ஆனந்த் பட்வர்தன்
ஆவணப்பட தயாரிப்பாளர், இயக்குநர்
ஃப்ரண்ட்லைன்
நவம்பர் 16 அயோத்தி தலைமைப் பூசாரி லால்தாஸ்
நினைவு தினம்
மிகச் சிறிய அளவிலே ‘முன்னாள்
பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டார்’
என்ற செய்தி 1993 நவம்பர் 17 அன்றைய
மாலை செய்தித்தாளில் வெளியாகி இருந்தது. அது பூசாரி லால்தாஸாக இருக்கக் கூடாது என்று நான் உடனடியாக வேண்டிக் கொண்டேன். ஆனாலும்
மோசமான அந்த அச்சம் நனவாகிப் போனது. அயோத்தியில் அவரை நாங்கள் நேர்காணல்
கண்டு மூன்றாண்டுகளுக்குப் பிறகு, ‘ராம்
கே நாம்’ எனும் ஆவணப்படம் பகிரங்கமாகத் திரையிடப்பட்டு இரண்டாண்டுகளுக்குப் பிறகு பூசாரி
லால்தாஸ் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
முதன்முதலாக அவரை நாங்கள் பேட்டி கண்ட அந்த மாலைப்
பொழுதும் ஒரு சோகமான சந்தர்ப்பமாகவே
அமைந்திருந்தது. அன்றைய தினம் 1990 அக்டோபர் முப்பதாம் நாள்… மாநில முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் ‘அரசின்
பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி மசூதி மீது ஒரு
பறவையால் கூட பறக்க முடியாது’ என்று பெருமை பேசினாலும் விஷ்வ ஹிந்து பரிஷத் - பஜ்ரங்
தளம் - பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றின் கூட்டணியின் தலைமையிலே அயோத்தியில்
கூடியிருந்த ஹிந்துக் கும்பல் பாபர் மசூதி மீது தாக்குதலை நடத்தியதில்
வெற்றி கண்ட நாள்.
மசூதி மீது நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலை ‘இரண்டாவது தீபாவளி’ என்று கொண்டாடியவர்களால் வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் சப்தத்தை நாங்கள் அமர்ந்திருந்த கோவிலுக்கு வெளியிலிருந்து எங்களால் கேட்க முடிந்தது. விஎச்பியின் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்து வந்த பூசாரி லால்தாஸ் ஏற்கனவே பல மரண அச்சுறுத்தல்களையும், ஒரு கொலை முயற்சியையும் எதிர்கொண்டிருந்தவர். பாஜக வேட்பாளரைத் தோற்கடித்த பைசாபாத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மித்ராசென் யாதவ் சில மாதங்களுக்கு முன்னர் சுடப்பட்டு காயமடைந்திருந்த நிலையில், லால்தாஸில் பாதுகாப்பிற்கென்று மெய்க்காப்பாளர் ஒருவரை அரசாங்கம் வழங்கியிருந்தது. அந்தச் சமயத்தில் ராமஜென்ம பூமி கோவிலின் தலைமைப் பூசாரியாக லால்தாஸ் இருந்தார். அமைதி மீண்டும் திரும்புகின்ற வரையிலும் சில நாட்களுக்கு கோவிலுக்குச் செல்ல வேண்டாம் என்று அண்மைக்காலங்களில் பிறர் மீது தாக்குதலை நடத்துகின்ற விஎச்பியின் ஆற்றல் அதிகரித்திருப்பதைக் காரணம் காட்டி லால்தாஸுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் அங்கே அந்த அமைதி ஒருபோதும் திரும்பி வரவே இல்லை.
