துணிச்சலான பூசாரி - அயோத்தி டைரி

 ஆனந்த் பட்வர்தன்

அவுட்லுக் இந்தியா

பாலிவுட் பாணியில் வடிவமைக்கப்பட்டு போர் ரதத்தைப் போன்று அலங்கரிக்கப்பட்டிருந்த குளிரூட்டப்பட்ட டொயோட்டா வாகனம் ஒன்றில் 1990களில் இந்தியாவெங்கும் எல்.கே.அத்வானி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தைப் பின்தொடர்ந்து செல்வதாக ‘ராம் கே நாம்’ என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. பதினாறாவது நூற்றாண்டில் அயோத்தியில் முகலாயப் பேரரசர் பாபரால் கட்டப்பட்ட மசூதியை தரைமட்டமாக்கி விட்டு - ராமர் பிறந்த இடம் என்று ஹிந்துத்துவவாதிகள் கருதுகின்ற - அந்த இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுகின்ற நோக்கத்திற்காக ஹிந்து தொண்டர்களை - கரசேவகர்களைத் திரட்டுவதே அத்வானி மேற்கொண்ட அந்த ரத யாத்திரைக்கான நோக்கமாக இருந்தது. தகுந்த மரியாதை அளிக்கவில்லை என்ற காரணத்திற்காக உள்ளூர் முஸ்லீம்கள் மீது கரசேவகர்கள் நடத்திய தாக்குதலில் ரத யாத்திரை சென்ற வழியெங்கும் ரத்தஆறு பெருகி ஓடியது.  அறுபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.   


ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுகளை மேற்கொண்ட  நாங்கள் அந்த யாத்திரையைப் படமாக்கினோம். மசூதிக்கு கீழ் தோண்டி நடத்தப்பட்ட அகழாய்வுகள் கோவில் எதுவும் இருந்ததற்கான தடயத்தை வழங்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டதுடன், சமஸ்கிருதம் அறிந்திருந்த பிராமணர்கள் சிலரிடம் மட்டுமே ராமர் குறித்த புராணக் கதை பதினாறாம் நூற்றாண்டில் இருந்து வந்ததையும், துளசிதாசரால் எழுதப்பட்ட ராமசரிதமானாஸிற்குப் பிறகே ராமர் புகழ்பெற்ற கடவுளாக மாறினார் என்பதையும் நாங்கள் அறிந்து கொண்டோம். ராமருக்கென்று அதற்கு முன்பாக எந்தவொரு கோவிலும் இருந்ததாகவோ அல்லது ராமர் கோவில் இடிக்கப்பட்டது என்றோ துளசிதாசரால் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அயோத்தி இன்றைக்கு ராமர் கோவில்களால் நிறைந்துள்ளது. ‘இதுதான் ராமர் பிறந்த இடம்’ என்று சொல்லி குறைந்தபட்சம் இருபது கோவில்களாவது கட்டப்பட்டிருக்கின்றன. அதற்கான காரணம் மிகத் தெளிவாக இருக்கிறது. ‘ராமரின் பிறப்பிடம்’ என்று தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்ற கோவில்கள் அனைத்தும் பெருமளவில் பக்தர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடனேயே செயல்பட்டு வருகின்றன.   

           

திரும்பவே வராத அந்த வெள்ளிக்கிழமை

மசூதி இடிக்கப்படுவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த 1990 அக்டோபர் 30க்கு சில நாட்களுக்கு முன்னதாக நாங்கள் அயோத்தியைச் சென்றடைந்தோம். அங்கே 1949ஆம் ஆண்டு நள்ளிரவில் மசூதிக்குள் சென்று ராமர் சிலையை வைத்த கும்பலில் இருந்த ஒருவரான முன்னாள் மடத்தலைவர் சாஸ்திரிஜியை நாங்கள் சந்தித்தோம். மசூதிக்கு உள்ளே வைக்கப்பட்ட சிலைகளை அப்போது மாவட்ட நீதிபதியாக இருந்த கே.கே.நாயர் அகற்ற மறுத்த பிறகு, சர்ச்சைக்குரிய பகுதி என்று அந்த இடம் அறிவிக்கப்பட்டது. அந்த மாவட்ட நீதிபதி தனது பணி ஓய்விற்குப் பிறகு பாஜகவின் முன்னோடியான ஜனசங்கக் கட்சியில் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார்.     

சரயு நதியைக் கடந்து நாங்கள் அயோத்தியின் இரட்டை நகரமான பைசாபாத்துக்குச் சென்றோம். அங்கே பாபர் மசூதியின் முன்னாள் இமாம், தச்சுவேலை செய்து வந்த அவரது மகன் ஆகியோரைச் சந்தித்தோம். இமாமின் மகன் 1949ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகளை எங்களிடம் விளக்கினார். நிலைமை விரைவில் சகஜமாகி விடும் என்றும், வழக்கம் போல அடுத்த வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதற்காக நாங்கள் மசூதிக்குள் திரும்பவும் செல்லலாம் என்றும் மாவட்ட நீதிபதி நாயர் தங்களிடம் கூறியதாகத் தெரிவித்த அவர் ‘இன்னும் அந்த வெள்ளிக்கிழமைக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார்.       

