நடைமுறையில் உள்ள கடவுள் மாயை - எனது இந்தியப் பயண நாட்குறிப்பு

 மீரா நந்தா

எகனாமிக் & பொலிட்டிகல் வீக்லி

2008 அக்டோபர் 18

மீரா நந்தா

ஹிந்து மத நம்பிக்கைகள், சடங்குகளின் அடித்தளத்தைக் கேள்விக்குட்படுத்தாத வரையிலும் ஹிந்து தேசியவாதிகளின் மத நம்பிக்கை அடிப்படையிலான அரசியலை, அதே உத்வேகத்துடன் இருக்கின்ற இந்திய அரசின் முயற்சிகளை எதிர்த்துப்  போராட முடியாது. மக்களிடமுள்ள மதநம்பிக்கைகளை ‘மதிக்கின்ற’ ஒருவரால் ஹிந்துத்துவா என்ற பதாகையின் கீழ் அவ்வாறான நம்பிக்கை கொண்டு செயல்படுகின்றவர்களை நோக்கி  கேள்விகளை முன்வைக்க முடியாது.     

என்னை சண்டிகர் விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்வதற்காக வந்திருந்த என்னுடைய மருமகனின் புதிய ஹூண்டாய் செடான் காருக்குள் ஏறி அமர்ந்த வேளையில், என்னுடைய மனதிற்குள் ‘இந்தியாவில் உள்ள புதிய கார்களும் அமெரிக்காவில் இருப்பதைப் போன்ற அதே வாசனையுடன்தான்  இருக்கின்றன’ என்ற எண்ணமே  தோன்றியது.         

அது 2008 ஆகஸ்ட் முதல் நாள். குறுகியகாலப் பயணம் ஒன்றிற்காக இந்தியாவிற்கு வந்திருந்த நான் முதலாவதாக என்னுடைய சொந்த ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. உலகின் அனைத்து இடங்களிலும் உள்ள புதிய கார்களில் உள்ள அதே தோல், பிளாஸ்டிக் வாசனையை இந்தியாவில் உள்ள புதிய கார்களும் கொண்டிருந்த போதிலும் - ஒருவகையில்  அவை உலகில் வேறெங்கும் காண முடியாத வகையிலேயே இருக்கின்றன.   

தினந்தோறும் இந்தியா முழுவதிலும் உள்ள ஆட்டோஷோரூம்களில் இருந்து  வெளியே வருகின்ற ஆயிரக்கணக்கான வாகனங்களைப் போல  சிவப்பு நிற ரிப்பன்களால் அலங்கரிக்கப்பட்டு, நம்பர் பிளேட்டில் கட்டப்பட்டிருந்த புதிய சாமந்திப்பூ மாலையுடன் நான் ஏறியமர்ந்திருந்த அந்தக் காரும் இருந்தது. காரின் முன் கண்ணாடியில் இரண்டு ஸ்வஸ்திகாக்கள், சிவப்பு நிறத்தில் ‘ஓம்’ வரையப்பட்டிருந்தன. ஓட்டுநரின் ஸ்டியரிங்கில் மங்களகரமான சிவப்புக் கயிறு கட்டப்பட்டிருந்தது. டாஷ்போர்டில் இருந்த விநாயகர் சிலைக்கு முன்னால் எரிந்து போன ஊதுபத்தியின் சாம்பல் கிடந்தது.    

இந்தியச் சாலைகளை அடைத்துக் கொண்டிருக்கின்ற புதிய வாகனங்களை ‘ஆசீர்வதிப்பது’ என்பதாக இன்றைய நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வாகன பூஜை என்ற புத்தம் புதிய ஹிந்து சடங்கிற்காக தன்னுடைய காரை கோவிலுக்கு எடுத்துச் சென்ற என் மருமகன் என்னை அழைத்துச் செல்ல கோவிலிலிருந்து நேரடியாக வந்திருப்பதாக என்னிடம் கூறினார்.    

தன்னுடைய முதல் கார் என்பதால் குறைந்தபட்சம் இப்போதைக்கு தன்னுடைய அன்பிற்குரிய வழிபாட்டுப் பொருளாக இருக்கின்ற அந்தக் காருக்கு உண்மையிலேயே ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று விரும்பியதாலேயே கார் டீலர் அளித்த ஊக்கத்தொகையின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட இலவச வாகன பூஜைக்குப் பதிலாக கூடுதலாகப் பணம் செலுத்தி கோவிலில் நடத்தப்படுகின்ற பூஜைக்காக  தன்னுடைய புதிய காரை கோவிலுக்குk கொண்டு போயிருந்ததாக அவர் சொன்னார்.       

அவர் கூறிய அனைத்தையும் நம்ப முடியாமல் ‘என்ன! கார் டீலர்கள் இலவசமாக பூஜை சேவைகளை வழங்கி வருகிறார்களா? பூஜை செய்யும் பண்டிதர்கள் அவர்களுடைய ஊழியர்கள் பட்டியலில்  சேர்க்கப்பட்டிருக்கிறார்களா? இப்போது கார் டீலர்ஷிப் இடங்கள் எல்லாம் புதிய கோவில்களாக மாறி விட்டனவா? என்று கேள்வியெழுப்பினேன். இத்தனை ஆண்டுகளாக இதுகூடத் தெரியாமல்  எங்கே இருந்தீர்கள் என்று கேட்பதைப் போல் என்னைப் பார்த்த மருமகன் ‘இது ஒன்றும் புதிதல்ல’ என்றார்.    

வாகன பூஜைகள் மிகவும் பிரபலமாகியிருக்கின்ற இந்தச் சூழலில் புதுமையான கார் டீலர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பூஜை சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். மங்களகரமாக இருக்கும் வகையில்  தேங்காய் உடைப்பது, தீய சக்திகளை விரட்டுவதற்காக எலுமிச்சம்பழம் மீது வாகனத்தை ஓட்டுவது, அர்த்தம் தெரியாமலேயே சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிப்பது என்பது போன்று அனைத்து சடங்குகளையும் செய்து தருகின்ற வகையில் முழு நேர பூசாரிகளை அந்த கார் டீலர்கள் வேலைக்கு அமர்த்தி இருக்கின்றனர். தங்களுடைய வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் வகையில் பிரசாதங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன், வாடிக்கையாளர்கள் உலகெங்கிலும் உள்ள தங்களுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கக்கூடிய வகையில் அந்த நிகழ்வை டிஜிட்டல் கேமராவில் படம் எடுத்தும்  கொடுக்கிறார்கள். கார் டீலர்ஷிப் இடங்களில் நடத்தப்படுகின்ற இதுபோன்ற பூஜைகள் கோவிலில் நடக்கின்ற பூஜைகளைப் போலவே இருக்கும், ஆயினும் என்னுடைய மருமகனுக்கு கோவிலில் நடத்தப்படுகின்ற பூஜை மீதே அதிக விருப்பம் இருந்த காரணத்தால் அவர் டீலர் அளித்த அந்த இலவச பூஜையைக் கைவிட்டுவிட முடிவு செய்தார். இவையனைத்தையும் ஒரே மூச்சில் என் மருமகன் கூறி முடித்தார்.   

