ஜேம்ஸ் ஷெப்பர்ட்
லைஃப் மேகசின், 1968
புதுதில்லிக்கு தென்கிழக்கே
உள்ள ஜான்பூர் ரயில் நிலையத்தின் வழியாக பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவிற்கு ரயிலில்
சென்று கொண்டிருந்த சுமார் ஐம்பது வயதான தீன்தயாள் உபாத்யாயாவைப் பார்த்து வழியனுப்பி வைத்த ஜனசங்க
கட்சித் தொண்டர்கள் மற்றும் அவருடைய நண்பர்களே இறுதியாக உயிருடன் அவரைப் பார்த்தவர்கள்.
உபாத்யாயா லக்னோவிலிருந்து
பாட்னாவிற்கு கட்சி வேலையாக அந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். ‘ஜனசங்க கட்சியின்
உயர்மட்டத் தலைவர்களுக்கு வன்முறை வழியிலான மரணம் நேரிடலாம்’ என்று 1968ஆம் ஆண்டு
ஆரம்பத்தில் லக்னோவைச் சேர்ந்த சோதிடரான தன்பால் சிங் ஜெயின் கூறியிருந்ததன்
அடிப்படையில் அந்தப் பயணத்தை உபாத்யாயா மேற்கொள்ள வேண்டாம் என்று உத்தரப்பிரதேச
மாநில ஜனசங்க கட்சியின் தலைவராக இருந்த பிதாம்பர் தாஸ் தன்னாலான முயற்சிகளைச் செய்திருந்தார்.
அந்த ரயில் ஜான்பூரில் இருந்து கிளம்பிய சில மணி நேரங்களுக்குப் பிறகு உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிழக்கிந்திய ரயில்வேயைச் சேர்ந்த முகல்சராய் ரயில் நிலையத்தில் சரக்குப் பெட்டிகளைக் கையாளுகின்ற இடத்திற்கருகே இருந்த தண்டவாளத்திற்கருகே உபாத்யாயாவின் உடல் கேட்பாரற்றுக் கிடந்தது. கட்சித் தொண்டர்கள் வந்து அடையாளம் காட்டும் வரையில் ஏறத்தாழ ஐந்து மணி நேரம் அவரது உடல் அங்கேயே கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. அங்கே வந்து சேர்ந்த காவல்துறையினர் அது தற்செயலாக நடந்த மரணமாக இருக்கலாம் என்றே கருதினர். ஒருவேளை உபாத்யாயா ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்திருக்கலாம் அல்லது அந்தப் பெட்டியின் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்த போது வெளியில் இருந்த கம்பங்களில் மோதி அவர் இறந்திருக்கலாம் என்ற எண்ணமே அவர்களிடம் இருந்தது. ஆனால் கடந்து செல்லும் பெட்டிகளில் இருந்து மூன்று அடிக்கு அப்பால் அந்தக் கம்பங்கள் இருந்தன. உபாத்யாயாவின் உடல் முதுகுப்புறம் கீழிருக்குமாறு மல்லாக்க கிடந்தது. அது மட்டுமின்றி கால்கள் ஒன்றின் மீது ஒன்று என்று குறுக்காகவும், அவரது முகம் சால்வை ஒன்றால் மூடப்பட்டும் இருந்தது. தலையின் பின்புறம் ஓங்கி அடித்ததால் ஏற்பட்ட துளை ஒன்றும் காணப்பட்டது. அதனால் மண்டையில் இருந்த எலும்புகள் உடைந்து போயிருந்தன. கணுக்கால்களுக்கு மேலாக இரண்டு கால்களும், எட்டு விலா எலும்புகளும், ஒரு கையும் உடைந்திருந்தன.
