அன்வேஷ் சத்பதி
லைவ் வயர் இணைய இதழ்
அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு
சமீபத்தில் இந்தியக்
குடிமக்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை - உங்கள் இணையதளத்தில் வாசித்தேன். நீங்கள் மிகச்
சரியாக உங்களுடைய தேர்தல் வெற்றி மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று சுட்டிக்
காட்டியுள்ளீர்கள். இந்திய மக்கள் உங்களை நம்புகிறார்கள். தேநீர் விற்கும் ஒருவர்
இந்த நாட்டின் பிரதமராக முடிகின்ற வகையில் ஜனநாயக அமைப்புகளைக் கொண்டிருக்கும்
இந்த நாட்டில் உள்ள பல குடிமக்களுடன் சேர்ந்து வாழ்வதில் நான் மிகுந்த
பெருமிதம் கொள்கிறேன்.
இந்தக் கடிதம் முழுவதும் எனது தொனி மரியாதைக்குரியதாக
இருந்த போதிலும், அது விமர்சன ரீதியானதாகவே இருக்கும். இதை ஜனநாயகத்தின் அழகு
என்று சிலர் சொல்வார்கள். உச்சநீதிமன்றம் மாற்றுக் கருத்துக்களை ஜனநாயகத்தின்
பாதுகாப்பு வால்வு என்று குறிப்பிட்டிருக்கிறது. மாற்றுக் கருத்து
என்பது உண்மையில் மிகவும் அற்புதமான விஷயம். தங்களுக்குக்
கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெறுவதற்காக குடிமக்கள் அனைவரும் ஆட்சியதிகாரத்திற்குக்
கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கருதவில்லை.
உங்களுடைய முதலாவது ஆட்சிக்காலத்திற்கு முன்பிருந்தே உங்களைச்
சுற்றி ஆளுமை வழிபாட்டு முறை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. காலம் கடந்து செல்லச் செல்ல
அந்த வழிபாடு நன்கு பலப்படுத்தப்பட்டது. உங்களைப் பற்றி விஷ்ணுவின் அவதாரம்,
தேசத்திற்கு கடவுள் தந்த பரிசு, உலகின் மிக அழகிய முகம், சிறந்த
பொருளாதார நிபுணர் என்று எங்களிடம் தொடர்ந்து அறிமுகம் செய்து வைக்கப்பட்டுக்
கொண்டே இருந்தது. உங்களை அவ்வாறு எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் உங்கள்
கட்சியின் முன்னணி உறுப்பினர்கள். அவர்களில் பலரும் அமைச்சர்கள். உண்மையில் அவ்வாறு
கூறப்பட்டது குறித்து நீங்கள் மகிழ்ச்சியடைந்தாலேயே அத்தகைய சொல்லாட்சி தொடர்ந்தது
என்றே நான் கருதுகிறேன்.
கங்கையைச் சுத்தம் செய்யும் திட்டத்தை நீங்கள் 2016ஆம் ஆண்டில் அறிவித்தீர்கள். அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டவாறு
பார்த்தால் 2018ஆம் ஆண்டு ஜுலைக்குள் கங்கை நதி
சுத்தமாகி இருக்க வேண்டும். உங்களுடைய அந்த அறிக்கை சுற்றுச்சூழல் பிரச்சனை
குறித்ததாக இல்லாமல் வெறுமனே குறியீட்டு அறிக்கை என்ற அளவிலேயே இருந்தது. ஹிந்துக்களைப்
பொறுத்தவரை கங்கை நதி புனித நதியாகக் கருதப்படுவதால், அந்த
திட்டம் ஹிந்துத்துவாவைப் பின்பற்றுகின்ற உங்களுடைய முன்னுரிமைத் திட்டமாக இருக்கும் என்றே அனைவராலும் இயல்பாகக் கருத
முடிந்தது. ஆனால் 2018 வந்து சென்று பல ஆண்டுகளாகி விட்டன. கங்கை
இன்னும் சுத்தமாகவில்லை. அந்தத் திட்டம் குறித்து முறையான நடவடிக்கைகள்
எடுக்கப்படாதது பற்றி ஹிந்து சன்னியாசியும், முன்னாள்
சுற்றுச்சூழல் பொறியியல் பேராசிரியருமான ஜி.டி.அகர்வால் உங்களுடைய அரசாங்கத்திற்குக்
கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். எண்பத்தியாறு வயதான அந்தப் பேராசிரியர் சாகும் வரை
உண்ணாவிரதம் என்ற போராட்டத்தில் இருந்த போது அந்தக் கடிதத்தின் மூலம் தனது
கோரிக்கைகளைத் தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால் உங்களுடைய அரசாங்கம் சரியான
முறையில் அவருக்குப் பதிலளிக்கத் தவறியது. தனது
உண்ணாவிரதத்தின் 111ஆவது
நாளன்று அந்தப் பேராசிரியர் மரணமடைந்தார். மனசாட்சி
உள்ள குடிமக்கள் பலரும் கருதியதைப் போல நானும் அதை ஒரு படுகொலை என்றே நம்புகிறேன்.
