எனது படங்களுக்கான தேவைகள் எதுவுமின்றி அவை வழக்கற்றுப் போய் விடுமென்றால் நான் உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியடைவேன் - ஆனந்த் பட்வர்தன் நேர்காணல்

 நந்தினி ராம்நாத்

ஸ்க்ரோல் இணைய இதழ்

ஆனந்த் பட்வர்தன்

டொரோண்டோவில் 2022 ஏப்ரல் 28 முதல் மே 8 வரை நடைபெற்ற ஹாட்டாக்ஸ் (HotDocs) விழாவில் 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த சாதனையாளர் விருதைப் பெற்றுள்ள மிகச் சிறந்த ஆவணப்படங்களைத் தயாரித்துள்ள ஆனந்த் பட்வர்தனின் படங்கள் அவை எடுக்கப்பட்ட காலங்களை மறக்க முடியாத அளவிற்குப் படம் பிடித்து வைத்துள்ளன. அதுமட்டுமல்லாது அந்த ஆவணப்படங்கள் இனிவரவிருக்கும் காலங்களை எதிர்பார்த்து நிற்பவையாகவும் இருக்கின்றன. டொரோண்டாவில் நடைபெற்ற அந்த மதிப்புமிக்க நிகழ்வில் பட்வர்தனின் எ டைம் டு ரைஸ் (1981), ஃபாதர், சன், ஹோலி வார் (1994), வார் அண்ட் பீஸ் (2002), ரீசன் (2018) ஆகிய நான்கு படங்கள் திரையிடப்பட்டன.    

அவருடைய ஆவணப்படங்கள் ஒவ்வொன்றும் நிகழ்காலத்திற்கான படிப்பினைகளைக் கொண்டிருக்கும் மக்கள் இயக்கங்கள், சமூக நீரோட்டங்கள் குறித்த வரலாறாகவே இருந்து வருகின்றன. சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது காண்பிக்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்த அவரது ‘டைம் டு ரைஸ்’ ஆவணப்படம் கனடாவில் உள்ள பெர்ரி பழம் பறிக்கும் இந்தியர்களின் தொழிற்சங்க முயற்சி குறித்து எழுச்சியூட்டும் வகையிலே உருவாக்கப்பட்டுள்ளது. ரீசன், இன் தி நேம் ஆஃப் காட் (1992) உடன் இணைந்து ஃபாதர், சன், ஹோலி வார் எனும் ஆவணப்படம் ஹிந்துத்துவாவின் எழுச்சியைப் புரிந்து கொள்வதற்கும், ஜனநாயக அமைப்புகளையும் பேச்சு சுதந்திரத்தையும்  ஹிந்துத்துவா எழுச்சி எவ்வாறெல்லாம் சிதைத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கும் அவசியமானதாக இருக்கின்றது. போரும், அமைதியும் (வார் அண்ட் பீஸ்) என்ற ஆவணப்படம் இந்திய துணைக்கண்டம் அணு ஆயுதமயமாக்கப்படுவது, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவுகின்ற பதட்டங்கள் போன்றவற்றை நினைவூட்டிச் செல்கிறது.    

தற்போது மும்பையில் வசித்து வருகின்ற பட்வர்தன் அரிய ஆவணப்படங்களின் தயாரிப்பில் முன்னோடியாக இருந்து வருகிறார். அவர் குறித்து ஹாட்டாக்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பில் ‘ஆனந்தின் படங்கள் பார்வையாளர்களை மாற்றத்திற்கான, தொந்தரவைத் தருகின்ற, பெரும்பாலும் சங்கடமான பயணத்தில் அழைத்துச் செல்வதாகவே இருக்கின்றன’ என்று கனடா திரைப்பட தயாரிப்பாளர் அலி காசிமி கூறியுள்ளார்.     

அந்தக் குறிப்பில் ‘பிரச்சனையின் இருபுறமும் இருப்பவர்களுடன் உரையாடுவதில் இருக்கின்ற ஆர்வத்தாலும், வெளிப்படையான மனதாலும் வழிநடத்தப்படுகின்ற அவரது திரைப்படங்கள் கருத்துகள், பாடல்கள், கவிதைகள் மற்றும் அவ்வப்போது தளர்வாக, இறுக்கமாக எழுதப்பட்ட தன்னிலை குரலில் மற்றும்/அல்லது திரையில் தோன்றுகின்ற உரை ஆகியவற்றை நெருக்கமாகப் பின்னித் தருகின்றன’ என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.  

