ராமச்சந்திர ஆச்சார்யாவுடன் நேர்காணல்
மது கீஷ்வர்
மனுஷி இதழ்
பாபா லால்தாஸுடன் 1993 ஜூலை மாதம் தில்லிக்குச்
சென்றிருந்த ராமச்சந்திர ஆச்சார்யாவிடம் இந்த நேர்காணலை மது கீஷ்வர் பதிவு செய்தார்.
விபீஷண் குண்ட் என்றழக்கப்படுகின்ற அயோத்தியின்
ஒரு பகுதியில் அமைந்துள்ள முமுக்ஷ் பவன் என்ற கோவிலின் பூசாரியாக இருக்கின்ற நான்
1988ஆம் ஆண்டில் பூசாரியானேன். இப்போது ஐந்து ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.
ஒருவர்
இங்கே எவ்வாறு கோவிலின் பூசாரியாகிறார்?
தலைமைப் பூசாரியிடம் உள்ள சீடர்களில் மூத்த சீடரே
- திறமை இருந்தால் தலைமைப் பூசாரியின் மரணத்திற்குப் பிறகு பூசாரியாக மாறுகிறார்.
பூசாரியான
போது உங்களுடைய வயது என்ன?
பூசாரியான போது என்னுடைய வயது இருபத்தி நான்கு.
இதற்கு
முன்பு இங்கே உங்களைப் போன்று இவ்வளவு இளம் வயதில் யாராவது பூசாரியாகி இருக்கிறார்களா?
என்னைக் காட்டிலும் இளைய பூசாரி என்று அயோத்தியில்
யாருமில்லை.
உங்களைப்
பொறுத்தவரை அது எவ்வாறு நடந்தது?
எங்கள் குருஜி பீகாரைச் சேர்ந்தவர்களால் கொலை
செய்யப்பட்டார். குருஜியும் பீகாரில் இருந்து வந்தவர்தான். குருஜியைக் கொலை செய்தவர்
அவருக்குப் பிறகு பூசாரியாக ஆகியிருக்க வேண்டிய சீடர். அவர் கோவிலை அந்தக் கொலைக்குப்
பிறகு இரண்டு மாதங்கள் மட்டுமே நிர்வகித்தார்.
அவர் ஏன் அந்தக் கொலையைச் செய்தார்? அவரது பெயர் என்ன?
அவரது பெயர் ஜிதேந்திர பாண்டே. பீகாரில் உள்ள
கோபால்கஞ்சிலிருந்து வந்தவர். பூசாரியாவதற்காக காத்திருக்கும் பொறுமையின்றியே அவர்
அந்தக் கொலையைச் செய்தார். தலைமை பூசாரி எப்போது இறப்பார், அவரது இடத்தை எப்போது நாம் பெறலாம் என்றே அவர் எப்போதும் யோசித்துக் கொண்டிருந்தார்.
அந்தக்
கொலையை அவர் எப்படிச் செய்தார்?
அதுகுறித்து நான் கேள்விப்பட மட்டுமே செய்திருக்கிறேன்.
நான் குற்றத்தை நேரில் கண்டவனில்லை. உள்ளூர் குண்டர்கள் சிலருக்குப் பணம் கொடுத்து
அவர் அந்தக் கொலையை கோவிலுக்குள்ளேயே செய்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்த பிறகு அவர்கள்
குருஜியின் உடலை கோவிலில் இருந்த கழிவுநீர்த் தொட்டிக்குள் போட்டு விட்டனர். ஒன்றரை
மாதங்களுக்குப் பிறகுதான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதுபோன்ற
செயல்கள் வழக்கமாக நடந்து வருகின்றனவா?
பூசாரிகள் கொலை செய்யப்படுவது அயோத்தியில் மிகச்
சாதாரண நிகழ்வாகவே இருக்கிறது.
கொலை
செய்யும் நடைமுறை எப்போது துவங்கியது?
பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அது நடந்து வருகிறது.
மிகவும் மோசமான குணமுடையவர்கள் அயோத்திக்கு வந்து தாடியை வளர்த்துக் கொண்டு, பூசாரிகளாகச்
சேவை செய்யத் தொடங்கி விடுகிறார்கள். ஆண்டுகள் பல கடந்த பிறகும் அவர்களுடைய இயல்பு
சற்றும் மாறுவதே இல்லை. அவர்கள் அடிப்படையிலேயே குற்றம் இழைக்கும் மனப்பான்மை கொண்டிருக்கின்றனர்.
