காஞ்சா அய்லய்யா உடன் உரையாடல்
யோகிந்தர் சிக்கந்த்
அவுட்லுக் இதழ்
ஹிந்துத்துவா என்ற போர்வையில் அணிவகுத்து வருகின்ற பிராமண
பாசிசத்தின் அச்சுறுத்தலைத் திறம்பட எதிர்கொள்ள 'தலித்மயமாதல்' மட்டுமே உதவும் என்ற
தன்னுடைய பார்வை குறித்து ‘நான் ஏன் ஹிந்து அல்ல’ என்ற நூலின் ஆசிரியர் காஞ்சா
அய்லய்யா இந்த உரையாடலில் விளக்குகிறார்.
காஞ்சா அய்லய்யா ஹைதராபாத், கோட்டியில் உள்ள அரசு மகளிர்
கல்லூரியில் அரசியல் பாடம் கற்பித்து வருகிறார். தலித்-பகுஜன் (பட்டியலிடப்பட்ட
மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதி) இயக்கச் செயல்பாடுகளில் இயங்கி வருகின்ற அவர்
தெலுங்கு, ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளிலும் சிறந்த எழுத்தாளராக இருக்கின்றார்.
தலித்-பகுஜன் கண்ணோட்டத்தில் ஹிந்துத்துவா மீதான விமர்சனத்தை முன்வைக்கின்ற
அவருடைய ‘நான் ஏன் ஹிந்து அல்ல’ என்ற புத்தகம் அதிக அளவில் விற்பனையானது. ஹிந்துத்துவா
என்ற போர்வையில் அணிவகுத்து வருகின்ற பிராமண பாசிசத்தின் அச்சுறுத்தலை திறம்பட
எதிர்கொள்ள 'தலித்மயமாதல்' மட்டுமே உதவும் என்ற கருத்தை யோகிந்தர் சிக்கந்திடம்
உரையாடிய வேளையில் காஞ்சா அய்லய்யா முன்வைத்தார்.
யோகிந்தர் சிக்கந்த்: உங்கள் பின்னணி பற்றி கூறுங்களேன். தலித்-பகுஜன் இயக்கத்தில் உங்களுக்கு எவ்வாறு
ஈடுபாடு வந்தது?
காஞ்சா அய்லய்யா: ஆந்திர மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில்
அமைந்திருக்கும் கிராமத்தில் நான் பிறந்தேன். அந்தப் பகுதி முழுவதையும் ஹைதராபாத்
நிஜாம் உள்ளூர் நிலவுடைமையாளரான மஹ்பூப் ரெட்டிக்கு மானியமாகக் கொடுத்திருந்தார்.
எனது குடும்பம் ஆடு மேய்க்கும் குருமா கொல்லா இனத்தைச் சேர்ந்தது. அவர்கள் வாராங்கலில்
இருந்து அந்த வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்திருந்தனர். அந்தக் கிராமத்தை உருவாக்கிய
என்னுடைய பாட்டி இறந்த பிறகு எங்கள் சாதியின் தலைமைப் பொறுப்பை என் அம்மா ஏற்றுக்
கொண்டிருந்தார். 1948ஆம் ஆண்டு காவல்துறை நடவடிக்கை நடைபெற்று மூன்று
ஆண்டுகளுக்குப் பிறகு நான் பிறந்தேன். அப்போது எங்கள் பகுதியில் கம்யூனிஸ்டுகள்
மிகவும் தீவிரமாக இயங்கி வந்தனர். தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் போது அவர்கள் எங்கள்
கிராமத்தில் இரண்டு பேரைக் கொன்றார்கள். அந்த இருவரும் கிராமப் பட்டேல்கள். மஹ்பூப்
ரெட்டி அந்தப் போராட்டத்தின் காரணமாக தன்னுடைய நிலங்களை விற்கத் தொடங்கினார்,
அதுவரை நிலமே இல்லாமல் இருந்து வந்த எங்கள் சாதி மக்கள் சிறிய அளவிலான மனைகளை
வாங்கத் தொடங்கினர். ஆக அந்தக் காலகட்டம் நிலப்பிரபுத்துவ அமைப்பு சிதையத்
தொடங்கிய காலமாக இருந்தது. பின்னாட்களில் எனக்கு பள்ளியில் மார்க்சியவாதிகளுடனும்,
மார்க்சிய இலக்கியங்களோடும் தொடர்பு ஏற்பட்டு மாணவர் இயக்கத்தில் ஈடுபட்டேன்.
நீதிக்கான போராட்டங்களில் நான் ஈடுபட அதுவே காரணமானது.
உங்கள் சிந்தனை, அரசியல் மீது பெரும்
செல்வாக்கைச் செலுத்தியது எது அல்லது யார்?
நான் பிறந்த அந்தக் கிராமம்தான் என்னுடைய வாழ்க்கையில்
மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியது. சிறுவயதிலே ஆடுகளை வளர்ப்பது, நிலத்தை
உழுவது, கயிறுகளைத் திரிப்பது எவ்வாறு என்பதை என்னுடைய கிராமத்திலேயே நான் கற்றுக்
கொண்டேன். குருமாக்கள், காபுக்கள், கவுடாக்கள், மதிகாக்கள் என்று எங்கள் கிராமத்தில்
பல்வேறு சாதியினரிடையே இருந்த தொடர்புகளும், முரண்பாடுகளும் எனக்கு ஏராளமாகக்
கற்றுக் கொடுத்திருந்தன. எனது சிந்தனை, எழுத்துகள் அனைத்திற்கும் மையமாக சாதியின்
இயக்கவியல் குறித்து அந்தக் கிராமத்திலிருந்து எனக்குக் கிடைத்த தனிப்பட்ட
அறிவுதான் காரணமாக அமைந்தது.
என் அம்மாவும் என்னுடைய சிந்தனை மீது பெருத்த செல்வாக்கைக்
கொண்டவராக இருந்தார். மிகவும் வலிமையான பெண்ணாக, எங்கள் சாதியின் தலைவியாக அவர் இருந்தார்.
தலித்-பகுஜன்களைப் பொறுத்தவரை பெண்களுக்கு அவர்களுடைய குடும்பத்திலும், சாதியிலும்
மிக முக்கியமான பங்கு இருக்கும். பெண்கள் வயல்களுக்குள் இறங்கி வேலை செய்யாத,
தங்களுக்கான விதிமுறைகள் குறித்து தங்களுக்கு கட்டளையிடுவதாக பிராமண நூல்கள் என்ற வெளிப்புற
நிறுவனத்தை நம்பியிருக்கின்ற ஹிந்துக்களைப் [பிராமணர்கள், சத்திரியர்கள்,
பனியாக்கள்] போல அல்லாமல் உற்பத்திச் செயல்முறையுடன் தொடர்பு கொண்டிருப்பது, இயற்கையுடன்
போராடுவது என்றே தலித்-பகுஜன்கள் தங்களுக்கான
தார்மீக நெறிமுறைகளை அமைத்துக் கொள்கிறார்கள். கால்நடைகளைக் காட்டில் மேய்க்க
விடாமல் குருமாக்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்த வனக்காவலர்களுக்கு எதிரான போராட்டத்தில் என்
அம்மாவே முன்னணியில் இருந்தார்.