காசிமி அந்த விழாவின் போது பட்வர்தனுடன் உரையாடினார். அந்த நேர்காணலின் போது ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தான் ஆவணப்படங்களைத் தயாரித்து வருவதாகவும், தற்போது தனிப்பட்ட திரைப்படம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் மும்பையில் வசிக்கும் எழுபத்தியிரண்டு வயதான பட்வர்தன் குறிப்பிட்டார். ஹாட்டாக்ஸ் தனக்கு அளிக்கவிருக்கும் கெளரவம் குறித்து பதிலளித்த பட்வர்தன் ஆவணப்படம் குறித்த தன்னுடைய அணுகுமுறை பற்றியும், தற்போதைய இந்தியாவில் பெரும்பான்மை மக்களிடம் சகிப்புத்தன்மை அற்றுப் போயிருக்கும் சூழல் பற்றி தன்னிடமிருக்கும் கவலைகள் குறித்தும் பேசினார்.     

ஹாட்டாக்ஸிடமிருந்து சிறந்த சாதனையாளர் விருதைப் பெறுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இன்றைய காலகட்டத்தில் - நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தியாவில் என்னுடைய படங்களைத் திரையிடுவது மிகவும் கடினமான காரியமாகி விட்டது. நாங்கள் இன்னும் தொடர்ந்து திரையிடல்களை மேற்கொண்டு வருகின்றோம் என்றாலும் அவை ஆபத்து சூழ்ந்தவையாகவே ஒவ்வொரு முறையும் இருக்கின்றன. திரையிடலின் போது தனிப்பட்ட முறையில் நான் அங்கே இருக்கும்போது அந்த ஆபத்து குறித்து கவலைப்படுவதில்லை என்றாலும் நான் உடனில்லாத சில சமயங்களில் என்னுடைய படங்களைத் திரையிடுபவர்கள் தாக்கப்படுகிறார்கள் - யு சான்றிதழ் பெற்ற படங்களுக்கும் கூட அந்த நிலைமைதான் இருந்து வருகிறது.      

இந்தியாவில் பாலிவுட் படம் ஒன்றை பிரதமர் இப்போது அப்பட்டமாக விளம்பரப்படுத்தியதை நம்மால் காண முடிந்தது. பிரதமரும், அவரது ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் - அவர்களை முழுமையாகச் சார்ந்துள்ள ஊடகங்களைப் பற்றி பேசுவதற்கு எதுவுமில்லை - காஷ்மீர் பற்றிய உண்மையைச் சொல்வது போன்ற வேடத்துடன் உள்ள ஒரு திரைப்படத்திற்கான விளம்பர அல்லது விற்பனை முகவர்களாக மாறியுள்ளனர். குறிப்பிட்ட அந்த திரைப்படத்தைக் பார்த்த பார்வையாளர்கள் முஸ்லீம்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.  

இதை நாம் இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டுகளாக தேசிய அளவில் அதிகாரப்பூர்வமாக ஆதரவளிக்கப்பட்டிருக்கும் வெறுப்புடன் இணைத்தே கவனிக்க வேண்டும். வன்முறை, பயங்கரவாதம் குறித்து உண்மையான விவாதத்தை உருவாக்கி நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் அவசரத் தேவைக்கான எந்தவொரு முயற்சியையும் அந்த சக்திகள் தடை செய்து வருகின்றன.  

இந்திய ஊடகங்கள் தைரியமற்று இருப்பதால் இந்தக் காலகட்டத்தில் இதுபோன்ற படங்களுக்கான அங்கீகாரத்தை வெளிநாட்டில் உள்ள சில ஊடகங்களிடமிருந்தாவது பெறுவது சிறப்பாக இருக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் இந்திய புலம்பெயர் மக்களும் இந்தப் படங்களைப் பார்க்க வேண்டிய தேவையுள்ளது. சுறுசுறுப்புடன் இயங்கி வருகின்ற ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளால் புலம்பெயர்ந்து சென்றிருக்கும் இந்தியர்களில் பெரும்பாலானோர்  அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால் அதனை எதிர்கொள்வதற்கான தயாரிப்புடன் இருப்பதே நல்லது.   

அவர்கள் உங்களுடைய பார்வையை ஏற்றுக் கொள்ளாத போதிலும், பொதுத்திரையிடல்கள் மற்றும் பார்வையாளர்களுடன் உரையாடுவதன் மூலம் நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்து வருகிறீர்கள்…

என்னுடைய நாட்டில் என்ன தவறு நடக்கிறது என்று உணர்ந்ததை மற்றவர்களிடம் தெரிவிக்கவும், அதை ஆவணப்படுத்தி பகுப்பாய்வு செய்வதற்குமான முயற்சியாகவே எனது திரைப்படத் தயாரிப்புப் பணி தொடங்கியது. சில திரைப்பட விழாக்களுக்கு மட்டும் செல்வது என்பதாக இல்லாமல், திரைப்படங்கள் பரவலாகப் பார்க்கப்பட வேண்டும். ஒரு சில திரைப்பட விழாக்கள் என்று மட்டுமே இருந்தால் திரைப்படங்களைத் தயாரிப்பதில் எந்தவொரு பொருளும் இருக்கப் போவதில்லை.  

