‘இல்லம்தோறும் மூவர்ணக் கொடி’ - பிரதமரின் பிரச்சாரம் நமக்கு விடும் எச்சரிக்கை

பிருந்தா காரத்


என்டிடிவி


இந்திய சுதந்திரத்தின் எழுபத்தைந்தாவது ஆண்டு விழாவின் போது, நமது சுதந்திரத்தை சாத்தியமாக்கித் தந்துள்ள பெண்கள், ஆண்கள் என்று ஏராளமான தியாகிகளுக்கு எண்ணற்ற குடும்பங்கள் மூவர்ணக் கொடியைத் தங்களுடைய வீடுகளில் பறக்க விட்டு மரியாதை செலுத்தப் போகின்றன. ‘இல்லம்தோறும் மூவர்ணக் கொடி’ என்ற அந்த அறிவிப்பு வெற்றுமுழக்கம் அல்லது சடங்கு என்பதற்கு அப்பாற்பட்டுச் செல்வதற்கு நம்முடைய வரலாறு, நமக்கான சுதந்திரத்தை வென்றெடுப்பதில் எவையெல்லாம் முக்கியமானவையாக இருந்தன என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.    

நமது மூவர்ணக் கொடி இந்திய அரசியலமைப்புடன் மிக நெருங்கிய தொடர்புடையது. அரசியல் நிர்ணய சபை தேசியக் கொடியை இறுதி செய்வதற்காக ராஜேந்திரபிரசாத் தலைமையில் பன்னிரண்டு பேர் கொண்ட தற்காலிகக் குழு ஒன்றை 1947ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைத்தது. ‘தேசியக்கொடி குழு’ என்று அமைக்கப்பட்ட அந்தக் குழுவில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், மௌலானா அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலாச்சாரி, கே.எம்.முன்ஷி, கே.எம்.பணிக்கர், ஃபிராங்க் அந்தோணி, பட்டாபி சீதாராமையா, ஹீராலால் சாஸ்திரி, பல்தேவ் சிங், சத்யநாராயண் சின்ஹா, எஸ்.என்.குப்தா ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர். ஏற்கனவே இருந்த மூவர்ணக் கொடியை சர்க்காவிற்குப் பதிலாக அசோக சக்கரம் என்ற முக்கியமான மாற்றத்துடன் தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்வது என்று அந்தக் குழுவின் உறுப்பினர்கள் முன்மொழிவார்கள் என்பது நன்கு அறிந்த  ஒன்றாகவே இருந்தது. 

       

காங்கிரஸ் கட்சி மூவர்ணக் கொடியை முதன்முதலாக 1931ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வழியாக ஏற்றுக் கொண்டிருந்தது. நடைமுறையில் அந்தக் கொடி காங்கிரஸ் கட்சியையும் தாண்டி இந்திய சுதந்திரப் போரில் அனைவருக்குமான முக்கியப் பதாகையாக மாறியது. அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்களில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் அந்தக் கொடியை சுதந்திர இந்தியாவிற்கான தியாகத்தின் சின்னம் என்று குறிப்பிட்டே பேசினர். அந்த விவாதத்தில் கலந்து கொண்ட எச்.கே.காண்டேகர் ‘அடித்துக் கொல்லப்பட்ட குழந்தைகளை இழந்த எத்தனையோ பேர் சுதந்திரத்திற்காக தங்களுடைய உயிரைத் தியாகம் செய்துள்ளார்கள். ஆங்கிலேயப் பேரரசு அந்தக் கொடியை அழிப்பதற்கென்று தன்னுடைய ஒட்டுமொத்த சக்தியையும் பயன்படுத்தியது. ஆயினும் நாம் தொடர்ந்து அதனைப் போற்றிப் பாதுகாத்து வந்திருக்கிறோம்’ என்று தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.  

