ஜார்ஜ் ஏ. சோப்பர்
புல்லட்டின் ஆஃப் நியூயார்க்
அகாடமி ஆஃப் மெடிசின்
1939 அக்டோபர்
மேரி மல்லன்
டைபாய்டு நோய் கடத்தி (கேரியர்) என்று
மிகவும் பிரபலமானவராக மேரி மல்லன் இருந்ததை நன்கு அறிந்திருந்த போதிலும் இந்த உலகம்
அவரது வாழ்க்கை பற்றி மிகக் குறைவாகவே அறிந்திருக்கிறது. அவரை நான் கண்டுபிடித்தது
பற்றி அமெரிக்க மருத்துவ சங்கத்தின் ஆய்விதழில் 1907ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று வெளியிடப்பட்ட
கட்டுரை விளக்குகிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நியூயார்க் நகர நிர்வாகத்தால் இறுதியாக
மேரி மல்லன் சிறைப்படுத்தப்படும் வரையிலும் அவருடைய வாழ்க்கை குறித்து என்னால் எழுதப்பட்டு
1919 ஜூலையில் ராணுவ அறுவை சிகிச்சை இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையும் அவரைப் பற்றி
எழுதப்பட்டுள்ளது. கடந்த முப்பதாண்டுகளில் மேரி மல்லன் குறித்து அச்சிடப்பட்டு வெளியான
எண்ணற்ற குறிப்புகளில் எந்தவொரு முழுமையான அதிகாரப்பூர்வமான ஆதாரங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
பிழைகளின்றி இருக்க வேண்டிய அந்தக் குறிப்புகள் பெரும்பாலும் ஏராளமான பிழைகளுடனே இருந்து
வருகின்றன. சில சமயங்களில் அதுபோன்ற பிழையான தகவல்கள் நகலெடுக்கப்பட்டு மேலும் விரிவாக
விவரிக்கப்பட்டும் உள்ளன. அதுபோன்று திரிக்கப்பட்டு வெளியாகியுள்ள கதைகள் உண்மைகளிலிருந்து
முற்றிலும் மாறுபட்டே இருக்கின்றன. உண்மையில் - டைபாய்டு மேரியைப் பற்றி கற்பனை செய்யப்பட்டிருக்கும்
அந்தக் கதைகளைக் காட்டிலும் அவரைப் பற்றிய உண்மைகளே சுவாரஸ்யத்துடன் இருக்கின்றன. இதுவரையிலும்
அவரைப் பற்றிய முக்கியமான உண்மைகள் முழுமையாகச் சொல்லப்படாத நிலையில் மருத்துவத்துறையில்
இருப்பவர்களுக்குப் பயன்படுகின்ற சில விஷயங்களை இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்
நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.
ஜார்ஜ் சோப்பர்
முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது
1907இல் மேரி மல்லனை நான் முதன்முதலாகப் பார்த்தேன். அப்போது அவருக்கு சுமார் நாற்பது
வயது இருக்கும். அவர் அப்போது உடல், மனதளவில் நலமாகவே இருந்தார். ஐந்து அடி ஆறு அங்குல
உயரம், இளமஞ்சள் நிறத் தலைமுடி, தெளிவான நீல நிறக் கண்கள், ஆரோக்கியமான உடல் நிறம்,
சற்றே தீர்மானகரமான வாய், தாடையுடன் அவர் காணப்பட்டார். உடல் எடை கொஞ்சம் அதிகம் இல்லாதிருந்தால்,
மிக எளிதில் அவரை தடகளவீரர் என்றே அழைக்க முடியும் என்ற அளவிற்கு மேரி நல்ல உருவத்துடன்
இருந்தார். தன்னுடைய வலிமை, சகிப்புத்தன்மை குறித்து மிகுந்த தற்பெருமை கொண்டவராக இருந்து
வந்த போதிலும், அதை அந்த நேரத்திலோ, அல்லது அதற்குப் பிறகு வந்த பல வருடங்களிலோ அவர்
ஒருபோதும் பயன்படுத்திக் கொண்டதே இல்லை. அவருடைய நடை, மனம் எதுவும் வித்தியாசமாக இருந்ததில்லை.
அவை இரண்டிற்குமிடையே பொதுவான தனித்தன்மை இருந்தது. பெண் என்பதைக் காட்டிலும் மேரி
ஓர் ஆணைப் போலவே நடந்து கொண்டார் எனவும், அவருடைய மனம் ஆண்தன்மையுடனே இருந்தது எனவும்
நீண்ட காலக் காவலில் வைத்திருந்த போது அவரைப் பற்றி நன்கு அறிந்திருந்தவர்கள் கூறினர்.
மேரி அயர்லாந்தின் வடக்கே பிறந்தார் என்றே
நினைக்கிறேன். உள்ளடக்கம், எழுத்துகளைப் பொறுத்தவரை அவரால் மிகச் சிறந்த கடிதங்களை
எழுத முடிந்தது. அவர் பெரிய, தெளிவான, தன்னம்பிக்கை நிறைந்த, சீரான தன்மையுடன் கடிதங்களை
எழுதினார். சிறைப்படுத்தப்பட்டிருந்த நாட்களில் மிகச் சிறந்த வாசிப்பாளராகவும் அவர்
இருந்தார். தினசரிகளை அவர் ஒருநாளும் தவற விட்டதே கிடையாது. மேரியை நான் முதன்முதலாகச்
சந்தித்த போது, அவருக்கென்று வீடு என்று எதுவும் இல்லை. ஒருவேளை அவருடைய உறவினர்கள்
அல்லது நண்பர்கள் என்று யாராவது இங்கே அல்லது ஐரோப்பாவில் இருந்திருக்கக்கூடும் என்றாலும்,
அதுகுறித்து எதையும் அவர் வெளிப்படுத்திக் காட்டியதில்லை. என்னுடைய விசாரணைகளுக்காக
சென்றிருந்த கனெக்டிகட்டில் உள்ள பிரிட்ஜ்போர்ட்டில் ஒருமுறையும், புரூக்ளினில் மற்றொரு
முறையும் என்று நான் அவரது சகோதரியுடன் இரண்டு முறை பேசியிருப்பது நினைவில் உள்ளது
என்றாலும் இப்போது என்னால் அதை நிரூபிக்க முடியாது.
மேரி மரணமடைந்த போது அவருடைய
உறவினர்கள் மரணம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு, இரண்டு செய்தித்தாள்களில்
பிராங்க்ஸ் மாகாண பதிலி உத்தரவின் பேரில் விளம்பரம் வெளியிடப்பட்டது. அவர்களைப் பற்றிய
தகவல்களைப் பாதுகாப்பதற்கென்று வழக்கறிஞர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். சிறிதளவு
பணத்தை மட்டுமே விட்டுச் சென்றிருந்த மேரியின் உடலைக் காண யாரும் அங்கே வரவில்லை. உடல்நிலை
சரியில்லாமல் அல்லது வேறு பிரச்சனைகளில் இருந்தபோதும்கூட, அவரைப் பார்ப்பதற்கு யாரும்
முன்வந்திருக்கவில்லை. அவரும் யாரையும் அழைத்ததில்லை.
முந்தைய கோடைகாலத்தின் போது உருவான டைபாய்டு
காய்ச்சல் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவில் 1906-'07 குளிர்காலத்தில்
நியூயார்க்கில் ஆய்ஸ்டர் பேயில் உள்ள திருமதி ஜார்ஜ் தாம்சனின் வீட்டில் டைபாய்டு மேரியை
நான் கண்டுபிடித்தேன். அந்த வீடு நியூயார்க் வங்கியாளரான ஜெனரல் வில்லியம் ஹென்றி வாரன்
என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. மூன்று பேர் கொண்ட குடும்பம், ஏழு ஊழியர்களுடன்
கோடை மாதங்களைக் கழிப்பதற்காக வாரன் அந்த வீட்டில் தங்கியிருந்தார். ஆகஸ்டு மாதத்தின்
பிற்பகுதியில் அந்த இடத்தில் டைபாய்டு தோன்றியது. அந்த வீட்டிலிருந்த பதினொரு பேரில்
ஆறு பேர் நோய்வாய்ப்பட்டனர். நோய் ஏற்பட்ட உடனேயே தொற்றுநோய் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில் தட்டச்சு செய்யப்பட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.
இருந்த போதிலும் நோய்க்கான காரணம் சரியாகக் கண்டறியப்படவில்லை. அந்த வீட்டின் உரிமையாளர்
அந்த நோயின் மர்மம் தீர்க்கப்படவில்லை என்றால் அடுத்து வரவிருக்கும் பருவத்தில் தன்னுடைய
வீட்டில் தங்க விருப்பமுடையவர்களைக் கண்டறிவது தனக்குச் சிரமமாகி விடும் என்று கருதினார்.
இன்றிருப்பதைக் காட்டிலும் அந்த நாட்களில்
டைபாய்டு காய்ச்சல் மிகவும் சாதாரணமாக இருந்ததையும், அந்த நோய் எவ்வாறு பரவுகிறது என்ற
அறிவு அந்தக் காலகட்டத்தில் மிகவும் குறைவாக இருந்தது என்பதையும் நாம் இங்கே நினைவில்
கொள்ள வேண்டும். நியூயார்க் நகரில் 1906ஆம் ஆண்டு பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை
3,467 என்றும், இறப்புக்கள் 639 என்றும் இருந்தன. அநேகமாக டைபாய்டின் பாதிப்பு குறித்த
உண்மையான அளவு இதை விடக் கூடுதலாகவே இருந்திருக்கும்.
டைபாய்டு வருவதற்கு மாசுபட்ட நீர் அல்லது
பால் போன்றவை காரணமாக இருக்கலாம் என்றே அப்போது பொதுவான நம்பிக்கை இருந்து வந்தது.
ஒரு சிலர் அழுகுகின்ற கரிமப் பொருள்கள் அல்லது வெளியேறுகின்ற கழிவுநீர் வாயு போன்றவை
அதற்கான காரணமாக இருக்கலாம் என்ற நம்பிக்கையுடன்
இருந்தனர். ராயல் சொசைட்டியில் 1906ஆம் ஆண்டின் இறுதியில் ஹார்ராக்ஸ் என்பவர் கட்டுரை
ஒன்றை வாசித்தார். கழிவுநீர் அல்லது சாக்கடை சுவர்களில் இருந்து வெளியேறுகின்ற கழிவுநீர்
வாயுவின் மூலமாக டைபாய்டு மற்றும் பிற பாக்டீரியாக்கள் பரவக் கூடும் என்று அவர் அந்தக்
கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தார். அதற்கான சாத்தியம் இருப்பதை நினைவில் கொள்ள
வேண்டும் என்று அப்போது ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் தெரிவித்திருந்தது.
அந்த நூற்றாண்டின் இறுதியில் நூற்றுக்கணக்கான
நோயாளிகள் என்ற அளவிலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் டைபாய்டு தொற்றுநோய் எப்போதாவது
பரவி வந்தது. கல்லூரிகள், பல்கலைக்கழக மாணவர்களிடையே அடிக்கடி டைபாய்டு காணப்பட்டது.