தற்செயலாக நடந்த மரணம் என்பதாக
காவல்துறையினரிடம் இருந்த ஊகம் நம்பத்தகுந்ததாக இருக்கவில்லை. விசாரணையை மேற்கொண்டவர்கள்
ஒருவேளை திருட்டு ஏதாவது நடந்து அதன் விளைவாக அவர் கொலை செய்யப்பட்டிருப்பாரோ என்ற
கோணத்தில் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். உபாத்யாயாவின் கையில் இருந்த ஐந்து ரூபாய்
நோட்டு ஒரு வேளை முகல்சராய் ரயில் நிலையத்தில் ஏதாவது வாங்கலாம் என்று அவர் எண்ணியிருப்பாரோ
என்ற எண்ணத்தையும் தோற்றுவித்தது. ஆனால் விடிந்திராத அந்த நள்ளிரவு வேளையில் தேநீரைத் தவிர அவரால் வேறு
எதையும் வாங்கியிருக்க முடியாது. விலை உயர்ந்த கைக்கடிகாரம் அவரது கைகளில்
அப்படியே இருந்தது. சட்டைப் பையில் இருபத்தியாறு ரூபாய் பணம் இருந்தது. அவருடைய
சூட்கேஸ் அவரில்லாமல் பாட்னாவிற்குச் சென்ற அந்த ரயிலில் அப்படியே அவரது
பெர்த்திற்குக் கீழாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் பத்திரமாக இருந்தது.
ஜனசங்க கட்சியைச் சார்ந்த
ஒருவர் அது திட்டமிடப்பட்ட அரசியல் படுகொலை என்று குற்றம் சாட்டினார். காவல்துறை பாரபட்சமற்ற
விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அந்தச் சம்பவம் குறித்த முழுமையான
விசாரணைகள் முடிந்த பிறகே எந்தவொரு முடிவிற்கும் வர முடியும் என்று கூறியது. இந்திய
வரலாற்றில் மிக முக்கியமான விசாரணயில் இறங்கியிருந்த சி.பி.ஐ, உள்ளூர்,
உத்தரப்பிரதேச அதிகாரிகள் ஆகியோரை மட்டுமல்லாது சோதிடர்களைக் கூடக்
கலந்தாலோசிக்கின்ற நிலைமைக்கு அந்தச் சம்பவம் குறித்து நடந்த முழுமையான விசாரணை இட்டுச்
சென்றது. அவரது பிறந்த நேரத்தைக் கணக்கில் கொண்டு, அவருக்கு மிக மோசமான மரணமே
நிகழும் என்று சில சாமியார்கள் தெரிவித்திருந்தனர். அந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல்
வரையிலான காலகட்டம் அவருக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று உபாத்யாயாவிடமும்
கூறப்பட்டிருந்தது. அவர் இறந்த நாள் பிப்ரவரி 11. ஆனாலும் அந்தச் சாமியார்கள் உபாத்யாயா
கொலை செய்யப்பட்டால், அந்தக் கொலையை யார் செய்வார்கள் என்பது பற்றி எதுவும்
கூறியதாகத் தெரியவில்லை.
சில தகவல்கள் தவறாக வழிகாட்டிய
போதிலும் அந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டவர்களுக்குத் தேவையான தடயங்கள் கிடைத்திருந்தன.
அந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களின் பட்டியலை அவர்கள் ஆராய்ந்த
போது, உபாத்யாயா தனியாகப் பயணித்த பெட்டிக்கு அடுத்த பெட்டியில் மேஜர்.S.L.சர்மா
என்பவரின் பெயர் காணப்பட்டது. தான் பனாரஸில் இறங்க வேண்டும் என்பதால் தன்னை எழுப்பி
விடுமாறு அந்த மேஜர் தன்னிடம் தெரிவித்தார் என்று அந்தப் பெட்டியில் இருந்த நடத்துநர்
கூறினார். ஆனால் அவரை எழுப்பி விடச் சென்ற போது, உபாத்யாயா இருந்த பெட்டியின்
கதவிற்கருகே நின்ற ஒருவர் மேஜர் சர்மா ஏற்கனவே இறங்கிச் சென்று விட்டதாக அந்த
நடத்துநரிடம் ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார். முகல்சராய் ரயில் நிலையத்திற்கு ஆறு
ரயில் நிலையங்களுக்கு முன்னால் இருந்த பைஜாபாத் ரயில் நிலையத்தில் அந்த மேஜர் இறங்கினார்
என்று அதற்கடுத்த பெட்டியில் இருந்த ஒருவர் தெரிவித்தார்.
