மாயா பிரபு
நியூயார்க் நகரம் முழுவதும் பரவிய டைபாய்டு அங்கே சமையலறையில் இருந்த மேரி மல்லனுடன் தொடர்புபடுத்தப்பட்ட பிறகு பொதுசுகாதரத்திற்கான அச்சுறுத்தல் என்ற முத்திரை அவர் மீது குத்தப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான கண்டனம் அநியாயமாகத் தெரிவிக்கப்பட்டதா?
மேரி மல்லன் இருபத்தியாறு ஆண்டுகள் வாழ்ந்து இறந்து போன நார்த் பிரதர் தீவு
நார்த்
பிரதர் தீவு நியூயார்க் ஈஸ்ட் ரிவரில் பதினாறு ஏக்கர் பரப்பளவில் சிறிய தீவுப்
பகுதியாக அமைந்துள்ளது. பிராங்க்ஸுக்கும், பிரபலமான சிறைச்சாலை தீவான
ரைக்கருக்கும் இடையில் அந்த தீவு அமைந்துள்ளது. கைவிடப்பட்டு விட்ட அந்த தீவு தற்போது
நீர்ப் பறவைகளுக்கான சரணாலயமாக இருந்து வருகிறது. ரிவர்சைடு மருத்துவமனையின் சிதைந்த
தளவாடங்களுடன் உள்ள பழைய சிவப்பு செங்கல் கட்டிடங்கள் உதிர்ந்து போய் குட்ஜு என்ற
தாவரத்தால் சூழப்பட்டு மூச்சு திணறிக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவமனை 1960களில்
மூடப்படுவதற்கு முன்பாக பெரியம்மை, காசநோய், போதைக்கு அடிமையான இளைஞர்கள் என்று
பல்வேறுபட்ட நோயாளிகளுக்கு அடைக்கலம் அளித்து வந்தது. அந்த இடத்தில் கால்
நூற்றாண்டுக்கும் மேலாக ‘டைபாய்டு மேரி’ என்றழைக்கப்பட்ட நோயாளியான குற்றம்
எதுவும் செய்யாத பெண்மணி ஒருவர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்.
மேரி
மல்லன் அயர்லாந்திலிருந்து வந்து குடியேறியவர். நார்த் பிரதர் தீவுக்கு 1907ஆம்
ஆண்டில் வந்து சேர்க்கப்பட்ட வேளையில் மருத்துவமனையில் இருந்த மற்ற கைதிகளைப் போல முப்பத்தேழு
வயதான அவரிடம் எந்தவொரு அறிகுறிகளுமே காணப்படவில்லை. அந்த தீவில் இருந்த ஓர் அறை
கொண்ட பங்களாவிற்குள் சிறைபிடித்து வைக்கப்பட்ட போது, அந்த நியாயமற்ற சிறைவாசம் அவரைக்
கடுமையாகத் தாக்கியது. ‘என் வாழ்க்கையில் எனக்கு டைபாய்டு வந்ததே இல்லை, நான் எப்போதும்
ஆரோக்கியமானவளாகவே இருந்து வந்துள்ளேன். தொழுநோயாளியைப் போல துரத்தப்பட்டு, இங்கே ஒரு
நாயைப் போல நான் ஏன் கட்டாயமாகத் தனித்து வாழ
வேண்டும்?’ என்ற கேள்வியை அவர் பத்திரிகை நிருபர் ஒருவருக்கு 1909ஆம் ஆண்டு எழுதிய
கடிதத்தில் எழுப்பியிருந்தார்.
வீட்டு
சமையற்காரராக இருந்த மேரி ‘பொது சுகாதாரத்திற்கான அச்சுறுத்தல்’ என்று கருதப்பட்டார்.