படத்தைத் திரையிடுவதுடன் பார்வையாளர்களுடன் விவாதிப்பது எனது செயல்முறையின் ஒரு பகுதியாக இருந்தது. ஒவ்வொரு திரையிடலும் தனக்கென்று சிறப்பான உற்சாகத்தைக் கொண்டு வந்து சேர்த்தது. திரைப்படம் ஒன்றை தொழிலாளி வர்க்கப் பார்வையாளர்களிடம் காண்பிப்பதானது நடுத்தர வர்க்கம் சார்ந்த கல்லூரி மாணவர்களிடம் அதைக் காட்டுவதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. வெவ்வேறு சாதி, வகுப்பு, பாலின குழுக்கள் அல்லது கலப்பு குழுக்களுக்கும் அது பொருந்துவதாகவே இருக்கிறது. 

திரையிடலின் போதான உரையாடல்களை நான் மிகவும் விரும்புகிறேன். விறுவிறுப்பான விவாதங்கள் எங்களிடையே நடந்துள்ளன. சில சமயங்களில் அரசியல்ரீதியான ஆபத்துகளும் நேர்ந்துள்ளன. முன்பெல்லாம் வலதுசாரிக் குழுக்கள் படத்தைக் குறிவைத்து தடையேற்படுத்த தயாராக வருவார்கள். இவ்வாறெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லித் தரப்பட்டிருக்கும். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்றால், பார்வையாளர்களில் இருந்த வகுப்புவாத துருவமுனைக்குள்ளாக்கப்பட்டவர்கள் முழுப் படத்தையும் பார்க்கும் போது தாங்கள் எதிர்பார்த்தததற்கு மாறாக படம் இருப்பதைக் கண்டு இறுதியில் குழப்பமடைந்து போனார்கள். அந்தப் படம் பதில் இல்லாத கேள்விகளை அவர்களிடம் எழுப்பியிருக்கும்.    

படம் பார்த்த மக்கள் உணர்வுப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் தங்களை மாற்றிக் கொண்ட தருணங்களும் இருந்தன. பாபர் மசூதி தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட கரசேவகர்கள் ‘ராம் கே நாம்’ படத்தைப் பார்த்துவிட்டு என்னைத் தொடர்பு கொண்டனர். தகுதியான தேசிய நோக்கம் என்று  நினைக்கும் அளவிற்கு தாங்கள் தவறுதலாக வழிநடத்தப்பட்டதாக அவர்கள் என்னிடம் ஒப்புக் கொண்டனர்.  

பொதுவாக அதுபோன்றெல்லாம் நடப்பதில்லை. மக்கள் ஒரேயொரு திரையிடலுக்குப் பிறகு உடனடியாக மாறி விட மாட்டார்கள்.  அல்லது படங்களால் யாரையும் ஒரே மாதிரியான சிந்தனைக்கு மாற்றி விட முடியாது.  விவாதம் ஒன்றைத் தொடங்கி வைக்கவே படங்கள் முயல்கின்றன. எனவே விவாதம் மிகவும் முக்கியமாகிறது. சில நேரங்களில் மிகவும் மோசமான வார்த்தைகளைக் கொண்டு நடத்தப்படுகின்ற போட்டியாக விவாதங்கள் மாறலாம்.  ஆனால் பதட்டம் தணிக்கப்படும் போது நிச்சயம் ஏதோ ஒன்று அந்த விவாதத்திலிருந்து வெளிப்படும்.     

என்னைப் போன்ற ஒருவரை தங்களால் மாற்றிவிட முடியும் என்று ஹிந்துத்துவா சக்திகள் நினைத்த காலகட்டம் இருந்தது. ஆனால் தங்களைச் சார்ந்தவர்களே மாறுவதை உணர்ந்த அவர்கள் அவ்வாறு ஈடுபடுவதை நிறுத்திக் கொண்டனர். அவர்களைப் பொறுத்தவரை படங்களைப் பார்க்காமலேயே கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது,  தாக்குவது மிகவும் பாதுகாப்பாக இருந்தது. மக்களைத் திரட்டி ஈடுபடுத்துகின்ற போதெல்லாம், அது பாதிப் போரில் வெற்றி பெற்று விட்டதாகவே இருந்தது. அதுவே தொலைக்காட்சிகளில் நான் தோன்றுவதற்கான காரணமாகவும் இருக்கிறது.

தர்க்கரீதியான விவாதம் நடத்துவது இனியும் எளிதல்ல. மறுபுறத்தில் இருப்பவர்கள் விவாதங்கள் நடப்பதை அனுமதிக்கப் போவதில்லை. தங்கள் பக்கத்தில் தர்க்கம் இல்லை என்பதால் அவர்கள் வெறுமனே கூச்சலிட்டு கொந்தளிக்க மட்டுமே செய்கிறார்கள்.     

