இது திரௌபதிக்கான தருணம்: குடியரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளர் செயலில் இறங்குவாரா?

பீட்டர் ரொனால்ட் டிசோசா

ஃப்ரண்ட்லைன்

குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளராக திரௌபதி முர்முவை தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்ந்தெடுத்துள்ளது. மிக எளிமையான, வெற்றிகரமான சந்தர்ப்பவாத நடவடிக்கையாக உள்ள அந்த முடிவை பல வழிகளில் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.     

முதலாவதாக அரசைக் கட்டுப்படுத்துவதில் தனக்குச் சாதகமான நிலைப்பாட்டை அடைவதற்காக பாஜக எடுத்திருக்கும் மிகச்சிறந்த தந்திரமான நடவடிக்கையாக அவரது தேர்வைப் பார்க்கலாம். அதிகரித்து வருகின்ற எதிர்க்கட்சி ஒற்றுமையை அந்த முடிவு ஒரே அடியில் தகர்த்தெறிந்திருக்கிறது.    

இரண்டாவதாக அந்த முடிவை விதவை, பள்ளி ஆசிரியை, விளிம்புநிலைக் குழுவைச் சார்ந்த (சாதகமற்ற மூன்று பண்புகள்) ஒருவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் அமர்வதற்கான வாய்ப்பை வழங்கியிருப்பதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான மிகவும் ஈர்ப்பான நெறிமுறை சார்ந்த குறிப்பாகக் காணலாம். இப்போது அந்த ஒரு செயலின் மூலமாக இந்தியா ஜனநாயக சமூகத்தில் தற்பெருமை அடித்துக் கொண்டிருக்கிறது.   

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் பிற முக்கியஸ்தர்களுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு ஜூன் 24 அன்று புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி நடந்து செல்கிறார்

மூன்றாவதாக நிறுவப்பட்ட மேல்தட்டினருக்கும், சாதாரண மக்களுக்கும் இடையே தொடர்ந்து நிகழ்ந்து வருகின்ற - பிந்தையவர்களுக்கு ஆதரவாக - போட்டியில் திரௌபதியைப் பரிந்துரைத்திருப்பவர்களின் தீர்க்கமான சூழ்ச்சி என்றும் அந்த முடிவு இருப்பதைக் காண முடிகிறது.  

நான்காவதாக அந்த முடிவு குறித்த பார்வை சற்று குறைகாண்பதாகவே உள்ளது. திரௌபதியின் நியமனத்தை அரசியலமைப்புச் சட்டத்தைக் காட்டிலும் அரசின் நிர்வாகிகளுக்குச் சேவை செய்கின்ற, இணக்கமான ஒருவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் தங்கியிருப்பதற்கான உரிமையைத் தருகின்ற ஆட்சியாளர்களின் மற்றொரு முயற்சியாகவே பார்க்க முடிகிறது. அவரது நியமனத்திற்கான இந்தப் பார்வை குறித்து விரிவான பட்டியலைத் தேடுகின்ற ஒருவரால் எளிதில் அதைப் பெற முடியும்.   

இவையனைத்தும் நியமனம் குறித்த சரியான அவதானிப்புகளாக இருந்த போதிலும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவையாக, ஏற்கனவே நிகழ்ந்த பழைய நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக மட்டுமே இருக்கின்றன. போதுமானவையாக இல்லாத இதுபோன்ற பார்வைகள் வரலாற்றுத் தருணத்தின் சாத்தியக்கூறுகளைக் காண்பதில்லை.    

விடுதலைக்கான வாய்ப்புகளுடன் இருப்பதாகவே குடியரசுத்தலைவர் தேர்தலில் வேட்பாளர் என்ற திரௌபதி முர்முவின் நியமனத்தைக் காண்கிறேன். ஆனால் காலம்தான் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்புகள் நடைமுறைக்கு வருமா என்பதற்கான பதிலைச் சொல்ல வேண்டும். அதனை நோஸ்ட்ராடாமஸின் புத்தகத்தில் உள்ள 347ஆவது பக்கம் மட்டுமே உறுதிப்படுத்தும். இப்போதைக்கு என்னுடைய கூற்றை, அதன் தகுதிகளை மட்டும் ஆராய்வது என்பதுடன் நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.   