பூசாரிகளுடன்  கார் டீலர்ஷிப்கள்! உலகமயமாகியுள்ள இந்தக் காலகட்டத்தில் ஹிந்து மதம்  இதுபோன்ற புதிய வாய்ப்பைத் தனக்கென்று மாற்றியமைத்து தான் செழித்து வளர்வதற்காகப்  பயன்படுத்திக் கொள்வது குறித்து எண்ணிப் பார்த்தேன். ‘என்ன ஒரு வித்தியாசமான யோசனை’ என்று உண்மையில் வியந்து போனேன். குளிரூட்டப்பட்டிருக்கும் கார் டீலர்ஷிப் இடத்தில் அமர்ந்து கொண்டு அதிகப் பணம் சம்பாதிக்க முடியும் என்பதால் பூசாரிகள் நிச்சயம் மகிழ்ச்சியுடனே இருப்பார்கள் என்று என்னால் உறுதியாக நம்ப முடிகிறது. கூடுதல் பணம், நேரம் என்று எதுவும் தேவைப்படாததால் தாங்கள் செய்ய வேண்டிய காரியங்களின் பட்டியலிலிருந்து ‘பூஜையை’ அடித்து விடலாம் என்பது கார் வாங்குபவர்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கக் கூடும். சுற்றி எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சியும், திருப்தியும் மட்டுமே காணப்படுகிறது. மிகவும் எளிதாகப் பணம் சம்பாதிக்க முடிவதால் தேங்காய் விற்பவர்களும் மகிழ்ச்சியுடனே இருப்பார்கள் என்பதை  உறுதியாகச் சொல்ல முடியும் (ஆட்டோ ஷோரூம்களுக்கு தினந்தோறும் தேங்காய் விநியோகம்! உண்மையில் இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகக் கூடிய செயல்!!). 

வீசிய திகைப்பு அலை

இதுபோன்றதொரு பிராமணிய பனியா மாடல் வணிகத்தில் என்ன தவறு இருக்க முடியும்? கடவுளுக்கும், செல்வத்துக்கும் இடையே இருக்கின்ற நிலையான கூட்டின் ஆக்கப்பூர்வமான மறுஉருவாக்கமாகத்தானே அது இருக்கிறது? அப்படியென்றால்  இந்தச் செயல் குறித்து திகைப்பு அலை ஏன் என்னுடைய இதயத்தில் வீசியது? என்னுடைய அன்புக்குரிய மருமகன் போன்ற படித்த - தாங்கள் மிகவும் நேசிக்கின்ற தங்களுடைய முதலாவது புதிய காரைப் பற்றி மிகவும் பெருமைப்படக் கூடிய - இளைஞர்கள் இதைப்போன்று நடத்தப்படுகின்ற பூஜைகள் தங்களுடைய புதிய வாகனங்களுக்கென்று மதிப்பை உருவாக்கித் தரும் என்று நம்பிக்கை கொள்வதைப் பற்றி நான் ஏன் வருத்தப்பட வேண்டும்?    

இன்றைய தலைமுறை ‘நவீன’ இந்தியர்கள் நவீன அறிவியல், தொழில்நுட்பத்தின் தயாரிப்புகளை இதுபோன்று இடைக்காலம் அல்லது இடைக்காலத்திற்கு முந்தைய உலகக் கண்ணோட்டத்துடன்  எதிர்கொள்வதில் ஏதோ தவறு இருப்பதாகவே நான் உணர்கின்றேன். முற்றிலும் பொருள்முதல்வாதம் கொண்டு, இயற்கை குறித்த பகுத்தறிவுப் புரிதலால் உருவாக்கப்பட்டிருக்கும் சாதனங்கள், உயிரினங்களுக்குக் கிடைக்கின்ற வசதிகள் அனைத்தையும் நாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் இந்த இளைஞர்கள் தங்களை வாழ வைக்கவும், சாகடிப்பதற்குமான அதிகாரத்துடன் இருக்கின்ற கடவுள்கள் உண்மையில் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதான உணர்வுடனேயே இருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.  உண்மையில் கற்கள், மரங்கள் மற்றும் தங்களுடைய விலைமதிப்பற்ற வாகனங்களைப் போல ஒன்றாகவே கடவுளும் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். ரிச்சர்ட் டாக்கின்ஸ் விளக்கியுள்ள ‘கடவுள் மாயை’ என்ற மிகவும் பொதுவான நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த இளைஞர்களிடையே ‘நமது பிரபஞ்சத்தை வடிவமைத்து, பராமரித்து வருகின்ற ஒருவர், மாற்றமே இல்லாத தன்னுடைய சட்டங்களின் தற்காலிக மீறல்களாக இருக்கின்ற அற்புதங்கள் மூலமாகத் தலையீடுகளைச் செய்து வருகின்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒருவர் நாம் வசிக்கின்ற இந்த யதார்த்த உலகத்தில் நம்முடன் இருந்து வருகிறார்’ என்ற மிகவும் தவறான நம்பிக்கை விடாப்பிடியாக இருந்து வருகிறது. எனவேதான் பூஜைகள் மூலமாக அந்த இயற்கைக்கு அப்பாற்பட்டவரிடம் தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று  அவர்கள் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இடையூறுகள், விபத்துகளுக்கு எதிராகத் தங்களுக்குக் கிடைக்கப் போகின்ற தெய்வீகக் காப்பீட்டிற்காக தங்களால் மிகுந்த ஆர்வத்துடன் செலுத்தப்படுகின்ற பிரீமியத்தைப் போன்றே இந்தப் பூஜைகள் இருக்கின்றன.         

உண்மையான இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் அளவிற்கு எனது மருமகன் உலக ஞானம்  கொண்டவர்தான் என்றாலும் அவர் ஏன் தன்னுடைய புத்தம் புதிய காரில் உள்ள கையுறைப் பெட்டிக்குள் கிடக்கின்ற அந்த இன்சூரன்ஸ் சான்றிதழிற்கும் கூடுதலாக இதுபோன்ற பூஜைகள் வேண்டுமென்று  நினைக்கிறார்? தேங்காய்களை உடைத்து, ஊதுபத்திகளைக் கொளுத்தும் போது யாரை அல்லது  எதற்காக அந்த பாதுகாப்பு சக்தியை வணங்குகிறோம் என்பதைப் பற்றி அவர் சிறிதளவிலாவது யோசித்திருப்பாரா என்று எனக்குள்ளே ஆச்சரியம் எழுந்தது. இதுபோன்ற தேவையற்ற பிரார்த்தனைகள் அவரிடம் உள்ள கேள்விகள் கேட்பதற்கான திறனை முழுமையாக மழுங்கடித்து விட்டனவா என்ற கேள்வி எனக்குள்ளாக எழுந்தது. எந்தவொரு கேள்வியும் கேட்காமல் வெறுமனே நம்பிக்கைகளின் அடிப்படையில் கண்ணுக்குத் தெரியாத சக்திக்குத் தலைவணங்கக் கூடிய இந்த இளைஞர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தலைகுனிந்து இருக்குமாறு தங்களைக் கேட்கின்ற அதிகாரத்தில் உள்ளவர்களை நோக்கி கேள்விகள் எதையும் எழுப்பத் துணிவார்களா?    

நம்பிக்கைகளும், சித்தாந்தமும்

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கின்ற பல கேன்டீன்களில் ஒன்றில் சந்தித்த என்னுடைய பழைய நண்பர் ஒருவரிடம் ​​இந்த இலவச வாகன பூஜைகளைப் பற்றி நான் பகிர்ந்து கொண்டேன். ‘மீண்டும் ஆரம்பித்து விட்டீர்களா!’ என்று என்னிடம் கேள்வியெழுப்பிய அவர் கடவுள் இல்லை என்று கருதுபவர். ஆயினும் அவர்  மதம் மீது மக்கள் கொண்டிருக்கும் பற்றுதலை அறிவுஜீவிகள் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தங்களை ஒருபோதும் அந்த மக்களைக் காட்டிலும்  அதிபுத்திசாலிகள் என்று அவர்கள்  கருதக்கூடாது என்றும் நினைப்பவர். போல்ஷிவிக் வகை புரட்சிகரக் கருத்தைப் போன்று அது இருக்கிறது என்று  அஞ்சுபவர்.         