எனது படங்களுக்கான தேவையின்றி போனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்றே நான் தொடர்ந்து கூறி வருகிறேன் என்ற போதிலும் துரதிர்ஷ்டவசமாக அதுபோன்ற நிலைமை இருக்கவில்லை.  

நீங்கள் மேற்கொண்டிருக்கும் ஆவணப்படப் பயிற்சியை விவரிக்கின்ற வகையில் வெரைட்டி (verite). ஆக்டிவிஸ்ட் (activist) என்று பல்வேறு முத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உங்களுடைய அணுகுமுறையை நீங்கள் எவ்வாறு  விவரிப்பீர்கள்?

காண்பவற்றின் மீது நான் மிகவும் இயல்பாக எதிர்வினையாற்றுகிறேன். நான் அதிகம் தன்னுணர்வு கொண்ட திரைப்படத் தயாரிப்பாளர் இல்லை. நான் கோட்பாட்டு ரீதியாக சிந்தித்து பின்னர் அதை நடைமுறைக்குக் கொண்டு வருபவன் இல்லை. நேரில் காண்பவற்றையே நான் உண்மையில் நடைமுறைக்குக் கொண்டு வருகிறேன். அதற்குப் பிறகுதான் அவற்றின் மீது எந்தவொரு கோட்பாடு அல்லது முத்திரை என்பது மேற்கொள்ளப்படும். பெரும்பாலும் அவ்வாறு முத்திரை குத்துவது என்பது மற்றவர்களாலேயே செய்யப்படுகிறது.     

எனது வகைத் திரைப்படத் தயாரிப்பு எழுதப்பட்ட கதையை நம்பியிருப்பதில்லை. அந்தப் படம் நடந்து முடியும் வரை என்ன நடக்கப் போகிறது என்பது எனக்குத் தெரிவதில்லை. சந்தர்ப்பவசமாக, தற்செயலாக நடைபெறுகின்ற விஷயங்கள் ஏராளமாக இருக்கும். ஆனால் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்தால் மட்டுமே உங்களால் அதைப் பெற முடியும். காரியங்கள் நடக்கின்ற போது  உடனிருப்பதே அதில் உள்ள தந்திரமாகும்.

வெரைட்டி என்ற சொல்லைப் பற்றி ஏராளமான குழப்பங்கள் உள்ளன. மக்கள் அதை மிகவும் தளர்வாகப் பயன்படுத்தி வருகின்றனர். வெரைட்டி என்பது ‘உண்மை’ என்று பொருள்படுகின்ற பிரெஞ்சு வார்த்தையாகும். உண்மையில் அது வெறுமனே கவனிக்கின்ற பாணிக்கென்று பயன்படுத்தப்படுகின்ற மிகவும் மோசமான பெயராக உள்ளது.  என்னைப் பொறுத்தவரை கலப்பில்லாத தூய்மையான கவனிப்பு என்று எதுவுமில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் அவரவருக்கான உள்ளார்ந்த கருத்துகள் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கின்றன. நீங்கள் எவ்வாறு கவனிக்கிறீர்கள், எதைக் கவனிக்கிறீர்கள், எவ்வளவு நேரம் அந்தக் கவனிப்பு நீடிக்கும் என்பதை அவையே வெளிக்காட்டுகின்றன.   

சினிமா வெரைட்டி என்பது ரிச்சர்ட் லீகாக், டிஏ பென்னேபேக்கர், ஃபிரடெரிக் வைஸ்மேன் போன்ற திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு உரியது. அவர்கள் சுவரில் அமர்ந்திருக்கும் ஈயைப் போல என்ன நடந்தாலும் அவற்றைப் படம்பிடிப்பது போலத் தங்களைக் கற்பனை செய்து கொண்டார்கள். மிக நீண்ட காட்சிகள், சில வெட்டுகள், இணைப்பில்லாத எடிட்டிங் போன்றவற்றை அவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

எனது சொந்த திரைப்படத் தயாரிப்பின் பல கூறுகளில் வெரைட்டி ஒன்றாக உள்ளது. என்ன நடந்தாலும் கேமரா அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற தருணங்களை உங்களால் அவற்றிடமிருந்து பெற முடியும். மற்ற நேரங்களில் என் படங்களில் தலையீடு அதிகமாக இருக்கும். படம் திசைதிரும்புவதாக நாங்கள் உணரும்போது அதற்குள்ளே நுழைந்து கேள்விகளைக் கேட்டு உரையாடலின் ஓட்டத்தை நான் வழிநடத்துவேன்.   

செயற்கையாக காட்சிகளை அமைப்பதை மட்டும் நான் செய்வதே இல்லை. மக்களுக்கு இதைச் சொல்ல வேண்டும் என்று எதையும் நான் ஒருபோதும் கூறுவதில்லை. தங்களுடைய கேமரா அங்கே இல்லையென்றால், விஷயங்கள் அது போன்று நடந்திருக்கின்றன என்று எவராலும் கூற முடியாது. என்னுடைய கேமராவுக்கு முன்னால் நடப்பவை எதுவும் என்னால் கண்டுபிடிக்கப்பட்டவையாக அல்லது உருவாக்கப்பட்டவையாக இருப்பதில்லை.    

