ராமச்சந்திர குஹா
ஸ்க்ரோல் இணைய இதழ்
இந்திய கூட்டாட்சி முறை சமீபகாலமாகவே செய்திகளில் அடிபட்டு
வருகிறது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க அரசுகளால் வடிவமைக்கப்பட்ட குடியரசு தினப்
பேரணி அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது பாரதிய ஜனதா கட்சியைத் தவிர மற்ற
கட்சிகளால் ஆளப்படுகின்ற மாநிலங்களின் மீதான அடையாளத் தாக்குதலாகவே கருதப்பட்டது. வெறுமனே
குறியீடு என்பதிலிருந்து மாறி பொருள் சார்ந்ததாகி இருக்கின்ற நாடாளுமன்றத்தின்
தற்போதைய கூட்டத்தொடர் விவாதங்களில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும்
அரசியலமைப்பு விதிமுறைகள், கொள்கைகள் அனைத்தையும் மீறி மாநிலங்களின் உரிமைகளைத் துச்சமென
மத்திய அரசு மதித்து வருவதாக கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
1959ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 356ஆவது பிரிவின் மூலம்
கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்டதே இந்திய
கூட்டாட்சியின் மீது நடத்தப்பட்ட முதலாவது பெரிய தாக்குதலாக இருந்தது. அந்த
நடவடிக்கையைத் தூண்டியவர்களாக காங்கிரஸ் தலைவராக இருந்த இந்திரா காந்தி, உள்துறை
அமைச்சரான கோவிந்த் பல்லப் பந்த் ஆகியோர் இருந்தனர். ஆனாலும் அந்தக் குற்றச்சாட்டில்
இருந்து அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவால் தப்ப முடியவில்லை. அந்தச்
செயல் ஜனநாயகம் குறித்து நேருவிடமிருந்த நற்சான்றிதழ்கள் மீது ஒரு கறையாகவே படிந்து
போனது.
நேரு பிரதமராக இருந்த நீண்ட காலகட்டத்தில் 356ஆவது பிரிவு எட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
இந்திரா காந்தி பிரதமரான பிறகு அவர் அந்த விதியை அடிக்கடி பயன்படுத்திக் கொண்டார்.
தான் பிரதமராகப் பணியாற்றிய இரண்டு காலகட்டங்களில் (1966 முதல் 1977 வரை; 1980
முதல் 1984 வரை) அந்தப் பிரிவை இந்திராகாந்தி ஐம்பது முறை - சராசரியாக ஓராண்டிற்கு
மூன்று முறைக்கும் சற்று அதிகமாகவே - பயன்படுத்தியிருந்தார்.
திருமதி.காந்தியால் இரண்டு கட்டங்களில் 356ஆவது பிரிவு குறிப்பாக
1970-71ல் காங்கிரஸ் கட்சியைப் பிளவுபடுத்தி மாநில அரசுகளில் தன்னுடைய பிரிவு
ஆதிக்கம் செலுத்த விரும்பிய போதும், 1980ஆம் ஆண்டில் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு
வந்த பிறகு தன்னுடைய கட்சியைத் தவிர மற்ற கட்சிகளால் ஆளப்பட்ட பல மாநில அரசுகளை
டிஸ்மிஸ் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது.
கூட்டு மனப்பான்மை
இந்திராகாந்தியின் மகன் ராஜீவ்காந்தி பிரதமராக பதவி
வகித்த போது நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த போது இந்திய அரசியலில் இந்திரா
காந்தி சகாப்தம் 1989ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது. பின்னோக்கிப் பார்க்கும் போது இந்திய
கூட்டாட்சியின் பொற்காலமாக இப்போது தோன்றுகின்ற காலகட்டம் அப்போது தொடங்கியிருந்தது.
லைசென்ஸ் ராஜ் அகற்றப்பட்டது, பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும்
பெரும்பான்மையை வழங்காத குடிமக்களின் புத்திசாலித்தனம் போன்றவை பொருளாதார
வளர்ச்சியின் எழுச்சி மற்றும் நிர்வாகத்தில் கூட்டு மனப்பான்மையை வளர்ப்பதற்கான
வழியை வகுத்துக் கொடுத்தன. மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே பரஸ்பர
மரியாதை இருந்த சூழல் மலர்ந்தது. அதற்கான பலன்களும் கிடைத்தன.
