‘ராக்கெட் பாய்ஸ்’ தொலைக்காட்சித் தொடரைப் பார்த்த என்னால் அணு ஆற்றல் திட்டங்கள் குறித்த வரலாற்றாய்வாளன் என்ற முறையில் சிரிக்க மட்டுமே முடிந்தது
லைவ் வயர் இணைய இதழ்
தேசத்தின் 'அணு தளம்' எவ்வாறு கட்டமைக்கப்பட்டது
என்பதைச் சொல்கின்ற புதிய தொலைக்காட்சித் தொடரான ‘ராக்கெட் பையன்களைப்’ (Rocket Boys) பார்த்து முடித்த போது
அழுவதா அல்லது சிரிப்பதா என்பதே எனக்குத் தெரியவில்லை. எவ்வளவு கண்ணீர் விட்டு
அழுதாலும் கழுவிட முடியாத அளவிற்கு எட்டு பாகங்கள் கொண்ட அந்த தொடரில் குறைகளும்,
விடுதல்களும் நிறைந்து காணப்பட்டதால், சிரிப்பது மட்டுமே ஒரே வழி என்று இறுதியில்
நான் முடிவு செய்து கொண்டேன்.
இந்தியாவின் முதலாவது ஆய்வு உலை தன்னுடைய முழுமையான ஆற்றலை எட்டுவதைத் தடுக்கின்ற வகையில்
இருந்த சில கட்டுப்பாட்டு கம்பிகளை - எரிபொருள் கூறுகளைச் சரிசெய்யும் பணி நீருக்குள்ளே
சென்று மேற்கொள்ளப்பட வேண்டியதாக இருந்தது. அந்தக் குறைபாட்டைச் சரிசெய்வதற்காக நிஜ
வாழ்க்கையில் இந்திய அணுசக்தி ஆணையத்தின் கண்ணியம் நிறைந்த தலைவராக இருந்த,
புகழ்பெற்ற அறிவியலாளர் ஹோமி ஜே.பாபா ஸ்க்ரூடிரைவர் ஒன்றை மட்டும் ஆயுதமாக ஏந்திக்
கொண்டு, தான் அணிந்திருந்த முழுமையான உடையுடன் அப்சரா என்ற அந்த அணுஉலை ‘நீச்சல்
குளத்திற்குள்’ பாய்வதைக் காண்பது மிகவும் வேடிக்கையான தருணமாகவே என்னைப்
பொறுத்தவரை இருந்தது.
அது போன்று நீருக்குள் குதிப்பது அவ்வளவு சிறந்த யோசனையாக
இருக்காது என்பதை ஓர் அறிவியலாளராக பாபா நிச்சயம் நன்றாக அறிந்தே இருந்திருப்பார்.
அப்படியிருக்கும் போது நல்ல கதை ஒன்றைச் சொல்ல வந்தவர்கள் ஏன் இதுபோன்று கதிர்வீச்சு
பாதிப்பை ஏற்படுத்தும் காட்சியை வைத்திருக்க வேண்டும்? ‘பாபா ஏன் இப்படி தான்
அணிந்திருக்கும் முழுமையான உடைகளுடன் அந்தக் குளத்திற்குள் குதிக்கிறார்’ என்ற
கேள்வி அந்தக் காட்சியைப் பார்த்த உடன் எனக்குள்ளே எழுந்தது. பாபா மிக நேர்த்தியாக
உடை அணிந்து கொள்பவர் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனாலும் குறிப்பிட்ட
அந்தக் காட்சியில் பாபாவாக படத்தில் தோன்றுகின்ற நடிகரின் ரசிகர்கள் அவருடைய சிக்ஸ்
பேக் எப்படி இருக்கும் என்பதைக் காணும் வாய்ப்பை நிச்சயமாகத் தவறவிட்டு ஏமாந்து போயிருப்பார்கள்
என்பது உண்மையே.
அந்தத் தொடரில் இந்தக் காட்சி மட்டுமல்லாது வேறு சில
வேடிக்கையான காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. ஒரு காட்சியில் ஆய்வு நிறுவனத்தின்
பிரதான முற்றத்திற்கு பிரித்தானிய கொடையாளர்கள் அழைத்து வரப்படுகின்ற வேளையில்
பாபாவும், விக்ரம் சாராபாயும் (இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் திட்டத்தை
நிறுவியவர்கள்) யூனியன் ஜாக் கொடியைக் கம்பத்திலிருந்து கீழே இறக்கி விட்டு,
அதற்குப் பதிலாக இந்தியக் கொடியை ஏற்றுவதற்காக பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல்
கழகம் அமைந்துள்ளதாகக் கருதப்படுகின்ற கட்டிடத்தின் உச்சிக்கு ஓடுகிறார்கள்.
