நான் மண்டியிட்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே சிலரிடம் இருக்கிறது : ஓய்வு பெற்ற ராஜஸ்தான் தலைமை நீதிபதி அகில் குரேஷி
வயர் இணைய இதழ்
நாட்டின் மிக மூத்த தலைமை
நீதிபதியாக இருந்த போதிலும் உச்சநீதிமன்ற நீதிபதி பதவி மறுக்கப்பட்ட ராஜஸ்தான்
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான அகில் குரேஷி சாதாரண குடிமக்களின் உரிமைகளைப்
பாதுகாப்பதில் சுதந்திரமான நீதித்துறையின் பங்கு குறித்து கடந்த சனிக்கிழமையன்று
(மார்ச் 05) தனக்கு நடத்தப்பட்ட வழியனுப்பு விழாவில் ஆற்றிய உரையில்
வலியுறுத்தினார். மாற்றுக் கருத்துகளைக் கொண்டிருப்பவர்களைக் குறிவைத்து
தேசத்துரோகச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் அவர் தன்னுடைய உரையில் சுட்டிக்காட்டினார்.
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு
நீதிபதி குரேஷி உச்சநீதிமன்ற நீதிபதியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நீதிபதி
ரோஹிண்டன் நாரிமன் மற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்திற்கும் ஒப்புதல்
அளிக்க மறுத்த போது கொலிஜியத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. அதற்கு
முன்னதாக மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக குரேஷியை
நியமிக்கவும் அரசு மறுத்திருந்தது.
தண்டனைக்குரிய நடவடிக்கைகளாக
பலராலும் பரவலாகக் காணப்பட்ட அவரது பணியிடமாற்றங்கள் பற்றிய குறிப்புகளும் நீதிபதி
குரேஷியின் உரையில் மிகவும் கண்ணியமாக இடம் பெற்றிருந்தன.
’சமீபத்தில் இந்தியாவின் முன்னாள்
தலைமை நீதிபதி ஒருவர் தனது சுயசரிதையை எழுதியிருக்கிறார். அதைப் படிக்கவில்லை
என்றாலும் ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்து சில கருத்துகளை அவர்
வெளியிட்டிருப்பதை நான் அறிந்து கொண்டேன். மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தின்
தலைமை நீதிபதி நியமனத்திற்காக என்னைப் பரிந்துரைத்திருந்ததை மாற்றி திரிபுரா
உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிப்பது குறித்து நீதித்துறைக்
கருத்துகளின் அடிப்படையில் அரசாங்கம் என்னைப் பற்றி சில எதிர்மறையான
கருத்துக்களைக் கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். குடிமக்களின் அடிப்படை
உரிமைகளை, மனித உரிமைகளைப் பாதுகாப்பதே முதன்மைக் கடமையாகக் கொண்டிருக்கின்ற
அரசியலமைப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக அவரது கருத்துகளை என்னுடைய சுதந்திரமான
செயல்பாட்டிற்கான சான்றிதழாகவே நான் கருதுகிறேன்’ என்று முன்னாள் தலைமை நீதிபதி
ரஞ்சன் கோகோயின் சுயசரிதையைப் பற்றி குறிப்பிட்டு நீதிபதி குரேஷி
பேசினார்.
முன்னாள் தலைமை நீதிபதி கோகோய் தலைமையிலான கொலிஜியம் திரிபுரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி குரேஷியை நியமிப்பது என்ற தன்னுடைய ஆரம்பப் பரிந்துரையை மாற்றிக் கொண்டது. கொலிஜியம் எடுத்த அந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி குரேஷி ‘மத்திய அரசுக்குப் பிடிக்காத நீதித்துறை சார்ந்த தன்னுடைய கருத்துக்கள் குறித்த ‘நீதித்துறையின் கருத்து’ பற்றி ‘அதிகாரப்பூர்வமாக’ தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்பதே தன்னைப் பொறுத்தவரை ‘மிகவும் முக்கியத்துவம்’ வாய்ந்ததாக இருந்தது’ என்று கூறினார்.