உண்மையில் அதுபோன்றதொரு மோதலில் காவலர்களின்
மிருகத்தனத்தை எதிர்த்துப் போராடிய வேளையில்தான் காவல்துறையைச் சார்ந்த ஒருவரால் என்னுடைய
அம்மா கடுமையாகத் தாக்கப்பட்டு இறந்து போனார். அப்போது அவருக்கு நாற்பத்தியாறு
வயதுதான். என் அம்மாவைப் பற்றி ‘அம்மாவின் முயற்சிகளும் அவரது போராட்டமும்’ என்ற
தலைப்பிலே தெலுங்கில் கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறேன். அந்தக் கட்டுரை மூலம் அரசிற்கு
எதிராக நடத்தப்படுகின்ற மிகப் பெரிய 'அரசியல்' போராட்டங்கள் மட்டுமே முக்கியமானவையாக
இருப்பதில்லை என்பதை வெளிப்படுத்திக் காட்ட முயற்சி செய்திருந்தேன்.
தனது குழந்தைகளுக்கான கல்வியைப் பெறுவது, ஆணாதிக்கத்தை
எதிர்த்து நிற்பது, உற்பத்திச் செயல்பாட்டில் இயற்கையுடன் போராடுவது, சாதிக்
கலாச்சாரத்தை நிலைநிறுத்துவது என்று ஒரு தாய் தொடர்ச்சியாக நடத்துகின்ற அன்றாடப்
போராட்டங்களை பெரிய போராட்டங்களுக்கு மாறாக நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மாபெரும்
'அரசியல்' போராட்டங்கள், கட்சி சார்ந்து நடத்தப்படுகின்ற போராட்டங்கள், ஆண்கள்
முன்னின்று நடத்துகின்ற போராட்டங்கள் போன்றவற்றை மட்டுமே கவனத்தில் கொண்டவையாக பெரும்பாலான
மார்க்சிய நூல்கள் இருக்கின்றன. என்னுடைய எழுத்துக்கள் மூலமாக நான் மிகச் சிறிய
அளவிலான போராட்டங்கள், பெண்கள் உள்ளிட்டு மிகச் சாதாரண மக்களின் போராட்டங்கள் மீது
கவனத்தைச் செலுத்த முயன்றுள்ளேன்.
சமகாலத்து ஹிந்துத்துவத்தை எவ்வாறு நீங்கள்
வகைப்படுத்துவீர்கள்? ஹிந்துத்துவாவிற்கும்
தலித்-பகுஜன்களுக்கும் இடையிலான தொடர்பு எந்த வகையில் இருக்கிறது?
டாக்டர் அம்பேத்கர் சொன்னதைப் போல - ஹிந்துத்துவம் என்பது பிராமணியம் தவிர வேறாக
இருக்கவில்லை. ஹிந்துத்துவா, ஆரிய தர்மம், சனாதன தர்மம் அல்லது ஹிந்து சமயம் என்று
அதை நீங்கள் எந்த வார்த்தை கொண்டு அழைத்த போதிலும் தலித்-பகுஜன் வாழ்க்கை, உலகக்
கண்ணோட்டங்கள், சடங்குகள், அரசியலுடன் பிராமணியத்திற்கு எந்தவிதமான தொடர்பும்
இருக்கவில்லை என்பதே உண்மையாகும். ஒரேயொரு எடுத்துக்காட்டைக் கூற வேண்டுமென்றால் நம்மில்
பலரும் ஹிந்துக் கடவுளர்களைப் பற்றி நமது குழந்தைப் பருவத்தில் கேள்விப்பட்டிருக்கவே
மாட்டோம். முதன்முதலாகப் பள்ளிக்கூடத்திற்குச் சென்றபோதுதான் ராமர், விஷ்ணு என்ற
கடவுள்களைப் பற்றி நாம் அறிந்து கொண்டிருப்போம். போச்சம்மா, ஏலம்மா போன்ற எங்கள்
தெய்வங்களும், எங்கள் குலக் கடவுளான வீரப்பாவும் மட்டுமே அப்போது இருந்தனர். எங்களுடைய
வாழ்வில் அந்தக் கடவுள்களும், அவர்களுக்கான பண்டிகைகளும் மட்டுமே முக்கிய பங்கு
வகித்தன - ஹிந்துக் கடவுள்கள் அல்ல. எங்களுடைய தெய்வங்களின் திருவிழாக்களில்
ஆண்கள், பெண்கள் என்று நாங்கள் அனைவரும் பாடுவோம், நடனமாடுவோம். விலங்குகளைப்
பலியிடுவோம், மது அருந்துவோம். ஆனால் இவையனைத்தையும் 'குற்றம்' என்று கருதுபவர்களாகவே
ஹிந்துக்கள் இருக்கின்றனர்.
எங்கள் தெய்வங்களுடன் எங்களுக்கு இருக்கின்ற உறவுகள்
பரிவர்த்தனை முறையில் உற்பத்திச் செயல்முறையில் வேரூன்றியவையாக இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக குளங்களில் தண்ணீர் நிரம்பச் செய்வது எங்கள் தெய்வம் காட்டம்மா
மைசாவிற்கான பொறுப்பு. அதை நன்றாகச் செய்து தரும் போது ஏராளமான விலங்குகள்
அவருக்கு பலியிடப்படுகின்றன. ஏதாவதொரு ஆண்டில் குளங்கள் வறண்டு போகுமென்றால்
அவருக்கு ஒரு விலங்குகூட கிடைக்காது. கடவுள்களுக்கும் அவர்களுடைய தலித்-பகுஜன்
பக்தர்களுக்கும் இடையே இதுபோன்ற உற்பத்தி உறவே மையமாக இருப்பதைத் தெளிவாகக் காண
முடியும்.
அதேபோன்று குருமா மேய்ப்பர்களின் குலதெய்வமான
வீரப்பாவைப் பொறுத்தவரை விலங்குகளின் நல்வாழ்வை உறுதி செய்வதே அவரது பணியாகும்.
மந்தை பெருகினால் பல ஆடுகள் அவருக்காகப் பலியிடப்படும். ஆனால் மந்தையை நோய் தாக்கினால்
அவருக்கு எதுவுமே கிடைக்காது. எங்களைப் போல எங்களுடைய தெய்வங்களும் உற்பத்தி
செய்யும் உயிரினங்களாகவே இருக்கின்றன. ஆனால் உற்பத்திச் செயல்முறையுடன் எந்தவொரு
தொடர்பும் இல்லாதுள்ள பிராமண தெய்வங்களைப் பொறுத்தவரை இதுபோன்று இருப்பதே இல்லை. அந்த
தெய்வங்கள் வெளிப்புற நிறுவனமான வேத நூல்களுக்குள் உறைந்து கிடக்கின்றன. ஆக
தலித்-பகுஜன் மதமும், பிராமணியமும் இரண்டு வேறுபட்ட ஒன்றுக்கொன்று முரண்பாடான
மத-கலாச்சார அமைப்புக்களாக, முற்றிலும் வேறுபட்ட இரண்டு மதங்களாக இருப்பதை
உங்களால் காண முடியும்.
