கோட்சேவின் மூன்று குண்டுகள் காந்தியைக் கொல்லவில்லை - காந்தி படுகொலையாளர்கள் நடத்தும் பொய்ப் பிரச்சாரங்கள்
துஷார் காந்தி
வயர் இணைய இதழ்
2017 அக்டோபர் 07
துஷார் காந்தி
மகாத்மா காந்தியின் படுகொலையை தொடர்ந்து நியாயப்படுத்துகின்ற
முயற்சிகளை நாதுராம் கோட்சேக்கு ஆதரவளித்து ஊக்கமளித்த கருத்தியல் மேற்கொண்டு
வருகிறது. அந்தக் கருத்தியலின் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் இந்திய மக்களில் ஒரு
பெரும்பகுதியினரை நம்ப வைக்கின்ற விதத்திலே கடந்த எழுபதாண்டுகளாக தங்களுடைய
பொய்களை மிகவும் வெற்றிகரமாக அரங்கேற்றி வருகின்றனர். இப்போது காந்தியின் படுகொலையைக்
குறித்தே சந்தேகங்களைப் பரப்புகின்ற வகையில் அவர்கள் அதனை அடுத்த கட்டத்திற்கு
எடுத்துச் செல்கின்றனர். சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் முன்பாக காந்தியின்
படுகொலைக்கு மறுவிசாரணை வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த வழக்கில்
தனக்கு உதவுவதற்காக நீதிமன்ற உதவியாளர் ஒருவரை நியமித்துள்ள உச்சநீதிமன்றம் அடுத்தகட்ட
விசாரணையை அக்டோபர் 30க்கு ஒத்தி வைத்துள்ளது. இத்தகைய அப்பட்டமான அற்பமான மனுவை நீதிமன்றம்
தள்ளுபடி செய்யாதது உண்மையிலேயே ஆச்சரியமளிப்பதாகவே இருக்கிறது.
இவ்வாறு காந்தி படுகொலையைப் பற்றி தவறான
தகவல்களைத் தருவது, குழப்பத்தை உருவாக்குவது இப்போது முதன்முறையாக நடப்பதாக இருக்கவில்லை.
கொலைகாரர்களுக்கு கருத்தியல் தூண்டுதல்களை
அளித்து வருகின்ற ஹிந்து வலதுசாரிகளின் நன்கு திட்டமிடப்பட்ட வழிமுறைகளின் ஒரு
பகுதியாகவே இதுபோன்ற செயல்கள் அனைத்தும் அமைந்திருக்கின்றன.
அந்த
நான்காவது தோட்டாதான் காந்தியைக் கொன்றது
காந்தியின் படுகொலை தொடர்பாக மறுவிசாரணை நடத்தப்பட
வேண்டும் என்ற மனு பம்பாய் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2016ஆம் ஆண்டிலேயே தாக்கல்
செய்யப்பட்டிருந்தது. அபினவ் பாரத் என்ற
அமைப்பில் ஆய்வாளராக இருந்து வருகின்ற பங்கஜ் பட்னிஸ் என்பவர் கோட்சே தவிர மற்றொரு
நபரும் காந்தியைத் துப்பாக்கியால் சுட்டதாகவும், நான்காவது தோட்டா ஒன்று கொலைக்காகப்
பயன்படுத்தப்பட்டதாகவும், மர்மமான வெளிநாட்டவர் ஒருவருக்கு அந்தக் கொலையில் பங்கு
இருந்ததாகவும் தனது மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார். வீர சாவார்க்கரின் பக்தராகத்
தன்னைக் காட்டிக் கொண்ட அந்த மனுதாரர், காந்தி படுகொலை மூலமாக சாவர்க்கருக்கு
ஏற்பட்டிருந்த அவப்பெயரைத் துடைத்தெறிய விரும்புபவராக இருந்தார். தனது மனுவில் காந்தியின்
படுகொலை தொடர்பாக 1969ஆம் ஆண்டு வெளியான நீதிபதி கபூர் ஆணையத்தின் அறிக்கையை
நிராகரித்து புதிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
நல்லவேளையாக பம்பாய் உயர் நீதிமன்றம் அந்த மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்து அதனை
நிராகரித்து விட்டது. ஆனால் இப்போது அதே பட்னிஸ் அளித்த மற்றொரு மனுவை உச்சநீதிமன்றம்
ஏற்றுக் கொண்டிருக்கிறது.
