நோபல் விருது இணையதளம்
1999 டிசம்பர்
1
மோகன்தாஸ் காந்தி
(1869-1948) அகிம்சையின் இருபதாம் நூற்றாண்டிற்கான வலுவான அடையாளமாக மாறியிருக்கிறார். பின்னோக்கிப்
பார்த்து இப்போது பலராலும் அந்த இந்திய தேசியத் தலைவர் நிச்சயம் அமைதிக்கான நோபல் விருதிற்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. நோபல் விருதிற்காகப்
பலமுறை காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும், அந்த விருது அவருக்கு
ஒருபோதும் வழங்கப்படவேயில்லை. நோபல் விருது காந்திக்கு ஏன் வழங்கப்படவில்லை என்ற கேள்வியுடன்
- நார்வே நோபல் விருதுக் குழுவின் பார்வை குறுகிய
கண்ணோட்டத்துடன் அமைந்திருந்ததா, விருதுக் குழு உறுப்பினர்கள் ஐரோப்பியர்கள் அல்லாதவர்களிடையே
நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தைப் பாராட்ட முடியாதவர்களாக இருந்தார்களா, காந்திக்கு
விருதை வழங்குவதால் பிரிட்டனுக்கும், தங்களுடைய நாட்டிற்கும் இடையே இருக்கின்ற உறவுக்குத்
தீங்கு விளையும் என்று அவர்கள் பயந்தார்களா என்பது போன்ற கேள்விகளும் அடிக்கடி எழுப்பட்டு
வருகின்றன.
1937, 1938, 1939,
1947ஆம் ஆண்டுகளிலும், இறுதியாக 1948 ஜனவரியில் படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு
முன்பாகவும் காந்தியின் பெயர் நோபல் விருதிற்காகப்
பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. தலாய்லாமாவுக்கு 1989ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்ட போது, காந்தி ஏற்கனவே புறக்கணிக்கப்பட்டது
குறித்து நோபல் விருதுக்குழு உறுப்பினர்கள் தங்களுடைய வருத்தத்தைப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தனர்.
அப்போதைய விருதுக்குழுவின் தலைவர் ‘ஒருவகையில் தலாய்லாமாவிற்கான இந்த விருது மகாத்மா
காந்தியின் நினைவாகவே வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுக் கூறியிருந்தார். ஆயினும்
காந்திக்கு ஏன் அந்த விருது வழங்கப்படவில்லை என்பது குறித்து இருந்து வருகின்ற ஊகங்களைப்
பற்றி தங்களுடைய கருத்துகளை ஒருபோதும் நோபல்
குழுவினர் தெரிவித்ததே இல்லை. காந்திக்கு விருது வழங்கப்படாமை குறித்த அந்த
சர்ச்சையின் மீது சிறிதளவிலாவது வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய ஆதாரங்கள் எதுவும்
சமீபகாலம் வரையிலும் கிடைக்கவில்லை.
மகாத்மா காந்தி - யார் அவர்?
மிகச் சிறந்த ஆத்மா என்பதாக
மகாத்மா என்றழைக்கப்படுகின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இன்றைய மேற்கு இந்தியாவில்
உள்ள குஜராத் மாநிலத்தில் இருந்த சிறிய ஆட்சிப்பகுதி ஒன்றின் தலைநகராக இருந்த போர்பந்தரில்
பிறந்தவர். அவரது தந்தை அங்கே முதலமைச்சராக இருந்தார். அவரது தாயார் ஆழ்ந்த ஹிந்து
மதப்பற்றாளர். அவரும், காந்தி குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் அகிம்சை, மதக் குழுக்களிடையே
சகிப்புத்தன்மை ஆகியவற்றை மிக முக்கியமானதாகக் கருதுகின்ற ஹிந்து மதப் பிரிவைச் சார்ந்தவர்களாக
இருந்தார்கள். இந்தியச் சமூகத்தில் மோகன்தாஸ் காந்திக்கு கிடைத்த இடத்தை அவரால் எவ்வாறு
அடைய முடிந்தது என்பதற்கான மிகமுக்கியமான விளக்கமாக அவரது குடும்பப் பின்னணியே இருக்கிறது.
மோகன்தாஸ் 1880களின் பிற்பகுதியில் லண்டனுக்குச் சென்று அங்கே சட்டம் பயின்றார். படிப்பை
முடித்த பின்னர் இந்தியாவிற்குத் திரும்பிய அவர் அங்கே வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
பின்னர் 1893இல் தென்னாப்பிரிக்காவில் உள்ள நடாலுக்குச் சென்று அங்கே இருந்த இந்திய
வர்த்தக நிறுவனத்தில் அவர் பணியில் சேர்ந்தார்.
