இன்றைய சூழலில் வகுப்பறைகளில் தேசப்பிரிவினையைக் கற்றுக் கொடுத்தல் - வரலாறு எதைச் சாதித்து தரும்?

சோனாலி சதாயே

கேரவன் இதழ்


தேசப்பிரிவினை குறித்த நினைவுகள் இன்னும் மரணித்துப் போய் விடவில்லை அல்லது அவை இன்னும் யாராலும் மறக்கப்படவில்லை என்றே கூறலாம். திரைப்படங்கள், நாவல்கள், கவிதைகள், கல்விப்புலம் சார்ந்த கட்டுரைகள், பத்திரிகைகள், விளக்கவுரைகள், ஆவணப்படங்கள், அருங்காட்சியக நிறுவல்கள், வாய்மொழி வரலாறுகள், ஓவியங்கள், இசை, நாட்குறிப்புகள், நினைவுக் குறிப்புகள், சிறுகதைகள் என்று வளமிக்க பல துறைகளை பிரிவினையின் போது துணைக்கண்டத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட காயம் உருவாக்கியது. ஒருபோதும் நாம் பிரிவினையை மறக்கப் போவதில்லை - இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால் நம்மால் ஒருபோதும் அதை மறக்கவே முடியாது என்றே தோன்றுகிறது.  

நாங்கள் பிரிவினையைப் பதிவு செய்து, பகுப்பாய்வு செய்து அதனை நன்கு புரிந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். தேசப்பிரிவினையானது நமது கலாச்சாரத்துடன் நன்கு தோய்ந்திருக்கும் போதிலும், நம்முடைய பள்ளிகள் எதுவும் பிரிவினை குறித்து சரிவரப் பேசுவதில்லை. ஒரேயொரு சுதந்திரப் போராட்டம் இரண்டு சுதந்திரதினக் கொண்டாட்டங்களை உருவாக்கியது எவ்வாறு என்பது பற்றிய வரலாறு நிச்சயம் மிகவும் எளிமையானதாக இருக்கப் போவதில்லை. அந்த வரலாறு இன்றைக்கு மதம், தேசம், நீதி, சுதந்திரம் என்று புதைகுழிகள் நிரம்பிய ஆபத்தானதொரு பரப்பிற்குள் தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கின்றது.   

      

தென்னிந்தியாவில் உள்ள நடுநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக தேசப்பிரிவினை குறித்த பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்வதற்காக ரீரீட்டி அறக்கட்டளை கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் என்னை அணுகியது.  அருங்காட்சியகங்களுக்கு புத்துயிர் அளிப்பது, பள்ளிகளில் வரலாற்றை கற்பிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்ற அந்த அறக்கட்டளை பெங்களூருவைத் தளமாகக் கொண்டு இயங்குகிறது. அவர்கள் என்னிடம் அந்தப் பட்டறையை நடத்தித் தருமாறு கேட்ட போது, நான் சற்று தெளிவில்லாமலே இருந்தேன். கொடுமைகள், கொலைகள், கற்பழிப்புகள், கடத்தல்கள், துரோகங்கள், வீடுகளை இழந்த வலி, துக்கம் போன்று பிரிவினையால் ஏற்பட்டிருந்த துயரங்களை இன்றைய இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்திட வேண்டும் என்று எது அவர்களைத் தூண்டியிருக்கும் என்ற கேள்வி அப்போது எனக்குள்ளே எழுந்தது. பகுப்பாய்வைத் தூரத் தள்ளி வைத்து விட்டு மாணவர்களால் பிரிவினை ஏற்படுத்தித் தந்த துயரங்களை ஏற்றுக் கொள்ள முடியுமா? அவர்களால் அவ்வாறு செய்ய இயலுமா? தைரியம், காதல். நட்பு, தளராத துணிவு என்று பிரிவினை குறித்த கதைகள் ஏராளமாக இருந்து வரும் நிலைமையில், இன்றைய இளைஞர்களிடம் ஒட்டுமொத்த நிலப்பரப்பும் ரத்தத்தில் தோய்ந்து சிவந்து கிடக்கச் செய்த பிரிவினையின் அதிர்ச்சியைக் கடத்த வேண்டும் என்று நினைத்ததற்கு நிச்சயம் முக்கியமான காரணம் ஏதாவது இருந்திருக்க வேண்டும்.   

  

பிரிவினை பற்றி ஏற்கனவே ஏராளமாகச் சொல்லப்பட்டிருக்கும் நிலையில், அதில் புதிதாக கண்டறிவதற்கு இன்னும் என்ன இருக்கிறது என்ற ஆச்சரியமும் அப்போது எனக்குள்ளே இருந்தது. கவிஞர் ‘W.B.யீட்ஸின்  நினைவாக’ என்ற தலைப்பில் W.H.ஆடன் எழுதிய கவிதையில் ‘கவிதை எதையும் சாதிக்காது’ என்று குறிப்பிடப்பட்டிருந்த வாக்கியம் மிகவும் பிரபலமானது. அந்த அறக்கட்டளையினர் பட்டறைக்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு என்னிடம் கேட்ட போது நானும் ‘வரலாறு எதைச் சாதித்து தரும்’ என்று ஆச்சரியப்பட்டுப் போனவளாகவே இருந்தேன்.    

