நள்ளிரவுப் படுகொலை : தீன்தயாள் உபாத்யாயாவின் மரணம் குறித்து மௌனம் காக்கும் காவிகள்

 ராமன்

வயர் இணைய இதழ்


2017 ஆகஸ்ட் 21

தீன்தயாள் உபாத்யாயா (25.09.2016- 11.02.1968)

பாரதிய ஜனசங்கத்தின் தலைவராக இருந்த தீன்தயாள் உபாத்யாயாவின் பெயர் அண்மையில் குறைந்தபட்சம் பதினாறு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு சூட்டப்பட்டிருக்கிறது. அவரது நினைவைப் போற்றுகின்ற வகையில் உள்ளூர்ச்சாலைகள், குடியிருப்புகள் என்று ஏராளமான இடங்களுக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டு வருகிறது. அவரது பெயரால் பத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று அசாம் மாநில அரசாங்கம் அண்மையில் அறிவித்திருக்கிறது. மோடி அரசாங்கத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள மூன்று பொதுநலத் திட்டங்கள் DDU என்ற பெயரைத் தாங்கியுள்ளன. இந்த நீண்ட வரிசையில் இப்போது முகல்சராய் ரயில் நிலையத்திற்கு தீன்தயாள் உபாத்யாயாவின் பெயரை வைப்பதற்கான மத்திய அமைச்சரவையின் முடிவும் அத்துடன் சேர்ந்து கொண்டுள்ள போதிலும் அந்த முடிவு சில எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துவதாக, பழைய பூதங்களைத் தட்டி எழுப்புவதற்கான காரணமாகியுள்ளது. 

உபாத்யாயாவிற்கு முகல்சராய் ரயில் நிலையத்துடன் என்ன தொடர்பு இருக்கின்றது? அந்த ரயில் நிலையத்திற்கு அவரது பெயரை வைக்கும் அளவிற்கு அவர் என்ன தியாகம் செய்துள்ளார்? அந்த ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 1968ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று உயிரிழந்து போன அந்தக் காவி மனிதர் குறித்து இன்று வரையிலும் ஆளும் கட்சியும், அரசாங்கமும் மௌனம் சாதித்தே வந்திருக்கின்றன. படுகொலை என்று நம்பப்படுகின்ற அந்த மரணம் பற்றி எழுந்துள்ள சச்சரவுகள் குறித்து ஆளும் கட்சி மிகவும் அடக்கி வாசிப்பதாகவே தோன்றுகிறது.

அவரது நூற்றாண்டு பிறந்த நாள் குறித்து பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டிருக்கும் துண்டறிக்கைகள், விளம்பரங்கள் ஆகியவற்றில் அவர் எந்த வகையிலே தியாகியானார் என்பது பற்றிய குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. லக்னோவில் இருந்து பாட்னா செல்லுகின்ற ரயிலில்  பயணித்த உபாத்யாயாவால் அவரது மரணம் நடந்த அன்றைய தினம் தன்னுடைய ஆதரவாளர்கள் மாலைகளுடன் காத்துக்கொண்டு நின்ற இடத்திற்குச் சென்று சேர முடியவில்லை. மாறாக முகல் சராய் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் இருந்து இரண்டு அடி தூரம் தள்ளி அவரது உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. அவரிடம் ஐந்து ரூபாய் இருந்தது - 1970களின் பெட்ரோல் விலை உயர்விற்கு முன்பாக அது உண்மையில் மிகப் பெரிய தொகையாகும்.    

‘முழுமையான மனிதநேய ஆதரவாளர்’ என்று கூறப்படுகின்ற அவரை மிகக் குறைந்த ஐம்பத்தியொரு வயதிலேயே கொலை செய்தவர் யார்? அவரது மரணத்திற்கு ஜனசங்கத்தில் நிலவி வந்த உட்கட்சி பிரச்சனைகளுடன் ஏதேனும் தொடர்பு இருந்ததா? யாராலும் கவனிக்கப்படாமலேயே 1960களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிவந்த அந்த ரயில் நிலையத் தண்டவாளங்களுக்கு அருகே அவருடைய உடல் ஏன் பல மணி நேரமாக கிடத்தி வைக்கப்பட்டிருந்தது?

