ராட்சதனாக உருவெடுத்திருக்கும் பைஜுஸ் கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலை சுற்ற வைக்கும் எழுச்சியின் மறுபக்கம்
நிகில் இனாம்தார்
பிபிசி
தன்னுடைய
பணத்தை பல மாதங்களாக இணையவழி பயிற்சி நிறுவனமும், உலகின் மிக உயர்ந்த மதிப்புள்ள கல்வி
தொழில்நுட்ப (எட்டெக்) ஸ்டார்ட்-அப்
நிறுவனமுமான பைஜுஸ் நிறுவனத்திடமிருந்து திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை
மேற்கொண்டு வருவதாக திகம்பர் சிங் கூறுகிறார். திகம்பர் சிங், ஒரு கணக்காளர். இரண்டு
ஆண்டுகளுக்கு தனது மகனுக்கான கணிதம், அறிவியல் பாடங்களைப் பெற்றுக் கொள்வதற்காக
பைஜுஸ் மூலம் கடன் பெற்ற்க் கொண்டதாகக் கூறுகின்ற திகம்பர் சிங் முன்பணமாக
ஐயாயிரம் ரூபாயைச் செலுத்தி கூடுதலாக முப்பத்தையாயிரம் ரூபாயை கடனாகப் பெற்றுக்
கொண்டிருந்ததாகக் கூறுகிறார். மேலும் கூறுகையில் பைஜுஸ் விற்பனை பிரதிநிதி ஒருவர்
தன்னுடைய வீட்டிற்கு வந்து, தன்னுடைய மகனால் பதிலளிக்க முடியாத அனைத்து வகையான
கடினமான கேள்விகளைக் கேட்டதாகவும், அவருடைய வருகைக்குப் பிறகு அவன் முற்றிலுமாக
ஊக்கமிழந்து போனதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்களிடமிருந்து
அந்தப் பாடங்களைப் பெற்றுக் கொண்டது தங்களுக்கு அவமானமாக இருப்பதாக பிபிசியிடம் அவர்
கூறினார். நேரடியான பயிற்சி, மகனின் முன்னேற்றம் குறித்து தன்னை அழைத்து தகவல்களைப்
புதுப்பித்துக் கொள்ளக் கூடிய ஆலோசகர் ஒருவர் நியமனம் என்று தங்களிடம் பைஜுஸ் வாக்குறுதியளித்த சேவைகள் எதுவுமே தரப்படவில்லை
என்பது மட்டுமல்லாது ஆரம்ப மாதங்களுக்குப்
பிறகு பைஜுஸ் தன்னுடைய தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதையே நிறுத்திக்
கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.
அடிப்படையற்றவை,
உல்நோக்கம் கொண்டவை என்று அவரது குற்றச்சாட்டுகளை நிராகரித்த பைஜுஸ், தொடர்
காலகட்டத்தில் தாங்கள் பலமுறை சிங்கிடம் பேசியதாக பிபிசியிடம் தெரிவித்தது. தங்கள்
தயாரிப்புகளுக்கான பணத்தை பதினைந்து நாளில் திரும்பப் பெற்றுக் கொள்ளும் கொள்கை
மற்றும் தங்களின் சேவைகளுக்கான பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்
கொள்ளும் கொள்கையின்படி டேப்லெட்டுடன் கற்றலுக்கான பொருட்களைத் தேர்வு செய்து
கொண்ட மாணவரிடம் கேள்விகள் எதுவும் கேட்கப்படாது என்று நிறுவனத்தினர் கூறினர்.
தங்களுடைய
தயாரிப்பு அனுப்பப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிங் பணத்தைத் திரும்பக்
கேட்டதாக கூறிய நிறுவனம், சிங்கின் குற்றச்சாட்டுகளை அவர்களுடைய கவனத்திற்கு பிபிசி
கொண்டு சென்ற பிறகு சிங் கேட்ட பணத்தை அவருக்குத் திருப்பிக் கொடுத்தது.