ஆயினும் 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்
தேர்தல்களில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த பிறகு இந்திய கூட்டாட்சி
மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது. நரேந்திர மோடி பதவியேற்று இந்த ஏழரை
ஆண்டுகளில், 356ஆவது சட்டப்பிரிவு எட்டு முறை அதாவது ஆண்டிற்கு ஒருமுறை என்ற அளவிலே
செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அளவுகோலை மட்டும் வைத்து மதிப்பிடுகின்ற போது இந்திராகாந்தியைக் காட்டிலும் மோடி மாநிலங்களின்
உரிமைகளை மதிப்பவராக இருந்திருக்கிறார் என்று சொல்ல முடியும் என்றாலும், வேறு பல
வழிகளில் மோடி தனக்கு முந்தைய எந்தப் பிரதமரையும் காட்டிலும் இந்திய கூட்டாட்சி
முறையைத் துச்சமென மதித்து அதனை மிகவும் பலவீனமே படுத்தியுள்ளார். அவரது அந்தச் செயல்பாடுகள்
குறித்து இங்கே பார்க்கலாம்.
மாநிலங்கள் மீது திணிக்கப்படும்
சட்டங்கள்
முதலாவதாக - உருவாக்கப்படுகின்ற முக்கியமான கொள்கைகள் குறித்த்தாக
உள்ள மிகவும் முக்கியமான சட்டங்கள் - அந்தச் சட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய
மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமலேயே இயற்றப்படுகின்றன. இந்த நிலைமை (இப்போது
திரும்பப் பெறப்பட்டுள்ள) வேளாண் சட்டங்களைப் பொறுத்தவரை மிகவும் குறிப்பிடத்தக்க
வகையில் உண்மையாகவே இருந்திருக்கிறது. கல்வி, கூட்டுறவு, வங்கி போன்ற முக்கியமான
விவகாரங்கள் தொடர்பான கொள்கைகளும், சட்டங்களும் ஒன்றிய அரசால் முன்கூட்டியே
தீர்மானிக்கப்பட்டு பின்னர் மாநிலங்கள் மீது திணிக்கப்பட்டு வருகின்றன.
சட்டம் ஒழுங்கு அதிகாரத்தைப் பறித்துக்
கொண்ட ஒன்றிய அரசு
இரண்டாவதாக - சட்டம் ஒழுங்கு மாநிலம் தொடர்பான விவகாரமாக
இருந்த போதிலும், தங்கள் சட்டப்பூர்வ அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் தங்களுடைய
சட்டங்களை அமல்படுத்துவதற்கான மாநில அரசுகளின் திறனையும், மாநிலங்களுக்கான சுயாட்சியையும்
குறைத்து மதிப்பிகின்ற வகையிலேயே மோடி அரசாங்கம் அனைத்தையும் செய்து வந்துள்ளது. சட்ட
விரோதச் செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தை (ஊபா) உண்மையான பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு
அவர்கள் மீது பிரயோகிப்பதற்குப் பதிலாக மிகவும் தாராளமாக, பொறுப்பற்ற முறையில் தன்னுடைய
அரசியல் அதிருப்தியாளர்களை நசுக்குவதற்காக அமல்படுத்துவது, வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட
நோக்கத்துடன் 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதலைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட தேசிய
புலனாய்வு முகமையை அடுத்தடுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் தொடர்ந்து அனுப்பி
வைப்பது போன்ற செயல்பாடுகள் மோடி அரசாங்கம் தண்டனையளிக்கும் அதிகாரங்களைத்
தனக்குள்ளாக மையப்படுத்தி வைத்துக் கொள்ள முயல்வதை எடுத்துக்காட்டுவதாகவே இருக்கின்றன.
மாநிலங்களுடன் தீவிரமாக ஆலோசனை செய்வதன் மூலம் நாட்டை
ஒன்றிணைப்பதற்கான மிகச் சிறந்த வாய்ப்பை கோவிட்-19 தொற்றுநோய் வழங்கியது. ஆனால்
அதற்கு முற்றிலும் மாறாக தொடக்கத்தில் இருந்தே மோடி அரசு ஒருதலைப்பட்சமாகவே செயல்பட்டது.
பெருந்தொற்றுநோய் என்று அந்த தொற்றுநோயை அங்கீகரிப்பதற்கு முன்பாக மத்தியப்
பிரதேசத்தில் புரட்டு வேலைகள், வற்புறுத்தல்களை மேற்கொண்டு பாஜக அரசாங்கம் பதவியேற்றுக்
கொள்ளும் வரை மோடி அரசாங்கம் காத்திருந்தது. அந்த வேலை முடிந்த பின்னர் மாநிலங்களையோ
அல்லது ஒன்றிய அமைச்சரவையில் உள்ள சகாக்களையோ கலந்தாலோசிக்காமல், நான்கு மணி நேர இடைவெளியில்
நாடு முழுவதற்குமான பொதுமுடக்கம் பிரதமரால் அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களுடன் எந்தவொரு ஆலோசனையையும் மேற்கொள்ள முயலாமல்
பொதுமுடக்கத்துடன் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டமும் (NDMA) செயல்படுத்தப்பட்டது.