வழக்குத் தொடர்ந்த பங்கஜ் பட்னிஸ்
காந்தி படுகொலை வழக்கிலிருந்து சாவர்க்கர் விடுதலை
செய்யப்பட்டிருந்தாலும், கபூர் ஆணையம் மேற்கொண்ட முழுமையான விசாரணையின் மூலமாக
காந்தி படுகொலையில் ஆர்எஸ்எஸ்க்கு இருந்த தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டதையும், கொலைக்கான
சதியில் சாவர்க்கர் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை அந்த ஆணையம் வெளியிட்டது என்பதையும்
நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அன்றிலிருந்தே கபூர் ஆணையத்தின் அறிக்கையின் இருப்பு
சங் பரிவார், சாவர்க்கர் ஆதரவளர்களுக்கு மிகப்பெரும் கவலையை ஏற்படுத்துவதாகவே இருந்து
வருகிறது.
சமகால வரலாற்றை அழித்தொழித்து அதனை தங்களுடைய சொந்த
கற்பனைகளுக்கேற்றவாறு மாற்றுகின்ற நடைமுறையின் ஒரு பகுதியாகவே பம்பாய்
உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட மனுவும், இப்போது உச்சநீதிமன்றத்தால் விசாரணைக்கு
ஏற்றுக் கொள்ளப்பட்ட மனுவும் இருக்கின்றன.
யாருடைய
கண்ணுக்கும் தெரியாத மனிதன்
உச்சநீதிமன்றத்தில் பட்னிஸால் சமர்ப்பிக்கப்பட்ட
மனுவில் - பிர்லா மாளிகையில் 1948 ஜனவரி 30 அன்று மாலை நடந்த துப்பாக்கிச்
சூட்டின் போது மற்றுமொருவர் அங்கே துப்பாக்கியுடன் இருந்ததாகவும், அவரது
துப்பாக்கியில் இருந்தே காந்தி இறந்து போகக் காரணமாக இருந்த நான்காவது தோட்டா
வெளியேறியதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதாவது காந்தியிடமிருந்து இரண்டரை அடி
தூரத்தில் நின்ற கோட்சே தன்னுடைய 9 மிமீ துப்பாக்கியால் காந்தியின் மார்பில் மூன்று
இஞ்ச் இடைவெளிக்குள்ளாக மூன்று தோட்டாக்களைப் பாய்ச்சியதால் காந்தி இறக்கவில்லை
என்று கூறவே பட்னிஸின் மனு முயற்சி மேற்கொண்டது.
அந்த மாலையில் பிர்லா மாளிகையில் ஆயிரம்
பேருக்கும் அதிகமானோர் கூடியிருந்தனர். பட்னிஸின் மனுவில் காந்தியைத் துப்பாக்கியால்
மர்மமான முறையில் சுட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த அந்த மனிதர், அங்கே இருந்தவர்கள்
எவரொருவராலும் கவனிக்க இயலாத வகையிலே, அங்கே கூடியிருந்த யாருடைய கண்களுக்கும் புலபப்டாத
மனிதராக அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.
கோட்சேவுடன் நாராயண் ஆப்தே
கோட்சேவின் கூட்டாளிகளான என்.டி.ஆப்தே, விஷ்ணு
ராம்கிருஷ்ண கர்கரே ஆகியோர் கொலை நடந்த பிறகே அந்த இடத்திலிருந்து வெளியேறியிருந்தனர்
என்றாலும் அந்தக் கொலையில் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதால், அங்கிருந்த யாராலும் அவர்களைக்
கண்டு கொள்ள முடியவில்லை. காந்தியை நெருங்குகின்ற கோட்சேவை யாரும் தடுத்து விடாமல்
உதவுவதற்காக அவர்கள் வெறுமனே நிராயுதபாணிகளாக மட்டுமே அங்கே சென்றிருந்தனர். அவர்கள்
தங்களுடைய திட்டத்தை முடித்த பிறகு, முடிந்தால் அனைவரும் சேர்ந்து தப்பித்துக்
கொள்வதை உறுதி செய்வதையே தங்களுடைய நோக்கமாகக் கொண்டிருந்தனர். அந்தக் கொலை நடந்த
பிறகு பிர்லா மாளிகையைச் சேர்ந்த ரகு மாலி என்பவர் கோட்சேவைப் பிடித்து
அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்துக் கொண்டதால் அவர்கள் போட்டிருந்த திட்டங்கள் அனைத்தும்
தகர்ந்து போயின. அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் ஆப்தேவும், கர்கரேவும் அங்கிருந்து தப்பிச்
சென்று விட்டனர். பட்னிஸ் கூறுகின்ற வகையில் துப்பாக்கி ஏந்திய மற்றொருவரை அங்கிருந்த
யாருமே பார்த்திருக்கவில்லை. ஏனெனில் அவ்வாறு ஒருவர் அங்கே இருக்கவே இல்லை.