உண்மையாகச் சொல்வதென்றால் பல தலித் சமூகங்கள் ஹிந்துக்
கடவுள்களை தங்கள் எதிரிகள் என்றே மரபுரீதியாகக் கடைப்பிடித்து வருகின்றன.
ஆந்திராவில் மாதிகர்கள் சில சமயங்களில் ஐந்து நாட்கள் வரை நீடிக்கின்ற நாடகத்தை
நடத்துவார்கள். அந்த நாடகம் மாதிகா நாயகனான ஜாம்பவந்தாவையும், பிராமணர்களின் பிரதிநிதியான
பிரம்மாவையும் சுற்றி வருவதாக அமைக்கப்பட்டிருக்கும். அவர்கள் இருவரும் சந்தித்து
நீண்ட உரையாடலை நிகழ்த்துவார்கள். அந்த உரையாடலின் மைய வாதம் மனிதகுலத்தின்
உருவாக்கம் பற்றியதாகவே இருக்கும். பிரம்மா ‘அனைவரையும்விட பிராமணர்களே மேன்மையானவர்கள்’
என்று கூறுவார். அதற்கு ஜாம்பவந்தா ‘இல்லையில்லை,
நீங்கள் எங்கள் எதிரி' என்று கூறுவார். தன்னுடைய வாயிலிருந்து பிராமணர்களையும்,
கைகளிலிருந்து சத்திரியர்களையும், தொடைகளிலிருந்து வைசியர்களையும், காலிலிருந்து பிராமணர்களுக்கு
அடிமைகளாக இருக்கும் வகையில் சூத்திரர்களையும் தான் படைத்ததாகவும், இந்த சாதி அமைப்பிற்கு வெளியே இருக்கின்ற
தலித்துகளுக்கு இங்கே இடமில்லை என்றும் பிரம்மா கூறுவார். அவர் சொல்வதுதான் வேத காலத்துக் கதை.
அது மிகவும் முட்டாள்தனமான கூற்று என்று கூறும்
ஜாம்பவந்தா ‘பிரகிருதியே [இயற்கை] என்னையும் சக்தியையும் (பெண் சக்தி கொள்கை)
உருவாக்கியது, சக்தியுடன் நான் இணைந்ததன் மூலம் திருமூர்த்திகள் (பிரம்மா, விஷ்ணு,
சிவன்) எங்களுக்குப் பிறந்தனர்’ என்று தொடர்வார். தன்னுடைய சொந்த சந்ததியாகப்
பிறந்தவர் என்றாலும் பிரம்மா தங்களுடைய வாழ்க்கை முறைக்கு விசுவாசமானவராக
இருக்கவில்லை என்றும், அதனால்தான் மாதிகர்கள் பிராமணர்களைத் தங்களிடமிருந்து விலக்கி
வைத்துள்ளனர் என்றும் அவர் கூறுவார். அதற்குப் பின்னர் பிறர் உழைப்பில் வாழ்கின்ற
ஒட்டுண்ணி வாழ்க்கையை மேற்கொள்கின்ற பிராமணர்களைக் காட்டிலும் மாட்டிறைச்சி உண்பது,
உடல் உழைப்பு, தோல் வேலை மற்றும் செருப்பு தயாரிப்பது என்றிருக்கின்ற மாதிகா
வாழ்க்கை முறையின் மேன்மை பற்றி ஜாம்பவந்தா பேசுவார். ஜாம்பவந்தாவிற்குப் பதில்
சொல்வதற்குத் தன்னிடம் எதுவுமில்லாத பிரம்மா அந்த உரையாடலில் தோற்கடிக்கப்படுவார்.
பிறகு பிரம்மாவுக்கு என்ன ஆகிறது?
அது மிகவும் சுவாரஸ்யமானது. பிரம்மாவை தன்னுடைய
வாதத்தாலேயே ஜாம்பவந்தன் தோற்கடிக்கிறானே தவிர பிரம்மாவைக் கொல்வதன் மூலம் அல்ல. ஆனால்
பிராமணியத்தின் மையத்தில் - அது கீதையாக இருந்தாலும் சரி, அல்லது எந்தப் புராணங்களாக இருந்தாலும் சரி -
எதிரியைக் கொல்வதன் மூலமே அவர்களுடைய எதிரிகளுக்கு தோல்வி என்பது அளிக்கப்படுகிறது.
தலித்-பகுஜன் பாரம்பரியத்திலோ அதைப் போன்று ஒருபோதும் இருப்பதில்லை. தர்க்கரீதியான
தூண்டுதலின் மூலமாகவே எதிரியை வெல்கின்ற தலித்-பகுஜன் பாரம்பரியம் புத்தர் முதல்
அம்பேத்கர் வரை செல்கிறது. தத்துவ மேன்மையை நிலைநிறுத்தி, தார்மீக தளத்தில்
எதிரியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதாகவே அந்த பாரம்பரியத்தின் சரியான புரிதல் அமைந்திருக்கின்றது.
பிராமணியம் அல்லது ஹிந்துத்துவா
அரசியலைத் திறம்பட எதிர்கொள்வதற்கு தலித்-பகுஜன் மதத்தைப் பயன்படுத்தலாம் என்று
நீங்கள் பரிந்துரைப்பதாகவே எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் பிராமணியம் தனக்கு எதிரான
அனைத்து எதிர்ப்புகளையும் உள்வாங்கிக் கொள்ளும் திறமையைக் கொண்டுள்ளது…
வரலாற்று ரீதியாக ஹிந்து வடிவங்களில் இருந்து தனித்து
இயங்கி வருகின்ற தலித்-பகுஜன் மத அமைப்புக்கள் ஒருபோதும் மையப்படுத்தப்பட்டோ
அல்லது ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டோ இருக்கவில்லை என்பதே உண்மை. அவர்களுடைய உள்ளூர்க் கடவுளர்களும்,
தெய்வங்களும் அனைவருக்குமானவர்களாக முன்னிறுத்தப்படுவதும் இல்லை. அந்த உள்ளூர்த்
தெய்வங்களும், மத வடிவங்களும் உள்ளூர்ச் சமூகங்களுடன் இயல்பாக இணைக்கப்பட்டிருக்கும்
காரணத்தால் அவர்களுடைய மதத்திற்கு அகில இந்திய அளவில் பெயரிடப்படவும் இல்லை. நான்
முன்பே குறிப்பிட்டவாறு வீரப்பா, காதம்மா மைசா கடவுள்கள் உள்ளூர் உற்பத்திச்
செயல்முறைகளுடனே இணைக்கப்பட்டுள்ளன. பிராமணியம் 'தூய்மை', 'குறைபாடு', படிநிலை,
தீண்டாமை போன்ற கருத்துக்களை தலித்-பகுஜன்கள் மத்தியிலும் புகுத்துவது, அதே
நேரத்தில் தலித்-பகுஜன் மத மரபுகள் 'மாசுபடுத்துகின்றன' என்று கண்டித்து அவற்றை
பிராமணமயமாக்குவது போன்ற வேலைகளைச் செய்வதன் மூலம் தொடர்ந்து எங்களுடைய மத வடிவங்களைச் சீர்குலைக்க முயன்று வருகிறது.
