அஜாஸ் அஷ்ரப்
நியூஸ்க்ளிக்
இஸ்லாமியப் பெண்கள் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும்
அல்லது கழற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படும் போதெல்லாம் ஹிஜாபிற்கான அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன
மாசசூசெட்ஸில் உள்ள கேம்பிரிட்ஜில் ஹிஜாப் (தலையில்
முக்காடு) அணிந்த பெண்கள் குழு ஒன்றை 1990களின் பிற்பகுதியில் ஒருநாள் மாலை
நேரத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் லீலா அகமதுவும், அவரது தோழியும் கண்டனர்.
கேம்பிரிட்ஜில் முக்காடு அணிந்திருந்த அந்தப் பெண்கள் ‘அமெரிக்காவில்
அடிப்படைவாதம் வேரூன்றுகிறதோ!’ என்ற ஆச்சரியத்தையே கெய்ரோவில் 1940களில் பிறந்து,
முக்காடு எதுவும் அணிந்து தன்னை மறைத்துக் கொள்ளாமலேயே பள்ளிப்படிப்பை முடித்திருந்த
அகமதுவிடம் ஏற்படுத்தியிருந்தனர்.
அகமதுவிடம் எழுந்த அந்தக் கேள்வியே முக்காடைக் கழற்றுதல்,
மீண்டும் போட்டுக் கொள்ளுதல் என்று முஸ்லீம்கள் உலகில் கடந்த காலங்களில் எழுந்த
மாற்றங்கள் குறித்த ஆய்வை மேற்கொள்வதற்கான ஆவலைத் தூண்டியது. அதற்குப் பின்னர் ‘ஓர்
அமைதிப் புரட்சி: முக்காடின் மறுமலர்ச்சி
- மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கா வரை’ என்ற புத்தகத்தை அவர் எழுதுவதற்கான
காரணமாகவும் அது அமைந்தது.
அகமது எழுதியுள்ள அந்தப் புத்தகம் ஹிஜாப் மறுப்பு
மற்றும் எதிர்ப்பிற்கான அடையாளம், இணக்கம் மற்றும் ஒப்புதலுக்கான அடையாளம் என்று
பல அர்த்தங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்று குறிப்பிடுகிறது. ஹிஜாப் அணிய
வேண்டுமென்று பெண்களை வற்புறுத்துவது அல்லது அதனைக் கழற்றி வீசச் சொல்வது
வெறுப்பையே தூண்டும் என்பதை ஹிஜாபிற்கு எதிராகப் பொங்கி எழுந்திருக்கின்ற
ஹிந்துத்துவ அடிவருடிகள் புரிந்து கொள்ள வேண்டும். நீதித்துறைக்கும் ஓரளவு
பொருந்திப் போகின்ற உண்மையாகவே அது இருக்கின்றது.
அரபு உலகின் அறிவுசார் தலைநகரான கெய்ரோவில் முக்காடைக்
கழற்றிய நிகழ்வு உச்சத்தை எட்டியது குறித்து முதலில் காணலாம்.
அகற்றப்பட்ட முக்காடு
'மறையும் முக்காடு - பழைய ஒழுங்கிற்கு
விடப்பட்டிருக்கும் சவால்' என்ற தலைப்பில் 1956ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில்
மத்திய கிழக்கிலிருந்து முக்காடு வெளியேறி விடும் என்று வரலாற்றாசிரியர் ஆல்பர்ட்
ஹூரானி கணித்திருந்தார். காசிம் அமின் எழுதி 1899ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ‘பெண் விடுதலை’ என்ற புத்தகமே முக்காடை அகற்றும்
போக்குகளுக்கான காரணமாக அமைந்தது என்று அந்தக் கட்டுரையில் ஆல்பர்ட் ஹூரானி
குறிப்பிட்டிருந்தார்.
முக்காடு போடப்பட்டு வீட்டிற்குள்ளேயே பெண்கள் அடைத்து
வைக்கப்பட்டிருப்பதாலேயே எகிப்து பின்தங்கியுள்ளது என்ற வாதத்தை முன்வைத்த அமின் எகிப்து
ஐரோப்பாவைப் போல ஆக வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அமின் ‘எகிப்தில்
இருக்கின்ற நிலைமையே மாறி வருகின்ற உலகில் குழந்தைகள் சமூகமயமாகிட முடியாதவாறு
வைத்திருக்கிறது’ என்று கூறினார். ஐரோப்பாவுடனான தொடர்பு அதிகரித்தது, பிரெஞ்சு
மற்றும் பிரிட்டிஷ் வெற்றிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் போன்ற காரணங்களால் ஏற்கனவே எகிப்தில்
நிலவி வந்த கருத்துக்களையே அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
ஐரோப்பாவுடன் ஏற்பட்டிருந்த தொடர்பு தொழில்நுட்ப
அற்புதங்களை - எடுத்துக்காட்டாக ரயில்கள், டிராம்களை - மட்டுமல்லாது எகிப்தியர்களிடம்
சமத்துவம், ஜனநாயகம், தகுதியின் அடிப்படையிலான அதிகாரம் போன்ற கருத்துகளையும்
அறிமுகப்படுத்தியிருந்தது. எகிப்தில் முக்காடு அணியாத ஐரோப்பிய பெண்கள் மிகவும் சாதாரணமாகக்
காணப்பட்டார்கள். ஐரோப்பியத் தாக்கம் எகிப்தியப் பெண்களை - ஆரம்பத்தில் உயர்
வகுப்பினரையும், பின்னர் நடுத்தர வர்க்கத்தினரையும் - வெளியில் வரத் தூண்டியது.