இதுகுறித்து
பல பெற்றோர்களிடம் பிபிசி பேசியது. ஒருவருக்கு ஒருவரே பயிற்சி அளித்தல்,
குழந்தைகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு வழிகாட்டி நியமனம் போன்று அவர்கள்
வாக்குறுதியளித்த சேவைகள் எதுவும் ஒருபோதும் தரப்படவில்லை. இந்திய நுகர்வோர்
நீதிமன்றங்கள் பணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் சேவைகளின் குறைபாடு தொடர்பான
தகராறுகளில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு குறைந்த பட்சம் மூன்று
வெவ்வேறு வழக்குகளில் பைஜுஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளன. இந்த வழக்குகளில்
தாங்கள் ஒரு தீர்வை எட்டியிருப்பதாகவும், தங்களின் குறை தீர்க்கும் விகிதம் 98
சதவிகிதமாக இருக்கிறது என்றும் பைஜூஸ் பிபிசியிடம் கூறியது.
ஆனால்
முன்னாள் பைஜுஸ் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் மேற்கொண்ட நேர்காணலின்
அடிப்படையில் பிபிசி நடத்திய விசாரணையில் பைஜுஸ் மீதான பல குற்றச்சாட்டுகள்
வெளியில் வந்தன. பைஜுஸ் மீது அதிருப்தியடைந்த பெற்றோர்கள் பைஜுஸ் விற்பனை
முகவர்களால் தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். அவசரத் தேவை
என்று நம்பிய தங்களை அந்த ஒப்பந்தங்களை நோக்கி ஈர்த்த முகவர்கள் விற்பனை முடிந்த
சில மாதங்களுக்குப் பிறகு தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டதால் பணத்தைத்
திரும்பப் பெறுவது கடினமாகியது என்றும் அவர்கள் கூறினர். பைஜூஸின் முன்னாள் ஊழியர்
ஒருவர் விற்பனை முடிந்ததுமே முகவர்கள் அதனைப் பின்தொடர்வதற்கு குறைந்தபட்சமாகவே
அக்கறை எடுத்துக் கொள்வார்கள் என்று கூறினார்.
மிக
அதிகமான விற்பனை இலக்குகளை வலியுறுத்துகின்ற மேலாளர்களால் உயர் அழுத்தம் கொண்ட விற்பனைக்
கலாச்சாரம் பைஜுஸில் இருந்து வருவதாக முன்னாள் ஊழியர்கள் கூறுகின்றனர். இணையவழி நுகர்வோர் மற்றும் ஊழியர் தளங்களில் பைஜுஸ்
நிறுவனத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மிகவும்
தீவிரமான விற்பனை யுக்திகளைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுவதை மறுத்த பைஜூஸ்
நிறுவனம் ‘மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் எங்கள் தயாரிப்புகளின் மதிப்பைக்
கண்டு அதன் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே வாங்குவார்கள்.
எங்களுடைய ஊழியர் கலாச்சாரம் பெற்றோர்களிடம் தவறான அல்லது மோசமான நடத்தையை ஒருபோதும்
அனுமதிக்காது. தவறான பயன்பாடுகள், இழிவாக நடந்து கொள்வதைத் தடுப்பதற்கென்று அனைத்து
வகையான கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தது.
பைஜுஸ் எட்டெக்
நிறுவனத்தின் நிறுவனர் பைஜு ரவீந்திரன்
பைஜு
ரவீந்திரனால் 2011ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பைஜூஸ் நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் நிறுவனர்
மார்க் ஜுக்கர்பெர்க்கின் சான் ஜுக்கர்பெர்க் இனிசியேட்டிவ் மற்றும் டைகர்
குளோபல், ஜெனரல் அட்லாண்டிக் போன்ற தனியார் பங்கு நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்டு
வருகிறது.
ஒன்றரை
ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் கோடிக்கணக்கான இந்திய
மாணவர்களை இணையவழி வகுப்புகளை நோக்கி தொற்றுநோய்
திருப்பி விட்டது. இவ்வாறான திடீர் மாற்றம் சிங் போன்ற பெற்றோர்களைக் கவலையடையச்
செய்தது. கல்வியை தங்களை மேல்நோக்கி நகர்த்துவதற்கான இன்றியமையாத அனுமதிச்சீட்டாக
பாரம்பரியமாகப் பார்த்து வருகின்ற அவரைப் போன்றவர்களே பைஜுஸ் சந்தையில்
முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.