கற்பனையில்
உருவான நான்காவது தோட்டா
அந்த இரண்டாவது மனிதரிடம் இருந்த துப்பாக்கியில்
இருந்து வந்த நான்காவது தோட்டாவே காந்தியைக் கொன்றதாக உச்சநீதிமன்றத்தில்
தொடரப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது. காந்தியின் உடல் பிர்லா மாளிகைக்குள்
எடுத்துச் செல்லப்பட்டு, சுத்தம் செய்து குளிப்பாட்டப்பட்ட போது, தோட்டா ஒன்று காந்தி
தனது உடல்மீது போர்த்திக் கொண்டிருந்த சால்வையின் மடிப்புகளுக்குள் சிக்கிக்
கொண்டு இருந்ததைப் பார்த்ததாக மனுபென் எழுதியிருந்ததை மனுதாரர் மேற்கோள் காட்டியிருப்பதாக
பத்திரிக்கைச் செய்திகளின் வாயிலாக அறிந்து கொண்டேன். அந்த தோட்டாதான் நான்காவது
தோட்டா என்கிறார் மனுதாரர். ஆனால் காந்தி கொலை குறித்த விசாரணைகளிலிருந்து - காந்தியின்
மார்பில் மூன்று தோட்டா துளைத்த காயங்கள் இருந்ததாகவும், அவருடைய மெலிந்த உடலுக்குள்
புகுந்த இரண்டு தோட்டாக்கள் அவரது உடலைத் துளைத்து வெளியேறியதன் விளைவாக ஏற்பட்ட
இரண்டு காயங்கள் முதுகுப் புறத்தில் இருந்ததாகவும் அறிய வருகிறது.
காந்தியைச் சுட்டுக் கொன்ற மூன்று தோட்டாக்களில்
ஒன்று - அவரிருந்த இடத்திலிருந்து பத்து அடி பின்னால் பறந்து சென்று பிர்லா
மாளிகையின் பின்பகுதியில் இருந்த புல்வெளியின் ஓரத்தில் இருந்த மலர்க்
கொத்துகளுக்கிடையே கிடந்தது. பின்னர் காவல்துறையினரால் அது மீட்டெடுக்கப்பட்டது.
காந்தியின் உடலிலேயே எஞ்சியிருந்த மற்றொரு தோட்டா ராஜ்காட்டில் காந்தி
எரிக்கப்பட்ட சிதையிலிருந்து சேகரிக்கப்பட்ட சாம்பலில் இருந்து உருகிய ஈயமாக மீட்டெடுக்கப்பட்டது.
எஞ்சிய மூன்றாவது தோட்டாதான் அவரது உடலைக் குளிப்பாட்டிய போது, அவருடைய சால்வையின்
மடிப்புகளிலிருந்து மீட்கப்பட்டது. அந்த இடத்தில் நான்காவது தோட்டா என்ற ஒன்று - அவ்வாறான
ஒன்று இருக்கவே இல்லை என்பதால் கண்டுபிடிக்கப்படவே
இல்லை.
காந்தியின் சால்வையிலிருந்து எடுக்கப்பட்ட தோட்டாவிற்கு
மற்றுமொரு சுவாராஸ்யமான பக்கம் இருக்கிறது. தன்னுடன் அந்த தோட்டாவை எடுத்துக்
கொண்டு காந்தியின் இளைய மகனான தேவதாஸ் காந்தி, முதல் தகவல் அறிக்கை பதிவு
செய்யப்பட்ட துக்ளக் ரோடு காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்கிருக்கும் சிறை
காவல்நிலையத்திற்குள் வந்து செல்பவர்களை நன்றாகக் காணும் வகையிலே இருந்தது. நல்வாய்ப்பாக
இன்றளவிலும் அந்த காவல் நிலையம் 1948ஆம் ஆண்டு இருந்ததைப் போலவே இன்னும் இருந்து
வருகிறது. என்னுடைய ’காந்தியைக் கொல்வோம்’ என்ற புத்தகத்திற்கான ஆய்விற்காக அங்கே சென்றிருந்த
போது நான் அதனைப் பார்த்திருக்கிறேன். துக்ளக் ரோடு காவல் நிலையத்திற்குச் சென்ற தேவதாஸைப்
பார்த்த கோட்சே அவரைச் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அவருடைய
கோரிக்கை நிராகரிக்கப்பட்ட போது காவல் நிலையத்திற்குள் கலவரச் சூழலை கோட்சே
ஏற்படுத்தினார்.