இப்போது அந்த நிலைமை முடிந்து போய் விட்டது. கல்லூரி மற்றும் நகர அதிகாரிகள் தங்கள்
மீது பொறுப்பை மாற்றிக் கொள்ள முயல்வதைப் பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது.
விவரிக்க முடியாததொரு பிடிவாதத்துடன் கிராமங்கள்,
தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுடன் டைபாய்டு தொற்று ஒட்டிக் கொண்டது. தனி மனிதர்கள், சிறிய
குழுக்கள் என்று ஆரோக்கியமாக இருந்து வந்த சமூகங்களில் அங்கும் இங்குமாக அந்த தொற்று
தோன்றியது குறித்து எந்தவொரு விளக்கமும் கிடைக்கவில்லை.
மேரி மல்லனின் தலையெழுத்து டைபாய்டு காய்ச்சல்
பரவலைச் சுற்றி இருந்து வந்த பெரும்பகுதி மர்மத்தைத் துடைக்கின்ற வகையிலேயே இருந்திருக்க
வேண்டும். அந்த நோய் குறிப்பிட்ட காலங்களில் அவ்வப்போது தோன்றுவதாக இருந்தது. தொற்றுநோய்
வடிவத்தில் ஏற்பட்டபோது, வேறெதையும்விட பெரும்பாலும் அதற்கான சரியான விளக்கத்தை மனிதர்களே
அளித்தனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1907ஆம் ஆண்டு வந்த டைபாய்டு காய்ச்சலுடனான
நல்லதொரு அனுபவம் எனக்குக் கிடைத்தது. அப்போது அடிரோண்டாக்ஸில் உள்ள வாரென்ஸ்பர்க்கில்
கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த இளங்கலை மாணவனாக நான் இருந்தேன். நீண்டகால
டைபாய்டு வரலாற்றைத் தன்னிடத்தே கொண்டிருந்த ஒரு வீட்டிலிருந்து இரண்டு டைபாய்டு நோயாளிகளையும்
அவர்களுடைய குடும்பத்தினரையும் வெளியேற்றி,
வீட்டு உரிமையாளரின் சம்மதத்துடன் பிரச்சனையை இருந்த இடம் தெரியாமல் முழுமையாகத் தீர்த்து
வைப்பதற்குத் தேவையான மடத்தனமான துணிச்சல்
என்னிடம் அப்போது இருந்தது. ஆண்டுகள் செல்லச் செல்ல என்னுடைய அனுபவமும் கூடியது. இறுதியில்
நியூயார்க் நகரம், நியூயார்க் மாகாணத்தில் உள்ள எனது வாடிக்கையாளர்கள் தொற்றுநோய்கள்
குறித்த பல விசாரணைகளை மேற்கொள்வதற்கும், அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கும் என்னை
அழைக்க ஆரம்பித்தனர். என்னை ‘தொற்றுநோய் போராளி’ என்றே அவர்கள் அழைத்தனர்.
தொற்று பாதிப்பு ஏற்பட்ட ஆய்ஸ்டர் பே பகுதி
நோய் தாக்கிய நாட்கள், நோயறிதல், நோயின்
தோற்றம் பற்றி இருந்த முக்கியமான உண்மைகள் அனைத்தையும் ஒன்றிணைத்ததே ஆய்ஸ்டர் பேக்குச்
சென்ற நான் செய்த முதல் வேலையாகும். அடுத்ததாக
அதற்கு முன்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்த புலனாய்வாளர்களால் சந்தேகிக்கப்பட்டு ஆய்வு
மேற்கொள்ளப்பட்ட நோய்த்தொற்றின் சாத்தியமான ஆதாரங்களை, வழிகளை நான் சரிபார்க்க வேண்டியிருந்தது.
முந்தைய சோதனைகள் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், முக்கியமான சில
விவரங்களை யாரோ சரிவரக் கவனிக்கவில்லை என்பதே என்னுடைய அனுமானமாக இருந்தது. ஆனால் அதில் என்னால் ஏமாற்றமே அடைய முடிந்தது. தங்களுடைய
வேலைகளை அவர்கள் முழுமையாகச் செய்திருந்தனர். எவ்வளவோ முயற்சிகளைச் செய்த போதிலும்
அதில் தவறு என்ற ஒன்றை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
கடற்கரையில் வாழ்ந்து வந்த ஒரு வயதான இந்திய
பெண்மணி வீணாகிப் போன மட்டி மீன்களை வீட்டிற்கு கொண்டு வந்திருந்தார் என்ற தோராயமான
விளக்கம் மட்டுமே அப்போது இருந்தது. அந்த விளக்கம் நான் மேற்கொண்ட தீவிர விசாரணையை
நிச்சயமாக நிறுத்தவில்லை. கிணறு, மேல்நிலைத்
தொட்டி, வடிகுட்டை, மலம் கழிக்கும் இடம், புல்வெளியில் கிடந்த உரம், உணவுப் பொருட்கள்,
குளிக்கும் இடம் உள்ளிட்ட அருகே இருந்த அனைத்து இடங்களின் சுகாதார நிலைமைகள் மீதிருந்த
எனது கவனத்தை நான் அந்த வீட்டில் இருந்தவர்கள் மீது திருப்பினேன். நோய் தோன்றுவதற்கு
சற்று முன்னதாக வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் ஒன்று நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த அந்த
வீட்டில் நிகழ்ந்திருக்கலாம் என்றே நான் அப்போது கருதினேன்.
நோயைக் கடத்துபவர்களாக அதனைச் சுமந்து
கொண்டு யாரேனும் அந்த வீட்டிற்கு வந்திருந்தார்களா? நோய் கடத்திகள் என்ற அந்த சிந்தனை
என்னைப் பொறுத்தவரை முற்றிலும் புதிது இல்லை.
ஏற்கனவே என்னுடைய தொற்றுநோய் வேலையின் போது அவ்வாறானவர்கள் மீது – சிறுநீரில் நோயைச்
சுமந்து கொண்டிருந்தவர்கள் - நான் கவனம் செலுத்தியிருக்கிறேன். நோயிலிருந்து குணமடைந்தவர்களில்
கணிசமான சதவிகிதத்தினர் - தாங்கள் குணமடைந்து பல வாரங்களுக்குப் பின்னரும் – நோயின்
பாதிப்பு கொண்ட சிறுநீரைக் கழித்து வருவது நன்கு அறியப்பட்டே இருந்தது. அவர்களுக்குக்
கொடுப்பதற்காக யூரோட்ரோபினை வசதியான வடிவத்தில் நான் உருவாக்கி வைத்திருந்தேன். நோயாளிகள்
அனைவரும் தங்களை ‘சிறுநீரில் பேஸிலஸ் இல்லாதவர்’ என்று நிரூபித்துக் கொள்ளும் வரையிலும்,
மருத்துவக் கவனிப்பிலிருந்து அவர்களை விடுவித்து விடக் கூடாது என்ற உத்தரவை நான் பிறப்பித்திருந்தேன்.
அப்போதிருந்த பாக்டீரியாவியல் முறைகளின்
மூலமாக மலத்தில் உள்ள டைபாய்டு கிருமியை அடையாளம் கண்டு கொள்வதென்பது கடினமான காரியமாகவே
இருந்தது. டைபாய்டு புலனாய்வுகள் குறித்து ட்ரையரில் 1902ஆம் ஆண்டு கோச் ஆற்றிய உரையை
நான் வாசித்தேன். அந்த உரை அதே ஆண்டில் புதியதொரு வளர்ப்பு ஊடகத்தைக் கொண்டு ஆரோக்கியமான
நபர்களின் மலத்தை ஆராய்ந்து பெற்ற முடிவுகளை முன்வைத்து கான்ராடி, ட்ரிகால்ஸ்கி ஆகியோர்
எழுதிய ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கோச்சின் அறுபதாவது பிறந்தநாளின்
போது 1903ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பு டைபாய்டை உருவாக்குவதில் நோய்
கடத்திகளின் பங்களிப்பு குறித்த பல ஆவணங்களைக் கொண்டிருந்தது. மேலும் ஜெர்மனியில் இருந்த
மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளும் பலனளித்தன. அதற்கு முன்பாக நான் அவற்றில் பெரும்பாலானவற்றை
வாசித்ததில்லை மேரி மல்லன் வழக்கில் என்னுடைய பணிகளை முடித்த போது அந்தக் கட்டுரைகளின்
மீது டாக்டர் சைமன் ஃப்ளெக்ஸ்னர் எனது கவனத்தைத் திருப்பினார்.
அதுபோன்ற ஆய்வுகள் எதுவும் அமெரிக்காவில்
மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. டைபாய்டு மேரியின் கண்டுபிடிப்பு நீண்டகால நோய் கடத்திகள்
நோயால் பாதிக்கப்பட்ட மலத்துடன் இருப்பதை அமெரிக்காவில் அல்லது ஆங்கில மொழி பேசுகின்ற
நாட்டில் முதன்முறையாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. ஆனால் அந்த வகையிலான நோய்
கடத்திகள் இருப்பது மிகவும் சாதாரணம் என்றே இப்போது கருதப்படுகிறது.
நோய் தோன்றுவதற்கு முன்னதாக அந்த ஆய்ஸ்டர்
பே வீட்டில் நோய் கடத்திகள் யாராவது இருந்தார்களா என்று கண்டறியும் முயற்சியில் இறங்கிய
நான் விரைவிலேயே விலக்குதல் செயல்முறை மூலமாக அந்த சமையற்காரப் பெண்மணியைச் சென்றடைந்தேன்.
ஆனால் நான் சென்ற போது அங்கே அவர் இல்லை. தொற்றுநோய் ஏற்பட்ட பிறகு அங்கிருந்து அவர்
வெளியேறி விட்டார். அது ஆறு மாதங்களுக்கு முன்பாக நடந்திருந்தது. அவரைப் பற்றி என்னால்
முடிந்த அனைத்தையும் கண்டறிய முயன்ற போதிலும் அதிக தகவல்கள் எனக்குக் கிடைக்கவில்லை.
அவர் ஒரு நல்ல சமையற்காரர், அவரது ஊதியம் மாதத்திற்கு நாற்பத்தைந்து டாலர்கள், மிஸஸ்.ஸ்ட்ரைக்கர்ஸ்
என்ற நிறுவனம் மூலமாக அவர் அங்கே வேலைக்கு வந்தார் என்று திருமதி.வாரன் என்னிடம் கூறினார்.
இருபத்தெட்டாவது தெருவில் இருந்த மிஸஸ்.ஸ்ட்ரைக்கர்ஸ் என்ற நிறுவனம் அனைவராலும் நன்கு
அறியப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனமாகும். மற்ற ஊழியர்களுடன் அந்த சமையற்காரப் பெண்மணி
நன்கு பழகவில்லை என்பதால் அந்த ஊழியர்கள் அவரைப்
பற்றி அதிகம் அறிந்து வைத்திருக்கவில்லை. ‘அவர் சுத்தமாக இருக்கவில்லை. அவரது பெயர்
மேரி மல்லன்’ என்பது போன்ற தகவல்கள் மட்டுமே அவர்களிடமிருந்து எனக்கு அந்தச் சமையற்காரரைப்
பற்றி தெரிய வந்தன.
