தீன்தயாள் உபாத்யாயாவின் கொலையை அரசியல் கொலை என்று நிரூபிக்க ஆர்எஸ்எஸ் எடுத்த முயற்சிகள் கண்ட தோல்வி

 ஏ.ஜி.நூரணி

தி வயர் இணைய இதழ்


2017 செப்டம்பர் 25

 

தன்னுடைய தலைவரின் கொலையை சதித்திட்டம் என்று கூறுவதற்காக பாரதிய ஜனசங்கம் பொய்யான ஆதாரங்களை அளித்தது. ஆனால் நீதிபதி சந்திரசூட் தான் எடுத்த முயற்சிகள்  மூலமாக உண்மைகளைக் கண்டறிந்தார்.  

தீன்தயாள் உபாத்யாயா 1967ஆம் ஆண்டு டிசம்பரில் ஜனசங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968 பிப்ரவரி 10 அன்று மாலை லக்னோவிலிருந்து சீல்தா எக்ஸ்பிரஸ் மூலமாக அவர் பாட்னாவிற்குப் புறப்பட்டுச் சென்றார். அதிகாலை 1.40 மணியளவில் வாரணாசியில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் காசி ரயில் நிலையத்தில் சுமார் ஐந்து நிமிடங்கள் நின்றது. அதற்குப் பிறகு அதிகாலை 2.10 மணியளவில் முகல்சராய் ரயில் நிலையத்திற்குச் சென்று சேர்ந்த அந்த ரயிலில் உபாத்யாயா இருக்கவில்லை. பத்து நிமிடங்களுக்குப் பிறகு, முகல்சராய் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நின்று சென்றிருந்த பிளாட்பாரத்தின் முடிவில் இருந்து 748 அடி தூரத்திலிருந்த இழுவைக் கம்பத்தின் அருகே அவர் சடலமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடைய கையில் ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை அவர் பிடித்துக் கொண்டிருந்தார். நள்ளிரவில் ஜான்பூர் ரயில் நிலையத்தில் அவரைச் சந்தித்தவர்களே கடைசியாக அவரை உயிருடன் பார்த்தவர்கள்.   

முகல்சராய் ரயில் நிலையத்தில் உபாத்யாயா பயணித்த கேபினுக்குள் நுழைந்த ஒருவர் அவருடைய கோப்பு மற்றும் படுக்கையை எடுத்துச் சென்றதை தான் கண்டதாக உபாத்யாயா பயணித்த அதே பெட்டியில் அவருடைய கேபினுக்கு அடுத்து இருந்த கேபினில் பயணித்த M.P.சிங் என்பவர் கூறினார். நீதிமன்றத்தின் முன்பாக படுக்கையை எடுத்துச் சென்ற அந்த நபர் பரத்லால் என்று அடையாளம் காட்டப்பட்டார். அந்த பரத்லாலுடன், ராம் அவத் என்பவர் மீதும் கொலை, திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கொலைக் குற்றத்தில் இருந்து அந்த இருவருமே விடுவிக்கப்பட்ட போதிலும், பரத்லாலுக்கு மட்டும் இறந்தவரின் உடமைகளைத் திருடினார் என்று தண்டனை வழங்கப்பட்டது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பரத்லால் மேல்முறையீடு செய்தார். அப்போது வழங்கப்பட்ட தீர்ப்பில் ‘குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான கொலைக் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. கொலை குறித்த பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கிறது’ என்று அமர்வு நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.      

எழுபதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்மையை அறிவதற்காக விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். உடனடியாக அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்திய அரசு பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி ஒய்.வி.சந்திரசூட்டைக் கொண்டு ஒரேயொரு உறுப்பினர் விசாரணைக்குழுவை நியமித்தது.

பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி ஒய்.வி.சந்திரசூட்

உபாத்யாயாவின் கொலை அரசியல் நோக்கம் கொண்டது என்று சொன்ன ஜனசங்கம்தான் உண்மையில் இந்த விசாரணைக்குழுவின் முன்பாக வழக்கு தொடுத்தவராக இருந்திருக்க முடியும். ஆனாலும் அந்த விசாரணைக் குழுவின் முன்பாக வழக்கு தொடுத்தவர், குற்றம் சாட்டப்பட்டவர் என்று யாருமே முறைப்படுத்தி ஆஜர்படுத்தப்படவில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். சார்பற்ற நியாயமான விசாரணையை உறுதி செய்கின்ற வகையில் செயல்படாமல் இரண்டு மிகச் சாதாரண ரயில் திருடர்களை பலிகடாக்களாக்கியதன் மூலம் அந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருந்த அரசியல் நோக்கத்தை வேண்டுமென்றே மறைக்க முயன்றதாக அப்போது வழக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) மீது குற்றம் சுமத்தப்பட்டது.