சமகாலத்தில் நடந்துள்ளவற்றை மேற்கோள் காட்டுவதன் மூலம் முக்காடை அகற்றிக் கொள்வது
எந்த அளவிற்கு விரைவாகப் பரவியது என்பதை தனது புத்தகத்தில் அகமது சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகமுக்கியமான பெண் உரிமை ஆர்வலராக பின்னர் மாறிய
பாலஸ்தீனியரான அன்பரா காலிடி எகிப்தியப் பெண்கள் ‘அகற்றப்பட்ட திரை’ மூலம் இந்த
உலகைப் பார்க்கின்றனர் என்று 1910ஆம் ஆண்டு மிகவும் உற்சாகத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
அதே ஆண்டில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் முக்காடிட்டுக் கொள்ளாத பெண்கள் என்ன
‘வானத்திலிருந்து’ விழுந்தவர்களா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அல்-சுஃபுர்
அல்லது முக்காடை அகற்றுதல் என்ற பெயரில் 1914ஆம் ஆண்டில் தேசிய செய்தித்தாள் ஒன்று
தொடங்கப்பட்டது. அந்த செய்தித்தாளின் ஆசிரியர் ‘எகிப்தில் முக்காடு போட்டுக்
கொண்டிருப்பது பெண்கள் மட்டுமல்ல... நமது தேசமே முக்காடு போட்டுக் கொண்டிருக்கும்
தேசமாத்தான் இருக்கிறது’ என்று எழுதியிருந்தார்.
பெண்கள் முக்காடை அகற்றிக் கொண்ட வேகம் உண்மையில் ஆச்சரியப்படும்
வகையிலே இருந்தது அகமதுவின் சுயசரிதையில் இருந்து தெளிவாகத் தெரிய வருகிறது: ‘அந்தக்
காலகட்டத்தில் வயதான பெண்களில் பெரும்பாலானோர் (1908ஆம் ஆண்டு பிறந்த எனது தாயின்
தலைமுறையைச் சார்ந்த பெண்கள், அதே போல எனது தலைமுறையைச் சார்ந்த பெண்கள்) தங்கள்
முக்காடை அகற்றிக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் யாரும் ஒருபோதும் முக்காடு
போட்டுக் கொண்டதே இல்லை’ என்று அகமது எழுதியுள்ளார்.
ஜனநாயகம், சமத்துவம், தகுதியின் அடிப்படையிலான அதிகாரம்
போன்ற கொள்கைகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகமாக மாறுவதற்காக எகிப்திடமிருந்த
தேடலி உருவகமாகவே முக்காடை அகற்றுவது இருந்தது. பெண்களைப் பொறுத்தவரை தாங்கள்
விரும்பும் விதத்தில் வாழ்வதற்கு, ஆடையணிந்து கொள்வதற்கு அவர்களிடம் இருந்த விருப்பத்தின்
வெளிப்பாடாகவும் அது அமைந்தது என்று அகமது குறிப்பிடுகிறார்.
முக்காடு அகற்றப்படுவதை
எதிர்த்தவர்கள்
முக்காடு அகற்றப்படுவதை எதிர்த்தவர்களும் அப்போது இருந்தனர்.
தேசியவாத பத்திரிகை ஒன்றின் உரிமையாளரின் மனைவியான பாத்திமா ரஷீத் ‘முக்காடு என்பது
நம்மைத் தடுத்து நிறுத்துகின்ற நோயில்லை. மாறாக அதுவே நம்முடைய மகிழ்ச்சிக்கான
காரணமாக இருந்து வருகிறது...’ என்று 1908ஆம் ஆண்டு எழுதியிருந்தார். முக்காடு
போடாத பெண்களுக்குச் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்குமாறு மத அறிஞர்கள்
1914ஆம் ஆண்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
‘எகிப்து முன்னேற்றத்தைக் காண்பது இஸ்லாத்திற்கு
மாறுவதன் மூலமாக நடக்குமே தவிர ஐரோப்பாவைப் பின்பற்றுவதால் அல்ல’ என்ற சிந்தனைப்
பள்ளியைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருந்தனர். எகிப்தை இஸ்லாமியமயமாக்குவதன் மூலம் எகிப்திய
மனங்களில் உள்ள காலனித்துவம் அகற்றப்பட வேண்டும் என்றே அவர்கள் விரும்பினர். ஹசன்
அல்-பன்னா அவர்களில் மிகவும் முக்கியமானவராக இருந்தார். முஸ்லீம் சகோதரத்துவம்
என்ற அமைப்பை 1928ஆம் ஆண்டு ஹசன் அல்-பன்னா நிறுவினார். அந்த அமைப்பு எகிப்தை இஸ்லாமியமயமாக்கும்
திட்டத்திற்காக எகிப்தியர்களை அணிதிரட்டக் கூடிய வகையில் பள்ளிகள், மருத்துவ
வசதிகள், தொழிற்சாலைகள் கொண்ட வலையமைப்பை நிறுவியது.