‘மிகவும் நவீனமானவர்கள், மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக் கொள்கின்ற உங்களிடமும், அமெரிக்காவில் உள்ள உங்களைப் போன்றவர்களிடமும் மூடநம்பிக்கைகள் என்று எதுவுமே இல்லையா?’ என்ற கேள்வியை அவர் என்னிடம் எழுப்பினார். மேலும் ‘வேலைக்கான நேர்காணலுக்கு சென்ற போது உங்களுக்குப் பிடித்த ‘அதிர்ஷ்டமான’ ஆடையை நீங்கள் விரும்பி அணிந்து சென்றதே இல்லையா? நாளின் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பாதையில் செல்வதை நீங்கள் தவிர்த்ததே இல்லையா? நேர்மையாக நீங்கள் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். உங்களைப் போன்ற முற்போக்காளர்களால் மிகவும் உயர்வாக மதிக்கப்படுகின்ற பாரக் ஒபாமா கூட அனுமன் படம் உள்ளிட்ட அதிர்ஷ்டம் தருகின்ற சில பொருட்களை தன்னுடைய சட்டைப்பையில் வைத்து தினமும் எடுத்துச் செல்கிறார். யாருக்கும் தீங்குகள் எதையும் இழைக்காத வகையில் இந்தியர்கள் செய்து வருகின்ற இதுபோன்ற எளிய வினோதச் செயல்களைக் கண்டு நீங்கள் ஏன் கொதிக்கிறீர்கள்? நாம் உருவாக்கி வைத்திருக்கின்ற மிகவும் மோசமான, கொடூரமான சமூகத்தில் இதுபோன்ற செயல்களால் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கிறது என்றால் அவர்கள் பூஜைகளைச் செய்து விட்டுப் போகட்டுமே… இதுபோன்ற பூஜைகள் நிச்சயம் யாருக்கும் எந்தவொரு தீங்கையும் விளைவிக்கப் போவதில்லை - இல்லையா? பழங்குடியினர் குறித்து ஆங்கிலேய எஜமானர்களிடமிருந்த தவறான எண்ணங்களையே இன்னும் நாம் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லையா? ‘மூடநம்பிக்கை கொண்ட விக்கிரக வழிபாட்டாளர்கள்’ என்று நம் மீது முத்திரை குத்திய கிறிஸ்தவ மிஷனரிகளைப் போல நாமும் நடந்து கொள்கிறோம் என்ற  உணர்வு உங்களுக்குத் தோன்றவே இல்லையா?  சாதாரண மக்களைச் சென்றடைய வேண்டுமென்று உண்மையிலேயே நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், முதலில் மக்களிடம் உள்ள நம்பிக்கையை மதிக்கக் கற்றுக் கொள்ள்ங்கள். இப்போது செய்து வருவதைப் போல  ஒருபோதும் அவர்களை நீங்கள் இழிவாகப் பார்க்கக் கூடாது’ என்று தொடர்ந்தார்.          

‘அப்பாடா! மதம் குறித்து பேசுகின்ற போதெல்லாம் இதுபோன்ற நட்புரீதியான அறிவுரைகளை எத்தனை முறை நான் கேட்டிருக்கிறேன் என்பதற்கு என்னிடம் எந்தவொரு கணக்கும் இல்லை. ஆனால்  இதுபோன்ற  அறிவுரைகளை எத்தனை முறை கேட்டாலும் மற்றவர்களுடைய நம்பிக்கைகள் மீது மரியாதை கொள்ள வேண்டும் என்பதாக அவர்களிடம் இருக்கின்ற அந்த எண்ணம் ஒருபோதும் எனக்குப் பொருந்துவதாக இருந்ததே இல்லை.      

குழந்தைகளைப் பெற்றவர்கள் தங்களுடைய குழந்தைகளின் முட்டாள்தனங்களைப்  பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் மக்களின் பகுத்தறிவற்ற நம்பிக்கைகளை அதைப் போன்று பொறுத்துக் கொள்வது அவர்களுக்கு காட்டுகின்ற ‘மரியாதை’ ஆகாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பகுத்தறிவால் நம்முடன் இணங்கிப் போகின்றவர்களை (அல்லது தங்களுடைய சிறந்த வாதங்கள், ஆதாரங்களைக் கொண்டு நம்மை இணங்க வைப்பவர்களை) உரையாடலுக்குத் தகுதியான கூட்டாளிகள் என்று கருதுவதையே நாம் அக்கறை கொண்டிருக்கின்ற நபர்கள் மீது மரியாதை செலுத்துவதற்கான சிறந்த வழி என்று நான் நிர்ணயித்துக் கொண்டிருக்கிறேன். அக்கறைக்குரிய விஷயங்கள் குறித்த நேர்மையான, வெளிப்படையான உரையாடலில் மக்களை ஈடுபடுத்துவதே அவர்கள் மீதுள்ள அளவு கடந்த மரியாதையை அவர்களிடம் காட்டுகின்ற வழியாக இருக்கும் என்றும்  நான் கருதி வருகிறேன்.       

மக்களிடம் உள்ள நம்பிக்கைகள் குறித்து இதுபோன்ற விதிவிலக்குகளை ஏற்படுத்தித் தருவதற்காக எனது முற்போக்கு நண்பர்கள் ஏன் இந்த அளவிற்குப் பின்னோக்கி வளைகிறார்கள் என்பதை என்னால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடிவதே இல்லை. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பெருநிறுவன முதலாளிகள் அல்லது ‘மேற்குலகம்’ போன்றவை சில போலியான சிந்தனைகளை அல்லது பொருட்களை நம்மிடம் புகுத்த முயலும் போது இந்திய முற்போக்குவாதிகள் அதற்கான காரணங்களையும், ஆதாரங்களையும் கோரி முன்னணியில் நிற்கின்றனர். ஆயினும் பெரும்பாலும் தேவையற்ற துயரங்களை ஏற்படுத்துவதாக இருக்கின்ற மக்களின் மதநம்பிக்கைகளுக்கு எதிராகச் சவால் விடுக்கப்படுகின்ற போது அந்த நண்பர்களிடம் இருக்கின்ற விமர்சனத் திறன்கள் அவர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து விடுவதாகவே தோன்றுகிறது.     

நம்பிக்கைகள், சடங்குகள், ஹிந்து மதம் மற்றும் பிற இந்திய மதங்கள் குறித்த உலகளாவிய பார்வை என்று வரும் போது ​​எந்தவொரு தீவிரமான மதநம்பிக்கையும் இல்லாத மதச்சார்பற்ற, முற்போக்கு  இந்திய அறிவுஜீவிகள் பெரும்பாலும் விமர்சகர்களாக இருப்பதைக் காட்டிலும், அதுபோன்ற நம்பிக்கைகளைப் பராமரித்துக் காப்பாற்றுபவர்களாகவே நடந்து கொள்ள முனைகிறார்கள்.   

மதச்சார்பற்ற நண்பர்கள் ஹிந்து தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில்  முன்னணியில் நிற்பது குறித்து நான் அவர்களைப் பெரிதும் மதிக்கிறேன் என்றாலும் அவர்களிடம் இருக்கின்ற இந்த ஹிந்து மதத்தைத் தவிர்க்கின்ற அணுகுமுறையைக் கண்டு பெரும்பாலும் என்னிடம் குழப்பமே ஏற்பட்டிருக்கிறது.  ‘ஹிந்து மதத்திற்கு ஹிந்து தேசியவாதத்துடன்  எந்தவொரு தொடர்பும் இல்லை’ என்று அவர்கள் தீவிரமாகப் பிரகடனம் செய்வதை இதுவரையிலும் எத்தனை முறை கேட்டிருக்கிறேன் என்பதற்கான கணக்கும் என்னிடமில்லை. அவர்கள் பெரும்பாலும் ‘ஹிந்து மதம் என்பது ‘நம்பிக்கை’ (அதனால் நல்லது), ஹிந்து தேசியம் என்பது ‘அரசியல் சித்தாந்தம்’ (அதனால் மோசமானது)’ என்றே  கூறி வருகின்றனர்.       