தென்னாப்பிரிக்காவில்
இருந்த இந்திய சிறுபான்மையினரின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துகின்ற வகையிலே காந்தி
அங்கே பணியாற்றி வந்தார். இனவெறிச் சட்டத்திற்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் அவர்
மேற்கொண்ட அந்தப் பணியே தன்னிடம் வலுவான மத உறுதிப்பாட்டை வளர்த்துக் கொள்ளவும், சுய
தியாகத்திற்கான உறுதியை ஏற்படுத்திக் கொள்ளவும் அவருக்கு வழிவகுத்துக் கொடுத்தது. அடிப்படை
மனித உரிமைகளுக்காக அங்கே நடைபெற்ற போராட்டத்தில் அகிம்சை முறையை பெரும் வெற்றியுடன்
காந்தி அறிமுகப்படுத்தினார்.
அவர் கடைப்பிடித்த சத்தியாக்கிரகம்
என்ற ‘உண்மையான ஆற்றல்’ என்ற வழிமுறை கருத்தியல் நுட்பம் வாய்ந்ததாக இருந்தது. சட்டத்தின்
ஆட்சியை நிராகரிக்காமல், நியாயமற்ற அல்லது அடக்கி வைக்கக்கூடிய சட்டங்களை இந்தியர்கள்
மீற வேண்டும் என்பதைக் கொள்கையாக ஏற்றுக் கொள்வதோடு, அனைவரும் சட்டத்தை மீறியதற்கான
தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அமைதியாக, இன்னும் உறுதியுடன், கேள்விக்குரிய அந்த
சட்டத்தின் சட்டப்பூர்வத் தன்மையை நிராகரிக்க வேண்டும் என்பதாக அந்தக் கருத்தியல் இருந்தது.
அவ்வாறான நடவடிக்கை அவரது எதிரிகளை - முதலில் தென்னாப்பிரிக்க அதிகாரிகள், பின்னர்
இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்கள் - தங்களுடைய சட்டங்களில் இருந்த சட்டவிரோதத்தை உணர
வைத்தது.
காந்தி மீண்டும் 1915ஆம்
ஆண்டு இந்தியாவிற்கு வந்து சேர்ந்த போது, தென்னாப்பிரிக்காவில் அவர் செய்திருந்த சாதனைகள்
குறித்த செய்திகள் அவரது சொந்த நாட்டில் ஏற்கனவே பரவியிருந்தன. சில ஆண்டுகளிலேயே -
முதலாம் உலகப் போரின் போது - அவர் இந்திய தேசிய காங்கிரசில் முன்னணி நபரானார். போரின்
இடைக்காலப்பகுதியில் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியான அகிம்சைப் பிரச்சாரங்களை
அவர் தொடங்கினார்.
அந்த நேரத்தில் இந்திய
ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை ஒன்றிணைப்பதற்கான வலுவான முயற்சிகளை மேற்கொண்ட
காந்தி ஹிந்து சமுதாயத்தில் இருந்த ‘தீண்டத்தகாதவர்களின்’ விடுதலைக்காகவும் தொடர்ந்து
போராடினார். அவரது சக இந்திய தேசியவாதிகள் பலரும் திட்டமிட்ட சில காரணங்களுக்காக ஆங்கிலேயர்களுக்கு
எதிராக அகிம்சை முறைகளைப் பயன்படுத்த விரும்பினாலும், காந்தியிடமிருந்த அகிம்சையானது
கொள்கை ரீதியானதாகவே இருந்தது. இந்திய தேசியவாதம் அல்லது மதம் குறித்த அணுகுமுறைக்கு
அப்பாலும் மக்கள் அவர் மீது மதிப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு அகிம்சை மீது அவர் கொண்டிருந்த
உறுதியே காரணமாயிற்று. சிறைத்தண்டனையை அவருக்கு விதித்த பிரிட்டிஷ் நீதிபதிகள் கூட
காந்தி ஒரு விதிவிலக்கான ஆளுமை என்பதாகவே அங்கீகரித்திருந்தனர்.
அமைதிக்கான நோபல் விருதிற்கான முதல் பரிந்துரை
1930களின் முற்பகுதியில்
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிறுவப்பட்டிருந்த, காந்திக்கு ஆதரவாக இருந்த ‘இந்திய
நண்பர்கள்’ சங்கங்களின் வலையமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் காந்தியை அதிகம்
பாராட்டியவர்களில் முக்கியமானவர்களாக இருந்தனர். அந்த இந்திய நண்பர்கள் வெவ்வேறு சிந்தனைகளின்
பிரதிநிதிகளாக இருந்தனர். அவர்களில் மதம் சார்ந்திருந்தவர்கள் காந்தியிடம் இருந்த பக்தியைப்
பாராட்டினர். ராணுவ எதிர்ப்பாளர்கள், அரசியல் தீவிர உணர்வாளர்கள் அவரது அகிம்சை தத்துவத்தின்
மீது அனுதாபம் கொண்டு அவரை ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பாளராக ஆதரித்தனர்.