’பருவநிலை மாறவில்லை, மனிதர்கள்தான்
மாறியிருக்கிறார்கள்’ என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்ற உண்மையைக் கருத்தில்
கொண்டு பார்க்கும் போது, சுற்றுச்சூழல் பிரச்சனைகள், பருவநிலை
மாற்றம் குறித்து உறுதியான நடவடிக்கையை நீங்கள் எடுப்பீர்கள் என்று எதிர்பார்ப்பது
உண்மையில் எவ்விதத்திலும் பயனற்றதாகவே இருக்கும்.
தன்னாட்சி கொண்ட நிறுவனங்கள் அனைத்தையும் நீங்கள் மெதுவாகக்
கைப்பற்றி வருவதையும் எங்களால் இப்போது காண முடிகிறது. பத்திரிகையாளர் தவ்லீன்
சிங் போன்று உங்கள் மீது விமர்சனத்தை முன்வைத்து வருகின்ற இன்றைய விமர்சகர்களில்
பலரும், மேல்தட்டு லூட்டியன் தில்லி தர்பாரின் செல்வாக்கை நீங்கள் அகற்றி விடுவீர்கள்
என்றே நம்பினர். வெளியாளாக, சகாக்களின் செல்வாக்கிற்கு தலைவணங்காத ஒருவராகவே நீங்கள் அடையாளம்
காணப்படுகிறீர்கள். தில்லியை மட்டுமே மையமாக இந்த மேல்தட்டு வட்டம் கொண்டிருப்பதால்,
அது உங்களால் ’விதிவிலக்கு’ என்று சரியாகவே குறிப்பிடப்பட்டது. ஆனாலும் நடந்தது என்னவோ
வேறாகவே இருந்தது. நாங்கள் தொடர்ந்து தில்லி லூட்டியனிலிருந்து இடித்துரைகளைக்
கேட்டு வருகிறோம். உண்மையில் அதை நீங்களும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
ஆனாலும் எந்தவிதத்திலும் முறையான மாற்றம் என்று எதுவும் உங்களிடம்
நிகழவில்லை. லூட்டியன் தில்லி ஆட்சி குறித்த பிரச்சாரக் கருவியாகவே தொடர்ந்து
செயல்படுகிறது. இப்போது அனைத்து ஊடகங்களும் துருவமுனைப்பை மிகவும் வெளிப்படையாகப் பரப்பி
வருகின்றன. எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே அவை கேள்விகளை எழுப்பி வருகின்றன. மிக
அரிதாகவே ஆட்சியதிகாரத்திடம் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. அதுபோன்ற அணுகுமுறையை
நீங்கள் உங்களைப் பாராட்டுகின்ற செய்தி நிறுவனங்களுக்கு மட்டுமே நேர்காணல்களை
வழங்குவதன் மூலமாகத் தொடர்ந்து ஊக்குவித்தும் வருகிறீர்கள். உங்களுடைய கவிதைகள்,
குழந்தைப் பருவம், நவராத்திரி விரதங்கள், அயராத ஆற்றல், தன்னலமற்ற தன்மை, நடத்தப்படாத வெளிநாட்டு நேர்காணல்கள், உடையலங்கார உணர்வு, நோய்வாய்ப்படும் போது எடுத்துக் கொள்ளும் மருந்துகள்,
பார்க்கும் திரைப்படங்கள், கேட்கும் பாடல்கள், மாம்பழத்தைச்
சாப்பிடுகின்ற விதம், தூக்கத்தைத் திட்டமிடுதல் என்பது போன்ற கேள்விகளையே உங்களிடம்
அவர்கள் அடுக்குகிறார்கள். கனடா குடிமகனாக இருக்கின்ற பாலிவுட் நடிகருடன் ஒரு மணி நேர
நேர்காணலைச் செய்வதற்கான நேரத்தைப் பெற்றிருக்கும் உங்களுக்கு பத்திரிகையாளர்களைச்
சந்திப்பதற்கான நேரம் மட்டும் கிடைப்பதேயில்லை. உங்களை விமர்சிப்பவர்களுடன் நேர்காணல்
செய்வதற்கான நேரம் மட்டும் உங்களுக்குக் கிடைக்கவே இல்லை. ஊடகங்களை நீங்கள்
உங்களுடைய முடிவிற்கான வழியாக மட்டுமே கருதி வருகிறீர்கள். அதாவது உங்களிடமிருந்து
செய்திகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வழியாக, உங்கள் பிரச்சாரத்தை நாடு முழுவதும் எடுத்துச் செல்கின்ற வழியாக
மட்டுமே அவற்றை நீங்கள் கருதுகிறீர்கள்.