ஆனால் மன்னர் ஃபாரூக்கின் ஆட்சி முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பை
1948ஆம் ஆண்டு கலைத்து படுகொலைகளைச் செய்யுமாறு தன்னுடைய ஆயுதப் பிரிவை தூண்டியது.
ஃபாரூக் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பு 1954ஆம்
ஆண்டு அதிபர் கமல் அப்துல் நாசரைக் கொலை செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியது.
சோசலிசக் கொள்கைகள், அனைத்து அரபு தேசியவாதம், எகிப்தை இஸ்லாமிய நாடாக மாற்ற
மறுத்தது போன்ற நாசரின் செயல்பாடுகளுக்கு எதிராக முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பு அவரிடம்
பகைமை பாராட்டி வந்தது.
சகோதரத்துவ அமைப்பை ஒடுக்குமாறு நாசர் உத்தரவிட்டார். அதற்குப்
பின்னர் ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ‘அனைத்து
முஸ்லீம்களும் தங்கள் அடையாளத்தை இஸ்லாத்துடன் பிணைத்துக் கொள்ள வேண்டுமே தவிர
தேசியம் அல்லது இனத்துடன் அல்ல’ என்று சகோதரத்துவ அமைப்பிடம் இருந்த நம்பிக்கையுடன்
இருந்த சவூதி அரேபியாவிற்குப் பலரும் தப்பிச் சென்றனர். உள்ளூர் அணிதிரட்டல்கள்,
'வெளிநாட்டு' தாக்கங்களை வேரறுப்பதன் மூலம் ‘தூய இஸ்லாத்தை’ மீட்டெடுக்க முயன்ற வஹாபிசத்தை ஏற்றுமதி செய்வதற்காக சகோதரத்துவ அமைப்டைச் சார்ந்த அறிவுஜீவிகளை சவூதி
அரேபியா தன்னுடன் வைத்துக் கொண்டது. அமெரிக்காவின் ஆதரவை அவர்களும், சோவியத்
யூனியனின் ஆதரவை நாசரும் பெற்றனர்.
முக்காடை அகற்றுவது என்று பெரும்பாலாக இருந்து வந்த போக்குக்கு
எதிரான சவால் தவிர்க்க முடியாத வகையிலேயே இருந்தது. உண்மையில் முக்காடு எகிப்திலிருந்து
முற்றிலுமாக மறைந்து போய் விடவில்லை. கெய்ரோவை ஒட்டிய வறுமை நிறைந்த மாவட்டங்களில்
இருந்த பெண்கள் ‘மிலாயா லாஃப்’ எனப்படும் தலை மற்றும் உடலை மறைக்கும் வகையில் ஆடைகளின்
மேல் அணிந்து கொள்ளும் கருப்பு உறையால் தங்களை மறைத்துக் கொண்டிருந்தனர். நடுத்தர
வர்க்கத்தைச் சார்ந்த பழமைவாதிகள் பெரும்பாலும் தலையை மறைக்கும் அளவுக்கு நீளமாக,
நாடியில் கட்டப்படும் வகையில் இருந்த வண்ணமயமான ஐரோப்பிய பாணி முக்காடை அணிந்தனர்.
மீண்டும் திரும்பி வந்த முக்காடு
இஸ்ரேல் 1967ஆம் ஆண்டு நடந்த போரில் எகிப்தைத் தோற்கடித்த போது, மறைந்து போயிருந்த முக்காடு
விவகாரத்தில் குறிப்பிடத்தக்கதொரு திருப்பம் ஏற்பட்டது. தோல்விக்குப் பிறகு எகிப்து
முழுவதும் பரவியிருந்த விரக்தி அலை நாசர் இஸ்லாத்தை விட்டு விலகியதாலேயே எகிப்து தோல்வியடைந்தது
என்று எண்ணத்தை எகிப்து மக்களிடம் தூண்டி விட்டிருந்தது. மக்களைத்
திருப்திப்படுத்துவதற்காக ‘புதியதொரு சமுதாயத்தை உருவாக்க முயன்ற எகிப்துக்கு
பாடம் கற்பிக்க அல்லா முயன்றிருக்கிறார்’ என்று மத நம்பிக்கையை பகிரங்கமாக
உறுதிப்படுத்தும் வகையிலே நாசர் பேசிய பேச்சும் அதுபோன்றதொரு பார்வை மக்களிடையே உருவாகக்
காரணமானது. அதற்குப் பிறகு முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் செயற்பாட்டாளர்களை நாசர்
சிறையிலிருந்து விடுவித்தார்.
அமெரிக்காவைக் கவர்வதற்காக நாசரின் வாரிசான அன்வர் சதாத்,
அரசியலில் இருந்து விலகி இருக்கும் வரையில் சகோதரத்துவ அமைப்பு தங்களுடைய இஸ்லாமியப்
பரப்பலை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதித்தார். பல்கலைக்கழக வளாகங்களில்
இடதுசாரிகளை ஒடுக்குவதற்காக அந்த அமைப்பினருக்கு அவர் ஆயுதங்களையும் வழங்கினார். இடதுசாரிகள்
அப்போது முதலாளித்துவத்திற்கு ஆதரவாக சதாத் திரும்பியிருந்ததைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
முதன்முதலாக 1970களின் முற்பகுதியில் பல்கலைக்கழக
வளாகங்களில் ஹிஜாப் மீண்டும் தோன்றியதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. பழமைவாதப்
பிரிவினர் முன்னர் விரும்பிய வகையிலே தலை, கழுத்தை மூடி, நாடியுடன்
கட்டப்பட்டிருக்கும் வகையில் அணிந்து கொள்வது என்று ஹிஜாப் அணியும் வழக்கம் மறுசீரமைக்கப்பட்டது.