மனிதர்கள் ஏற்படுத்திய கொடூரங்கள் பற்றிய கதைகளாக இருக்கின்ற - சிலவற்றை மட்டும் அவற்றிலிருந்து தனித்து தேர்வு செய்து சொல்ல முடியாத அளவிற்கு ஏராளமான கதைகள் உள்ளன - அந்த வலிமிகுந்த நிகழ்வுகளைப் பற்றிய அறிவு உண்மையிலேயே இன்றைய இளைஞர்களுக்குத் தேவைப்படுகிறதா என்ற கேள்வியும் அப்போது எனக்குள்ளே எழுந்தது. நான் அவ்வாறாக நினைக்கவில்லை என்றாலும், பிரிவினை குறித்த எந்தக் கதை அந்த மாணவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும் என்பதே அப்போது எங்கள் முன்பு ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கேள்வியாக இருந்தது.                     

அந்தப் பட்டறை பெங்களூருவில் உள்ள மாணவர்களை இலக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பெங்களூருவை மையமாகக் கொண்ட அணுகுமுறையே அந்த வகுப்பிற்குத் தேவைப்பட்டது. தேசப்பிரிவினை என்பது பஞ்சாப் மாநிலத்துடன் மட்டுமே தொடர்புடையதாக, தென்னிந்தியாவில் குறிப்பாக பெங்களூருவில் அந்தப் பிரிவினையால் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதாக மிகச் சாதாரணமாக இருந்து வருகின்ற கருத்தைச் சரி செய்ய முயல்வதாகவே அந்தப் பட்டறையின் நோக்கம் இருந்தது. ராவல்பிண்டி, கராச்சியில் இருந்து சிந்திகளும், பஞ்சாபியர்களும் தப்பித்து ஓடி வந்த கதைகள் ஏராளமாக இருந்த போதிலும், அவ்வாறு ஓடி வந்தவர்கள் தங்களை பெங்களூரு நகரத்தின் கலாச்சார, பொருளாதார வாழ்க்கைக்குள் வெற்றிகரமாக ஒருங்கிணைத்துக் கொண்ட கதைகளே - எடுத்துக்காட்டாக சோலே பட்டூரே, சல்வார்-கமீஸ் போன்றவற்றின் அறிமுகம் போன்றவையே - அந்தப் பட்டறையின் முக்கியப்புள்ளியாக அமைந்தன. 

       

தேசப்பிரிவினையை எவ்வாறு கர்நாடகாவில் கற்றுக் கொடுப்பது என்பது குறித்து நடத்திய ஆய்வின் போது, ​​பாகிஸ்தானில் உள்ள சில நகரங்களுக்குச் செல்வதற்காக கர்நாடகாவை விட்டு வெளியேறிய சிலருடைய கதைகளை நாங்கள் கண்டறிந்தோம். ஆனால் அவர்கள் இங்கிருந்து வெளியேறியது தங்களுடைய இடத்திலிருந்து அமைதியாக வெளியேறிய நிகழ்வுகளாக, புதிய நாடு உருவான சில ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டவையாகவே இருந்தன. ‘மசாலா தோசை கிடைக்கும்’ என்ற அறிவிப்பு பலகையுடன் கூடிய பெங்களூரு டவுன் ஹவுசிங் சொசைட்டி கராச்சியில் உருவான கதை உண்மையில் எங்களுக்கு ஆச்சரியம் தருவதாகவே இருந்தது. ஆயினும் பிரிவினை குறித்து பொதுவாக விளக்குகின்ற போது இங்கே நடந்திருப்பதைப் போன்று மிகவும் அமைதியான முறையில் நடந்த நிகழ்வாக அதனை விளக்குவதற்கான சாத்தியம் சிறிதும் இருக்கவில்லை என்பதே உண்மை.      

‘பிரிவினை குறித்து என்ன தெரியும்’ என்ற கேள்வி அந்தப் பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்கள் முன்பாக வைக்கப்பட்டது. ‘இரண்டு குழுவினருக்கிடையே ஒத்துப் போகவில்லை. ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென்று சொந்தமான நிலம் என்று நாடு ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் வகையிலே தங்களுக்கிடையே நிலத்தைப் பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்து கொண்டன. பிரிவினை மூலமாக அந்த இரு குழுவினருக்கும் சொந்தமாக நிலம் கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்’ என்பது போன்று அந்த நடுநிலைப்பள்ளிக் குழந்தைகள் அனைவரிடமிருந்தும் ஒரேமாதிரியான கதைகளே வெளிவரத் தொடங்கின. புவியியல் பகுதியும், மக்களும் ஒன்று எனவும், ‘ஒரே’ இடத்தைச் சார்ந்தவர்கள் ‘ஒரே’ மாதிரியாக இருப்பார்கள் எனவும் கருதுகின்ற மனப்பான்மையே பொதுவாக அந்த மாணவர்களிடம் இருப்பதாகத் தோன்றியது. பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலை பெற்ற மகிழ்ச்சியை தங்களுக்கென்று சொந்த நாட்டை உருவாக்கி கண்டறிந்த மகிழ்ச்சி என்பதாக எந்தவொரு தடையுமின்றி அந்த மாணவர்களால் கூற முடிந்தது.                                   