நீதித்துறையையும் உங்கள் ஆட்சி மெதுவாகக் கைப்பற்றி
வருகிறது. அண்மையில்,’மக்களுக்கு நல்லது செய்ய முடியாதவர்களுக்கு, மாநில அரசாங்கத்தின்
செயல்பாட்டை விமர்சிப்பதற்கான உரிமை எதுவும் இல்லை’ என்று குஜராத்
உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. என்னிடம் எரிச்சலை ஏற்படுத்திய கருத்தாகவே அது இருந்தது.
அரசு என்பது மக்களுக்காகவே செயல்படுகிறது என்பதால் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கும், அரசாங்கத்தைப்
பொறுப்பேற்றுக் கொள்ள வைப்பதற்குமான அனைத்து உரிமைகளும் இந்த நாட்டின் குடிமக்கள்
அனைவருக்கும் இருக்கின்றன.
ஓய்வு பெற்ற சில மாதங்களிலேயே, முன்னாள்
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை மாநிலங்களவை உறுப்பினராக உங்கள் அரசாங்கம் நியமனம்
செய்தது. தெளிவாக அவருக்கு வழங்கப்பட்ட கைமாறாகவே உங்களுடைய அந்தச் செயல் பலராலும் பார்க்கப்பட்டது. கோகோய் வழங்கிய பல தீர்ப்புகள்
தொடர்ந்து சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்தன. பேச்சு சுதந்திரத்தின் மீதான
தாக்குதல், அசாம் என்.ஆர்.சி விவகாரம் போன்றவை நீதிமன்றத்தில்
நிலுவையில் இருந்த நிலையில் அதை வெளிப்படையாக ஆதரித்தது மட்டுமல்லாது, தனக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு தன்னுடைய
தலைமையிலேயே சிறப்பு அமர்வை அமைப்பதில் எந்தவித வெட்கமுமின்றியும் நடந்து கொண்டது என்று
பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளே அவர் சிக்கியிருந்தார். அந்த
நியமனம் உங்கள் ஆட்சிக்கு ஆதரவான தீர்ப்புகளை வழங்கியதற்காக அவருக்கு வழங்கப்பட்ட
வெகுமதி என்றே அனைவராலும் பார்க்கப்பட்டது. மறைந்த உங்களுடைய
நண்பர் அருண் ஜேட்லி முன்பொரு
முறை ‘ஓய்விற்கு
முன்பு வழங்கப்படுகின்ற தீர்ப்புகள், ஓய்விற்குப் பிறகு கிடைக்கவிருக்கின்ற வேலைகளின் தாக்கம் கொண்டு
நிரம்பியிருக்கின்றன’ என்று கூறியிருந்தார்.
உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கின்ற ராமர் கோவில்
தீர்ப்பையும் உங்களுடைய அரசாங்கத்தின் சாதனைகளில் ஒன்றாக நீங்கள் உங்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். 377ஆவது பிரிவு, சபரிமலை பிரச்சனை தொடர்பான உச்சநீதிமன்றம்
வழங்கிய அதேபோன்ற வரலாற்றுத் தீர்ப்புகளைப் பாராட்டுகின்ற கடிதத்தை (அல்லது ஒரு
ட்வீட்) எழுத வேண்டிய அவசியம் இருப்பதாக நீங்கள் ஏன் உணரவில்லை என்று நிச்சயம் எவரொருவரும்
ஆச்சரியமடையக்கூடும். உண்மையில், LGBTQIA+ பிரச்சனைகள் குறித்து தெளிவற்ற நிலையில் இருந்த நீங்கள் சபரிமலை
தீர்ப்பை மிகத் தீவிரமாக எதிர்த்ததாகவே தோன்றுகிறது. பிரிவு 377க்கான உங்கள் அரசாங்கத்தின் நடுநிலை அணுகுமுறையை நீதிபதி
டி.ஒய்.சந்திரசூட் அவர்களே தோலுரித்துக் காட்டியிருந்தார். அந்த
பிரிவு பாலியல் வன்புணர்வாளர்கள், சிறுவர்களுக்குத் தொந்தரவு தருபவர்களுக்கு இணையாக LGBTQIA+
நபர்களை நடத்தியது என்று நீதிபதி சந்திரசூட் மிகச் சரியாகச்
சுட்டிக் காட்டியிருந்தார். எனவே, அரசாங்கத்தின் நடுநிலை நிலைப்பாடு LGBTQ+ சமூகத்தின் மீதான களங்கத்தைத் துடைக்க எதுவொன்றையும்
செய்யாததாகவே இருந்தது. அயோத்தி தீர்ப்பு உங்களுக்கு அரசியல் ரீதியாகப் பயனுள்ளதாக
இருந்த காரணத்தால் அது குறித்த உங்களுடைய நிலைப்பாடு ஒருவேளை அவ்வாறு இருந்ததா?