ஆனால் அது முன்பு போல வண்ணமயமாக இல்லாமல், ‘கில்பாப்’ என்ற நீண்ட, தளர்வான அங்கி,
பரந்த நீண்ட கைகளை உடைய சட்டைகளுடன் இருந்தது. அது ‘சகோதரத்துவ அமைப்பின்
அதிகாரப்பூர்வமான ‘ஜியா இஸ்லாமி’ என்ற உடை போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
எகிப்திய மாணவிகளில் ஒரு சிறிய பகுதியினரே தங்களுடைய ஆடையை
மாற்றிக் கொண்டிருந்தனர் என்றாலும், ஃபத்வா எல் கிண்டி, ஜான் ஆல்டன் வில்லியம்ஸ்
போன்ற அறிஞர்கள் புதிய ஹிஜாப்பை அணிந்தவர்களை நேர்காணல் செய்திருந்தது
கவனிக்கத்தக்கது. மேற்குலகைப் பின்பற்றுவது பயனற்றது என்ற உணர்வுகளை 1967ஆம் ஆண்டு
போர் அவர்களிடம் தூண்டியது என்பதைக் குறிப்பிடும் வகையிலேயே அவர்களுடைய
நேர்காணல்கள் இருந்தன என்று அகமது தெரிவிக்கிறார். இஸ்ரேலுடன் 1973ஆம் ஆண்டு
நடைபெற்ற போரில் எகிப்திற்கு கிடைத்த ஆதாயங்கள் மிகவும் குறைவாக இருந்த போதிலும், நாடு
இஸ்லாத்தின் பக்கம் திரும்பியதற்கான ஆதாரமாக அவை மேற்கோள் காட்டப்படுகின்றன.
முக்காடை அகற்றுவது நம்பிக்கையின் அடையாளம் என்று இருந்ததற்கு
மாறாக ஹிஜாப் அணிந்து கொள்வது நம்பிக்கையின் அடையாளமானது.
ஹிஜாப் பரவியதால் ஏற்பட்ட அதிர்ச்சி
மீண்டும் ஹிஜாப் திரும்பி வந்தது குறித்து எழுதிய பத்திரிகையாளர்
அமினா அல்-சைத் அதை ‘இறந்து போனவர்களின் கவசம்’ என்று குறிப்பிட்டார். ஹிஜாப்பின்
மறுபிரவேசம் குறித்து திகைப்படைந்த பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் சில சமயங்களில்
எல் கிண்டி, வில்லியம்ஸ் குறித்த அச்சத்தையும் வெளிப்படுத்தினர்.
1971ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவராக இருந்த
எக்ரம் பெஷீர் குறித்து அகமது வெளிக்கொணர்ந்த தகவல்களிலிருந்து ஹிஜாப் அணிந்த
பெண்களுக்கும், பெரியவர்களுக்கும் இடையே நடந்த விவாதம் தெளிவாகத் தெரிய வருகிறது.
பெரும்பாலும் குட்டைப் பாவாடை உடை அணிந்திருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில்
பெஷீர் மட்டும் ஹிஜாப் அணிந்து தனித்து நின்றார். பெஷீரின் அத்தை ‘விளையாட்டுத்தனமாக இருக்காதே’
என்று அவரிடம் அடிக்கடி கேட்டுக் கொள்வார்; அவருடைய மாமா ‘இதுபோன்று உடையணிந்த’
அவர் கணவனை எப்படி கண்டுபிடிக்கப் போகிறார் என்று
கவலைப்படுவதுண்டு; பேராசிரியர் ஒருவரும் அடிக்கடி அவரது ஆடை குறித்து கருத்து
தெரிவித்து வந்திருக்கிறார். அதிக வெப்பமாக இருந்த ஒரு நாளில் அதை ஏன் ஆடையின்
மீது பெஷீர் அணிந்திருக்கிறாய் என்று கேள்வியெழுப்பிய அந்தப் பேராசிரியருக்கு ‘ஏனென்றால்
நான் ஒரு முஸ்லீம்’ என்று பெஷீர் உடனடியாகப் பதிலளித்தார். மிகுந்த சீற்றத்துடன் அந்தப்
பேராசிரியர் ‘நான் முஸ்லீம், என் மனைவி முஸ்லீம், இவர்கள் [மாணவர்கள்]
முஸ்லீம்கள்’ என்று எதிர்வினையாற்றினார்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இல்லாமால் - குறிப்பாக சரியான
உடை அல்லது இஸ்லாமிய ஆடை என்று அதனை முன்னிறுத்தி சமூகத்தை இஸ்லாமியமயமாக்கிய
சகோதரத்துவ அமைப்பு இல்லாமல் - ஹிஜாப் மீண்டும் திரும்பி வந்திருக்க முடியாது.