திரௌபதி முர்முவின் வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்கும்      பிரதமர் மோடி

வயதாகிக் கொண்டிருக்கும் ஜனநாயகவாதி ஒருவரது மழுங்கிப்போன நம்பிக்கையிலிருந்து அல்லது மனித குணங்கள் குறித்து மாற்ற முடியாத பார்வையாளராக உள்ளவரின் திரட்டப்பட்ட பேரறிவிலிருந்து வெளிப்படுவதாக என்னுடைய இந்த அவதானிப்புகள் இருக்கின்றனவா? குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரான திரௌபதி முர்மு பிரதமருக்குப் பின்னே சற்று விலகி நின்று கொண்டிருக்க, தன்னுடைய பொறுப்பான இருக்கையில் அமர்ந்திருக்கும் தேர்தல் அதிகாரியிடம் திரௌபதியின் வேட்புமனுவைச் சமர்ப்பித்த பிரதமரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படம் அதிகாரத்தின் குறியீடுகளை ஆய்வு செய்பவர்கள் தங்களுடைய ஆய்வுகளை மேற்கொள்ளவும், கலாச்சாரக் கோட்பாட்டாளர்கள் அதனைக் குறிவிளக்கம் செய்தும் தர வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. ஆனால் அதை அவர்கள் இப்போது அல்ல - ஐந்து ஆண்டுகள் கழித்து செய்து கொள்ளலாம். இருந்தபோதிலும் அவருக்கான அந்த தருணத்தை, அதன் சாத்தியக்கூறுகளை மட்டுமே இப்போது இங்கே ஆய்வுக்குட்படுத்திடலாம்.           

நமக்கு முன்பாக அந்த தருணம் வழங்கக் கூடிய மூன்று வகையான ஆய்வுகள் இருக்கின்றன.  நினைவில் கொள்வதற்கு வசதியாக நான் அவற்றை (i) அவரது நியமனம் குறித்த அடையாளப் பெருக்கம் (ii) அவரது நியமனம் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இருப்பு அரசியல் (iii) வரலாற்றுச் சுமையைச் சுமந்து கொண்டிருக்கும் அவரைப் போன்ற ஒருவருக்கு முன்பாக இருக்கின்ற அரசியலமைப்புச் சாத்தியங்கள் என்று இங்கே குறித்துக் காட்டுகிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அவர் அவ்வாறு செய்வாரா அல்லது மாட்டாரா என்பது நமக்குத் தெரிய வந்து விடும். நீண்ட காலத்திற்கு முன்பு உண்மையான அல்லது புராண கதாபாத்திரமான மற்றுமொரு திரௌபதி அதிகாரம் மிக்க மனிதர்கள் அடங்கிய சபையில் மிகவும் கடினமான கேள்விகளை எழுப்பி அவர்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைத்திருந்தாள்.                

பெயரிடுவதில் உள்ள சிக்கல்

எவ்வாறு பெயரிடுவது என்பதிலேயே திரௌபதியின் அடையாளம் குறித்த முதல் சவால் உள்ளது. ஒரு பொருளின் வடிவத்தை, அதன் முக்கியத்துவத்தை, கலாச்சார ஆளுமையை வழங்குவதாகவே ஒரு பெயரானது இருக்கிறது. எனவே எவ்வாறு பெயரிடுவது என்பதே அவருக்கான முதலாவது சவாலாக உள்ளது. இந்திய ஜனநாயகம் பற்றிய பொது உரையாடலில் மிக முக்கியமான அடையாளங்களாக அவரிடமுள்ள ஆசிரியர் அல்லது விதவை என்பவை குறித்ததாக இல்லாமல் 'பழங்குடி' என்ற அடையாளமே அவரது நியமனம் குறித்து எழுந்த கருத்துகள் அனைத்திலும் அவருடைய அடையாளமாக முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தன. எனவே நானும் அவருடைய 'பழங்குடி'  என்ற அடையாளத்துடனே நின்று கொள்கிறேன். தன்னை ‘பழங்குடி’ என்று அழைப்பதில் உண்மையில் அவர் திருப்தி கொண்டவராக இருக்கிறாரா?