நாங்கள் அனைவரும் அந்த அக்டோபர் 30 தினம் அமைதியாகக்
கழிந்து விடும் என்று எதிர்பார்த்தவர்களாகவே இருந்தோம். ஆனால் அயோத்தி, உத்தரப்பிரதேசம்,
இந்தியாவின் பிற பகுதிகளில் வகுப்புவாத பதட்டங்கள் இன்று வரையிலும் தொடர்ந்து
கொண்டேதான் இருக்கின்றன. லால்தாஸ் எதிர்பார்த்தவாறே ஆயிரக்கணக்கான உயிர்கள் பறி
போயின. மிகவும் ஆபத்தான
துருவமுனைப்பு நாட்டில்
ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
நாங்கள் அவரது நேர்காணலை பதிவு செய்த போது, அந்த
நேர்காணல் பகிரங்கமாக வெளியில் காட்டப்படுமானால்
அவருக்குப் பாதுகாப்பு இருக்குமா என்று
லால்தாஸிடம் நாங்கள் கேட்டோம். தனது செய்தி மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே
தன்னுடைய மிகப்பெரிய விருப்பம் என்றும், தனிப்பட்ட முறையில் தனக்கு ஏற்படுகின்ற
விளைவுகளைப் பற்றி தான் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் மிக உறுதியாக அவர் எங்களிடம்
தெரிவித்தார்.
மீண்டும் ஒரு முறை நாங்கள் அவரைச் சந்தித்தோம்.
லக்னோவில் 1992 ஜனவரியில் திரையிடப்பட்ட எங்கள் ஆவணப்படத்தின் முதல் காட்சிக்கு
லால்தாஸ் வந்திருந்தார். அந்த சமயத்தில் மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த பாஜக கோவில் தலைமைப்
பூசாரி பதவியில் இருந்து அவரை நீக்கியிருந்தது. ஆவணப்படத்தின் திரையிடல் முடிந்த
பிறகு, ஹிந்து மதத்தில் உள்ள உலகளாவிய கூறுகள்
மீதான தனது உறுதிப்பாட்டை லால்தாஸ் உறுதி செய்தார். அந்த ஆவணப் படத்தை
மிகவும் நேசித்த லால்தாஸின் பாதுகாப்பு குறித்து எனக்கிருந்த அச்சங்களையெல்லாம் புறந்தள்ளிய
அவர் அந்தப் படத்தை அயோத்தி பகுதி முழுவதும் தான் திரையிடப் போவதாகக் கூறினார்.
அவருடைய முகத்தில் இருந்த புன்னகையே அவர் முன்வைத்த ஒரே வாதமாக இருந்தது.
அதுவே அவர் குறித்து என்னிடமுள்ள இறுதி
நினைவாகவும் இருக்கிறது.
‘ராம்
கே நாம்’ (கடவுளின் பெயரால்) என்ற ஆவணப்படத்திற்காக பூசாரி லால்தாஸுடன் 1990
அக்டோபர் 30 அன்று நடத்தப்பட்ட நேர்காணலின் பகுதி:
கோவிலைக் கட்டுவதற்கான விஸ்வ ஹிந்து
பரிஷத்தின் திட்டம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
லால்தாஸ்: இது விஎச்பி விளையாடுகின்ற அரசியல்
விளையாட்டு. கோவில் கட்டுவதற்கு ஒருபோதும் தடை விதிக்கப்படவில்லை. தவிர
பாரம்பரியத்தின்படி கடவுள் சிலைகள் வைக்கப்படுகின்ற எந்தவொரு இடமும் கோவில் என்பதே
ஹிந்துக்களிடம் உள்ள வழக்கம். சிலை இருக்கின்ற எந்தவொரு கட்டிடமும் ஹிந்துக்களால் கோவிலாகவே
கருதப்படுகிறது. தனியாக கோவிலைக் கட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்பினால்,
அதற்காக ஏற்கனவே சிலைகள் அமைகப்பட்டுள்ள அமைப்பை அவர்கள் ஏன் இடித்துத் தள்ள வேண்டும்?