அவர்களுடைய வாதம் பதில்களைத் தருவதைக் காட்டிலும் அதிக அளவில் கேள்விகளை எழுப்புவதாகவே இருக்கிறது என்ற அச்சம் எனக்குள் இருக்கிறது. மதநம்பிக்கை, சித்தாந்தம் என்று அவையிரண்டும் உண்மையில் ஒன்றுக்கொன்று தொடர்புகள் இல்லாதவை என்பது உண்மைதானா? நம்பிக்கைகள் எப்போது சித்தாந்தமாகச்  செயல்படாமல் இருந்திருக்கின்றன? ராமாயணக் கதை ஒரே நேரத்தில் நம்பிக்கையாகவும், ஆணாதிக்க, சாதிய சமூகத்தின் சித்தாந்தமாகவும் இருக்கவில்லையா? என்னுடைய மிகச் சிறந்த மதச்சார்பற்ற நண்பர்கள் மக்களுடைய நம்பிக்கைகளை வெறுமனே ‘அரசியல் என்று குறிக்கப்பட்டிருக்கும் கதவுகளுக்கு வெளியே மக்கள் விட்டுச் செல்கின்ற செருப்பு போன்றவை’ என்று உண்மையிலேயே நம்பிக் கொண்டிருக்கிறார்களா? மதம்சார்ந்த நம்பிக்கைகள் சித்தாந்தங்களால் அணிதிரட்டப்படுகின்ற உலகைப் பற்றிய அறிவுப் புரிதலையே  எப்போதும் வழங்கி வருகின்றன. அந்த நம்பிக்கைகளின் மூலம் பெறப்படும் பொது அறிவு உலகக் கண்ணோட்டம், அந்தப் பொது அறிவை எதிரொலிக்கின்ற, தங்கள் சொந்த நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்ற அரசியல் சித்தாந்தங்கள் என்று இரண்டையுமே எதிர் கொண்டு நிற்பதைத் தவிர நிலையான மதச்சார்பின்மைவாதிகளுக்கு வேறு வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.   

நாம் மக்களிடமுள்ள மதநம்பிக்கைகளை ‘மதிக்க’ வேண்டும் என்று வற்புறுத்துபவர்களிடம் இருந்து எடுத்துக் கொள்ள எனக்கு இன்னுமொரு விஷயமும் இருக்கிறது. சாத்தியமான ஆதாரங்கள் அனைத்தையும் மீறி இயற்கை எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி திரட்டப்பட்டுள்ள அறிவை முழுமையாக நிராகரிக்கின்ற, இந்திய வரலாறு முழுவதிலும் தனக்கென்று மிகவும் பிற்போக்குத்தனமான பங்கைக் கொண்டிருக்கின்ற மதநம்பிக்கைகளை நாம் எதற்காக மதிக்க வேண்டும்? இறையச்சம் என்ற போர்வை கொண்டு மூடப்பட்டு வருகின்ற காரணத்தாலேயே மதநம்பிக்கைகள் ஒருபோதும் மரியாதைக்குரியவையாக ஆகி விடப் போவதில்லை.         

மரத்தடியில் அமர்ந்திருந்த என்னுடைய தலைக்குள் இந்த எண்ணங்கள் அனைத்தும் ஓடிக்கொண்டிருந்தன. கஷ்டப்பட்டு நாக்கை அடக்கிக் கொண்டு எதுவும் பேசாதவளாக அங்கே அமர்ந்திருந்தேன். ஒருகாலத்தில் மாணவியாக  இருந்த அந்த வளாகத்திற்கு இப்போது வந்திருப்பதை அனுபவித்துக் கொண்டிருந்த நான், அந்த இனிமையான நேரத்தில் இதுபோன்ற முக்கியமான பிரச்சனைகளில் விவாதம் எதையும் வைத்துக் கொள்வதற்கு  விரும்பவில்லை. அப்போது அங்கே தேநீர் விற்கும் சாய்வாலா ஒருவர் (பள்ளிக்குள் இருந்திருக்க வேண்டிய இளைஞர்)  அதிர்ஷ்டவசமாக வந்து சேர்ந்தார். அதற்குப் பிறகு எங்களுக்கு வழங்கப்பட்ட தேநீர் மற்றும் ரொட்டி-பகோடாக்களைச் சாப்பிடுவதில் நாங்கள் அனைவரும் மும்முரமாகி விட்டோம். என்னுடைய மாணவப் பருவத்து நொறுக்குத் தீனிகள் இப்போதும் என்னுடைய நினைவில் இருக்கின்ற அதே சுவையுடனே இருந்தன.  கண்டிப்பாக சில மரபுகள் பாதுகாக்கப்பட வேண்டும்தானே!      

நம்பிக்கை அடிப்படையிலான கூற்றுகள்

அடுத்த நாள் காலையில் உள்ளூர் செய்தித்தாள் வரும் வரையிலும் நான் என்னுடைய அந்த நண்பரின் வார்த்தைகளைப் பற்றிய சிந்தனையுடனே இருந்தேன். ‘நைனா தேவி கோவில் நெரிசலில் 146 பேர் இறந்தனர்’ என்ற தலைப்புச் செய்தியுடன் அந்தச் செய்தித்தாள் என்னுடைய கைகளில் இருந்தது. நைனா தேவி கோவில் சண்டிகரில் இருந்து வடக்கே சுமார் நூறு கிமீ தொலைவில் உள்ள மிகவும் பிரபலமான கோவில். சதி என்ற சடங்கில் ஈடுபட்ட தேவி விஷ்ணுவால் அழிக்கப்பட்ட பின்னர் மறுகட்டமைக்கப்படுவதற்காக அந்த உடல்  அவளுடைய கணவன் சிவனால் எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட அந்த உடலிலிருந்து தேவியின் கண்கள் (நைனா) விழுந்த ‘சரியான’ இடத்தைக் குறிக்கும் வகையிலேயே அந்தக் கோவில் இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. அந்தக் கோவிலைப் போன்று தேவியின் சிதைந்த உடலில் இருந்து விழுந்த துண்டுகளுக்கு உரிமை கோருகின்ற குறைந்தபட்சம் ஐம்பது கோவில்கள் அல்லது சக்தி பீடங்கள் தெற்காசியா முழுவதும் இருந்து வருகின்றன. (தேவியின் கண்கள் விழுந்த இடங்களைக் குறித்ததாக இருக்கின்ற இரண்டு கோவில்களில் இன்னொன்று பாகிஸ்தானில் அமைந்துள்ளது).  

உண்மையில் மிகவும் பயங்கரமான வன்முறை கலந்த இதுபோன்றதொரு கதையில் எது ‘புனிதமானது’ என்பதை  என்னால் கண்டறிய முடியவில்லை. தேவியின் வலது கண், பெருவிரல், மேல் தாடையில் உள்ள கோரைப்பல் ஆகியவை மிகச் சரியாக அந்தந்தக் கோவில்கள் அமைந்திருக்கின்ற இடங்களில்தான் விழுந்தன என்று அவர்களுக்கு எப்படித் தெரிய வந்தது என்பது எவருமறியாத ரகசியமாகவே இருந்து வருகிறது.        

இதுபோன்றதொரு மதநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கைகள் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டவையாக இருப்பதால் அவை குறித்த கேள்விகளை எழுப்புவது பொருத்தமானதல்ல என்று அவர்கள் கூறலாம். ஆனால் நன்றாகக் கவனித்துப் பாருங்கள்… ஹிந்து தேசியவாதிகள் ராமர் பாலம் அல்லது பாபர் மசூதி ஆகிய இடங்களின் மீது உரிமை கோரும்போது அல்லது அதுபோன்ற இடங்களை அரசாங்கத்தால் நடத்தப்படுகின்ற சுற்றுலாத் துறை முன்னிறுத்திப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்ற போது நம்பிக்கை அடிப்படையிலே இருக்கின்ற அத்தகைய கூற்றுகள் அனைத்தும்  நேரடி உண்மைகளாகவே அவர்களிடமிருந்து  வெளிப்படுகின்றன. மிகப் பழைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாகிய இந்தியாவில் நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கும் விசுவாசிகள் இதுபோன்ற நம்பிக்கைகளை விரும்புவது மட்டுமல்லாது, இதுபோன்று கூறப்படுகின்ற கதைகளை ஏற்றுக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.     

