பிரிட்டிஷ் ஆதரவு, முஸ்லீம் எதிர்ப்புடன் முற்றிலுமாக பிராமண சார்பு கொண்டதே பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘பாரதம்’

 அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம்

ஐஐடி சென்னை

2017 ஏப்ரல் 09

‘ஹிந்துராஷ்டிரத்தின் தந்தை’ என்று கருதப்படுகின்ற பங்கிம் சந்திர சட்டர்ஜி அல்லது பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் தன்னுடைய வாழ்க்கையின் இறுதிப் பத்தாண்டுகளில் ஆனந்தமடம், தேவி சௌதுராணி, சீதாராம் என்று மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். அவையனைத்தும் முஸ்லீம்களுக்கு எதிரானவை எவரொருவராலும் எளிதில் கூறி விட முடியும். பங்கிம் இந்திய தேசியவாதத்தை முஸ்லீம்களுக்கு எதிரான ஹிந்து தேசியவாதமாக மாற்றியமைப்பதில் மிக முக்கியமான பங்கை ஆற்றியிருக்கிறார். பங்கிம் எழுதிய வங்க நாவலான ஆனந்தமடம் ஹிந்துராஷ்டிரம் குறித்த கருத்தை கோடிட்டுக் காட்டும் வகையிலேயே இருக்கிறது. ஹிந்துராஷ்டிர ஆதரவாளர்களால் அந்த நாவல் பைபிள் என்றே கருதப்பட்டு வருகிறது. இந்திய தேசியத்தை வகுப்புவாத தேசியவாதமாகச் சீரழித்ததில் முக்கிய பங்கு வகித்த பங்கிம் தேசியத்தை தாய் வழிபாட்டிற்கு சமமாகக் கருதிய தனது நாவலின் மூலம் 'வந்தே மாதரம்' பாடலை அறிமுகப்படுத்தினார். முஸ்லீம்களுக்கு எதிரான ஹிந்து சன்னியாசிகள் கலகத்தின் கதையை விவரிப்பதாக இருக்கின்ற பங்கிமின் ஆனந்தமடம் நாவல் முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைப் போற்றுகின்றது. ஹிந்து சன்னியாசிகள் (சந்தர்கள்) முஸ்லீம்களின் வீடுகளை எரித்து, அவர்களுடைய பொருட்களையெல்லாம் சூறையாடியதை அது விவரிக்கிறது. இன்றளவும் 'அன்னையே உன்னை வணங்குகிறேன்' என்று வந்தேமாதரம் பாடலைப் பாட மறுக்கின்ற முஸ்லீம்களைக் கொல்வதற்கு ஹிந்துத்துவப் பயங்கரவாதிகள் பின்பற்றி வருகின்ற வழிமுறைகளைக் காட்டுகின்ற வகையிலே -  முஸ்லீம்களை சந்தர்கள் எவ்வாறு கொன்றனர் என்பதை அந்த நாவல் விவரித்துச் செல்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை மிகவும் நேசித்தவராகவே பங்கிம் இருந்தார். அவர் ‘இந்தியாவைக் கொள்ளையடித்தவர்கள்’ என்று அவர்களை ஒருபோதும் கருதியதே இல்லை. அதுமட்டுமல்லாது 'முஸ்லீம்கள்தான் நம்முடைய ஒரே எதிரிகள்' என்ற போதனைகளை முன்வைத்தவராக அவர் இருந்தார். முஸ்லீம் ஆட்சியாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்ற போராளிகள் சிலர் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் போரிட முனைந்த போது ​​அவர்களிடையே தோன்றுகின்ற மாயத்தலைவர் ஒருவர் ‘சனாதன தர்மம் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் மட்டுமே மீண்டு வர முடியும் என்பதால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நீங்கள் போர் தொடுக்கக் கூடாது’ என்று அந்த சந்தர்களைச் சமாதானப்படுத்துகின்ற ஆனந்தமட நாவலின் கடைசி வரிகளில் பிரிட்டிஷ் எஜமானர்கள் மீது பங்கிம் கொண்டிருந்த அன்பை எளிதில் காண முடிகிறது. முஸ்லீம் ஆட்சியை ஒழிப்பதன் மூலம் வெற்றியடைந்து விட்ட சந்தர்கள் இனிமேல் ஆங்கிலேய ஆட்சியைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று அந்த தலைவர் சமாதானப்படுத்துகிறார். அவரது சமாதானம் என்ற பெயரிலே  ‘ஆங்கிலேயர் நமது கூட்டாளி மன்னர். அதுமட்டுமல்ல… ஆங்கிலேயர்களுடனான போரில் இறுதியில் வெற்றி பெறுகின்ற ஆற்றல் வேறு எவருக்கும் இல்லை’ என்று ஆங்கிலேயர்களுக்குச் சாதகமான கருத்தை பங்கிம் தன்னுடைய நாவலில் இடம் பெற வைத்துள்ளார். இந்தியர்களின் வாழ்வை, சொத்துக்களை அழித்தொழித்த ஏகாதிபத்திய எஜமானர்களைப் பெருமைப்படுத்துகிற வகையில் எழுதப்பட்டுள்ள அந்த நாவல் ஆங்கிலேயர்களை மிகவும் தைரியமான, மிகச் சிறந்த ஆன்மாக்கள் என்று சித்தரிக்கவும் தவறவில்லை.