1937ஆம் ஆண்டில் நார்வே
ஸ்டோர்டிங் (பாராளுமன்றம்) உறுப்பினரான ஓலே கோல்ப்ஜார்ன்சன் (தொழிலாளர் கட்சி) அந்த
ஆண்டின் அமைதிக்கான நோபல் விருதிற்காக காந்தியின் பெயரைப் பரிந்துரைத்தார்.
நார்வே நோபல் குழு தயாரித்த சுருக்கப்பட்டியலில் இருந்த பதின்மூன்று பேரில் ஒருவராக
காந்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டு இடம் பெற்றிருந்தார்.
ஆனால் காந்தியின் நியமனத்திற்கு செயலூக்கம் தருகின்ற வகையில் கோல்ப்ஜார்ன்சன் அந்தக்
கடிதத்தை எழுதியிருக்கவில்லை. ‘இந்திய நண்பர்கள்’ அமைப்பின் நார்வே கிளையில் இருந்த முன்னணி பெண்களால் எழுதப்பட்ட கடிதத்திலிருந்த சொற்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்ற வகையிலே நேர்மறையாகவே
இருந்தன.
குழுவின் ஆலோசகராக இருந்த பேராசிரியர் ஜேக்கப் வோர்ம்-முல்லர் அப்போது காந்தி குறித்து விமர்சனப்பூர்வமான அறிக்கை ஒன்றை எழுதினார். ஒருபுறம் ‘சந்தேகத்திற்கு இடமின்றி அவர் ஒரு மிகச் சிறந்த உன்னதமான துறவி - இந்திய மக்களால் தகுதியுடையவராக, மரியாதைக்குரியவராக நேசிக்கப்படுகின்ற முக்கியமான மனிதர்’ என்று ஒரு மனிதராக காந்தியைப் பற்றிய பொதுவான அபிமானத்தை அவர் முழுமையாகப் புரிந்து வைத்திருந்தார். ஆனால் மறுபுறத்தில் அரசியல் தலைவராக காந்தியைப் பற்றிய அந்த நார்வே பேராசிரியரின் விளக்கம் சற்று மட்டுப்படுத்துகின்ற வகையிலேயே இருந்தது. ‘அவரைப் பின்பற்றுபவர்களால் திருப்திகரமாக அவற்றை விளக்க முடியாத அளவிற்கு கூர்மையான திருப்பங்கள் அவருடைய கொள்கைகளில் உள்ளன(…) சுதந்திரப் போராளி, சர்வாதிகாரி, லட்சியவாதி, தேசியவாதியாக அவர் இருக்கின்றார். பொதுவாக புனிதராக இருக்கின்ற அவர் யாரும் எதிர்பாராத வகையிலே மிகச் சாதாரண அரசியல்வாதியாகவும் இருக்கின்றார்’ என்று அவர் எழுதியிருந்தார்.
சர்வதேச அமைதிக்கான இயக்கத்தில்
இருந்த பலரும் காந்தி மீது விமர்சனம் கொண்டவர்களாகவே இருந்தனர். அவர்களைப் பின்பற்றி
‘காந்தி ஒரு சமாதானவாதி அல்ல, பிரிட்டிஷார் மீதான தனது வன்முறையற்ற பிரச்சாரங்கள் வன்முறையாக,
பயங்கரவாதமாக மாறி விடும் என்பதை காந்தி அறிந்திருக்க வேண்டும்’ என்று நோபல் குழுவின்
ஆலோசகராக இருந்தவரும் குறிப்பிட்டிருந்தார். 1920-1921இல் முதலாவது ஒத்துழையாமை இயக்கப்
பிரச்சாரத்தின் போது அதுதான் உண்மையில் நடந்தது. ஐக்கிய மாகாணத்தில் இருந்த சௌரி சவுராவில்
கூடியிருந்த கும்பல் காவல் நிலையம் ஒன்றைத் தாக்கியது. காவல்துறையினர் பலரைக் கொன்ற
பின்னர் அந்தக் கும்பல் காவல் நிலையத்தையும் தீ வைத்துக் கொளுத்தியது.
அவர் ஓர் இந்திய தேசியவாதி
என்பதே இந்தியர்கள் அல்லாதவர்களிடமிருந்து அடிக்கடி வருகின்ற காந்தி குறித்த விமர்சனமாகும்.
பேராசிரியர் வோர்ம்-முல்லர் தன்னுடைய அறிக்கையில் ‘தென்னாப்பிரிக்காவில் நன்கு அறியப்பட்டிருந்த
அவருடைய போராட்டம் இந்தியர்கள் சார்பானதாக மட்டுமே இருந்தது; அது இந்தியர்களைக் காட்டிலும்
மோசமான நிலைமையில் இருந்த கறுப்பர்கள் சார்ந்ததாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
என்றே கூற முடியும்’ என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் காந்தியின் கொள்கைகள் உலகளாவியவையா
அல்லது இந்தியத் தன்மை கொண்டவையா என்பது குறித்த சந்தேகங்களையும் அவர் எழுப்பியிருந்தார்.