விசாரணை ஆணையங்களின் அறிக்கைகளை எத்தனை பேர் படிக்கிறார்கள்? மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சிலர் மட்டுமே அவற்றைப் படிக்கிறார்கள். மிகச் சாதாரணமான நடையில் எழுதப்பட்டிருக்கும் அந்த அறிக்கைகள் பயனுள்ள, சுவாரஸ்யமான விஷயங்களைக் கொண்டிருப்பதில்லை என்பதால், அவற்றின் நிலை பெரும்பாலும் பரிதாபத்தை ஏற்படுகின்ற வகையில்தான் இருந்து வருகின்றன. ஆனால் நீதிபதி சந்திரசூட்டின் அறிக்கையின் உள்ளடக்கங்கள் அவ்வாறான அறிக்கைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, அறிக்கை எழுதப்பட்டிருந்த விதம் மிகத் தெளிவாக உயிரோட்டத்துடன் இருந்தது.    

உபாத்யாயா கொலை செய்யப்பட்டார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கவில்லை. அந்தக் கொலை சாதாரணமான திருடர்களால் மிகச் சிறிய லாபத்திற்காக செய்யப்பட்டது என்றும், முன்திட்டமிடல் எதுவுமில்லாமல், எதிர்பாராத தருணத்தில் அந்த கொலை நிகழ்ந்து விட்டதாகவும் கூறிய சிபிஐ மீது ஜனசங்கம் தாக்குதலை மேற்கொண்டது. கட்சியின் நம்பகத்தன்மை விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக இருந்த போதிலும், தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கின்ற வகையில் தன்னிடம் இருந்த ஏராளமான ஆதாரங்களைக் கொண்டு எதையும் செய்திட ஜனசங்கம் முன்வரவில்லை.   

ஜனசங்கத்தின் பொருளாளராக இருந்த நானாஜி தேஷ்முக், கொலை தொடர்பான தரவுகளைச் சேகரிப்பதற்காக ஜனசங்கத் தலைவரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக இருந்தார். அந்த வழக்கு குறித்த அறிக்கையை தேஷ்முக் தாக்கல் செய்தார். அந்தக் குழுவால் விசாரிக்கப்பட்ட ஜனசங்கத்தைச் சார்ந்த ஐம்பத்தியோரு சாட்சிகளில் அவரும் ஒருவராக  இருந்தார்.  சிபிஐ  இருபத்தி மூன்று  சாட்சிகளை விசாரித்திருந்தது.  

ஆதாரங்களையும், தன் முன்வைக்கப்பட்ட வாதங்களையும் நீதிபதி சந்திரசூட்டின் அறிக்கை மிக விரிவாகப் பகுப்பாய்வு செய்திருக்கிறது. அதன் விளைவாக அந்த ஆணையத்தின் முடிவுகள் தனித்த சிறப்பைக் கொண்டிருந்தன. ‘எஃப்.சி.ட்டி. பெட்டியில் இருந்த முதல் வகுப்பு பெட்டியின் கதவின் அருகே நின்று கொண்டிருந்த போது  ஓடும்  ரயிலிலிருந்து  உபாத்யாயா  வெளியே தள்ளி விடப்பட்டார்’; இழுவைக் கம்பத்தின் மீது மோதிய அவர் ‘உடனடியாக மரணம் அடைந்தார்’; அவர் மீது ஏற்பட்டிருந்த காயங்கள் ஒரே தடவையில் ஏற்பட்டவை; அவை ரயில் பெட்டியின் உள்ளே ஏற்பட்டிருக்க முடியாது; அந்தக் கொலை திருட்டுடன் சேர்ந்து நடந்துள்ளதால், அவையிரண்டும் தனித் தனியாக நடந்திருக்காமல் இணைந்து ஒரேயொரு தடவையிலேயே நடந்திருக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது’ என்று  ஆணையத்தின் முடிவு இருந்தது:

‘உபாத்யாயாவின் கொலையில் அரசியல் இருந்தது என்ற குற்றச்சாட்டை ஒத்துக் கொள்கிற வகையிலே என்னிடம் அளிக்கப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை என்று என்னால் உறுதியான நம்பிக்கையுடன் கூற முடியும். அரசியல் எதிரிகள் அவருக்கு இருந்தனர் என்பதை எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமின்றிச் சொல்ல முடியும் என்றாலும், அவரது மரணம் சாதாரண திருடர்களின் கைவேலைதான்’;  ‘ஜனசங்கத்தால் குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்டுகளோ அல்லது வகுப்புவாதிகளோ (முஸ்லீம்களைக் குறிப்பிடுகிறார் என்பதில் சந்தேகமில்லை)  அல்லது முஸ்லீம் மஜ்லீஸைச் சார்ந்த டாக்டர் ஏ.ஜே.ஃபரிடியோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தக் கொலையுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை’; ‘சிபிஐயைப் பொறுத்தவரை, அது மிகவும் கவனமாகவும், தெளிவாகவும் விசாரணையை நடத்தியுள்ளது.