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசாங்கம் வைரஸை வீழ்த்தி விட்டது என்ற பெருமைப்
பேச்சுகள் அனைத்தையும் மீறி, அந்தச் சட்டம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது.
மக்கள், பொருட்களின் நடமாட்டத்தைக்
கண்காணிக்கும் வகையில் அசாதாரணமான அதிகாரங்களை ஒன்றிய அரசிற்கு வழங்குகின்ற அந்தச்
சட்டம் இன்னும் சிறிது காலத்திற்கு நடைமுறையில் தொடரக்கூடும்.
குறிப்பிட்ட சில பேரழிவுகளை குறிப்பிட்ட காலக்கட்டத்தில்
கையாள்வதற்காக வடிவமைக்கப்பட்ட தேசிய
பேரிடர் மேலாண்மை சட்டம் இந்த அரசாங்கத்தின் கைகளில் மாநிலங்கள் மீதான தன்னுடைய
அதிகாரங்களை அதிகரித்துக் கொள்கின்ற மற்றுமொரு கருவியாக மாற்றமடைந்துள்ளது.
புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்திக்
கொள்ளல்
மூன்றாவதாக - மத்திய புலனாய்வு அமைப்பு, அமலாக்க இயக்குநரகம் போன்ற புலனாய்வு அமைப்புகளை தன்னை எதிர்க்கின்ற கட்சிகளையும், மாநில அரசுகளையும் பலவீனப்படுத்தவும். அச்சுறுத்தவும் மோடி அரசு பயன்படுத்தி வருகிறது. சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இருந்த ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அரசியல்வாதிகளை பாஜகவில் இணைத்துக் கொள்வது அவர்கள் மீதிருந்த கறையைத் தூய்மைப்படுத்துகிற கங்கா ஸ்னானம் போன்று இருக்கிறது என்று சில காலமாகவே சமூக வலைதளங்களில் ஒரு மீம் பரவி வருகிறது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை விசுவாசிகளாக்குவது
நான்காவதாக - தன்னை எதிர்க்கின்ற மாநில அரசாங்கங்களை
திட்டமிட்டுத் தாக்கி வருகின்ற மோடி அரசு தனக்கான விசுவாசத்திற்கான தேர்வுகளை இந்தியக்
காவல் பணி, இந்திய நிர்வாகப் பணி அதிகாரிகளிடம் மேற்கொள்ள முற்படுகிறது. நவீன
ஐஏஎஸ், ஐபிஎஸ் அமைப்புகளை உருவாக்கிய இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய்
படேல், அந்த அமைப்பில் உள்ள அதிகாரிகள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையில் திறமையான,
பயனுள்ள, முக்கியமான பாலமாக இருப்பார்கள்; அரசியல்வாதிகள் இடுகின்ற தவறான
உத்தரவுகளைப் பின்பற்றாமல், எப்போதும் அரசியலமைப்பை மனதில் கொண்டு முடிவுகளை
எடுப்பவர்களாக இருப்பார்கள் என்றும் கருதினார்.
ஆனால் பட்டேலின் நாற்காலியில் இன்றைக்கு அமர்ந்திருக்கும்
அமித்ஷா, தனது அதிகாரிகளிடம் இருந்து தனிப்பட்ட முறையிலான, சித்தாந்த ரீதியிலான
கீழ்ப்படிதலைக் கோருபவராக இருக்கிறார். மேற்கு வங்கம், மகாராஷ்டிரா போன்ற பாஜக
ஆட்சியில் இல்லாத முக்கியமான மாநிலங்களில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்
மத்தியில் உள்ள ஆளும் ஆட்சிக்கு தாங்கள் விசுவாசமாக இருப்பதாக அறிவிக்க வேண்டிய
அழுத்தத்தில் உள்ளனர். இதுபோன்று அரசு ஊழியரை நடத்துகின்ற வக்கிரமான பக்கச்சார்பு
கொண்ட பார்வை மத்திய-மாநில உறவுகள், அரசியலமைப்பு சார்ந்த நிர்வாகம் போன்ற சிந்தனைகளுக்கு
எதிரானதாகவே அமைந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநில அரசுகளைப் பலவீனப்படுத்த மோடி-ஷா ஆட்சி ஆளுநர் அலுவலகங்களையும் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்தச் செயல் குறிப்பாக மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களில் வெளிப்பட்டுள்ளது. குடியரசு வரலாற்றில் இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் தங்கள் கட்சி சார்பை மாநில ஆளுநர்கள் வெளிப்படையாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
தனிநபர் ஆளுமை வழிபாட்டு முறை
ஐந்தாவதாக - அதீத நிறுவன அதிகாரங்களைப் பயன்படுத்தி பிரதமரின் ஆளுமை வழிபாட்டு முறையை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் செயல் மாநிலங்களும் மையமும் சம பங்காளிகளாக இருக்கின்ற கூட்டாட்சி குடியரசாக இந்தியா இருக்கின்றது என்ற எண்ணத்தைப் பலவீனப்படுத்தியிருக்கிறது. கல்வி, சுகாதாரம், சமூக நலன் தொடர்பாக மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்களில் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் இருக்கின்ற தனிப்பட்ட முத்திரை அவர்களிடமுள்ள ஆழ்ந்த சர்வாதிகார மனநிலையையும், மாநிலங்களுடன் பாராட்டைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள அச்சத்தையுமே பிரதிபலிக்கிறது.