‘அகில்’ தொடங்கி ‘நீதிபதி குரேஷி’ வரையிலான தனது பயணம் குறித்து பேசிய போது இந்திராகாந்தியின் நெருக்கடி நிலை காலத்தின் போது பள்ளி மாணவனாக இருந்த தான் கண்ட சம்பவத்தை அவர் பின்வருமாறு விவரித்தார்:
‘குஜராத் உயர்நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர் கூடியிருந்தனர். காவல்துறையின் பலத்த பாதுகாப்பு அங்கே போடப்பட்டிருந்தது. காவல்துறையினர் அங்கிருந்த கூட்டத்தின் மீது தடியடி நடத்தி விரட்டியடித்து ஒருவரைக் கைது செய்து வேனில் ஏற்றிய போது அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது. இன்னும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் அந்த நிகழ்வுகளை மூச்சுத் திணறப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நிகழ்வு 1974ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது விலைவாசி உயர்வு, அரசாங்கத்தில் நடைபெறுகின்ற ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக நவநிர்மாண் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தது. செயல்பாட்டாளர்களுக்கு எதிராக உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (மிசா) கீழ் தடுப்புக்காவல் உத்தரவுகளை நிறைவேற்றுவதன் மூலம் நிர்வாகம் பதிலடி கொடுத்தது. தங்களிடம் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தவர்களை அமைதிப்படுத்துவதற்கு தேசத்துரோகச் சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்பதை அன்றைய ஆட்சியாளர்கள் கண்டறியாமலே இருந்தனர்.
செயல்பாட்டாளர்கள் தலைமறைவாகினர்.
அவர்களில் ஒருவரான ஸ்ரீகிரிஷ்பாய் படேல் வெளியில் வந்து தடுப்புக்காவல் உத்தரவுகளை
எதிர்த்து ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். விரைவிலேயே
அவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து அகற்றப்படுவதற்கு முன்பாக காவல்துறையின்
வேனுக்குள் இருந்தவறு சுருக்கமான உரை ஒன்றை அவர் நிகழ்த்தினார். அரசு
இயந்திரத்தின் ஆதரவுடன் நடைபெறுகின்ற சர்வாதிகார ஆட்சியின் வலிமைக்கு சவால்
விடுவதாக அவரது பேச்சு அமைந்திருந்தது. ஊழல் நிறைந்த அரசியல் வர்க்கத்தின்
அட்டூழியங்களுக்கு அடிபணிய வேண்டாம் என்று மக்களைத் தூண்டுகின்ற வகையில் இருந்த
அவரது வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அவை
மிகவும் சுவாரசியமான நாட்களாக இருந்தன. நேர்மையான தீர்ப்பிற்காக சமூகம்
நடத்துகின்ற போராட்டத்தைப் பார்த்த அதே வேளையில் அந்த செயல்முறைகளுக்கு உதவுகின்ற
வகையில் நீதிமன்றங்களிடம் இருந்த மகத்தான அதிகாரத்தையும் நான் கண்டேன். அந்த
தருணமே சட்டத்தின் மீதான எனது ஆர்வத்தை தூண்டி விட்டது’
2010ஆம் ஆண்டு குஜராத்
உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது, சொராபுதீன் போலி என்கவுன்டர்
வழக்கில் அப்போதைய மாநில உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷாவை சிபிஐ காவலில்
எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட போது நீதிபதி குரேஷி முதன்முதலாக
அனைவரது கவனத்திற்கும் வந்தார். பின்னர் லோக்ஆயுக்தா நியமன வழக்கில் நரேந்திர மோடி
தலைமையிலான குஜராத் அரசுக்கு எதிராக அவர் தீர்ப்பளித்தார். 2002ஆம் ஆண்டு
வகுப்புவாத கலவரத்தின் போது நடைபெற்ற நரோடா பாட்டியா படுகொலை தொடர்பான வழக்கில்
குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி செய்த மேல்முறையீட்டில் அவரைத் திரும்பப்
பெற வேண்டும் என்று மாநில அரசு கோரியிருந்தது.