என்னுடைய மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. நைனா தேவி கோவிலில் ஏற்பட்ட பயங்கர நெரிசல் குறித்து நாம் மீண்டும் பார்க்கலாம். அந்த விபத்து குறித்து தி ட்ரிப்யூன் பத்திரிகையில் வெளியாகி என்னிடமுள்ள பத்திரிகைச் செய்தியில் ‘ஆகஸ்ட் 4: ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நைனா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 146க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இருநூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அன்று நவராத்திரியின் இரண்டாம் நாளான ஷ்ரவண அஷ்டமி மேளா என்பதாலும், அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் பிரபலமான அந்த மலையின் உச்சியில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக - சுமார் இருபதாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் - திரண்டிருந்தது. தெய்வத்தைத் தரிசனம் செய்வதற்காக பாம்பு போன்று நீண்டு கிடந்த வரிசையில் காத்துக் கிடந்த அவ்வளவு பெரிய கூட்டத்திற்கு அந்தக் கோவிலில் போதிய இடம் இருக்கவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பல உயிர்கள் பறி போய் விட்டது எனக்குள்ளே மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது... நேற்று என்னுடைய நண்பர்  சொன்னது மீண்டும் என் மனதிற்குள் வந்தது.  ‘யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத எளிய போக்கு’ என்று கடவுள்கள், தேவிகளுக்கான ஹிந்து மதப் பிரார்த்தனைகளைப் பற்றி அவர் என்னிடம் விவரித்திருந்தார். அத்தகைய எளிய போக்கு ஏழை மக்களுக்கு இந்த அளவிற்குத் தீங்கை இழைத்து விட்டதே என்ற எண்ணவோட்டம் எனக்குள்ளே ஓடியது. அமெரிக்காவில் நடக்கின்ற ராக் கச்சேரிகளாகட்டும் அல்லது இந்தியாவில் நடைபெறுகின்ற அரசியல் பேரணிகளாகட்டும் - எங்கேயும், எந்தவொரு நிகழ்விலும் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்துவதில் போதிய கவனம் இல்லாமல் போகும்போது இவ்வாறான இழப்புகள் நிகழலாம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனாலும் தங்களுடைய சந்தோஷத்திற்காக, நீண்ட ஆயுளுக்காக தெய்வத்தின் ஆசீர்வாதங்களை வேண்டி வருகின்ற ஏராளமான எளிய மக்கள் இதுபோன்று இறந்து போவது என்னிடம் அளவிற்கு மீறிய சோகத்தையே ஏற்படுத்தியது.      

நைனா தேவி கோவில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர்

...அமெரிக்காவில் கனெக்டிகட்டில் உள்ள என்னுடைய வீட்டில் அமர்ந்து 2008 ஆகஸ்ட் மாதம் நைனா தேவி கோவிலில் நடந்திருந்த கூட்டநெரிசலைப் பற்றி எழுதிக் கொண்டிருந்த வேளையில்  இந்தியாவில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற மற்றொரு கோவில் நெரிசல் பற்றிய செய்தியை தேசிய வானொலி என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது. 2008 செப்டம்பர் 29 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சாமுண்டா மாதா கோவிலில் கூடியிருந்த யாத்திரிகர்களில் கிட்டத்தட்ட இருநூறு பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்து போயினர் என்று அந்த அறிவிப்பு தெரிவித்தது.  இன்னுமொரு தேவி. அடுத்து ஒரு கோவில், மேலும் ஒரு கூட்டநெரிசல் என்று மரணங்கள் தொடர்கின்றன... 

சாமுண்டா மாதா கோவில் கூட்ட நெரிசல் துயரம்

மதம் பின்னணியில் இருந்த அந்த நைனா தேவி கோவில் துயரம் நடந்து முடிந்த ஒரு வாரத்திற்குள்ளாக ஜம்மு, காஷ்மீர் மாநிலத்து தெருக்களையும், நெடுஞ்சாலைகளையும் தேவையற்ற, தவிர்க்கக்கூடிய மரணங்களும், குழப்பங்களும் நிறைத்திருந்தன. ‘இந்தியாவிடம் இருந்து சுதந்திரம் வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்னிறுத்தி ஆகஸ்ட் 11 அன்று தொடங்கி குறைந்தது ஒருவார காலத்திற்கு காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியின் தலைநகரான முசாஃப்ராபாத்தை நோக்கி அணிவகுத்துச் செல்கின்றனர் என்று அன்றாடம் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.  காஷ்மீருக்கு எதிராக ஜம்முவைத் தளமாகக் கொண்டு இயங்கி வந்த ஹிந்து வலதுசாரிக் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பொருளாதார முற்றுகையை மீறுவதற்கு முயன்ற போராட்டக்காரர்களில் நூற்றுக்கணக்கானோர் காவல்துறையின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இறந்து போயினர். பல நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.    

புகழ்பெற்ற அமர்நாத் சன்னதியில் சிவனின் லிங்கத்தையொத்த பனிக்கசிவு மீது உருவாக்கப்பட்டிருந்த மதம் சார்ந்த ஆர்வமே காஷ்மீரில் புதியதொரு அரசியல் அமைதியின்மையைத் தூண்டி விட்டிருந்தது. காஷ்மீரின் நிலைமையைக் கொண்டு அதனை ‘உலகின் மிகவும் ஆபத்தான இடம்’ என்று கருதுவது நம்பமுடியாத அளவிற்கு முட்டாள்தனம் என்றே தோன்றுகின்றது.  ஹிந்து நலன்களை முன்னெடுப்பதில் உறுதியுடன் உள்ள அரசு அதிகாரிகளால் அமர்நாத் கோவிலுக்குச் செல்கின்ற ஹிந்து யாத்திரை மிகவும் தீவிரமாக அந்த முஸ்லீம் பெரும்பான்மை மாநிலத்தில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சர்ச்சை மாநில ஆளுநரின் (அவர் அவசியம் ஹிந்துவாக இருக்க வேண்டும்) தலைமையில் சட்டப்படியாக ஏற்படுத்தப்பட்டுள்ள அமர்நாத் கோவிலின் நிர்வாகக் குழுவானது சுமார் நானூறு ஏக்கர் வன நிலத்தை அபகரிப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளாலேயே  ஏற்பட்டிருந்தது.        

முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கோவிலுக்கு நிலத்தை மாற்றித் தருகின்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அவ்வாறாக நிலப் பரிமாற்றத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது ஹிந்துக்கள் மத்தியில் எதிர்வினையைத் தூண்டியது. ஹிந்து தேசியவாதக் கட்சிகளுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ள பெரும்பாலான ஹிந்துக் குழுக்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் காஷ்மீரை இணைத்து வருகின்ற வர்த்தகப் பாதைகளில் தடைகளை ஏற்படுத்தினர். அவர்களுடைய செயல் காஷ்மீரிகளிடையே ‘சுதந்திரம்’ என்ற அறைகூவலைத் தூண்டி விட்டதன் விளைவாக பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரை நோக்கி  தங்கள் அணிவகுப்பை அவர்கள்  தொடங்கினர்.  பல இறப்புகள், காயங்களுக்கு வழிவகுத்துக் கொடுத்த பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இந்த காஷ்மீரி போராட்டக்காரர்கள்தான் இரையாகிப் போயிருந்தனர்.    

