ஜார்ஜ் ஏ. சோப்பர்
அமெரிக்க சுகாதாரப் படை
சைன்ஸ் அறிவியல் ஆய்விதழ்
1919 மே 30 பக்கங்கள் 501-506
நல்ல ஆரோக்கியமான உடல்நலத்துடன் தொற்றுநோயைச் சுமந்து திரிபவர்கள் இருக்கிறார்கள் - அதாவது நோயை உருவாக்குகின்ற நோய்க்கிருமிகளைப் பிறரிடம் கடத்துகின்ற சிலர் தாங்கள் அந்த நோயால் பாதிக்கப்படாமல் உடல்நலத்துடன் இருக்கிறார்கள் - என்பதை 1907ஆம் ஆண்டு நியூயார்க் லாங் தீவில் பரவிய டைபாய்டு நோயின் மூலம் நிறுவிய ஜார்ஜ் சோப்பர் என்ற சுகாதரப் பொறியாளர் அனைவராலும் கொண்டாடப்பட்டார். 1918ஆம் ஆண்டு முதலாம் உலகப்போரின் இறுதிகட்டத்தில் உலகெங்கும் ஸ்பானிஷ் காய்ச்சல் என்றழைக்கப்பட்ட இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பரவியது. அந்த நோயால் பாதிக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு கோடியே எண்பது லட்சம் பேர் இந்தியாவில் மட்டும் இறந்து போயினர். அந்த நோய் குறித்து 1919ஆம் ஆண்டு சைன்ஸ் என்ற அறிவியல் ஆய்விதழில் நீண்ட கட்டுரை ஒன்றை சோப்பர் எழுதினார். கொரோனா வைரஸ் தோற்றுவித்த கோவிட்-19 நோயின் அறிகுறிகளும், இன்ஃப்ளூயன்சா நோயின் அறிகுறிகளும் ஒன்றுபோல் இருக்கின்றன. இன்றைக்கும் பலவழிகளிலும் மனித இனத்திற்கான படிப்பினையை 1918ஆம் ஆண்டு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய இன்ஃப்ளூயன்சா தொற்று நோய் வழங்கி வருவதாக ஆய்வாளர்கள் பலரும் கருதுகின்றனர்.
தொற்றுநோய் கற்றுத் தரும் படிப்பினைகள்
தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள தொற்றுநோய் இதற்கு முன்னர் எப்போதும் காணப்படாதது. இதனினும் கொடிய தொற்றுநோய்கள் இருந்துள்ள போதிலும் அவையெல்லாம் இந்த அளவிற்கு உலகெங்கும் பரவி இருந்ததில்லை. இப்போதுள்ளதைக் காட்டிலும் ஒருசில தொற்றுநோய்கள் அதிக அளவில் பரவியிருந்தாலும் அவை மிகக் குறைவான ஆபத்தையே ஏற்படுத்தியிருந்தன. மனிதப் பேரழிவு குறித்த மிகக் கொடூரமான வரலாற்றை வெள்ளம், பஞ்சம், பூகம்பம், எரிமலை வெடிப்பு போன்றவை ஏற்கனவே எழுதிச் சென்றிருக்கின்றன. ஆயினும் இதுபோன்றதொரு உலகளாவிய திடீர் பேரழிவு இதற்கு முன்னர் ஒருபோதும் ஏற்பட்டிருக்கவில்லை.
இந்த தொற்றுநோயைச் சுற்றியிருக்கின்ற
மர்மம் ஆர்வமூட்டுவதாக இருக்கின்றது. யாருக்கும் இது என்ன நோய், எங்கிருந்து வந்தது
அல்லது இதை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்று தெரியவில்லை. மனம் இப்போது நோயின் மற்றொரு
அலை மீண்டும் வந்து விடுமோ என்ற கவலையுடன் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இன்ஃப்ளூயன்சா தொற்றுநோய்களிலே நன்கு அறியப்பட்ட மிகப் பழமையான
தொற்றுநோயாக இருந்த போதிலும், அது குறித்து மிகவும் குறைவாகவே
அறியப்பட்டிருக்கிறது. தனது பொறுமையான, கடினமான உழைப்பால் அழிந்து போகும் நிலைக்கு
மற்ற கொள்ளைநோய்களைக் கொண்டு சென்ற அறிவியலால் தன்னுடைய ஆற்றலை இதுவரையிலும் இந்த நோய்க்கு
எதிராகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. நோயைப் பரப்புகின்ற கிருமி, நோயை முன்கூட்டியே
அறிந்து கொள்வது, மோசமான பாதிப்பு நிலைக்குச் செல்வது என்று அனைத்திற்கும் காரணமாக
இருக்கின்ற காரணிகள் குறித்த சந்தேகம் இன்னும் தீர்த்து வைக்கப்படாமலே இருக்கிறது.
இவையனைத்தையும் பற்றிய கோட்பாடுகளை உருவாக்குவதற்கான அருமையான வாய்ப்புகள், மிகச் சிறந்த
சில ஆய்வுகள் இருக்கின்ற போதிலும் இதுவரையிலும் அவற்றை ஏற்றுக் கொள்வது குறித்த பொதுவான உடன்பாடு எட்டப்படவில்லை.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட
நடவடிக்கைகள் பெரும்பாலும் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்த கோட்பாடுகளையே
அடிப்படையாகக் கொண்டிருந்தன. மற்ற சுவாச நோய்களைத் தடுக்கும் என்று நம்பப்பட்ட வழிமுறைகளைப்
பயன்படுத்துவதன் மூலமாக இன்ஃப்ளூயன்சாவைத் தடுத்து நிறுத்த முடியும் என்ற கருத்தும்
இருந்தது. ஆனால் இவ்வாறான இரட்டை அனுமானம்
பலவீனமான நாணல் மீது சாய்வதற்கு ஒப்பானது என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது. தொகுப்பாக
வகைப்படுத்தப்பட்டுள்ள சுவாச நோய்கள் கட்டுப்பாட்டிற்குள் வருவதில்லை. மரணத்திற்கான
மிகமுக்கியமான காரணமாக அவை இருந்த போதிலும்,
அவற்றை எவ்வாறு தடுப்பது என்று இதுவரையிலும் அறியப்படவில்லை.