ஆனாலும் அங்கே கிடைத்த சில விவரங்கள் மிகவும்
முக்கியமானவையாக இருந்தன. அந்த சமையற்காரர்
ஆகஸ்ட் 4 அன்று வேலைக்கு வந்திருந்தார். அங்கே இருந்தவர்களில் முதல் நபர் ஆகஸ்ட்
27, கடைசி நபர் செப்டம்பர் 3 என்று நோய்வாய்ப்பட்டிருந்தனர். அந்த வீட்டில் இருந்த
நோயாளிகள் அனைவருமே அந்த ஏழு நாட்களுக்குள்தான் நோயின் தாக்குதலுக்குள்ளாகி இருந்தனர்.
அந்தப் புதிய சமையற்காரரின் வருகைக்குப் பிறகே அனைத்து பாதிப்புகளும் நடந்திருந்தன.
அந்தச் சமையற்காரரை நோய் கடத்தி என்று
எடுத்துக் கொண்டால் அந்தக் குடும்பம் அவர் மூலமாக எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பது முதலில்
தெளிவாகத் தெரியவில்லை. ஏனென்றால் அங்கே ஏராளமான ஊழியர்கள் இருந்தார்கள். பொதுவாக போதிய
வெப்பநிலைக்கு உயர்த்தப்படாமல் உணவு பாதிக்கப்படும் வகையில் சமையற்காரரால் உணவு சமைக்கப்படுவது
மிகவும் அரிதானது. அந்த குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமையில் அங்கே இருந்த அனைவருக்கும்
மிகவும் பிடித்த இனிப்பு வகை உணவை மேரி தயாரித்திருந்தார் என்பதை நான் அறிந்து
கொண்டேன். அவரால் தயாரிக்கப்பட்ட அந்த உணவு புத்தம் புதிய பீச் பழங்கள் வெட்டி வைக்கப்பட்டு,
உறைய வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீம். நுண்ணுயிரிகள் எதுவுமில்லாத வகையில் தனது கைகளைச்
சுத்தப்படுத்திக் கொள்ளாத சமையற்காரர் ஒருவர் மூலமாக அந்தக் குடும்பத்தில் நோயை ஏற்படுத்துவதற்கு
அதைக் காட்டிலும் சிறந்த வழி எதுவும் நிச்சயம் இருக்காது என்றே கருதினேன்.
சமையற்காரரை அனுப்பி வைத்த அந்த வேலைவாய்ப்பு
நிறுவனத்திற்குச் சென்று நிலைமையை விளக்கினேன். வேறு எங்கெல்லாம் அந்தப் பெண்மணி வேலை
செய்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவர்களிடம் மேரி பற்றிய குறிப்புகளைத்
தருமாறு கேட்டுக் கொண்டேன். தரக்கூடியதாக இருந்த அனைத்து உதவிகளையும் அவர்களிடமிருந்து
நான் பெற்றுக் கொண்ட போதிலும் அந்தத் தகவல்கள் எனக்குப் போதுமானவையாக இருக்கவில்லை.
அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டு மிக நல்ல
இடங்களை நோக்கி நகர்ந்து செல்பவராகவே மேரி தோன்றினார்; அவர் எந்தவொரு இடத்திலும் நீண்ட
காலம் தங்கியிருக்கவில்லை. தான் பெற்றுக் கொண்ட வேலைகள் அனைத்தையும் அவர் குறிப்பிட்ட
நிறுவனம் அல்லது முகமை மூலமாகப் பெற்றுக் கொண்டிருக்கவில்லை. சில நேரங்களில் விளம்பரங்கள்
மூலமாகவும் அவருக்கு வேலை கிடைத்திருந்தது.
மேரி மல்லன் பணிபுரிந்த சில இடங்களைக்
கண்டுபிடித்து, அசாதாரணமான நிகழ்வுகள் ஏதாவது அங்கே நடந்திருக்கின்றனவா என்று கேட்டறிந்தேன்.
நான் கற்றுக் கொண்டவற்றை விரிவாக விவரிக்க விரும்புகிறேன். அதற்கு அதிக நேரம் எடுக்கும்.
ஏழு வீடுகளில் உருவாகியிருந்த தொற்றுநோயின்
காலவரிசையை நான் கண்டுபிடித்தேன். நோயின் மூலத்தைப் பற்றிய முழுமையான அறியாமை, அடுத்தவர்
யாராக இருக்கும் என்ற பயம், நோயாளிகள் அடைந்த துயரம், வீடுகளில் இருந்த ஏற்பாடுகளில்
சீர்குலைவு, பொதுவான குழப்பம் என்றிருந்த எதிர்பாராத தன்மையைப் பொறுத்தவரை அந்த வீடுகள்
அனைத்தும் ஒரே மாதிரியாகவே இருந்தன. தங்களுடைய சமையற்காரரே தொற்றுநோய்க்கான காரணம்
என்ற சந்தேகம் அங்கிருந்தவர்களிடம் ஒருபோதும் தோன்றியிருக்கவே இல்லை.
மேரி மல்லன் மாமரோனெக்கில் இருப்பதாக என்னிடமிருந்த
பழைய பதிவுகள் தெரிவித்தன. நியூயார்க் குடும்பம் ஒன்று அங்கே ஒரு வீட்டில் கோடைகாலத்தைக்
கழிப்பதற்காக வந்து தங்கியிருந்தது. அந்த வீட்டிற்குச் சென்று வந்திருந்த இளைஞனுக்கு
பத்து நாட்கள் கழித்து டைபாய்டு பாதிப்பு ஏற்பட்டது. அந்த நாள் 1900 செப்டம்பர் 4.
கிழக்கு ஹாம்ப்டனுக்குச் சென்றிருந்த போது அந்த இளைஞன் நோயுடன் தொடர்பை ஏற்படுத்திக்
கொண்டிருக்கலாம் என்று அப்போது கருதப்பட்டது. ஏனெனில் அந்த இடம் டைபாய்டு அதிகமாக இருந்த
மொன்டாக் ராணுவ முகாமிற்கு அருகே அமைந்திருந்தது. நோய்த்தொற்றின் திட்டவட்டமான பாதை
எதுவும் காட்டப்படவில்லை.
மேரி மல்லன் பணியாற்றிய பகுதிகள்
நியூயார்க் நகரில் இருந்த குடும்பத்துடன்
1901-02 ஆம் ஆண்டில் சுமார் பதினொரு மாதங்கள் மேரி தங்கியிருந்தார். 1901 டிசம்பர்
9 அன்று டைபாய்டுடன் இருந்த சலவை செய்யும் பெண்மணி ஒருவர் ரூஸ்வெல்ட் மருத்துவமனைக்குக்
கொண்டு வரப்பட்டார். டாக்டர் ஆர்.ஜே.கார்லில் அந்த நோயாளியைக் கவனித்துக் கொண்ட போதிலும்,
அவர் குறித்த விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
மேரி 1902ஆம் ஆண்டு மெய்னில் உள்ள டார்க்
ஹார்பரில் இருந்த புதிய வீட்டிற்கு அழைக்கப்பட்டார். நியூயார்க் நகரத்து வழக்கறிஞரான
கோல்மன் டிரேட்டனுக்கு கோடைகாலத்திற்காக அந்த வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. சமையற்காரர்
வந்து சேர்ந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு அங்கே ஜூன் 17 அன்று டைபாய்டு காய்ச்சல்
தோன்றியது. அதன் பிறகு ஏழு நாட்களுக்குப் பிறகு இரண்டாவது நபர் அந்த நோயால் பாதிக்கப்பட்டார்.
இரண்டு நாட்கள் கழித்து மூன்றாவது நபருக்கு டைபாய்டு வந்தது. மிகவிரைவிலேயே அங்கிருந்த
ஒன்பது பேரில் ஏழு பேர் நோய்வாய்ப்பட்டனர். டைபாய்டிலிருந்து தப்பிப் பிழைத்த இருவரில்
ஒருவரான டிரேட்டன் சில ஆண்டுகளுக்கு முன்பு டைபாய்டால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்பதால்
அவர் ஏற்கனவே நோயெதிர்ப்புத் திறன் கொண்டவராகவே கருதப்பட்டார். அங்கே டைபாய்டிலிருந்து
தப்பிப் பிழைத்த மற்றொருவராக அங்கிருந்த சமையற்காரர் இருந்தார்.
பயிற்சி பெற்ற செவிலியர் ஒருவர் அந்த சமையற்காரரைப்
பின்தொடர்ந்தார். அன்றைய தினம் வேலைக்கு வந்திருந்த பெண் தாக்கப்பட்டார். அந்த நோயின்
தோற்றம் குறித்து பாஸ்டனைச் சேர்ந்த டாக்டர்.ஈ.ஏ.டேனியல்ஸ், பிலடெல்பியாவைச் சேர்ந்த
டாக்டர் லூயிஸ் ஸ்டார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அந்த வீட்டில் முதலாவதாகப் பாதிக்கப்பட்ட
நோயாளி அந்த வீட்டின் கதவருகே நின்று காவல் நிற்பவர்; அவர் ஒருவேளை வெளியில் தொற்று
ஏற்பட்டு நோயை வீட்டிற்குக் கொண்டு வந்திருக்கலாம் என்று சிலர் நம்பினர். டாக்டர் டேனியல்ஸ்
முதல் மூன்று நோயாளிகளும் ஒரே நேரத்தில் எங்கோ பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றனர் என்றே
கருதினார். ஆனால் அவரது அறிக்கையைப் பரிசோதித்த என்னால் அவருடன் உடன்பட முடியவில்லை.
அந்த மூவரும் ஒரே உணவையோ அல்லது ஒரே தண்ணீரையோ பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை நான் கண்டறிந்தேன்.
வீட்டு உரிமையாளர் மிகவும் வருத்தப்பட்டார்.
அவருக்கு சரியான உதவி கிடைக்கவில்லை. நோயுற்றவர்களைக் கவனித்துக் கொண்ட டிரேடன், மேரி
மல்லன் ஆகியோர் அந்தக் குடும்பத்திற்கு நோயைக் கொண்டு வந்து சேர்த்திருந்த பல வேலைகளிலும்
கலந்து கொண்டனர். வேலைகள் முடிந்ததும் மேரி அளித்த அனைத்து உதவிகளுக்கும் மிகவும் நன்றியுள்ளவராக
இருப்பதாக அவரிடம் தெரிவித்த டிரேடன், அவருடைய ஊதியத்திற்கும் கூடுதலாக ஐம்பது டாலர்களைத்
தான் பரிசளித்ததாக என்னிடம் கூறினார்.
1904ஆம் ஆண்டு லாங் தீவின் சாண்ட்ஸ் பாயிண்டில்
திரு.ஹென்றி கில்சி என்பவரின் வீட்டில் நோய் தோன்றிய வேளையிலும் மேரி அங்கே இருந்தார்.