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் நடக்கின்ற அரசியல் மோதல்களின் பின்னணியில் மதம் பதுங்கிக் கொண்டிருப்பதை எவராலும் எளிதில் கண்டு கொள்ள முடியும். நிமோனியா காய்ச்சலுக்கு வைரஸ் காரணமாக இருப்பதைப் போல இந்திய அரசியலின் பின்னணியில் நடக்கின்ற வன்முறைகளுக்கு ஹிந்து மதம், ஹிந்துத்துவம் என்று மதரீதியாகப் பெருக்கெடுத்திருக்கும் ஆர்வமே இப்போது காரணமாக இருந்து வருகிறது.  

மலைகளின் மீது நடந்த அந்த இரட்டை சோகங்கள் என்னை நிலைகுலைய வைத்திருந்தன. வாகன பூஜை, நைனா தேவி மற்றும் சாமுண்டா மாதா கோவில்களுக்குச் சென்ற யாத்ரீகர்களுக்கு நேர்ந்த சோகம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹிந்து புனித யாத்திரையை அரசாங்கம் ஊக்குவித்து வருவதால் அரசியல் ரீதியாக ஏற்பட்ட மோசமான விளைவுகள் என்று இவை அனைத்திற்குமிடையே உள்ள தொடர்புகளை என்னால் தெளிவாகக் காண முடிந்தது. மிகவும் சாதாரணமான ஹிந்துக்களை தங்களுடைய வாகனங்களுக்கு பூஜைகள் செய்ய வைக்கின்ற, மிகவும் கடினமான, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்ற யாத்திரைகளை அடிக்கடி மேற்கொள்ளச் செய்ய வைக்கின்ற கண்ணோட்டமும், மதம் சார்ந்த நம்பிக்கைகளும் சமீப காலங்களில் வெளிப்படையாக அரசு முன்னின்று நடத்தி வருகின்ற இந்தியாவை ஹிந்துமயமாக்குகின்ற செயல்கள் மீது அந்த மக்களை எவ்வாறு அனுதாபப்பட வைக்கின்றன - அவை உண்மையில் அவர்களிடமிருந்து தீவிரமாக அனுதாபத்தைக் கோருகின்றன - என்பதை முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் தெளிவாக என்னால்  காண முடிந்தது.       

அது ‘ஹிந்து தேசியவாதத்துடன் ஹிந்து மதத்திற்கு எந்தவொரு தொடர்பும் இல்லை’ என்று மதச்சார்பின்மை வாதத்தில் இருக்கின்ற முட்டாள்தனத்தைக் காணவும் வழியேற்படுத்திக் கொடுத்தது. ஹிந்து மதத்திற்கு ஹிந்து தேசியவாதத்துடன் எந்தவொரு இயல்பான - அதாவது அறிவாற்றல், அழகியல், தார்மீக ரீதியான  தொடர்புகளும்  இல்லை என்று என்னுடைய மதச்சார்பற்ற நண்பர்கள் குறிப்பிடும் போது, ​​ ‘சிறந்த’, ‘சகிப்புத்தன்மை கொண்ட’, ‘தீங்கு எதுவுமில்லாத’ வெகுஜனங்களுக்கான ஹிந்து மதத்தை ‘மோசமான’ ஹிந்து தேசியம் ‘அபகரித்துக் கொண்டுள்ளது’ அல்லது ‘சிதைத்துள்ளது’ என்றே  அவர்கள் சொல்ல வருகின்றனர் என்றே என்னால் நினைக்க முடிகிறது. அவர்களுடைய இந்த வாதம் நம்பத்தகுந்தது என்பதாக  என்னால் ஒருபோதும் காண முடியவில்லை. ஏனென்றால் ஹிந்து தேசியவாதிகளால் போற்றப்படுகின்ற ஹிந்து மதம் உண்மையில் பெரும்பான்மையான ஹிந்துக்கள் விரும்புகின்ற, போற்றி வருகின்ற, நடைமுறைப்படுத்தி வருகின்ற ஹிந்து மதமாக மட்டுமே இருக்கிறது என்று நான் நம்புகிறேன். ராமரை இந்தியாவின் அடையாளமாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளை வெறுமனே ‘கடத்தல்’ என்று மட்டுமே கருதுவதற்கான வாய்ப்புகளில்லை. ஹிந்துக்களிடம் இருந்து வருகின்ற அரசியல் கற்பனையில் கடவுள்-அரசரான ராமனும், ராமாயணமும் குறைந்தபட்சம் பத்தாயிரம் ஆண்டுகளாக மையமாக இருந்து வந்திருக்கின்றன. 

எனவே ‘நல்ல ஹிந்து மதம், கெட்ட ஹிந்துத்துவா’ என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்ற போதெல்லாம், அத்தகைய வாதங்களின் மீது  எப்போதும் சந்தேகம் கொண்டவளாகவே நான் இருந்து வந்திருக்கிறேன். பிரபலமான ஹிந்து மதத்தின் சடங்குகள், நம்பிக்கைகள் மீது கேள்விகளை எழுப்பாமல் ஹிந்து தேசியவாதிகளின் மதநம்பிக்கை அடிப்படையிலான அரசியலையும், அதேபோன்ற உத்வேகத்துடன் இருக்கின்ற இந்திய அரசின் முயற்சிகளையும் எதிர்த்து நம்மால் போராட முடியாது என்பதை முன்னெப்போதையும் விட இந்தக் கோடையில் இந்தியாவில் மேற்கொண்ட பயணங்களுக்குப் பிறகு என்னால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்திருக்கிறது. மக்களிடமுள்ள மதநம்பிக்கைகளை ‘மதிக்கின்ற’ ஒருவரால், ஹிந்துத்துவா என்ற பதாகையின் கீழ் அவ்வாறான நம்பிக்கை கொண்டு செயல்படுகின்றவர்களை நோக்கி நிச்சயம் கேள்விகளை முன்வைக்க முடியாது.          

மதச்சார்பற்றவர்களால் மதநம்பிக்கைகளுக்கு ‘மரியாதை’ செய்ய முடியாது என்று தொடர்ந்து கூறி வருகின்ற அதே வேளையில் மதநம்பிக்கை அடிப்படையிலான அரசியலுக்கு எதிராக மதச்சார்பற்றவர்கள் போராட வேண்டும் என்பதற்கான மிகச் சரியான எடுத்துக்காட்டாகவே காஷ்மீரில் நிலப்பரிமாற்றப் பிரச்சனை நடந்தேறியிருக்கிறது. பூசாரிகள் மட்டுமல்லாது ‘மதச்சார்பற்றதாக’ இருப்பதாகக்  கூறப்படுகின்ற அரசின் சுற்றுலா, தகவல் துறைகளும் - அமர்நாத் குகையில் இயற்கையில் உருவாகின்ற பனிக்கசிவு ‘உண்மையில்’ சிவனின் பாலுறுப்பு அடையாளமாக உள்ள லிங்கம் என்றும், அந்த இடத்தில்தான் கடவுள் சிவன் பிரபஞ்சத்தின் ரகசியங்களை தனது மனைவி பார்வதி தேவியிடம் கூறினார் என்றும் - முடிவில்லாமல் திரும்பத் திரும்பச் சொல்லி வரப்படுகின்ற, மிகவும் பிரபலமாக இருந்து வருகின்ற ஹிந்துப் புராணக்கதைகள் மீது ‘மரியாதை’ நிமித்தமாக நாம் கேள்விகளை எழுப்பவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அதுபோன்ற கதைகளை நாம் மரியாதை நிமித்தமாக ஏற்றுக் கொள்வோம் என்றால், ஜம்முவில் மட்டுமல்லாது நாடு முழுவதிலிருந்தும் ஹிந்துக்களைப் பெருந்திரளாகத் திரட்டி வந்து பனிலிங்கத்தின் ‘அதிசயத்தை’ அதிக எண்ணிக்கையிலான யாத்ரீகர்களைக் காண வைப்பதற்காக அமர்நாத் கோவிலுக்கு அதிக நிலத்தை வழங்கிட வேண்டும் என்று முன்வைக்கப்படுகின்ற கோரிக்கையை எந்த அடிப்படையில் நம்மால் விமர்சிக்க முடியும்?   