அவர்களால் தெளிவான சாத்தியக்கூறுகளைக் கொண்ட துப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வெறுமனே கற்பனை கலந்ததாக இருந்த துப்புகளை அவர்கள் தவிர்த்து விட வேண்டியிருந்தது. பெரும்பாலும் காவல்துறையினரின் மீதே ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டுகளும் விழுந்தன. சிபிஐ பக்கமும் குறைகள் இருந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றாலும், ஏமாற்றம் தரும் வகையில் அவர்கள் நடந்து கொண்டார்கள் என்று கூறுவதில் எந்தப் பொருளும்  இல்லை’. 

ஜனசங்கத்தின் நிலைப்பாடு 

மீரட்டில் நடந்த வகுப்புவாதக் கலவரங்களுக்கு உபாத்யாயாவே காரணம் என்று சில முஸ்லீம் அமைப்புகள் கருதியதே கொலைக்கான காரணம் என்பதே ஜனசங்கத்தின் உறுதியான நிலைப்பாடாக இருந்தது. ஜனசங்கத் தலைவர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று அந்தக் கலவரத்தின் போது மிகவும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகுப்புவாதிகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு கம்யூனிஸ்டுகள் சிலர் தயாராக இருந்தார்கள் என்று ஜனசங்கம் கூறியது.  

மேலும் ‘காலிகட்டில் 1967 டிசம்பரில் நடைபெற்ற அமர்வில் இருந்தே உபாத்யாயா மீது சந்தேகத்திற்கிடமானவர் என்ற முத்திரை குத்தப்பட்டு வந்தது. கம்யூனிஸ்டுகளும், வகுப்புவாதிகளும் தங்களுக்குள் கைகோர்த்துக் கொண்டு உபாத்யாயாவைக் கொலை செய்வதற்காக மேஜர் சுரேந்திர மோகன் சர்மாவின் உதவியைப் பெற்றனர். இந்த மேஜர் சர்மா ‘மஜ்லீஸ் முஷாவரத்’ என்ற அமைப்பின் தலைவராக இருந்த டாக்டர் ஃபரிடியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகக் கூறப்பட்ட வி.என்.சர்மா என்பவரின் மருமகன் ஆவார். சதித்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சரியான தருணம் கிடைக்கும் என்பதால், எஃப்.சி.ட்டி பெட்டியில் இருந்த முதல் வகுப்பு பெட்டியில் லக்னோவிலிருந்து மேஜர் சர்மா பயணம் செய்தார். மறுமுனையில் அதாவது முகல்சராயில் சதித்திட்டத்திற்குத் தேவையான மேலும் சில நடவடிக்கைகளை கம்யூனிஸ்டுகள் செய்திருந்தனர். அந்த திட்டத்தின்படி, அதிகாலை 12.41 மணிக்கு ஜாபராபாத்திலிருந்து ரயில் புறப்பட்ட பின்னர், ஓடிக் கொண்டிருந்த அந்த ரயிலில் உபாத்யாயா கொலை செய்யப்பட்டார். தாழ்வாரத்தை நோக்கி வலது பக்கத்தில் இருந்த ‘பி’ கேபினுக்குள் நுழையும் போது, தலையின் வலது பக்கத்தில் அவர் தாக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் பிறகு பெர்த்தின் மீது தூக்கி வீசப்பட்ட அவரது மார்பில் ஒருவரும், கால்கள் மீது மற்றொருவரும் அமர்ந்திருக்க வேண்டும். அதற்குப் பின்னர் விபத்து நடந்ததாக உருவகப்படுத்துகின்ற வகையில் அவரது உடல் இழுவைக் கம்பத்தின் அருகே  வைக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்று ஜனசங்கம் கூறி வந்தது.  