அந்த இடத்தில் குடும்பத்தினர் நான்கு பேர், ஊழியர்கள் ஏழு பேர் என்று மொத்தம் பதினொரு
பேர் இருந்தனர். சமையற்காரர் ஜூன் 1 அன்று அங்கே வந்து சேர்ந்தார். பத்து நாட்கள் அந்த
இடத்தில் இருந்த சலவை செய்யும் பெண்மணி ஜூன் 8 அன்று டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்த தோட்டக்காரர், தலைமை சேவகரின் மனைவி, இறுதியாக தலைமை சேவகரின் மனைவியின்
சகோதரி ஆகியோரும் நோயால் பதிக்கப்பட்டனர். மூன்று வாரங்களுக்குள் நோய்வாய்ப்பட்டவர்களின்
எண்ணிக்கை நான்கை எட்டியது. நோயாளிகள் அனைவருமே அங்கே பணிபுரிந்த ஊழியர்கள். அவர்கள்
அனைவரும் அந்த குடும்பத்துடன் வசிக்காமல் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர். எனவே
அவர்கள் தங்கியிருந்த வீட்டில் ஏதேனும் தவறு இருந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
அங்கே பரவிய நோய் குறித்து நியூயார்க் நகர சுகாதாரத்துறையைச் சார்ந்த தொற்று நோய்களுக்கான
மருத்துவமனைகளின் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.எல்.வில்சன் உட்பட பலரும் விசாரித்தனர்.
அவர் சலவை செய்யும் பெண்மணி அந்த இடத்திற்கு வேலைக்கு வருவதற்கு முன்பாகவே நோயால் பாதிக்கப்பட்டவராக
இருந்திருக்க வேண்டும் என்றே கருதினார். ஆனாலும் அது எவ்வாறு நடந்திருக்கலாம் என்பதைக்
கண்டறிய முயன்ற அவரால் அதைக் கண்டுபிடிக்கவே முடியாமல் போனது.
ஆய்ஸ்டர் பேயை விட்டு வெளியேறிய பிறகு,
மேரி மல்லன் டக்செடோவில் சமையற்காரராகப் பணிபுரிந்தார். 1906 செப்டம்பர் 21 முதல் அக்டோபர்
27 வரை அவர் அங்கே இருந்தார். அவர் வந்த பதினான்கு நாட்களுக்குப் பிறகு டைபாய்டால்
பாதிக்கப்பட்ட சலவை செய்யும் பெண்மணி ஒருவர் பேட்டர்சனில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். டாக்டர். ஈ.சி.ரஷ்மோர் அவரைக் கவனித்துக் கொண்டார்.
கவனிக்கத்தக்க குழுக்களுக்குள்ளேயே அங்கே
தொற்றுநோய் பரவியிருந்தது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் டைபாய்டு காய்ச்சல் நகரத்திலிருந்து
கோடைகாலத்தைக் கழிப்பதற்காக நாட்டுப்புறத்திற்குச் சென்றிருந்த பணக்கார, சமூக முக்கியத்துவம்
வாய்ந்த குடும்பங்களுக்குள்ளேயே பரவியிருந்தது. அவ்வாறு டைபாய்டு பரவியதற்கான காரணம்
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திருப்திகரமாக
விளக்கப்படவில்லை. அந்த நிகழ்வுகள் நடந்த அனைத்து இடங்களிலிருந்தும் சமையற்காரர் விரைவாக
வெளியேறியிருந்தார் ஆயினும் அவர் மீது ஒருபோதும் யாருக்கும் சந்தேகமே ஏற்பட்டிருக்கவில்லை.
ஆய்ஸ்டர் பேயில் நோய் பரவி, நான்கு மாத
நீண்ட தேடலுக்குப் பிறகு என்னிடம் அந்த சமையற்காரர் மாட்டிக் கொண்டார். அப்போது மேற்குப்
பக்கத்தில் உள்ள பார்க் அவென்யூவில், அறுபதாவது தெருவில் உள்ள தேவாலயத்திலிருந்து இரண்டு
வீடுகள் தள்ளி இருந்த, பழைய பாணியிலான, தாழ்ந்து அமைந்த வீட்டில் சமையற்காரராக மேரி
வேலை செய்து கொண்டிருந்தார். டைபாய்டு காய்ச்சலுடன் அங்கிருந்த சலவை செய்யும் பெண்மணி
பிரஸ்பைடிரியன் மருத்துவமனைக்குச் சமீபத்தில் கொண்டு வரப்பட்டிருந்தார். அந்த குடும்பத்தின்
மிக அழகான ஒரே பெண் குழந்தை டைபாய்டால் இறந்து போயிருந்தது.
அந்த வீட்டின் சமையலறையில் மேரியுடன் நான்
முதன்முதலாகப் பேசினேன். அந்த இடத்தைப் பொறுத்தவரை அது ஓர் அசாதாரணமான நேர்காணலாக இருந்தது
என்றே என்னால் சொல்ல முடியும். முடிந்தவரையிலும் நான் ராஜதந்திரத்துடனே செயல்பட்டேன்.
பிறரை அவர் நோய்வாய்ப்படுத்தி இருக்கிறார் என்று சந்தேகம் இருப்பதால் அவருடைய சிறுநீர்,
மலம், ரத்தத்தின் மாதிரிகள் வேண்டும் என்று அப்போது நான் அவரிடம் சொல்ல வேண்டியிருந்தது.
என்னுடைய ஆலோசனையை எதிர்கொள்வதற்கு அதிக
நேரத்தை மேரி எடுத்துக் கொள்ளவில்லை. முட்கரண்டியை எடுத்துக் கொண்டு அவர் என்னை நோக்கிப்
பாய்ந்து வந்தார். அங்கிருந்த நீண்ட குறுகிய மண்டபத்தின் உயரமான இரும்பு வாயில் வழியாக
அந்த பகுதியிலிருந்து வெளியேறிய நான் நடைபாதையில் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். அன்றைய
தினம் நல்வாய்ப்பாக அவரிடமிருந்து தப்பித்ததாகவே நான் உணர்ந்தேன்.
அவருடனான அந்தப் பேச்சை மிக மோசமாகத் தொடங்கி
விட்டேன் என்று எனக்குள் நானே கூறிக் கொண்டேன். நான் உண்மையில் அவருக்கு உதவிடவே விரும்புகிறேன்
என்பது மேரிக்குப் புரியவே இல்லை. ‘என்னுடைய கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்,
பரிசோதனைக்காக எனக்கு மாதிரிகளைத் தர வேண்டும் என்பதெல்லாம் முக்கியமல்ல. தேவைப்பட்டால்
எந்தச் செலவும் இல்லாமல் நல்ல மருத்துவ உதவி உங்களுக்குக் கிடைக்குமாறு செய்வேன்’ என்று
நான் அவரிடம் சொன்னது அவருக்கு முக்கியமாகத் தோன்றவில்லை.
உண்மையாகப் பார்த்தால் டைபாய்டு கிருமிகளின்
மையமாக மேரி இருப்பதை நிரூபிப்பதற்காக அவரிடமிருந்து மாதிரிகள் எதுவும் எனக்குத் தேவைப்படவில்லை.
ஏற்கனவே என்னிடம் இருந்த தொற்றுநோயியல் சான்றுகளே அதை நிரூபிக்கப் போதுமானவையாக இருந்தன.
நோய் தோன்றியிருந்த ஏழு இடங்களிலும் கடுமையாக உழைத்த நான், அந்த இடங்கள் அனைத்திலும்
மேரி இருந்திருப்பதைக் கண்டறிந்தேன். ஆனாலும் நோயை அவர் எப்படி தோன்றச் செய்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கவே
நான் விரும்பினேன். அதில் அவருக்குப் பங்கு இருந்தது என்பதில் எனக்கு எந்தவொரு சந்தேகமும்
இருக்கவில்லை. கழிப்பறைக்குச் சென்ற போது அவருடைய சிறுநீர் அல்லது மலம் மூலமாக நோய்
அவரிடமிருந்து பரவியதா என்பது எனக்குத் தெரியவில்லை என்பதால் இந்த வழக்கில் அதிகப்
பொறுப்பு எனக்கு இருப்பதை நான் உணர்ந்தேன். மிகப்பொருத்தமான சூழ்நிலை கிடைக்கும்பட்சத்தில்,
இன்னும் பெரிய அளவிலான தொற்றை மேரி தூண்டி விடக்கூடும் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.
தன்னுடைய அன்றாட வேலைகள் முடிந்ததும் மேரி
முப்பத்தி மூன்றாவது தெருவிற்கு கீழே உள்ள மூன்றாம் அவென்யூவில் உள்ள அறைக்குச் செல்லும்
பழக்கத்தைக் கொண்டிருப்பதை நான் அறிந்து கொண்டேன். அங்கே அவர் தன்னுடைய மாலைப் பொழுதுகளை
மரியாதை தரத் தோன்றாத வகையில் இருந்த ஒருவருடன் கழித்து வந்தார். மேல் மாடியில் உள்ள
அறையில் இருந்த அந்த நபருக்கு மேரி உணவு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார்.
பகலில் அங்கே மூலையில் இருந்த சலூனில் இருந்த அந்த நபரிடம் நான் பழக்கத்தை ஏற்படுத்திக்
கொண்டேன். தன்னுடைய அறையைப் பார்க்க வருமாறு கூறிய அவர் என்னை அங்கே அழைத்துச் சென்றார்.
மீண்டுமொரு முறை அது போன்றதொரு அறையைப் பார்ப்பதற்கான தைரியம் என்னிடம் சற்றும் இருக்கவில்லை.
அழுக்கு நிறைந்து, பொருட்கள் தாறுமாறாக கிடக்கும் இடமாக அந்த அறை இருந்தது. மேரிக்கு
மிகவும் பிடித்தமானது என்று கூறப்பட்ட பெரிய நாய் ஒன்று அங்கே இருந்ததால், அந்த அறை
ஒழுங்குபடுத்தப்படாது கலைந்து கிடந்தது.
மேரியை அந்த அறையில் சந்திப்பதற்காக மேரியின்
நண்பருடன் நான் ஓர் ஏற்பாட்டைச் செய்து கொண்டேன். டெட்ராய்டில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையின்
தலைவரான டாக்டர் பி.ரேமண்ட் ஹூப்லரை உதவியாளராக அழைத்துக் கொண்டு ஒரு மாலை வேளையில்
படிக்கட்டுகளின் உச்சியில் மேரிக்காக நான் காத்திருந்தேன்.
அங்கே என்னைச் சற்றும் எதிர்பார்த்திராத
மேரி மிகவும் கோபமடைந்தார். நான் சொல்வதை அவர்
சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்வதற்காக முன்கூட்டியே மனனம்
செய்து வைத்துக் கொண்டிருந்த அனைத்தையும் அப்போது நான் அவரிடம் பேசினேன். அவருக்கு
எந்தவிதத்திலும் என்னால் தீங்கு வராது என்பதைக் கூறிய பிறகும் என்னால் அவரைக் கட்டுக்குள்
கொண்டு வர முடியவில்லை.