ஒரு கோவிலுக்காக சூழலியல் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் நிலத்தை அபகரிக்கின்ற முயற்சியில் இறங்குகின்ற அரசியல் கட்சிகள், கோவில் நிர்வாகம் போன்றவை நிச்சயமாக விமர்சிக்கப்பட வேண்டும். ஆனால் இயற்கையான நிகழ்வுகளை தெய்வீகக் கருணையுடன் இணைத்து வைத்துக் குழப்புகின்ற மக்களிடமுள்ள மதநம்பிக்கைகளை ‘மரியாதைக்குரியவை’ என்று  நாம் ஏற்றுக் கொள்வோம் என்றால், தங்கள் மதத்தைத் தடையின்றி சுதந்திரமாக நடைமுறைப்படுத்துவதற்காக சிறந்த வசதிகளை உருவாக்கித் தரும் வகையில் அதிக அளவிலான நிலத்தைக் கோருவதற்கான அவர்களுடைய உரிமையையும் நாம் மதித்து ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?    

உலகக் கண்ணோட்டம், பின்னணி அனுமானங்கள், பிரபலமான ஹிந்து சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களை உயிர்ப்பித்துத் தருகின்ற,  வெளிப்படையான அல்லது மறைமுகமான நம்பிக்கைகளை எதிர்த்து நிற்காத வரை ஹிந்துத்துவாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக நடத்துகின்ற போரானது ஒரு கையை முதுகிற்குப் பின்னால் கட்டிக்கொண்டு சண்டையிடுவதைப் போன்றதாகவே இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். அவ்வாறான நிலைமையில் இருக்கும் போது ஹிந்து தேசியவாதக் கட்சிகளின் பொருள் சார்ந்த மற்றும் அரசியல் நலன்களுக்கு எதிராக மட்டுமே நம்மால் நிற்க முடியும்.  மிகுந்த ஆர்வத்துடன் நேரடியாக (ரத யாத்திரைகள், பூஜைகள், யாகங்கள், யோகா-முகாம்கள் மற்றும் ஹிந்து வலதுசாரிகளால் ஏற்பாடு செய்யப்படுகின்ற பிற மத-அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்வது) அல்லது மறைமுகமாக (வாக்களிப்பது) ஹிந்துத்துவா அரசியலை ஆதரிக்குமாறு மாற்றியமைக்கப்படுகின்ற லட்சக்கணக்கான சாமானியர்களின் மனநிலை மற்றும் உளப்பூர்வமான பழக்கவழக்கங்களுக்கு எதிராக நம்மால் அப்போது நிற்க முடியாது அல்லது அவற்றை மாற்றியமைக்க முடியாது போய் விடும். மதநம்பிக்கைகளின் அடிப்படையை நோக்கி விமர்சனப்பூர்வமான, பகுத்தறிவு சார்ந்த, அறிவியல் ரீதியான கேள்விகளை எழுப்பாதவரை நம்மால் மக்களிடமிருந்து நம்பிக்கைகளின் அடிப்படையிலான அரசியலுக்கு கிடைக்கின்ற ஆதரவைத் தடுத்து நிறுத்துவதில் வெற்றி காண முடியாது. இந்திய மக்களின் உணர்வுகள், மனசாட்சிகளை மதச்சார்பின்மைக்குட்படுத்தாமல் இந்தியாவில் மதச்சார்பற்ற அரசியலுக்கான சாத்தியம் இருக்க முடியாது.     

உலகமயமாக்கலும் கடவுள்களும்

இவ்வாறான மோசமான செய்திகளுக்கு நடுவிலும்  இந்தியாவிற்கு  என்னை அழைத்து வந்திருந்த முக்கிய நோக்கம் குறித்து கவனித்துக் கொள்வதற்கும் எனக்கு நேரம் கிடைத்தது. விரைவில் வெளிவரவிருக்கும் ‘கடவுள் மற்றும் இந்தியாவில் உலகமயமாக்கல்’ என்ற புத்தகத்தின் முழுமையான கையெழுத்துப் பிரதியை என்னுடைய புத்தக வெளியீட்டாளரிடம் (நவயானா) நான் ஒப்படைத்தேன்.     

என்னால் எழுதி முடிக்கப்பட்டிருக்கும் புத்தகத்தின் உள்ளடக்கத்தை முழுமையாக உறுதிப்படுத்துகின்ற வகையிலேயே இந்தக் கோடையில் இந்தியாவில் நான் பார்த்தவை அனைத்தும் இருந்தன என்பதை இங்கே தெரிவிப்பதில் உண்மையில் எனக்கு மகிழ்ச்சி எதுவுமில்லை. முந்தைய (‘நேருவியன்’) தலைமுறையில் இருந்த நடுத்தர வர்க்கத்தைக் காட்டிலும் இப்போதுள்ள புதிய நடுத்தர வர்க்கங்கள் கூடுதலாக மதம் சார்ந்தவர்களாக மாறி வருகின்றனர் என்று தெரிவிக்கின்ற எனது புத்தகத்தின் உள்ளடக்கத்தின் ஒரு பகுதியை உறுதிப்படுத்துவதாகவே எனது மருமகன் புதிதாக வாங்கி பூஜை செய்த அந்தக் கார் இருந்தது. இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மற்றும் அரசியல் நவீனமயமாக்கல் மதச்சார்பின்மைக்கான வழிகளை வகுத்துத் தராமல், பாரம்பரியமாக இருந்து வருகின்ற மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் எதிர்பார்ப்புகளுக்கு எதிர்மாறாக பெருமளவில் மதமயமாக்கலுக்கே வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது என்ற வாதங்களையே நான் என்னுடைய புத்தகத்தில் முன்வைத்துள்ளேன்.     

மீரா நந்தா எழுதிய ‘கடவுள் சந்தை’ புத்தகம்

இப்போது அதிகரித்துள்ள மதவாதத்தை புதிய சடங்குகளின் கண்டுபிடிப்பு, கடவுள்கள்/தெய்வங்களை மரியாதைக்குரியவையாக்குவது, ஹிந்து மெய்ப்பொருள் கற்பித்து வருகின்ற பான் - சைக்கிசம் (பொருளின் மிகச்சிறிய அலகிற்கும் தன்னுணர்வு அடிப்படைப் பண்பாக அமைந்துள்ளது), உயிரியக்கம் (உயிரைக் குறிக்கின்ற ‘உயிர்-ஆற்றல்’ அல்லது ‘பிராணன்’) போன்றவற்றை நவீன அறிவியல் தன்மை கொண்டவையாக முரண்பாடான அறிவியலைக் கொண்டு சேர்க்கின்ற செயல்பாடுகள் தெளிவாக வெளிக் கொணர்ந்திருக்கின்றன. உலகளவில் இருக்கின்ற பிராண்ட்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நுகர்வோர்களாக மாறிவிட்டதால் மட்டுமே, அதிகரித்து வருகின்ற நடுத்தர வர்க்கத்தை ‘நவீன’ என்ற அடைமொழியுடன் நான் குறிப்பிடுகிறேன். சுதந்திரமாக உலவுகின்ற அல்லது சிலைகளுக்குள் ‘உள்ளார்ந்து’ இருக்கின்ற உடலற்ற ஆத்மா அல்லது ஆற்றலால் நிறைந்துள்ள உலகிற்குத் திரும்புவதாக மனதளவில் சேகரித்து வைத்துள்ள அறிவிற்கு மத்தியிலேயே பொருள் சார்ந்த இந்தச் சாதனங்கள் இருந்து வருகின்றன.       