இவ்வாறு நடந்ததாக கூறப்படும் நிகழ்வுகளின் மையமாக, மேஜர் சர்மா மற்றும் டாக்டர் ஃபரிடி ஆகியோரும், அவர்களுக்கிடையே இருந்த தொடர்புகளும் இருந்தது தெளிவாகிறது. அந்தக் கொலை நடைபெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் மேஜர் எஸ்.எம்.சர்மாவுக்குத் திருமணம்  நடந்திருந்தது.  உபாத்யாயா பயணித்த அதே ரயிலில் லக்னோவிலிருந்து அவர் பயணித்தார். உபாத்யாயா இருந்த எஃப்.சி.ட்டி பெட்டியின் ‘சி’ கேபினில் அவருக்கான பெர்த் ஒதுக்கப்பட்டிருப்பதாக அவரிடம் கூறப்பட்டது. ஆனால் இருக்கை ஒதுக்கீடு தொடர்பான விவரம் அடங்கிய காகிதத்தில், அவருடைய பயணச்சீட்டு எண்ணான 06171க்குப் பதிலாக அவருடைய பெயர் மேஜர் எஸ்.எல்.சர்மா, பயணச்சீட்டு எண் 06172 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது பெயரும், பயணச்சீட்டு எண்ணும் தவறாக இருந்ததால், ரயில் சேவையில் இருந்தவரிடம் சென்று தனக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தை அவர் கண்டடைந்தார். ஆனாலும் முன்பதிவு அட்டவணையில் அவரது பெயர் மேஜர் எஸ்.என்.சர்மா என்றே இருந்தது! காமோ வரை பயணம் செய்து, பிப்ரவரி 11ஆம் தேதி தாமதமாக தனது படைப்பிரிவை அடைந்ததாக கூறிய மேஜர் அதற்கான மறுக்க முடியாத  ஆதாரங்களையும்  அளித்திருந்தார்.   

டாக்டர் ஏ.ஜே.ஃபரிடி லக்னோவில் பணியாற்றி வந்த இதய சிகிச்சை நிபுணர். முஸ்லீம் மஜ்லீஸ் அமைப்பின் நிறுவனர்-தலைவராக அவர் இருந்தார். உபாத்யாயாவைக் கொலை செய்ய கம்யூனிஸ்டுகள் மட்டுமல்லாது, ஃபரிடி போன்ற முஸ்லீம்களும் சதி செய்தார்கள் என்ற தன்னுடைய நிலைப்பாட்டிற்கு ஆதரவாக ஜனசங்கம் மூன்று சாட்சிகளை விசாரித்தது. ஃபரிடி அவ்வாறு பேசினார் என்று முதலாவது சாட்சி கூறியிருந்த பொதுக்கூட்டத்தில் ஃபரிடி கலந்து கொண்டதை நிரூபிக்கின்ற சான்றுகள் எதுவும் இருக்கவில்லை. ஃபரிடியின் உரை என்பதாக இரண்டாவது சாட்சி கூறிய பத்திரிகையில் ஃபரிடியின் பேச்சு வெளியிடப்பட்டிருக்கவே இல்லை. ஜனசங்கத்தின் வழக்கறிஞரும் அதனை ஏற்றுக் கொண்டார். மேஜரின் மாமனாரான வி.என்.சர்மாவிற்கும், ஃபரிடிக்கும் இடையே நல்லுறவு இருந்ததாகத் தெரிவித்த கடைசி சாட்சியிடம் ஃபரிடிக்கு எதிராக சர்மா  ஏற்கனவே ஒருமுறை தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றவியல் புகாரின் சான்றளிக்கப்பட்ட நகலை நீதிபதி காட்டினார். ஃபரிடியால் வாடகைக்கு விடப்பட்டிருந்த இடத்தில் இருந்த ஒரு பகுதிக்குள் ஃபரிடி அத்துமீறி நுழைந்ததாக அந்த இடத்தை வாடகைக்கு பெற்றிருந்த ’சிப்லா’ நிறுவனத்தின் கிளை மேலாளராக இருந்த சர்மா குற்றம் சாட்டியிருந்தார். அந்த நிறுவனம் 1966 நவம்பர்  முதல் 1970 ஜனவரி வரையிலான காலத்திற்கு நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டியிருப்பதாக மற்றொரு ஆவணம் தெரிவித்தது. ‘இவையெல்லாம் நிச்சயமாக நல்லுறவு இருந்ததற்கான  ஆதாரங்களாகத் தெரியவில்லை’ என்று நீதிபதி அப்போது குறிப்பிட்டார். 

உபாத்யாயாவின் கொலையில் டாக்டர் ஃபரிடிக்கு தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பது என்னுடைய கருத்து. நானாஜி தேஷ்முக்கைத் தலைவராகக் கொண்டு வாஜ்பாய் நியமித்த குழுவின் அறிக்கையில் டாக்டர் ஃபரிடி பற்றி எந்தவிதமான குறிப்பும் இருக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.    

ஃபரிடியின் கருவியாக குற்றவாளியாகக் கருதப்பட்ட மேஜர் சர்மா என்பவர் இருந்ததாக கூறப்பட்ட நிலைப்பாட்டை ஒட்டி, மேஜர் சர்மா என்ற பெயரில் அன்னியன் ஒருவன் உபாத்யாயாவுடன் அதே பெட்டியில் பயணம் செய்ததாக மிகவும் முரணான மற்றொரு கருத்தை ஜனசங்கம் முன்வைத்தது. இவ்வாறான கருத்தை ஆதரிக்கப் போதுமானதாக எந்தவொரு ஆதாரமோ அல்லது சாத்தியமோ இருக்கவில்லை. மேஜர் சர்மா என்ற பெயரைப் பயன்படுத்துபவர் தனது முதலெழுத்துக்களையும், பயணச்சீட்டு எண்ணையும்  அதே  ரயிலில் பயணித்த உண்மையான மேஜர் சர்மா என்பவருக்கு மிக நெருக்கமாக இருக்கும் வகையில் வைத்துக் கொள்ளும் அபாயத்தை நிச்சயமாகத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார் என்பது உறுதி.