கோவில்களில் யாருடைய முன்வரலாறு குறித்தும் சிறப்பு
சோதனைகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. எனவே அவர்களால் மிக எளிதாகத் தப்பித்துக் கொள்ள
முடிகிறது. அவ்வாறு இங்கே வருபவர்கள் தலைமைப் பூசாரியிடம் சென்று தாங்கள் இந்த இடத்திலிருந்து
வருவதாகவும், அவருடைய சீடராக மாற விரும்புவதாகவும் சொல்வார்கள். தங்கள் குடும்ப வாழ்க்கையில்
ஏமாற்றமடைந்த சிலர் கோவிலில் வசிக்க விரும்புவதாகக் கூறுவார்கள். மிக எளிமையாக இருக்கின்ற
வயதான பூசாரிகள் தங்களுடைய மனதில் தீய எண்ணங்களைக் கொண்டிருப்பதில்லை. எனவே இவ்வாறு
தங்களிடம் வருபவர்களை சீடர்களாக அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அவ்வாறு பூசாரியிடம்
வருபவர்கள் சீடர்களான பிறகு தங்களுடைய பூசாரிகளுக்கு அனைவரையும் கவரும் அளவிற்கான அர்ப்பணிப்பு,
விசுவாசத்துடன் சேவை செய்து வருவார்கள். அவ்வாறு இருக்கும் ஒருவர் கொலையே செய்தால்கூட
மக்கள் அவரைச் சந்தேகிக்க மாட்டார்கள். பதினைந்து ஆண்டுகளாக இதுபோன்றுதான் இங்கே நடந்து
கொண்டிருக்கிறது.
அது
ஏன் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது? (இந்த கேள்வி மற்றொரு சக பூசாரியிடம்
கேட்கப்பட்டது) நீங்கள் ஏதோ சொல்ல வந்தீர்கள்…
முன்பெல்லாம் தியாக உள்ளம் கொண்டவர்கள், உலக வாழ்க்கையைக்
கைவிட்டவர்கள் மட்டுமே சாதுக்கள் ஆனார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்து வந்தார்கள்.
அதன் காரணமாகவே சில கோவில்களில் அவர்கள் பூசாரிகளாக்கப்பட்டனர். தற்போது அரசியலிலும்,
சமூக வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. கோவில்களும்,
மடங்களுமே தங்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடங்கள் என்று குற்றவாளிகள் நினைக்கின்றனர்.
தாடியை வளர்த்துக் கொள்வதால் அவர்களுக்கு பாதுகாப்பு மட்டுமல்லாது தங்குமிடமும் கிடைத்து
விடுகிறது. அது தவிர கோவில்களுக்கென்று இருக்கின்ற அசையும் சொத்துகள், அசையாச் சொத்துகள்
என்று ஏராளமான செல்வங்களை எந்தவொரு முயற்சியும்
இல்லாமல் அவர்களால் பெற்றுக் கொள்ள முடிகிறது. இதனால்தான் தலைமைப் பூசாரியின் கழுத்தை
நெரித்துக் கொன்று விட்டு தாங்களே தலைமைப் பூசாரியாகி விடலாம் என்ற எண்ணம் அவர்களிடம்
உருவாகிறது.
கோவிலுக்குள்
இருந்தவர்கள் யாரும் அவர் பூசாரியானதை எதிர்க்கவில்லையா?
சமூகத்தில் எதிர்ப்பு ஏராளமாக இருந்தது. மக்கள்
தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதுபோன்ற நிலைமையிலிருந்து ஏராளமான ஆதாயத்தை
நிர்வாகமும், காவல்துறையினரும் பெற்றுக் கொள்வதே இப்போதிருக்கின்ற சூழலாகும். பூசாரிகளாகப்
பொறுப்பேற்றிருப்பவர்களே கொலைகாரர்கள் என்பதை நன்கு அறிந்திருந்த போதிலும் காவல்துறையினர்
அது குறித்து கண்டு கொள்வதே இல்லை. தலைமைப் பூசாரியைக் கொன்று விட்டு பூசாரியாக மாறுகிறவரிடமிருந்து
எவ்வளவு பணத்தை நம்மால் கறக்க முடியும் என்றே காவல்துறையினர் சிந்திக்கின்றனர். அவர்களுடைய
ஒட்டுமொத்தக் கவனமும் கொலைகாரர்களிடமிருந்து பணத்தைக் கறப்பதை நோக்கியே இருக்கிறது.