செல்வுட் பிரபு சிசில்
செல்வுட் பிரபு சிசில்
1937ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் விருது பெற்றிருந்தார். அந்த ஆண்டு காந்திக்கு அமைதி
விருது வழங்குவதை நார்வே நோபல் குழு தீவிரமாகப்
பரிசீலித்ததா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அது சாத்தியமற்றதாகவே இருந்தது.
அமைதிக்கான விருதிற்காக 1938, 1939ஆம் ஆண்டுகளில் மீண்டும் காந்தியின் பெயரை ஓலே கோல்ப்ஜார்ன்சன்
பரிந்துரைத்தார். ஆனால் குழுவின் சுருக்கப்பட்டியலில் காந்தியின் பெயர் இடம் பெறவில்லை.
மீண்டும் அந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்கு மேலும் பத்து ஆண்டுகள் கடந்து செல்ல வேண்டியதாயிற்று.
1947: வெற்றியும் தோல்வியும்
1947ஆம் ஆண்டில் காந்திக்கு
விருது வழங்குவது குறித்த பரிந்துரைகள் இந்தியாவிலிருந்து நார்வே
வெளியுறவு அலுவலகத்தின் வழியாக தந்தி மூலமாக வந்து சேர்ந்தன. பம்பாய் பிரதமராக இருந்த பி.ஜி.கெர், ஐக்கிய மாகாணங்களின்
பிரதமராக இருந்த கோவிந்த் வல்லப் பந்த், இந்திய சட்டமன்றத்தின் தலைவராக இருந்த
மாவ்லங்கர் ஆகியோர் காந்தியின் பெயரைப் பரிந்துரை செய்திருந்தனர்.
‘இந்த ஆண்டுக்கான நோபல் விருதிற்கு
மகாத்மா காந்தியின் பெயரைப் பரிந்துரை செய்கிறேன். மகாத்மா காந்தி இந்திய தேசத்தைக் கட்டியெழுப்பியவர். தார்மீக ஒழுங்கு
நிறைந்த மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து வருபவர். இன்றளவில் உலகின் அமைதிக்கான மிகச் சிறந்த
வெற்றிவீரராக இருப்பவர்’ என்று தந்தி பாணியில் கோவிந்த் வல்லப்
பந்த் எழுதியிருந்ததைப் போலவே அவரது
பெயரை முன்வைத்து ஆதரித்தவர்களின் கருத்துகள் இருந்தன. ஆறு பெயர்களுடன் இருந்த நோபல் குழுவின் சுருக்கப்பட்டியலில்
மோகன்தாஸ் காந்தியும் ஒருவராக இடம் பெற்றிருந்தார்.
இந்திய அரசியல்
வரலாற்றில் 1937க்குப் பின்னர்
காந்தியின் பங்கை முக்கியத்துவப்படுத்தி
நோபல் குழுவின் ஆலோசகரும், வரலாற்றாசிரியருமான ஜென்ஸ் அருப்
சீப் புதிய அறிக்கையொன்றை
எழுதினார். ‘காந்தி மற்றும் அவரது இயக்கத்திற்கு மிகப்பெரிய
வெற்றியையும், மிக மோசமான தோல்வியையும் ஒரே நேரத்தில் பெற்றுத் தந்த இந்திய
சுதந்திரம் மற்றும் இந்தியப் பிரிவினையை நோக்கியதாகவே 1937 முதல்
1947 வரையிலான பத்து ஆண்டுகள் இருந்தன’
என்று சீப் எழுதினார். சுதந்திரத்திற்கு முந்தைய கடைசி பத்தாண்டுகளில்
இந்தியர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையிலான
போராட்டம்; இரண்டாம் உலகப்
போரில் இந்தியாவின் பங்கேற்பு,
இறுதியாக ஹிந்து, முஸ்லீம் சமூகங்களுக்கு
இடையிலான மோதல் என்று இந்திய தேசிய காங்கிரஸ்
கையாள வேண்டியிருந்த மூன்று வெவ்வேறான ஆனாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய மோதல்களின்
போது காந்தி எவ்வாறு செயல்பட்டார் என்பதை அந்த
அறிக்கை விவரித்தது. அந்த அனைத்து விஷயங்களிலும் காந்தி தனது அகிம்சைக் கொள்கைகளையே
தொடர்ந்து பின்பற்றி வந்தார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர்
வோர்ம்-முல்லர் எழுதிய அறிக்கையைப் போன்று காந்தியைப் பற்றி சீப் எழுதிய அறிக்கை விமர்சிக்கவில்லை.