வார்த்தைகள் அரசியலைச் சுமந்து கொள்ளக் கூடியவையாக இருக்கின்றன. ‘ஹரிஜன்’ என்ற பெயர் ‘தலித்’ என்ற பெயரைக் கொண்டு நிராகரிக்கப்பட்டதை நினைவுபடுத்திப் பாருங்கள். 'பழங்குடியினர்' என்பது காலனித்துவ ஆட்சியில்  'பழமையான', 'தாழ்ந்த கலாச்சாரம்' உள்ளவர்கள் என்று கருதப்பட்டவர்களை விவரிப்பதற்காக இடப்பட்ட சொல்லாகும். காலனித்துவத் திட்டமானது காட்டுமிராண்டிகளை நாகரிகமயமாக்குவது என்ற வகையிலேயே இருந்தது.      

பெயரிடுகின்ற அரசியல் ‘பழங்குடியினர்’ என்பதற்குப் பதிலாக ‘உள்நாட்டினர்’ அல்லது ‘தலைமக்கள்’ அல்லது ‘பூர்வகுடிகள்’ என்று உலகெங்கும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அந்த மாற்றம் பழங்குடி அடையாளத்தை மட்டுமே அடையாளமாகக் கொண்டுள்ள, ஒட்டுமொத்த மக்கள்தொகையும் பல்வேறு பழங்குடி வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்காவைத் தவிர பெரும்பாலான இடங்களில் நிகழ்ந்திருக்கிறது. ‘பழங்குடி’ என்பது ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை குழுவிற்கான கலாச்சார அடையாளம் என்றிருக்கிறதே தவிர 'பழமையானது', 'தாழ்வானது' என்ற பொருளுடன் அது இருக்கவில்லை. எடுத்துக்காட்டாக கென்யாவில் ஆசியர்களை நாட்டின் 44ஆவது பழங்குடியின வகையாக அந்த அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் அவ்வாறாக இல்லை. அந்தக் குழுவினர் 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகையில் 8.6 சதவீதம் பேர் என்ற அளவிலே இருக்கின்றனர். அதனுடைய நெறிமுறைத் தாக்கங்களால் இந்த பெயரிடும் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. பெரும்பாலானோர் ‘ஆதிவாசிகள்’ என்று தங்களை அடையாளம் கண்டு கொள்ளவே  விரும்புகின்றனர்.  

ஹரிஜன் என்பது தலித் என்று மாறையதைப் போல பழங்குடி என்பது  ஆதிவாசியாக மாறியிருக்கிறது. அரசியலமைப்பு சட்டப் பிரிவு ‘பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்’ என்று வகைப்படுத்தியிருக்கும் இந்தப் பிரிவினர் பெயரிடும் அரசியலால் ‘ஆதிவாசி’ எனப்படும் முதல் குடிமக்கள் என்ற அரசியல் வகையாக மாறியுள்ளனர். ஆனால் இதுபோன்ற பெயரிடலை மறுக்கின்ற சங்பரிவாரம் அந்த விளிம்புநிலை மக்களை முதல் குடிமக்கள் அதாவது ஆதிவாசிகள் என்றில்லாமல் 'வனவாசிகள்' அதாவது காட்டில் வசிப்பவர்கள் என்றே குறிப்பிடுகிறது. அவ்வாறிருக்கும் நிலையில் பெயரிடுகின்ற இந்தப் போரில் திரௌபதியின் நிலை என்னவாக இருக்கும்? பழங்குடி, ஆதிவாசி அல்லது வனவாசி - இதில் யாராக அவர் இருப்பார்?

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தைப் பொறுத்தவரை அவருக்கான வெற்றியை ஏற்கனவே அம்பேத்கரியர்கள் பெற்றுத் தந்து விட்டதால் அத்தகைய கலாச்சாரப் போரில் ஈடுபட வேண்டிய தேவை அவருக்கு இருக்கவில்லை. இந்தியாவின் இரண்டாவது தலித் குடியரசுத் தலைவர் என்று அவர் எவ்விதச் சர்ச்சைக்கும் இடமின்றி அழைக்கப்படலாம். திரௌபதி தன்னை ஆதிவாசி என்று வலியுறுத்துவாரா?        