எனவே
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்தே அந்த நிறுவனத்தின் ஏற்றத்திற்கு எவ்விதக் குறைவுமில்லாமல்
மிகப்பெரிய அளவில் இருந்தது. எண்பத்தைந்து சதவிகித புதுப்பித்தல் விகிதத்துடன்,
அறுபது லட்சத்திற்கும் அதிகமான பணம் செலுத்தும் பயனர்கள் தங்களிடம் சேர்ந்துள்ளதாக
அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
வெறுமனே
மனப்பாடம் செய்வதை வழக்கமாகக் கொண்டு கற்று வருகின்ற நாட்டில் நுட்பமாக
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிவேகமான, ஈர்க்கக்கூடிய பாடங்களை உருவாக்கியதாகப்
புகழ் பெற்றிருக்கும் பைஜூஸின் கற்றல் உள்ளடக்கத்தின் தரத்திற்கு உறுதியளிக்கக்
கூடிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரிடம் பிபிசி பேசியது. அந்த தொழில்துறையில்
வாடிக்கையாளர் அனுபவத்தை அளவிடுவதாக, அதன் வணிக வளர்ச்சியை முன்னறிவிப்பதாக
இருக்கின்ற மிக உயர்ந்த நிகர ஊக்குவிப்பாளர் மதிப்பெண்ணை (NPS) தான்
கொண்டிருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது.
2020
மார்ச் முதல் நூறு கோடி டாலருக்கும் அதிகமான தொகையை திரட்டி, பத்துக்கும்
மேற்பட்ட போட்டியாளர்களை வாங்கி தன் கீழ்
வைத்திருக்கும் அந்த நிறுவனம் குறியீட்டு வகுப்புகள் முதல் போட்டித்
தேர்வுகளுக்கான பயிற்சி வரை அனைத்தையும் வழங்கும் நிறுவனமாக மாறியுள்ளது. பாலிவுட்
சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் விளம்பரத் தூதராக அந்த நிறுவனத்தின் பிரச்சாரத்தை
முன்னெடுத்து வருவதால், இந்திய தொலைக்காட்சிகளில் அதிகம் காணக்கூடிய ஒன்றாக அந்த
நிறுவனம் இருக்கிறது.
ஆனால்
பெற்றோர்களின் பாதுகாப்பின்மை உணர்வைப் பயன்படுத்தி அவர்களின் கடன் சுமையை
அதிகரித்துக் கொண்ட தீவிரமான விற்பனை யுக்திகளின் விளைவாகவே அந்த நிறுவனத்தின்
விரைவான வளர்ச்சி சாத்தியமாகியுள்ளதா என்ற கேள்வியை கல்வி வல்லுநர்கள் சிலர்
எழுப்பியுள்ளனர். விற்பனைக்கான இடைவிடாத தொலைபேசி அழைப்புகள், தந்திரம் நிறைந்த
பேச்சுகள் அவர்களுடைய யுக்திகளுக்குள் அடக்கம் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.
அவ்வாறான பேச்சுகள் ஒருவேளை பைஜுஸின் தயாரிப்புகளை வாங்க முடியாவிட்டால் தங்கள்
குழந்தைகள் கல்வியில் பின்தங்கி விடுவர் என்று பெற்றோர்களை நம்ப வைப்பதாகவே
இருக்கும்.
பைஜுஸ்
வழங்குகின்ற அடிப்படையான படிப்புகள் கூட சுமார் ஐம்பது டாலர் (சுமார் நான்காயிரம்
ரூபாய்) என்ற அளவிலே தொடங்குகின்றன.