நம்ப முடியாத சாட்சியங்கள்

அன்னியர் ஒருவர் அங்கே இருந்தார் என்பதற்கான சான்றுகள் நம்ப முடியாதவையாகவே இருக்கின்றன. சீல்தா எக்ஸ்பிரஸின் நடத்துனர் கமல், உபாத்யாயா இருந்த கேபினை ஒட்டிய கேபினில் இருந்த ஒருவரை லக்னோவில் தான் பார்த்ததாகக் கூறினார். ‘மேஜர்  சாஹேப்?’ என்று தான் அவரிடம் கேட்டதாகவும், அங்கே இருந்தவர் ‘ஆம்’ என்று அதற்குப் பதிலளித்ததாகவும் அவர் கூறினார். ஆனால் நடத்துனர் கமல் கவனிக்காத வேறு இரண்டு பயணிகளும் அந்த கேபினில் பயணம் செய்திருந்தனர். மற்ற குறைபாடுகளுடன் சேர்த்து, பின்குறிப்பிடப்பட்டிருப்பதையும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்:

‘உண்மையில் எஃப்.சி.ட்டி பெட்டிக்கு அருகிலேகூட கமல் சென்றதாகத் தெரியவில்லை. உபாத்யாயாவைப் பார்த்து வழியனுப்புவதற்காக, துணை முதலமைச்சர் ராம் பிரகாஷ்,  பிதம்பார் தாஸ், ஹரிச்சந்திரா மற்றும்  பலர்  ரயில் நிலையத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ‘பி’ கேபினுக்கு முன்னால் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். ஆனால் ‘பி’ கேபின் அருகிலிருந்த நடைமேடையில்  தான் யாரையும்  பார்க்கவில்லை  என்று கமல் கூறியிருந்தார்’.

கொலை அந்தப் பெட்டிக்குள்ளேயேதான் நடந்தது என்பது ஜனசங்கத்தின் நிலைப்பாடு; ஓடுகின்ற ரயிலில் இருந்து உபாத்யாயாவை தள்ளி விட்டதன் மூலமே கொலை நடந்தது என்பது சிபிஐயின் நிலைப்பாடு. கொலைக்கான சூழ்நிலைக் காரணிகள் குறித்து விசாரணை ஆணையம் தெரிவித்த கருத்துக்கள் இங்கே குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.

பெட்டிக்குள் கொலை நடந்திருந்தால், பெட்டியிலும், கழிப்பறையிலும் ரத்தக் கறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பெட்டி சுத்தம் செய்யப்படும் போது அந்தக் கறைகள் துடைக்கப்பட்டோ அல்லது கழுவப்பட்டோ இருக்கலாம் என்று மிகச் சாதாரணமாகச் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தப் பெட்டியைச் சீல் செய்வதற்கு முன்பு வரையிலும் அது கழுவப்படவில்லை என்பது ஹௌராவில் உள்ள ரயில் பரிசோதகர் எஸ்.ஆர்.காண்டு கொடுத்திருக்கும் வாக்குமூலத்திலிருந்து தெளிவாகத் தெரிய வருகிறது. உபாத்யாயா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள போராடியதற்கான அறிகுறிகள் எதுவும் அவர் அணிந்திருந்த உடைகள் அல்லது படுக்கையில் கிடந்த பொருட்களில் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது உடைகளின் எந்தப் பகுதியும் கிழிந்திருக்கவில்லை. அவருடைய முகத்தில் எந்தக் காயமும் இல்லை. அவர் தற்காப்புக்காகப் போராடினார் என்று காட்டுகின்ற வகையில், உபாத்யாயாவின் உடலில் உண்மையில் எந்தவொரு பகுதியிலும் காயங்களே இருக்கவில்லை.

உடலில் இருந்த காயங்களின் தன்மையும் ஜனசங்கம் எடுத்த நிலைப்பாட்டிற்கு எதிரானவையாகவே இருக்கின்றன. அலறுகின்ற கூச்சலையும், மோதுகின்ற சப்தத்தையும் கேட்டதாக அருகிலிருந்த மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணித்த, ஜனசங்கத்தால் முன்னிறுத்தப்பட்ட இரண்டு சாட்சிகள் கூறினர். ஆனால் அவ்வாறு தான் எதையும் கேட்கவில்லை என்று, அதே பெட்டியில் உபாத்யாயாவிற்கு அடுத்த கேபினில் பயணம் செய்த எம்.பி.சிங் தெரிவித்திருந்தார். மற்ற விஷயங்களிலும் அந்த இருவரும் கூறியவை தவறானவை எனத் தெளிவாக நிரூபிக்கப்பட்டதால், அவர்களுடைய சாட்சியங்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டன.