அவருக்கான வெற்றியை ஏற்கனவே அம்பேத்கரியர்கள் பெற்றுத் தந்து விட்டதால் ராம்நாத் கோவிந்துக்கு அத்தகைய கலாச்சாரப் போரில் ஈடுபட வேண்டிய தேவை இருக்கவில்லை

கலாச்சார வெளி

கீழ்நிலையில் தன்னுடைய மக்களை வைத்திருக்கும் குறியீட்டுப் பிரபஞ்சத்திற்குச் சவால் விடுவதாகவே திரௌபதியின் முதல் போராட்டம் இருக்கும். குடியரசுத் தலைவருக்கான கலாச்சார வெளியை எவ்வாறு ஆக்கிரமித்துக் கொள்வது என்பதைத் தீர்மானித்துக் கொள்வதாக அவருடைய இரண்டாவது போராட்டம் இருக்கும். ஆடை மற்றும் விழாக்களைப் பொறுத்தவரை வைஸ்ராயின் ஆடம்பரத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதற்கு திரௌபதி உடன்படப் போகிறாரா அல்லது ஆதிவாசிகளின் உடை, இசை, நடனம், கொண்டாட்டம், புனிதம் போன்ற தன்னுடைய வளமான கலாச்சாரத்தை - குறிப்பாக உடையை - குடியரசுத் தலைவர் மாளிகைக்கு, குடியரசுத்தலைவரின் உலகிற்குள் கொண்டு போய் சேர்க்கப் போகிறாரா? மரபுவழியாக விதவைகள் அணிகின்ற தூய வெள்ளைப் புடவைக்கு மாறாக சந்தாலிகளின் வண்ணமயமான புடவைகளை குடியரசுத்தலைவர் அணிவதை லட்சக்கணக்கான ஆதிவாசிகள் காணப் போவதை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.     

மகாத்மா காந்தி வேட்டி, துண்டு மட்டுமே அணிந்து கொண்டு இங்கிலாந்து மன்னரைச் சந்திக்கச் சென்றார். ஏன் மிகக் குறைவான ஆடையே அணிந்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு தங்கள் இருவருக்கும் சேர்த்து போதுமானதாக அளவிற்கு ஆடைகளை மன்னர் அணிந்திருக்கிறார் என்று காந்தி பதிலளித்தார் 

ஆடைகள் நமது சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அங்கமாக இருந்திருக்கின்றன. மகாத்மா காந்தி வேட்டி, துண்டு மட்டுமே அணிந்து  கொண்டு இங்கிலாந்து மன்னரைச் சந்திக்கச் சென்றார். ஏன் மிகக் குறைவான ஆடையே அணிந்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு தங்கள் இருவருக்கும் சேர்த்து போதுமானதாக அளவிற்கு ஆடைகளை மன்னர் அணிந்திருக்கிறார் என்று காந்தி பதிலளித்தார். தலித் நவீனத்துவத்தின் அளவீடாக கோட்,சூட் அணிவதை அம்பேத்கர் தேர்ந்தெடுத்துக் கொண்டார். ஒருங்கிணைந்த நமது கலாச்சாரத்தின் அடையாளமாக ஷெர்வானியை நேரு ஏற்றுக் கொண்டிருந்தார். அத்துடன் ஓர் அழகியல் சேர்க்கையாக ரோஜாவும் அவரது ஆடையில் இடம் பெற்றது. திரௌபதி தன்னை எவ்வாறு அலங்கரித்துக் கொள்ளப் போகிறார்?     

திருவிழாக்கள் குறித்தும் இதுபோன்ற கேள்வியை எழுப்பலாம். சந்தாலி தத்துவத்தை வெளிப்படுத்துகின்ற வகையில் கோழி, முட்டைகளுடனான விருந்து உள்ளிட்டு ஐந்து நாட்கள் விரிவான சடங்குகளுடன் நடைபெறுகின்ற 'சோஹ்ரே' என்ற முக்கியமான சந்தாலி பண்டிகையை திரௌபதி கொண்டாடுவாரா அல்லது உயர்சாதியினரின் உணவு மற்றும் சடங்கு நடைமுறைகளுக்கு அவர் அடிபணிந்து போய் விடுவாரா? ‘பழங்குடியினர்’ ஒருவரை குடியரசுத்தலைவர் மாளிகையில் வைத்திருப்பது என்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப் பெரிய திட்டத்தில் திரௌபதி அந்த மாளிகையை பழங்குடிமயமாக்கப் போகிறாரா அல்லது அந்த மாளிகை அவரை சமஸ்கிருதமயமாக்கி விடுமா?  