அவ்வாறு
இடித்துத் தள்ள விரும்புபவர்கள் உண்மையில் இந்தியா முழுவதும் பதட்டத்தை உருவாக்கி
ஹிந்து வாக்குகளைப் பெறுவதில் அதிக அக்கறை கொண்டவர்களாக மட்டுமே இருக்கின்றனர். அவர்கள்
இங்கே நிகழும் இனப்படுகொலை பற்றி - எத்தனை பேர் அதில் கொல்லப்படுவார்கள், எவ்வளவு
சொத்துக்கள் அழிக்கப்படும் என்பது பற்றி மட்டுமல்லாது, முஸ்லீம்கள்
பெரும்பான்மையாக வசிக்கின்ற பகுதிகளில் ஹிந்துக்களுக்கு என்ன நடக்கும் என்பது
குறித்தும் கவலைப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்.
1949இலிருந்து
எந்தவொரு முஸ்லீமும் எந்தவொரு பிரச்சனையையும் இங்கே உருவாக்கியதே இல்லை. ஆனாலும்
‘பாபரின் புத்திரர்கள் ரத்தம் சிந்த வேண்டும்’ என்ற முழக்கத்தை இவர்கள் ஆரம்பித்த
போது ஒட்டுமொத்த தேசமும் கலவரத்தில் மூழ்கியது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
தாங்கள் உருவாக்கிய பதட்டங்கள் குறித்து எந்தவொரு வருத்தமும் அவர்களால் இன்னும் தெரிவிக்கப்படவே
இல்லை. இப்போதுவரை நம் நாட்டிலே ஹிந்து-முஸ்லீம்களுக்கிடையிலான ஒற்றுமை நிலவிக்
கொண்டிருக்கிறது. ஹிந்துக் கோவில்களுக்கு முஸ்லீம் ஆட்சியாளர்கள் நிலம் வழங்கி
இருக்கின்றனர். ஜானகி காட், ஹனுமன் காரியின் சில பகுதிகள் முஸ்லீம்களாலேயே
கட்டப்பட்டுள்ளன. இந்த சொத்துக்கள் அனைத்தையும் முஸ்லீம் ஆட்சியாளர்களே கோவில்களுக்கு
நன்கொடையாக வழங்கியுள்ளனர். மேலும் அமீர் அலி, பாபா ராம்சரண் தாஸ் ஆகியோரே ஜென்ம
பூமியைப் பிரித்து முஸ்லீம்கள் ஒரு பகுதியிலும், ஹிந்துக்கள் இன்னொரு பகுதியிலும்
வழிபாடு செய்து கொள்ளலாம் என்று ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில்
நல்லிணக்க உடன்படிக்கையை ஏற்பாடு செய்தனர். ஆனால் இப்போது அதுபோன்ற முயற்சிகள்
அனைத்தும் வீணடிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவை
உலுக்கிய அனைத்து வகுப்புவாதக் கலவரங்களும் நிதி, அரசியல் குறித்த லாபத்தை
நோக்கியே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ராமரின் பிறப்பிடத்துடன் அவை எந்தவொரு
தொடர்பும் கொண்டிருக்கவில்லை. ராம ஜென்ம பூமி கோவிலின் பூசாரியான நான் மிகவும் நேர்மையுடன்
இன்று வரையிலும் ஒருதடவை கூட விஎச்பியைச் சார்ந்தவர்கள் யாரும் இங்கே வழிபாடு
நடத்தியதே இல்லை. அது மட்டுமல்ல - அவர்கள் ஒருபோதும் இங்கே வந்து கடவுளை வணங்கியதே
இல்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். அதற்கு மாறாக வழக்குகளைத் தொடர்ந்து
வழிபாடுகள் நடத்துவதற்கான தடைகளை மட்டுமே அவர்கள் உருவாக்கி வந்தனர். அதன் காரணமாகவே
உள்ளூர் மக்கள் அவர்களை ஒருபோதும் ஏற்றுக் கொண்டதே கிடையாது.
ஆனால்
பேராசை கொண்ட சில பூசாரிகளை அவர்கள் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டனர். ராமர்
கோவிலுக்கான செங்கல் பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர்கள் அவற்றைக் கொண்டு
தங்களுக்கென்று சொந்த அறைகளையும், வீடுகளையும் மட்டுமே கட்டிக் கொண்டனர்.