தங்களுடைய திறமை, சம்பந்தப்பட்ட கோவிலின் செல்வாக்கு போன்றவற்றின் அடிப்படையில் பத்தாயிரம்
முதல் நான்கு லட்சம் ரூபாய் வரை காவல்துறையினர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.
அதற்குப் பின்னர் இந்த குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகள் பலமற்று இருக்குமாறு அவர்கள்
பார்த்துக் கொள்கிறார்கள். வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது அல்லது ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டு விடுகிறது.
பூசாரி
கொலை செய்யப்பட்ட பிறகு உங்கள் கோவிலில் என்ன நடந்தது?
பூசாரியைக் காணவில்லை, அவரைப் பற்றி எந்த தகவலும்
இல்லை என்றே முதலில் நாங்கள் புகார் அளித்தோம்.
கழிவுத்
தொட்டியில் உடலைப் போட்டு வைக்கும் அளவிற்கு அவர் ஏன் முட்டாள்தனத்துடன் இருந்தார்?
கோவிலிலிருந்து சிறிது தொலைவு தள்ளி அதை தூக்கி எறிந்திருக்க முடியுமே?
அவர் அடிமுட்டாள். அவருக்கு சிறிதும் அறிவே கிடையாது.
கொலை செய்வதற்கு உள்ளூர் மக்களைப் பயன்படுத்திக் கொண்ட அவர் கொலைக்குப் பிறகு கோவிலின்
கட்டுப்பாட்டை தன்வசம் எடுத்துக் கொண்டார். குருஜியைச் சந்திக்க வரும் மக்கள் அவரிடம்
விசாரிக்கும் போது - சில சமயங்களில் குருஜி நேபாளத்திற்குச் சென்றிருப்பதாகவும், சில
நேரங்களில் பீகார் அல்லது ஹரித்துவாருக்குச் சென்றிருப்பதாகவும் அவர் சொல்வார். அனைவருக்கும்
ஒரே மாதிரியான பதில் தராமல், வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு பதில்களை அளித்து வந்தார்.
ஏதோ நடந்திருக்கிறது என்று மக்கள் சந்தேகம் கொள்ளத் துவங்கினர்.
சாயித் ராம்நவமி, சாவன் ஜூலா, பரிக்ரம கார்த்திகா
போன்ற விழாக்காலங்களில் அமெரிக்காவில் இருந்தாலும்கூட அயோத்திக்குத் திரும்பி வருவதற்கான
சந்தர்ப்பங்களை குருஜி உருவாக்கிக் கொள்வார். இந்த மூன்று விழாக்காலங்களிலும் மாநில
அரசு ஏற்பாடு செய்யும் கண்காட்சி நடப்பதுண்டு. ராமநவமியின் போது குருஜி கோவிலில் இல்லாத
நிலையில் மக்கள் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது கடத்தப்பட்டு எங்காவது கைதியாக வைக்கப்பட்டுள்ளாரா
என்று சந்தேகம் கொள்ளத் தொடங்கினர். தான் அம்பலமாகி விடுவோம் என்பதை உணர்ந்த அந்த வஞ்சகர்
அங்கிருந்து தப்பி ஓடினார். போகும்
போது தன்னுடன் தங்கம், வெள்ளி நகைகள் என்று கோவிலிலிருந்த அனைத்தையும் அவர் எடுத்துச்
சென்று விட்டார். கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான முதியவர் ஒருவரும்,
அவருடைய கூட்டாளியாக இருந்த மற்றுமொருவரும் அப்போது காணாமல் போயினர்.
சாயித் ராம நவமி விழா நடந்து முடிந்த பிறகும்
குருஜி குறித்த தகவல்கள் எதுவும்
இல்லாததால் சிறப்பு விசாரணை தொடங்கியது. அதற்குப் பிறகு குருஜியின் வங்கிக்கணக்கை பருச்சிற்கு
(உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாவட்டம்) மாற்றுமாறு வேண்டி குருஜி கணக்கு வைத்திருந்த
அயோத்தியில் உள்ள வங்கிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பிட்ட
அந்த வங்கியில் இருந்தவர்கள் குருஜியை நன்கு தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தனர். அவர்கள்
குருஜியின் கையொப்பங்கள் சரிவரப் பொருந்தாத காரணத்தால் அயோத்தியில் உள்ள மற்ற பூசாரிகளிடம்
அது குறித்து பேசினர். விசாரணை முடியும் வரை கணக்கை மாற்றுவதற்கு எந்தவொரு நடவடிக்கையும்
எடுக்க வேண்டாம் என்று அந்தப் பூசாரிகள் வங்கிக்கு அறிவுறுத்தினர்.