தேசியம் குறித்து தன்னிடத்தே கொண்டுள்ள பெருமைக்கும்,
காலனித்துவ கொடையாளர்கள் மோசமாக நடந்து கொள்வார்கள் (அவர்கள் அவ்வாறே
செய்கிறார்கள்) என்ற அச்சத்திற்கும் இடையே - தான் அணிந்திருக்கும் தலைப்பாகையால்
எளிதில் அடையாளம் காணப்படுபவராக இருக்கின்ற - இந்திய அறிவியல் கழகத்தின்
இயக்குனரான சி.வி.ராமன் அல்லாடுகிறார். நன்கு கலக்கப்பட்ட (நன்றாகக் குலுக்கி) மார்டினியை
வழங்குவதற்காக பணியாளர்கள் காத்துக் கொண்டிருக்கும் நேர்த்தியான பார் ஒன்று
அமைந்திருக்கும் இடமாக அந்த கட்டிடத்தின் உச்சி இருந்தாலொழிய, கட்டிடத்தின்
உச்சிக்கு பாபா அவ்வாறு ஓடுகிறார் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வகையில்
முற்றிலும் அபத்தமாகவே இருந்தது. சர்வதேச
அணுசக்தி முகமையின் (IAEA) கூட்டங்களில் கலந்துகொள்ளும் போது அங்கிருக்கும்
ஸ்டேட் ஓபராவில் கலந்து கொள்ள முடியும் என்பதற்காக அந்த முகமையின் தலைமையகமாக
வியன்னா இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவராக பாபா இருந்தார் என்பது இங்கே
குறிப்பிடத்தக்கது.
படத்தில் வருகின்ற வினோதமான செட்கள், விளக்குகள், உடைகள்
(குறிப்பாக ஆண்களுக்கானது), வசனங்கள் பற்றியும் அவசியம் குறிப்பிட்டேயாக வேண்டும்.
கேம்பிரிட்ஜை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்துடன் குழப்பிக் கொண்டு இளங்கலைப்
பட்டதாரிகளுக்கு பிளேசர்கள், ஃபிளானல்களை இந்த ராக்கெட் பாய்ஸ் தொடர் அணிவித்துப்
பார்த்திருக்கிறது. அந்தக் காலத்தில் இந்தியாவில் இருந்த மேற்கத்தியப்
பத்திரிகையாளர்கள் கருப்பு உடை அணிந்து கடற்கரைக்கு வருவதாகவும், உள்ளூர்வாசிகள்
1963ஆம் ஆண்டில் மினி-ரெக்கார்டர்களை எடுத்து வருவதாகவும் தயாரிப்பாளர்கள் கற்பனை
செய்திருப்பதும் தொடரின் காட்சிகளிலிருந்து தெரிய வருகிறது. தொலைக்காட்சித்
தொடரின் கதை நடைபெறுகின்ற காலம் குறித்த நம்பகத்தன்மைக்காக
‘பயன்படுத்தப்பட்டிருக்கும் கலைப்பொருட்கள் - கருப்பு நிறத்தில் இல்லாத நேரடி டயல்
தொலைபேசிகள் போன்றவை - செட் வடிவமைத்தவர்களின் ஞானத்தை வகைப்படுத்திக் காட்டும்
வகையிலேயே இடம் பெற்றிருக்கின்றன.