கீழ்தட்டு வகுப்பினர் செல்ல முடிந்த அந்த அமைப்பினரிடமிருந்த பள்ளிகள்,
மருத்துவமனைகளின் வலையமைப்பின் மூலமாகவே அவர்களுக்கான செல்வாக்கு பெறப்பட்டது. நாட்டை
இஸ்லாமியமயமாக்குகின்ற வகையில் அந்த மக்களை மூளைச்சலவைக்கு ஆட்படுத்த அந்த
வலையமைப்பே உதவியது.
1990களில் மக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற ஆடை
அணியும் முறையாக ஹிஜாப் மாறியிருந்தது. அந்தக் காலகட்டமே தன்னுடைய கல்வி முறையை
இஸ்லாமிய-நீக்கம் செய்வதற்கு அரசாங்கத்தைத் தூண்டிய வகையில் இஸ்லாமிய
அடிப்படைவாதிகள் வன்முறையில் ஈடுபட்ட காலமாகவும் இருந்தது. அப்போது முதலாம்
வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சிறுமிகள் ஹிஜாப் அணிந்து வருவது தடை செய்யப்பட்டது.
மூத்த மாணவிகளைப் பொறுத்தவரை பாதுகாவலர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதத்தைப்
பெற்றுக் கொண்டு வருபவர்கள் மட்டுமே
ஹிஜாப் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.
தங்களுடைய சக மாணவிகள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படாததைக்
கண்டு பள்ளி மாணவிகள் பீதியடைந்தனர். அதுவரையிலும் ஹிஜாப் அணிந்திராத பெண்களும்கூட
தங்கள் ஒற்றுமையைக் காட்டுகின்ற விதத்திலே அதை அணிந்து கொள்ளத் துவங்கினர்.
போராட்டங்கள் வெடித்தன. ஊடகங்கள் விமர்சனம் செய்தன. பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அது தொடர்பாக தொடரப்பட்ட பல வழக்குகளில் அரசு தோல்வியடைந்தது. இன்றும்கூட உயர்தர
உணவகங்களும், ஓய்வு விடுதிகளும் ஹிஜாப் அணிந்து வரும் பெண்களை தாழ்த்தப்பட்ட
வகுப்பினராகக் கருதி உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை. அதுபோன்ற நடைமுறைக்கு எதிராக சமூக ஊடகப் பிரச்சாரங்கள்
தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஹிஜாப் வர்க்கப் பரிமாணம் மட்டுமல்லாது அடையாளக்
குறியீட்டையும் கொண்டுள்ளது.
வெவ்வேறு நிலைகளில் ஈரான், பிரான்ஸ்
ஈரானிய ஆட்சியாளர் ரேசா ஷா பஹ்லவி 1936ஆம் ஆண்டு ஜனவரி 8
அன்று பொது இடங்களில் முக்காடு, சாதர் போன்ற ஆடைகளைத் தடைசெய்கின்ற காஷ்-இ-ஹிஜாப்
ஆணையை வெளியிட்டார். அதுபோன்ற ஆடைகளை அணிந்துள்ள பெண்களிடமிருந்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக
அவற்றை அகற்ற வேண்டும் என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பெண்கள்
பலரும் வெளியில் செல்வதையே நிறுத்திக் கொண்டனர். வீட்டிலேயே தங்கள் குழந்தைகளுக்கு
கல்வி அளிக்க பழமையான குடும்பங்கள் முன்வந்தனர். அப்போது ஈரான் அரசியலின்
ஒருங்கிணைந்த அங்கமாக முக்காடு மாறியிருந்தது.
முக்காடு போடலாமா, வேண்டாமா என்பதை பெண்களே
தீர்மானித்துக் கொள்ள அனுமதித்த மகன் முகமது ரேசா ஷாவிற்கு ஆதரவாகப் பதவி
விலகுமாறு ரேசா ஷா பஹ்லவியை ஆங்கிலேயர்கள் 1941ஆம் ஆண்டு கட்டாயப்படுத்தினர்.
பின்வந்த காலங்களில் புதியதொரு பொதுக் கலாச்சாரம் உருவானது. சமூகக் கூட்டங்களில்
காலத்துக்கேற்ற உடையணிந்து, தலையில் எதுவும் அணியாதிருந்த பெண்கள் சாதர் அணிந்திருந்த
பெண்களுடன் கலந்தே காணப்பட்டனர். ஆயினும் ஷாவின் எதேச்சதிகார ஆட்சி ஈரானியர்களை
தெருக்களுக்கு அழைத்து வந்தது. மதம் சார்ந்தவர்களாக இல்லையென்றாலும் அதைப்
பொருட்படுத்தாமல் அவர்களுடன் சேருவதற்காக பெண்கள் அப்போது சாதர் அணிந்து கொண்டனர்.
ஷாவின் மேற்குலக ஆதரவிற்கு எதிராக இருந்த ஈரானின் வெறுப்பை அடையாளப்படுத்தும்
வகையிலேயே அவர்கள் அணிந்த அந்த சாதர் இருந்தது.