குருஜி காணாமல் போனது குறித்து காவல்துறை முதல்
தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருந்ததால், குருஜியின் கணக்கை மாற்றுவதற்காக வங்கிக்கு
அனுப்பப்பட்ட கடிதம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அது குறித்து
விசாரிக்க காவல்துறைப் படை ஒன்று பருச்சிற்கு அனுப்பப்பட்டது. கணக்கை பருச்சிற்கு மாற்றக்
கோரியவர் சுமார் 24 - 25 வயதுடையவர் என்பது அப்போது கண்டறியப்பட்டது. குருஜிக்கு சுமார்
அறுபது வயது என்பதால் வங்கிக் கணக்கை மாற்றக் கோரி அங்கே வந்திருந்தவர் நிச்சயம் குருஜியாக
இருக்க மாட்டார் என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு உண்டானது. உடனடியாக அந்த வங்கிக்
கணக்கின் பரிமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டது.
பிருந்தாவனிலிருந்து இங்கே வந்த குருஜியின் சகோதரர்
தற்காலிகமாக கோவிலின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் இங்கே இருந்த போது கழிவறை பழுது
பார்க்கப்பட்டது. அப்போது கழிவுநீர்த் தொட்டியின்
மூடியைத் தூக்கி பார்த்த போது உள்ளே சேறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கழிவுநீர்த்
தொட்டிக்குள் எந்த சேறும் இருக்க வாய்ப்பில்லை என்பதால், குருஜியின் சகோதரர் சேற்றுக்கு
கீழே ஏதோ இருப்பதாகச் சந்தேகம் கொண்டார். அவர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.
காவல்துறையினர் வந்து கழிவுநீர்த் தொட்டியிலிருந்து குருஜி, அவரது பெண் சீடரான கங்கா
தாசி ஆகியோரின் சடலங்களை மீட்டெடுத்தனர். குருஜியின் கொலையை நேரில் பார்த்த காரணத்தாலேயே
அந்தப் பெண் சீடரும் கொலை செய்யப்பட்டிருந்தார். கோண்டாவைச் சேர்ந்த அந்த முன்னாள்
ராணுவ வீரர் அதற்குப் பிறகு கைது செய்யப்பட்டார். ஓராண்டு கழித்து மற்றுமொருவர் சரணடைந்தார்.
அப்போது நான் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்தேன்.
கால்சட்டை, சட்டை என்று நவீன ஆடைகளை அணிவது அப்போது என்னுடைய வழக்கமாக இருந்தது. வீட்டில்
நான் தனியாக வசித்து வந்தேன். சமூக உணர்வுள்ளவனாக
இருந்த நான் இரண்டு கவிதைப் புத்தகங்களை வெளியிட்டிருந்தேன்.
எனவே குருஜிக்கான சீடர்களைத் தேடியவர்கள்
என்னிடம் வந்து என்னை பூசாரி ஆக்கினார்கள்.
ஆக
இது மூதாதையர் வழி பாரம்பரியமாக வருவதாக இல்லை
- யாரை வேண்டுமென்றாலும் பூசாரி ஆக்க முடியுமா?
ஆம். அது
மூதாதையர் வழி பரம்பரையாக வருவது அல்ல...
இதுபோன்ற
குற்றவாளிகள் அயோத்தியில் எத்தனை கோவில்களைக் கைப்பற்றியுள்ளனர்?
குற்றவாளிகளால் சுமார் முப்பது சதவீத கோவில்கள்
கைப்பற்றப்பட்டு இருக்கலாம்.
அந்தக்
கோவில்கள் எல்லாம் பலவந்தமாகக் கைப்பற்றப்பட்டனவா? அல்லது தானாகவே நடந்துள்ளதா?
பலவந்தமாகவே அவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில்
அரசியல் கட்சிகளுடைய பங்கு என்ன?
அரசியல் கட்சிகளுக்கும் இதில் பங்கு இருக்கிறது.