டைபாய்டு பற்றி தனக்கு எதுவும் தெரியாது
என்று கூறிய மேரி ஒருபோதும் தனக்கு டைபாய்ட் இருந்ததில்லை என்றும், அதனை தான் உருவாக்கவில்லை
என்றும் மறுத்தார். அவர் விட்டுச் சென்ற இடங்களில் இருந்து மறைந்து போன டைபாய்ட் அவர்
சென்று சேர்ந்த இடங்களில் எல்லாம் தோன்றியிருந்தது. அவர் சென்ற அனைத்து இடங்களிலும்
டைபாய்டு காய்ச்சல் உருவாகி இருந்தது. எந்தவொரு நோயாளியையும் அவர் உருவாக்கினார் என்று
யாருமே குற்றம் சாட்டவில்லை. அல்லது அவர்களுக்கு அவ்வாறு குற்றம் சாட்டுவதற்கான எந்தவொரு
சந்தர்ப்பமும் அமையவில்லை. அந்த வகையில் மேரியைப் பற்றி யாரும் கேள்விப்படவும் இல்லை.
அவர் நல்ல உடல் நலத்துடனேயே இருந்து வந்தார். எந்தவொரு நோய்க்கான அறிகுறிகளோ அல்லது
குறியீடுகளோ அவரிடம் இருக்கவில்லை. யாரையும் தன் மீது குற்றம் சாட்டுவதற்கு அவர் அனுமதிக்கவில்லை.
ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்து விட்டதாக எனக்குத் தோன்றியது. அந்த படிக்கட்டுகளிலிருந்து
மேரியால் விடப்பட்ட சாபங்களைத் தொடர்ந்து டாக்டர் ஹூப்லரும், நானும் அங்கிருந்து வெளியேறினோம்.
பார்க் அவென்யூ இடத்தை விட்டு மேரி வெளியேறப்
போகிறார் என்பதை அறிந்து கொண்ட நான், அவ்வாறு அவர் அங்கிருந்து வெளியேறி விட்டால் மீண்டும்
அவரைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதை உணர்ந்தேன். கமிஷனர் தாமஸ் டார்லிங்டன், நியூயார்க்
நகர சுகாதாரத் துறையின் மருத்துவ அதிகாரி டாக்டர் ஹெர்மன் எம்.பிக்ஸ் ஆகியோரின் கவனத்திற்கு
அதைக் கொண்டு சென்றேன். மேரி மல்லனைக் காவலில் எடுக்க வேண்டும் என்று அவர்களிடம் பரிந்துரைத்தேன்.
மேரியின் மலத்தை டாக்டர் வில்லியம் எச்.பார்க் துறையில் இருந்த ஆய்வகத்தில் ஆய்வு செய்திட
வேண்டும் என்று விரும்பினேன். அப்போது மேரியை ‘உயிருள்ள கிருமி வளர்ப்புக் குழாய்’,
‘நாள்பட்ட டைபாய்டு கிருமி தயாரிப்பாளர்’ என்றே நான் குறிப்பிட்டேன். அவர் நிச்சயம்
சமூகத்திற்கான ஓர் அச்சுறுத்தலாகவே இருக்கிறார் என்று உறுதியாகச் சொன்னேன். நியாயமான,
அமைதியான முறையில் அவரைக் கையாள்வதற்கான சாத்தியம் எதுவும் இருக்கவில்லை.. எனவே துறை
சார்பில் அவரிடம் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்றால், அதற்காக ஏராளமான ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு நாம்
தயாராக இருக்க வேண்டும் என்றும் நான் அவர்களிடம் தெரிவித்தேன்.
எனது பரிந்துரைகள் குறித்து சாதகமான முடிவுகளை
துறை மேற்கொண்டது. முடிந்தால் அமைதியான முறையில் அவரிடமிருந்து மாதிரிகளைப் பெற வேண்டும்,
அது முடியாவிட்டால் எப்படியாவது அதைப் பெற வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. மேரியைப் பார்ப்பதற்காக டாக்டர் எஸ். ஜோசபின் பேக்கர் என்ற
பெண் ஆய்வாளர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மிகவும் மென்மையாக இருந்த அந்த ஆய்வாளரால்
வெற்றி பெற முடியவில்லை. சந்தேகத்திற்கு இடமின்றி நான் பெற்றிருந்ததைக் காட்டிலும்
அவரால் கூடுதலாக வெற்றி பெற முடியவில்லை. மேரி கதவை ஓங்கி அறைந்து சாத்திக் கொண்டார்.
டாக்டர் சாரா ஜோஸபின் பேக்கர்
அடுத்த நாள் காலையில் டாக்டர் பேக்கர்,
காவல்துறையினர் மூவர் இருந்த சுகாதாரத் துறையின் ஆம்புலன்ஸ் தேவாலயத்திற்கு அருகிலுள்ள
அறுபதாம் தெருவில் அமைதியாகச் சென்று நின்றது. காவல்துறையினர் இருவர் மேரி தப்பித்து
விடாமல் இருப்பதற்காக கவனமாக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டனர். காவதுறை சார்ந்த ஒருவரைத்
தன்னுடன் முன்வாசலுக்கு டாக்டர் பேக்கர் அழைத்துச் சென்றார். அங்கிருந்த மணியை அவர்கள்
அடித்தார்கள். யார் வந்திருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக கதவைத் திறந்த மேரி உடனேயே
கதவை மூட முயன்றார். ஆனால் காவல்துறை அதிகாரி தன்னுடைய கால்களால் மேரி கதவை மூடுவதை
இடைமறித்தார். சமையலறைக்குள் ஓடி மேரி மறைந்து கொண்டார். டாக்டரும், காவல்துறை அதிகாரியும்
விரைவாக அவரைப் பின்தொடர்ந்தனர். ஆனாலும் அவர்களால் மேரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அங்கே இருந்த மற்ற ஊழியர்களோ மேரியை தாங்கள் பார்க்கவே இல்லை என்று கூறினர். பாதாள
அறை, நிலக்கரித் தொட்டிகள், கழிப்பிடங்கள் ஆகியவற்றில் தேடுதல் தொடர்ந்தது. ஆனாலும்
அவர்களால் மேரியைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
பின்புறத்தில் இருந்த ஜன்னலுக்கு வெளியே
பார்த்த டாக்டர் பேக்கர் அங்கே பக்கத்து வீட்டைப் பிரித்து வைத்திருந்த உயர் வேலிக்கு
அருகே நாற்காலி ஒன்று கிடப்பதைக் கவனித்தார். தரை முழுக்க மூடியிருந்த பனியில் இருந்த
கால்தடங்கள் வீட்டிலிருந்து அந்த நாற்காலிக்குச் சென்றிருந்தன. உடனே டாக்டர் பேக்கர்
அடுத்த வீட்டிற்குச் சென்றார். அந்த வீட்டை முழுமையாகத் தேடிய போதிலும் அவரால் மேரியைக்
கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது மேரியை வேட்டையாடுவதில் சுமார் மூன்று மணி நேரம்
கழிந்திருந்தது.
பின்னர் தெருவிற்குச் சென்ற டாக்டர் பேக்கர்
மற்றொரு காவல்துறை அதிகாரி துணையுடன் வந்து தனது தேடலைத் தொடர்ந்தார். தேடுதல் வேட்டை
கைவிடப்படவிருந்த நிலையில் அடுத்த வீட்டின்
பின்புறத்தில் இருந்த வெளிப்புற மறைவின் கதவில் சிறிய சணல் துணி சிக்கியிருப்பதைக்
கண்டார். குப்பைத் தொட்டிகள் அந்தக் கதவுக்குப்
பின்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து அவற்றை அகற்றிய போது மேரி அங்கே
இருந்தார். அந்த நிகழ்வு குறித்து பின்னர் ’அவர் எங்களுடன் சண்டையிட்டுப் போராடினார்.
எங்கள் மீது வசைமாரி பொழிந்தார். அவரிடமிருந்து மாதிரிகள் மட்டுமே வேண்டும், அதற்குப்
பின்னர் தன்னுடைய வீட்டிற்கு அவர் திரும்பிச் சென்று விடலாம் என்று நான் அவரிடம் விளக்க
முயன்றேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். அவரை அழைத்துச் சென்று ஆம்புலன்சில் ஏற்றுமாறு
காவல்துறையினரிடம் சொன்னேன். அதைச் செய்து முடித்து மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு
செல்வது உண்மையில் எங்களுக்கு மிகவும் கஷ்டமான வேலையாகவே இருந்தது’ என்று டாக்டர் பேக்கர்
தெரிவித்தார்.
டாக்டர் வில்லியம் பார்க்
டாக்டர் பார்க்கிடம் இருந்து சில நாட்களுக்குப்
பிறகு எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. மேரியின் மலத்தில் பேசிலஸ் டைபோசஸின் தூய
நுண்வளரி இருப்பதாக அவர் என்னிடம் கூறினார். மேரி பிடிபட்ட நாளான மார்ச் 20 முதல்
1907 நவம்பர் 16 வரை வாரத்திற்கு மூன்று முறை செய்யப்பட்ட பரிசோதனைகளில்
ஒரு சில நிகழ்வுகளில் மட்டுமே அவரது மலத்தில் டைபாய்டு உயிரினங்கள்
இல்லாமல் இருந்தன.
ரிவர்சைடு மருத்துவமனையில்
மேரி மல்லனிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள்
கைது செய்யப்பட்ட மேரி பின்னர் வில்லார்ட்
பார்க்கர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சில வாரங்களுக்குப் பிறகு அவரை
அங்கே சந்தித்தேன். அவர் வெளியே இருந்த தனிமைப்படுத்தப்பட்ட
வார்டு ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்டபோது நடந்து கொண்ட முறையால் மிகவும் ஆபத்தான, நம்பமுடியாதவராகவே
அவர் கருதப்பட்டார். வாய்ப்பு கிடைத்தால் அவர் தப்பிக்கவும்
முயல்வார் என்றே அப்போது கருதப்பட்டது. அதனாலேயே அவர் அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டார்.
அவர் தங்கி இருந்த அறை கவர்ச்சியான அல்லது வசதியான அறையாக இருக்கவில்லை. முழுமையான
ஆரோக்கியத்துடனே தான் இருப்பதாக உணர்ந்த நாற்பது வயதுடைய வலிமையான, சுறுசுறுப்பான அந்தப்
பெண்மணி அந்த அறையில் தங்கியிருப்பதில் திருப்தி அடைவதற்கான எந்தவொரு காரணமும் அந்த
அறையிடம் காணப்படவில்லை. மேரி மல்லனும் அவ்வாறு இருக்கவில்லை. எவரையும் அச்சுறுத்துகின்ற
கோபத்துடன் இருக்கின்ற, ஆரோக்கியமான நபருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தித் தரும் வகையிலேயே அந்த அறையின் வெள்ளைச் சுவர்கள், கூரை,
தளம், வெள்ளைப் படுக்கை, மேரி அணிந்திருந்த வெள்ளை உடுப்பு போன்ற அனைத்தும் இருந்தன.