கடந்த காலத்தை பார்வையாளர்களிடம் தூண்டும் வகையில்
மிகவும் இருண்ட, அழுது வடிகின்ற, செபியா நிறம் அதிகம் கொண்ட கலவையான வண்ணங்கள் தொடரில்
தொடர்ந்து வருகின்ற வகையில் வைக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் அதுபோன்ற வண்ணக்
கலவை (வரலாறு என்பது குறைந்த வெளிச்சத்துடன் தொடர்புடையது என்பதை சந்தேகத்திற்கு
இடமின்றி நமக்கு நுட்பமான வழியில் நினைவூட்டுவதாக இருப்பதால்) பார்வையாளர்களுக்கு எரிச்சலூட்டும்
வகையிலேயே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
தொடரில் வருகின்ற உரையாடல்களின் மொழி கதையின்
காலவரிசையுடன் முற்றிலுமாக முரண்பட்டு சமகாலத்தைச் சார்ந்த சொற்களால் நிரம்பி
வடிகிறது. மனமருட்சியை ஏற்படுத்தக்கூடிய போதை மருந்தான எல்எஸ்டியுடன் மிருணாளினி
சாராபாய் ஒப்பிடப்பட்டிருப்பதை என்னால் இன்னும் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
பேராசிரியர், சார் போன்ற மரியாதையைச் சுட்டுகின்ற வார்த்தைகளுக்கு தொடரில் இடம் இல்லாமலிருப்பது,
இந்த தொடரின் மூலம் வெளிப்படுத்திக் காட்ட விரும்பிய சூழலை தயாரிப்பாளர்கள் சரியாகப்
புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
காட்சிகள் நடைபெறுகின்ற இடங்களும் அவ்வாறாகவே
இருக்கின்றன! கடிகார கோபுரங்கள், மேல்வளைவு கொண்ட மூடப்பட்ட நடைபாதைகள், சாசூன்
நூலகம், விக்டோரியா டெர்மினஸ் என்று குறிப்பிட்ட ஒரே வடிவத்திற்குள் தெளிவற்று
மங்கி விடுகின்ற வகையில் ஏற்கனவே மங்கலான வெளிச்சத்துடன் இருக்கின்ற அந்த ஆய்வு
நிறுவனத்தின் கட்டிடங்கள் இருளில் மறைந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் சாராபாய்,
பாபா என்று இருவருமே உண்மையில் சற்றும் தளராத நவீனத்துவவாதிகளாகவே இருந்தனர்
என்பதுதான் இங்கே பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. தாங்கள் உருவாக்கிய ஆய்வு கட்டமைப்புகளுக்குள்
செய்ய வேண்டிய வேலைகளைப் போலவே கட்டிடக்கலையையும் அவர்கள் இருவரும் மிகவும்
தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்தனர். ஒளியில் முழுக்க நனையும் வகையில், எதிர்காலம்
சார்ந்த வியத்தகு கட்டமைப்புகளையே அவர்கள் இருவரும் டாட்டா அடிப்படை அறிவியல்
ஆய்வுக் கழகம் (TIFR), இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (PRL) முதல் இந்திய மேலாண்மைக்
கழகத்தின் (IIM) அகமதாபாத் வளாகம் வரையிலும் உருவாக்கித் தந்துள்ளனர். அந்தக்
கட்டிடங்கள் நவீனத்துவ இந்திய கட்டிடக்கலையின் சின்னங்களாக இன்னும் நிலைத்து
நின்று கொண்டிருக்கும் நிலையில் இந்த தொடரில் அந்தக் கட்டிடங்கள் வருகின்ற காட்சிகளைக்
கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
பொதுவாக இடம் பெற வேண்டிய கலைநயம் வழக்கம் போலத் தவறி
விட்டது என்றே கூற முடியும். நம்பகமற்ற வரலாற்று விவரங்களுக்குள் சிக்கிக்
கொள்ளாமல் நல்லதொரு கதையைச் சொல்ல முயல்வதாகவே இந்த முயற்சி இருக்கிறது. இந்தியா அணுசக்தி
நாடாக எவ்வாறு மாறியது என்பது குறித்த செரென்கோவ்-கதிர்வீச்சு கதையை புதிய
தலைமுறையினருக்கு விவரிக்கின்ற வகையில் வரலாற்று உண்மைகளுடன் சில படைப்புச்
சுதந்திரங்களையும் மேற்கொண்டிருந்தால் உண்மையில் அதுபற்றி யார் கவலைப்பட்டிருக்கப்
போகிறார்கள்… கருத்துகள் மாறுபடலாம்.
