விவேகமான செயலாக இருக்கும்.
லால்தாஸின் குறுகிய வாழ்க்கையை கிட்டத்தட்ட அயோத்தி இன்றைக்கு
மறந்தே விட்டது. ஆனாலும் வகுப்புவாத ஒற்றுமை, நல்லிணக்கம் குறித்து அவர் விடுத்துச்
சென்றிருக்கும் செய்தி அயோத்திக்கும், இந்த நாட்டிற்கும் முன்னெப்போதைக்
காட்டிலும் இப்போது மிக முக்கியமான தேவையாகவே இருக்கிறது.
தில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளரான வலே
சிங் -’அயோத்தி: நம்பிக்கை மற்றும் முரண்பாடுகளுக்கான நகரம்’ என்ற புத்தகத்தை
எழுதியவர். அயோத்தி கோவில் தலைமைப் பூசாரி லால்தாஸின் இருபத்தியாறாவது நினைவு நாளையொட்டி
2019ஆம் ஆண்டு அவர் எழுதிய கட்டுரை.
Comments