அதிபர் டொனால்ட் டிரம்புடன் கலந்து கொண்ட மிகவும்
விளம்பரப்படுத்தப்பட்டதொரு நிகழ்வை பிப்ரவரியில் நீங்கள் நடத்திய சமயத்தில் தில்லி
தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக இந்திய
குடிமக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் உங்களை ‘மத சுதந்திரத்திற்காக மிகவும் கடினமாக உழைத்திருக்கிறீர்கள்’ என்று டிரம்ப் வெகுவாகப்
பாராட்டிக் கொண்டிருந்தார்.
முஸ்லீம் போராட்டக்கார்களைத் தாக்கிய காவல்துறையினர் ’ஜெய்
ஸ்ரீராம்’ என்று பகிரங்கமாக முழக்கமிட்டு, தங்கள்
நிலைப்பாட்டை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருந்தனர். உங்கள்
விமர்சகர்களைப் பொறுத்தவரை அதுவொன்றும் ஆச்சரியமளிப்பதாக இருக்கவில்லை. இந்த நாடு
ஏற்கனவே குஜராத் கலவரத்தின் போதும் அரசின் உடந்தையுடன், சட்டஒழுங்கு
கடைப்பிடிக்கப்படாததைப் பார்த்திருக்கிறது. இதனை திறமையின்மை
என்று கூறலாம் என்றாலும், இத்தகைய செயல்களுக்குள் இருக்கின்ற ஒரே போன்ற தன்மை, திட்டமிட்டு
தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பதாகவே எண்ண வைக்கிறது.
பொதுமுடக்கத்திற்கான சரியான திட்டமிடல் இல்லாதால், புலம்பெயர்ந்தோர்
மற்றும் அன்றாட கூலித் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட தேவையற்ற துயரத்தை அது
அதிகரித்தது. டிரக்கின் பின்புறத்தில் இறந்த உடல்களுடன் பயணிக்க வேண்டிய
கட்டாயத்தில் காயமடைந்த புலம்பெயர்ந்தோர், பட்டினியால் இறந்து போன புலம்பெயர்ந்தவர்கள், பட்டினியால்
இறந்து போன தாயை எழுப்ப முயற்சிக்கும் குழந்தை என்று பல வீடியோ காட்சிகளை நாம் இந்தக்
காலகட்டத்தில் கண்டிருக்கிறோம். ஏறக்குறைய ஒரு மாதமாக இது தொடர்ந்து கொண்டிருப்பது, ஆட்சியதிகாரத்திடம்
திறமை என்பது சிறிதளவும் இல்லை என்பதையே சுட்டிக் காட்டுகிறது.
எம்.எஸ்.கோல்வால்கரை ‘பூஜ்னியா’ (வழிபாட்டுக்குத் தகுதியானவர்) என்று கருதுகின்ற நீங்கள் அதே
வேளையில் தேசத்தின் பன்மைத்துவத்தைப் பற்றியும் பேசின் கொண்டிருக்கிறீர்கள். ‘நாம் அல்லது நமது தேசம் வரையறுக்கப்பட்டது’ என்ற தனது
புத்தகத்தில் ‘ஹிந்துஸ்தானில் உள்ள வெளிநாட்டு இனங்களைச் சார்ந்தவர்கள் ஹிந்துக்
கலாச்சாரத்தையும், மொழியையும் பின்பற்ற வேண்டும். அவர்கள் ஹிந்து
மதத்தை மதிக்கவும், போற்றவும் கற்றுக் கொள்ள வேண்டும், ஹிந்து இனத்தை, கலாச்சாரத்தைப் பெருமைப்படுத்துகின்ற
கருத்துகளைத் தவிர, வேறு எந்த சிந்தனையும் அவர்களிடம் இருக்கக் கூடாது. அவர்கள்
ஹிந்து தேசத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, எந்தவொரு
சலுகையும் பெறாமல், எந்தவொரு முன்னுரிமையும் பெறாமல், குடிமக்களுக்கான
உரிமைகள் எதுவுமின்றி இந்த நாட்டில் தங்கியிருக்கலாம்’ என்று
கோல்வால்கர் எழுதியிருக்கிறார்.