ஷியா முஸ்லீம் ஒருவரை ராக்கெட் பாய்ஸ் தொடரின் முதன்மை
வில்லனாக்கியுள்ள முடிவு குறித்த மிகச் சரியான விமர்சனங்கள் ஏற்கனவே
எழுந்திருப்பதைக் காண முடிகிறது. ஒரு கட்டுரையாளர் சுட்டிக் காட்டியவாறு பொழுதுபோக்கு
ஊடகங்களுக்குள் ஹிந்துத்துவாவின் பெரும்பான்மை அரசியல் நுழைவதற்கான தெளிவான
அறிகுறியாக மட்டுமே இதுபோன்ற தேர்வுகள் இருக்கவில்லை. புத்திசாலித்தனமான, காலனித்துவத்திற்கு
எதிரான தேசியவாதி ஒருவராக இந்தத் தொடரில் குண்டாக, கறுப்பாக, மிகவும் மோசமானவராக,
சிஐஏ ஒத்துழைப்பாளராகச் சித்தரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்திற்கான உத்வேகம் நிஜ
வாழ்வில் தலித் வானியல் இயற்பியலாளராக (இன்றைய மொழியில் சொல்வதானால்) இருந்த
மேக்நாத் சாஹாவிடமிருந்தே கிடைத்திருக்க முடியும் என்று சேகர்குப்தா தன்னுடைய
கட்டுரையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
சாதி குறித்து தவிர்த்திருப்பது பெரிய பிரச்சனையின் ஒரு
பக்கத்தைத் தவிர்ப்பதாக மட்டுமே இருக்கிறது. முன்னாள் குடியரசுத் தலைவரும், அயராது
சுய விளம்பரம் தேடிக் கொள்பவருமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மிகச் சரியான மதச்
சிறுபான்மையினராக தான் இருப்பதை நிரூபிக்கின்ற வகையில் சற்றே தோன்றி கெட்ட
முஸ்லீம்-நல்ல முஸ்லீம் என்ற கருத்தை நிலைநாட்டிச் செல்கிறார்.
இந்தத் தொடரை உருவாக்கியவர்கள் மத வேறுபாடுகளுக்கு மாறாக
சாதி மற்றும் சலுகைகளை எதிர்கொள்வது என்று துணிந்தார்களா என்று தெரியவில்லை.
இறக்குமதி செய்யப்பட்ட கம்பிகளை எரிபொருளாகக் கொண்டதாக உள்ள பிரிட்டிஷ்
வடிவமைப்பிலிருந்தே 'ஆசியாவின் முதல் அணு உலை' நகலெடுக்கப்பட்டது, இந்தியாவின்
முதல் ராக்கெட் நாசாவினால் வழங்கப்பட்டது, சோவியத், பிரான்ஸ் உதவியுடனே அதன்
உள்கட்டமைப்பு சாத்தியமானது என்பது போன்ற உண்மைகளை ஒப்புக்கொள்கின்ற நேர்மை ஒருவேளை
இந்த தொடரின் தயாரிப்பாளர்களிடம் இருந்திருக்கும்
என்றால் இந்தக் கதை மிகவும் வித்தியாசமானதாக இருந்திருக்கும். ஆனால் இந்தியாவின்
சிறந்த ஆண் அறிவியலாளர்களைப் பற்றிய கதையைச் சொல்வதற்காக வரலாற்றை மிகவும்
தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களிடமிருந்து அத்தகைய தைரியத்தை
எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்பது தெரியவில்லை.
ராக்கெட் பையன்களைப் பற்றியதாக மட்டுமே உள்ள இந்தக்
கதையில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பெண்களின் கதைகள் பெரும்பாலும் அவர்கள் இல்லாத
நிலையிலேயே சொல்லப்பட்டுள்ளன. அந்தப் பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியாக
கவர்ச்சிகரமானவர்களாக, சீராக உடையணிந்தவர்களாகவே இடம் பெற்றிருக்கின்றனர். இந்தக் கதையில்
அவர்களுடைய முக்கியமான பங்கு தங்களுடைய ஆண்களின் பெருமையில் மூழ்கி விடுவதாக
மட்டுமே இருக்கிறது. இந்த தொடரில் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவில் மட்டுமே தாய்மார்கள்,
மனைவிகள், எஜமானிகள், கள்ளத் துணைவர்கள் என்று பெண்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். பிறரால்
கவனிக்கப்படுவதற்கு, பாராட்டப்படுவதற்கு காத்திருப்பவர்களாக கமலா சௌத்ரி, பிப்சி
(நிஜ வாழ்க்கையில் முக்கியமான பம்பாய் வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த திருமணமான
பெண்ணுடன் பாபாவிற்கு இருந்த நீண்டகால உறவை அடிப்படையாகக் கொண்ட பாத்திரம்) என்று
இரு பெண்களும் யாராலும் கவனிக்கப்பட்டு விட முடியாத வகையில்
சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். பாபா, சாராபாயின் தந்தைவழி உறவுகள் சுவாரசியமான
வழிகளில் கேள்விக்குள்ளாக்கப்படுவதால் இந்த தொடரில் தந்தையர்களும் சரிவரக்
காட்டப்படவில்லை. மசாலா கதை இல்லாமலேயே அற்புதமான நாடகத்தன்மை கொண்ட நிகழ்வுகளை
அடிப்படையாகக் கொண்டவை என்று சொல்லக் கூடிய வகையில் இந்தத் தொடரில் என்னவெல்லாம்
இருந்திருக்கக்கூடும் என்பதற்கான சிறிய குறிப்புகள் ஆங்காங்கே தொடருக்குள் சிதறிக்
கிடக்கின்றன. ஆனால் மெலோடிராமா மிக எளிதாக வரும் போது நாடகம் ஏன் அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கப்
போகிறது?
