இன்றைய இந்திய மருத்துவர்கள் நோயாளிகளை நேரடியாகக் கையாண்டிராத, நீட்-பயிற்சி பெற்ற பட்டதாரிகளாக மட்டுமே இருக்கின்றனர்

 டாக்டர் கபீர் சர்தானா

தி பிரிண்ட்

மாண்டியில் நீட்-2022 தேர்வு எழுதுவதற்காக வரிசையில் காத்திருக்கும் மாணவர்கள்

இரண்டு நாட்களாக தலைசுற்றல் இருந்து வருகிறது என்று என்னுடைய உறவினர் ஒருவரிடமிருந்து மூன்றாவது நாளில் எனக்கு அழைப்பு வந்தது. கண், காது, ரத்த அழுத்தப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு நான் அறிவுறுத்தினேன். அன்று மாலையே அந்த உறவினரின் குரலில் குழறல் ஏற்பட்டதாக என்னிடம் கூறினார்கள். அதை என்னால் சரியாகக் கவனிக்க முடியவில்லை என்பதால் மருத்துவமனைக்குச் செல்லுமாறு நான் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். என்னுடைய உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ‘கவலைப்பட ஒன்றுமில்லை’ என்று அவர்களிடம் கூறிய பெண் மருத்துவரை அழைத்து என்னுடைய உறவினருக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகள் பக்கவாதத்திற்கானவை என்று தெரிவித்த  நான் அவருக்கு உடனடியாக எம்ஆர்ஐ எடுக்குமாறு வலியுறுத்திக் கூறினேன். பொதுவாக மூத்த மருத்துவர்கள் சொல்வதைக் கேட்க முனைபவர்களாகவே இளம் மருத்துவர்கள் இருக்கின்றனர். உடனடியாக என்னுடைய உறவினரிடம் மேற்கொள்ளப்பட்ட எம்ஆர்ஐ பரிசோதனை அவருக்கு நடு பெருமூளை தமனி பக்கவாதம் ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்திக் காட்டியது.           

இதுபோன்ற உடல்நலக் கோளாறுகள் பற்றி முடிவெடுப்பதற்கு தொடக்கநிலை அடிப்படை மருத்துவப் பயிற்சிகள் நிச்சயம் அந்த மருத்துவப் பட்டதாரிக்கு உதவியிருக்கும் என்ற போதிலும் இதுபோன்று அந்த மருத்துவர் தவறியதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது நாம் அதற்காக நீட் தேர்வையே குறை கூற வேண்டியிருக்கும்.   

பிரெஞ்சு எழுத்தாளர் ஜீன்-பாப்டிஸ்ட் அல்போன்ஸ் கார் 1849ஆம் ஆண்டில் ‘விஷயங்கள் எந்த அளவிற்கு மாறுகின்றனவோ, அந்த அளவிற்கும் கூடுதலாகவே அவை மாறாதிருக்கின்றன’ என்று எழுதியிருந்தார்.        

நீட் பயிற்சி மையங்களும், விடைத்தாள்களும்

மருத்துவப் பட்டதாரிகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்குவதற்காக உலக சுகாதார நிறுவனம் விதித்துள்ள மருத்துவர்கள்-நோயாளிகளுக்கு இடையிலான ‘மாய’ விகிதத்தின் நன்மைகள் குறித்து இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கின்ற அதே வேளையில் தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மருத்துவ மாணவர்கள் நேரடியாக நோயாளிகளைப் பார்த்து கையாள வேண்டும் என்பதற்காக விரிவான கற்பித்தல் திட்டத்தை உருவாக்கியது. அதில் இரண்டு காரணிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது        

முதலாவதாக, கிராமங்களில் பயிற்சி செய்ய வேண்டிய கட்டாயம் பட்டதாரிகளுக்கு இல்லை என்பதால் மருத்துவர்களுக்கான பற்றாக்குறை கிராமப் பகுதிகளில் அதிக அளவிலே இருக்கிறது என்ற அனைவருக்கும் தெரிந்த உண்மை இருக்கிறது. அதுபோன்று அதிக அளவிலே மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு நகர்ப்புறப் பகுதிகளில் இருப்பதில்லை. இரண்டாவதாக, மிகச்சிறந்த சூழ்நிலையிலும்கூட தேசிய மருத்துவ ஆணையத்தின் விரிவான திறன் பயிற்சி குறித்து நமது பட்டதாரிகள் கவலைப்படுவதில்லை என்ற நிலைமை மிகவும் அச்சுறுத்துவதாக உள்ளது. ஏனெனில் அந்த மாணவர்களுடைய இறுதி இலக்கு முதுநிலை இடங்களுக்கான நுழைவாயிலாக இருக்கின்ற நீட் தேர்வில் வெற்றி பெறுவது என்பதாக மட்டுமே இருக்கிறது.     