ஜனசங்கத்தின் அறிக்கை முழுவதும் இவ்வாறாக நிராகரிக்கப்பட்ட சாட்சியங்கள் ஏராளமாக உள்ளன. சிபிஐயின் சாட்சியான டாக்டர் பூஷண் ராவ் தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு மரணம் கிட்டத்தட்ட உடனடியாக நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கருதினார். ஆனால் ஜனசங்கத்தின் சாட்சியான டாக்டர் ஆர்.என்.கட்டாரியா காயங்கள் ஏற்பட்ட நேரத்திற்கும், மரணத்திற்கும் இடையில் குறைந்தது ஒரு மணிநேரம் கடந்து விட்டிருந்ததாக கூறினார். டாக்டர் கட்டாரியா 1968ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனசங்கத்துடன் தொடர்பில் இருந்து வந்தவர். 

டாக்டர் கட்டாரியாவின் சாட்சியத்துடன் தொடர்புடைய சுவாரஸ்யமான தகவல் ஒன்றும் இருந்தது. 1968 பிப்ரவரி 18 நாளிட்ட ஆர்கனைசர் பத்திரிக்கையில் இருந்து அரைகுறையாக வெட்டி எடுக்கப்பட்ட பகுதியை எனக்கு முன்பாக ஜனசங்கம் சமர்ப்பித்தது. அந்தச் செய்தியில் ராம் பிரகாஷ், பால்ராஜ் மதோக், திருமதி கன்னா மற்றும் 'முன்னணி அறுவை சிகிச்சை நிபுணர்' ஆகியோருடன் விவாதித்த பிறகு உபாத்யாயா மரணம் தொடர்பாக 'பின்வரும்' அறிக்கையை வெளியிடலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் செய்தியில் அதற்குப் பின்னர் என்ன இருந்தது என்பது சேர்க்கப்பட்டிருக்கவில்லை (புத்திசாலித்தனமாக அந்தப் பகுதி மட்டும் தனியாக வெட்டி எடுக்கப்பட்டிருந்தது). விசாரணை ஆணையத்தின் முன்பாக  அந்த முன்னணி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கட்டாரியா என்று நிரூபிக்கப்பட்டது.

ஆணையத்தின் புத்திசாலித்தனமான செயல்பாடு

ஆணையம் தனது புத்திசாலித்தனத்தைச் செயல்படுத்தி ஆதாரத்தைக் கண்டறிந்தது. 

‘பிப்ரவரி 18 அன்று வெளியான செய்தி சுவாரஸ்யமானதாக இருந்தது.  இரண்டாம் பக்கத்தில் வெளியான அந்தச் செய்தியில் ‘தில்லியின் முன்னணி அறுவை சிகிச்சை நிபுணரின் கருத்துப்படி... மூடிய கண்களும், அவரது அமைதியான முகமும் தலையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலே உடனடி மரணத்தை ஏற்படுத்தியதை விளக்குகின்றன’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ​​வெட்டி எடுக்கப்பட்ட அந்த பத்திரிக்கைச் செய்தி முழுவதுமாக என் முன்னால் ஏன் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை இந்த செய்தியைப் படிக்கும் ஒருவரால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாகவே உடனடியாக மரணம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதே டாக்டர் கட்டாரியாவின் ஆரம்பகட்ட கருத்து என்பது தெளிவாகின்றது. ஆனால் அதற்குப் பின்னர் அவர் காயங்கள் ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகே மரணம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை  நிறுவுகின்ற வகையில் வேறொரு தீவிரமான முயற்சியை  மேற்கொண்டார். அவரிடம் இருந்த அரசியல் சார்பு அவருடைய நிலைப்பாட்டின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது குறித்து நான் வருத்தப்படுகிறேன்.  அவருடைய இந்தக்  கருத்தை  என்னால்  ஏற்றுக் கொள்ள  முடியவில்லை’.

இறந்து போனவர் இறப்பதற்கு முன்னதாக அடையாளம் தெரியாத நபர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர், இழுவைக் கம்பத்திற்கு அருகே கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள் என்பது போன்ற பேச்சுக்கள் அனைத்தையும் விசாரணை ஆணையம் சற்றே காது கொடுத்து கேட்டது. உபாத்யாயாவின் படுக்கை கண்டறியப்பட்டாலும், அவர் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்த கோப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘உபாத்யாயா தேச விரோதிகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை சேகரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று நானாஜி தேஷ்முக், பீகார் ஜனசங்கத்தின் அமைப்புச் செயலாளர் அஸ்வினிகுமார் ஆகியோர் அளித்த சாட்சியங்களில் கூறியுள்ளனர். இருப்பினும் நானாஜி தேஷ்முக் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் உபாத்யாயாவின் அந்த கோப்பு அல்லது டைரி பற்றி எந்தவிதமான  குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது’ என்றும் ஆணையம் குறிப்பிட்டது.   