ஆக அது ஒரு கலவையாகவே இருக்கிறது. கோட்பாடுகள் மற்றவர்களாலேயே உருவாக்கப்படுகின்றன. ஐம்பது ஆண்டு காலத் திரைப்படத் தயாரிப்பில் என் மீது பலமுறை முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. எனது வாதங்களுக்கான நுணுக்கமான ஆதாரங்களை நான் எப்போதும் அளித்து வருகின்ற போதிலும், என்னுடன் முரண்படுபவர்கள் ‘பிரச்சாரம்’ என்ற வார்த்தையையே முன்பு பயன்படுத்தினர். பின்னர் தங்கள் படைப்புகளை ‘கலை’ என்று கூறியவர்கள் என்னுடைய படங்களை மட்டும் கலவர-பிரச்சாரப் படம் (அஜிட்-ப்ராப்) என்றே அழைத்து வந்தனர்.  

மிகவும் குறைவான விவரிப்புகளையே நான் பெரும்பாலும் பயன்படுத்தியிருக்கிறேன், எனது விவரிப்புகள் பெரும்பாலும் தனிப்பட்ட முறையிலேயே இருந்து வந்திருக்கின்றன எனும் உண்மையைப் புறக்கணித்த ஒருவர் எனது திரைப்படங்கள் சோசலிச யதார்த்தவாதத்துடன், கிரியர்சனின் ‘கடவுள் குரல்’ போன்ற புறநிலைப்படுத்தல் அணுகுமுறையிலிருந்தே பெறப்பட்டுள்ளன என்ற வாதத்தை முன்வைத்து ஆதாரமற்ற தவறான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.  

இப்போது என்னுடைய படங்கள் ‘கட்டுரை வடிவிலான படங்கள்’ என்று விவரிக்கப்படுகின்றன. அந்த விவரிப்பு உண்மையில் மிகவும் துல்லியமானது. ஒரு வழக்கறிஞரைப் போல நான் நீதிமன்றத்தில் என்னுடைய வழக்கை முன்வைத்து சாட்சியம் அளிக்கிறேன். எனக்கான வாதம் உள்ளது. அந்த வாதங்களை ஒன்றாக இணைத்து, நான் முன்வைக்கின்ற கருத்து சரியானதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்ற நடுவர்களாக எனது பார்வையாளர்களை நான் வழிநடத்துகிறேன்.

ஜெய் பீம் காம்ரேட் (2011)

டொராண்டோவில் ஹாட்டாக்ஸில் உங்களுடைய ‘எ டைம் டு ரைஸ்’ ஆவணப்படத்தின் திரையிடல் நீங்கள் கனடாவில் கழித்த காலத்தை எங்களுக்கு நினைவூட்டியது. உங்களுடைய கல்விப் பின்னணி, திரைப்படத் தயாரிப்பில் உங்களுடைய ஆரம்ப காலம் எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றி கூறுங்களேன்.

திரைப்படத் தயாரிப்பாளராவதற்கு என்று எதையும் நான் படிக்கவில்லை. மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் கல்லூரியில் 1970களின் தொடக்கத்தில் ஆங்கில இலக்கியமும், அமெரிக்காவில் மாசசூசெட்ஸில் உள்ள பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில்  சமூகவியலும் பயின்றேன். 

அது வியட்நாம் போருக்கு எதிரான இயக்கத்தின் காலம். பல்கலைக்கழகத்தில் இருந்து 16மிமீ கேமராவை கடன் வாங்கிக் கொண்டேன். பின்னாளில் போருக்கு எதிராக சிறைக்குச் சென்ற நான் அரசியலில், அப்போது எனக்குத் தெரியாமலே திரைப்படத் தயாரிப்பிலும் சிக்கிக் கொண்டேன்.

அதற்குப் பிறகு இந்தியாவிற்குத் திரும்பினேன். மத்தியப் பிரதேசத்தில் கிஷோர் பாரதியுடன் இணைந்து சில ஆண்டுகள் கிராமப்புற வளர்ச்சிப் பணிகளைச் செய்து வந்தேன். கிராமப்புற காசநோயாளிகள் தங்களுக்கு அளிக்கப்படுகின்ற சிகிச்சையைத் தொடர்வதை ஊக்குவிக்கும் வகையில் படத் துண்டுகளை உருவாக்கினேன். அது புகைப்படங்கள் மற்றும் கேசட் ரெக்கார்டரில் பதிவு செயப்பட்டிருந்த ஒலிப்பதிவுகளுடன் கூடிய கதை வடிவத்தில் இருந்தது. ஒரு சாதனத்தின் மூலம் ஒவ்வொரு புகைப்படமாக நகர்த்தி அதை விளக்கலாம். மிகவும் அடிப்படையான, மலிவானதாக இருந்த அது அதிகரித்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது.      