இருப்பின் அரசியல்

அவருக்குக் கிடைத்திருக்கும் ஏராளமான குறியீட்டு வாய்ப்புகள் குறித்த விவாதம் இந்த ஆய்வின் இரண்டாவது தளமாக இருக்கின்ற இருப்பு அரசியலுடன் மிக நேர்த்தியாக இணைந்து கொள்கிறது.   

'இருப்பு அரசியல்' பற்றி லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பேராசிரியரான அன்னே பிலிப்ஸ் 1990களில் இருந்து எழுதி வருகிறார். சமீபத்திய எல்எஸ்இ வலைப்பதிவில் அவர் ‘பலவகையான அனுபவங்கள், முன்னோக்குகள், வாக்காளர்களின் அக்கறைகள், நமது சார்பாகச் செயல்படுபவர்கள் மற்றும் பேசுபவர்களுக்கு இடையில் தோராயமான பரிமாற்றத்தை அடைவது குறித்ததாக நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கிறது’ என்று சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். ‘அனுபவங்கள், முன்னோக்குகள், அக்கறைகள்’ போன்றவை இதில் மிகவும் முக்கியமான வார்த்தைகளாகும்.  

இருப்பு அரசியல் - அன்னே பிலிப்ஸ்

இந்திய அரசு அதிகாரத்தில் இருக்கின்ற உயரதிகார வர்க்கம், நீதிமன்றங்கள், ஊடகங்கள், பல்கலைக்கழகங்கள், பெருநிறுவனங்கள் போன்றவர்களில் சிலர் ஆதிவாசிகள் சார்பாகப் பேசக்கூடியவர்கள் என்பதை திரௌபதி முர்மு அறிந்திருப்பார். ஆனாலும் அணைகள், சுரங்கங்கள் போன்ற மிகப் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களால் இடம்பெயர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கான முதல் பலியாக ஆதிவாசிகளே இருக்கிறார்கள் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தியாவின் பொருள் மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு ஆதிவாசிகள் கொடுத்திருக்கின்ற அதிக விலை பெரும்பாலும் மறைக்கப்பட்டே இருக்கிறது. இந்தியச் சட்டமன்றங்களில் அவர்களுக்கான இடம் இடஒதுக்கீட்டின் காரணமாகக் கிடைத்திருக்கலாம் என்றாலும், கட்சி அரசியல் அவர்களுடைய குரல் உரத்து எழாமல் பார்த்துக் கொண்டுள்ளது. இந்த ஆதிவாசிகளுக்காக தன்னுடைய குரலை திரௌபதி உரத்து எழுப்புவாரா? பெண், விதவை, ஆதிவாசி என்றிருக்கின்ற ஒருவரின் உள்போராட்டங்கள் வலுவான, அடர்த்தியான 'இருப்பு அரசியலை' உருவாக்கித் தருமா?      

துணிச்சல் என்ற ஆய்வின் மூன்றாவது தளத்துக்கு அதுவே என்னை இட்டுச் செல்கிறது. திரௌபதி முர்மு அரசியலமைப்பின் வரம்புகளுக்கேற்றவாறு தனது அலுவலகம் செயல்படுவதை ஊக்குவிப்பாரா? அவருக்கு முன்பாக குடியரசுத்தலைவர் மாளிகையில் இடம் பிடித்திருந்தவர்கள் அந்த அலுவலகத்தின் நெறிமுறைகளால் மேலாதிக்கம் பெற்றவர்களாக அவ்வாறு செய்வதற்கு மிகவும் பயந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர். அரசியலமைப்பு வரம்புகளுக்கேற்றவாறு தன்னுடைய அலுவலகம் செயல்பட திரௌபதி  அனுமதிப்பார் என்றால், அடைவதற்கு எளிதான ஆனால் இன்றைக்கும் நம்மிடம் இல்லாதிருக்கின்ற ஒரு சில ஆதாயங்களையாவது அவரால் தன்னுடைய மக்களுக்கும், நம்  அனைவருக்கும் எளிதில் பெற்றுத் தந்திட முடியும்.      