அக்டோபர் 30 விடிந்த போது நாங்கள் நடந்தே சரயு நதி பாலத்திற்குச் சென்றோம். அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவையும் மீறி அங்கே ஏற்கனவே ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தனர். சிறிய அளவில் தடியடி நடத்தப்பட்டு அந்தப் பகுதி முழுவதும் செருப்புகள் இறைந்து கிடந்தன. கரசேவகர்கள் பலரும் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டனர். அந்தப் பேருந்துகளில் இருந்தவர்கள் பேருந்து சிறிது தூரம் சென்றதும் இறங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்ட காரணத்தால் அவர்கள் திரும்பவும் அந்த இடத்திற்கே வந்து சேர்ந்தனர். பாலத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் காவல் துறையினரைப் பார்த்து ‘ஹிந்துக்கள் அனைவரும் சகோதரர்கள், நீங்கள் ஏன் இதில் தலையிடுகிறீர்கள்’ என்று கத்திக் கொண்டிருந்தனர். மசூதி மீது நடத்தப்படுகின்ற தாக்குதல் தேசத்தின் மென்மையான வகுப்புவாத இணைப்பை உடைத்தெறிந்து விடும் என்பதை நேரம் செல்லச் செல்ல எங்களில் சிலர் உணரத் தொடங்கினோம்.

கரசேவகர்களுக்கு காவல்துறை, துணை ராணுவத்தின் ஒரு பகுதியினரிடமிருந்து மறைமுக ஆதரவு கிடைத்ததை எங்களால் பல இடங்களில் காண முடிந்தது. அந்த இடம் முழுவதும் ஒரே குழப்பமாக இருந்தது. இறுதியில் கரசேவகர்கள் சிலர் உள்ளே புகுந்து மசூதியைத் தாக்க முனைந்த போது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்த ஆரம்பித்தனர். சில கரசேவகர்கள் மசூதியின் உச்சிக்குச் சென்று காவிக் கொடியைக் கட்டிப் பறக்க விட்டனர். பெருமளவில் கரசேவகர்கள் மசூதிக்குள் நுழைந்து அதனை இடித்து விடாமல் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு தடுத்து நிறுத்தியது. துப்பாக்கிச் சூட்டில் இருபத்தொன்பது பேர் இறந்து போயினர். ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து போனார்கள் என்று கூறி பாஜகவும், விஎச்பியும் அந்தத் தியாகிகளின் அஸ்தியை எடுத்துக் கொண்டு மற்றொரு ரத யாத்திரையை நாடு முழுவதும் மேற்கொண்டன.     

துணிச்சலான பூசாரி

அக்டோபர் 30 அன்று இரவு - அந்தக் கலவரம் ஏற்படுத்தியிருந்த துயரமான சூழலில் நாங்கள் சர்ச்சைக்குரிய கோவில்/மசூதி இடத்தில் பூஜை செய்வதற்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருந்த லால்தாஸ் என்பவரைச் சந்தித்தோம்.

ஹிந்து பூசாரியாக இருந்த போதிலும், ஹிந்துத்துவா தீவிரவாதிகளிடமிருந்து மரண அச்சுறுத்தல்களைப் பெற்றவராக லால்தாஸ் இருந்தார். லால்தாஸிடம் நாங்கள் நடத்திய நேர்காணல் ராமர் பெயரால் கலவரம் செய்பவர்களின் உண்மையான முகத்தைக் காட்டும் வகையில், தனித்தன்மை வாய்ந்த இந்தியாவின் நாயகன் ஒருவரிடம் நடத்தப்பட்ட நேர்காணலாகவே அமைந்தது. அவர்கள் அரசியல் மற்றும் பணத்திற்காக மதத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று லால்தாஸ் குறை கூறினார்.   

சமரசம் நிலவிய அயோத்தியின் கடந்த காலம் குறித்துப் பற்றிப் பேசிய லால்தாஸ் நாட்டில் நிலவி வந்த ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை இப்போது மோசமான நிலையில் இருப்பதாக தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தினார். வரப் போகின்ற புயலை முன்கூட்டியே அறிந்திருந்த போதிலும் அவர் அதுவும் கடந்து போய் சீரான நிலைமை மீண்டும் திரும்பும் என்ற நம்பிக்கையுடனே இருந்தார்.   

அந்த ஆவணப் படம் தேசிய விருது, பிலிம்பேர் விருதுகளை வென்றது. தூர்தர்ஷனில் ஒளிபரப்புவதற்காக நான் அதைச் சமர்ப்பித்தேன். மதச்சார்பற்ற இந்தியாவிற்கு நேர்ந்த கெடுவாய்ப்பாக அதை ஒளிபரப்ப தூர்தர்ஷன் மறுத்து விட்டது. அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தேன். பல ஆண்டுகள் கழித்து நாங்கள் அந்த வழக்கில் வெற்றி பெற்றோம். அதற்குப் பிறகு அந்தப் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட போதிலும், அதற்குள்ளாக மிகப் பெரிய சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.      

லக்னோவில் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற அந்தப் படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பூசாரி லால்தாஸ் எங்களிடமிருந்து பல கேசட்டுகளைப் பெற்றுச் சென்றார். அவருடைய பாதுகாப்பு பற்றி அவரிடம் கேட்ட போது சிரித்துக் கொண்டே ‘என்னுடைய கருத்துக்கள் இப்போது பரவலாக பலரையும் சென்றடைந்துள்ளன’ என்று கூறினார்.

ஓராண்டு கழித்து ‘சர்ச்சைக்குரிய பூசாரி கொலை செய்யப்பட்டார்’ என்ற குறிப்புடன் சிறிய அளவிலே பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு பூசாரி லால்தாஸ் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். ஹிந்துத்துவத்திற்கு நேரெதிரான ஹிந்து நம்பிக்கையுடன் மிகவும் துணிச்சலான பூசாரியாக அவர் இருந்தார் என்பதே உண்மையில் அவரைப் பற்றிய சர்ச்சையாக இருந்தது என்று செய்தி மட்டும் நம்மிடம் சொல்லப்படவே இல்லை.   

https://www.outlookindia.com/magazine/story/ayodhya-diary/299594


அவுட்லுக் இதழில் 2017ஆம் ஆண்டு வெளியான கட்டுரை

 

Comments