மத்தியப்பிரதேசத்திலிருந்து ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையிலான பீகார் இயக்கத்திற்குச் நான் சென்றேன். நண்பர்களை என்னுடன் இணைத்துக் கொண்டு கடன் வாங்கிய கேமராக்களைக் கொண்டு அந்த இயக்கத்தைப் படமாக்க ஆரம்பித்தேன். பிறகு நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டதால், புரட்சி அலைகள் (வேவ்ஸ் ஆஃப் ரெவலுசன்) என்ற அந்தப் படம் தலைமறைவானது. பலர் ஏற்கனவே சிறையில் இருந்தனர். முதுகலைப் படிப்பு பயில்வதற்காக வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற நான் அந்தப் படத்தை இந்தியாவிற்கு வெளியில் காட்ட ஆரம்பித்தேன். நெருக்கடிநிலைக் காலம் முடிந்ததும் பட்டப்படிப்பை முடிக்காமலே மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பினேன். அரசியல் கைதிகள் இன்னும் சிறைகளுக்குள்ளேயே இருந்ததால், நெருக்கடிநிலையின் போது கைது செய்யப்பட்ட ஆர்வலர்களைப் பற்றி மனசாட்சியின் கைதிகள் (பிரிசனர்ஸ் ஆஃப் கான்சயின்ஸ்) என்ற படத்தை உருவாக்கினேன். 

தொடர்பியல் துறையில் முதுகலைப் படிப்பை முடிப்பதற்காக மீண்டும் 1979ஆம் ஆண்டு கனடா சென்றேன். அப்போதுதான் கனடாவில் சீக்கிய பண்ணைத் தொழிலாளர்களைத் தொழிற்சங்கமயமாக்குவதைப் பற்றி நான் ’‘எ டைம் டு ரைஸ்’ படத்தை உருவாக்கினேன். உலகின் மிகப்பெரிய இயக்கமாக வீரமிக்க விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் இயக்கத்தை சமீபத்தில்தான் நாம் இந்தியாவில் பார்த்திருந்தோம். அந்தப் போராட்டத்தின்போது விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள முகாம்களில் காட்டப்பட்ட பல படங்களில் என்னுடைய அந்தப் படமும் இடம் பெற்றிருந்தது.   

இந்திய புலம்பெயர்ந்த பண்ணைத் தொழிலாளர்களை 1981ஆம் ஆண்டு ஒருங்கிணைத்த போது எழுச்சிக்கான நேரம் உருவானது. அதற்கு ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த போது,​​கலிபோர்னியாவில் உள்ள மெக்சிகன் பண்ணைத் தொழிலாளர்களை அற்புதமாக முன்னின்று வழிநடத்திய சீசர் சாவேஸுடன் தன்னார்வலராகப் பணியாற்றி வந்தேன். எனவே எங்களுடைய அந்தக் கனடிய பண்ணைத் தொழிலாளர்கள் இயக்கம் தொடங்கிய போது, ​​எங்களுக்கு ஆதரவளிக்க்கும் வகையில் அங்கே வருமாறு சாவேஸை அழைத்திருந்தோம். அதுவும் ‘எ டைம் டு ரைஸில்’ ஒரு பகுதியாக உள்ளது. இயக்கங்களில் ஈடுபடுவதால் இதுபோன்ற மகிழ்ச்சியான விபத்துகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. 

எ டைம் டு ரைஸ் (1981)

திரைப்படத் தயாரிப்பில் பல ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுடைய அணுகுமுறை எவ்வாறாகப் பரிணமித்துள்ளது?

செல்லுலாய்டில் தொடங்கிய பழைய தலைமுறையிலிருந்து வந்தவன் நான்.  ஃபிலிமைக் கொண்டு நாங்கள் திரைப்படங்களை உருவாக்கினோம். ஃபிலிம் மலிவானது இல்லை என்பதோடு கையாள்வதற்கும் மிகவும் சிரமமானது. ஃபிலிமில் படம் பிடித்து, அதனைக் கழுவும் போது ஒரு நெகட்டிவ் வரும். அந்த நெகட்டிவில் இருந்து பிரதி எடுக்கும் போது நேர்மறையான ஃபிலிம் கிடைக்கும். அதில் நீங்கள் படம் பிடித்த காட்சிகளைப் பார்க்கலாம். ஒலி அந்தப் ஃபிலிமில் தனிப் பாதையில் இருக்கும். அதுவே உங்களுக்கு கிடைக்கும் ஆரம்பகட்ட படமாகும். படத்தின் ஒவ்வொரு ரோலுக்கும் ஆயிரக்கணக்கில் செலவாகும், எதைப் படமாக்க வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்று மிகவும் கவனமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டியிருக்கும். பிற்காலத்தில் வீடியோ, டிஜிட்டல் என்று வந்து விட்ட பிறகு, ​​​​படம் எடுப்பது மிகவும் மலிவாகி விட்டது.