பொதுமக்களின் அலட்சியம்
மூன்று முக்கியமான காரணிகள் நோய்த்தடுப்பு
வழியில் குறுக்கே நிற்கின்றன: அதில் முதலாவதாக இருப்பது பொதுமக்களின் அலட்சியம். தங்களுக்கு வரவிருக்கின்ற ஆபத்துகள் குறித்து மக்கள்
பெரும்பாலும் அக்கறை காட்டுவதில்லை. பெரும் சிக்கலும், வரம்பும் கொண்டுள்ள சுவாச நோய்த்தொற்றுகளின்
தீவிரத்தன்மை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, வரவிருக்கின்ற ஆபத்தை மறைத்து விடுகின்றது.
சாதாரண ஜலதோஷத்தில் துவங்கி நிமோனியா வரை என்று நோய்த்தொற்றுகளின் தன்மை மாறுபாடுடன்
இருக்கிறது. அவை எந்த வகையிலும் தனித்தன்மையுடன் இருப்பதில்லை. தடுமன் அல்லது நாசி
அழற்சியாகத் துவங்குகின்ற நோயின் தாக்குதல் பின்னர் தொண்டை நோவு, நீர்க்கட்டு, குரல்வளை
அழற்சி, மூச்சுக்குழல் அழற்சி மூலம் நுரையீரல் அழற்சி என்கிற நிமோனியாவாக உருவாகலாம்.
நுரையீரலை நோக்கி நோய் முன்னேறும் போது அதன் தாக்கம் அதிகரிக்கிறது. சில நேரங்களில்
மார்பில், சில நேரங்களில் தொண்டையில், இன்னும் சில நேரங்களில் தலையில் இந்த தொற்று
தொடங்குவதாகத் தெரிகிறது. அது தொடங்கிய இடத்திலேயே நின்று விடக்கூடும் அல்லது பல கட்டங்களைக்
கடந்து செல்லக்கூடும். இதுதான் ஜலதோஷத்தின் கதை. இதனை ஆபத்து நிறைந்தது என்று சொல்வதைக்
காட்டிலும் அசௌகரியமானது என்றே பொதுவாகச் சொல்லலாம். எந்த குறிப்பிட்ட வைரஸ் அதை உருவாக்குகின்றது என்பது
பற்றி தெரியவில்லை. திறமையான சிகிச்சைகள் எதுவுமின்றி, அன்றாட நடவடிக்கைகளில் எந்தவொரு
பெரிய அளவிலான குறுக்கீடும் இல்லாமலே பெரும்பான்மையான மக்கள் இந்த நோயிலிருந்து குணமடைகிறார்கள்.
மேற்கூறியவற்றோடு பெரும்பாலும்
குழப்பமான தொடர்புடையதாக மிகவும் அசாதாரணமான மற்றொரு வகை நோய்த் தொகுப்பு இருக்கின்றது.
இந்த தொகுப்பில் தொண்டை அடைப்பான், அம்மை, ஸ்கார்லட் காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகள்
அடங்குகின்றன. இந்த தொகுப்பிலேயே இன்ஃப்ளூயன்சாவும் அடங்குகிறது. ஆரம்பத்தில் தோன்றுகின்ற
அறிகுறிகள் சாதாரண ஜலதோஷத்தை ஒத்ததாகவே இருக்கின்றன. தெளிவான, ஆபத்தான அறிகுறிகள் நோயாளியிடம்
தோன்றுகின்ற வரையிலும் எவராலும் நோயின் உண்மையான தன்மை அறியப்படுவதில்லை. நோயின் அறிகுறிகள்
வெளித் தோன்றுவதற்கான காலகட்டத்திற்குள்ளாகவே மற்றவர்களும் பாதிக்கப்படும் நிலை உருவாகும்
வாய்ப்பு இருக்கின்றது.
நோய்த்தடுப்பு நடவடிக்கைகளின் தனித்த தன்மை
நோய்த்தடுப்பிற்காக மேற்கொள்ளப்பட
வேண்டிய நடவடிக்கைகளின் தனித்த தன்மை நோய்த்தடுப்பு வழியில் குறுக்கே நிற்கின்ற இரண்டாவது
காரணியாக உள்ளது. தனிநபர் ஒருவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை மீது மிகப்பெரிய தடையை
ஏற்படுத்திடாத பொதுவகையிலான நோய்களுக்காகக் கடைப்பிடிக்கப்படுகின்ற நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன்
மூலமாக குடல் நோய்த்தொற்றுகளைக் கட்டுப்படுத்த முடியும். ஆனாலும் அதுபோன்ற நடைமுறைகளை
சுவாச நோய்த்தொற்றுகளைப் பொறுத்தவரையிலும் கடைப்பிடிக்க முடியாது. நோய்த்தொற்று வைரஸைக்
கொண்டிருக்கின்ற இன்ஃப்ளூயன்சா கழிவுகள் பாத்திரத்தில் சேமித்து
வைக்கப்படுவதோ அல்லது கழிவுநீர் அமைப்பிற்குள் செலுத்தப்படுவதோ கிடையாது. டைபாய்டைப்
போல அவை முறையாகக் கையாளப்படுகின்றன. மூக்கு மற்றும் தொண்டையின் வழியாக வெளியேறுகின்ற கிருமிகள்
காற்றில் பரவி கைகள், உணவு, உடை மற்றும் பாதிக்கப்பட்ட நபரைச் சுற்றியிருக்கும் சூழல்
முழுவதையும் மாசுபடுத்துகின்றன. ஒருவருக்கு அவரே அறிந்திராத வகையில் அவரது கண்ணுக்குப்
புலப்படாமல், எந்தவித சந்தேகமும் யாருக்கும் தோன்றாத வகையில் இது நடந்து விடுகிறது.