ஆங்கிலேயர்களால் 1858ஆம் ஆண்டு நேரடியாக துணை மாஜிஸ்திரேட் பதவிக்கு பங்கிம் நியமிக்கப்பட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 1857ஆம் ஆண்டிற்குப் பிறகு உடனடியாக அத்தகைய பதவியில் நியமிக்கப்பட்ட முதல் இந்தியராக அவர் இருந்தார். மாவட்ட மாஜிஸ்திரேட்டாக 1891ஆம் ஆண்டு பங்கிம் ஓய்வு பெற்றார். பிரிட்டிஷ் அரசு அவருக்கு ராவ் பகதூர், இந்தியப் பேரரசின் தோழமை (CIE) பட்டங்களை வழங்கியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக, இந்தியாவில் பிரிட்டிஷ் சுரண்டல் திட்டத்தின் ஒரு பகுதி என்றே அவர் வாழ்ந்து வந்தார்.      

ஆனந்தமடம் நாவல் மற்றும் வந்தேமாதரம் பாடல் குறித்த எம்.ஆர்.ஏ.பெய்க்கின் பகுப்பாய்வு இங்கே மிகுந்த கவனத்திற்குரியது. ‘முகலாயப் பேரரசு கலைக்கப்பட்ட காலகட்டத்தின் கதையாக எழுதப்பட்ட ஆனந்தமடம் நாவலின் நாயகன் பவானந்தா வங்க முஸ்லீம்களுக்கு எதிராக ஆயுதமேந்திய எழுச்சியைத் திட்டமிடுகிறான். அதற்கான ஆட்சேர்ப்பில் மும்முரமாக இருந்த அவன்  மகேந்திரா என்பவனைச் சந்திக்கிறான். அப்போது அவன் 'வந்தே மாதரம்' அல்லது 'அன்னையை வணங்குகிறேன்' என்ற பாடலை மகேந்திரா முன்பாகப் பாடுகிறான். அந்த வார்த்தைகளுக்கான பொருளை மகேந்திரா கேட்க,  உற்சாகமாக அதற்கான பதிலைச் சொல்லும் பவானந்தா 'நமது மதம் போய்விட்டது, நமது சாதி போய்விட்டது, நமது மானம் போய்விட்டது' என்று தன்னுடைய விளக்கத்தை முடிக்கிறான். பங்கிம் இங்கே எந்த சாதியை சுட்டிக்காட்டுகிறார்? தலித், ஆதிவாசிகள் அல்லது இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளையா? 'பாரதம்' பற்றிய பங்கிமின் விவரிப்புகள் பிராமண மேலாதிக்கத்தை (சாதி அடிப்படையிலான சமூக ஒழுங்கை) மீண்டும் நிறுவுவதைத் தவிர வேறாக இருக்கவில்லை என்பதையே அது தெளிவுபடுத்திக் காட்டுகிறது.   