கிடைத்த மிக முக்கியமான ஆவணம்

பிப்ரவரி 11 அன்று காலையில் மரணம் குறித்து கேள்விப்பட்டதாகவும், அந்த தகவல்களை  நானாஜி தேஷ்முக் உள்ளிட்ட சிலருக்கு அனுப்பி வைத்ததாகவும், முகல்சராய்க்கு சென்று மரணம் தொடர்பான தகவல்களைச் சேகரிக்குமாறு தன்னிடம் நானாஜி தேஷ்முக் சொன்னதாகவும் கட்சி ஊழியரான ராமாச்சார்யா பாண்டே என்பவர் கூறினார். அவ்வாறு செய்த பாண்டே டைரியில் சில சுருக்கமான பதிவுகளைச் செய்திருந்தார்.  

அந்த டைரியை மிக முக்கியமான ஆவணமாக நீதிபதி கண்டறிந்தார். உபாத்யாயாவின் பயணம் குறித்த விவரங்களை நானாஜி தேஷ்முக் மார்ச் 2 அன்று டி.ஐ.ஜி லோபோவிடம் கொடுத்தார் என்று அந்த டைரியில் பிப்ரவரி 17 அன்று முன்கூட்டியே குறிப்பிடப்பட்டிருந்தது. கவிஞரும், அரசியல்வாதியுமாக இருந்த ஒருவரின் தனிப்பட்ட டைரி என்று கூறப்படுவதில் பெரிய அளவிற்கு இருந்த வெற்றிடங்கள், விசாரணைக்கான மிக முக்கியமான ஆவணமாக அந்த டைரியை மாற்றின.  

தன்னுடைய டைரியில் குறிப்பிட வேண்டிய அரசியல் நிகழ்வு எதுவும் அந்த குறிப்பிட்ட நாட்களில் இல்லை என்றால், குறைந்தபட்சம் அவரிடமிருந்த கவித்துவம் அவரை இவ்வளவு கொடூரமாக கைவிட்டிருக்காது... ஆதாரமாகக் காட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அந்த ஆவணத்தைத் தயாரிக்கும் நோக்கம் அவர்களுக்கு  இருந்திருக்க  வேண்டும்  என்பதால்  நான் அதனை ஏற்க மறுத்தேன்.

இந்த விஷயத்தில் தேஷ்முக்காலும் காயப்படாமல் தப்பித்துக் கொள்ள முடியவில்லை. கொலை சம்பந்தப்பட்ட தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என்று பதினொன்றாம் தேதி காலை ராமாச்சார்யாவிடம் தான் தொலைபேசியில் தெரிவித்ததாக நானாஜி தேஷ்முக் கூறியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  நானாஜி அப்போது பம்பாயில் இருந்தார். நடந்த கொலை பற்றி அவருக்கு அப்போது எதுவும் தெரியாது. ராமாச்சார்யா பதினொன்றாம் தேதி காலை லக்னோவிலிருந்து தொலைபேசியில் நானாஜியைத் தொடர்பு கொள்ளவில்லை என்று  கருதுவதற்கான ஆதாரம் தெளிவாக உள்ளது. எனக்கு முன்பாக சிபிஐயால் விசாரணை செய்யப்பட்ட லக்னோ தொலைபேசி நிலையத்தைச் சார்ந்த ஓம் பிரகாஷ் சத்வால், 23509 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து (லக்னோ) பம்பாய்க்கு 1968 பிப்ரவரி 11 அன்று எந்தவொரு தொலைதூர அழைப்பும் வரவில்லை என்று கூறியுள்ளார். 23509 என்ற அந்த தொலைபேசி எண் உபாத்யாயா மரணம் குறித்து தனக்கு  தகவல் கிடைத்ததாக ராமாச்சார்யா கூறிய லக்னோ ஜனசங்க அலுவலகத்தின் தொலைபேசி  எண்ணாக இருந்தது.  

உண்மையில் அது மிகவும் மோசமான வருத்தம் அளிக்கும் விளக்கம்தான்.

கும்மிருட்டில் துழாவித் தேடிய..

பரிவுணர்ச்சியால் கட்டுப்படுத்தப்பட்டவையாகவே நீதிபதி சந்திரசூட்டின் கண்டனங்கள் இருந்தன. ஜனசங்கம் ஏன் அவ்வாறு நடந்து கொண்டது  என்பதை  அவரது அறிக்கையின் மற்றொரு பகுதி விளக்குகிறது.