இந்த வகையான கிருமி பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொதுவான நடைமுறைகள் மிகப் பெரிய
பலன்களை அளிப்பதில்லை.
ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்
நபர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற = சுவாச நோய்த்தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதற்கான
- நோய்த்தடுப்பு நடவடிக்கைகளே தொற்றுநோயியலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.
தங்கள் மீது நோயை ஏற்றிக் கொள்ளும் வாய்ய்பு இருப்பவர்களால், தங்களைக் காப்பாற்றிக்
கொள்வதற்காக எதையும் செய்ய முடியாது. நோய்க்கிருமிகள் நன்கு கடத்தப்படாத இடத்திலேயே
நோயின் சுமை ஏற்றப்படுகிறது. மிகவும் ஆபத்தான தொற்றுநோயாக மாறுவதற்கான
வாய்ப்பு தன்னிடமுள்ள ஜலதோஷத்திற்குக் கிடையாது என்று கருதும் ஒருவர் - மற்றவர்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாக - தனக்கு லேசான ஜலதோஷம்
இருக்கும் போதே தன்னைத் தனிமையில் அடைத்துக் கொள்வார் என்பது மனித இயல்பிலே இல்லாத
செயலாகும்.
நோய் தொற்றும் தன்மை
சுவாச நோய்த்தொற்றுகளின் அதிக தொற்றும்
தன்மை அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சிரமத்தை அதிகரிப்பது மூன்றாவது காரணியாகும்.
நோயரும்பும் காலம் நோய்த்தொற்றுகளுக்கிடையே கணிசமாக வேறுபடுகிறது. சில தொற்றுநோய்களைப்
பொறுத்தவரை அந்தக் காலம் ஒரு நாள் அல்லது இரண்டு
நாட்கள் என்று இருப்பதால், தன்னை நோய் தாக்கியிருக்கிறது என்பதை நோயாளி அறிந்து கொள்வதற்கு
முன்பாகவே அது அடுத்தவரிடம் பரவி விடுகிறது.
ஆரோக்கியத்துடன் இருப்பவர்களே நோய்க்கிருமிகளை
பெரும்பாலும் தங்களுடன் சுமந்து சென்று பரப்புகிறார்கள் என்று குறிப்பிட்டு
சுவாச நோய்களைக் கட்டுப்படுத்தும் வழியில் குறுக்கே நிற்கின்ற தடைகளின் இந்தப் பட்டியலை
முடித்துக் கொள்ளலாம். அதுபோன்றவர்கள் தாங்கள் அறியாமலே தங்களுக்கே ஆபத்தையும், பிறருக்கு
அச்சுறுத்தலையும் ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். இன்ஃப்ளூயன்சா பரவுவதைத் தடுப்பதற்காக
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் இவர்கள் குறித்து எந்தவிதமான விளைவையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
இவையனைத்தும் மிகவும் பயமுறுத்துவதாகத்
தோன்றினாலும், அதுகுறித்து யாரும் மனச்சோர்வடையத்
தேவையில்லை. முன்பெல்லாம் டைபாய்டைக் கட்டுப்படுத்துவது உண்மையில் சாத்தியமில்லாத காரியம்
என்றே தோன்றியது. நோயால் ஏற்படுகின்ற சிரமங்களைச் சரியாக அளவிடுவதே அந்த சிரமங்களைக்
கடப்பதற்கான முதல் படியாக பெரும்பாலும் இருக்கும்.
தரவுகளுக்கான முக்கியத்துவம்
இன்ஃப்ளூயன்சா தொற்றுநோயைப் பற்றி இங்கே கூறப்படுபவை இந்த எழுத்தாளரிடம்
தற்போதுள்ள பார்வை என்ற அளவிலேயே முன்வைக்கப்படுகிறது. இப்போது இது குறித்து யாராலும்
அதிகாரப்பூர்வமாகப் பேச முடியாது. அனைத்து உண்மைகளும் ஒன்றிணைக்கப்படும்போது இன்று
இருந்து வருகின்ற சில கருத்துக்களுக்கு மாற்றங்கள் தேவைப்படலாம். நிகழ்வை முழுமையாக அளவிடுவதற்கு நாம் இன்னும் நெருக்கமாகச் செல்ல வேண்டும்.
தனிப்பட்ட ஆய்வுகள் மற்றும் எண்ணற்ற ஆய்வாளர்களின் முயற்சிகள் குறித்து அறிக்கைகள்
தயாரிக்கப்பட்டு அவையனைத்தும் மதிப்பீடு செய்யப்பட
வேண்டும்.