அரசுக்கு எதிராக நீதிபதி குரேஷி வழங்கிய
பாதகமான தீர்ப்புகள் கறை எதுவுமற்ற அவரது நீதித்துறை வாழ்க்கை மீது அதிகம் பாதிப்புகளை
ஏற்படுத்தின. 2018ஆம் ஆண்டில் குஜராத் உயர்நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை
நீதிபதி பதவியை ஏற்கவிருந்த சமயத்தில் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் இருந்த அதைவிடக்
குறைவான பதவிக்கு நீதிபதி குரேஷி மாற்றப்பட்டார். குஜராத் உயர் நீதிமன்ற
வழக்கறிஞர்கள் சங்கம் அந்த இடமாற்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2018ஆம்
ஆண்டு ஒருமனதாகத் தீர்மானம் ஒன்ற நிறைவேற்றியது என்று லைவ் லா இணையதளம்
செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிபதி குரேஷியை மத்தியப் பிரதேச
உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்துவதற்கான பரிந்துரையை 2019 மே மாதம்
கொலிஜியம் வழங்கிய போது, தன்னுடைய ஆட்சேபணையைத் தெரிவித்த ஒன்றிய
அரசு கொலிஜியம் செய்திருந்த மற்ற மூன்று பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கத்
தவறவில்லை. அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்த கொலிஜியம் இறுதியில் குரேஷியை
திரிபுரா உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக அனுப்புவது என்று தன்னுடைய
பரிந்துரையை மாற்றிக் கொண்டது.
பிரியாவிடை
பேச்சு
‘இந்தியாவில் இதுவரை
நாற்பத்தியெட்டு தலைமை நீதிபதிகள் இருந்துள்ளனர். ஆனால் குடிமக்களின் உரிமைகளை
நிலைநிறுத்துவதற்கான தைரியம், தியாகம் குறித்து பேசுகின்ற வேளையில், நாம் எப்போதும் இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்திருக்க வேண்டிய ஒருவரையே
நினைவுகூருகிறோம். ஜபல்பூர் மாவட்ட கூடுதல் நீதிபதி வழக்கில் தன்னுடைய தனித்த
எதிர்ப்புக் குரலுக்காக நீதிபதி எச்.ஆர்.கன்னா எப்போதும் நினைவு கூரப்படுகிறார்’
என்று நீதிபதி குரேஷி கூறினார். இந்திராகாந்தி அரசாங்கத்தால் தலைமை நீதிபதியாகப்
பதவி உயர்வு மறுக்கப்பட்ட நீதிபதி எச்.ஆர்.கன்னாவைப் பற்றியே அவர் குறிப்பிட்டுப்
பேசினார்.
‘குடிமக்களின் உரிமைகளைப்
பாதுகாப்பதுவே நீதிமன்றங்கள் இருப்பதற்கான ஒரே காரணமாகும். எந்தவொரு நேரடி
அவமதிப்புகளைக் காட்டிலும், குடிமக்களின் ஜனநாயக விழுமியங்கள், உரிமைகள் மீது
கள்ளத்தனமாக நடத்தப்படுகின்ற அத்துமீறல்களே நம்மைக் கவலையடையச் செய்ய வேண்டும்’
என்று அவர் கூறினார்.
மேலும் அவர் உயர்நீதிமன்ற
கொலீஜியத்தின் பரிந்துரைகளை நிராகரித்து வருவதாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் போக்கு அதிகரித்து
வருவது குறித்து உயர்நீதிமன்றங்களில் எழும் கவலைகள் குறித்தும் பேசினார். ‘உயர்நீதிமன்றங்களால் பரிந்துரைக்கப்படுகின்ற
வழக்கறிஞர்கள் பட்டியல் உச்சநீதிமன்றத்தால் மோசமாக சீரமைக்கப்படுவதைப் பார்ப்பது ஆச்சரியம்
அளிப்பதாக இருக்கிறது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே
உள்ள கருத்து வேறுபாட்டிற்கான காரணம் எதுவாக இருந்தாலும் அது சரி செய்யப்பட
வேண்டும். இல்லையேல் மிகச் சிறந்த வழக்கறிஞர்களை நீதிமன்ற அமர்வில் சேர
வற்புறுத்துவது மிகவும் கடினமாகி விடும்’ என்று அன்றைய தினம் நீதிபதி குரேஷி ஆற்றிய
உணர்ச்சிபூர்வமான பிரியாவிடை பேச்சு அவரது சட்டத்துறை சகாக்களின் பாராட்டைப்
பெறுவதாக அமைந்திருந்தது.