இப்போது நான் அதிக அளவிலே, எந்தவொரு ஒழுங்குமின்றி படம் பிடிக்கிறேன். இப்போது இருப்பதைக் காட்டிலும் அந்த காலகட்டத்தில் அதிகமாக இயக்க வேண்டியிருந்தது. இயக்கப்படுவதில் இருக்கின்ற மிக மோசமான விஷயம் ஒருவர் தற்செயலான தன்மையை இழந்து விடுவதாகும். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்க்காமல், உங்கள் கேமரா மிக விரைவில் அணைக்கப்படுமானால், நீங்கள் அற்புதமான விஷயங்களை இழக்க நேரிடும். டிஜிட்டல் சகாப்தம் அதிக அளவில் படம் பிடிப்பதை அனுமதித்திருக்கிறது, ஆனால் அது நீங்கள் உங்களுடைய கவனத்தை இழக்கும் அளவிற்கான தேர்வுகளால் நிறைந்துள்ளது.

1995ஆம் ஆண்டு வரை 16 மி.மீ மட்டுமே நான் பயன்படுத்தி வந்தேன். .அதற்குப் பிறகு 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஜெய் பீம் காம்ரேட் வரை, எச்டி வந்த நேரத்தில் ஹாய்8 மற்றும் மினி டிவியில் படமாக்கினேன். ஏற்கனவே 4K இருந்தபோது HDஇல் [2018 இல்] ரீசன் படமாக்கப்பட்டது. எப்போதும் தொழில்நுட்பத்தில் பின்தங்கியவனாகவே நான் இருந்திருக்கிறேன்.   

நிதியளிப்பு நிறுவனங்களைத் தொடர்புகொள்வது மிகப் பரவலான நடைமுறையாக உள்ளது. தங்கள் திட்டங்களுக்கான தயாரிப்பு நிதிக்காக திரைப்படத் தயாரிப்பாளர்கள் நிதிநிறுவனங்களை அணுகி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற நிலைமை குறித்து உங்கள் கருத்து என்ன?

நிதிதிரட்டலை நான் கடுமையாக விமர்சிக்கிறேன். பெரிய அளவிலான நிதிதிரட்டல்  அமர்வுகளைக் கொண்ட திரைப்படத் திருவிழாவிற்கு நான் ஒரு முறை சென்றிருந்தேன். அங்கே என்னால் நிதிதிரட்டல் எவ்வாறெல்லாம் நடைபெறுகிறது என்பதைக் காண முடிந்தது. சில சமயங்களில் நிதிதிரட்டலுக்கான முக்கியத்துவம் மிகவும் வலுவாக இருப்பதால், திருவிழாவிற்கு வருகின்ற பார்வையாளர்களில் பெரும் பகுதியினர் திரைப்படங்களைப் பார்ப்பதைக் காட்டிலும் நிதிதிரட்டுவதிலேயே தங்களுடைய கவனத்தைச் செலுத்துகின்றனர். நிதிதிரட்டல் என்பது ‘தி காங் ஷோ’ போன்று இருக்கும். வழக்கமாக ஐந்து பேர் பொதுவாக வெள்ளையர்கள் - ஆண்கள் - தயாரிப்பிற்கு நிதியுதவி பெற்றுத் தருகின்ற எடிட்டர்களாக ஒரு மேஜையைச் சுற்றி அமர்ந்திருப்பார்கள். அங்கே வந்து விளக்கக்காட்சியை ஐந்து நிமிடங்களுக்கு வழங்குவதற்கான அனுமதி நிதி ஆதரவற்ற படத்தயாரிப்பாளர்களுக்குத்  தரப்படும். அதற்குப் பிறகு படத்தயாரிப்பாளருக்கு நிதியுதவி கிடைக்கும் அல்லது அவர் விரட்டி அடிக்கப்படுவார்.   

திரைப்படத் தயாரிப்பாளர்கள் வியத்தகு தருணங்களைத் தங்களுடைய  திரைப்படங்களில் வழங்குவதை இந்த நிதி திரட்டல் குறைத்து விடுகிறது. நிதியுதவி பெற்றுத் தருகின்ற எடிட்டர்கள் விரும்புவார்கள் என்று தாங்கள் அறிந்தவற்றை  தங்கள் படங்களில் இருக்குமாறு அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மூன்றாம் உலகத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அல்லது வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களைப் பொறுத்தவரை - படம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை மேற்கத்தியப் பார்வையாளர்களுக்காக படத்தை வாங்குபவர்களின் பார்வையே தீர்மானிக்கிறது.  