உபாத்யாயாவின் மரணம் நடந்து
முப்பத்தி நான்கு நாட்களுக்குப் பிறகு சிபிஐ அந்த மேஜரைக் கண்டுபிடித்தது. இந்திய
ராணுவத்தில் இருந்த அவர் பீகார் மாநிலத்தில் உள்ள காமோ நகரைச் சேர்ந்தவர். படுகொலை
குறித்த அந்த விசாரணையில் தான் ஒரு முக்கியமான நபராக இருப்பதை அவர் அந்த முப்பத்தி
நான்கு நாட்களும் அறியாதவராகவே இருந்திருந்தார். தன்னுடைய பயணத்திற்காக லக்னோ
ரயில் நிலையத்திற்கு வந்த வேளையில் அவருக்கென்று அந்த ரயிலில் ஒதுக்கப்பட்டிருந்த
படுக்கை ஏற்கனவே துணை ராணுவ அதிகாரி ஒருவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்ததாகவும், எனவே
தான் போக வேண்டிய காமோவிற்குச் செல்வதற்காக இணைக்கப்படவிருந்த பெட்டி ஒன்றில்
காலியாக இருந்த ஒரு பெர்த்தில் தான் பயணித்ததாகவும் மேஜர் சர்மா கூறினார். மேலும் அவர்
உபாத்யாயாவின் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் தான் பயணிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதுவரையிலும் பைஜாபாத்தில் இறங்கிச் சென்ற மேஜர் சர்மா என்று கருதப்பட்ட அந்த துணை
ராணுவ அதிகாரி யார் என்று அடையாளம் காணப்படவில்லை. மேஜர் சர்மா அந்த வழக்கோடு
தொடர்பில்லாதவர் என்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.
அந்த ரயிலில் அன்று நடந்திருந்த
மற்ற சம்பவங்களும் புதிராகவே இருந்தன. உபாத்யாயா பயணம் செய்த அந்தப் பெட்டி முகல்சராய்
ரயில் நிலையத்தில் பிரித்தெடுக்கப்பட்டு பாட்னா செல்லும் ரயிலுடன் சேர்க்கப்பட்டது.
முகல்சராய் ரயில் நிலையத்தில் அவரது பெட்டிக்குள் நுழைந்த இளைஞன் அவரது படுக்கையை
அங்கிருந்து எடுத்துச் சென்றான். பக்கத்துப் பெட்டியில் இருந்த பயணி அது குறித்து அவனிடம்
கேட்ட போது தன்னை உபாத்யாயாவின் மகன் என்றும் அவருடைய உடைமைகளை எடுத்துச் செல்வதற்காக
தான் வந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறான். படுக்கையை எடுத்துச் செல்லும் போது
அதிலிருந்த காகிதங்கள் கீழே விழுந்தன. அவற்றையெல்லாம் பொறுக்கி எடுத்துக் கொண்டு மிக
சாவகாசமாக அவன் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளான். காவல்துறையினர் அவன் அந்தப்
படுக்கையை நாற்பது ரூபாய்க்கு விற்று விட்சான் என்று பின்னர் தகவல் தெரிவித்தனர்.
பாட்னா ரயில் நிலையத்தில்
உபாத்யாயா இருந்த அந்தப் பெட்டியைச் சுத்தம் செய்யுமாறு அந்த ரயிலில் பயணம் செய்திராத
நடுத்தர வயதான ஒருவர் துப்புரவுப் பணியாளரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த
மனிதர் தனது கைரேகை அல்லது கால் தடங்கள் என்று எதுவும் அங்கே பதிவு பெற்று விடாத
வகையில் பெட்டிக்கு வெளியிலேயே நின்று கொண்டிருந்திருக்கிறார். அங்கே ரத்தக்கறை
எதுவும் இருக்கவில்லை என்று பெட்டியைச் சுத்தம் செய்தவர் தெரிவித்திருந்தார்.
அந்தப் படுக்கையுடன் உபாத்யாயா கொண்டு வந்திருந்த கேன்வாஸ் பையும் காணாமல்
போயிருந்தது. அந்தப் பையில் சில புத்தகங்கள், குர்தா சட்டை, தான் அணிந்திருந்த
நேரு ஜாக்கெட் ஆகியவற்றை உபாத்யாயா வைத்திருந்தார். அந்த கேன்வாஸ் பை,
உபாத்யாயாவின் செருப்புகள், பற்பசை, பல் துலக்கும் பிரஷ், கண்ணாடி போன்றவை பனாரஸ்,
முகுல்சராய் என்று மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டன.