அதிகாரத்திலிருந்து ஷாவை வெளியேற்றிய 1979ஆம் ஆண்டுப்
புரட்சிக்குப் பின்னர் அவர் நாடுகடத்தப்பட்டார். அதற்குப் பின்னர் பெரும் தலைவரான
ஆயதுல்லா ருஹோல்லா கொமேனி பெண்கள் கட்டாயம் முக்காடு அணிய வேண்டும் என்று
கட்டளையிட்டார். ஆயிரக்கணக்கான பெண்கள் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று அதற்கு
எதிராகத் திரண்டு போராட்டம்
நடத்தினர். ஹிஜாப் சட்டத்தைச் செயல்படுத்துவதற்காக காஷ்ட்-இ-எர்ஷாத் எனப்படும்
ஆயிரக்கணக்கான ரகசிய முகவர்களை ஈரானிய ஆட்சி நியமித்தது. 1993 மற்றும் 2003க்கு
இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் முப்பதாயிரம் பெண்கள் முறையாக ஹிஜாப் அணியாததற்காகக்
கைது செய்யப்பட்டனர் என்று ‘ஈரானுக்கான நியாயம்’ (ஜஸ்டிஸ் ஃபார் ஈரான்) என்ற
தன்னார்வத் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹிஜாபிற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று
வந்தன. பத்து லட்சம் கையெழுத்துக்களைப் பெறுவதற்கான ‘பாரபட்சமான சட்டங்களை
நீக்குவது’ எனும் சமத்துவத்திற்கான மாற்றம் என்ற இயக்கம்
2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பின் முக்கிய அமைப்பாளர்களை அரசாங்கம் கைது
செய்தது. ஆனாலும் அவர்கள் அதற்கு முன்பாகவே தங்கள் இயக்கத்தின் இலக்குகளை
விளக்குவதற்கான கூட்டத்தைக் கூட்டியிருந்தனர். ஓராண்டு கழித்து அதிபர்
அலுவலகத்தின் ஒரு பிரிவான ‘செயல்நெறிசார் ஆய்வுகளுக்கான ஈரானிய மையம்’ சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஹிஜாப் அணிவதைக் கட்டாயப்படுத்துவதை நாற்பத்தியொன்பது
சதவிகித ஈரானியப் பெண்கள் எதிர்க்கின்றனர் என்று கண்டறியப்பட்டிருந்தது.
ஒவ்வொரு புதன்கிழமையும் ஆண்களும் பெண்களும் வெள்ளை
ஆடைகள், வெள்ளை முக்காடு அணிந்து கொள்ளும் ‘வெள்ளைப் புதன்’ பிரச்சாரம் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தப்
பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் தங்களுடைய முக்காடுகளைக் கழற்றி, குச்சிகளில்
பொருத்தி மேலுயர்த்திப் பிடித்து அசைக்கவோ அல்லது அமைதியாக நின்று கொண்டிருக்கவோ
செய்வார்கள். விடா மோவாஹெட் என்ற முப்பத்தியொரு வயதுப் பெண் டிசம்பர் 27 அன்று ஒரு
பெட்டியின் மேல் ஏறி நின்று, தனது ஹிஜாபைக் கழற்றி குச்சியில் மாட்டி அசைத்தார்.
சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்ட அவரது போராட்டம் குறித்த புகைப்படம் அதிகமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
‘பெண்களின் அதிகாரம், தாங்கள் அணிய விரும்புவதைத்
தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தை சட்டத்திற்கு கீழ்ப்படியாமையைப் பயன்படுத்திப் பெறுவது’
ஆகியவற்றையே இத்தகைய எதிர்ப்புகள் குறித்தன என்று கல்வியாளர் பாஹே சிராஜி கருத்து
தெரிவித்தார்.
உடை அணிவதற்கான தேர்வை அதற்கு முற்றிலும் மாறான வழியில் பிரான்ஸ் கட்டுப்படுத்தியது. பொதுப் பள்ளிகளுக்கு மாணவர்கள்
மதச் சின்னங்களை அணிந்து வருவதை பிரான்ஸ் 2004ஆம் ஆண்டு தடை செய்தது. அந்த
நடவடிக்கை முஸ்லீம் மாணவிகள் தலையில் முக்காடு அணிந்து வருவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டது
என்றே கருதப்பட்டது. பொது இடங்களில் புர்கா அணிவதை பிரான்ஸ் 2010ஆம் ஆண்டு தடை செய்தது.
பிரெஞ்சு அரசாங்கம் வெளியிட்ட ஒரு பிரச்சாரத்தில் ‘குடியரசு மறைக்கப்படாத
முகத்துடன் வாழ்கின்றது’ என்று அறிவிக்கப்பட்டது.
பிரெஞ்சு அரசாங்கம் மற்றுமொரு சட்டத்தையும் கடந்த ஆண்டு நிறைவேற்றியது.
அந்தச் சட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள் மதச் சின்னங்களை அணிவதைத் தடைசெய்கின்ற சட்டம்
தனியார் பொதுச்சேவை ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் நீட்டிக்கப்பட்டது.