அந்த நான்காவது தோட்டாதான் காந்தியின் இறப்பிற்குக்
காரணமாக இருந்தது என்று மனுதாரர் குறிப்பிட்டாலும், உண்மையில் அன்று மாலையில்
கோட்சேவின் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய இரண்டாவது அல்லது மூன்றாவது தோட்டாவே
காந்தியைக் கொன்றது. அந்த மூன்று தோட்டாக்களால் அல்லது அவற்றில் ஏதாவது ஒன்றினால்
மட்டுமே காந்தி கொல்லப்பட்டார். அந்த மூன்று தோட்டாக்களுமே கணக்கில் உள்ளன.
நான்காவது தோட்டாவிற்கான ஆதாரம் என்று எதுவுமே இருக்கவில்லை. ஏனெனில் அவ்வாறான
ஒன்று இருந்திருக்கவே இல்லை.
படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற விசாரணைகளின் போது
ஆப்தேவால் காவல்துறையினரிடம் காண்பிக்கப்பட்ட தோட்டா ஒன்று குவாலியரில் உள்ள
பர்சுரே என்பவரது வடாவில் இருந்து கைப்பற்றப்பட்டது. அது காந்தியைக் கொல்வதற்காகப்
பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியிலிருந்து வந்த தோட்டாதானா என்பதை உறுதிப்படுத்துவதற்காக
தடயவியல் ஆய்வகத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கோட்சே பயன்படுத்திய 9 மி.மீ
பெர்ரேட்டா துப்பாக்கி தோட்டாவிலிருந்து அந்த தோட்டா மிகவும் வித்தியாசமானதாக
இருந்தது என்று நிரூபிக்கப்பட்டது.
9 மி.மீ பெர்ரேட்டா துப்பாக்கி
9 மிமீ
பெர்ரேட்டா துப்பாக்கியின் கதை
மனுதாரர் தன்னுடைய மனுவில் ஒரே சீரியல் எண்
(606824) கொண்ட இரண்டு பெர்ரேட்டா துப்பாக்கிகள் இருந்ததாக குற்றம்
சாட்டியுள்ளார். ஆமாம்… ஒரே வரிசை எண் கொண்ட இரண்டு பெர்ரேட்டா துப்பாக்கிகள் இருக்கவே
செய்தன. அவை இரண்டுமே ராஜ்காட்டில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அதில் ஒன்று மட்டுமே கொலையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம். கொலை நடந்த போது அங்கே
கிடந்த மற்ற பொருட்களுடன் சேர்த்து அந்தத் துப்பாக்கியும் காந்தி நினைவு
நிதியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும்
சேர்ந்தே காந்தி அருங்காட்சியகம் உருவாக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தன. அங்குள்ள
மற்றொரு துப்பாக்கி கொலை செய்யப் பயன்படுத்திய துப்பாக்கியின் பிரதி மட்டுமே ஆகும்.
அவ்வப்போது அருங்காட்சியகத்தில் அந்தப் பிரதி காட்சிக்கு வைக்கப்படும். உண்மையில் ஒரே
வரிசை எண் கொண்ட வேறேந்த பெர்ரேட்டா துப்பாக்கியும் இருக்கவில்லை.
கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட அந்த துப்பாக்கி கோட்சேவின்
கைகளுக்குச் சென்று சேர்ந்த கதை மிகுந்த ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. ஆப்தே-கோட்சே
கூட்டணிக்கு 1948 ஜனவரி 28 வரையிலும் காந்தியைக் கொலை செய்வதற்கான தகுந்த ஆயுதம்
கிடைக்கவில்லை. அவர்களிடம் மூன்று ரிவால்வர்கள் இருந்த போதிலும், அவற்றில் ஒன்றுகூட
நம்பத் தகுந்ததாக இல்லை. எனவே 1948 ஜனவரி 20 அன்று காந்தியைக் கொலை செய்ய அவர்கள் எடுத்திருந்த
முயற்சி தோல்வியைத் தழுவியது. ஜனவரி 20 அன்று மாலையில் தங்களிடம் இருந்த மூன்று துப்பாக்கிகளில்
இரண்டு துப்பாக்கிகள் பயன்படுத்தத் தகுந்த தோட்டாக்கள் இல்லாமலும், கோபால்
கோட்சேவிடம் இருந்து பெற்ற மற்றுமொரு ராணுவத் துப்பாக்கி பயன்படுத்த இயலாத நிலையிலே
இருந்ததையும் அவர்கள் கண்டு கொண்டனர். கொலை செய்வதற்கான துப்பாக்கியைப் பெறுவதற்காக
ஜனவரி 21 முதல் 28 வரையிலும் பல இடங்களுக்கும் அலைந்த போதிலும், அந்த ஆயுதம் அவர்களுக்குக்
கிடைக்கவே இல்லை. அந்தக் காலகட்டத்தில் குவாலியர் நகரம் கள்ளத் துப்பாக்கிகள்
விற்கப்படும் மிகப் பெரிய சந்தையாக இருந்தது. எனவே இறுதியாக அவர்கள் குவாலியர் போய்ச் சேர்ந்தனர்.
குடும்பத்தினருடன் தத்தாத்ரேயா பர்சுரே
சாவர்க்காரை தீவிரமாகப் பின்பற்றுபவராக மருத்துவரும், அகில பாரதிய ஹிந்து மகாசபையின்
உறுப்பினருமான தத்தாத்ரேயா பர்சுரே இருந்தார். நாதுராம், ஆப்தே ஆகிய இருவருக்கும்
நன்கு தெரிந்தவர். அவர் கட்டாயம் தங்களுக்கு உதவுவார் என்பதில் அவர்கள் இருவரும்
உறுதியாக இருந்தனர். பர்சுரே வீட்டிற்கு அவர்கள் இருவரும் ஜனவரி 28 அதிகாலையில் சென்றனர்.
நல்ல துப்பாக்கி ஒன்று அவரிடம் இருப்பதை அறிந்திருந்த அவர்கள் அதனைத் தருமாறு
கேட்டனர். ஆனால் பர்சுரே அதனைத் தர மறுத்து விட்டார். ஆனால் அவர் தீவிரமான
சாவர்க்கர் பக்தராக இருந்ததால் அவர்களுக்கு வேறொரு துப்பாக்கியை வாங்கித் தருவதற்கு
ஒத்துக் கொண்டார். அந்த வேலையை தன்னிடம் பணிபுரிந்து வந்த, கோட்சேவிற்கு ஆயுதம்
கொடுத்ததாகக் கொலை நடந்த பின்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்த கங்காதர்
தந்தவதேவிடம் கொடுத்தார்.
பொருத்தமான துப்பாக்கி ஒன்றைத் தான் கண்டுபிடித்து
விட்டதாக ஜனவரி 28 அன்று மாலையில் தெரிவித்த தந்தவடே, கள்ளத் துப்பாக்கி வியாபாரம்
செய்து வரும் ஜகதீஷ் பிரசாத் கோயல் என்பவரிடம் அது இருப்பதாகக் கூறினார்.
கோட்சேவும், ஆப்தேவும் பேரம் பேசி ஐநூறு ரூபாய்க்கு அந்தத் துப்பாக்கியை கோயலிடமிருந்து
பெற்றுக் கொண்டனர். ஆனால் அந்த துப்பாக்கியை
எவ்வாறு பயன்படுத்துவது என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்த துப்பாக்கியைக்
கொண்டு எவ்வாறு சுட வேண்டுமென்று தன்னுடைய வடாவின் கொல்லைப்புறத்தில் பர்சுரே அவர்களுக்குச்
செய்து காட்டினார். அப்போது அங்கே வெளியேறிய தோட்டாதான் பின்னர் காவல்துறையினரால்
கைப்பற்றப்பட்ட தோட்டாவாகும். ஆனாலும் நாதுராமாலோ அல்லது ஆப்தேவாலோ அந்த
துப்பாக்கியைக் கொண்டு சுட முடியவில்லை. இவ்வாறாக முழுமையான மேகசின், மேலும் ஏழு
ரவுண்டு தோட்டாக்களுடன் அந்தக் கொலை ஆயுதம் கொலைகாரர்களின் வசம் வந்து சேர்ந்தது.