இந்திய சுதந்திரப் போரட்டத்தில் மூவர்ணக் கொடி தவிர்த்து பிற கொடிகளும் குறிப்பிடத்தக்க வகையில் இடம் பெற்றிருந்தன. எடுத்துக்காட்டாக ஆங்கிலேயப் பேரரசிற்கு எதிராக நடத்தப்பட்ட வீரம் செறிந்த போராட்டங்களில் போராட்டம், தியாகம் ஆகியவற்றின் அடையாளம் என்று தாங்கள் கருதிய செங்கொடியை கம்யூனிஸ்டுகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளும், அவர்களுக்கான ஆதரவை வழங்கி வந்தவர்களும் தங்களுடைய கரங்களில் ஏந்திச் சென்றனர். அந்தச் செங்கொடி சென்னையில் 1923ஆம் ஆண்டு நடைபெற்ற தொழிலாளர் பேரணியில் முதன்முதலாக ஏற்றப்பட்டது. பின்னர் அது நாட்டின் அனைத்து மூலைமுடுக்குகளுக்கும் சென்று சேர்ந்தது.  

ஆதிவாசிகள் பலரும் தங்கள் சொந்தக் கொடிகளை ஏந்தியே ஆங்கிலேயருக்கு எதிரான அனைத்து கிளர்ச்சிகளிலும், போராட்டங்களிலும் கலந்து கொண்டிருந்தனர். ஆதிவாசிகளின் குரல்களில் ஒன்றாக அரசியல் நிர்ணய சபையில் இருந்த ஜெய்பால் சிங் முண்டா ‘ஒவ்வொரு (ஆதிவாசி) கிராமத்திற்கும் அதற்கென்று சொந்தக் கொடி உள்ளது. வேறு எந்த பழங்குடியினராலும் மற்றவரின் கொடியை நகலெடுத்து வைத்துக் கொள்ள முடியாது. ஒருவரின் கொடியை யாராவது எதிர்க்கத் துணிவார்கள் என்றால் தங்களுடைய கொடியின் மாண்பைக் காப்பதற்காக குறிப்பிட்ட பழங்குடியினர் தங்களுடைய கடைசி சொட்டு ரத்தம் வரை சிந்திப் போராடுவார்கள் என்பதை உங்களிடம்  உறுதியளித்துக் கூறுகிறேன். இனிமேல் அந்தக் கிராமங்கள் அனைத்திலும் இரண்டு கொடிகள் இருக்கப் போகின்றன. எங்களிடம் கடந்த ஆறாயிரம் ஆண்டுகளாக ஒரு கொடி இருந்து வருகிறது. இனிமேல் இந்த தேசியக் கொடி மற்றொரு கொடியாக, நமது சுதந்திரத்தின் குறியீடாக எங்களிடம் இருக்கும்...’ என்று உரையாற்றினார். மூவர்ணக் கொடி தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு இன்றளவிலும் தேசிய இயக்கத்தின் போது காணப்பட்ட வேறு பல கொடிகளும் உயிர்ப்புடனே இருந்து வருகின்றன. அநீதிக்கு எதிரான போராட்டங்களில் பெருமைக்குரிய அடையாளமாக செங்கொடி தொடர்ந்து இருந்து வருகின்றது.       

தேசியக் கொடியின் நிறங்கள் எந்தவொரு குறிப்பிட்ட மதம் சார்ந்த சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தாமல் மூவர்ணக் கொடி மதச்சார்பற்ற கொடியாகவே இருந்தது. தேசியக் கொடிக்கான தீர்மானத்தை அறிமுகம் செய்து பேசிய ஜவஹர்லால் நேரு ‘கொடியின் முக்கியத்துவத்தை தவறாகப் புரிந்து கொண்டுள்ள சிலர் அது வகுப்புவாத அடிப்படையில் இருக்கிறது என்று கருதி வருகின்றனர். அவர்கள் கொடியின் இந்தப் பகுதி இந்தச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அந்தப் பகுதி அந்தச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றே நம்புகிறார்கள். ஆனால் முதன்முதலாக கொடி வடிவமைக்கப்பட்ட போதே நிறங்களுக்கென்று எந்தவொரு வகுப்புவாத முக்கியத்துவமும் தரப்படவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்’ என்றார். மற்றொரு உறுப்பினரான ஷிபன் லால் சக்சேனா ‘அந்த மூன்று நிறங்களுக்கென்று வகுப்புவாதம் சார்ந்த தனித்த முக்கியத்துவம் எதுவுமில்லை என்பதை தெளிவான வார்த்தைகளில் நாங்கள் அறிவித்திருக்கிறோம். அந்தக் கொடியை வகுப்புவாதக் கொடி என்று இன்றைக்கு வகுப்புவாத வெறி பிடித்து அலைபவர்கள் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை’ என்றார்.    

தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் கொடியில் உள்ள காவி நிறம் தியாகம், துறத்தல் போன்றவற்றை குறிப்பிடுகிறது என்றும் இயற்கையுடனான நெருக்கத்தை பச்சை நிறமும், அமைதி, வன்முறையற்ற செயல்களை வெள்ளை நிறமும் குறிப்பிடுகிறது என்றும் கொடியின் நிறங்களுக்கான பொருள் குறித்து ஆக்கப்பூர்வமான விளக்கங்கள் தரப்பட்டன. உறுப்பினர்கள் அனைவருமே அந்தக் கொடி வகுப்புவாதம் கொண்டதாக இல்லை என்பதை ஏற்றுக் கொண்டிருந்தனர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ‘எப்போதும் விழித்திருந்து, இயங்கி, முன்னேறுங்கள். கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், முஸ்லீம்கள், ஹிந்துக்கள், பௌத்தர்கள் என்று அனைவரும் தங்களுக்கான பாதுகாப்பான இடத்தைப் பெறும் வகையிலான சுதந்திரமான, நெகிழ்வான இரக்கமுள்ள, கண்ணியமான, ஜனநாயக சமுதாயத்திற்காக உழையுங்கள் என்றே நம்மிடம் இந்தக் கொடி கூறுகிறது’  என்று தன்னுடைய விளக்கத்தில் கூறினார்.        

அந்த விவாதத்தின் மூன்றாவது அம்சம் சமூக நீதி மற்றும் ஒடுக்குமுறை, பசியிலிருந்து விடுதலை தொடர்பாக அமைந்திருந்தது. சுதந்திரத்தின் அடையாளம் என்று கொடியை விவரித்த நேரு ‘நாட்டில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பட்டினி, பசியுடன் உடுக்க ஆடையின்றி இருப்பது உள்ளிட்ட வாழ்க்கைத் தேவைகள், வளர்ச்சிக்கான வாய்ப்பின்மை போன்றவற்றுடன் இருக்கும் வரையிலும் முழுமையான சுதந்திரம் என்ற ஒன்று இருக்கப் போவதில்லை’  என்றார். அந்தக் கருத்தே மற்ற பலரின் உரைகளிலும் எதிரொலித்தது. உணர்ச்சிவசப்படாத மிகவும் நிதானமான சிந்தனையில் - எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படுகின்ற ‘இல்லம்தோறும் மூவர்ணக் கொடி’ என்ற பிரச்சாரம் வீடற்றவர்கள், நிலமற்றவர்கள், சொற்ப வருமானம் உடையவர்கள் என்ற காரணத்திற்காக கோடிக்கணக்கான குடும்பங்களை ஒதுக்கி வைக்கும் என்றே தோன்றுகிறது. அரசியல் நிர்ணயசபை வெளிப்படுத்திய உணர்வுகளைப் பொய்யாக்குகின்ற வகையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்துக் கொடுத்துள்ள தீவிரமான முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பிற்கு எதிராக இரண்டாவது சுதந்திரப் போராட்டம் தேவைப்படுவதாக உள்ளது.          

அரசியல் நிர்ணயசபை 1947 ஜூலை 22 அன்று மூவர்ணக் கொடியை ஏற்றுக் கொண்ட போது நடைபெற்ற விவாதங்களில் நாட்டின் சுதந்திரத்திற்கான தியாகம், அதை அடைவதற்கான ஒற்றுமை, சமூக மற்றும் பொருளாதார நீதி போன்ற அம்சங்களே இடம் பெற்றிருந்தன. மூவர்ணக்கொடியை ஏற்றுக் கொண்டிராத ஆர்எஸ்எஸ் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் அமைப்பும் அந்த சமயத்தில் இருந்தது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊதுகுழலான ஆர்கனைசர் பத்திரிகை ‘விதியின் வசத்தால் ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் நம்முடைய கைகளில் இந்த மூவர்ணக் கொடியைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் ஹிந்துக்கள் ஒருபோதும் அந்தக் கொடியை மதிக்க மாட்டார்கள், ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ‘மூன்று’ என்ற வார்த்தை தீமையைக் குறிப்பதாகவே உள்ளது. மூன்று நிறங்களுடன் உள்ள இந்தக் கொடி நிச்சயமாக மிகவும் மோசமான உளவியல் விளைவுகளை உருவாக்கி, நாட்டிற்குத் தீங்கையே விளைவிக்கும்’ என்று 1947ஆம் ஆண்டில் எழுதியிருந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனக் கொடியாக இருந்த காவிக் கொடியே இந்திய தேசியக் கொடியாக இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்சிடம் இருந்த விருப்பம், மனுஸ்மிருதியின் அடிப்படையிலேயே இந்திய அரசியலமைப்புச் சட்டம் இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பிடம் இருந்த விருப்பத்தைப் போலவே இருந்தது.    