அப்படியானால் அம்பேத்கரின்
சிந்தனையில் இருந்ததைப் போல், மிகப் பெரிய அளவில் ஒழுங்குறைப்படுத்தப்பட்ட
மதத்திற்கு மதமாற்றம் ஆவதே இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வெளியேறும் வழி
என்று சொல்வீர்களா?
அரசைக் கைப்பற்றி, அதை சாதிய சித்தாந்தத்தைத்
திணிப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்திய பிராமண அமைப்பான ஹிந்து ஒழுங்கிற்கு
எதிராக நடைபெற்றிருக்கும் வரலாற்று ரீதியான போராட்டத்தில் புத்த, சீக்கிய, இஸ்லாம்,
கிறிஸ்தவ மதத்திற்கு அதிக எண்ணிக்கையில் தலித்-பகுஜன்கள்
மாறினர். சமூக உரிமைகள், சுயமரியாதையைப் பெறுவதற்கான சமூக எதிர்ப்பு இயக்கங்கள் அவர்க்லால்
நடத்தப்பட்டுள்ளன. ஆரம்பகால வரலாற்றில் நிகழ்ந்திருந்த அனைத்து பௌத்த நிகழ்வுகளும்
தலித்-பகுஜன் போராட்டம் குறித்தவையாகவே இருந்தன.
'வெவ்வேறு நீரோடைகள் பலவும் ஒரு நதியில் பாய்ந்து ஒன்றாக
மாறுவதைப் போல, வெவ்வேறு சாதியினரும் சங்கத்திற்குள் (பௌத்த நம்பிக்கை கொண்ட
சமூகம்) வரும் போது அவை தூய நீரைக் கொண்ட கடலில் சேர்ந்து கொள்கின்றன' என்று புத்தர்
கூறுகிறார். சமூக சமத்துவத்தின் மீது தரப்படுகின்ற இந்த அழுத்தம் நிச்சயமாக
உலகளாவிய சமூக உரிமைகள் என்ற கருத்தாக்கம் கொண்ட உலகளாவிய மதத்தின் அடிப்படையிலே
வரையறுக்க முடியாததாக இருக்கின்ற, ஒடுக்குமுறைக்கான மற்றொரு பெயராக இருக்கிற ஹிந்து
சமயத்திற்கு முரணாகவே இருக்கிறது.
ஹிந்து சமயம் ஒரு வாழ்க்கை முறை என்று கூறுகின்ற பிராமண
எழுத்தாளர்களுடன் எனக்கு கடுமையான கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவர்களுடைய கருத்து
தலித்-பகுஜன்களைச் சுரண்டுவதற்கான ஒரு வழியாக இருப்பதைத் தவிர வேறு எதுவுமாக இல்லை
என்றே நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.
ஏற்கனவே பேசிக்
கொண்டிருந்த விஷயத்திற்கு மீண்டும் வரலாம்… இஸ்லாம், கிறிஸ்துவ மதங்களுக்கு மாறுவதென்பது
சமூக விடுதலைக்கான ஒரு வழியாகவே தலித்-பகுஜன்கள் பலருக்கும் இருக்கின்றது.
இடைக்காலத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறுவது தலித்-பகுஜன்கள் சிலருக்கு
முதன்முறையாக அரசியல் கட்டமைப்புக்குள் நுழைவதற்கான வழியை உருவாக்கிக் கொடுத்தது.
உண்மையாகச் சொல்வதென்றால், அந்தக் காலகட்டத்தையொட்டியே ஒட்டுமொத்த சூத்திர எழுச்சியும்
நிகழ்ந்தது. அக்பர் வட இந்தியாவில் ஜாட்கள், ஆந்திராவில் ரெட்டிகள் போன்ற நில
உடைமைக் குழுக்களில் இருந்த சூத்திரர்களுக்கென்று 'ஒதுக்கீடு கொள்கை' என்று
அழைக்கப்படக்கூடிய கொள்கையை உருவாக்கிக் கொடுத்தார். அக்பரின் காலத்திற்கு முந்தைய
காலகட்டத்தில் சூத்திரர்களை பெரிய நில உரிமையாளர்களாக யாராலும் பார்த்திருக்கவே
முடியாது.
ஹிந்து ஆட்சிக் காலத்தில் பிராமணர்களுக்கு ஹிந்து
மன்னர்கள் மிகப்பரந்த அளவிலான நிலங்களை நன்கொடையாக வழங்கியதன் மூலம் அக்ரஹாரம் என்ற
வகையான நிலஉரிமை முறை இருந்திருப்பதைக் காண முடிகிறது. காலனித்துவ காலகட்டத்தில் பெருமளவிலான
பொருளாதாரக் கொள்ளை நிச்சயமாக இருந்தது என்றாலும் கிறிஸ்தவ மிஷனரிகள் கல்வி, ஓரளவு
பொருளாதாரம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக தலித்-பகுஜன்களுக்கு ஏராளமாகச் செய்து
கொடுத்திருந்தனர். இஸ்லாமிற்கு அல்லது பிற்காலத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறாத
பிற்படுத்தப்பட்ட சாதியினர் பலரும் இன்று அதிகம் பாதிக்கப்பட்டவர்களாகவே
இருக்கின்றனர். படித்த மேல்தட்டினர் என்று அவர்களில் யாரும் இல்லை என்பதே அதற்கான
காரணமாக உள்ளது.
அப்படியானால் மதமாற்றத்திற்கென்று
ஏதாவது முக்கியத்துவம் இன்றைய நிலைமையில் இருக்கிறதா?
தலித்-பகுஜன் இயக்கங்களால் அரசு அதிகாரம் நோக்கி தலித்-பகுஜன்களைத்
தள்ளவும், அரசியல் ரீதியாக தங்களை மேலாதிக்க வெளிகளில் நிறுத்திக் கொள்ளவும்
முடியவில்லை என்றால் படித்த தலித்-பகுஜன்கள் மத மாற்றத்தையே பெரும்பாலும்
அணிதிரள்வதற்கான, எதிர்ப்பிற்கான முக்கியமான மாற்றாக பார்ப்பார்கள் என்றே நான் உணர்கின்றேன்.
முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை மிகவும்
கொடூரமானவர்களாக ஹிந்துத்துவா பிரச்சாரங்கள் சித்தரிப்பதை எவ்வாறு
பார்க்கிறீர்கள்?
பிராமணியம் எதிர்கொள்ளும் உண்மையான அச்சுறுத்தல்
ஒருபோதும் முஸ்லீம்களிடம் அல்லது
கிறிஸ்தவர்களிடம் இருந்து வருவதாக இருப்பதில்லை. மாறாக பிராமண மேலாதிக்கத்தை ஏற்க
மறுக்கின்ற தலித்-பகுஜன்களிடம் அதிகரித்து வருகின்ற எழுச்சியாலேயே அந்த
அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்பது மிகவும் வெளிப்படையானது. அதனால்தான் தங்களை
நிராகரிக்கின்ற தலித்-பகுஜன்கள் மீதுள்ள கோபத்தை மிகவும் தந்திரமாக மாற்றியமைத்துக்
கொள்கின்ற வகையிலே முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை கற்பனை எதிரிகளாக முன்னிறுத்துகின்ற
முயற்சிகளை பிராமணியம் மேற்கொள்கிறது.
இப்போது தலித்-பகுஜன்-முஸ்லீம்
ஒற்றுமை குறித்து அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. அது குறித்து உங்களுடைய
கருத்துக்கள் என்ன?
கலாச்சாரத்தின் அடிப்படையில் தலித்-பகுஜன்கள் மற்றும்
முஸ்லீம்கள், குறிப்பாக முஸ்லீம் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ள மதம் மாறிய
பழங்குடியினர் மிகவும் பொதுவானவர்களாக இருப்பதை இங்கே நினைவில் கொள்வது அவசியம். இவர்கள்
அனைவரும் ஹிந்துக்களுக்கு மாறாக இறைச்சி உண்ணும் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள்
என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதே உங்கள் சமூக அந்தஸ்தைத் தீர்மானிப்பதாக இருக்கின்றதொரு
சமூகத்தில் அந்த ஒற்றுமை மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. சமூக சமத்துவத்தை
வலியுறுத்துவதாக, தீண்டாமை உணர்வு முற்றிலும் இல்லாததாக இஸ்லாமிய மதம் இருந்து வருகின்றது.
ஹிந்துக்கள் நமஸ்தே என்று கைகளை மடக்கி வணங்குவது என்ற
மிகவும் எளிமையான ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ‘நான் உன்னை அடையாளம் கண்டு
கொண்டேன் - ஆனாலும் நீ என்னைத் தொட்டு விடாதே’ என்று அறிவுறுத்துகிற வகையில் அந்த வணக்கம் அடையாளத்தை
மிகவும் அதிகாரத்துடன் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக
கிறிஸ்தவர்களிடம் உள்ள கைகுலுக்குகின்ற பழக்கம் ஒருவரைத் தொடுகின்ற வகையிலே இருக்கிறது. முஸ்லீம்கள் இன்னும்
ஒருபடி மேலே சென்று உடல்ரீதியாகத் தழுவிக் கொள்கிறார்கள். இன்றும் கிராமங்களில் முஸ்லீம்கள்
மட்டுமே உடல் ரீதியாக தலித்-பகுஜன்களை அரவணைத்துக் கொள்பவர்களாக இருக்கின்றனர். பிராமணர்களும் பனியாக்களும் தலித்துகளை
அவ்வாறு செய்ய விடுவதில்லை. மனிதர்களை அரவணைத்து தழுவிக் கொள்வதென்பது
பிராமணியத்தால் பாதிக்கப்பட்ட தலித்-பகுஜன்களுக்கு விடுதலை அளிக்கும் வகையிலான அடையாளச்
செயலாக இருப்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
முஸ்லீம்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு இன்னும் அதிகமன ஒற்றுமைகள்
தலித்-பகுஜன்களிடம் இருக்கின்றன. முஸ்லீம்களின் மொஹரம் சடங்குகளில் தலித்-பகுஜன்கள்
ஏராளமானோர் தொடர்ந்து பங்கேற்று வருன்றனர். அவர்கள் சூஃபி தர்காக்களுக்கும் சென்று
வருகின்றனர். உற்பத்திச் செயல்பாட்டில் தலித்-பகுஜன்கள், விவசாயிகள், விவசாயத்
தொழிலாளர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், நெசவாளர்கள் மற்றும் பலரின்
நிலையில் தங்களைக் காண்கின்ற பெரும்பாலான முஸ்லீம்கள் இவர்கள் அனைவருடனும் பொதுவான
கலாச்சாரத்தைப் பகிர்ந்து கொள்பவர்களாகவே இருந்து வருகிறார்கள்.
தலித்-பகுஜன்கள் மற்றும்
முஸ்லீம்களுக்கு இடையில் இருந்து வருகின்ற கலாச்சார ஒற்றுமை அல்லது பொதுத்தன்மை
மட்டுமே அவர்களுக்கிடையே பரந்த அரசியல் ஒற்றுமையை உருவாக்குவதற்கான களமாக அமைந்துவிட
முடியுமா?
அவர்களுக்கிடையே உள்ள அந்த பண்பாட்டு ஒற்றுமை வெளிகளை
உடனடியாக ஆராய்ந்து நாம் விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும், அதன் அடிப்படையில்தான்
அரசியல் ஒற்றுமை உருவாக முடியும் என்பதே என்னுடைய கருத்தாக இருக்கின்றது. பிராமணியம்
அல்லது ஹிந்துத்துவா என்று நீங்கள் விரும்புமாறு அழைத்துக் கொள்கின்ற, வேறுபாடுகளைக்
கொண்டு மட்டுமே செயல்படுகின்ற எதுவும் இதுபோன்ற ஒற்றுமை உருவாவதை மறுக்கவே
முற்படுகிறது. எனவே மறுபுறத்தில் இந்த ஒற்றுமைக்கான கூறுகளின் மீது கவனம் செலுத்துவதோடு,
ஒருங்கிணைந்த இந்த வாழ்க்கையின் தளங்களை
அரசியல் களத்தில் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள
வேண்டும்.
நம்மிடையே இருந்து வருகின்ற தவறான மேற்கத்திய மார்க்சிய
வழிமுறைப் பயிற்சியின் காரணமாக பொருத்தமான கலாச்சார அடிப்படை எதுவுமில்லாமல் நாம் எப்போதும்
அரசியல் ஒற்றுமையில் இருந்து தொடங்கியே அரசியல் தளத்தில் தலித்-பகுஜன்கள் மற்றும்
முஸ்லீம்களை ஒன்றிணைக்க முயல்கிறோம். அரசியல் ஒற்றுமைகளுக்கான அந்த முயற்சிகள்
தோல்வியடைகின்ற போது அதனைக் கைவிட்டு விடுகிறோம். இது சரியான வேலை செய்யும்
முறையாக இருக்காது என்றே நான் உணர்கிறேன். தற்போதுள்ள கலாச்சார ஒற்றுமைக்கான
தளங்களையும், உற்பத்தி ஒற்றுமை மற்றும் பரந்த உற்பத்திச் செயல்பாட்டில் ஒரே
மாதிரியான அல்லது பொதுவான இடங்களில் வைப்பதன் மூலம் முஸ்லீம்கள் மற்றும்
தலித்-பகுஜன்களிடம் உருவாகின்ற ஒற்றுமைகளையும் ஆய்வதிலிருந்தே நாம் அதனைத் தொடங்க
வேண்டும். சமூக மற்றும் கலாச்சார ஒற்றுமையுணர்வைக் கட்டியெழுப்பும் போது நீடித்த
அரசியல் ஒற்றுமை எளிதாக உருவாகும்.