அது மிகவும் சாதகமாகவே இருந்தது என்றாலும் வெளிப்படையாக ஆதரவும் அளிக்கவில்லை. இந்தியா,
புதிய முஸ்லீம் நாடான பாகிஸ்தானைப் பிரித்ததைப் பற்றியும் சீப் ‘1947 ஆகஸ்ட் 15 அன்று
டைம்ஸ் பத்திரிகையில் வெளியானவாறு இந்தியப்
பிரிவினை என்ற பிரம்மாண்டமான அறுவைச்சிகிச்சை மிகப் பெரிய அளவிலே ரத்தக்களரிக்கு வழிவகுக்கவில்லை என்பதற்கு காந்தியின்
போதனைகள், அவரைப் பின்பற்றியவர்களின் முயற்சிகள், அவரது இருப்பு போன்றவற்றிற்கு கணிசமான
பங்கு உண்டு என்றே பொதுவாக கருதப்படுகிறது’ என்று சுருக்கமாக எழுதி முடித்திருந்தது
இன்றைய நிலையில் பார்க்கும் போது முதிர்ச்சியற்றதாகவே தோன்றுகிறது.
அவரது அறிக்கையைப் படித்த
பின்னர் நார்வே நோபல் குழுவின் உறுப்பினர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக்கட்டம்
குறித்து புதிய தகவல்களைப் பெற்றதாக உணர்ந்திருக்க வேண்டும். இருப்பினும் அமைதிக்கான
நோபல் விருது அதுபோன்ற போராட்டங்களுக்காக ஒருபோதும் வழங்கப்பட்டதே இல்லை. அகிம்சையின்
அடையாளமாக காந்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான
உறவுகள் 1947ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் அமைதியற்று இருந்த நிலையில், மிக முக்கியமான
இந்தியத் தலைவருக்கு அமைதிக்கான விருது வழங்கப்பட்டால் அதன் மூலம் என்னவிதமான அரசியல்
விளைவுகளை எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்பது போன்ற விஷயங்களையும் குழு உறுப்பினர்கள்
பரிசீலிக்க வேண்டியிருந்தது.
நோபல் குழு உறுப்பினர்கள்
1947 அக்டோபர் 30 அன்று தங்கள் முடிவை எடுத்த போது, குழுவிலிருந்த இரண்டு செயற்குழு
உறுப்பினர்களான கிறிஸ்தவ பழமைவாதியான ஹெர்மன் ஸ்மிட் இங்க்பிரெட்சன், தாராளவாத
கிறிஸ்தவரான ஆஃப்டெடல் ஆகியோர் காந்திக்கு ஆதரவாகப் பேசினர் என்பதை குழுவின்
தலைவராக இருந்த குன்னர் ஜானின் நாட்குறிப்பில் இருந்து இப்போது நம்மால் அறிந்து கொள்ள
முடிகிறது. அதற்கு ஓராண்டிற்கு முன்னதாக அவர்கள் இருவரும் ஒய்.எம்.சி.ஏ தலைவராக இருந்த
ஜான் மோட்டை தீவிரமாக ஆதரித்தனர். பொதுவாக
அவர்கள் சமூக மற்றும் கருத்தியல் மோதல்களால் அச்சுறுத்தப்பட்டுள்ள உலகில் தார்மீகம்,
மத அடையாளங்களுடன் பணியாற்றக் கூடியவர்களை விரும்பியதாகவே தெரிகிறது. இருப்பினும் அவர்களால்
1947ஆம் ஆண்டு மற்ற மூன்று உறுப்பினர்களைச் சமாதானப்படுத்த முடியவில்லை. தொழிலாளர்
கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி மார்ட்டின் டிரான்மல் இந்திய-பாகிஸ்தான் மோதல்களுக்கு
மத்தியில் காந்திக்கு விருது வழங்கப்படுவது குறித்து மிகுந்த தயக்கம் காட்டினார். டிரான்மலுடன்
முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிர்கர் பிராட்லாண்ட் உடன்பட்டிருந்தார். போரில் ஈடுபாடு
கொள்வதற்கு மிகவும் ஆதரவானவராக காந்தி இருந்தார் என்றே அவர்கள் கருதினார்கள்.