‘அதில் எனக்கு ஏதாவது வருத்தம்
உண்டா என்று கேட்டால் அவ்வாறு எதுவும் இல்லை என்றே கூறுவேன். நான் எடுத்த ஒவ்வொரு
முடிவுகளும் என்னுடைய சட்டப்பூர்வ புரிதலின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. நான்
தவறு செய்திருக்கலாம். பல சந்தர்ப்பங்களில் நான் தவறிழைத்திருப்பதாக நிரூபித்திருக்கிறார்கள்.
ஆனால் ஒருமுறை கூட என்னிடமுள்ள சட்டப்பூர்வமான நம்பிக்கைக்கு மாறான முடிவுகளை நான்
எடுத்ததே இல்லை. தீர்ப்புகள் ஏற்படுத்தப் போகின்ற பின்விளைவுகளின் அடிப்படையில்
எந்தவொரு முடிவையும் எடுத்ததில்லை என்ற பெருமையுடன் நான் விடைபெறுகின்றேன்.
என்னுடைய தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக அவர்களிடம் நான் மண்டியிட்டிருக்க வேண்டும்
என்ற நம்பிக்கையே சிலரிடம் இருக்கிறது. ஆனால் முன்னேற்றம் என்று நீங்கள் எதைக்
கருதுகிறீர்கள் என்பதைப் பொறுத்ததாகவே அது
இருக்கிறது. நான் எங்கே சென்றாலும் வழக்கறிஞர்கள், சக ஊழியர்களிடமிருந்து எனக்குக்
கிடைத்த ஆதரவு, அன்பு, பாசம் போன்றவையே கண்ணுக்குப் புலனாகின்ற எந்தவொரு
முன்னேற்றத்தைக் காட்டிலும் சிறந்தவையாக உள்ளன. இதை வேறு எந்தவொரு
முன்னேற்றத்திற்காகவும் நிச்சயம் நான் மாற்றிக் கொள்ளவே மாட்டேன். வேறு எதையும்
பெறுவதற்காக இவற்றை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்றார்.
குரேஷி மேலும் ‘நீங்கள் அனைவரும்
என் மீது வைத்திருக்கும் பாசம் மற்றும் முன்னேற்றம் என்று சொல்லப்படுவதற்கு இடையே ஒன்றை
நான் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைமை வந்தால் மிகவும் மகிழ்ச்சியுடன்
உங்கள் பாசத்தையே நான் தேர்ந்தெடுத்துக் கொள்வேன்... வாழ்க்கை பின்னோக்கிச்
சுழன்று பழையவற்றை மீண்டும் பார்க்க அனுமதிக்கும் என்றால் - அதே குடும்பத்தினர்,
நண்பர்கள் மற்றும் எனக்கு அதே நீதிபதி பதவி மீண்டும் வழங்கப்படுமானால், மீண்டும் மீண்டும்
அதையே நான் ஏற்றுக்கொள்வேன்’ என்று கூறினார்.
நீதிபதி குரேஷியின் புகழ்பெற்ற
நீதித்துறை வாழ்க்கை குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்ட
2004ஆம் ஆண்டில் தொடங்கியது. பின்னர் இறுதியாக 2021 அக்டோபரில் ராஜஸ்தான்
உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்படுவதற்கு முன்பாக
கிட்டத்தட்ட இருபதாண்டுகள் தன்னுடைய நீதித்துறை வாழ்க்கையில் அவர் பல்வேறு
பொறுப்புகளில் இருந்தார்.
Comments