மேற்கொள்ளப்பட்டிருக்கும் நோய்க்
கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்து இறுதியாக எதையும் சொல்வதற்கு முன்பாக
நகரங்கள், முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளில் குவிந்துள்ள புள்ளிவிவரத் தரவுகள் அனைத்தும்
வகைப்படுத்தி, அட்டவணைப்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்படும்
வரையிலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அவர்களுடைய வயது, பாலினம், உடல்நிலை,
இனம், நோயால் ஏற்பட்ட சிக்கல்கள், நோயின் விளைவுகள் பற்றி எதுவும் கூற இயலாது. நோய்
வருவதற்கு முன்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது இந்த உண்மைகள் கொண்டுள்ள தொடர்புகள் பற்றியும் அதிகம் பேச முடியாது. நிபுணர்கள் பலரின்
கவனத்தை இப்போது இந்த வேலை ஈர்த்துள்ளது. பொது சுகாதார அதிகாரிகள், பாக்டீரியாவியல்
மற்றும் நோயியலில் திறமை கொண்டவர்கள், நோய் குறித்து தீவிரமாக ஆய்வு செய்யும் வாய்ப்புள்ள
திறன் கொண்ட மருத்துவர்கள் என்று அனைவரும் தங்களுடைய அறிக்கைகளைத் தயாரித்து வருகின்றனர். தொற்றுநோயுடன் தொடர்புடைய அனைத்து அறிவியல் ஆய்வுகள்
குறித்த பதிவுகளும் ஒரு முடிவிற்கு வந்து சேர்வதற்கு இன்னும் பல மாதங்கள் அல்லது பல
ஆண்டுகள் கூட ஆகலாம்.
பல இடங்களிலிருந்து, பல கோணங்களில்
மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைகளின் மூலம் நல்ல விஷயம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன்
நாம் எதிர்பார்க்கலாம். இத்தனை ஆண்டுகளாக இன்ஃப்ளூயன்சாவின் உண்மையான தன்மையை மறைத்து
வைத்திருந்த மர்மங்கள் எந்த அளவிற்குத் தெளிவாக்கப்படும் என்பதற்கு காலமே பதில் சொல்லும்.
உலகளாவிப் பரவியுள்ள இன்ஃப்ளூயன்சாவைத் தவிர வேறேந்த நோய் குறித்தும் ஆய்வு செய்வது இந்த அளவிற்கு மிகவும்
கடினமானதல்ல. இந்த நோய் வருகிறது, பரவுகிறது. திடீரென்று மறைந்து விடுகிறது. அதன் வருகையின் போது அதைக் கவனமாக, சிரமப்பட்டு
அறிந்து கொள்வதற்கான நேரம் எதுவும் கிடைக்காத காரணத்தால் அது பயங்கரமான ஆற்றலைக் கொண்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக இல்லாமல் போவது அல்லது அதீத பரவல் கொண்டிருப்பது என்று அந்த நோயிடம்
உள்ள இரண்டு தன்மைகளும் அதன் மீதான ஆய்விற்குக் குறுக்கே நிற்கின்றன.
தொற்றுநோய்களுக்கு இடையில் இருக்கின்ற இடைவெளியில் இன்ஃப்ளூயன்சா முற்றிலும்
இல்லாமல் போய் விடுகிறதா என்ற கேள்வி நிச்சயம் கேட்கப்படும். இந்த கேள்வி குறித்த கருத்துகள்
வேறுபடுகின்றன. உலகளாவிய இன்ஃப்ளூயன்சா தொற்று காய்ச்சல் தனி வகையிலான தொற்று என்று
சிலர் கருதுகின்றனர். மற்றவர்களோ சமீபத்தில் நாம் பார்த்ததைப் போன்று தன்னுடைய ஆபத்தான
அம்சத்தை அது சாதாரணமாக வெளிப்படுத்துவதில்லை என்றும் நம்மிடையே அது எப்போதுமே இருந்து
வருகிறது என்றும் நினைக்கின்றனர்.. வழக்கமான தொற்று நோய் மற்றும் இந்த அசாதாரணமான உலகளாவிய
இன்ஃப்ளூயன்சா கொண்டிருக்கும் அறிகுறிகள் பலவும் ஒன்று போலவே இருக்கின்றன. பொதுவான தொற்றுநோய்களுக்கு காரணமான
குறிப்பிட்ட தீவிர வகை வைரஸே சமீபத்தில் ஏர்பட்டிருக்கும் உலகளாவிய தொற்றுநோய்க்கான காரணம் என்று ஒருவேளை விளக்கப்படலாம்.
சமூக இடைவெளி
சமூகத்திலிருந்து இன்ஃப்ளூயன்சாவை
வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியைக் கண்டிருப்பதாகவே
தோன்றுகிறது. அதாவது தனிமைப்படுத்தலை முழுமையாக ஏற்படுத்துவது என்ற ஒரேயொரு வழிதான்
அதை முற்றிலும் தடுக்கின்ற வழியாக உள்ளது. நோய்த்தொற்று ஏற்படக் கூடியவர்களிடமிருந்து,
வைரஸைக் கடத்துகின்ற திறன் கொண்டவர்களைத் தள்ளி வைப்பது அல்லது நேர்மாறாக அதைச் செய்வது
அவசியமாகும். உண்மையில் இது மிகவும் கடினமான நடைமுறையாகும். ஏனென்றால் முதலாவதாக வைரஸை
உற்பத்தி செய்பவர்கள் அனைவரையும் கண்டுபிடிப்பதற்கான சாத்தியம் என்பதே கிடையாது. இரண்டாவதாக
யார், யார் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் என்பதையும் முழுமையாக அறிந்து கொள்ள
முடியாது. நகரங்களிலோ அல்லது நகரங்களின் சில பகுதிகளிலோ அல்லது நகரங்களில் உள்ள நபர்களிடமோ தனிமைப்படுத்தலை
முழுமையாக அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியமும் இருப்பதில்லை. அவ்வாறாக தனிமைப்படுத்துவதென்பது
சில சிறிய நகரங்கள், கிராமங்களில் மட்டுமே சாத்தியப்படலாம். சிலர் இதை வெற்றிகரமாக
முயன்று பார்த்திருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கை பல சந்தர்ப்பங்களில் வெறுமனே நோய்த்தாக்குதலை
ஒத்தி வைப்பதை மட்டுமே நிகழ்த்திக் காட்டியுள்ளது என்பதாலேயே அதனை எந்த வகையிலும் தவறு என்று கூறி விட முடியாது.