அவர் 1906ஆம் ஆண்டு கோடையில் லாங் தீவில் சார்லஸ் ஹென்றி வாரன் என்ற வங்கியாளர்
ஒருவரின் குடும்பத்திற்காக சமையல் வேலை செய்வதற்கான பணியில் சேர்ந்தார். அந்த
ஆண்டு அமெரிக்காவில் பதின்மூன்றாயிரம் பேர் இறந்து போவதற்குக் காரணமாக இருந்த
டைபாய்டு காய்ச்சலால் ஆகஸ்ட் மாதத்தில் வாரன் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் நோய்வாய்ப்பட்டனர்.
பொதுவாக பணக்கார ஆய்ஸ்டர் பே சமூகங்களைக் காட்டிலும் சேரி குடியிருப்புகளுடன்
தொடர்புடையதாகவே அந்த நோய் இருந்து வந்தது. வாடகை வருமானம் தனக்குக் கிடைக்காமல்
போய் விடும் என்று பயந்த அந்த வீட்டின் உரிமையாளர் விசித்திரமான அந்த நோய் பரவலின்
மூலத்தைக் கண்டறிவதற்காக சிறிது காலத்திற்குப் பிறகு புலனாய்வாளர் ஒருவரை
நியமித்தார். ஜார்ஜ் சோப்பர் என்ற அந்தப் புலனாய்வாளர் டைபாய்ட்
தொற்றுநோயின் வளர்ச்சியைக் கண்காணிக்கும் அனுபவம் பெற்றிருந்த சிவில் பொறியாளர்
ஆவார். வீட்டுக்கு பால் வழங்கப்படும் முறை சுகாதாரமானதாக உள்ளதா என்பதைச் சரிபார்ப்பதுடன்,
கிணற்று நீர் மாசுபாடு குறித்தும் சோதிப்பவராகவும் அவர் இருந்தார்.
நியூயார்க் அமெரிக்கன் பத்திரிகையில் 1909ஆம் ஆண்டு வெளியான
‘டைபாய்டு மேரி’ என்றழைக்கப்பட்ட மேரி மல்லன் குறித்த
சித்தரிப்பு
பல்வேறு
நேர்காணல்களை நடத்திய சோப்பர் காலவரிசையை ஒன்றுபடுத்தி நோயைப் பரப்பிய சந்தேகத்திற்கிடமான
நபரைக் கண்டறிந்தார். டைபாய்டின் தோற்றம் புதிய சமையற்காரர் ஒருவருடைய வருகையுடன்
தொடர்புடையதாக இருந்ததை அவர் அறிந்து கொண்டார். சமையற்காரரான மேரி மல்லன்
தொடர்ந்து சமைக்கப்படாத உணவை - புதிய பீச் துண்டுகளுடன் கூடிய ஐஸ்கிரீம் இனிப்பை -
தயாரித்து வந்ததாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. நோய்க்குக் காரணமான பாக்டீரியாவான
சால்மோனெல்லா டைஃபிக்கு ஏற்ற சிறந்த வாகனமாக அந்த உணவு செயல்படக் கூடியது என்பதை
சோப்பர் ஏற்கனவே நன்கு அறிந்திருந்தார்.
சமையற்காரர்
மேரியின் கடந்த காலத்தை ஆழமாகத் தோண்டிப் பார்த்த சோப்பர் அதில் ஒரு முறைமை
இருந்ததைக் கண்டறிந்தார்: ‘நான் அறிந்த வரையில் கடந்த பத்து ஆண்டுகளில் மேரி
மல்லன் எட்டு குடும்பங்களில் சமையல்காரராக வேலை செய்திருந்தார்’ என்று 1907ஆம்
ஆண்டு எழுதிய சோப்பர் ‘அவருடைய வருகையைத் தொடர்ந்து அந்த எட்டு குடும்பங்களில் ஏழு
குடும்பங்களில் டைபாய்டு தொற்று ஏற்பட்டிருந்தது. ஆனாம் மேரி தன்னிடமிருந்த
தொற்றுநோயால் ஒருபோதும் பாதிக்கப்படாமல் தப்பித்தவராகவே இருந்து வந்தார்’. என்று
குறிப்பிட்டிருந்தார்.