பொதுத்துறைக்கான கடமைகளில் இருந்து பின்வாங்குகின்ற நவதாராளவாத அரசு விட்டுச் செல்கின்ற இடங்களை நிரப்பும் வகையிலேயே ‘அரசு-கோவில் பெருநிறுவனக் கூட்டிணைவு’ (STCC - எஸ்டிசிசி என்பது நான் பயன்படுத்தியுள்ள சொல்) உருவாகி வருகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்ற எனது புத்தகத்தின் மற்றொரு பகுதியை நைனா தேவி கோவில் மற்றும் அமர்நாத்தில் நடந்துள்ள சோகமான நிகழ்வுகள் உறுதிப்படுத்திக் காட்டியுள்ளன. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் மிகவும் வெளிப்படையாக இந்த அரசு-கோவில் பெருநிறுவனக் கூட்டிணைவு ‘கோவில் சுற்றுலாவை’ ஊக்குவிக்கிறது;  இந்தியக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில், ஹிந்து அடையாளங்கள், சடங்குகள், நடைமுறைகளை அது ஊக்குவித்து வருகிறது; ‘விழுமியக் கல்வியை’ ஊக்குவிப்பதாகக் கூறி சோதிடம், யோகா, ஆயுர்வேதம், வாஸ்து போன்ற போலி அறிவியலையும் அது ஊக்குவிக்கிறது. இந்தியாவில் உலகமயமாக்கல் நிகழ்வுகள் மிகப் பெரிய அளவில் கடவுள்களுக்கு ஆதரவானவையாகவே மாறி வருகின்றன.       

நைனா தேவி கோவில் யாத்திரை விவகாரத்தை எடுத்துக் கொண்டால், அங்கே கூடிய யாத்ரிகர்களின் கூட்டத்தை இந்திய மக்களின் ‘இயல்பான’ மதம் சார்ந்த குறியீடாகப் பார்ப்பது உண்மையில் தவறான கண்ணோட்டமாகவே இருக்கும். ஏனெனில் ‘மதச்சார்பற்றதாக இருப்பதாகக் கூறப்படுகின்ற இந்திய அரசாலேயே இதுபோன்ற மதம் சார்ந்த ஆர்வம் தீவிரமாக வளர்த்தெடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மத்திய அரசிடமிருந்து ஏழு கோடி ரூபாய் பெரும் தொகையை நைனா தேவி கோவில் அமைந்துள்ள ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் பெற்றது. அந்த மாநில சுற்றுலாத் துறையின் அமைச்சராக இருந்தவர் கோவில் சுற்றுலாவை மிகப் பெரிய அளவில் ஊக்குவிப்பதற்காக போதுமான அளவிற்கு பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டது என்று அப்போது தெரிவித்திருந்தார்.   

அனைத்து வகைகளிலும் பகுத்தறிவை முற்றிலும் மீறுவதாக இருக்கின்ற சக்தி-பீட கோவில்களில் ஒன்றான நைனா தேவியின் புராண கதாபாத்திரங்களில் உறைந்துள்ள  கருத்துகளை முழுமையாக்கி ‘கடவுள்களின் தேசம்’ என்று அந்த மாநிலத்தை விளம்பரப்படுத்துவதற்காக வரி செலுத்துபவர்களின் பணம் அங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று மூடநம்பிக்கைகளைப் பரப்புகின்ற வகையில் அரசு மேற்கொண்டு வருகின்ற செயல்கள் அனைத்தும் குடிமக்களிடையே ‘அறிவியல் மனப்பான்மையை’ ஊக்குவிக்க வேண்டிய அரசியலமைப்பு சார்ந்த அரசின் கடமையை முற்றிலும் கேலி செய்யும் வகையிலேயே அமைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற செயல்களுக்காக நிதி திரட்டுபவர்களாக, விளம்பரதாரர்களாக, மாநிலத்தில் உள்ள புனித யாத்திரை இடங்களுக்கு முன்பதிவு செய்யும் முகவர்களாக அரசின் சம்பளப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அரசு அதிகாரிகளே செயல்பட்டு வருகின்றனர். மதச்சார்பற்று இருக்க வேண்டிய அரசாங்கம்,  யாத்ரீகர்களின் கூட்டத்தைச் சமாளிக்கும் வகையில் தயாராவதற்காகச் செலவழிப்பதைக் காட்டிலும் தன்னுடைய வளங்களை ஹிந்து யாத்திரைகளை ஊக்குவிப்பதற்கே அதிக அளவிலே பயன்படுத்தி வருகிறது.     

இதுபோன்ற நிலைமைகள் இருந்து வருகின்ற போது கோவில்களில் இதுபோன்று மோசமான நெரிசல் ஏற்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைவதற்கு என்ன இருக்கிறது? அமர்நாத்தில் நடந்தது இன்னும் மோசமானது. மாநில ஆளுநராக இருந்த எஸ்.கே.சின்ஹா ஹிந்து யாகங்கள், தரிசனங்களில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தீவிரமாகப் பங்கேற்று  தனது பதவியின் கௌரவத்தையும், அதிகாரத்தையும் வைஷ்ணோ தேவி மற்றும் அமர்நாத்திற்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறார். மிகவும் பிரபலமான அந்த இரண்டு கோவில்கள்/யாத்திரைத் தலங்களுக்கான நிர்வாக அறக்கட்டளையின் பொறுப்பாளர் என்ற பொறுப்பிலே இருந்த அவர் ‘மதம் இல்லை’ என்று கருதுகின்ற அரசின் தலைவராக இருப்பதைக் காட்டிலும் ஹிந்து ஆர்வலர் என்ற முறையிலேயே செயல்பட்டுள்ளார். யாத்ரீகர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவதுடன் நடனம், நாடகம், உணவு, கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட கலாச்சார விழாக்களை ஏற்பாடு செய்வதன் மூலம் புனித யாத்திரையை தீவிரமாக ஊக்குவிக்கும் வகையில் வரி செலுத்துவோரின் பணம் மாநில அரசால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் புவிசார் அரசியல் உணர்வு கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக உருவாகியுள்ள வகுப்புவாத பிளவைக் கண்டு அதிர்ச்சியடைவதற்கு என்ன இருக்கிறது?

அமர்நாத் பனி லிங்க ஆலயத்தில் ஆளுநர் சின்ஹா மனைவியுடன்

கடவுள் மாயைக்குள் சிக்கும் நாடுகள்

சுமார் ஒரு மாதம் இந்தியாவில் இருந்த பிறகு மீண்டும் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தேன். சமீபத்தில் கனெக்டிகட் மிடில் டவுனில் உள்ள ஹிந்து கோவில் ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நேர்ந்தது. அங்கே வைக்கப்பட்டிருந்த ‘மதரீதியான சேவைகள்’ பட்டியலில் மற்ற அறிவிப்புகளுடன் இணைந்திருந்த ஓர் அறிவிப்பு என்னுடைய கவனத்தை அதிகம் ஈர்த்தது. திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளுக்காக வழங்கப்படுகின்ற பூசாரிகளின் சேவைகளுடன் ‘வாகன பூஜை: $31’ என்ற அறிவிப்பையும் அந்தப் பட்டியலுக்குள் என்னால் காண முடிந்தது.    

அது சரி… அது ஏன் இதுபோன்று இருக்கக் கூடாது? கடவுள் என்ற மாயைக்குள் சிக்கியுள்ள நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும்​​ இந்தியர்கள் தாங்கள் போகின்ற இடத்திலும் அவ்வாறே இருந்து வருகிறார்கள்.  

கடவுள் மாயை எங்கும் தொடர்கிறது…

https://www.epw.in/journal/2008/42/commentary/god-delusion-work-my-indian-travel-diary.html

Comments