பொதுமக்களை முட்டாளாக்கி பெரிய பெரிய கட்டிடங்களை அவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள்.
பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் அளவிலான
நன்கொடைகளை அவர்கள் பெற்றுக் கொண்டனர். அவற்றில் சில நன்கொடைகளை தங்களுடைய சொந்த
வங்கி கணக்கிலும் அவர்கள் பெற்றுக் கொண்டனர். அதனால்தான் அவர்கள் மக்கள்
கொல்லப்படுவது குறித்தெல்லாம் கவலைப்படுவதே இல்லை. அவர்களுடைய அக்கறை முழுவதும் பணம்
மற்றும் அதிகாரத்தின் மீது மட்டுமே இருக்கிறது. மிகச் சிறந்த, ஆடம்பரமான
வாழ்க்கையை விரும்புகின்ற உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஹிந்து தேசம் பற்றி
பேசுகின்றவர்களாக, ராமனின் பெயரால் வன்முறையை உருவாக்குபவர்களாக இருக்கின்றனர். அவர்களிடம்
தன்னல மறுப்பு, தியாகம், பொதுவாழ்வின் மீதான அக்கறை ஆகியவை ஒருபோதும் இருந்ததே கிடையாது.
அவர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே மக்களின்
மத உணர்வுகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இப்போதெல்லாம்
நடந்து செல்வதற்குப் பதிலாக நாம் பறந்து செல்கிறோம். முதல் வகுப்பில் பயணம் செய்கிறோம்.
குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்ளே வாழ்கிறோம். பொதுநன்மைக்காக தியானிப்பதற்கும்,
வேலை செய்வதற்கும் உலக சுகபோகங்களைக் கைவிட்ட நேரங்கள் இப்போது மறைந்து போய்
விட்டன. உலக விஷயங்களுக்குள் முழுமையாக மூழ்கி விட்ட நம்மால் இப்போது பொருளை
மட்டுமே முதன்மையாகக் கொண்டு சிந்திக்க முடிகிறது. வெறுமனே பொருள் ஒழுங்கை மட்டுமே
நிலைநிறுத்துகின்ற இன்றைய மதத் தலைவர்களைப் பற்றி என்ன சொல்வது? பெரும் வணிகர்கள் ‘ஹிந்து
மதத்தைப் பாதுகாக்க வேண்டும்’ என்று கூறுகிறார்கள் அசோக் சிங்காலைப் போன்ற
நாட்டின் பெரும் பணக்காரர்கள் தங்களை ராமரின் பக்தர்கள் என்று கூறிக்
கொள்கிறார்கள். மக்கள் பட்டினி கிடந்து இறப்பதுதான் ராமனின் லட்சியமாக இருக்குமா?
நம் நாட்டில் இருக்கின்ற இந்த பெரும் பற்றாக்குறை குறித்து நமது மதத் தலைவர்கள்
சிறிதாவது கவலைப்பட வேண்டாமா? உங்களிடம் பணம் இருக்கிறது அல்லது பணக்காரர்கள்
உங்கள் பேச்சைக் கேட்கிறார்கள் என்றால் அந்த பணத்தை ஏழைகளுக்கு உதவுவதற்காக நீங்கள்
பயன்படுத்த வேண்டாமா? அன்னை தெரசா செய்வதைப் போல. அல்லது நமது மதத் தலைவர்கள் கடந்த
காலங்களில் செய்து வந்ததைப் போல.
நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் என்று உங்களைப்
பிடிக்காதவர்கள் குற்றம் சாட்டுகிறார்களே?
