எதிர்க்கட்சிகளின் பத்தாவது தேர்வாக இருந்திருந்தாலும் நான் அதை ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன் - யஷ்வந்த் சின்ஹா
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18 அன்று நடைபெறவுள்ளது. திரௌபதி முர்முவின் வெற்றிக்கான போதிய பலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் இருந்த போதிலும், எதிர்க்கட்சிகளின் ஒருமித்த வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அது குறித்து மேலும் பேசுவதற்காக, அவருடைய வேட்புமனுவின் முக்கியத்துவம் பற்றி பேசுவதற்காக திரு.சின்ஹா என்டிடிவியுடன் இணைந்திருக்கிறார்.
திரு.சின்ஹா, எங்களுடன் இணைந்தமைக்கு முதலில் மிக்க
நன்றி. நீங்கள் ஏன் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக இருப்பதற்கு ஒப்புக்கொண்டீர்கள்?
நான் எதிர்க்கட்சிகளுடைய
நான்காவது தேர்வாக இருந்திருக்கிறேன் என்று கூறி வருகிறார்கள். நான்காவது தேர்வாக நான்
இருக்கக் கூடாது என்று கூறுவதற்கு எந்தவொரு காரணமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
எதிர்க்கட்சிகளின் பத்தாவது தேர்வாக இருந்திருந்தாலும் அதை நான் ஏற்றுக் கொண்டே இருந்திருப்பேன்
என்று நேற்றைய செய்தியாளர் சந்திப்பிலேயே தெரிவித்திருந்தேன். இது ஒரு கொள்கைரீதியான
போராட்டம், அரசியலின் போக்கை வரும் ஆண்டுகளில் நிர்ணயிக்கப் போகின்ற போராட்டம் என்பதால்
அதில் ஓர் அங்கமாக நான் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். எனவே அந்தப் போராட்டத்தில்
நான் இப்போது இணைந்திருக்கின்றேன்.
ஆனாலும் திரு சின்ஹா, வெற்றிக்குத் தேவையான எண்கள்
தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் இருப்பதாகவே தெரிகிறது. எனவே இது மிகவும் கடினமான போட்டியாக
இருக்கும் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா?
ஒவ்வொரு
போரும் - ஒவ்வொரு தேர்தல் போட்டியும் நிச்சயம்
கடினமானதாகத்தான் இருக்கும். எந்தவொரு தேர்தலும் எளிதாக இருக்கப் போவதில்லை. ஆளுங்கட்சி
வேட்பாளரிடம் தேவையான எண்கள் ஏற்கனவே உள்ளன என்ற முடிவுக்கு ஊடகங்கள் வந்திருந்தால்,
இந்தத் தேர்தலையே நாம் நடத்தத் தேவையில்லை என்பதே அந்த கேள்விக்கான எனது பதிலாக இருக்க முடியும்.
அப்படித்தான் என்றால் வெளியே ஊடகங்களிடம் சென்று யாருக்குத் தேவையான எண்கள் உள்ளன என்று
கேட்டு விட்டு, பின்னர் அந்த நபரே வெற்றி பெற்றதாக அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படட்டும்.
குடியரசுத்
தலைவர் தேர்தலில் எம்எல்ஏக்களும், எம்பிக்களும் வாக்களிக்கிறார்கள் என்பதை நான் இங்கே
குறிப்பிட விரும்புகிறேன். கொறடா முடிவு என்று எதுவும் இல்லாமல் இந்த தேர்தல் ரகசிய
வாக்கெடுப்பாகவே நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு கொறடா முடிவு என்று எதுவும்
தேவையில்லை; அது ரகசிய வாக்கெடுப்பாகவே இருக்க வேண்டும் என்றே அரசியலமைப்புச் சட்டம் விதித்துள்ளது. வாக்காளர்களான எம்பிக்களும், எம்எல்ஏக்களும்
தங்கள் மனசாட்சிப்படியே வாக்களிக்க வேண்டுமே தவிர, கட்சியின் முடிவுப்படி அல்ல என்றே
அரசியலமைப்பு விரும்பியது. இந்த தேர்தலில் தங்கள் வாக்காளர்களின் வாக்கை தாங்கள் எவ்வாறு
தீர்மானிக்கிறோம் என்பதில் கட்சிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு
ரகசிய வாக்கெடுப்பாகும்.
அப்படியென்றால் தேர்தல் முடிவு பற்றி முன்கூட்டிய முடிவிற்கு
வரத் தேவையில்லை என்கிறீர்கள்…?
ஆமாம்.
மேலும் உங்களுக்குச் சொல்கிறேன் - தேர்தல் முடிவு முன்கூட்டியே தெரிந்ததாக இருந்தாலும்,
நான் நிச்சயமாக அந்தப் போட்டியில் இருப்பேன். ஏனென்றால் நான் ஏற்கனவே சொன்னதைப் போல
இப்போது நடைபெறுகின்ற இந்த தேர்தல் இந்தியக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் என்பதைக்
காட்டிலும் அரசாங்கம், எதிர்க்கட்சி ஆகியவற்றிற்கு இடையிலான அரசியல் முக்கியத்துவம்
வாய்ந்த போரின் தொடக்கமாகவே இருக்கிறது.