ஒரு மாதத்திற்கு முன்பாக நடைபெற்றதொரு பிரார்த்தனைக்
கூட்டத்தில் காந்தி வெளியிட்டிருந்த அறிக்கை அவர் போரை தொடர்ந்து நிராகரிப்பதை கைவிட்டு
விட்டதைக் குறிப்பதாக இருந்ததாக டிரான்மல், ஜான் இருவரும் உணர்ந்தனர். ‘பாகிஸ்தானுடனான ‘போரில்’
திரு.காந்தி’ என்ற தலைப்பில் 1947 செப்டம்பர்
27 அன்று வெளியான ராய்ட்டர்ஸ் டைம்ஸ் பத்திரிகையின்
தந்தியில் ‘இன்றிரவு காந்தி தனது பிரார்த்தனைக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்:
தான் எப்போதுமே எல்லா யுத்தங்களையும் எதிர்த்து வந்திருந்தாலும், பாகிஸ்தானிடமிருந்து
நீதியைப் பெறுவதற்கு வேறு வழியில்லை என்றால், பாகிஸ்தான் தொடர்ந்து தனது நிரூபிக்கப்பட்ட
பிழைகளைக் கண்டு கொண்டு, அவற்றை அகற்றிக் கொள்ள மறுப்பதைத் தொடருமானால், இந்திய ஒன்றிய அரசு அதற்கு
எதிராகப் போருக்குச் செல்ல வேண்டும். போரை யாரும் விரும்பவில்லை என்றாலும் நீதியைத்
தாங்கிக் கொள்ளுமாறு ஒருபோதும் யாரையும் அறிவுறுத்த முடியாது. நியாயமான காரணத்திற்காக
அனைத்து ஹிந்துக்களும் நிர்மூலமாக்கப்பட்டால் தான் கவலைப்படப் போவதில்லை. போர் என்று
வந்தால், பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் பாராமுகமாக ஐந்தாவது தூணாக இருக்க முடியாது.
பாகிஸ்தானுடன் விசுவாசமாக இருக்க முடியாவிட்டால் அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும்.
அதேபோன்று பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருக்கின்ற முஸ்லீம்கள் இந்திய ஒன்றியத்தில் இருக்கக்கூடாது’
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனடியாக ‘அந்த அறிக்கை
சரியானதுதான் என்றாலும் முழுமையானது அல்ல’ என்று காந்தி கூறியிருந்தார். அந்தக் கூட்டத்தில்
தனது எண்ணத்தை தான் மாற்றிக் கொள்ளவில்லை என்று கூறிய காந்தி ‘அவர்கள் விரும்புகின்ற
ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் அவை போன்ற எதையும் புதிய அரசாங்கம் கொண்டிருப்பதை
தான் விரும்பவில்லை’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
முதலாவது வந்த அந்த அறிக்கை
முழுமையானது இல்லை என்பதை ஜான், டிரான்மல் இருவருமே அறிந்திருந்தனர் என்றாலும் அவர்கள்
சந்தேகத்துடனே இருந்தனர். தன்னையே மேற்கோள் காட்டிக் கொண்ட ஜான் ‘பரிந்துரைக்கப்பட்டவர்களிலே
அவர் (காந்தி) மிகப் பெரிய ஆளுமை என்பது உண்மைதான் என்றாலும், - அவரைப் பற்றி ஏராளமான நல்ல விஷயங்களைச் சொல்ல
முடியும் - அவர் அமைதிக்கான தூதர் மட்டுமே அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்;
முக்கியமாக அவர் ஒரு தேசபக்தர்(…) மேலும் காந்தி அப்பாவி இல்லை என்பதையும் நாம் மனதில்
கொள்ள வேண்டும். அவர் ஒரு சிறந்த நீதிபதி, வழக்கறிஞர்’ என்று தன்னுடைய நாட்குறிப்பில்
குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கை
என்றே ஒரு மாதத்திற்கு முன்னதான காந்தியின்
அறிக்கையை விருதுக் குழுத்தலைவர் சந்தேகித்ததாகத் தெரிகிறது. 1947ஆம் ஆண்டு இருந்த
ஐந்து உறுப்பினர்களில் மூன்று பேர் காந்திக்கு விருது வழங்குவதை எதிர்த்ததால், அந்த
விருதை குவாக்கர்ஸ் குழுவிற்கு வழங்க அந்தக் குழு ஒருமனதாக முடிவு செய்தது.
1948: மரணத்திற்குப் பிந்தைய விருது வழங்க கருதப்பட்டது
அந்த ஆண்டின் அமைதிக்கான
நோபல் விருதைப் பரிந்துரைப்பதற்கான இறுதி நாளுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர்
1948 ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். காந்தியின் பெயரைக் குறிப்பிட்டு
குழுவிற்கு ஆறு கடிதங்கள் கிடைத்திருந்தன. பரிந்துரைத்தவர்களில் குவாக்கர்ஸ் மற்றும்
அதற்கு முன்னால் விருது பெற்றிருந்த எமிலி கிரீன் பால்ச் ஆகியோரும் அடங்குவர். குழுவின்
சுருக்கப்பட்டியலுக்குள் மூன்றாவது முறையாக காந்தி இடம் பெற்றார் - இந்த முறை அந்தப்
பட்டியலில் மூன்று பெயர்கள் மட்டுமே இருந்தன. காந்தியின் வாழ்க்கையின் கடைசி ஐந்து
மாதங்களில் அவரது நடவடிக்கைகள் குறித்து குழுவின் அறிக்கையை குழுவின் ஆலோசகரான சீப்
எழுதினார். தனது வாழ்க்கை முறையின் மூலமாக நெறிமுறை மற்றும் அரசியல் அணுகுமுறையில்
தன்னுடைய ஆழ்ந்த அடையாளத்தை காந்தி ஏற்படுத்தி வைத்திருக்கிறார். ‘இந்த விஷயத்தில்
காந்தியை மதங்களின் நிறுவனர்களுடன் மட்டுமே ஒப்பிட முடியும்’ என்று குறிப்பிட்டு இந்தியாவிற்கு
உள்ளேயும் வெளியேயும் அது ஒரு தரமுறையாக ஏராளமான மக்களிடம் நிலவுகிறது என்று முடித்திருந்தார்.