இன்ஃப்ளூயன்சா தொற்று எவ்வாறு தோன்றியது
இன்ஃப்ளூயன்சா தொற்று போன்ற இயற்கை
நிகழ்விற்கு பொதுவான காரணம் இருப்பதாகக் கருதுவது மிகவும் இயல்பானது. உலகளாவிய தொற்றுநோயை
உருவாக்கும் அளவிற்கு அவ்வாறு பொதுவானதாக இருக்கிறது என்று பெரும்பாலான மக்கள் கருதுகின்ற ஒரே காரணம் வளிமண்டம்
அல்லது நிலப்பரப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உண்மையில் அது மிகப் பழமையான
கருத்தாகும். பொதுமக்களைப் பொறுத்தவரை இது மட்டுமே மற்ற அனைத்து காரணங்களைக் காட்டிலும்
அவர்களிடம் இதுவரையிலும் தப்பிப் பிழைத்துள்ள காரணமாக உள்ளது. ஒரு வகையில் சிடென்ஹாமின்
தொற்றுநோய் கட்டமைவு கோட்பாடு என்றே அது அழைக்கப்படுகிறது. இந்தக் கோட்பாடு மதிப்பிழந்து
விட்டது என்று பலமுறை கூறப்பட்ட போதிலும், சிடென்ஹாம் நம்பியதைப் போன்றே நம்புகின்ற
பலர் இன்னும் இருந்து வருகின்றனர். அவர்கள் இந்த நோய் சில ஆண்டுகளில், மற்ற பருவங்களைக்
காட்டிலும் சில குறிப்பிட்ட பருவங்களில் வித்தியாசமான இருப்பை எடுத்துக் கொள்வதற்கு
நமது அறிவிற்கு அப்பாற்பட்ட பொதுவான சூழல்கள்
உதவுவதாக நம்புகின்றனர்.
1889-90ஆம் ஆண்டின் தொற்றுநோய்களின்
பிற்பகுதியில் மனிதனுடனான தொடர்பிலிருந்து முற்றிலும் தனித்து அப்போதிருந்த உலக நிலைமைகளுடன்
இன்ஃப்ளூயன்சா பரவலுக்கான காரணம் ஏதோவொரு வகையில் தொடர்பு கொண்டிருந்தது என்றே பலரும்
கருதினர். 1917-18ஆம் ஆண்டின் மிகவும் அசாதாரணமான
குளிர்காலம், அதைத் தொடர்ந்து வந்த கடுமையான கோடைகாலமுமே பெரும்பாலும் அண்மையில்
ஏற்பட்ட தொற்றுநோய்க்குக் காரணமாகும் என்று ஒருசிலர் கருதுகிறார்கள். நடைபெற்ற பெரும்
யுத்தமே அந்த கொள்ளை நோயைத் தூண்டியது என்று வேறு சிலர் நம்புகின்றனர். ஆனாலும் ஒருசிலர்
கூட அந்த நோய் ஒரே நேரத்தில் பல இடங்களில் தன்னிச்சையாக உருவாகி இருக்கலாம் என்று கருதிடவில்லை.
இந்தக் கருத்துக்களுக்கு ஆதரவாக வைக்கப்பட்ட வாதங்கள் நம்பத்தகுந்தவையாக இல்லாமல்,
வெறுமனே புத்திசாலித்தனம் கொண்டவையாக மட்டுமே இருந்தன. அறிவியல் பகுப்பாய்வின் சோதனையில் அந்த வாதங்கள் எதுவும் வெற்றியை எட்டவில்லை.
1918ஆம் ஆண்டின் பெரும் தொற்றுநோய்க்கு
உடனடிக் காரணம் ஒரு தொற்று வைரஸ் ஆகும். உலகெங்கிலும் பரவுகின்ற வகையில் அது ஒருவரிடமிருந்து
மற்றவருக்கு கடந்து சென்றது என்பதற்கான மிகப் பெரிய ஆதாரங்கள் இப்போது கிடைத்துள்ளன.
இந்த வைரஸ் பரவிய முறை மற்ற சுவாச நோய்த்தொற்றுகளைப் போன்றே இருந்தது என்று நம்பப்பட்டது.
இந்த முறையில் வைரஸ் பரவியது என்ற நம்பிக்கைக்கு
இந்த தொற்றுநோய் மிகவேகமாகப் பரவியது, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மக்கள்
பயணிப்பதைக் காட்டிலும் அந்த பரவலின் வேகம் அதிகமாக இருக்கவில்லை போன்றவையே காரணங்களாக
இருந்தன.
அது எந்த வைரஸ், எவ்வாறு அது உடலில்
இருந்து வெளியேறுகிறது அல்லது உடலுக்குள் நுழைகிறது, நோயின் எந்த காலகட்டத்தில் அது
மற்றவர்களுக்குப் பரவுகின்றது என்பதை யாரும் இதுவரையிலும் சரியாகக் குறிப்பிடவில்லை.