மேரியின்
புதிய முதலாளியின் பார்க் அவென்யூ வீட்டிற்கு 1907 மார்ச் மாதம் சோப்பர் சென்றிருந்தார்.
அங்கிருந்த மேரியிடம் டைபாய்டை அவர் பரப்பி வருவதாகக் கூறினார். மலம், சிறுநீர்,
ரத்த மாதிரிகளை அவர் தர வேண்டுமென்று சோப்பர் கோரினார். அந்த நேரத்தில் 'ஆரோக்கியமான
நோய் கடத்திகள்' என்று அறிவியலாளர்களிடம்
இருந்த புதியதொரு கருத்தைப் பற்றி எதுவும் கேள்விப்பட்டிராதவராகவே மேரி இருந்தார்.
சோப்பர் கூறியவற்றை கேலிக்குரியது என்று நிராகரித்த மேரி, முட்கரண்டி ஒன்றைக்
காட்டி சோப்பரை அச்சுறுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தார். விரக்தியடைந்து போன
சோப்பர் தனது விசாரணைக் குறிப்புகளை நகர சுகாதார அதிகாரிகளிடம் கொடுத்தார்.
அவர்கள் காவல்துறையினரை அணுகினர். மேரியின் மலத்தில் அதிக அளவில் டைபாய்டு பேசிலி
இருந்தது தெரிய வந்த பின்னர் நார்த் பிரதர் தீவுக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
மேரிக்கு
வழங்கப்பட்ட அந்த சிறைவாசம் நியாயமானது அல்லது அவசியமானது என்று மேரியின்
சமகாலத்தவர் எவரும் கருதவில்லை. டைபாய்டு தொற்றுநோயிலிருந்து மீண்ட பிறகும் நான்கு
சதவிகித மக்கள் தங்களுடைய உடலில் அந்தப் பாக்டீரியாவைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக ரென்செலர்
பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டைச் சார்ந்த W.P.மேசன் 1909ஆம் ஆண்டு சைன்ஸ் என்ற
அறிவியல் ஆய்விதழில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். ‘தற்போது அதுபோன்று
நியூயார்க் மாநிலத்தில் அநேகமாக 560 நபர்கள் இருக்கிறார்கள்... அவர்கள் அனைவரையும்
நம்மால் காவலில் வைக்க முடியாது எனும் போது ஒருவரை மட்டும் ஏன் தனிமைப்படுத்தி
சிறையில் அடைத்து வைக்க வேண்டும்…’ என்ற கேள்வியை அவர் அந்தக் கட்டுரையில் எழுப்பியிருந்தார்.
அந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி இனிமேல் சமையற்காரராக வேலை செய்யக்கூடாது என்ற
நிபந்தனையுடன் மேரியை விடுவித்தார்.
மற்ற நோயாளிகளுடன் மருத்துவமனையில் காத்திருக்கும் மேரி
மல்லன்
ஆனால்
1915ஆம் ஆண்டில் ஸ்லோன் மகப்பேறு மருத்துவமனையில் டைபாய்டு பரவி இருபத்தைந்து பேர்
நோய்வாய்ப்பட்டு இருவர் இறந்த போது மேரி மல்லன் அங்குள்ள சமையலறையில் வேலை செய்தது கண்டறியப்பட்டது.
அப்போது பொதுமக்களின் கருத்து ‘டைபாய்டு மேரியின்’ மீது திரும்பியது.
பத்திரிகையாளர் ஒருவர் அவரை ‘பாக்டீரியா வளர்ப்பு மனிதக் குழாய்’ என்று அழைத்தார்;
இன்னொரு பத்திரிகையாளர் ‘நடமாடும் டைபாய்டு தொழிற்சாலை’ என்று அவரைப் பற்றி எழுதினார்.