அணுஉலைக்குள் பாபா மூழ்குகின்ற அந்தக் காட்சிக்குத்
திரும்பினால், ஆற்றல் இன்மையே இந்தத் தொடருக்கான உந்து உருவகமாக இருந்திருக்கிறது.
இந்தியாவின் ஆற்றல் பற்றாக்குறையே உலைகள், வெடிகுண்டுகளை உருவாக்குவதற்கான
வெளிப்படையான காரணமாக இருக்கிறது என்றாலும் அது ஒரு முரண்பாடான துணை உரையையும்
சேர்த்தே வழங்குகிறது. இந்திய அறிவியலாளர்களின் மேம்பாட்டுத் திறன்களுக்கான
வேற்றிட வாதமாக ஆற்றல் இன்மையே இருக்கிறது. இந்தத் தொடரின் திரைக்கதையில் மிகவும்
எளிமையான அறிவியல்பூர்வமற்ற தீர்வுகளே தேசியகுணம் என்ற நிலைக்கு உயர்த்திக்
காட்டப்பட்டுள்ளன.
முன்னோடியான தங்களுடைய பார்வைகளும், அசாதாரணமான
சாதனைகளும் பல்லாண்டுகளுக்குப் பிறகு இப்போது ஸ்க்ரூடிரைவர்கள், ஏவுதளங்களை மேலே
இழுத்து வருகின்ற கயிறுகள் என்ற கொண்டாட்டங்களாக மிகவும் மலிவாக குறைத்து
மதிப்பிடப்படுவதை பாபாவும், சாராபாயும் பார்த்திருந்தால் நிச்சயம் அவர்கள்
இருவரும் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். உலகப் போரின் போது (பெங்களூருவில் அவர்கள்
செய்ததைப் போல்) கழிவுப் பொருள் கிடங்குகளில் அலைவுகாட்டிகளைத் (oscilloscopes) தேடியது
ஒருபுறமிருக்க, மறுபக்கத்தில் மக்கள் தொடர்பு பணியில் ஏற்பட்ட
படுதோல்விகளில் இருந்து வெளியேறுவதற்காக அவர்கள் கண்டறிந்த வழிகளை இந்திய
அணுசக்தி, விண்வெளித் திட்டங்கள் குறித்த மேதைமை என்று குறிப்பிடுவதும் இடம்
பெற்றிருக்கிறது. அவர்களுடைய எதிர்பார்ப்புகள் இந்த அளவிற்கு மோசமாக இருந்திருக்க
வேண்டுமா?
‘பேராசிரியரே! ரொம்ப சீரியஸாகப் பார்க்க வேண்டாம்,
பார்த்து சிரித்து விட்டுப் போங்கள்’ என்று சொல்லும் வகையிலே உள்ளூர் அறிவியல்
புனைகதை என்பதைத் தவிர இந்த ‘ராக்கெட் பையன்கள்’ தொடரில் வேறு எதுவுமில்லை என்பதே
உண்மை.
பேராசிரியர் இட்டி ஆபிரகாம் ‘இந்திய அணுகுண்டு
உருவாக்கம்’
(The Making of the Indian Atomic Bomb) என்ற நூலை எழுதியவர்
Comments