மரணத்திற்குப் பின் யாருக்கும்
அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்டதில்லை என்றாலும், சில சூழ்நிலைகளில் நோபல் விருதுகள்
மரணத்திற்குப் பின்னரும் வழங்கப்படலாம் என்றே அந்த நேரத்தில் நடைமுறையில் இருந்த நோபல்
அறக்கட்டளையின் விதிகள் இருந்தன. அதனால் காந்திக்கு விருது வழங்க முடியும் என்பதற்கான
சாத்தியம் இருக்கவே செய்தது. இருப்பினும் காந்தி ஓர் அமைப்பைச் சார்ந்தவர் அல்ல, எந்தவொரு
சொத்தையும் அவர் விட்டுவிட்டுச் செல்லவில்லை, தன்னுடைய இறுதி விருப்பத்தையும் அவர்
எழுதி வைக்கவில்லை என்பதால் விருதிற்கான பணத்தை யாரிடம் தருவது என்று கேள்வியெழுந்தது.
நார்வே நோபல் நிறுவனத்தின் இயக்குனரான ஆகஸ்ட் ஷூ, மரணத்திற்குப் பின் விருதை குழு வழங்கினால்
ஏற்படுகின்ற நடைமுறை விளைவுகளைப் பரிசீலிக்குமாறு குழுவின் ஆலோசகர்களில் ஒருவரான வழக்கறிஞர்
ஓலே டோர்லீஃப் ரீட்டிடம் கேட்டுக் கொண்டார். பொதுப் பயன்பாட்டிற்குப் பணத்தைப் பயன்படுத்தும்
வகையிலான சாத்தியமான பல தீர்வுகளை ரீட் பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து அவர் சுவீடனில்
உள்ள விருது வழங்கும் நிறுவனங்களின் கருத்தையும் கேட்டறிந்தார். அந்த நிறுவனங்களின்
பதில்கள் எதிர்மறையாகவே இருந்தன. அந்த நிறுவனங்கள் விருது வழங்குவதென குழுவின் முடிவு
எடுக்கப்பட்ட பின்னர், விருது பெற்றவர் இறந்தாலொழிய மரணத்திற்குப் பிந்தைய விருதுகளைத்
தரக்கூடாது என்றே கருதின.
‘விருதைப் பெறுவதற்கு
உயிருடன் வாழ்ந்து வருகின்ற பொருத்தமானவர் யாரும் இல்லை’ என்ற அடிப்படையில் அந்த ஆண்டு
யாருக்கும் விருதை வழங்குவதில்லை என்று 1948 நவம்பர் 18 அன்று நார்வே நோபல் குழு முடிவு
செய்தது. ‘மரணத்திற்குப் பிந்தைய விருது என்பது விருதை நிறுவியவரின் இறுதி விருப்பத்தின்
நோக்கங்களுக்கு முரணானது என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை’ என்று குழுவின் தலைவரான
குன்னர் ஜான் தனது நாட்குறிப்பில் எழுதினார். முடிவில் தலைவரின் கூற்றை அவரது மூன்று
சகாக்களும் ஏற்றுக் கொண்டனர். ஆப்டெடல் மட்டுமே
மரணத்திற்குப் பிந்தைய விருது காந்திக்கு தரப்படுவதற்கு ஆதரவாக இருந்தார்.
‘உயிருடன் வாழ்ந்து வருகின்ற
பொருத்தமானவர் யாருமில்லை’ என்று அறிவித்தது குறித்து, காந்தியைத் தவிர்த்து அமைதிக்காகப்
பணிபுரிந்த, இறந்து போன வேறொருவரை அதாவது 1948 செப்டம்பர் மாதம் கொலை செய்யப்பட்டிருந்த
பாலஸ்தீனத்திற்கான ஸ்வீடனின் ஐ.நா.தூதரான கவுண்ட் பெர்னாடோட்டை அந்தக் குழு மனதில்
கொண்டிருந்ததாக பின்னர் ஊகங்கள் எழுந்தன. 1948இல் விருதிற்காக பெர்னாடோட் பரிந்துரைக்கப்படவில்லை
என்பதால் அந்த ஊகங்களை நிராகரித்து விடலாம்.