அரசியலமைப்பையும், மதச்சார்பற்ற என்ற வார்த்தையின் பயன்பாட்டையும் (கோல்வால்கருடன்
இணைந்து) கண்டனம் செய்த தீன் தயாள்
உபாத்யாயாவின் சிலையைத் திறந்து வைக்கின்ற அதே வேளையில், அரசியலமைப்பு
சட்டம் எனது புனித புத்தகம் என்றும் நீங்கள் கூறி வருகிறீர்கள்.
காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறி வருகின்ற
நீங்கள் காந்தியைக்
கொலை செய்த கொலைகாரனை தேசபக்தர் என்று குறிப்பிட்ட சாத்வி பிரக்யா மீது எந்தவொரு
நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெளிப்படையாக வன்முறையைத் தூண்டிவிட்டு,
ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து வாழ முடியாது என்று
கூறியிருக்கும் வகுப்புவாத சிந்தனை கொண்ட யோகி ஆதித்யநாத்தை உத்தரப்பிரதேச
முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கின்ற
அதே வேளையில், ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்று நம்புவதாகவும்
நீங்கள் கூறி வருகிறீர்கள்.
உங்களைப் பின்பற்றி வருபவர்கள் உங்களுக்கு எதிரானவர்களை இந்த
நாட்டிற்கு எதிரானவர்கள் என்றே கூறுகின்றனர். அவர்கள் ‘நாம் எதிர் அவர்கள்’ என்ற சொல்லாடலை உருவாக்கியிருக்கிறார்கள். நாடு என்பது
நீங்கள் மட்டுமே இல்லை என்பதே உண்மை. அதை நாம் நம்ப வேண்டுமென்று ஊடகங்கள் சொன்னாலும், தேசியவாதத்தில்
பாஜகவிற்கு மட்டுமே ஏகபோக உரிமை இருக்கவில்லை என்பதே உண்மை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு - நீங்கள் மக்களுக்குச்
சேவை செய்வதற்காக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். மக்களுக்கு நீங்கள் பதில்
சொல்லியே ஆக வேண்டும். உங்கள்
மீது அதிருப்தி அடையும் போது உங்களை முழுமையாக விமர்சிப்பதற்கான அனைத்து உரிமைகளும்
உங்களைத் தேர்ந்தெடுத்துள்ள மக்களுக்கு இருக்கிறது. உங்கள் கட்சியின் எம்.பி.க்கள்,
அமைச்சர்கள் பேசியதற்காக நான் உங்களை விமர்சிப்பதாக சிலர் என்னைக் குறை கூறுவதுண்டு. நிச்சயமாக
நீங்கள் அதற்குப் பொறுப்பல்ல என்றாலும், உங்கள்
மௌனம் இந்த துருவமுனைப்பை வளர்த்தே வருகிறது. அதற்கான
பொறுப்பு முழுக்க உங்களைச் சார்ந்ததாகவே இருக்கிறது.
உங்களிடமுள்ள தெளிவின்மை, மௌனம், நடுநிலைமை
ஆகியவை எங்களுக்கு ஒரு செய்தியைத் தருகின்றன. பிரதமர்
அவர்களே, மனம்
திறந்து பேசுங்கள். இதற்கு முன்பாக மௌனம் என்பது ஒருபோதும் இந்த அளவிற்கான பேரிரைச்சலாக
இருந்தது கிடையாது. பிரதமரே! மனம் திறந்து பேசுங்கள். இல்லையெனில்
உங்கள் பெயர் ‘அமைதி காத்த பிரதமர்’ என்று வரலாற்றில்
இடம் பெற்று விடக்கூடும்.
தங்கள் மதிப்புக்குரிய
அன்வேஷ்
அன்வேஷ்
சத்பதி - ‘பொறுமையற்ற நாத்திகன்’ என்ற
நூலின் ஆசிரியர்
Comments