’மேரி, உங்களை இங்கிருந்து வெளியே கொண்டு
வர முடியுமா என்று உங்களுடன் பேசிப் பார்ப்பதற்காகவே
நான் வந்திருக்கிறேன். இதற்கு முன்பு எனக்கு உதவுமாறு உங்களிடம் கேட்டபோது, நீங்கள்
அதற்கு மறுத்து விட்டீர்கள். மற்றவர்கள் அவ்வாறு கேட்டபோதும் நீங்கள் மறுத்திருக்கிறீர்கள்.
இதுபோன்று மிகவும் பிடிவாதமாக இல்லாமல் இருந்திருப்பீர்கள் என்றால் நீங்கள் இப்போது
இருக்கும் இடத்தில் இருந்திருக்க மாட்டீர்கள். எனவே உங்களிடமுள்ள தவறான எண்ணங்களைத்
தூக்கி எறிந்து விட்டு, நியாயமாக இருக்கப் பாருங்கள். உங்களுக்குத் தீங்கு விளைவிக்க
வேண்டும் என்று இங்குள்ள யாருக்கும் விருப்பமில்லை. டைபாய்டு நோயை நீங்கள் ஒருபோதும்
ஏற்படுத்தவில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் அவ்வாறு செய்திருப்பது எனக்கு
நன்கு தெரியும். நீங்கள் அதை வேண்டுமென்றே செய்தீர்கள் என்று இங்கே யாரும் நினைக்கவில்லை.
ஆனாலும் நீங்கள் அதைச் செய்திருக்கிறீர்கள். பலரும் உங்களால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள்.
பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்; சிலர் இறந்தும் போயிருக்கிறார்கள். இந்தச்
சிக்கலில் இருந்து உங்களை விடுவிப்பதற்கு உதவக்கூடிய மாதிரிகளைத் தர மறுத்த காரணத்தாலேயே
கைது செய்யப்பட்டு நீங்கள் இங்கே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் எதிர்ப்பையும்
மீறி உங்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் என்னுடைய குற்றச்சாட்டை உண்மை என்று நிரூபித்திருக்கின்றன.
எந்த அளவிற்கு தவறு செய்திருக்கிறீர்கள் என்பதை
நீங்கள் இப்போதாவது அறிந்து கொள்ள வேண்டும். இப்போதாவது நீங்கள் நான் சொல்வதை ஏற்றுக்
கொள்கிறீர்களா?’ என்று கேட்டேன்.
மேரி என்னையே உற்றுப் பார்த்தார். ஆனால்
பேசவில்லை, நகரவில்லை. கோபத்தில் அவருடைய கண்கள் கனன்றன. நான் மேலும் தொடர்ந்தேன்.
‘சரி, அதை நீங்கள் எவ்வாறு செய்திருக்கிறீர்கள் என்பதை இப்போது நான் உங்களிடம் சொல்கிறேன்.
கழிப்பறைக்குச் செல்லும்போது, உங்கள் உடலுக்குள் வளரும் கிருமிகள் உங்கள் விரல்களுக்கு
வந்து சேர்கின்றன. சமையல் செய்யும் போது, உணவைக் கையாளும்போது, அந்தக் கிருமிகள் சமைக்கப்படுகின்ற
உணவிற்குச் சென்று விடுகின்றன. அந்த உணவை உண்பவர்கள் அந்தக் கிருமிகளையும் சேர்த்து
விழுங்கி நோய்வாய்ப்படுகிறார்கள். கழிப்பறையை விட்டு வெளியேறி விட்டு சமைப்பதற்கு முன்பாக
உங்கள் கைகளை நன்கு கழுவிக் கொண்டால் எந்தப் பிரச்சனையும் இருக்காது. நீங்கள் உங்களுடைய
கைகளைப் போதுமான அளவிற்குச் சுத்தமாக வைத்திருக்கவில்லை’ என்றேன்.
நோய் கடத்தி மூலம் டைபாய்டு
பரவும் முறை
மேரியின் முகபாவம் மாறவே இல்லை. அவரிடமிருந்து
எந்தவொரு வார்த்தையும் வரவில்லை. நான் சொல்ல வந்த அனைத்தையும் அவரிடம் சொல்லி முடிப்பதற்கான
கடமை எனக்கு இருந்ததால் நான் மேலும் தொடர்ந்தேன்: ’உங்கள் பித்தப்பையில் கிருமிகள்
வளர்ந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கிருமிகளை அகற்றுவதற்கான சிறந்த வழி உங்களுடைய பித்தப்பையை
அகற்றுவதுதான். குடல்வால் எப்படி தேவைப்படுவதில்லையோ, அதே போன்று நமக்குப் பித்தப்பையும்
தேவையில்லை. அது இல்லாமலேயே பலரும் உயிர் வாழ்ந்து வருகின்றனர்’.
’மேரி, சுகாதாரத் துறை எவ்வளவு காலம் இங்கே
உங்களை வைத்திருக்க விரும்புகிறது என்று எனக்குத் தெரியாது. அது ஓரளவிற்கு உங்களுடைய
நடத்தையைச் சார்ந்தே இருக்கிறது என்று நம்புகிறேன். எனது கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிப்பீர்கள்
என்றால், என்னால் உங்களுக்கு நிச்சயம் உதவ முடியும். இங்கிருந்து உங்களை வெளியேற்றுவதற்கு
என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் அதிகமாகவே செய்வேன்.
உங்களிடம் இருக்கின்ற நோய் குறித்து ஒரு புத்தகம் எழுதுவேன். உங்கள் உண்மையான பெயரை
அதில் குறிப்பிட மாட்டேன்; கவனமாக உங்கள் அடையாளத்தை மறைத்து விடுவேன். அதிலிருந்து
கிடைக்கும் அனைத்து லாபங்களையும் நீங்கள் பெறுவீர்கள் என்பதற்கான உத்தரவாதத்தை நான்
உங்களுக்குத் தருகிறேன். என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிப்பது உங்களைப் பொறுத்தவரை மிகவும்
எளிதாகவே இருக்கும். நான் என்ன கண்டுபிடிக்க விரும்புகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
எப்போதாவது உங்களுக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறதா, இதுவரையிலும் நீங்கள்
எத்தனை நோய்த்தொற்றுகளை, நோயாளிகளை பார்த்துள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்’
என்று முடித்தேன்.
கதவில் சாய்ந்து கொண்டே இதனைக் கூறி முடித்தவுடன்
மேரி எழுந்தார். தான் அணிந்திருந்த குளியல் உடையை இழுத்து, என்னிடமிருந்து கண்களை அகற்றாமல்,
மெதுவாக கழிப்பறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து கொண்டார். கதவு பலமாக இழுத்து
மூடப்பட்டது. மேரி என்னிடம் பேச விரும்பவில்லை, இனிமேலும் அங்கே காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தெளிவாகத்
தெரிந்ததால் அந்த இடத்தை விட்டு நான் வெளியேறினேன்.
நார்த் பிரதர் தீவில் இருந்த
ரிவர்சைடு மருத்துவமனை
மேரியுடனான எனது மூன்றாவது சந்திப்பிற்குப்
பிறகு அவர் நார்த் பிரதர் தீவில் உள்ள ரிவர்சைடு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கே செவிலியர்களின் கண்காணிப்பாளருக்காகக் கட்டப்பட்டிருந்த சிறிய பங்களா அவருக்குத்
தரப்பட்டது. தங்கியிருப்பதற்கான அறை, சமையலறை, குளியலறை ஆகியவை அங்கே இருந்தன. எரிவாயு,
நவீன குழாய் அமைப்புகள், மின்சாரம் போன்றவையும் அந்த வீட்டிற்கு வழங்கப்பட்டன. ஆற்றங்கரையில்
தேவாலயத்திற்கு அடுத்ததாக அமைந்திருந்த அந்த வீட்டில் மேரிக்கான உணவுப் பொருட்கள் தரப்பட்டன.
அவர் தனியாகச் சமைத்துச் சாப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப்
பிறகு, ஹேபியஸ் கார்பஸ் நடவடிக்கைகளின்கீழ் தன்னை விடுவிக்க வேண்டுமென்று நகர நிர்வாகத்தின்
மீது மேரி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை ஜார்ஜ் பிரான்சிஸ் ஓ நீல் என்ற வழக்கறிஞர்
உச்சநீதிமன்றத்தில் கொணர்ந்தார். ‘சட்டத்தின் சரியான செயல்முறைகள் எதுவுமின்றி மேரி
சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உண்மையில் அவர் எந்தவொரு குற்றத்தையும் புரிந்ததாகக்
குற்றச்சாட்டு எதுவும் முன்வைக்கப்படவுமில்லை; விசாரணைக்கு உட்படுத்தப்படாததுடன், வழக்கறிஞர்களின்
உதவியும் அவருக்குச் செய்து தரப்படவில்லை’ என்று வலுவான வாதம் மேரி சார்பாக முன்வைக்கப்பட்டது.
மேரி ஒருபோதும் தனக்கு டைபாய்டு காய்ச்சல்
ஏற்படவில்லை அல்லது மற்றவர்களிடம் அதை தான்
ஏற்படுத்தவில்லை என்று சாட்சியம் அளித்தார். வலுவானவராக, பிரகாசமான கண்களுடன் ஆற்றல்
மிக்கவராக இருக்கிறார் என்று அவர் செய்தித்தாள்களில் வெளியான செய்திகளில் வர்ணிக்கப்பட்டார்.
அவருடைய தோற்றம் மற்றும் சாட்சியங்களுக்கு மாறாக சமூகத்திற்கு மிகவும் அச்சுறுத்தலாக
மேரி இருக்கிறார் எனவும், அவருடைய மலத்தில் டைபாய்டு பேசிலியை தான் கண்டுபிடித்ததாகவும்,
பல டைபாய்டு தொற்றுகளுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததை டாக்டர் சோப்பர் கண்டறிந்திருப்பதாகவும்
டாக்டர்.பார்க் சாட்சியம் அளித்தார். நீதிமன்றம் அவரை விடுவிக்கின்ற பொறுப்பை ஏற்க
விரும்பவில்லை என்று கூறிய நீதிபதி இறுதியில் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
மேரி மல்லன் தொடர்ந்த வழக்கு
குறித்து வெளியான செய்தி
இரண்டு ஆண்டுகள், பதினொரு மாதங்கள் சிறைவாசம்
அனுபவித்த நிலையில் மேரி இனிமேல் தனது சமையல் தொழிலைக் கைவிட்டு விடுவதாகவும், மற்றவர்களுடைய
உணவைக் கையாளாமல் வேறு பல முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடிப்பதுடன், மூன்று மாதங்களுக்கு
ஒருமுறை துறைக்கு அறிக்கை அளிப்பதாகவும் உறுதிமொழி அளித்தார். சுகாதாரத் துறை அந்த
உறுதிமொழியின் பேரில் மேரியை அங்கிருந்து விடுவித்தது. தன்னுடைய நிலை குறித்தும், மக்களுக்குத்
தொற்று ஏற்படுவதை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்த அனைத்தையும் அறிந்து கொள்ளும்
வாய்ப்பு மேரிக்கு கிடைத்திருக்கும் என்றே அப்போது நம்பப்பட்டது.