வரிசை எண் 606824 உடன் கூடிய பெர்ரேட்டா 9 மிமீ பகுதித்
தானியங்கி துப்பாக்கி மிக நெருக்கமாக நின்று சுடுவதற்கு மிகவும் உகந்த ஆயுதங்களில்
ஒன்றாகும். உலகம் முழுவதிலுமுள்ள படுகொலையாளர்கள் தேர்வு செய்து கொள்கின்ற ஆயுதமாக
அது இருந்தது. அந்த துப்பாக்கி பெர்ரேட்டா நிறுவனத்தால் முசோலினியின் ராணுவத்தில்
பணியாற்றிய அதிகாரிகளுக்கென்று சிறப்பாக வரையறுக்கப்பட்ட பதிப்பு துப்பாக்கியாகத்
தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இன்றும் கூட அந்த துப்பாக்கி 'பாசிச ஸ்பெஷல்'
என்றே அழைக்கப்படுகிறது. வட ஆப்பிரிக்காவில் உள்ள அபிசீனியாவை ஆக்கிரமித்த முசோலினியின்
ராணுவத்தில் இருந்த அதிகாரி ஒருவர் அந்த துப்பாக்கியை வைத்திருந்தார்.
நேசப்படைகளால் முசோலினியின் ராணுவம் தோற்கடிக்கப்பட்ட போது சரணடைந்ததற்கான சின்னமாக முசோலினியின் ராணுவ
அதிகாரியிடமிருந்து நான்காவது குவாலியர் காலாட்படையின் தளபதியாக இருந்த
லெப்டினென்ட் கர்னல் V.V.ஜோஷி அந்தத் துப்பாக்கியைப் பெற்றுக் கொண்டார். அதன் மூலம்
அந்தத் துப்பாக்கி போரில் கிடைத்த வெற்றிக் கோப்பையானது. அந்தப் போருக்குப் குவாலியர்
ஆட்சியாளரான ஜியாஜிராவ் சிந்தியாவால் அவரது அரண்மணையில் பின்னர் நியமிக்கப்பட்ட
ஜோஷி தன்னுடன் அந்தத் துப்பாக்கியை குவாலியருக்கு கொண்டு சென்றிருந்தார்.
குவாலியரில் பணியாற்றிய மூத்த அதிகாரி ஒருவரிடம் இருந்த
அந்த ‘போரின் வெற்றிக் கோப்பை’ எவ்வாறு கள்ளத் துப்பாக்கி வியாபாரி ஒருவரின்
கைகளுக்குச் சென்று சேர்ந்தது, அவரிடம் இருந்து பின்னர் எவ்வாறு அது கொலைகாரர்களைச்
சென்றடைந்தது என்பது பற்றி ஒருபோதும் விசாரணை செய்யப்படவே இல்லை. காந்தி
படுகொலையில் பர்சுரே மீது குற்றம் சுமத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட சமயத்தில்
அவர் ஒரு பிரிட்டிஷ் குடிமகனாக இருந்தார் என்பதாலும், கைது செய்யப்பட்ட போது அவரை
ஒப்படைப்பது தொடர்பான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதாலும் அவரது கைது
சட்டப்படியானதல்ல என்பதால் அவரைத் தண்டிக்க முடியாது என்று அப்போது கூறப்பட்டது.
அவரே தனது குற்றத்தை ஒத்துக் கொண்டு, அவருக்கு எதிராகப் பல்வேறு ஆதாரங்கள் இருந்து
வந்த நிலைமையில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் அவர்
விடுதலை செய்யப்பட்டார்.
காந்தி படுகொலையில் ஈடுபட்டவர்களைப் பொறுத்தவரை இவ்வாறான
உண்மைகள் சகித்துக் கொள்ள முடியாதவையாகவே இருக்கின்றன. வரலாற்றை மாற்றியமைக்கும்
திறன், ஆற்றலுடன் இப்போது தாங்கள் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அதன்
விளைவாக தங்கள் வசதிக்கேற்றவாறு உண்மையை மறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
பண்டைய வரலாற்றை வெற்றிகரமாகச் சாரமற்றதாக்கியுள்ள அவர்கள் இப்போது சமகால
வரலாற்றையும் அவ்வாறே அற்பத்தனமானதாக, இழிவுபடுத்தும் வகையில் தங்களின் தேவைகளுக்கேற்றவாறு
மிகவும் பொருத்தமான கதையாக மாற்றி வருகிறார்கள். ஆனாலும் ஒருபோதும் அவர்களால் உண்மையை
மறைத்து விடவே முடியாது.
Comments