ஏனென்றால் எந்தவொரு கட்சியுடனும் நெருக்கமாக இருக்கின்ற குற்றவாளிகளால் அந்தக் கட்சியின்
செல்வாக்கைப் பயன்படுத்தி தங்களுக்கான வழியைப் பெற முடியும். சர்மாஜி உங்களிடம் கூறியதைப்
போல காவல்துறையினர் இந்த விவகாரங்களில் தங்களுடைய பணிகளை நேர்மையாகச் செய்வதில்லை.
நடக்கின்ற குற்றங்கள் அனைத்திலும் காவல்துறைக்குத் தொடர்பு இருக்கிறது. வேறொரு வகையில்
என்னிடமிருந்தும் பணம் கோரப்பட்டது.
ஏற்கனவே உங்களிடம் சொன்னதைப் போல் பிருந்தாவனைச்
சேர்ந்தவருக்குத் தற்காலிகப் பொறுப்பு தரப்பட்டது. எனது பெயர் பூசாரி பதவிக்கு முன்மொழியப்பட்டபோது
நான் மிகவும் இளையவன் என்பதால், அனைவரையும் ஒழித்து விடுவேன் என்ற அடிப்படையில் அவர்கள்
அதனை எதிர்த்தார்கள். ஆனால் தந்தை இறக்கும் போது அவரது குழந்தை சிறு குழந்தையாக இருந்தாலும்,
தந்தையின் சொத்தை இழந்து விடுவதில்லை என்பதால்
இளம் வயதில் இருந்த நான் பூசாரி ஆவதில் எந்த தவறுமில்லை என்று வேறு சிலர் வாதிட்டனர்.
அந்த பிரச்சனையாலேயே அவர்களுடன் தகராறு தொடங்கியது.
பூசாரியாவதைத்
தீர்மானிக்கின்ற நபர்கள் யார்?
பூசாரிகளுக்கென்று வைஷ்ணவக் குழு ஒன்று இருக்கிறது.
அயோத்தியில் வைராகி, ஆச்சார்யா என்று இரண்டு பிரிவு பூசாரிகள் இருக்கின்றனர். நான்
சுமார் நூற்றைம்பது பூசாரிகளைக் கொண்ட ஆச்சார்யா
பிரிவைச் சார்ந்தவன்.
அவர்கள்தான்
ஒன்றாக உட்கார்ந்து எந்த கோவிலில் யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள்
- இல்லையா?
ஆம். ஒரு கோவிலின் பூசாரி தன்னுடைய வாழ்நாளில்
யாரையும் பூசாரியாக நியமிக்காமல் விட்டு விட்டார் என்றால், அடுத்த பூசாரி யார் என்பதை இந்த வைஷ்ணவக் குழுதான் முடிவு
செய்யும். என்னையும் இந்த வைஷ்ணவக் குழுதான் தேர்வு செய்தது. காவல்துறை என்னை ஆதரிப்பதற்கும்,
என்னை எதிர்க்கும் நபரை நீக்கவும் என்னிடம் பணம் கோரியது. ஆனால் நான் அவர்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. மக்கள்
என்னுடன் இருந்ததால் நான் கவலைப்படவில்லை. இன்னும் சொல்வதானால் என்னிடம் பணமும் கிடையாது.
அப்போது நான் மாணவனாக இருந்தேன். அதனால் என்னால்
பணம் கொடுக்க முடியவில்லை.
ராம
ஜென்ம பூமி குறித்த இந்த சர்ச்சை நடந்து கொண்டிருந்தபோது ஆச்சார்ய சமாஜின் பங்கு என்னவாக இருந்தது?
அந்த சர்ச்சையில் அதன் பங்கு முக்கியமற்றது. அரசியல்
கட்சிகளால் இரண்டு அல்லது மூன்று உயர்மட்ட பூசாரிகள் மட்டுமே ஈர்க்கப்பட்டிருந்தனர்.
வேறு யாரும் எந்தவொரு கட்சியுடன் அல்லது நிறுவனத்துடன் இணைந்திருக்கவோ அல்லது தொடர்பு
கொண்டிருக்கவோ இல்லை. இரண்டு நபர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் போது கிராமங்களில்
மூன்றாவதாக ஒருவர் தலையிடுவதைப் போல அந்தச் சண்டையில் அவர்கள் ஈடுபட
விரும்பவில்லை. அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டிடத்திற்காக மூன்று அல்லது நான்கு அரசியல்
கட்சிகள் போராடி வருகின்றன. அந்த நான்கு கட்சிகளுமே வெவ்வேறு கண்ணோட்டங்களுடன் இருக்கின்றன. ஒரு கட்சியுடன் நான் சென்றால் மற்ற
மூன்று கட்சிகள் எனக்கு எதிராக மாறி விடும். இவ்வாறான மோதலைத் தவிர்க்கின்ற வகையில்
இந்த விஷயத்தில் உள்ளூர் மக்கள் எந்தவித அக்கறையும் காட்டுவதில்லை.