சிலர் பைஃபர் பேசிலஸ் தான் காரணி என்று கருதுகின்றனர். தனிப்பட்ட முறையில் வடிகட்டக்கூடிய
வைரஸ் காரணமாக இருக்கலாம் அல்லது பைஃபர் பேசிலஸுடன் இணைந்து செயல்படுவதாக அது இருக்கலாம்
என்று வேறு சிலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட அனைவருமே இன்ஃப்ளூயன்சா, நிமோனியா
ஆகியவை தனித்தனியாக வரக்கூடிய நோய்கள் என்பதையும், நிமோனியாவுக்கு எதிரான எதிர்ப்பாற்றலை
மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் இன்ஃப்ளூயன்சா குறைப்பதன் காரணமாகவே அதிக அளவில் இறப்பு ஏற்படுகிறது என்பதையும்
ஏற்றுக் கொள்கிறார்கள். சுவாச வகையாக இருப்பதால், மூக்கு மற்றும் வாய் வழியாக இந்த
வைரஸ் உடலை விட்டு வெளியேறுகிறது என்று நம்பப்படுகிறது. அது மூக்கு, வாய் அல்லது கண்கள்
வழியாக உடலுக்குள் நுழைவதாக இருக்க வேண்டும்.
இது போன்ற கேள்விகள் எழுப்பப்படலாம்
- இன்ஃப்ளூயன்சா மற்றும் பைஃபர் பேசிலஸ் எப்போதும் நம்முடனே இருக்கின்றன என்றால் அதன்
சாதாரண வகைகளிலிருந்து தீவிரம், தொற்று மற்றும் ஏற்படுத்துகின்ற சிக்கல்களுடன் இந்த
நோய் திடீரென்று ஏன் வேறுபட வேண்டும்? இந்தக் கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை. இந்தக்
கேள்விக்குப் பதிலளிப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. ஒன்று - தொற்று தோன்றிய தொலைதூர
இடத்திலிருந்து நாகரிகமடைந்த நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டது என்று கருதுவது. மற்றொன்று
உள்நாட்டிலேயே தோன்றியது என்று அதைக் கருதுவது. இந்தக் கோட்பாடுகளை அவற்றின் அனைத்து விவரங்களுடனும் இங்கே விவரிக்க
முடியாது. எந்த வகையிலும் நம்ப வைப்பதாக இந்த வாதங்கள் இருக்கவில்லை. உலகளாவிய தொற்றுநோயைப்
பற்றி முழுமையாக விளக்குவதற்கு - இந்த தொற்று நோய் எங்கு தோன்றியிருந்தாலும் அது எவ்வாறு
உருவானது என்பதை நிரூபித்திட வேண்டும்.
தொற்றுநோயின் தோற்றம் - சிக்கலான உயிரியல் நிகழ்வு
தொற்றுநோயின் தோற்றம் சந்தேகத்திற்கு
இடமின்றி சிக்கலான ஓர் உயிரியல் நிகழ்வாகவே இருக்கிறது. வைரஸின் தாக்குதலுக்கு ஆளானவர்களில்
பெரும் பகுதியினரிடம் இருக்கின்ற எதிர்ப்பாற்றலைக் கடந்து செல்லும் திறன் கொண்ட ஒரு
வைரஸ் உருவாகிறது. வைரஸின் தாக்கும் ஆற்றலைக் குறைப்பது நோய்த்தொற்றுடைய
கிருமியுடன் தொடர்புடைய வழக்கமான நிகழ்வாகும். ’கட்டுப்படுத்தப்பட்ட
ஒடுக்கம்’ என்பது நோயெதிர்ப்புத் துறையில் உள்ள மிகச் சிறந்த ஆய்வுகளின் அடித்தளமாக
பாஸ்டரின் காலத்திலிருந்தே இருந்து வருகிறது. நடைமுறையில் தன்னிடம் உள்ள நோய்க்கிருமிக்கான
பண்புகளை இழந்த ஒரு வைரஸை எளிதில் பாதிக்கக்கூடிய விலங்குகளுக்குள் செலுத்துவதன் மூலம்
அதனுடைய வீரிய நிலைக்கு உயர்த்த முடியும் என்பது நன்கு நிறுவப்பட்டுள்ள உண்மையாக இருக்கிறது.
தீங்கை விளைவிக்கின்ற வீரியத்தன்மை கொண்ட நோய் தன்னிச்சையாக மீண்டும் தோன்றுவது சில
நேரங்களில் லேசான தொற்றுநோய்களில் தோன்றுவதைப் போன்ற செயல்பாடைக் கொண்டிருப்பதாகவே
தோன்றுகிறது.
எங்கோ ஓரிடத்தில் இருப்பவர்களிடம்
பழக்கமாகி அதன் விளைவாக நோய் சகிப்புத்தன்மையைப்
பெற்றவர்களிடம் இருக்கின்ற இன்ஃப்ளூயன்சா வைரஸ், அந்த வைரஸுக்கு அன்னியமாக இருக்கும்
மற்றவர்களிடையே அறிமுகப்படுத்தப்படுகின்ற போது அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இயல்பாகவே
அது நோய் பரவலுக்கு வழிவகுத்து, உலகளாவிய தொற்றை விளைவிக்கிறது.
மற்ற தொற்றுநோய்களுடன் ஒப்பீடு
செய்யப்படும் போது எந்த அளவிற்கு பரவலாக, விரைவாக சுவாச நோய்த்தொற்றுகள் பயணிக்கின்றன
என்பது தெளிவாகிறது. நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களின் சுவாசக் குழாயில்
கிருமிகளின் மிகப் பெரிய பரிமாற்றம் எவ்வாறு நிகழ்கின்றது என்பதை அது காட்டுகிறது.
நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்து மற்ற நபர்களின் மூக்கு மற்றும் வாய்க்குள் பாக்டீரியாவால்
எந்த அளவிற்கு எளிதாக நுழைய முடியும் என்பதைக் காண்பது உண்மையில் கவலையளிப்பதாகவே இருக்கிறது.
இந்த உண்மைகளை ஏற்றுக்கொள்வது நன்மைகளை உருவாக்கித் தரும் என்றால் அவை நிச்சயம் மறைக்கப்படக்கூடாது.
மக்கள் சந்திக்கும் இடங்களிலெல்லாம்
வாயில் உள்ள கிருமிகளின் பரிமாற்றம் நடக்கின்ற போது தொற்றுநோய் நமது கவனத்திற்கு வருகிறது.
அது மட்டுமல்லாமல் அது குறித்து உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்றால், சுவாச நோய்த்தொற்றுகள்
எந்த அளவிற்கு ஏற்படக்கூடும் என்பதையும் அது விளக்குகிறது. சமீபத்திய இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் போலவே உலகளாவி இருக்கின்ற
ஜலதோஷ தொற்றுநோய்கள் அவ்வப்போது மட்டுமே ஏற்படுகின்றன என்று சிலர் நினைக்கிறார்கள்.
அவை மிகவும் பாதிப்பில்லாமல் லேசாக வந்து போவதால் அவற்றின் தொற்றும் தன்மை குறித்து
யாருக்கும் அதன் மீது சந்தேகம் ஏற்படுவதில்லை. இந்த நோயின் அபாயகரமான அலை தோன்றுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னரே இன்ஃப்ளூயன்சா தொற்றுநோய்
அமெரிக்கா முழுமையும் பரவியிருந்தது. ஆனாலும் அது ஒரு சில இடங்களில் மட்டுமே கவனத்தை
ஈர்ப்பதாக இருந்தது.
ஜலதோஷ தொற்றுநோய்கள் அடிக்கடி இருப்பது
பிற சுவாச நோய்களை ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தித் தருகிறது. பொதுவான
சுவாச நோய்த்தொற்றுகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அந்த நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்ற
வரையிலும் இன்ஃப்ளூயன்சாவை முழுமையாகப் புரிந்து கொண்டு அதனைக் கட்டுப்படுத்த இயலாது
என்று இங்கிலாந்து உள்ளாட்சி வாரியத்தின் சுகாதார
மருத்துவ அதிகாரி சர் ஆர்தர் நியூஷோல்ம் கூறியுள்ளார். இன்ஃப்ளூயன்சா காய்ச்சலை ஆய்வு
செய்வதற்கான வழி ஜலதோஷத்தைப் பற்றிய ஆய்வை மேற்கொள்வதே ஆகும் என்ற அவருடைய கருத்தை இந்தக் கட்டுரையின் எழுத்தாளர் மனதார ஏற்றுக்
கொள்கிறார். ஜலதோஷத்தைப் பற்றி ஆய்வு மேற்கொள்வதற்கு கிராமம் அல்லது எல்லைக்குட்படுத்த
சுற்றுச்சூழல் கொண்ட இடமே சிறந்தது. இந்தக் காலம் அதை ஆய்வு செய்ய வேண்டிய காலமாகவே இருக்கிறது.
சாதாரணமான காலங்களில் சுவாசக் குறைபாடு
ஏற்படுவது, அதனை மிகச்சாதாரணமாகக் கருதுகின்ற அலட்சியம், தற்போது அவற்றிடமிருந்து பாதுகாத்துக்
கொள்வதில் நம்மிடம் உள்ள இயலாமை ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே இந்த
தொற்றுநோய் நமக்குத் தந்திருக்கும் சிறந்த படிப்பினை ஆகும். டைபாய்டு, மலேரியா மற்றும்
பல நோய்களைப் போன்று சுகாதாரப் பணிகளின் மூலமாக அவற்றைக் கட்டுப்படுத்த இயலாது. நிர்வாக
நடைமுறைகள், சுய பாதுகாப்புக்கான பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வது மூலமாகவே அவை
கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
தொற்று நோய் மீண்டும் வருமா?
தொற்று நோய் மீண்டும் வருமா என்ற
கேள்விக்கு ‘வராது’ என்று யாராலும் சாதகமாகப் பதிலளிக்க முடியாது. பொதுவாக இன்ஃப்ளூயன்சா
ஒரு நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட அலைகளாக வீசும். தெளிவற்ற, லேசான அலைகளை செப்டம்பர்
மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா அனுபவித்திருந்தது. அதற்குப் பின்னர்
உள்ளூரில் பல இடங்களில் புதிய நோய் பரவலை ஒத்த இடையூறுகள் ஏற்பட்டன. இங்கிலாந்தில்
ஆபத்தான பாதிப்பு புதிதாகப் பதிவாகியுள்ளது. மற்றொரு தொற்றுநோய் அமெரிக்காவில் வருமா
என்றால், அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
பொது சுகாதாரத்தைப் பேணுவது மற்றும்
தொகுப்பாக இருக்கின்ற சுவாச நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும்
நடவடிக்கைளே நோய் மீண்டும் புதிதாகப் பரவினால்
எடுக்கப்பட வேண்டிய சிறந்த நடவடிக்கைகளாக இருக்கும் என்றே தோன்றுகிறது. குறிப்பிட்ட
தன்மை இல்லாததாகத் தோன்றுகின்ற நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்து சந்தேகம் எழுந்தால்,
‘ஒன்றும் செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் ஏதாவதொன்றைச் செய்வது நல்லது’ என்ற பொது
மனநிலையை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் கொடுக்கப்படும் கூடுதல் கவனிப்பால் பொது
ஆரோக்கியம் பாதிக்கப்படப் போவதில்லை.