பெரும்பாலான இந்தியர்களுக்கு அந்தக் கட்டணம் கட்டுப்படியாகாது. குழந்தைகளுக்கு
உண்மையிலேயே தேவையா அல்லது அவர்களுடைய குடும்பத்தால் அவற்றை வாங்கிக் கொடுக்க
முடியுமா என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் நிறுவனம் தனது தயாரிப்புகளை
பெற்றோர்களிடம் தள்ளி விடுவதாக முன்னாள் ஊழியர் ஒருவர் கூறினார்.
‘அவர்
ஒரு விவசாயி அல்லது ரிக்சா இழுப்பவராக இருந்தாலும் எங்களுக்குப் பிரச்சனையில்லை.
ஒரே தயாரிப்பு பல விலைகளில் விற்கப்படுகிறது. பெற்றோரால் வாங்க முடியாது என்று
எங்களுக்குத் தெரிந்தால், அந்த வரம்பில் உள்ள மிகக் குறைந்த விலையையே அவர்களிடம்
வசூலிக்கப்படுகிறது’ என்று பைஜுஸின் முன்னாள் வணிக மேம்பாட்டு கூட்டாளியான நிதிஷ்
ராய் பிபிசியிடம் கூறினார்.
வாடிக்கையாளர்களின்
தேவைகள் மற்றும் அவர்களிடமுள்ள வாங்கக்கூடிய திறன் ஆகியவற்றின் அடிப்படையில்
வெவ்வேறு விலைப் புள்ளிகளில் வெவ்வேறு தயாரிப்புகள் தங்களிடம் இருப்பதாகவும்,
ஆனால் மேற்குறிப்பிட்ட முறையில் விலைகளை மாற்றுவதில்லை என்றும் பைஜுஸ் கூறியது. விற்பனை
நிர்வாகிகளைப் பொறுத்தவரை விலை நிர்ணயம் மீது அவர்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும்
இல்லை என்றும் அது குறிப்பிட்டுக் கூறியது.
தற்போதைய
மற்றும் முன்னாள் ஊழியர்கள் பலரும் பெரும்பாலும் நம்பத்தகாத இலக்குகளை தாங்கள்
சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததாகவே பிபிசியிடம் தெரிவித்தார்கள்.
தங்கள் இலக்குகளை அடையாதிருந்த
விற்பனையாளர்களை அவமானப்படுத்திய மேலாளர்கள் இருந்ததைக் காட்டுகின்ற
வகையிலே கடந்த ஆண்டின் பிற்பகுதியிலும், 2021 ஜனவரி மாதத்திலும் பதிவு செய்யப்பட்ட
இரண்டு தொலைபேசி உரையாடல்கள் இணையத்தில் வெளியாகியிருந்தன.
அதுகுறித்து
பேசிய பைஜுஸ் அந்த உரையாடல்கள் பதினெட்டு மாதங்களுக்கு முன்பு நடந்தவை என்றும் அதில்
ஈடுபட்ட அந்த மேலாளர்களின் ஒப்பந்தத்தை நிறுத்துவது உட்பட நிலைமையைச்
சரிசெய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாங்கள் எடுத்ததாகவும் பிபிசியிடம்
கூறியது. பிபிசிக்கு அது அளித்திருந்த அறிக்கையில் ‘எங்கள் நிறுவனத்தில் தவறான,
புண்படுத்தும் நடத்தைகளுக்கு இடமே இல்லை. நீங்கள் குறிப்பிடுகின்ற விவகாரத்தில்
பாதிக்கப்பட்ட ஊழியர் தொடர்ந்து இப்போதும் எங்களுடனே இருக்கிறார். நிர்வாகத்தின்
நம்பிக்கையைப் பெற்றவராக அவர் இருந்து வருகிறார்’ என்றும்
குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால்
விற்பனை செய்வதற்கான அழுத்தம் மிக அதிகமாக இருந்தது என்றும், தங்களுடைய மன
ஆரோக்கியத்தை அது பாதித்தது என்றும் பல ஊழியர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
பைஜுஸில் தான் பணிபுரிந்த ஆண்டில் தனக்கு பதட்டம் ஏற்பட்டதாகவும், ரத்த அழுத்தம்,
சர்க்கரை அளவு அதிகரித்ததாகவும் விற்பனை நிர்வாகி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
தங்கள்
வேலையின் வழக்கமான அம்சமாக 12-15 மணிநேர வேலை நாட்கள் இருந்தன என்றும்,
வாடிக்கையாளர்களுடன் 120 நிமிடங்கள் பேச்சு-நேரத்தில் ஈடுபட முடியாத ஊழியர்களின்
பதிவேட்டில் ‘அன்றைய தினம் பணிக்கு வரவில்லை’ என்று குறிக்கப்பட்டதாகவும், அதன்
விளைவாக அன்றைய நாளுக்கான ஊதிய இழப்பு தங்களுக்கு ஏற்பட்டது என்றும் பல ஊழியர்கள்
கூறுகின்றனர். ‘வாரத்திற்கு இரண்டு முறையாவது எனக்கு அது போன்று நடந்திருக்கிறது.