ஆனந்தமடம் நாவல் மூலம் 'வந்தேமாதரம்' என்ற குறுங்குழுவாதத்தை தேசிய முழக்கமாக பங்கிம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். அவர் நிலத்தை காளி,  துர்க்கை தெய்வங்களுடன் சமன்படுத்திக் காட்டியதன் காரணமாக சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் தேசிய கூட்டங்களில் அந்தப் பாடலைப் பாடுவதற்கான பலத்த எதிர்ப்புகள் இருந்து வந்தன. எனவே 'வந்தே மாதரம்' பாடலில் இருந்த ஐந்து சரணங்கள் வெறுமனே நிலப்பரப்பின் அழகை மட்டுமே விவரிக்கும் வகையிலான இரண்டு சரணங்களாக வெட்டப்பட்டன. இந்திய அரசியல் நிர்ணய சபை 'ஜனகணமன' பாடலைத் தேசியகீதம் என்று ஏற்றுக் கொண்டபோது ஆர்எஸ்எஸ் உண்மையில் மகிழ்ச்சியடையவில்லை. அதற்குப் பதிலாக 'வந்தே மாதரம்' பாடப்பட வேண்டும் என்றே ஆர்எஸ்எஸ் விரும்பியது. இந்திய அரசியலமைப்பு குறித்தும் அது மகிழ்ச்சியடையவில்லை. 'மனு ஸ்மிருதி' கொண்டு அரசியலமைப்பை மாற்றியமைக்க ஆர்எஸ்எஸ் விரும்பியதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். 'மசூதிகளை உடைத்தெறிந்து விட்டு அந்த இடங்களில் கோவில்கள் கட்டும் நாள் எப்போது வரும்?' என்று சந்தர்கள் கனவு காண்பதாக ஆனந்தமடத்தில் வருகின்ற பங்கிமின் பிரசங்கங்களின் பலன்களை அவர்கள் அறுவடை செய்து கொண்டிருக்கும் காலகட்டத்தையே நாம் இப்போது கடந்து கொண்டிருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரால் பங்கிமின் பேரன்கள் முஸ்லீம்களையும், தலித் மக்களையும் கொன்று குவித்து, இந்தியா முழுவதும் உள்ள அரங்கங்களில் தேசவிரோத நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கிலேயர்களுக்கு ஆதரவான, முஸ்லீம்களுக்கு எதிரான, சாதிவெறி குணம் கொண்டிருந்த ஒருவரை தேசியத்தலைவராக ஹிந்துத்துவக் குழுவினர் முன்னிறுத்துகின்றனர். வரலாற்றுரீதியாகப் பார்த்தால் சாவர்க்கர், ஹெட்கேவார், கோல்வால்கர், வாஜ்பாய், அத்வானி என்று ஹிந்துத்துவா முகாமில் இருந்த 'தேசியத் தலைவர்கள்' அனைவருமே ஆங்கிலேயர்கள், பிராமணர்களுக்கு ஆதரவானவர்களாகவே இருந்து வந்துள்ளனர். அதே மரபை மோடி இன்றைக்குத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் பணமில்லாப் பொருளாதாரம், ஜிஎஸ்டி, ரயில்வேயைத் தனியார் மயமாக்குதல் போன்ற மக்கள் விரோத (ஏகாதிபத்திய ஆதரவு) கொள்கைகளை முன்வைக்கின்ற அவர் மறுபுறத்தில் சமஸ்கிருதத் திணிப்பு, வகுப்புவாதக் கலவரங்கள், பசு தேசியவாதம் ஆகியவற்றைத் தீவிரப்படுத்தி வருகிறார். ஹிந்து ராஷ்டிரம் என்பது உண்மையில் நிதி மூலதனத்தை எந்தவொரு தடையும் இல்லாமல் கொள்ளையடிக்க உதவுகின்ற, சாதிகளின் அடிப்படையிலான சமூக ஒழுங்கின் அடிப்படையில் நிறுவப்பட்ட பிராமண சாம்ராஜ்ஜியமே ஆகும்.   

இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லா கான் உள்ளிட்ட ககோரி தியாகிகள், ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கட்சி (HSRA) போன்றவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரை நடத்திக் கொண்டிருந்தனர். நிச்சயமாகத் தான் தூக்கிலிடப்படுவோம் என்ற உண்மையை நன்கு அறிந்திருந்தும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய மக்களின் அரசியல் உணர்வைத் தூண்டும் வகையில் 1929ஆம் ஆண்டில் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக 'காது கேட்காதவர்களைக் கேட்க வைக்க' என்ற துண்டுப் பிரசுரத்துடன் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் பகத்சிங் தானாக முன்வந்து பங்கேற்றார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், ஒட்டுண்ணி இந்திய முதலாளித்துவ வர்க்கம் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடிய அவர் சாதி அமைப்பையும், மதத்தையும் மிகவும் கடுமையாக விமர்சித்தார். சுதந்திரப் போராட்டத்தில் 'வந்தே மாதரம்' என்பதற்குப் பதிலாக 'இன்குலாப் ஜிந்தாபாத்' (புரட்சி வாழ்க) என்றே அவர்களுடைய முழக்கம் இருந்து வந்தது. ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற அந்த முழக்கம் இன்று ஒரு நூற்றாண்டிற்குப் பிறகும் உழைக்கும் மக்களின் குரலைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.   

இவர்களில் யாரை நாம் கொண்டாட வேண்டும்? சாகும் வரையிலும் ஏகாதிபத்திய கைக்கூலியாக வாழ்ந்தவரையா அல்லது உழைக்கும் மக்களை பிரித்தானிய ஏகாதிபத்தியம், சாதிய அமைப்பு என்ற நுகத்தடியில் இருந்து விடுவிப்பதற்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த தியாகிகளையா? ஒரு நாள் கண்டிப்பாக 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்ற முழக்கம் ஹிந்து ராஷ்டிராவை அழித்துவிடும் என்பதே நிஜம். 

தன்னுடைய ஐம்பத்தி ஐந்தாம் வயதில் 1894ஆம் ஆண்டு மரணமடைந்த பங்கிம் சந்திர சட்டர்ஜியின் 2017ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி எழுதப்பட்ட கட்டுரை

https://countercurrents.org/2017/04/bankims-bharat-pro-british-anti-muslim-and-pro-brahminical/

Comments