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட இரண்டே நாட்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. ஓராண்டிற்குப் பிறகு அந்தத் தடையை நீக்கும் வகையில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு விதிக்கப்பட்ட பல நிபந்தனைகளுக்குள் தேசியக் கொடியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைக்கும் இடமிருந்தது. அப்போது உள்துறைச்செயலராக இருந்த எச்.வி.ஆர்.ஐயங்கார் அது தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் எம்.எஸ்.கோல்வால்கருக்கு 1949 மே மாதத்தில் கடிதம் ஒன்றை எழுதினார். ‘அரசின் மீதான விசுவாசத்தில் எந்தவொரு பாகுபாடும் காட்டவில்லை என்று நாட்டைத் திருப்திப்படுத்துவதற்கு தேசியக் கொடியை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வது மிகவும் அவசியம்’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய நிலைமையில் அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை.       

இப்போது அந்த வரலாற்றை தேசத்திற்கு நினைவூட்டுபவர்களைப் பார்த்து ‘பிரச்சனையை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்’ என்று ஆர்எஸ்எஸ் கூறி வருகிறது. அதுபோன்று கூறப்படுகின்ற கருத்து முற்றிலும் தவறானது என்று கூறுவதற்குக்கூட ஆர்எஸ்எஸ் தயாராக இல்லை. ஆர்எஸ்எஸ் தலைவரான கல்லாட்கா பிரபாகர் பட் ‘ஹிந்து சமாஜம் ஒன்றுபட்டால், பகவ த்வஜம் (காவிக் கொடி)  தேசியக் கொடியாக மாறும்’ என்று சமீபத்தில் கூறியிருக்கிறார்.       

ஒரு தேசமாக இந்தியாவின் அடிப்படையாக இருக்கின்ற சில விழுமியங்களைப் பிரதிபலிக்கின்ற தேசியக்கொடியானது ஆர்.எஸ்.எஸ்சைப் பொறுத்தவரை வெறுக்கப்படுகின்ற ஒன்றாகவே இருந்து வருகிறது. சுதந்திரப் போராட்டம் குறித்த அந்த விழுமியங்கள் மதச்சார்புகளுக்கு அப்பாற்பட்டு மதச்சார்பற்ற குடியுரிமையுடன் இணைக்கப்பட்டுள்ள தேசபக்திக்குள் வேரூன்றி இருக்கின்றன.  அத்தகைய விழுமியங்கள் மீது இன்றைக்கு அதிகாரத்தில் வீற்றிருப்பவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் தங்களுக்கான பங்கை ஆங்கிலேயர்களின் பிரித்தாளுகின்ற கொள்கையை வலுப்படுத்துகின்ற வகையிலே வைத்துக் கொண்டிருந்தவர்கள் நடத்தி வருகின்ற தாக்குதல்களிலிருந்து அவற்றைப் பாதுகாத்து, நிலைநிறுத்துவதற்கான அர்ப்பணிப்புடன் ‘இல்லம்தோறும் மூவர்ணக் கொடி’ என்ற இயக்கம் இருந்திட வேண்டும். அரசியலமைப்பின் முகப்புரையில், இந்த மதத்தை அல்லது அந்த மதத்தைச் சார்ந்த மக்களாகிய நாங்கள் என்று இடம் பெறாமல் ‘இந்திய மக்களாகிய நாங்கள் ("ஹம் பாரத் கே லோக்) என்பதாக இடம் பெற்றிருக்கின்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வார்த்தைகளுக்கு இணையானதாகவே கொடி ஏற்றும் செயல் இருக்க வேண்டும்.     

https://www.ndtv.com/opinion/what-pms-har-ghar-tiranga-campaign-should-alert-us-to-3241768 

Comments