மதச்சார்பின்மையைக் காரணம் காட்டி முஸ்லீம்களுக்கு எதிராகப் பாகுபாடு
காட்டப்படுகிறது என்று அதிபர் இமானுவேல் மக்ரோனுக்கு எதிராக இடதுசாரிகள் தாக்குதலை
மேற்கொண்டனர். அது மட்டுமல்லாமல், #HandsOffMyHijab என்ற ஹேஷ்டேக்குடன் தீவிரமான சமூக ஊடகப் பிரச்சாரமும்
அப்போது முளைத்தெழுந்தது.
நாவலாசிரியரான மர்ஜானே சத்ராபி ஈரானில் பிறந்து அங்கேயே
பள்ளிப்படிப்பை முடித்தவர். இன்று அவர் பாரிஸில் வசித்து வருகிறார். ஈரானில்
இஸ்லாமியப் புரட்சி நடந்தபோது சத்ராபிக்கு பத்து வயது. தி கார்டியனில் வெளியான கட்டுரையில் ஹிஜாப் அணிய வற்புறுத்தப்பட்டதால் தான் வெறுப்படைந்ததாக
சத்ராபி கூறியுள்ளார். ‘மதத்தை வெளிப்படுத்திக் கொள்வதை நோக்கித் தள்ளப்படுவது எவ்வாறு இருக்கும் என்பதை நான்
அறிவேன். அதனால் மதச்சார்பற்ற நிலைக்குத்
தள்ளப்படுவதும் எவ்வாறு இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஈரானியப்
பெண்களிடம் வெறியர்கள் செய்த தவறை நாம் செய்ய வேண்டாம். மதச்சார்பின்மை என்ற
பெயரில் நடத்தப்படும் இதுவும் அதேபோன்ற வன்முறைதான்’ என்றும் சத்ராபி
கூறியிருந்தார்.
அல்ஜியர்ஸ் போர்
ஹிஜாப் மீது பிரான்ஸ் கொண்டிருந்த அணுகுமுறை அதன்
காலனித்துவ வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததாகும். 1958ஆம் ஆண்டு அல்ஜீரிய
சுதந்திரப் போரின் போது, பெண்களின் முக்காடை அகற்றுவதற்காக பெருந்திரளான பொது
விழாக்களை பிரெஞ்சு காலனித்துவ ஆட்சி நடத்தியது. தங்களை விடுவிப்பது என்ற
கொளகிஅயுடன் இருந்த பிரெஞ்சுக்காரர்களை அல்ஜீரியப் பெண்கள் ஆதரித்ததை
உணர்த்துவதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டது. பிந்தைய ஆண்டுகளில் பெரும்பாலான பெண்கள்
ஏழைகளாக இருந்ததுவும், முக்காடை அகற்ற கட்டாயப்படுத்தப்பட்டனர் என்பதுவும்
கண்டறியப்பட்டது.
புகழ்பெற்ற காலனித்துவ எதிர்ப்பு அறிவுஜீவியான
ஃபிரான்ட்ஸ் ஃபானன் அந்த பிரெஞ்சுக் கோட்பாடு பற்றி ‘அல்ஜீரிய சமுதாயத்தின் கட்டமைப்பை, அதன்
எதிர்ப்பாற்றலை அழிக்க விரும்பினால், முதலில் நாம் பெண்களை வென்றெடுக்க வேண்டும்;
தங்களை மறைத்துக் கொண்டிருக்கும் திரைக்குப் பின்னால் உள்ள அவர்களைக் கண்டுபிடிக்க
வேண்டும்...’ என்று கூறினார்.
முக்காடை அகற்றிய நிகழ்விற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கின்ற
வகையிலே அல்ஜீரியப் பெண்கள் பலரும் முக்காடு அணிந்து கொள்ளத் தூண்டப்பட்டனர்.
ஆனால் முக்காடு அணியாத மேற்கத்திய பெண்களைப் போன்று இருக்குமாறு அவர்கள் அதனைப்
பயன்படுத்திக் கொள்வதற்கும் உதவி செய்தது. மேற்கத்திய உடையணிந்திருந்த பெண்களை சோதனைகள்
எதையும் மேற்கொள்ளாமலேயே உடனடியாகச் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல பிரெஞ்சு
காவலர்கள் அனுமதித்தனர். அவ்வாறு சோதனைகளின்றி சோதனைச் சாவடிகளை விட்டு
வெற்றிகரமாக வெளியேறிய பெண்கள் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் பிரெஞ்சு
துருப்புக்கள் மீது சில சமயங்களில் தாக்குதல்களை நடத்தி வந்த எதிர்ப்புப் போராட்டம் நடத்தி வந்தவர்களுக்கு
கொண்டு சென்று கொடுத்தனர்.
அல்ஜீரியாவில் 1962ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி வீழ்ந்த
பிறகு, நகர்ப்புறங்களில் இருந்த அல்ஜீரியப் பெண்கள் பலரும் முக்காடு அணிவதை
நிறுத்திக் கொண்டனர். இருந்தாலும் 2019ஆம் ஆண்டு ஐந்தாவது முறையாகத் தேர்தலில்
போட்டியிடுவது என்று அதிபர் அப்தெலாசிஸ் பௌட்ஃபிலிகா எடுத்த முடிவிற்கு எதிராக
வீதிகளில் இறங்கிய பெண்கள் எதிர்ப்புச் சின்னமாக ஹிஜாப் குறித்த தங்களுடைய நினைவுகளை
வலியுறுத்தியே போராடினர். போராடிய அந்தப் பெண்கள் அல்ஜீரிய முக்காடை அணிந்திருந்தனர்.