ஐந்து ஆண்டுகள் மருத்துவப் படிப்பு பயில்வது, இன்டர்ன்ஷிப்பின் போது வார்டுகளில் வேலை செய்வது, நுழைவுத் தேர்வுக்கு அதற்குப் பின்னர் தயாராவது என்ற நிலைமையே நாங்கள் படித்த காலங்களில் இருந்தது. எங்கள் காலத்திற்குப் பின்னர் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனங்கள் முளைக்க ஆரம்பித்தன. அத்தகைய பயிற்சி நிறுவனங்கள் பெரும்பாலும் மருத்துவர்களாலேயே தொடங்கி நடத்தப்பட்டன. பல ஆண்டுகளாக அனைத்திந்திய மருத்துவக் கழகத்தால் (எய்ம்ஸ்) உருவாக்கப்பட்ட மிகவும் அடிப்படையான, பதில்களைத் தேர்வு செய்து கொள்கின்ற கேள்விகளே (MCQ) தேர்விற்கான கேள்விகளாக இருந்ததால், கிட்டத்தட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிடமும் அந்தக் கேள்விகளுக்கான பதிலைக் கண்டறிவதற்கான வழிகாட்டிகள் இருந்தன. இணையவழி முறையில் நடத்தப்படுகின்ற மருத்துவக் கேள்விகள் அடிப்படையிலான சமீபத்திய நீட் தேர்வுகளிலும் மருத்துவ மாணவர்கள் பதிலளிப்பதற்கென்று பயிற்சி நிறுவனங்கள் விரிவான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றன.            

பயிற்சி நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற பாடக் குறிப்புகள் மற்றும் இணையவழி படிப்புகளை தங்களுடைய மருத்துவப் படிப்புடன் சேர்த்தே மாணவர்கள் பயின்று வருகிறார்கள் என்பது மேலும் மோசமான விஷயமாக இருக்கிறது. அந்தப் பயிற்சி நிலையங்களின் விரிவுரைகளைக் கேட்டுக் கொண்டு தங்களுடைய டேப்லெட்டுகளுடன் மாணவர்கள் நூலகத்தில் அமர்ந்திருப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்! இந்த ‘ஸ்டார் கோச்சிங்’ ஆசிரியர்’களில் பெரும்பாலானோர் அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் மருத்துவ நிபுணத்துவத்தில் பத்தில் ஒரு பங்கு அளவிற்கான நிபுணத்துவத்தை மட்டுமே பெற்றவர்களாக இருக்கின்றனர். இருந்த போதிலும் அவர்கள் நீட் தேர்வில் என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளனர். இந்த மருத்துவ மாணவர்கள் நோயாளிகளை அடிப்படையாகக் கொண்ட கற்றலுடன் இருக்கின்ற பயிற்சித் திட்டத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கின்ற காரணத்தால், இந்தியா உண்மையான நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது, நோயாளிகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய அறிவே இல்லாத பட்டதாரிகளை மட்டுமே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நோயாளிகளுடன் தொடர்பை உருவாக்கிக் கொள்வது, அவர்களிடம் தென்படும் நுட்பமான அறிகுறிகளைக் கவனிப்பது, நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அவர்களிடம் பேசுவது என்று மட்டுமல்லாது அதன் மூலம் பெற்றுக் கொள்கின்ற அறிவை சரியான முறையில் பயன்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியவையாகவே வார்டுகளில் பணியாற்றுவது, புறநோயாளிகள் சிகிச்சையில் பங்கேற்பது போன்ற செயல்பாடுகள் இருக்கின்றன. ஆனால் நாம் இப்போது நிபுணத்துவம் எதுவுமில்லாத வெறுமனே ‘பயிற்சி பெற்ற’ மாணவர்களை மட்டுமே உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம். நிஜ வாழ்க்கையில் இத்தகைய மாணவர்களால் என்ன செய்ய முடியும் என்பதை நினைத்துப் பார்க்கும் போது உண்மையில் எனக்குள் நடுக்கம் ஏற்படுகிறது. நான் இதுபோன்ற மருத்துவர்கள் எவரையும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ளவே மாட்டேன்.             