ஐந்து பேர் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டனர். திருட்டு தொடர்பாக உபாத்யாயாவின் மரணம் அதாவது கொலை நடந்திருக்கலாம்
என்று கருதுவதற்கு வழியிருந்தாலும், அதற்கான ஆதாரங்கள் மிகவும் குறைவாகவே இருந்தன.
திருடர்கள் ஒருவேளை அவரைக் கொன்றிருப்பார்களேயானால் அவருடைய கைக்கடிகாரம், பணம்,
சூட்கேஸ் ஆகியவற்றைத் தங்களுடன் அவர்கள் ஏன் எடுத்துச் சென்றிருக்கவில்லை? ரயிலில்
இருந்து அவரை ஏன் தள்ளி விட்டார்கள் அல்லது தூக்கி வீசினார்கள்? மேஜர் சர்மா என்ற அந்த
ராணுவ அதிகாரி யார்? பாட்னாவில் அந்தப் பெட்டியை சுத்தம் செய்யச் சொன்னது யார்?
எதற்காக அந்தப் பெட்டியைச் சுத்தம் செய்தார்கள்?
தங்களுடைய அரசியல்
ஆதாயத்திற்குத் தடையாக இருந்த உபாத்யாயாவை ஆளை அனுப்பி வைத்து யாரோ கொலை
செய்திருப்பதாகவே ஜனசங்கத்தினர் நம்பினர். ஜனசங்கத்தினரும், விசாரணையை
மேற்கொண்டிருந்தவர்களும் பனாரஸில் கங்கை நதியின் மீதுள்ள நீளமான இரும்புப்
பாலத்தின் மீது அந்த ரயில் வந்த போது எழுந்த சப்தத்தில், உதவிக்காக அவர் எழுப்பிய
குரல் யாருக்கும் கேட்க வாய்ப்பில்லாத நிலையில், அந்தப் பெட்டியில் நன்றாகத் தூங்கிக்
கொண்டிருந்த அவர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான சாத்தியம் இருப்பதாகக் கருதினர்.
உபாத்யாயாவின் பயண விவரங்களை
நன்கு அறிந்து வைத்திருந்தவர்களாலேயே அவரது மரணம் நன்கு திட்டமிடப்பட்டு
செய்யப்பட்டுள்ளது என்று ஜனசங்கத்தினர் குற்றம் சுமத்தினர். லக்னோவில் இருந்த
உபாத்யாயாவிற்கு பாட்னாவில் நடைபெறும் கட்சிக் கூட்டத்தில் வந்து கலந்து
கொள்ளுமாறு பிப்ரவரி பத்தாம் தேதி காலையில்தான் பாட்னாவில் இருந்து தொலைபேசி மூலம்
தெரிவிக்கப்பட்டது. புதுதில்லியில் நடைபெறவிருந்த மற்றுமொரு கூட்டத்தில் கலந்துகொள்ள
வேண்டியிருந்ததால் உபாத்யாயா முதலில் பாட்னாவிற்குச் செல்வதற்கு உடனே ஒத்துக்
கொள்ளவில்லை. ஆனாலும் பாட்னாவில் உள்ளவர்களுக்குத் தெரிவிக்காமலேயே சனிக்கிழமை
மாலையில் லக்னோவில் ரயிலில் ஏறி பாட்னா செல்வதற்கான பயணத்தை அவர் மேற்கொண்டார்.