போராடிய அந்தப் பெண்களிடம் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஹோட்டல்
ஒன்றின் மீது குண்டுவீசித் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை (பின்னர்
சிறைவாசமாக மாற்றப்பட்டது) விதிக்கப்பட்ட டிஜமிலா பௌஹிரெட் உரையாற்றினார்.
இந்தியாவிற்கான படிப்பினைகள்
உலக வர்த்தக மையத்தின் மீதான 9/11 தாக்குதலுக்குப் பிறகு
தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அவமானங்கள், வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக முஸ்லீம்
பெண்களில் சிலர் ஹிஜாப் அணிவதை நிறுத்திக் கொண்டனர். 9/11க்குப் பிறகு அந்த
பிரச்சனைக்குரிய மாதங்களில் முஸ்லீம்கள் அல்லாத பெண்கள் தாங்கள் விரும்புவதைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை முஸ்லீம் பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று
வலியுறுத்தியது மிகவும் குறிப்பிடத்தக்க செயலாக இருந்தது என்று தனது புத்தகத்தில்
லீலா அகமது குறிப்பிட்டுள்ளார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் 2002ஆம் ஆண்டு
வெளியான எமிலி வாக்ஸின் அறிக்கையில், பல்கலைக்கழக வளாகங்களில் ஹிஜாப் அணிந்த முஸ்லீம்
மாணவிகளின் அதிகரிப்பு குறிப்பிடத்தக்க அளவிலே இருந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஹிஜாப் அணிந்து கொள்வதன் மூலம் தங்களுடைய பெருமிதத்தை - முஸ்லீம்கள் என்பதாக உணர்வதில்
தங்களுக்குள்ள பெருமிதத்தை தாங்கள் வெளிப்படுத்திக் கொள்கிறோம் என்று அந்த
மாணவிகள் வாக்ஸிடம் கூறினார்கள்.
வாக்ஸ் போன்றவர்களின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி அகமது ‘வெவ்வேறு
சமூகங்களில் [ஹிஜாப்] அணிந்து கொள்பவர்கள் அதுகுறித்து வெவ்வேறு பொருளில் வெளிப்படுத்துகின்ற
கருத்துகளில் தெளிவான தொடர்ச்சி உள்ளது’ என்று எழுதியுள்ளார். ‘பெரும்பான்மை
சமூகத்தின் கருத்துக்களுக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற திறனை
ஹிஜாப் கொண்டிருக்கின்றது; வெளிப்படையாக எதிர்ப்பைப் பதிவு செய்கின்ற
சிறுபான்மையினர் என்று தங்களை அடையாளப்படுத்திக் காட்டிக் கொள்வதன் மூலம் பிரதான
சமூகத்திடமிருந்து வருகின்ற சமத்துவமின்மை, அநீதிகளுக்கு எதிராகச் சவால் விடும்
வகையிலே தங்களுடைய பாரம்பரியம், விழுமியங்களை உறுதிப்படுத்திக் கொள்வதாக ஹிஜாபை
அணிவது இருக்கிறது என்பதே அனைத்து சமூகங்களிலும் ஹிஜாப் அணிவது குறித்து இருந்து
வருகின்ற பொதுவான கருத்தாகும்’ என்று அகமது முடிக்கிறார்.
அகமதுவின் அந்த முடிவு இன்று கர்நாடகாவில் நடக்கின்ற
ஹிஜாப் சர்ச்சையின் மையப்பகுதிக்கு இட்டுச் செல்கிறது. வகுப்புகளுக்கு பெண்கள்
ஹிஜாப் அணிந்து வருவது சமத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதாக இருக்கும் என்று
சொன்னால், பிரதமர் நரேந்திர மோடி புதிய பாராளுமன்றம், அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை என்று பங்கேற்பதும் அவ்வாறாகவே இருக்கும். ஒவ்வொரு
மாதமும் பொது இடங்கள் ஹிந்துமயமாக்கப்படுவது ஏமாற்றத்தைத் தருவதாகவே இருக்கிறது.
ஹிஜாப் அணிந்து போராடுகின்ற பெண்களுக்கு பாப்புலர்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆதரவு அளிக்கிறதா என்பது இங்கே முக்கியமல்ல. ஹிஜாப் அணிவதன்
மூலம் அதனை அணிந்து கொள்பவர்கள் தங்களை கருத்து மாறுபாடுள்ள சிறுபான்மையினர் என்று
பார்த்துக் கொள்கின்றனர் என்ற அகமதுவின் முடிவில்தான் ஹிஜாப் அணிவதன்
முக்கியத்துவம் இருக்கின்றது. நாவலாசிரியர் சத்ராபி கூறியதைப் போல - பெண்களைக்
கட்டாயப்படுத்தி ஹிஜாபை கழற்றச் சொல்வது அல்லது அணிந்து கொள்ளச் சொல்வது என்று
இரண்டுமே பெண்கள் மீது ஏவப்படுகின்ற வன்முறையாகவே இருக்கும்.
https://www.newsclick.in/History-how-Hijab-Vanished-Reappeared-Symbol-Dissent
Comments