அவர்கள் தருகின்ற இலக்கை அடைவதற்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நான் இருநூறு
அழைப்புகளைச் செய்ய வேண்டும்’ என்று முன்னாள் ஊழியர் ஒருவர் கூறினார். மேலும் அந்த
இலக்கை அடைவது நம்பமுடியாத அளவிற்கு மிகக் கடினமாக இருந்தது என்று கூறிய அவர்
தொடர்பு கொள்வதற்கான சில தடங்கள் வழங்கப்படும் என்றும் சராசரி அழைப்பு இரண்டு
நிமிடங்களுக்கும் குறைவாகவே நீடிக்கும் என்றும் அவர் கூறினார்.
ஆனால்
முதல் நிகழ்விலேயே இலக்கை அடையத் தவறினால் சம்பளம் குறைக்கப்படும் அல்லது அவர்கள்
பணிக்கு வரவில்லை என்று குறிக்கப்படும் என்று சொல்வது தவறானது என்று தெரிவித்த
பைஜுஸ் ‘அனைத்து நிறுவனங்களும் கடுமையான ஆனால் நியாயமான விற்பனை இலக்குகளைக் கொண்டவையாகவே
இருக்கின்றன. அதில் பைஜுஸ் மட்டும் தனித்து விதிவிலக்காக இருக்கவில்லை. ஆனாலும் ஊழியர்களின்
உடல்நலம் மற்றும் வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வலுவான பயிற்சித் திட்டம்
அவர்களுக்கு வழங்கப்படுகிறது’ என்று தெரிவித்தது. ‘எங்கள் குழும நிறுவனங்களில்
ஆயிரக்கணக்கான ஊழியர்கள் உள்ளனர், ஒரு முறை தவறு நடந்தால் கூட, உடனடியாக நாங்கள்
அவற்றை மதிப்பீடு செய்து தவறான நடத்தைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை
எடுக்கிறோம்’ என்றும் கூறியது.
இப்போது
மும்பை நகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் அனாதைகளுக்கு கற்பித்து வருகின்ற ராய், அந்த நிறுவனம்
இயங்குகிற விதம் தனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியதாலேயே இரண்டு மாத கால
அவகாசத்திற்குப் பிறகு 2021ஆம் ஆண்டின்
தொடக்கத்தில் பைஜுஸை விட்டு தான் வெளியேறி விட்டதாகக் கூறுகிறார். ஒரு உன்னதமான நோக்கத்துடன் தொடங்கப்பட்ட
அது இப்போது வருவாய் ஈட்டும் இயந்திரமாக மாறி விட்டது’ என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவின்
ஸ்டார்ட்-அப்கள் குறித்து விரிவாக அறிக்கை தருகின்ற ஊடகம் மற்றும் ஆய்வு நிறுவனமான
மார்னிங் கான்டெக்ஸ்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரதீப் சாஹா கூறுகையில்
‘துரிதமான வேகத்தில் வளர்ச்சியைத் தேடும் முயற்சிகளில் இதுபோன்று அதிகமாகவே நடைபெறுகிறது.