தனது அலுவலகம் அரசியலமைப்பின் வரம்புகளுக்கேற்றவாறு செயல்படுவதை திரௌபதி முர்மு ஊக்குவிப்பாரா?  

குடியரசுத்தலைவரின் நான்கு பணிகளை - குடியரசுத் தலைவரின் வருகை, மத்திய பல்கலைக்கழகங்களின் வருகையாளர், பிரதமருடனான வழக்கமான சந்திப்புகள், புதிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல் - மட்டும் இங்கே எடுத்துக் கொள்ளலாம்:      

முதலாவது - குடியரசுத்தலைவரின் வருகைகள்... இவற்றில் அவரது பல வருகைகள் கட்டிடத்தைத் திறந்து வைப்பது, ஆண்டு விழாக்களில் உரையாற்றுவது போன்று பொருளற்றவையாகவே இருக்கும். அதுபோன்ற விழாக்களுக்கான அழைப்புகள் நாட்டை நேரில் காண்பதற்கான வாய்ப்புகளை குடியரசுத்தலைவருக்கு ஏற்படுத்தித் தரும். நாட்டின் முதல் குடிமகனின் வருகையை முன்னிட்டு உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளின் காரணமாக இதுபோன்ற அவரின் வருகைகளுக்காக புதிதாகப் போடப்படுகின்ற தார்ச்சாலைகள், வர்ணம் பூசப்படுகின்ற அறிவிப்பு பலகைகள், பழுதுபார்க்கப்படுகின்ற தெரு விளக்குகள், வேலையில் அதிதீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் நகராட்சி ஊழியர்கள் என்று அரசு சார்பிலே செய்யப்படுகின்ற செலவுகள் மிக அதிகமாகவே இருக்கும். ஆதிவாசிகள் வசித்து வருகின்ற நாடு முழுவதிலும் உள்ள புறக்கணிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆண்டுக்கு நான்கு இடங்கள் என்று தன்னுடைய ஐந்தாண்டுப் பதவிக் காலத்தில் செல்வது என்று குடியரசுத்தலைவர் திரௌபதி முடிவு செய்தால் உண்மையில் அது மிக அற்புதமான முடிவாக இருக்கும். ஆதிவாசி குடியிருப்புகளில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், சந்தைகள், தண்ணீர் விநியோகம் போன்றவற்றைக் காண விரும்புவதாக அவர் மாநில அரசுகளிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஆதிவாசிக் குழுக்களுக்கு எந்த அளவிற்குப் பொருள் ஆதாயத்தை அவரது வருகை உருவாக்கித் தரும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். அவருடைய ஒரேயொரு வருகை மட்டுமே தேவைப்படும் - அவரிடமிருந்து வேறொன்றும் தேவைப்படப் போவதில்லை.          