அயோத்தி
சர்ச்சையில் விஎச்பி எவ்வாறு ஈடுபட்டது?
அது 1984ஆம் ஆண்டு நடந்தது. ஆனாலும் எந்தவொரு
கோவிலின் மீதும் அவர்களுடைய கட்டுப்பாடு இருக்கவில்லை.
அவர்கள்
தாங்கள் விரும்கின்ற பூசாரிகள் யாரையாவது கோவில்களில் நியமித்திருக்கிறார்களா?
இல்லை. அவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு உரிமையும்
கிடையாது. நடந்தது என்னவென்றால் - அவர்கள் சிலருக்கு ஆதரவு தந்தார்கள். அவர்களுடைய
ஆதரவை இரண்டு அல்லது மூன்று பேர் நாடியிருக்கலாம்; ஆனால் எந்தவொரு பூசாரியையும் நியமிக்க
அவர்களுக்கு எந்த வகையிலும் உரிமை கிடையாது. எங்களுடைய அமைப்பில் அதற்கான சாத்தியம்
இருக்கவில்லை.
பாபர்
மசூதி இடிப்பு குறித்து அயோத்தியில் உள்ள பெரும்பான்மையான பூசாரிகளின் கருத்து என்ன?
மசூதியை இடிப்பதில் ராமச்சந்திர பரம ஹன்சா, நட்கோபால்தாஸ்,
அவதேஷ்தாஸ் சாஸ்திரி போன்ற இரண்டு அல்லது மூன்று பூசாரிகளைத் தவிர அயோத்தியில் உள்ள
பூசாரிகளுக்கு எந்தவொரு பங்கும் இருக்கவில்லை. அந்தச் சதியில் மிகச் சிலர் மட்டுமே
ஈடுபட்டனர். அயோத்தியில் உள்ள பெரும்பான்மையான பூசாரிகள் அதில் ஈடுபடவில்லை.
வெளியில்
இருந்து பார்க்கும் போது விஎச்பிக்கு பெரும்பாலான பூசாரிகளின் ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது.
யானையின் பெரிய கால் பல சிறிய காலடிகளுக்கு இடமளிப்பதைப்
போன்று விஎச்பி பெரிய பூசாரிகளைக் கட்டுப்படுத்துகின்றது.
பெரிய பூசாரிகள் தங்களுடன் இருப்பதால் இயல்பாகவே சிறிய பூசாரிகளும் தங்களுடன் இருப்பார்கள்
என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் விஎச்பியினரை
யாரும் ஆதரிக்கவில்லை.
அவர்களை
ஆதரிக்காதவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறீர்களா அல்லது உங்களிடையேயும் வேறுபாடுகள் உள்ளனவா?
சில சந்தர்ப்பங்களில் ஒன்று கூடுகிறார்கள். பின்னர்
தங்கள் சொந்த வழிகளில் சென்று விடுகிறார்கள். எடுத்துக்காட்டாக விருந்து நடைபெறும்
போது, அந்த இடத்தில் சாப்பிடுவதற்காக அனைவரும் ஒன்று கூடுவார்கள். அவர்களுடைய ஒரே நோக்கம்
உணவு மட்டும் தான். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கெல்லாம் அவர்கள் அக்கறை எடுத்துக்
கொள்வதில்லை.
பல
கலவரங்களும், இடையூறுகளும் நடைபெற்றிருக்கின்றன. அவை குறித்து நீங்கள் எதுவுமே செய்யாதது
ஏன்?
எங்களுக்கும் அந்தக் கலவரங்களுக்கும் எந்தவொரு
தொடர்பும் இல்லை. ஏனெனில் இந்தக் கலவரங்களிலிருந்து பெரிய கோவில்கள் ஏராளமாகப் பணம்
சம்பாதித்துள்ளன. அதே நேரத்தில் பல சிறிய கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன.