கடவுளின் பெயரால் (1992)

ஒட்டுமொத்த படமும் முழு விஷயமும் ஒருவரைச் சுற்றியே இருக்கின்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட திரைப்படங்களே பல்லாண்டுகளாக விரும்பப்பட்டு வருகின்ற ஃபார்முலாவாக இருக்கின்றன. திரைப்படங்கள் பெரும்பாலும் தயாரிக்கப்படுவதற்கு முன்பாகவே அல்லது பெரும்பாலும் தயாரிப்பில் இருக்கின்ற போது வாங்கப்பட்டு விடுகின்றன. நிதியுதவி அளிக்கின்ற  செயல்முறையின் விளைவாக தங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததையே அவர்கள் தேர்வு செய்கிறார்கள். எந்த வகையிலும் யாரும் சோதனைகளை மேற்கொள்வதே இல்லை.   

நிதியுதவி பெற்றுத் தருகின்ற எடிட்டர்கள் அல்லது விற்பனை முகவர்கள் என்று யாரும் என்னுடைய படங்களைப் பொறுத்தவரை இருந்ததில்லை. மேலும் பல கதாபாத்திரங்களுடன் இருக்கின்ற அந்தப் படங்களில் கதைக்களம் என்ற ஒன்றே இருந்ததில்லை. எனவே நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட தனித்துவமான அந்த திரைப்படத்தை எந்தவொரு தொலைக்காட்சியும் தன்னுடைய பரந்த பார்வையாளர்களுக்காகத் திரையிட விரும்பியதுமில்லை.   

ஏராளமான மாணவர்களையும், திரைப்பட இளம் தயாரிப்பாளர்களையும் நீங்கள் சந்தித்து வருகிறீர்கள். அவர்களுடனான உரையாடல் எதை வெளிப்படுத்துகிறது?

என்னுடைய சில படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களுக்குச் செல்வதால், ஆவணப்படத் துறையில் வெற்றி பெற்ற ஒருவராகவே என்னை அவர்கள் காண்கிறார்கள். நிதியுதவி ஆலோசனையுடன் ஓரளவிற்கு அவர்களுக்கு என்னால் உதவ முடியும். ஆனால் நிதியளிக்கப்படுகின்ற திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவனாக நான் இல்லை என்பதுதான் உண்மை. என்னுடைய அனைத்துப் படங்களிலும் இறுதிக் காட்சியின் போது காட்டப்படுகின்ற நன்றி பட்டியலில் எனது எந்தவொரு படத்துக்கும் பின்னால் பணம் குறித்த நன்றிகள் இருப்பது கிடையாது.     

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. மிகவும் சலுகை கொண்ட பின்னணியில் இருந்து வந்தவன். என்னுடைய பிழைப்பிற்காக பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனது குடும்பத்தினரும் நண்பர்களும் முழுக்க முழுக்க எனக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளனர். விற்பனை, விரிவுரையுடனான திரையிடல் சுற்றுப்பயணங்கள் போன்ற உத்திகள் மூலமாகவே எனது திரைப்படங்கள் தங்களுக்கான செலவுகளை மீட்டெடுத்துக் கொள்ளத் தொடங்குகின்றன.

மேலும் என்னுடைய அடுத்த படத்தைத் தயாரிப்பதற்கான எதிர்பார்ப்பில் நான் எப்போதும் இருப்பதில்லை. நான் தயாரித்த படங்களைத் திரையிட்டுக் காட்டி பல ஆண்டுகள் கழிந்து விட்டன. எடுத்துக்காட்டாக ஜெய் பீம் காம்ரேட் தயாரிப்பிற்கு பதினான்கு ஆண்டுகள் ஆனது. அதைத் திரையிடுவ்தற்கு அதற்கும் கூடுதலான ஆண்டு காலம் கழிந்தது. 2011ஆம் ஆண்டில் அந்தப் படம் தயாரானது. அடுத்த ஐந்தாண்டுகளை படம் முடியும் நேரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய தலித் நடிகர்கள் சிலருக்குப் பிணை வழங்கப்பட வேண்டும் என்று சட்டப்பூர்வப் போராட்டத்தை நடத்திக் கழிக்க வேண்டியதாயிற்று.

திரைப்படங்களை நான் தயாரிக்கத் தொடங்கி 51 ஆண்டுகள் முடிவடைந்துள்ள போதிலும் எனது திரைப்பட வெளியீடு என்பது மிகவும் குறைவான அளவிலேயே உள்ளது. அந்தச் சங்கிலியில் உள்ள ஒவ்வொரு செயல்முறையையும் நான் ரசித்தவன் என்பதால் இதை ஒரு புகாராக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இது ஒரு முழுமையான உண்மை.

தந்தை, மகன் மற்றும் புனிதப் போர் (1994)

https://scroll.in/reel/1021197/anand-patwardhan-interview-i-would-be-thrilled-if-my-films-became-obsolete-but-sadly-they-dont

 

Comments