இவையனைத்திலும் தலித்-பகுஜன் ஆன்மீகம்
எவ்வாறான பங்கு வகிக்கிறது என்று பார்க்கிறீர்கள்?
பிராமணியம் tஹனக்கு விடுக்கப்படுகின்ற அரசியல் சவாலைக்
காட்டிலும், தலித்-பகுஜன் சிந்தனைப் போக்கைக் கண்டே அதிகம் அச்சப்படுகிறது என்று
துவக்கத்திலேயே சொல்லி விட விரும்புகிறேன். எத்தனையோ ஏகலைவன்களை, சம்புகர்களை
எதிர்கொள்ள அல்லது கொல்ல அவர்களால் முடியும் என்றாலும் அம்பேத்கரிய சிந்தனை
விடுக்கின்ற சவாலை அவர்களால் எதிர்கொள்ளவே முடிவதில்லை. என்னைக் கொல்ல அவர்கள் சதி
செய்யலாம் என்றாலும் எனது புத்தகத்தை (நான் ஏன் ஹிந்து அல்ல) அவர்களால் எதுவும்
செய்து விட முடியாது. இந்த கலாச்சாரத்தில்தான் தலித்-பகுஜன் அறிவுஜீவிகள்
செய்வதற்கு ஏராளமாக இருக்கின்றன. பிராமணியத்திற்கு முற்றிலும் மாறாக உற்பத்தி
பொருளாதார செயல்முறை, உழைப்பிற்கான கண்ணியத்துடன் மிகவும் இயல்பாக இணைக்கப்பட்டுள்ள
நமது சொந்த வரலாறுகள், மரபுகள், கலாச்சாரங்கள், மதங்கள், அறிவு சார்ந்த அமைப்புகளை
நாம் மீட்டெடுத்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இங்கே தலித்-பகுஜன் மரபுகள் மாறாது
நிலையாக இருப்பதாகவே நீங்கள் கருதுகிறீர்கள். ஆனால் பிராமணியத்தை ஏற்றுக் கொள்ளும்
செயல்பாட்டிற்கு அவர்களும் பலியாகி இருக்கிறார்கள் அல்லவா?
அது இரண்டு வழிகளிலும் செயல்படுவதாகவே நினைக்கிறேன்.
ஹிந்து அமைப்புகள் முக்கியமான வழிகளில் தங்களைத் தலித்மயமாக்கிக் கொள்வது பற்றி எதுவும்
எழுதப்படவில்லை. எடுத்துக்காட்டாக விநாயகர் திருவிழாவை எடுத்துக் கொள்ளலாம்.
முன்பெல்லாம் அந்த திருவிழா பிராமண பூசாரியை மையமாகக் கொண்டே நடத்தப்பட்டு வந்தது.
ஆனால் இப்போது அந்த திருவிழாவில் பங்கேற்பவர்களில் பெரும்பாலானவர்கள்
தலித்-பகுஜன்களாகவே இருக்கின்றனர். இப்போதெல்லாம் அந்த திருவிழா பாரம்பரியமாக
இருந்து வந்த பிராமணியம் என்ற பொருளுடன் நடப்பதில்லை. நடனம், குடி, பாட்டு, பலத்த திரைப்பட இசை!
என்று அந்த விழா இப்போது பெரும்பாலும் தலித்மயமாக்கப்பட்டு விட்டது.
கோவில்களில் பிரார்த்தனைகளை சமஸ்கிருதத்தில் அல்லாமல்
மக்களுடைய மொழிகளில் சொல்ல வேண்டும் என்றும், அர்ச்சகராக தங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட
வேண்டும் என்றும் தலித்-பகுஜன்கள் சிலர் கோரி வருவதை மற்றொரு எடுத்துக்காட்டாகச்
சொல்லலாம். இதுபோன்ற செயல்பாடுகள் குறித்து வேறுவிதமாக என்னென்ன சொல்லப்பட்டாலும்,
பிராமணியத்தை அதன் சொந்தக் கட்டமைப்பிற்குள் இருந்தே சவால் விடுகின்ற வழிமுறையாகவே
அவையனைத்தும் இருக்கின்றன. இதுபோன்று தலித்மயமாகின்ற செயல்முறையின் உச்சக்கட்டம் என்பது பிராமணியத்தை
அழித்தொழிப்பதாக மட்டுமே இருக்கும்.
மற்ற துறைகளிலும் இதுபோன்று தலித்மயமாதல்
செயல்படுவதாகக் காண்கிறீர்களா?
எல்லா இடங்களிலும் அது தெளிவாகத் தெரிகிறது - பிராமணப்
பெண் ஒருவர் தலித் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கத் தயாராக இருப்பது, தன்னுடைய கணவனை
விவாகரத்து செய்ய அவர் விரும்புவது அல்லது பொது இடங்களில் புகைபிடிப்பது,
குடிப்பது, பிராமண விதவை இன்னொருவரை மறுமணம் செய்வது போன்ற செயல்பாடுகள் இந்த
தலித்மயமாதல் செயல்முறையின் பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. பிராமணப் பெண்களுக்குப்
போன்று புகைபிடித்தல், குடிப்பழக்கம், விவாகரத்து, மறுமணம் போன்றவை தலித்-பகுஜன்
பெண்களுக்கு எப்போதுமே பிரச்சனையாக இருந்ததில்லை என்பதை இங்கே நினைவில் கொள்ள
வேண்டும். ஆக இதுபோன்ற செயல்பாடுகள் அனைத்தும் தலித்மயமாதலைத் தவிர வேறாக
இருக்கவில்லை.
இந்தியா சமஸ்கிருதமயமாக்கப்படுகிறது என்று கூறிய
எம்.என்.ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பிற பிராமண சமூகவியலாளர்கள் பிராமண மேலாதிக்கத்தை
வலுப்படுத்தவே விரும்பினர். ஆனால் இந்த குடிப்பழக்கம், புகைபிடித்தல், பெண்
விடுதலை பற்றி என்ன கூறுகிறீர்கள் என்று அவர்களிடம் கேட்ட போது, அது மேற்கத்தியமயமாதல் என்று அவர்களுடைய பதில் இருந்தது.