காவிகளால் விரும்பப்படாத உண்மைகளை அம்பலப்படுத்துவதற்கு மிகவும் புதிரான தயக்கம் அப்போது நிலவி வந்தது. பின்னர் அந்த கொலை குறித்த விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. பாரதிய ஜனசங்கத் தலைவர் ரயிலில் திருட்டில் ஈடுபடுபவர்களாலேயே கொலை செய்யப்பட்டார் என்ற கருத்தே சிபிஐ மற்றும் உள்ளூர்க் காவல் அதிகாரிகளிடம் இருந்து வந்தது. சிபிஐயால் அவ்வாறாக குற்றம் சாட்டப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டிருந்த போதும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் இருவருமே நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு வெளிவந்தனர். அந்த வழக்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் உரிய சிரத்தையுடன் எடுக்கப்படவில்லை என்பது மிகவும் தெளிவாகத் தெரிந்தது. அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த காங்கிரஸ் அல்லது ஜனசங்கத் தலைவர்கள் என்று யாருமே அந்த விசாரணை முறையாகத் தொடர வேண்டும் என்ற கோரிக்கை மீது அழுத்தம் தந்திருக்கவில்லை.      

பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த வேளையில் அப்போதைய உள்துறை அமைச்சரான சரண்சிங்கிடம் அந்தக் கொலை குறித்து மீண்டும் புதிதாக விசாரணை துவக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சுப்பிரமணியம் சுவாமி முன்வைத்தார். அப்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கும் அதே கதியே ஏற்பட்டது. விசாரணைக் குழுவிடம் காவிகளின் சார்பில் ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்காக அதிகாரம் அளிக்கப்பட்டிருந்த அடல் பிகாரி வாஜ்பாயி செய்த சூழ்ச்சிகளே அதற்குக் காரணம் என்று கட்சியில் உள்ளவர்களோடு கருத்து வேறுபாடு கொண்டிருந்த பாரதிய ஜனசங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்த பால்ராஜ் மதோக் கூறினார். அந்த காலகட்டம் பாரதிய ஜனசங்கம் ஜனதா கட்சியாக ஐக்கியமாகி, பின்னர் 1980இல் பாரதிய ஜனதா கட்சியாக உருவாகவிருந்த நேரமாகும்.     

உபாத்யாயா கொலை வழக்கில் மேலும் ஒரு பயங்கரமான திருப்பம் ஏற்பட்டது.  லக்னோவில் குற்றவியல் வழக்குகள் தொடர்பாக எழுதி வந்த பத்திரிக்கையாளர்கள் பலரும் கொலை குறித்த விசாரணை சரிவர நடத்தப்படவில்லை என்றே கூறி வந்தார்கள். பாரதிய ஜனசங்கத்தின் அதிகாரமிக்க தலைவராக இருந்து வந்த உபாத்யாயா கட்சியில் எந்தவிதமான முக்கியமான பதவிகளையும் வாஜ்பாயி போன்ற போட்டியாளர்களுக்கு அளிக்க மறுத்து வந்தார். அன்றைய தினம் ஷாகாவைச் சேர்ந்தவர்கள் அந்த ரயிலில் இருந்தனர் என்று பேச்சும் அந்தப் பத்திரிகையாளர்களிடம் இருந்து வந்தது. ஆயினும் அப்போதிருந்த பத்திரிகைகள் அதிகாரப்பூர்வமான தகவல்களைத் தவிர வேறெதையும் வெளியிடுவதற்கு தயக்கத்துடனே இருந்து வந்தன.