முதலாவதாக நாம் செய்யத் தகாத விஷயங்களைப்
பார்க்கலாம். பொதுக்கருத்து அவ்வாறாக இல்லாத வரையிலும் தியேட்டர்கள், தேவாலயங்கள்,
பள்ளிகளை மூடுவது, பொதுவாக அனைவரும் முகக்கவசங்களை அணிவது போன்றவை விரும்பத்தக்கவை
அல்ல. ஓரிடத்திலிருந்து இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கும்போது தவிர - காற்று தேவைப்படும்
என்பதால் - நோயாளிகளுக்கு முகக்கவசம் அணிவிக்கக் கூடாது. தங்களுக்கு நோய் இல்லை என்று உறுதிப்படுத்தப்படும் வரையிலும்
நோய் இருப்பதாகச் சந்தேகத்திற்கு உள்ளானவர்கள் முகக்கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும்.
இன்ஃப்ளூயன்சா நோயாளிகளை மற்ற நோயாளிகளிடமிருந்து தனியாகப் பிரித்து வைக்க வேண்டும்.
இன்ஃப்ளூயன்சா நோயிருப்பவரை பெரியம்மை போன்ற தொற்றுநோய் இருப்பவராகவே கருத வேண்டும்.
நோய்வாய்ப்பட்டவர்கள் அருகே இருப்பது, சுவாச அறிகுறிகளுடன் இருப்பவர்
உண்ணும் பாத்திரங்கள்,
உடைகள், அவர் இருமுகின்ற, தும்முகின்ற காற்று போன்றவை ஆபத்து நிறைந்தவை. ஒருவரிடம்
புலப்படுகின்ற அறிகுறிகள் காட்டுவதைக் காட்டிலும் இன்னும் மோசமான நிலையிலேயே அவர் இருப்பதாகக்
கருத வேண்டும்.
தனிநபர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
தேவையற்ற தனிப்பட்ட ஆபத்துகளைத்
தவிர்ப்பது, ஆரோக்கியத்தை மேம்படுத்துவது போன்றவற்றின் மீது அதிக கவனம் செலுத்தப்படுவது
சிறந்தது. இது குறித்து புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.
பின்வரும் பன்னிரண்டு சுருக்கமான
விதிகளில் பொதிந்துள்ள, நினைவில் கொள்ள வேண்டிய மிக அத்தியாவசியமான விஷயங்கள் குறித்த
இந்தக் கட்டுரையாளரின் கருத்துகள் செப்டம்பரில் தயாரிக்கப்பட்டன. அவை ராணுவ சர்ஜன்
ஜெனரலால் பரிந்துரைக்கப்பட்டு, போர் செயலாளரின் உத்தரவின் மூலம் சாத்தியமான அனைத்து
விளம்பரங்களும் தரப்படும் வகையில் வெளியிடப்பட்டன.
1. இன்ஃப்ளூயன்சா ஒரு மக்கள்திரள்
நோய் என்பதால் தேவையற்ற கூட்டத்தைத் தவிர்க்க
வேண்டும்.
2. இருமும் போதும், தும்மும் போதும்
மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ள வேண்டும் - உங்களிடம் இருக்கின்ற கிருமிகளை மற்றவர்கள்
மீது நீங்கள் பரப்புவதை அவர்கள் விரும்புவதில்லை.
3. உங்களுடைய மூக்கு மட்டுமே சுவாசிப்பதற்கானது,
வாய் அல்ல - அந்தப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
4. மூன்று சு-களை நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள் - சுத்தமான வாய், சுத்தமான தோல், சுத்தமான ஆடைகள்.
5. நடக்கும் போது பதட்டமின்றியும்,
பயணம் மற்றும் தூங்கும் போது உங்கள் உடலைக் கதகதப்பாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
6. இரவுகளில் - வீட்டில் எப்போதும்,
அலுவலகத்தில் நடைமுறையில் வாய்ப்பிருக்கும் போதும் ஜன்னல்களைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.
7. வாய்ப்புக் கிடைத்தால் உங்களுடனான
போரில் உணவு உங்களை வென்று விடும் - உங்கள் உணவைத் தேர்ந்தெடுத்து, நன்றாக மென்று சாப்பிடுங்கள்.
8. உங்கள் எதிர்காலம் உங்கள் கைகளில்தான்
இருக்கிறது - சாப்பிடுவதற்கு முன்பு நன்றாகக்
கைகளைக் கழுவுங்கள்.
9. செரிமானத்தின் கழிவுப்பொருட்களைச்
சேர விடாதீர்கள் - எழுந்தவுடன் ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.
10 துண்டு, கரண்டி, முள்கரண்டி, கிளாஸ் அல்லது கப்
போன்றவற்றை சுத்தம் செய்யாமல் அல்லது வேறொருவர் பயன்படுத்தியதை நீங்கள் பயன்படுத்த
வேண்டாம்.
11. இறுக்கமான உடைகள், காலணிகள்,
கையுறைகள் ஆகியவற்றைத் தவிர்த்து விடவும். இயற்கையை உங்கள் கைதியாக்கி விடாதீர்கள்.
உங்கள் கூட்டாளியாக அதனை மாற்ற முயலுங்கள்.
12. தூய்மையான காற்றை முழுமையாகச்
சுவாசிக்கவும் - ஆழ்ந்து சுவாசிக்கவும்.





Comments