ஆனால் உண்மையில் அது தலித்மயமாதல் என்பதைத் தவிர வேறாக இருக்கவில்லை. தலித்-பகுஜன்களிடம்
இருந்துதான் மற்றவர்கள் கற்றுக் கொள்கிறார்கள் என்ற உண்மையை அங்கீகரிப்பதாக இருக்கின்ற
பதிலை ஒப்புக்கொள்வதற்கு அவர்கள் விரும்பவில்லை எனப்து மட்டுமே தெரிகிறது.
நான் இங்கே சொல்ல வரும் கருத்து மிகவும் எளிமையானது.
இந்தியா தலித்மயமாகிறது என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போது, இயல்பாகவே பிராமணியம்
மரணம் அடைந்து விடும். ஆனால் அவ்வாறாக இல்லாமல் ஹிந்துமயமாக்கலை நோக்கி இந்தியா நகர்கின்றது
என்ற கருத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவோம் என்றால் பிராமணியத்திற்கே
கூடுதல் பலம் கிடைக்கும். பாபர் மசூதி விவகாரத்தின் போது இந்தியா
ஹிந்துமயமாக்கப்படுகிறது என்ற வாதத்தைக் கொண்டு சேர்க்கும் வகையில் பல புத்தகங்கள்
எழுதப்பட்டன. ஆனால் டாக்டர் அம்பேத்கருடன் சேர்ந்து 1956ஆம் ஆண்டில் பத்து லட்சம்
தலித்துகள் பௌத்த மதத்திற்கு மாறிய போது இந்த வரலாற்று ஆய்வாளர்கள்,
சமூகவியலாளர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்? அப்போது அவர்கள் எல்லாம் இந்தியா
தலித்மயமாகிறது அல்லது பௌத்தமயமாகிறது என்று சொன்னார்களா? அவர்கள் ஒருவேளை அவ்வாறு
செய்திருப்பார்களேயானால், இன்றைக்கு நாம் ஒரு வித்தியாசமான வரலாற்றைப்
பெற்றிருப்போம். எனவே வரலாற்று ரீதியாக சமஸ்கிருதமும், பிராமணியமும் பலனளித்திராத
நிலையில், அவை இந்த சமூக அமைப்பின் மீதான சுமையை, சுரண்டலுக்கான அங்கீகாரத்தை எவ்வாறு
ஏற்படுத்தித் தருகின்றன என்ற வகையிலே தலித்துகளின் பார்வையில் நாம் வரலாற்றை எழுத
வேண்டும். ஹிந்துமயமாதலுக்கு முற்றிலும் மாறாக தலித்மயமாதல் என்பது உழைப்பின்
கண்ணியத்தில் வேரூன்றியுள்ள வரலாற்றுரீதியாக உற்பத்தி சார்ந்த, படைப்பூக்கம்
கொண்ட, ஆக்கபூர்வமான செயல்முறையாகவே இருக்கிறது.
தலித்-பகுஜன்களை மையப்
பாத்திரங்களாகக் கொண்டு இந்திய வரலாற்றை எழுதுகின்ற இந்தத் திட்டத்தை எவ்வாறு
எதிர்கொள்வீர்கள்?
உண்மையைச் சொல்வதென்றால் 'துக்கத்தின் வரலாறு' என்று -
எளிமையாக அதை விவரிப்பதென்றால் தலித்-பகுஜன்கள் அனைத்து வகையான ஒடுக்குமுறைகள்,
துயரங்களை பிராமணியத்தின் கீழ் அனுபவித்து வருகின்றனர் என்று - எழுதப்படுவதை
புறக்கணித்து விட முடியாது என்றாலும் அதை நான் கடுமையாக எதிர்க்கவே செய்கிறேன்.
எவ்வளவு அதிகமாக நீங்கள் அழுகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் எதிரி உங்களைக் கூடுதலாக
அடிப்பார் என்றே உணர்கிறேன். உங்களுடைய எதிரியை வீழ்த்த வேண்டுமென்று
விரும்புவீர்கள் என்றால், வெறுமனே அவரை விமர்சிப்பதைக் கொண்டு மட்டுமே உங்களால் திருப்தியடைந்து
விட முடியாது. அதுபோன்று விமர்சிக்க கிடைக்கின்ற சந்தர்ப்பத்திலும் அந்த உரையாடலுக்கான
விதிமுறைகளை நிர்ணயிப்பவராக அவரே இருப்பார் என்பதாலும், அவர் வகுத்துத் தருகின்ற
விதிகளின்படியே நீங்கள் நடந்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பீர்கள் என்பதாலும்
இயல்பாக அவரே இறுதியில் வெற்றி பெறுபவராக இருப்பார் - உங்களால் வெற்றியடைய முடியாது.
எனவே வரலாற்று ஒடுக்குமுறை அல்லது ஹிந்து பாசிசத்தின்
ஆபத்துகளைப் பற்றி மட்டுமே சிந்திக்காமல், தலித்மயமாதல் செயல்முறையின் மீது கவனம்
செலுத்தி, அதன் மூலம் நீங்களே உரையாடல்களை அமைத்து விவாதியுங்கள். அதற்கு தலித்-பகுஜன்
மாற்றீட்டை செயல்படக்கூடிய, சிறந்த தீர்வாக நீங்கள் முன்வைக்க வேண்டும். அவ்வாறு
செய்திடாமல் வெறுமனே பிராமணியத்தை விமர்சிப்பது மட்டுமே உங்களுடைய வேலை என்று உங்களைக்
கட்டுப்படுத்திக் கொள்வீர்கள் என்றால், அவர்கள் பிராமண நூல் ஒன்றிலிருந்து அல்லது ஏதாவது
மற்றொரு நூலிலிருந்து ஸ்லோகங்களை மேற்கோள் காட்டி உங்களை மறுப்பதற்காக மற்றொரு
ஸ்லோகத்தை உங்கள் முன்பாக வைப்பார்கள்.
ஆனால் தலித் கண்ணோட்டத்தில் வரலாற்றை எழுதுவீர்கள்
என்றால் நீங்கள் சொல்ல விரும்புவதை மறுதலிப்பதற்கான வழி எதுவும் அவர்களிடம்
இருக்கப் போவதில்லை. தலித்-பகுஜன்களின் அறிவுசார் அமைப்புகள், உற்பத்திச்
செயல்பாட்டில் அவர்களுடைய பங்கு, தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அல்லது ஆன்மீகத்
துறையில் அவர்கள் அளித்திருக்கும் பெரும் பங்களிப்புகள், அவர்களின் சமூகங்கள் பெண்களுக்கு
பிராமணர்களைக் காட்டிலும் மிக உயர்ந்த நிலையை எவ்வாறு அளித்து உதவுகின்றன என்பதை
வெளிப்படுத்துகின்ற வகையில் தலித்-பகுஜன் வரலாற்றை மீண்டும் எழுதுவதே அந்தப்
பணியின் மையமாக அமைய வேண்டும். சதி, வரதட்சணை போன்றவை வரலாற்று ரீதியாக குறிப்பாக
ஹிந்துக்களின் பிரச்சனைகளாக மட்டுமே இருந்திருக்கின்றன - அவை ஒருபோதும் எங்களுடைய
பிரச்சனைகளாக இருந்ததில்லை. எனவே வரலாற்றை மீண்டும் எழுதுவது தலித் பெருமையைத்
தெரிவிக்கின்ற வகையிலே இருக்க வேண்டும்.