உபாத்யாயாவோடு அந்தப் பெட்டியில் பயணித்த அனைவரும் தவறான முகவரிகளை, அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி இருந்தனர் என்று  சுப்பிரமணியம் சுவாமி எழுத்துப்பூர்வமாகக் குற்றம் சாட்டியிருந்தார். அவர் அரசியல் நோக்கம் கொண்ட அரசியல் படுகொலை என்று அதனை  விவரித்ததுடன் நானாஜி தேஷ்முக், தத்தோபந்த் தெங்டி ஆகியோர் ஒருபோதும் விசாரணைக் குழுவின் அறிக்கையை, நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளவே இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.    

அந்த நள்ளிரவுப் படுகொலை மற்றுமொரு கோணத்திலும் விவரிக்கப்பட்டது. ரயிலில் அந்தப் பெட்டியின் வாசலுக்கருகே நின்று கொண்டு பயணம் செய்த உபாத்யாயா கீழே தள்ளி விடப்பட்டதாகவும் அப்போது கூறப்பட்டது. ஆனால் ‘அந்த நேரத்தில் அவர் ஏன் கதவுக்கருகே சென்று நிற்கப் போகிறார்? கீழே தள்ளி விடப்படுவதற்காகவா? என்ற கேள்வியை எழுப்பிய பாரதிய ஜனசங்கத்தின் மூன்று முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த தேஷ்முக் அந்தக் கருத்தை முற்றிலுமாக மறுதலித்தார்.   

சில ஆண்டுகள் கழித்து 1980களில் தேஷ்முக் சங்பரிவாரத்தில் அரசியல் இருக்கிறது என்று குறை கூறி தனது இருப்பிடத்தை சித்ரகுட் என்ற இடத்திற்கு மாற்றிக் கொண்டார். தான் நடத்தி வந்த அரசு சாரா நிறுவனம் ஒன்றின் மூலமாக அவர் அங்கே சமூக சேவை செய்து வந்தார். அன்றாடத் தூக்கம் குறித்து மிகவும் ஒழுங்கான பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்த உபாத்யாயா காலையில் மிகவும் சீக்கிரத்திலேயே எழுந்து விடுவார் என்று தேஷ்முக் கூறினார்.    

ரயிலில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டது, அரசியல் படுகொலை போன்ற கருத்துகளை கட்சியில் உபாத்யாயாவிற்கு எதிரான குழுவில் தேஷ்முக்குடன் இருந்த வாஜ்பாயியும் நம்பாதவராகவே இருந்து வந்தார். உபாத்யாயாவிடமிருந்த இயல்பான உணர்வுகளே அவரது சோக முடிவிற்குக் காரணமாக இருந்ததாக 1960களில் ஜனசங்கத்தின் எழுச்சி நாயகனாக இருந்து வந்த பால்ராஜ் மதோக் கூறினார். மதோக் தனது சுயசரிதையில் ‘மிகவும் மூர்க்கமான மனிதராக இருந்து வந்த தீன்தயாள் ஒருவேளை ரயிலில் இருந்த எவருடனாவது சண்டையிழுத்திருக்கலாம்’ என்று தன்னிடம் வாஜ்பாயி கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.       