ஆதிவாசி குடியிருப்புகளின் வளர்ச்சியைக் கண்காணிக்கும் வகையில் அவர் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களை ஈடுபடுத்தலாம். மத்திய பல்கலைக்கழகங்களின் வருகையாளராக குடியரசுத் தலைவர் திரௌபதி அரசின் பழங்குடியினர் துணைத் திட்டத்தின் செயல்பாட்டை ஆண்டுதோறும் தணிக்கை செய்து மத்திய பல்கலைக்கழகங்களின் அனைத்து துணைவேந்தர்களும் வருகையாளருடன் சந்திக்கும் வகையிலே ஆண்டுதோறும் நடைபெறுகின்ற வருடாந்திரக் கூட்டத்தில் ஆதிவாசி மக்களின் மனித வளர்ச்சிக்கான குறிகாட்டிகளை முன்னிலைப்படுத்துவார் என்றால் - அதுவும் அருமையான நடவடிக்கையாக இருக்கும். சமூக அறிவியல் மற்றும் கலைப்பாடங்களில் வலுவாக இருப்பதால் அதைச் செய்து முடிப்பது பெரும்பாலான மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு மிக எளிதான காரியமாகவே இருக்கும். இந்த பல்கலைக்கழகங்கள் ஆண்டு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதை குடியரசுத்தலைவரின் செயலகத்தின் மூலம் கண்காணிக்க முடியும் என்றால் வரவிருக்கும் ஐந்து ஆண்டுகளில் ஆதிவாசிகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள், வாழ்க்கை வாய்ப்புகள் தொடர்பாக மாறிவரும் நிலைமைகள் குறித்த மதிப்புமிக்க தரவு தொகுப்பை அவரால் எளிதில் உருவாக்கிட முடியும். ஆதிவாசிகள் குறித்த சிறந்த நிபுணத்துவம் பெற்ற டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் (TISS) நிறுவனத்தை அத்தகைய தரவு சேகரிப்புக்கான மாதிரிப் படிவங்களைத்  தயாரித்துத் தருவதற்காக அவர் அழைத்துக் கொள்ளலாம். இதை திரௌபதி செய்வாரா அல்லது மாட்டாரா?    

தான் கொண்டிருக்கும் அக்கறைகள் குறித்து பிரதமருடன் நடக்கின்ற வழக்கமான கூட்டங்களில் குடியரசுத்தலைவர் பேசுவது மூன்றாவதாக வருகிறது. இந்தியாவில் இங்கிலாந்தில் உள்ளதைப் போன்றதொரு நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்று தெளிவாகத் தெரியவில்லை. அங்கே பிரிட்டிஷ் பிரதமர் அரசாங்க விஷயங்களைப் பற்றித் தெரிவிப்பதற்காக வாரம்தோறும் மன்னரைச் சந்திப்பார். அதைப் போன்று இங்கே குடியரசுத் தலைவரும் ஆதிவாசிகள் புறக்கணிப்படுவது குறித்த தன்னுடைய அக்கறையை அனைத்து அதிகாரங்களும் கொண்ட நிர்வாகத்தின் தலைவராக இருக்கின்ற பிரதமரிடம் பேசுவது அவற்றை நிவர்த்தி செய்து கொள்வதற்குத் தேவையான சரியான சந்தர்ப்பத்தை நிச்சயம் உருவாக்கித் தரும். தவறாமல் இதை ஐந்தாண்டுகளுக்குச் செய்து வருவதற்கு தன்னுடைய நோக்கத்தில் அவருக்கு தெளிவு தேவைப்படும். தேவைப்பட்டால் கேட்பவரின் மனதில் அந்தப் பிரச்சனைக்கான முக்கியத்துவத்தை அளிக்கின்ற வகையில் தொடர்ந்து அதனைத் திரும்பத் திரும்ப அவர் வலியுறுத்தலாம். அவ்வாறு செய்யும் போது அந்தப் பிரச்சனை நன்கு பதிவு செய்யப்பட்டு முக்கியத்துவம் அடையும்.        

குடியரசுத்தலைவரின் நான்காவது பணி அரசியலமைப்பின் 111ஆவது பிரிவில் குறிப்பிடப்படுகிறது. அரசாங்கத்தின் சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் குடியரசுத் தலைவரின் அதிகாரம் பற்றி அந்தப் பிரிவு குறிப்பிடுகிறது. தனது கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு அவருக்கு அதன மூலம் கணிசமாக கிடைக்கலாம். சில மசோதாக்களை மறுபரிசீலனைக்கு அனுப்பி வைப்பது, சிலவற்றிற்கு ஒப்புதலை நிறுத்தி வைப்பது, இன்னும் சிலவற்றிற்கு உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைகளைப் பெறுவது போன்றவற்றிற்கான அனுமதியை அந்தச் சட்டப்பிரிவு குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது. இவையனைத்தும் குடியரசுத் தலைவர் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாகும். திரௌபதியின் நியமனம் நடைபெற்றிருக்கும் இந்த வரலாற்றுத் தருணத்தில் அவருக்கு முன்பாக இருக்கின்ற சாத்தியங்களாகும். இவற்றையெல்லாம் அவர் புரிந்து கொள்வாரா?      