பிரதமரைச் சுற்றி இருந்து வருகின்ற ஆளுமை வழிபாட்டு முறை
மாநிலங்கள் மீது அங்கீகரிக்கப்படாத நிதிச் சுமையைச் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக
பிஎம்-கேர்ஸ் நிதியின் கட்டமைப்பைக் கவனியுங்கள். ரகசியமாக மறைக்கப்பட்டு, பொறுப்பேற்பு
எதுவுமில்லாத அந்த நிதி கூட்டாட்சிக் கொள்கையை மீறுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்
நிறுவனங்களின் சமூகப் பொறுப்பேற்பு என்ற அடிப்படையில் பிஎம்-கேர்ஸ் நிதிக்கு அளிக்கப்படுகின்ற
பங்களிப்புகளை வரிச் சலுகைகளாகக் கருதி தள்ளுபடி செய்யலாம் என்றிருக்கின்ற
நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பங்களிக்க
விரும்புபவர்களுக்கு அந்தச் சலுகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இறுதியாக இந்திரா காந்தியுடன் ஒப்பிடுகையில் நரேந்திர
மோடி 356ஆவது சட்டப்பிரிவை ஒப்பீட்டளவில் மிக அரிதாகவே பயன்படுத்தியிருக்கிறார் என்றாலும்,
சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட மாநிலத்தை ஒழித்த ஒரே பிரதமர் என்ற பெருமை அவருக்கு
மட்டுமே சொந்தமாகியுள்ளது. கோவா, அருணாசலம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, ஹிமாச்சல்
பிரதேசம் போன்றவை யூனியன் பிரதேசங்களாக இருந்து இறுதியில் மாநிலங்களாக மாறியவை. ஆனால்
மோடி ஆட்சியின் சட்டப்பூர்வ சாமர்த்தியம் (மக்களின் விருப்பத்தைப்
பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் ஆளுநர் கூறிக் கொண்டார்) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு
யூனியன் பிரதேசங்களாகத் தரம் தாழ்த்தும் வகையில் பயன்படுத்திக் கொள்ளப்பட்ட போது ஜம்மு
மற்றும் காஷ்மீர் மாநில நிலைமை முற்றிலும் மாறாக வேறு வழியிலே செல்ல வேண்டியிருந்தது.
மதவெறித் தொனியுடன் ஆணவம், தற்புகழ்ச்சி கொண்ட இந்தச் செயல் நிச்சயமாக இந்தியப்
பிரதமர் ஒருவரால் இந்திய கூட்டாட்சிக் கொள்கையின் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான
தாக்குதலாகவே உள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வெளியே மாநிலங்களின்
உரிமைகளைப் பலவீனப்படுத்துவதற்காக 356ஆவது பிரிவைக் காட்டிலும் நுட்பமான கருவிகளை மிகத்
தெளிவான வெற்றியுடன் நரேந்திரமோடியும் அமித்ஷாவும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஊடகங்களின் ஒத்துழைப்புடன் நமது சிறந்த பொதுப் பல்கலைக்கழகங்களை அழித்தல், ஆயுதப்
படைகளை அரசியல்மயமாக்குதல், பெரும்பான்மையினரின் நெறிமுறைகளுக்கு ஊக்கமளித்தல்,
நமது குடியரசின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீது நடத்தப்படுகின்ற பன்முனைத்
தாக்குதல்கள் ஆகியவையே புதிய இந்தியாவின் முக்கியமான சாதனைகளாக இருக்கின்றன.
Comments