உற்பத்திச் செயல்பாடு குறித்த நிஜ உலக அனுபவத்திலிருந்து
தோன்றிடாத நூல்களில் வேரூன்றியுள்ள பிராமணியத்தைப் போலல்லாமல், தலித்தியம் என்பது
உழைப்பு என்ற வகையில் இயற்கையுடனான மனிதர்களின் தொடர்புகளைப் பிரதிபலிப்பதாக
இருக்கிறது. எனவே தலித்மயமாதலே நமது துயரங்களுக்கான தீர்வாக இருக்கும் - ஹிந்துமயமாதல்
அல்ல என்பதை வெளிக்காட்ட வேண்டும். மிகச் சிறந்த மாற்றாக தலித்மயமாதலை முன்வைக்காத
வரை, அவர்களுடனான போரில் உங்களால் வெற்றி பெறவே இயலாது.
எடுத்துக்காட்டாக புத்தரை எடுத்துக் கொள்ளுங்கள். புத்தரின்
மிகப்பெரிய பங்களிப்பு பிராமணியத்தின் மீதான விமர்சனமாக ஒரு[ஓதும் இருந்ததே இல்லை.
அதுபோன்ற விமர்சனம் முக்கியமான தேவையாக இருந்தது என்றாலும், பிராமண சாதி
சமூகத்திற்கு சிறந்த மாற்றாக விசுவாசிகளான -- சங்க -- சமத்துவ சமூகத்தை நிறுவியதே புத்தரின்
தலைநிறந்த பங்களிப்பாக இருந்தது. மார்க்சை எடுத்துக் கொள்ளுங்கள். அவருடைய
மகத்துவம் முதலாளித்துவத்தை விமர்சிப்பதில் இருக்கவில்லை. மாறாக கம்யூனிச
சமூகத்தின் வடிவத்தில் மிகவும் சிறப்பானதொரு மாற்றீட்டை முன்வைத்ததிலேயே அவரது மகத்துவம்
இருந்தது என்பதே என்னுடைய கருத்தாகும்.
அதுபோன்ற ஏதாவது ஒன்றை நீங்களே முயற்சி
செய்து பார்த்திருக்கிறீர்களா?
அதுபோன்ற முயற்சிகளை எனது பெரும்பாலான எழுத்துக்களில்
நீங்கள் காண முடியும் என்றே நினைக்கிறேன். அதற்கான எடுத்துக்காட்டைச் சொல்ல
வேண்டும் என்றால், ‘ஒடுக்கப்பட்ட அறிவியலாளர்கள்’ என்ற தலைப்பில் தோல் வேலை
செய்யும் மதிகர்கள் பற்றி ஒரு கட்டுரையும், ‘உற்பத்தி செய்யும் சிப்பாய்கள்’ என்ற
மற்றொரு கட்டுரையை மதிகா தலித்துகள் பற்றியும் எழுதியிருக்கிறேன். தற்போது
தலித்-பகுஜன் பழங்குடியினர் மற்றும் சாதியினரின் கண்டுபிடிப்புகள், ஆக்கங்கள்
தொடர்பான புத்தகத்தைத் தயாரித்து வருகிறேன். தலித்-பகுஜன் அறிவுசார் அமைப்புகளை
மீட்டெடுப்பதற்கு ஏராளமாகச் செய்ய வேண்டியுள்ளது. அதாவது கச்சா தோலை முதன்முதலாக காலணிகளாக
மாற்றிய கலையை அறிந்த மதிகர்கள், கத்தியைக் கண்டுபிடித்து முடிதிருத்தும் கலையை
மேம்படுத்திய நாவிதர்கள் உள்ள மதிகா வாடாக்களிலேயே (உள்ளூர்களில்) இந்திய தொழில்மயமாக்கலைத்
தேட வேண்டுமே தவிர லங்காஷயரில் அல்ல.
இறுதியாக ஒரு கேள்வி. உங்கள்
புத்தகத்திற்கு ‘நான் ஏன் ஹிந்து அல்ல’ என்ற தலைப்பை வைத்ததற்கான காரணம் என்ன?
அந்தப் புத்தகம் எந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றுள்ளது?
‘நாம் அனைவரும் ஹிந்துக்கள்தான்’ என்ற ஹிந்துத்துவா
பிரச்சாரத்திற்கு எதிராக தலித்-பகுஜன்கள் ஆற்றல் மிக்க கருத்துகளை வெளியிட
வேண்டியது மிகவும் முக்கியம் என்று நினைத்தேன்.
அந்தப் புத்தகத்திற்கான வரவேற்பு என்பதைப் பொறுத்தவரை நிச்சயமாக
தலித்-பகுஜன்கள் மிகவும் உற்சாகமடைந்தனர் என்றே கூறலாம். மரபுவழியிலான பிராமணர்கள்
எளிதில் யூகித்து விடக்கூடிய வகையில் அந்த புத்தகம் மீது கோபமடைந்த நிலையில் 'சோசலிச'
பிராமணர்கள் சிலரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். வேதங்களை ஓதுவதைப் போலவே மார்க்ஸின்
மூலதனத்தை அவர்கள் படித்திருந்தார்கள் - விமர்சன வாசிப்பாக அல்ல என்பதால் அவர்கள்
அவ்வாறு நடந்து கொண்டது உண்மையில் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை.
பெரியாரை நிறைய படித்தவர்கள் என்று தங்களைப் பற்றி
குறிப்பிட்டு எழுதியிருந்த தமிழ்நாட்டில் உள்ள பிராமணர்கள் சிலரிடமிருந்து சில
எதிர்வினைகள் எனக்குக் கிடைத்தன. பிராமணர்களை விமர்சித்த போதிலும், அவர்கள் எங்கு
தவறு செய்தார்கள் என்பதை பெரியார் சொல்லவில்லை என்றும் ‘நான் ஏன் ஹிந்து அல்ல’
புத்தகத்தைப் படித்த பிறகுதான் தங்களுடைய மதம், கலாச்சாரத்தில் என்ன தவறு
இருக்கிறது என்பதையும், தொடர்ந்து தங்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால்
தாங்கள் எவ்வாறெல்லாம் மாற வேண்டும் என்பதையும் கண்டறிந்து கொள்ள முடிந்ததாக அவர்கள்
என்னிடம் தெரிவித்தார்கள்.
https://www.outlookindia.com/website/story/hindutva-is-nothing-but-brahminism/215089
Comments