அதுவொன்றும் பைஜுஸின் பிரச்சனையாக இருக்கவில்லை. அது ஒட்டுமொத்த எட்டெக்
துறைக்குமானது’ என்றார். அதிக அளவில் விமர்சனங்கள் இருந்த போதிலும், எந்தவொரு
மாற்றமும் வருவதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் அவர் ‘இந்தப் புகார்களில் பெரும்பாலானவை
மேலோட்டமாகவே உள்ளன. அவற்றில் ஒரு சில மட்டுமே பொருட்படுத்தத் தக்கவையாக உள்ளன.
இந்த ஸ்டார்ட்-அப்கள் ஈட்டுகின்ற வருமானத்திற்கு எதிராக இதுபோன்ற புகார்கள்
வைக்கப்படும் போது, அவை ஒரு
பொருட்டாகவே இருப்பதில்லை’ என்று கூறினார்.
ஆனாலும்
ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்ற கூக்குரல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. டாக்டர்
அனிருத்தா மல்பானி, மருத்துவர், ஏஞ்சல் முதலீட்டாளர் மற்றும் பைஜுஸின் வணிக மாடல்
குறித்து எதிர்க்குரல் எழுப்பி வருகின்ற விமர்சகர். இந்தியாவில் எட்டெக்
ஸ்டார்ட்-அப்களை பீஜிங் பாணியில் ஒடுக்குவதற்கான நேரம் கனிந்துள்ளது என்று அவர் பிபிசியிடம்
கூறினார். சமீபத்தில் இணையவழி பயிற்சி நிறுவனங்கள் லாப நோக்கற்றதாக மாற வேண்டும்
என்று சீனா கட்டளையிட்டுள்ளதகத் தெரிவித்தார்.
தீர்வு
ஏற்கனவே இருக்கின்றது என்று நம்புகின்ற டாக்டர் மல்பானி வரையறுக்கப்பட்ட
குறைந்தபட்ச காலம் என்ற ஒன்று இல்லாத மாதாந்திர சந்தா மாடலைக் குறிப்பிடும்
வகையில் ‘நெட்ஃபிளிக்ஸ் மாடலை’ இந்திய அரசாங்கம் இந்தத் துறையை
ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கிட வேண்டும் என்று கூறுகிறார். ‘மாணவர்களைத்
தொடர்ந்து மகிழ்விப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பதால் இதனுடன்
தொடர்புடையவர்கள் அனைவரையும் அது உடனடியாகத் திருப்திப்படுத்தும்’ என்கிறார்.
இந்திய அரசாங்கம் இன்னும் அதற்குள் காலடி எடுத்து வைக்கவில்லை என்றாலும்
பெற்றோரிடமிருந்து வருகின்ற குறைகள் அதிகரிக்கும் போது விரைவில் அது தேவைப்படலாம்.
இந்தத் துறையை அரசு முறைப்படுத்த வேண்டுமென்று கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்வதற்கு தயாராகி வருவதாக டாக்டர். மால்பானி கூறுகிறார்.
‘பல கோடி ரூபாய்கள்
திரட்டப்பட்டுள்ளது... உலகின் மிக மதிப்புமிக்க எட்-டெக் ஸ்டார்ட் அப் என்று
வெளியாகின்ற இந்த எண்கள் அனைத்தையும் பாருங்கள்... அவையனைத்தும் அர்த்தமற்ற தற்பெருமை அளவீடுகளாக மட்டுமே இருக்கின்றன’
என்று கூறிய டாக்டர் மல்பானி ‘சுகாதாரம்
போன்று கல்வியும் பொது நலன் சார்ந்தது என்பதை நாம் ஒரு கட்டத்தில் மறந்துவிடக்
கூடாது’ என்று ஆணித்தரமாக தன்னுடைய வாதத்தை இதுபோன்ற நிறுவனங்களுக்கு எதிராக
முன்வைக்கிறார்.
https://www.bbc.com/news/world-asia-india-58951449
கூடுதல் தகவல்களுக்கு:
இந்தியக் கல்வி அமைப்பில் பைஜுஸ் என்ன பாதிப்பை உண்டாக்குகிறது?எஸ்.அப்துல் மஜீத்
Congress leader Karti Chidambaram takes jibe at BYJU'S
India's EdTech Firms Bypassing Regulations
Comments