லால்தாஸ்: ஒரு கம்யூனிஸ்ட் என்று என்னைச் சொல்வது
உண்மையில் எனக்குப் பெருமை சேர்க்கின்ற விஷயமாகும். உணவு, உடை, தங்குமிடம்
ஆகியவற்றிற்கான ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ள உரிமை குறித்து கம்யூனிஸ்டுகள் பேசுகிறார்கள்
இல்லையா? பகவான் ராமரின் கொள்கைகளை நம்பினால் (ராமாயணத்தை மேற்கோள் காட்டி)
‘ராமராஜ்ஜியத்தில் எவரொருவரும் பாதிக்கப்படவில்லை, அனைவரும் மகிழ்ச்சியாக
இருந்தார்கள்’ என்பது நமக்குத் தெரிய வரும். கம்யூனிஸ்டுகளும் உணவு, உடை,
அனைவருக்கும் கல்வி என்று அதையேதான் விரும்புகிறார்கள். ராமரின் கொள்கைகளை நம்புகின்ற
நாம் அதே விஷயங்களைச் சொல்லும் மற்றவர்களையும் மதிக்கிறோம். குறைந்தபட்சமாகச்
சொல்வதென்றால் கம்யூனிஸ்டுகள் இதுபோன்ற இனப்படுகொலைகளுக்கு ஒருபோதும் அழைப்பு
விடுத்ததே இல்லை!
அயோத்தியில்
மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் இதை எதிர்க்க வேண்டும்.
மற்றவர்களுடைய மத உணர்வுகளைப் புண்படுத்தி ஒருபோதும் நாம் அவர்களுடைய இதயங்களை நொறுக்கி விடக் கூடாது.
இன்று நம் நாட்டில் ஒரு அலை வீசுவதாகத்
தோன்றுகிறது - உங்களைப் போன்றவர்களுக்கு கிடைப்பதைக் காட்டிலும் வெறுப்பைப்
பேசுபவர்களுக்கே மிகப் பெரிய அளவிலே
ஆதரவு கிடைக்கிறது.
லால்தாஸ்: அது
அப்படி இல்லை. வெள்ளத்தின் போது, சூறாவளியின் போது, ரயில்களும்
கட்டிடங்களும் கீழே விழுந்து விடுகின்றன. சாலைகள், அவற்றின் பயன்பாடுகள் அழிந்து
போகின்றன. ராமாயணத்தில் ஆரண்யா காண்டத்தில் ‘மழை அதிகமாக இருக்கும்போது, புற்கள்
மிகவும் உயரமாக வளர்ந்து சரியான பாதையை கண்டுபிடிப்பது கடினமாகிறது’ என்ற பாடல் வருகிறது.
அது போன்றே போலித்தனமானவர்கள் உரத்துப் பேசுகின்ற போது உண்மை மறைக்கப்படுகின்றது,
போதைப் பொருளை உண்ட ஒருவர் எதற்கும் தகுதியற்றவராகிறார். அவருக்குப்
பைத்தியம் பிடிக்கலாம், நம்மைத் தாக்கலாம், ஏன் தற்கொலைகூட செய்து
கொள்ளலாம். வெறித்தனம் கொண்டிருக்கும் தருணத்தில் ஒருவருடைய சிந்தனை ஆற்றல்
அழிக்கப்படுகிறது. ஆனாலும் இந்த மழைக்காலம் மிகவும் குறைவான காலமே இருக்கும். இன்று
ஒரு வகையான வெறியுடன் மக்கள் இருக்கிறார்கள். இதற்குப் பிறகு உண்மையை
எதிர்கொள்ளும் போது… தங்களுடைய பகுத்தறிவுத்
திறனை அவர்கள் மீண்டும்
பெறுவார்கள்.
ஃப்ரண்ட்லைன்
இதழில் 1994 ஜனவரி 14 அன்று வெளியான
கட்டுரை
http://patwardhan.com/wp/?page_id=427
நவம்பர்
16 - அயோத்தி ராம ஜென்ம பூமி கோவிலின் முன்னாள் தலைமைப் பூசாரி லால்தாஸ் 1993ஆம்
ஆண்டு கொல்லப்பட்ட தினம்



.jpg)




Comments