உண்மையான நோயாளிகளைப் பற்றிய அறிவு துளியும் இல்லாத மருத்துவர்கள்

சமீபத்தில் நடைபெற்ற ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் நிறுவன தின விழாவில் உரையாற்றிய சுகாதாரத்துறைச் செயலாளர் பரிவு, தொடர்பு, தொடுதல் என்ற மூன்று குணங்களும் மருத்துவர்களுக்கு மிகவும் அவசியம் தேவையான மூன்று குணங்கள் என்று விவரித்திருந்தார். மருத்துவப் படிப்பு படிப்பின் மூலம் பெறுகின்ற அறிவிற்கும் கூடுதலாக மருத்துவர்களிடம் இருக்க வேண்டியவை குணங்களாக அந்தக் குணங்கள் இருக்கின்றன. இணையவழி ஆலோசனை, செயற்கை நுண்ணறிவு போன்றவை மருத்துவர்களுக்கான மாற்றாக அமையும் என்று கூறுபவர்கள் உண்மை நிலவரத்திலிருந்து தங்களை முற்றிலுமாக விலக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றே கூறலாம். என்னால் அத்தகைய செயற்கையான, அல்காரித இடைமுகங்களை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு மருத்துவ ஆலோசனையையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. போலி மருத்துவர்கள் (குவாக்ஸ்) அல்லது பதிவு பெற்ற மருத்துவர்கள் (ஆர்எம்பி) என்று அழைக்கப்படுபவர்களிடம் உள்ள தனித்துவமான குணங்களில் ஒன்று - நோயாளிகளுடன் அவர்கள் கொண்டிருக்கும் நேரடித் தொடர்பாகும். அதுபோன்றதொரு தொடர்பை தற்போதைய தலைமுறை மருத்துவ மாணவர்கள் முற்றிலுமாக இழந்து நிற்கின்றனர். பிரபலமான பயிற்சி நிறுவனத்தை நடத்தி வரும் மருத்துவர் ஒருவர் சமீபத்தில் வெளியானதொரு கட்டுரையில் இணையவழி கற்பித்தலின் நன்மைகளைப் புகழ்ந்து, நாங்கள் மேற்கொண்டு வருகின்ற தொழிலை, கடைப்பிடித்து வருகின்ற கலையை மிகவும் மோசமாகக் கேலி செய்திருந்தார். கெடு வாய்ப்பாக இதுபோன்ற வணிகம் சார்ந்த எண்ணம் பல பயிற்சி நிறுவனங்கள்,  அவற்றின் உரிமையாளர்களின் அடிப்படை உணர்வையே முழுமையாக மழுங்கடித்துள்ளது.               

உண்மையான நோயாளிகளை மதிப்பீடு செய்வதன் அடிப்படையில் நடத்தப்படும் தேர்வுகள் மூலமாக அனைத்தையும் மாற்றியமைக்கப் போவதாக நெக்ஸ்ட் அல்லது நேஷனல் எக்சிட் டெஸ்ட் உறுதியளிக்கிறது. நாங்கள் அனைவரும் அந்த முயற்சி வெற்றி பெறும் என்றே உறுதியாக நம்புகிறோம். அது பயிற்சி நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்ற பயிற்சிகள் என்ற மோசமான பிடியிலிருந்து மாணவர்களை நிச்சயமாக விலக்கி வைக்கும். தற்போதைய நீட் தேர்வு முறையானது மருத்துவ புத்திசாலித்தனம் எதுவுமற்ற பட்டதாரிகளை மட்டுமே உருவாக்கி வெளியேற்றி வருகிறது. போதிய ஆசிரியர்கள் இல்லாமல், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை தற்காலிகமாக நீட்டிப்பதன் மூலம் ஆசிரியர் பணிக்கான புதிய ஆட்சேர்ப்பில் தேக்கநிலைக்கு வழிவகுத்துக் கொடுப்பதன் மூலம் கல்லூரி நிர்வாகங்கள் பண ஆதாயம் அடைகின்றன. அதன் மீது கவனம் செலுத்தி பட்டதாரி மாணவர்களை ஏமாற்றுவதன் பின்னணியில் இருக்கின்ற தர்க்கத்தை கேள்விக்குள்ளாக்குகின்ற மக்கள் - பயிற்சி நிறுவனங்கள் அடைந்து கொண்டிருக்கின்ற மிகப் ஆதாயங்களைப் பெரிய அளவில் தங்களுடைய கவனத்தில் கொள்வதில்லை. ‘இப்போது நீட் பயிற்சி பெற்ற மருத்துவ மாணவர்கள்’ மட்டுமே இருக்கிறார்களே தவிர, மருத்துவர்கள் என்று நம்மிடையே யாரையும் காண முடியவில்லை. எனவே சீனா, உக்ரைன் அல்லது இந்தியாவில் பயின்ற மருத்துவ மாணவர்கள் அனைவரும் தங்களுடைய பட்டப்படிப்பை நீட் தேர்விற்கான படிக்கட்டு என்ற வகையிலேயே பார்க்கிறார்கள் என்பதால் அவர்களுக்கிடையே மிகப் பெரிய வித்தியாசம் என்று எதுவும் இருக்கப் போவதில்லை. அதற்காகவே விரிவான தேசிய மருத்துவ ஆணையத்தின் பாடத்திட்டமானது பயிற்சி நிறுவனங்களில் ‘நிபுணர்களால்’ தரப்படுகின்ற பாடக்குறிப்புகள் என்ற அளவிற்குக் குறைக்கப்பட்டுள்ளன.            

பான் ஜோவியின் பாடல் இவ்வாறு இருக்கிறது:

‘மேம்பட்ட புதிய நாள் வழக்கமாக இருந்த நாளை போன்று இருக்கவில்லை

நேற்று என்ற உண்மையான நிஜம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது,

வித்தியாசமான இசையுடன் கூடிய அதே மோசமான பாடல்’

 

https://theprint.in/opinion/in-india-doctors-are-now-neet-coached-graduates-who-havent-dealt-with-actual-patients/1094401/

கட்டுரையாளர்: புதுதில்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் தோல் மருத்துவத் துறை பேராசிரியர்

 

Comments