பிரதமர் இந்திரா காந்தி,
அவரது அரசாங்கம் மட்டுமல்லாது ஒட்டு மொத்த இந்தியாவும் அந்தக் கொலையில் இருந்த
மர்மத்தின் தீவிரத்தை நன்கு அறிந்தே இருந்தனர். அந்தக் கொலை ஜனசங்கத்தின்
எதிரிகளான முஸ்லீம்கள், கம்யூனிஸ்டுகளால் நடந்திருக்கலாம் என்பது விசாரணையில் உறுதி
செய்யப்பட்டால், தேசம் முழுவதும் வகுப்புவாதக் கலவரம் மூளும் என்பதால் அப்போது அனைவரிடமும்
பதட்டம் நிலவியது. ஜனசங்கம் 1911ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஹிந்து தீவிரவாத அமைப்பான
ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளையாகவே இருந்தது. தேசப்பிரிவினையின் போது ஹிந்துக்களையும்,
ஹிந்துப் பாரம்பரியத்தையும் பாதுகாக்க முயன்ற ஆர்எஸ்எஸ் அது மட்டுமல்லாது ஏராளமான
முஸ்லீம்களை அழித்தொழிக்கும் வகையிலும் செயல்பட்டது. ஆர்எஸ்எஸ்சில் முன்னர்
உறுப்பினராக இருந்த ஹிந்து மதவெறியன் ஒருவனால் 1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தி
கொல்லப்பட்ட பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்திய அரசாங்கத்தால் ஒன்றரை ஆண்டு காலம் தடை
செய்யப்பட்டிருந்தது. சியாமா பிரசாத் முகர்ஜி என்ற வங்காளியால் 1951ஆம் ஆண்டு துவங்கப்பட்ட
ஜனசங்கம் பாகிஸ்தானுக்கு எதிரான உணர்வு பொதுமக்களிடம் தலை தூக்கியது, காந்தி குறித்த
நினைவுகள் அவர்களிடம் மழுங்கத் தொடங்கியது போன்ற காரணங்களால் தனக்கென்று பலமான
அடித்தளத்தை அமைத்துக் கொண்டது. முகர்ஜி 1953ஆம் ஆண்டு காஷ்மீர் சிறையில்
இருக்கும் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்தார். அவருடைய ஆதரவாளர்களில்
ஒருவராக இருந்த ரகுவீரா என்பவரும் 1963ஆம் ஆண்டு சாலை விபத்தில் கொல்லப்பட்டார்.
1952ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில்
ஜனசங்கம் முப்பது லட்சம் வாக்குகளைப் பெற்றது. கடந்த ஆண்டு (1967) நடந்து முடிந்த
தேர்தலில் மற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தையும் விட அதிகமான வாக்குகளை (1.4 கோடி
வாக்குகள்) ஜனசங்கம் பெற்றிருந்தது. தில்லி நகராட்சி இப்போது ஜனசங்கம் வசம்
இருக்கிறது. பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள
கூட்டணி அரசாங்கங்களில் அங்கம் வகித்து தனது அடித்தளத்தை ஜனசங்கம் பரவலாக்கிக் கொண்டுள்ளது.
ஹிந்தி திணிப்பிற்கு எதிரான தேசிய இயக்கங்களின் போது ஜனசங்கம் அடக்கி வாசித்தே வந்தது.
உபாத்யாயா மேற்கொண்டிருந்த
மிதவாத நிலையை ஜனசங்கம் தொடருமா, இல்லையெனில் ஆர்எஸ்எஸ்சின் வழிகாட்டுதலில் மிகவும்
மோசமான வழியில் இறங்குமா என்பது பெரிய
கேள்விக்குறியாகவே இருக்கிறது. உபாத்யாயாவின் இறுதிச் சடங்குகள் முடிந்த அடுத்த
நாள் அந்தக் கட்சி இன்னுமொரு மிதவாதியான நாற்பத்தியொரு வயதான அடல் பிகாரி
வாஜ்பாயியை தனது தலைவராகத் தேர்வு செய்து கொண்டுள்ளது. உபாத்யாயாவைப் போன்றே வாஜ்பாயியும்
ஆர்எஸ்எஸ் வழி வந்தவராக இருந்தாலும் அவர் கொஞ்சம் நெகிழ்வுத் தன்மை கொண்டவராகவே
இருக்கிறார். ஒருவேளை உபாத்யாயாவை முஸ்லீம் அல்லது கம்யூனிஸ்டு ஒருவ கொலை செய்தார்
என்று கண்டறியப்பட்டால் இந்த மிதவாதத்தை ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இல்லாமல் செய்து
விடுவார்கள். இப்போது வரையிலும் நாடு அமைதியாகத்தான் இருக்கிறது. அமைதி தொடர்கின்ற
போதிலும், அந்த வெடிகுண்டு வெடிப்பதற்காக இன்னும் அங்கேயே காத்துக் கொண்டுதான்
இருக்கிறது.
ஜனசங்கத் தலைவர் தீன்தயாள்
உபாத்யாயா 1968ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று ரயிலில் படுகொலை செய்யப்பட்ட சில
மாதங்களுக்குப் பிறகு அவருடைய படுகொலை குறித்த தகவல்களுடன் ஜேம்ஸ் ஷெப்பர்ட் என்ற
பத்திரிகையாளர் எழுதி லைஃப் மேகசினில் வெளியான கட்டுரை
Comments