மீண்டும் நார்த் பிரதர் தீவிற்கே மேரி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். தனிமையில்
இருபத்திமூன்று ஆண்டுகள் தங்கியிருந்த மேரி அங்கேயே இறந்து போனார்.
சிறை பிடிக்கப்பட்ட டைபாய்டு தொழிற்சாலைப் பெண்
தனிமைப்படுத்தல்
என்ற அசாதாரணமான கருத்தை இப்போது கோவிட்-19 தொற்றுநோய் மழுங்கடித்து மிகவும்
சாதாரணமானதாக ஆக்கியுள்ளது. ஏற்கனவே இருந்து வருகின்ற சமூக ஏற்றத்தாழ்வுகளை கோவிட்-19
தொற்று கூர்மைப்படுத்தியுள்ளது. நோய்க்கிருமி குறித்த அச்சுறுத்தல் என்ற அடையாளத்தை
குறிப்பிட்ட சில சமூகங்களுடன் மட்டும் இணைத்துக் காண்கின்ற அபாயத்தையும் அது
உருவாக்கியுள்ளது. புலம்பெயர்ந்து வந்த, தொழிலாளர் வர்க்கம் சார்ந்த அந்தப் பெண்ணை
அவளிடம் உள்ள நோயைக் காட்டி குற்றவாளியாக ஆக்குவது என்பது மிகவும் எளிதில் ஏற்றுக்
கொள்ளக்கூடிய காரியமா?
‘பொதுவாக
அவர்களைப் பற்றி மிகக் குறைவாகவே நமக்குத் தெரியும்’ என்று எழுதியிருந்த சோப்பர் சமையல்
தொழிலில் இருப்பவர்கள் அனைவரும் மறைமுகமாக தொற்றுநோயைப் பரப்புகின்ற அச்சுறுத்தலுடன்
இருப்பதால் சமையல்காரர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்குமாறு தனது
சகாக்களிடம் 1919ஆம் ஆண்டில் வலியுறுத்தியிருந்தார். மருத்துவ வரலாற்றாசிரியரான
ஜூடித் வால்சர் லீவிட் பெண் என்ற காரணத்தால் மட்டுமே மேரி மல்லன் தனிமைப்படுத்தப்படவில்லை
என்றாலும் அவருக்கு நேர்ந்தவற்றைப் பொறுத்தவரை அவரது பெண்மையும் முக்கிய காரணியாகவே
இருந்தது என்று எழுதினார். ‘கத்தோலிக்கராக, அயர்லாந்தில் பிறந்தவராக, தனித்து வேலை
செய்யும் பெண் என்பதால் மட்டுமே அவர் அடைத்து வைக்கப்படவில்லை, அவர் எதிர்கொண்ட சமூகத்தின்
அடையாளங்களாக இருந்த நடுத்தர வர்க்க வல்லுநர்களே சில எதிர்பார்ப்புகளை உருவாக்கி,
தவறான எண்ணங்களைத் தூண்டி விட்டனர்... அதுவே அவர்கள் மற்றவர்களிடமிருந்து அவரை மாறுபட்டவர்,
இழந்து விடத் தக்கவர் என்று கருதுவதற்கு உதவியது’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மேரி
மல்லனின் மரணத்தின் போது நூற்றுக்கணக்கான ஆரோக்கியமான நோய் கடத்திகள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
நியூயார்க் பேக்கரி ஒன்றின் உரிமையாளர் உணவு தொடர்பான வேலைகளைச் செய்வதற்காக
விதிக்கப்பட்டிருந்த தடைகளை மேரியைப் போலவே மீறியிருந்தார். ஆயினும் மேரி மட்டுமே
தனிமைப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டார்.
https://www.gavi.org/vaccineswork/long-view-tragedy-typhoid-mary
2021 ஜூன் 18 அன்று வெளியான கட்டுரை
Comments