உங்கள்
கோவில் பெரியதா அல்லது சிறியதா?
சிறியது. அதன் சொத்து மதிப்பு சுமார் இருபது முதல்
இருபத்தைந்து லட்சம் ரூபாய் அல்லது ஐம்பது லட்சமாக இருக்கலாம். ஆனால் இந்த தொகை இப்போதெல்லாம்
அதிக மதிப்பு கொண்டதாக இருக்கவில்லை.
ஆண்டுதோறும்
உங்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
பிரசங்கம், சமயச் சொற்பொழிவு ஆற்றுவதன் மூலம்
நான் சிறிதளவில் பணம் சம்பாதித்து வருகிறேன். அது போக ஆண்டிற்கு மூன்று கண்காட்சிகள்
இங்கே நடைபெறுகின்றன. ஒட்டுமொத்தமாக சுமார்
70,000 முதல் 80,000 ரூபாய் வரை தனிப்பட்ட வருமானம் எனக்குக் கிடைக்கிறது.
அது
உங்களது சொந்த முயற்சிகளின் மூலம் மட்டுமே கிடைக்கின்ற தனிப்பட்ட வருமானத்தைக் குறிக்கிறதா?
ஆம்.
இப்போது
சர்ச்சைக்குரிய இடத்தில் ராம் லல்லா கோவிலைக் கட்டுவது குறித்து அதிகம் பேசப்பட்டு
வருகிறது. அயோத்தி பூசாரிகள் அங்கே என்ன செய்ய வேண்டும் என்று தங்களுக்குள் ஏதேனும் முடிவு எடுத்துள்ளார்களா?
அயோத்தி பூசாரிகள் என்றால், நீங்கள் அவ்தேஷ் சாஸ்திரியைச்
சொல்கிறீர்களா?
இல்லை.
அவரை விட்டு விடுங்கள். அங்கே என்ன செய்ய வேண்டும் என்று உங்களிடம் கேட்கப்படுவதாக
கருதி - உங்கள் எதிர்வினை என்னவென்று சொல்லுங்களேன்.
நான் ஒரு ஹிந்துவாக இருப்பதால் கோவிலைக் கட்டவே
விரும்புவேன்; ஆனால் அதனால் கலவரம் ஏற்படக்கூடும் என்பதால் நீதிமன்றத் தீர்ப்பு செயல்படுத்தப்படுவதையே
நான் விரும்புகிறேன். ஏற்கனவே இந்த விவகாரம் நீதிமன்றங்களுக்கு முன்பாக இருந்து வருவதால்
நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்க வேண்டும். நீதிமன்றம் கோவில் இருக்க வேண்டும் என்று முடிவு
செய்தால், கோவில் இருக்கட்டும். அல்லது மசூதிதான் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம்
முடிவு செய்யுமானால் அங்கே மசூதியே இருக்கட்டும்.
உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் பூசாரிகளைக்
கொல்கின்ற திட்டத்தின் ஒரு பகுதியாகவே பாபா லால்தாஸின் கொலை நடந்துள்ளது. விஎச்பி,
சங் பரிவார் அமைப்புகள் குண்டர்களால் கோவில்கள் மிருகத்தனமாகக் கைப்பற்றப்படுவதை அதிகரிக்கின்ற
உந்துசக்திகளாக உள்ளன. பாபா லால்தாஸ் உட்பட நடத்தப்பட்டுள்ள கொலைகளின் காரணங்கள் குறித்து
முழுமையான விசாரணை நடத்தக் கோரி மனுஷி வாசகர்கள்
- குறிப்பாக உத்தரப் பிரதேச வாசகர்கள் - முதல்வர் முலாயம் சிங் யாதவுக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள
முகவரிக்கு கடிதம் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஸ்ரீ முலாயம் சிங் யாதவ்
முதல்வர், உத்தரபிரதேசம்
லக்னோ
செல்வாக்கு மிக்கவர்களால்
கோவில்கள் கைப்பற்றப்படுவதற்கான எடுத்துக்காட்டாக போபாலில் உள்ள கோவிலின் நுழைவாயிலில் ‘ஸ்ரீராம் மந்திர் கட்லாபூர் - பஜ்ரங் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்று எழுதப்பட்டுள்ளது.
ஹிந்தியில் இருந்து ஆதித்யா
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த நேர்காணல் 1993ஆம் ஆண்டு வெளியானது





Comments