மேரியைக் குணப்படுத்துவதற்காக பல்வேறு
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லை. பித்தப்பையை அகற்றுவதே
மீதமிருந்த ஒரே சிகிச்சையாகும். அவரது பித்தப்பையில் கிருமி அதிக அளவில் இருந்ததாக
நம்பப்பட்டது. ஆனால் அந்த சிகிச்சைக்கான சம்மதத்தை மேரி தெரிவிக்காமல் மேலும் எதுவும்
செய்ய முடியாது என்று முடிவாற்றப்பட்டது. .
விடுதலையானதுமே மேரி உடனடியாக அங்கிருந்து
மறைந்து விட்டார். சுகாதாரத் துறைக்கு அளித்திருந்த உறுதிமொழியில் இருந்த அனைத்தையும்
அவர் மீறினார். தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டு மீண்டும் சமையல் வேலைக்குச் சென்றார்.
மேரி ப்ரெஷோஃப், சில நேரங்களில் திருமதி.பிரவுன் என்ற பெயர்களில் ஹோட்டல், உணவகங்கள்,
காசநோய் காப்பகங்களில் அவர் சமைத்து வந்தார். மலிவான வாடகைக்கு விடப்படுகின்ற வீட்டை
சில காலம் அவர் நடத்தி வந்தார். ஆனாலும் அந்த வீட்டை மிகவும் மோசமான நிலையில் வைத்திருந்ததால்,
அது அவருக்குப் பணம் சம்பாதித்துத் தரவில்லை. பின்னர் சலவைத் தொழில் செய்ய முயன்றார்.
ஆனாலும் சமையல் தொழிலே அவருக்கு நன்றாகப் பணம் பெற்றுக் கொடுப்பதாக இருந்தது.
தனது அடையாளத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளாத
வகையில் நியூயார்க் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் எந்தவொரு தடையுமின்றி ஐந்து ஆண்டுகள்
மேரி பயணம் செய்து வந்தார். அவரை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்
கொள்ளப்படவில்லை. ஆனால் அவ்வாறு என்னிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றே
நான் கருதுகிறேன். ஆய்ஸ்டர் பேயில் 1907ஆம் ஆண்டில் நோய் பரவலை ஒழித்து, சுகாதாரத்
துறையிடம் டைபாய்டு மேரியை ஒப்படைத்த பிறகு அந்த வழக்குடன் எனக்கிருந்த அதிகாரப்பூர்வ
தொடர்பு முடிந்து போனது. அந்த ஐந்து ஆண்டுகளில் மேரி குறித்து விரிவாக அறியப்படவில்லை
என்றாலும் நான் அவர் பணிபுரிந்த சில இடங்களையும், அவருக்கு நடந்த சில விஷயங்களையும்
அறிந்தே இருந்தேன்.
மேரியிடம் இந்த உலகம் கருணை எதுவும் காட்டவில்லை.
அவரால் மீண்டும் தன்னுடைய சமையல் வேலையை பணக்கார தனியார் குடும்பங்களில் தொடங்கிட முடியவில்லை.
ஏனென்றால் நடைமுறையில் அந்தக் குடும்பங்கள் மிஸஸ்.ஸ்ட்ரைக்கர்ஸ், மிஸஸ்.சீலீ என்ற இரண்டு
நிறுவனங்கள் மூலமே தங்களுக்குத் தேவையான சமையற்காரர்களைப் பெற்றுக் கொண்டிருந்தன. மேரியைப்
பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த அந்த இரண்டு நிறுவனங்களுமே அவரைப் பணியில் அமர்த்துவதற்குப்
பயந்தன. மேரி ஒருபோதும் நிரந்தரமான வேலையில் இருக்கவில்லை. மற்ற ஊழியர்களுடனும் அவர்
நன்றாகப் பழகவில்லை. தன்போக்கில் நகர்ந்து கொண்டிருக்கவே அவர் விரும்பினார்.
ஒரு நாள் அவருடைய சிறந்த நண்பர் - அவர்
அடிக்கடி சொல்கின்ற ஒருவர் அவரை அழைத்தார். மிகமோசமான இதய நோய்வாய்ப்பட்டவராக இருந்த
அவரை மேரி மருத்துவமனையில் சேர்த்தார். அந்த நபர் அங்கே இறந்து போனார்.
மேரி தன்னுடைய கையைக் காயப்படுத்திக் கொண்டார்.
அது புண்ணாகிப் போனது. அவரால் பல மாதங்களுக்குச் சமைக்க முடியவில்லை. நிலைமை மிகவும்
மோசமாக இருந்தது. அவருக்கென்று வீடு இல்லை. சிறிதளவே அவரிடம் பணம் இருந்தது.
பிராட்வே உணவகம், சவுத்தாம்ப்டனில் உள்ள
ஹோட்டல், ஹண்டிங்டனில் உள்ள சத்திரம், நியூ ஜெர்சியில் உள்ள நாகரிகமான ஹோட்டல் மற்றும்
சுகாதார நிலையத்தில் அவர் பணிபுரிந்தார். டைபாய்டு நோயாளிகளை அவர் உருவாக்கியிருந்த
போதிலும், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் என்று எவருமே பதிவு செய்யப்படவில்லை. அவரால்
பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இரண்டு குழந்தைகளும் இடம் பெற்றிருந்தனர். அஜீரணத்திற்காக
வீட்டிலேயே மேரியால் தயாரிக்கப்பட்ட மருந்தைக் குடித்த ஒருவரை மிக விரைவிலேயே டைபாய்டு
காய்ச்சலுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல நேர்ந்தது. இதுபோன்றவர்கள் பலரைத் தன்னுடைய
அந்த ஐந்தாண்டு கால சுதந்திர வாழ்க்கையில் அவர் உருவாக்கியிருக்கக் கூடும்.
பெண்களுக்கான ஸ்லோன் மருத்துவமனையின் தலைமை
மகப்பேறியல் நிபுணராகவும், மகப்பேறு மருத்துவராகவும் இருந்த டாக்டர் எட்வர்ட் பி.கிராகின்
ஒரு நாள் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசுவதற்காக
தன்னைப் பார்க்க மருத்துவமனைக்கு ஒரு முறை வர வேண்டும் என்று அவர் அப்போது என்னிடம்
கேட்டுக் கொண்டார். நான் அங்கே சென்ற போது டைபாய்டு தொற்றுநோய் கொண்ட இருபதுக்கும்
மேற்பட்டவர்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறினார்.
அங்கிருந்த ஊழியர்கள் அந்த சமையற்காரருக்கு
’டைபாய்டு மேரி’ என்ற புனைப்பெயரைக் கொடுத்திருந்தனர். அப்போது. அவர் வெளியே போயிருந்தார்.
அவர் அந்தப் பெண்ணாக இருப்பார் என்றால், அவருடைய கையெழுத்தைக் கொண்டு என்னால் அவரை
அடையாளம் காண முடியுமா என்று கேட்ட. அவர் என்னிடம் ஒரு கடிதத்தை ஒப்படைத்தார். அந்த
சமையற்காரர் உண்மையில் மேரி மல்லன் என்பதை நான் அந்தக் கடிதத்தில் இருந்து கண்டு கொண்டேன்.
மருத்துவரின் விவரிப்பில் இருந்தும் என்னால்
அவரை நன்கு அடையாளம் காண முடிந்தது.
மேரியை மீண்டும் அழைத்துச் சென்று நார்த்
பிரதர் தீவிற்கு அனுப்புவதற்கு முன்பாக சுகாதாரத் துறைக்குத் தகவல் அளிக்க வேண்டும்
என்று அறிவுறுத்தினேன். இந்த முறை மேரி எந்தவொரு போராட்டமும் செய்யவில்லை. இரண்டாவது
முறையாக அந்த தீவில் மேரி இருபத்து மூன்று ஆண்டுகள் இருந்தார். அந்த நீண்ட காலகட்டத்தில்
அவர் ஒருபோதும் தப்பித்துச் செல்ல முயலவில்லை. இரண்டாவதாக சிறை வைக்கப்பட்ட பிறகு தன்னுடைய
சுதந்திரத்தை மீண்டும் பெற அவர் நினைக்கவில்லை என்றே நான் நம்புகிறேன். தன்னுடைய நிலைமை
தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்தது கொண்ட அவர் சிறைவாச வாழ்க்கைக்கு தன்னைச் சமரசம்
செய்து கொண்டார் என்று சிலர் கருதுகிறார்கள்.
நானும் அவரிடம் ஒரு மாற்றம் வந்துவிட்டது
என்றே நம்பினேன். பெரும்பாலும் அது காலப்போக்கில் ஏற்பட்டதொரு மாற்றமாகவே இருந்தது.
அந்த மாற்றம் மனம் மற்றும் உடல் ரீதியாக ஏற்பட்டிருந்தது. டைபாய்டு காய்ச்சலைக் காரணம்
காட்டி தான் வேட்டையாடப்பட்டதாக உணர்ந்த அவர் தனக்கு டைபாய்டு இருப்பதாக ஒப்புக் கொள்ளவே
இல்லை. ஆயினும் அவருக்கு டைபாய்டு இருப்பதாக மற்றவர்கள் கூறியதாலேயே, தான் விரும்பிய
இடத்திற்கு சுதந்திரமாகச் செல்வதற்கு அல்லது தான் விரும்பியவற்றைச் செய்வதற்கு அவர்
ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. மேரியின் வழக்கறிஞர் குறிப்பிட்டதைப் போல, அவர் இந்த
உலகிடம் மிகவும் ஆபத்தானவராக மட்டுமே விளம்பரப்படுத்தப்பட்டார். குற்றவாளிகளைக் காட்டிலும்
மிகவும் மோசமாகவே நடத்தப்பட்ட போதிலும், உண்மையில் அவர் யாரையும் எதிர்த்து, மிகக்
குறைந்த அளவிலான வன்முறையை நிகழ்த்திய குற்றவாளியாகக்கூட இருக்கவில்லை. .
மேரிக்கு அப்போது சுமார் நாற்பத்தெட்டு
வயது. முன்னர் வேலைக்காரர்கள் நிறைந்திருந்த சமையலறை வழியாக நழுவி, பின்வேலியில் ஏறிக்
குதித்து, காவல்துறையினருடன் சண்டையிட்டபோது இருந்ததைக் காட்டிலும், இப்போது அவர் சற்று
குண்டாக இருந்தார். அவருக்கு முன்பாக இந்த உலகம் உருவாக்கிய எந்தவொரு சூழ்நிலையையும்
எதிர்கொள்ளும் வகையில் அவரை முன்னோக்கிச் செலுத்திக் கொண்டிருந்த இளம் வயது ஆற்றலை,
செயலை இப்போது அவர் இழந்திருந்தார். முதன்முதலாகக் கைது செய்யப்பட்ட பிறகு இந்த எட்டு
ஆண்டுகளில் தன்னுடைய சொந்த விருப்பங்களைத் தவிர, மற்றவர்களின் விருப்பங்களுக்கு கீழ்ப்பணிந்து
செல்வது, அதன் வலியை அறிந்து கொள்வது என்று அவர் ஏராளமாகக் கற்றுக் கொண்டிருந்தார்.