உபாத்யாயா மீது அக்கறை கொண்டவர்கள், தாங்கள் வருத்தத்தில் ஆழ்ந்திருந்த அந்த தருணத்தில், உண்மையை அறிந்து கொள்வதற்காக இருட்டில் துழாவிக் கொண்டிருந்தார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. தங்களுக்குத் தோன்றியவாறு எழுதுவதற்குத் தயங்காத அவர்கள் தங்களுக்கு கிடைத்திருந்த பதில்களால் திருப்தி அடைய முடியாதவர்களாகவே இருந்தனர்.  குடிபோதையில் இருந்த முகமூடி அணிந்திருந்த ஒருவர் உபாத்யாயாவின் அறையின் கதவைத் தட்டினார், அறைக்குள் நுழைந்தார், கையை முறுக்கினார், மார்பில் ஏறி அமர்ந்தார், ரயில் வாரணாசியை அடைவதற்குள் அவரது தலையில் ஓங்கி அடித்தார், அப்போது ரயில் மெதுவான வேகத்தில் சென்று கொண்டிருந்தது என்ற கதையை அவர்கள் 1968 மார்ச் 10 நாளிட்ட ஆர்கனைசர் பத்திரிகையில் எழுதியிருந்தனர். அவ்வாறு நடந்திருக்க முடியாது என்று  கண்டறியப்பட்டு விட்டதால், அந்தக் கதை அவர்களால் கைவிடப்பட்டது. நம்பத்தகுந்த வகையில் இவ்வாறு நடந்திருக்கலாம் என்பதற்காகவே அந்தக் கொலைக்குற்றத்துடன் அரசியல் அவர்களால் இணைக்கப்பட்டது. அவர்கள் கூறிய கதையோ அல்லது  அரசியலோ அந்தப் பிரச்சனைக்கான சரியான  தீர்வை அளிக்கும் என்று  நான்  கருதவில்லை.  

ஜனசங்கத்தின் நிலைப்பாடுகளில் இருந்த முரண்பாடுகளின் அடிப்படையில் சிபிஐயின் கருத்துக்களை நீதிபதி நிராகரித்தார்.

தவறான ஆதாரங்கள் எந்த அளவிற்கு தயாரித்து எனக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளனவோ, அந்த அளவிற்கு நான் அவற்றை வலுவாக மறுக்க வேண்டியும் வந்தது. அதே போன்று சிபிஐ தரப்பில் இருந்த சில குறைபாடுகளையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வகையான கதைகளை முன்வைத்த காரணத்தால் மட்டுமே ஜனசங்கத்தின் நிலைப்பாட்டில் தவறு கண்டுபிடிப்பதற்கான நியாயம் என்னிடம் இருந்தது என்று நான் கருதவில்லை.  

ஒவ்வொரு நிலைப்பாடும் அவற்றின் தகுதிகளால் அலசி ஆராயப்பட்டன. ‘ஷா நவாஸின் அடிச்சுவடுகளை சந்திரசூட் பின்பற்றுகிறார்’ என்று ஆர்கனைசர் பத்திரிக்கையில் வெளியான செய்தி மிகவும் வெளிப்படையான குற்றச்சாட்டுடன் இருந்தது. மூன்று வாரங்கள் கழித்து அதில் விரிவான விமர்சனக் கட்டுரை ஒன்று வெளியானது. ஆனாலும் புத்திசாலித்தனமாக கிழிக்கப்பட்டிருந்த செய்தித்தாள், இட்டுக்கட்டி தயாரிக்கப்பட்டிருந்த டைரிக் குறிப்புகள், ஜனசங்கத்தால் முன்னிறுத்தப்பட்ட தவறான சாட்சிகள் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது போன்ற குறிப்புகளுக்கு அந்தக் கட்டுரையில் இடம் இல்லாது காணாமல் போயிருந்தன. ஆர்கனைசரின் முதல் இதழில் ‘குரங்குத்தனம் கொண்ட நீதித்துறை’ என்ற தலைப்பில் தலையங்கமும் வெளியாகி இருந்தது. எவ்வாறாயினும் நீதிபதி சந்திரசூட் மீது ஆர்கனைசர் பத்திரிக்கை நடத்திய வரம்பு கடந்த தீவிரமான தாக்குதல் ‘உறுதியான நீதித்துறை’யின் ஆதரவாளர்களைப் போல நீதித்துறை மீது அதிக அளவிலான மரியாதையை வெளிப்படுத்துவதாக இருக்கவில்லை.

இந்தக் கட்டுரை 1971 ஏப்ரல் 25 நாளிட்ட இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி பத்திரிக்கையில் முதன்முதலாக வெளியாகி இருந்தது.  

https://thewire.in/history/deen-dayal-upadhyaya-death-mystery

Comments