தீன்தயாள் உபாத்யாயா உடன் வாஜ்பாயி

அடல் - நானாஜி குழுவிற்கு எதிரானவராக இருந்து வந்த மதோக் அவர்களால் தனிமைப்படுத்தப்பட்டு 1973ஆம் ஆண்டு ஜனசங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த ஆண்டு (2016) அவர் மரணமடைந்தார். தனது போட்டியாளர்கள் இடதுசாரித் தன்மையோடு பாரதிய ஜனசங்கத்தைச் செயல்பட வைத்தது, ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னுடைய அரசியல் அமைப்பின் மீது செலுத்தி வந்த அளவிற்கு மீறிய ஆதிக்கம் போன்ற காரணங்களையே தனது பிரிவிற்கான அரசியல் காரணமாக மதோக் கூறியிருந்தார். ஆத்திரமடைந்திருந்த மதோக் அடல் - நானாஜி குழுவினர் மேற்கொண்ட சூழ்ச்சிகள் பற்றி தொடர்ந்து எழுதி வந்தார். அதுபோன்ற கருத்துக்களே 1973க்குப் பிறகு அவர் எழுதியவை, கூட்டங்களில் பேசியவை என்று அனைத்திலும் இருந்தன. அவரது கருத்துக்கள் உபாத்யாயா படுகொலை பற்றி முக்கியத்துவம் தரத் தேவையில்லாத வகையிலேயே இருந்தன என்ற போதிலும், அந்தக் காலகட்டத்தில் சங்பரிவாரில் முக்கியமான நபராக இருந்த ஒருவர் கூறியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே வேண்டியிருக்கிறது. அடல் - நானாஜி இருவரும் தொடர்ந்து உபாத்யாயாவின் மரணம் குறித்த விசாரணைகளில் எவ்வாறெல்லாம் இடையூறு செய்து வந்தனர் என்பதை மதோக் அடிக்கடி கூறி வந்திருக்கிறார்.      

வாஜ்பாயி உடன் பால்ராஜ் மதோக்

‘ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. தீன்தயாளின் படுகொலையில் கம்யூனிஸ்டுகள் அல்லது திருடர்கள் யாரும் ஈடுபடவில்லை. கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலைகாரன் ஒருவனாலேயே அவர் கொல்லப்பட்டார். அந்தப் படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய சதிகாரர்கள் சங்கத்தில் (ஆர்எஸ்எஸ்), ஜனசங்கத்தில் இருந்த தன்னலம் மிக்க, குற்றம் புரியும் சிந்தனை கொண்ட தலைவர்களே ஆவர்’ என்று கூறி வந்த மதோக் அவ்வாறான குற்றச் சிந்தனை கொண்ட தலைவர்கள் யார் என்ற கேள்வியை தனது சுயசரிதையில் எழுப்பி அதனை பின்வருமாறு விளக்கியும் இருக்கிறார்: ‘தீன்தயாள்ஜி பாரதிய ஜனசங்கத்தில் உயர்பதவிக்கு தவறான நபர்கள் வந்து விடாமல் தடுப்பதை உறுதிப்படுத்துகின்ற வகையிலே போராடி வந்தார்.  அந்தக் காரணத்தாலேயே தன்னலம் மிக்க அந்த தலைவர்கள் தீன்தயாள்ஜி தங்களுடைய அரசியல் பாதையில் தடைக்கல்லாக இருப்பதாகக் கருதினர். பல்வேறு இடங்களில் இருந்து கிடைக்கின்ற தகவல்கள் தீன்தயாள்ஜியின் கொலைக்குக் காரணமானவர்கள் என்று அந்த தலைவர்களை நோக்கியே விரலை நீட்டுகின்றன’.     

இருநூறு பேரணிகள் உள்ளிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் உபாத்யாயாவைப் பற்றிய மிகப் பெரிய பிம்பத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கும் பாஜக, உண்மைகளை வெளிக் கொணரும் வகையில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வைக்கப்படும் கோரிக்கைகளை மட்டும் தொடர்ந்து நிராகரித்தே வருகிறது. சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையை சுப்பிரமணியம் சுவாமி மீண்டுமொரு முறை 2015 மே மாதம் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியிருந்தார். உபாத்யாயா பெயரிலே நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்ற உபாத்யாயாவின் சகோதரனின் மகளான மது சர்மாவும் கொலை குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை 2014 செப்டம்பரில் முன்வைத்திருந்தார். இருந்தாலும் அரசு தரப்பில் பலத்த மௌனமே பதிலாகத் தொடர்கிறது.   

https://thewire.in/169417/bjp-renaming-spree-deen-dayal-upadhyaya/

Comments