சுதந்திரமாகத் திரிந்த போதிலும், யாருடைய உதவியும் இல்லாமல் போராடிய கடந்த ஐந்து ஆண்டுகள்
அவரைப் பொறுத்தவரை மிக மோசமான காலமாகவே இருந்தன.
சமைக்க, தூங்க, தன்னுடைய மனதிற்கு நெருக்கமானவற்றைப்
படிக்க என்று நார்த் பிரதர் தீவில் இருந்த அந்த நகரம் அவருக்கு வாழ்வதற்கு வசதியான
ஓரிடத்தை ஒதுக்கித் தந்தது. அவருடைய வயதிற்கேற்ற பொருட்கள் அங்கே அவருக்கு வழங்கப்பட்டன.
மருத்துவர்களுடன் கூடிய மிகச் சிறந்த மருத்துவமனை அருகே இருந்தது. தீவிலிருந்த மக்கள்
தன்னிடம் கருணையுடன் நடந்து கொண்டதை தன்னுடைய அனுபவத்தால் அவர் அறிந்திருந்தார். டைபாய்டு
காய்ச்சலைப் பற்றி பேசுவதையோ, தன்னைப் பற்றிய
கேள்விகளைக் கேட்பதையோ அவர்களால் தவிர்த்து விட முடியும் என்பது அவருக்குத்
தெரிந்திருந்தது.
நார்த் பிரதர் தீவில் மேரி
மல்லன் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த வீடு
வன்முறை மனநிலையைக் கொண்டிருந்த மேரியிடம்
அந்த வன்முறை முழுமையாகத் தூண்டப்படும் போது வெகுசில நபர்களே
அதனை எதிர்கொள்ளும் அளவிற்குத் தயாராக இருந்தனர். அவரிடமிருந்த அந்த ஆயுதம் எனக்கெதிராக
மூன்று முறை பயன்படுத்தப்பட்டிருந்தது. முதன்முதலாக கைது செய்யப்பட்ட போது மேரியிடம்
அந்த வன்முறை முழு பலத்துடன் இருந்ததை டாக்டர் பேக்கர் பார்த்திருந்தார். மற்றுமொரு
ஆங்கிலேய சுகாதார அதிகாரி தனக்கு கிடைத்த எச்சரிக்கையைப் புறக்கணித்து விட்டு மேரியின்
பங்களாவில் அவரை நேர்காணல் செய்து புகைப்படம் எடுக்க முயற்சிகள் மேற்கொண்ட போதும் அதேபோன்று
நடந்திருந்தது. ரிவர்சைட் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ஜான் ஏ.காஹில் கூறுகின்ற
’நோய்த்தன்மை கொண்ட கோப’ நிலைக்குத் தான் செல்வதை மேரி நன்றாகவே அறிந்திருந்தார்.
சிறைவாசம் அனுபவித்த பல ஆண்டுகளில் மேரி
தன்னுடைய அந்த ஆயுதத்தை நன்றாகவே பயன்படுத்தினார். பொதுவாக அவரது ஒரு பார்வை அல்லது
ஒரு சொல்லே, அதற்குப் பின்னால் என்ன இருக்கக்கூடும் என்பதற்கான எச்சரிக்கையை நமக்கு
அளிக்கப் போதுமானவையாக இருந்தன. தங்களுக்கிடையே
இருந்த நீண்ட நட்பு ரீதியான உறவின் அடிப்படையில் தன்னுடைய காதல் விவகாரங்களைப் பற்றி
கூறுமாறு ஆய்வகத்தின் தலைவர் மேரியிடம் கேட்ட போது, வெறும் பார்வையாலேயே அந்தப் பெண்ணை
மேரி மௌனமாக்கி விட்டார்.
நார்த் பிரதர் தீவிற்கு திரும்பிய மேரி
அங்கிருந்து தான் தப்பித்து ஓடி விட மாட்டேன் என்பதைக் காட்டி விட்டால்
- தனக்கு நிலப்பகுதிக்குச் செல்வதற்கான அனுமதி கிடைக்கும்; கிழக்கு முப்பத்தி மூன்றாவது
தெரு பகுதியில் இருக்கின்ற தன்னுடைய பழைய நண்பர்களையும், கடைகள், வீதிகள் மற்றும் நகரத்தின்
பிற காட்சிகளையும் காண முடியும்; அங்கே கூட்டத்தில் தானும் ஒருவராகக் கலந்து கொள்ள
முடியும் என்று நினைத்தார். அவ்வாறே அவர் நடந்து கொள்ளவும் செய்தார்.
இதெல்லாம் மேரியால் திட்டமிடப்பட்டதா என்பது
எனக்குத் தெரியாது, ஆனால் மீண்டும் தனது பங்களாவிற்குச் சென்ற பிறகு அவர் எந்த வம்பும்
செய்யவில்லை என்பதே உண்மையாகும். அந்த நகரத்தின் சலுகை பெற்ற விருந்தினராக அவர் மாறிப்
போனார். அவர் பேச விரும்பாத எதையும் யாரும் அவரிடம் பேசவில்லை. முடிந்து போன சம்பவம்
என்று தனது கடந்தகால வாழ்க்கையை அறிவித்த அவருடைய பழைய வாழ்க்கையைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை.
மேரிக்கு ஆய்வகத்தில் வேலை வழங்கப்பட்டது.
மருத்துவமனைகளுக்குத் தேவையான எளிய பரிசோதனைகளைச் செய்வதற்கு அவர் கற்றுக் கொண்டார்.
செய்த வேலைக்கான நல்ல ஊதியம் அவருக்கு கிடைத்தது. விரும்பியபோது யாருடைய
உதவியும் இல்லாமல், அவரால் பிரதான நிலப்பகுதிக்குச் சென்று வர முடிந்தது. மீண்டும்
தீவிற்குத் திரும்பி வந்ததும் தன்னைப் பற்றிய தகவல்களை அவர் தர வேண்டும் என்று யாரும்
அவரிடம் கேட்கவுமில்லை. சில நேரங்களில் குயின்ஸ் மாகாணத்திற்குச் சென்று, அங்கே தனக்குப்
பழக்கமான குடும்பத்தைப் பார்த்து வருவார் என்ற போதிலும், அங்கிருந்தவர்கள் அவரைக் காண்பதில்
மகிழ்ச்சியுடன் இருக்கவில்லை.
1932ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று காலையில்
அவருக்கு ஏதோ வழங்குவதற்காக வந்த ஒருவர் பங்களாவின் தரையில் ‘டைபாய்டு’ மேரி முடங்கி
கிடைப்பதைப் பார்த்தார். அவருக்கு ஜன்னி வகை பக்கவாதம் ஏற்பட்டிருந்தது. அதற்குப் பிறகு
அவர் ஒருபோதும் நடக்கவே இல்லை. அதற்குப் பின்னர் ஆறு ஆண்டுகளுக்கு மருத்துவமனையின்
கவனிப்பிலேயே அவர் தொடர்ந்து இருந்து வந்தார்.
மேரி மல்லன் மறைவு குறித்து
வெளியான செய்தி
1938 நவம்பர் 11 அன்று அவர் இறந்தார்.
அவசர அவசரமாக பிராங்க்ஸில் உள்ள செயின்ட் ரேமண்ட் கல்லறையில் அவருடைய உடல் அடக்கம்
செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
மேரி மல்லனின் கல்லறை
இறப்பிற்குப் பிறகு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ
இறப்புச் சான்றிதழில், ‘ஏழு நாட்களாக இருந்து வந்த மூச்சுக்குழாய் அழற்சி, நாள்பட்ட
சிறுநீரக அழற்சி, பத்து ஆண்டு காலமாக இருந்த நாள்பட்ட இதயத்தசை அழற்சியுடன் இறந்தவர்;
இருபத்தி நான்கு ஆண்டுகளாக டைபாய்டு நோய் கடத்தியாக இருந்ததுவும் அவரது மரணத்திற்கு
பங்களிப்பு செய்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேரி மல்லனின் இறப்புச் சான்றிதழ்
அவரது இறுதிச் சடங்கில் முரண்நகை மற்றும்
சோகத்தின் கூறுகள் காணப்பட்டன. அது குறிப்பிடத்தக்க பெண்மணி ஒருவரின் புதிரான வாழ்வில் வித்தியாசமான
இறுதிக் காட்சியாகவே இருந்தது. இறுதிச் சடங்கு 738ஆவது தெரு, பிராங்க்ஸில் உள்ள செயின்ட்
லூக்காவின் பெரிய ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்றது. அதில் ஒன்பது பேர் மட்டுமே
கலந்து கொண்டனர். அவரது உடலைப் பின்தொடர்ந்து கல்லறைக்கு வந்தவர்களில் மேரி மல்லனை
நன்கு அறிந்திருந்தவர்கள், பல ஆண்டுகளாக அவர் வந்து போவதைப் பார்த்திருந்தவர்கள் என்று
ஒருவர் கூட இருக்கவில்லை.
மேரி மல்லனுடன் தொடர்புடையவர்களாக இருந்த
டைபாய்டு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை ஐம்பத்து மூன்று, அதில் இறந்து போனவர்கள் மூவர்.
இதை அதற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சில நோய் கடத்திகளுடன் தொடர்புடைய பதிவுகளுடன்
ஒப்பிட்டால், அது ஒன்றும் மிகப் பெரிய எண்ணிக்கையில் இருக்கவில்லை என்று தெரிய வரும்.
மேரியால் உருவாக்கப்பட்டிருந்த பல நோயாளிகள் வெளிச்சத்திற்கு வரவே இல்லை என்பது சந்தேகத்திற்கு
அப்பாற்பட்டதாகவே இருந்தது.
இந்த வழக்கில் நான் இணைந்த நேரத்தில் அவருடைய வரலாற்றின் சில பகுதிகளை மட்டுமே என்னால் பெற முடிந்தது. மேற்கொண்டு வேறு எதையும் கண்டறியும் வகையில் யாரும் எதையும் செய்திருக்கவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அவரால் மட்டுமே ஆய்ஸ்டர் பேயில் நோய் பரவல் ஏற்பட்டது என்று நிரூபிக்கப்பட்டிருந்தால், அதுவே அவரை மிக முக்கிய பெண்மணியாகக் கருதுவதற்குப் போதுமானதாக இருந்திருக்கும்.
1939 மே 10 அன்று வரலாற்று, கலாச்சார மருத்துவப் பிரிவின் முன்பாக வாசிக்கப்பட்ட கட்டுரை
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1911442/pdf/bullnyacadmed00595-0063.pdf














Comments