ஆனாலும் திரு.சின்ஹா, எதிர்க்கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையின்மை
இப்போது அம்பலமாகியுள்ளது என்று கூற முடியாதா? எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால் தேசிய
ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் தெரிவு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவை ஓரிடத்தில் தடுத்து
நிறுத்தி வைத்துள்ளது உங்களுக்குத் தெரியும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் விருப்பத்தை
அவர்கள் ஒருவேளை தேர்வு செய்து கொள்ளக் கூடும். நவீன் பட்நாயக் போன்ற இன்னும் சிலரும்
பாஜகவின் விருப்பத்துடன் இணைந்து செல்ல வேண்டிய
கட்டாயத்தில் உள்ளனர். ஆக இதுபோன்ற நிலைமை எதிர்க்கட்சி முகாமில் உள்ள விரிசல்களை அம்பலப்படுத்தி
இருக்கிறதே…
நவீன்
பட்நாயக் எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. நவீன் பட்நாயக் ஏற்கனவே
தனக்கென்று ஒரு பாதையை பின்பற்றி வருகிறார். நவீன் பட்நாயக்கை எதிர்கட்சியாக கருத வேண்டிய தேவையில்லை என்பதே இதுகுறித்து
எனது கருத்தாகும். அதேபோன்று ஒய்எஸ்ஆர் கட்சியும் எதிர்கட்சியாகச் செயல்படவில்லை. பிஜூ
ஜனதா தளமும், ஒய்எஸ்ஆர் கட்சியும் இந்த தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்திருப்பது குறித்து
எந்தவொரு ஆச்சரியமும் எங்களிடம் இல்லை. என்னை வேட்பாளராக நிறுத்த முடிவெடுத்த ஜார்கண்ட்
முக்தி மோர்ச்சா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் உறுதிப்பாட்டைக் கடைப்பிடிப்பார்கள் என்றும்,
இந்த விஷயத்தில் அவர்கள் தங்களுடைய பார்வையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்றும் நான்
நம்புகிறேன்.
இந்த தேர்தலில்
ஆளும்கட்சி வேட்பாளர் மீதான அடையாளத்தை அவர்கள் ஊதிப் பெருக்கி வருகிறார்கள் என்பதையும்
நான் இங்கே சொல்ல விரும்புகிறேன். குடியரசுத் தலைவர் தேர்தலில் இதற்கு முன்பும் பட்டியலின
பழங்குடியினத்தைச் சார்ந்த வேட்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். பட்டியலின சாதியினருக்கான
அடையாள அரசியல் இன்றைக்கு கையாளப்படுகின்ற விதத்தில் வேறு எப்போதும் கையாளப்பட்டதாக
நான் கண்டதில்லை, இத்தகைய அணுகுமுறை தங்கள் வேட்பாளரின் பழங்குடி, பெண் என்ற அடையாளங்களின்
பின்னால் மறைந்திருக்கும் பாஜகவின் பலவீனத்தையே காட்டுகிறது. இப்போது மட்டுமல்லாது
எதிர்காலத்திலும் குடியரசுத் தலைவர் தேர்தல் இதுபோன்று நடக்கக் கூடாது. கடந்த காலங்களிலும்
இதைப் போன்றதாக தேர்தல்களம் இருந்தது கிடையாது. அவருடைய அடையாளம் அல்லது என்னுடைய அடையாளம்
என்று அடையாளம் குறித்ததாக இந்த தேர்தல் இருக்கவில்லை. அது வேட்பாளர்களின் தகுதி குறித்ததாகவே
உள்ளது. எங்களில் யார் சிறந்த குடியரசுத் தலைவராக இருப்பார் என்பது குறித்த கேள்வியே
இப்போது முன் நிற்கிறது.
அவருடைய பழங்குடி அடையாளத்தின் பின்னால் அவர்கள் ஒளிந்து
கொள்கிறார்கள் என்று ஒரு சுவாரசியமான கருத்தை நீங்கள் இங்கே கூறியிருக்கிறீர்கள்…
நான் ஏன்
அதுபற்றி ஒரு கருத்தை முன்வைக்க வேண்டும்? எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த வேட்பாளராக
அறிவிக்கப்பட்டதில் இருந்து பொதுவெளியில் நான் இருந்து வருவதை உங்களால் காண முடிந்திருக்கும்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியிலும் நான் ஊடகங்களை எதிர்கொண்டு வருகிறேன் என்பதை
என்னால் உறுதிபடச் சொல்ல முடியும். நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகும், இன்றும்
நான் ஊடகங்களைச் சந்தித்து வருகிறேன். அவர் ஜூன் 24 அன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவருடன் உங்களால் பேச முடிந்திருக்கிறதா?
இல்லை
அது போதும்.
அதுவே ஏராளமாகச் சொல்லும்
இந்த தேர்தல் 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சி
அரசியலை எவ்வாறு வடிவமைக்கும் என்று நினைக்கிறீர்கள்? குறிப்பிடத்தக்க
சவால்கள் உள்ளதை ஒப்புக் கொள்வீர்கள் என்று
நான் நம்புகிறேன்.
நிச்சயமாக ஏராளமான சவால்கள் இருக்கின்றன. முன்னோக்கிச்
செல்லும் இந்தப் பாதை மிகவும் எளிதானது என்று யார் சொன்னது? இந்தப் பாதை கடினமானது
என்று அனைவருக்கும் தெரியும். ஆனாலும் இப்போது ஓர் ஆரம்பம் கிடைத்திருக்கிறது என்றே
நான் கருதுகிறேன். வெறுமனே இந்த தேர்தலுடன் அது நின்று விடப் போவதில்லை. எதிர்க்கட்சிகள்
ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு சவால் விடும் வகையில் பொதுவான வேலைத்திட்டத்துடன் செயல்படும்
என்று உறுதியாக நான் நம்புகிறேன். 2024ஆம் ஆண்டு தேர்தல் மிகவும் சுவாரஸ்யமாதாக இருக்கும்.
யஷ்வந்த்
சின்ஹா, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எங்களுடைய நல்வாழ்த்துகள்.
என்டிடிவியில் எங்களுடன் இணைந்தமைக்கு மிக்க நன்றி
Comments