திரௌபதி முர்முவின் நியமனம் மஹாஸ்வேதா தேவியின்                ருதாலியை நினைவுபடுத்துகிறது

சில காரணங்களால் மகாஸ்வேதா தேவி எழுதிய ‘ருதாலி’ என்னுடைய நினைவிற்கு வருகிறது. குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்முவை நியமித்ததன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி துணிச்சலுடன், கற்பனைத்திறனுடன் இருந்திருக்கிறது. அதற்காக முழு மதிப்பெண்கள் அவர்களுக்கு வழங்கப்படலாம். ஆனாலும் உயர்சாதி உரிமை என்ற பாட்டிலில் அடைக்கப்பட்டிருந்த ஜெனியை அவர்கள் விடுவித்திருக்கிறார்களா?  அந்த தருணத்தை திரௌபதி புரிந்து கொள்வாரா அல்லது தன்னுடைய 'பெருமை மினுமினுப்பதை' மட்டும் பார்ப்பாரா என்ற கேள்வி எழுகிறது. குடியரசுத் தலைவரான பிறகு வெளியாகும் முதல் புகைப்படத்தில் பிரதமரை விட சற்று முன்னால் திரௌபதி முர்மு நிற்பாரா?       

குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு முன்பாக எழுதப்பட்ட கட்டுரை

https://frontline.thehindu.com/columns/droupadi-murmu-moment-can-the-nda-bjp-presidential-candidate-push-the-envelope/article65619567.ece?cx_testId=1&cx_testVariant=cx_1&cx_artPos=4&cx_experienceId=EXEMAAN8O5Q5#cxrecs_s 

 

பீட்டர் ரொனால்ட் டிசோசா கோவா பல்கலைக்கழகத்தில் டிடி கோசாம்பி வருகைதரு பேராசிரியராக உள்ளார். சமீபத்தில் அவர் ருக்மணி பாயா நாயருடன் இணைந்து, இந்தியாவிற்கான முக்கிய வார்த்தைகள், ப்ளூம்ஸ்பரி, ஐக்கியப் பேரரசு, 2020 என்ற நூலை வெளியிட்டுள்ளார்.





Comments

மு. மாரியப்பன் said…
தனது உடை மற்றும் கலச்சாரம் தொடர்பான விசயத்தில் கூட தான் சார்ந்த சமூகத்தின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் எண்ணத்துடன், தனது சுய விருப்பமாகக்கூட இருக்கலாம், இந்தியாவின் முதல் குடிமகளால் (அவற்றையாவது) செயல்பட முடிந்தால் அதுவே ஒரு பெரிய விசயம் (சாதனை) என்ற கட்டுரையாளரின் ஆதங்கம், ஆளும் ஒன்றிய பிஜேபி அரசு தனது ஆட்சிக்காலத்தில் இந்திய ஜனநாயகத்தை எவ்வளவு கீழ்த்தரமான நிலையில் வைத்துள்ளது என்பதை நினைவூட்டுகிறது. ஆனால், அதற்குக் கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை உயராதிக்க ஆளும் ஒன்றிய அரசாட்சியாளர்கள் ஒவ்வொரு சிறிய விசயத்திலும் தங்கள் நினைப்பதையே சாதித்துக் கொண்டிருப்பதை வெளிப்படையாகவும் நியாயமற்ற துணிச்சலுடனும் வெளிப்படுத்துவதில் மூர்க்கமாகவே உள்ளனர். நிலைமை இவ்வாறிருக்க குடியரசுத்தலைவரின் நான்கு வகையான முக்கியமான பணிகளில் கடைசியாகக் குறிப்பிட்டுள்ள பிரதமருடனான வழக்கமான சந்திப்புகள் மற்றும் புதிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல் ஆகியவற்றில் தனக்கிருக்கும் அதிகாரத்தை நிலைநாட்டுவதன் மூலம் இந்நாட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது நடந்துவிடாதா? என்ற கட்டுரையாளரின் எதிர்பார்ப்பை நினைத்தால் வேதனை கலந்த சிரிப்புத்தான் வருகிறது.