ஆக, இன்னும் ஓராண்டு காந்தி உயிருடன் இருந்திருந்தால் அமைதிக்கான நோபல் விருதைப் பெறுவதற்காக அவர் ஒஸ்லோவுக்கு அழைக்கப்பட்டிருப்பார் என்று கருதுவதற்கான நியாயம் இருக்கவே செய்கிறது.
அமைதிக்கான நோபல் விருது காந்திக்கு ஏன் வழங்கப்படவே
இல்லை?
அமைதிக்கான நோபல் விருது
கிட்டத்தட்ட ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களுக்கு மட்டுமே 1960ஆம் ஆண்டு வரையிலும் வழங்கப்பட்டிருந்தது.
பின்னோக்கிப் பார்த்தால், நார்வே நோபல் குழுவின் பார்வை மிகவும் குறுகியதாக இருப்பதாகத்
தோன்றலாம். காந்தி ஏற்கனவே அந்த விருதைப் பெற்றவர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானவராக
இருந்தார். அவர் உண்மையான அரசியல்வாதியோ அல்லது சர்வதேச சட்டத்தை ஆதரிப்பவரோ அல்ல.
முக்கியமாக அவர் மனிதாபிமான நிவாரணப் பணியாளரோ அல்லது சர்வதேச அமைதி மாநாடுகளின் அமைப்பாளரோ
அல்ல என்பதால் ஒருவேளை விருது கிடைத்திருந்தால், நிச்சயம் அந்த விருதைப் பெற்ற புதிய
இனத்தைச் சார்ந்தவராகவே அவர் இருந்திருப்பார்.
காந்திக்கு வழங்கப்படுகின்ற
விருது குறித்து பிரிட்டிஷ் எதிர்விளைவை ஏற்படுவதற்கான சாத்தியத்தை நார்வே நோபல் குழு
கருத்தில் கொண்டதாக எந்த குறிப்பும் காப்பகங்களில் இல்லை. ஆகவே பிரிட்டிஷ் அதிகாரிகளைத்
தூண்டி விட விரும்பாததாலேயே அந்தக் குழுவின் உறுப்பினர்கள் காந்தியைத் தவிர்த்தனர்
என்பதாக ஏற்பட்டிருந்த கருதுகோள் நிராகரிக்கப்படலாம் என்றே தோன்றுகிறது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும்
1947ஆம் ஆண்டில் இடையில் ஏற்பட்ட மோதலும், காந்தியின் பிரார்த்தனைக் கூட்ட அறிக்கையும்
காந்தி தன்னிடமிருந்த நிலையான சமாதானக் கொள்கையை கைவிட்டுவிடப் போகிறாரா என்று பொதுமக்களிடம்
ஆச்சரியத்தை ஏற்படுத்தியதே குழுவின் பெரும்பான்மை மூலம் அவர் தேர்ந்தெடுக்கப்படாததற்கு
முதன்மைக் காரணங்களாக இருந்திருப்பதாகத் தெரிகிறது. இன்றைய நிலைமையைப் போல் அமைதிக்கான
விருதை பிராந்திய மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான தூண்டுதலாகப் பயன்படுத்த
நார்வே நோபல் குழு முயன்று பார்க்கும் பாரம்பரியம் அன்றைக்கு இருந்திருக்கவில்லை.
தனது வாழ்க்கையின் கடைசி
மாதங்களில், இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும்
இடையில் எழுந்த வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர காந்தி கடுமையாக உழைத்தார். குன்னர்
ஜானின் நாட்குறிப்பில் நவம்பர் 18 அன்று எழுதியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ள பதிவைத்
தவிர, 1948ஆம் ஆண்டில் காந்தியின் பெயரைப் பரிசீலித்த நார்வே நோபல் குழுவின் விவாதங்களைப்
பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது. ஆனாலும் மரணத்திற்குப் பிந்தைய விருதை காந்திக்கு
வழங்குவது குறித்து அவர்கள் தீவிரமாக கருத்தில் கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாகத்
தெரிகிறது. முறையான காரணங்களின் அடிப்படையில் அந்த விருதை வழங்காமல் 1948க்கான விருது
தொகையை செலவழிக்க வேண்டாம் என்றும், அந்த விருதை ஓராண்டு காலம் கழித்து வழங்கிட முன்பதிவு
செய்து வைப்பது என்றும் அந்தக் குழு முடிவு செய்தது. விருது பெற்றவர்களின் பட்டியலில்
மகாத்மா காந்திக்கு இடம் இருக்க வேண்டும் என்று பலரும் கருதினாலும், மௌனத்துடன் மரியாதையாக
அந்த முடிவு எடுக்கப்படாமலே கைவிடப்பட்டது.
https://www.nobelprize.org/prizes/themes/mahatma-gandhi-the-missing-laureate/
Comments