அவ்வாறு அவர்களுடைய கூறியதன் பின்னணியிலிருந்த தர்க்கத்தைக் காண அதிக நேரம் ஆகவில்லை. குழுவாக வகைப்படுத்துகின்ற போது எந்தெந்த அம்சங்களை எல்லாம் நீங்கள் ‘ஒரே’ மாதிரி இருப்பதாகத் தேர்வு செய்து கொள்வீர்கள்? விவசாயிகள் ஒரு குழுவா? பெண்கள் ஒரு குழுவா? ஒரு மொழி பேசுபவர்கள் ஒன்றாக ஒரே குழுவாகத்தான் அவசியம் வாழ வேண்டுமா? முறைசார்ந்த மதச்சார்பை மறுக்கின்றவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக எங்காவது வேறொரு தீவிற்கு அனுப்பி வைத்து விடத்தான் வேண்டுமா? வீடு என்பதற்கான கூறுகளாக மசாலா தோசையும், கன்னட ஓசைகளுமே இருக்குமென்றால், கன்னடம் அல்லது மசாலா தோசையை அறிந்திராத மக்களிடையே அதே வீட்டை உருவாக்கிட முடியுமா? எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு தென்னிந்தியாவில் எந்த மக்கள் ‘ஒரே’ மாதிரி இருக்கிறார்கள் என்பதை மெய்நிகர் வகுப்பறை ஒன்றில் கற்றுக் கொண்டிருக்கும் நம்மிடம் எழுந்திருக்கின்ற குழப்பத்தைப் போலவே, இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளை உருவாக்கிய எல்லைக்கோடுகளை வரைந்த ஆட்சியாளர்களிடமிருந்த தெளிவிற்குப் பின்னாலும் ஏராளமான குழப்பங்கள் இருந்திருப்பது இப்போது நன்கு புலனாகிறது.              

அகதிகள் உருவாக்கம் குறித்ததாக இருந்த இடப்பெயர்வின் வரலாற்றுப் பதிவுகளை இன்னும் நெருங்கிச் சென்று பார்த்த போது - சொந்தம், அடையாளம் குறித்த கேள்விகளும் எழுந்தன. ஓரிடத்தில் அன்றாடம் காய்கறிகளைச் சுத்தம் செய்வது, நெல்லிலிருந்து உமியை நீக்குவது, திருமணம் செய்து கொள்வது, நிலங்களைப் பயிரிடுவது என்று தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்தவர்களை சொந்த இடத்திற்குப் போகுமாறு சொன்ன போது - அப்போது அந்த மக்களுக்கு அதன் பொருள் என்னவாக இருந்திருக்கும்? உணவு, மொழி, பழக்கவழக்கங்கள், நட்பு, காலநிலைகள், நிலப்பரப்பு குறித்து பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்த அறிவு இவற்றில் எவை ஒருவரை அந்த இடத்தின் ‘மக்கள்’ என்று ஆக்குகின்றன? சரியான நேரத்தில் உங்கள் வசதிக்காக வைத்துக் கொண்ட நெற்றிப் பொட்டு அல்லது தலையில் அணிந்து கொண்ட தொப்பி உங்களுடைய உயிரைக் காப்பாற்றியிருக்கும் என்றால் அந்த புதிய அடையாளமாகவே நீங்கள் அப்போது மாறி விடுவீர்களா? ஒருவர் தன்னுடைய அடையாளத்தை விசுவாசத்தின் அடிப்படையிலே முடிவு செய்து கொள்கிறாரா, அல்லது பிறக்கும் போதிலிருந்தே தன்னிடமிருக்கின்ற அடையாளத்தின் அடிப்படையிலா? எந்த கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக இருந்து உற்சாகப்படுத்துகிறீர்கள் என்பதுதான் அடையாளமாக இருக்குமா? அல்லது எவருடைய அணு ஆயுதங்கள் மகிழ்ச்சியையும், பெருமையையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன என்பதுதான் அவருக்கான அடையாளமாக இருக்குமா?                          

அந்த இணையவழி வகுப்பிற்கு இடையில் - மதிய உணவு தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது - ‘அப்படியே அனைத்தையும் விட்டு விட்டு இங்கிருந்து உடனடியாக வெளியேறிச் செல்ல வேண்டும்’ என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டால், மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து எங்கே செல்வார்கள், தங்களுடன் எவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு செல்வார்கள், அங்கேயே எவற்றை விட்டுவிட்டுச் செல்வார்கள் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றிற்கான பதில் என்று தாங்கள் உடனடியாக உணர்வதை நாடகப் பயிற்சி மூலமாக அந்த மாணவர்கள் தெரிவிக்க முயன்றனர். இதுவரையிலும் தாங்கள் கேட்டறிந்திருந்தவற்றை வழக்கமான சட்டகத்தில் பொருத்துவதற்கு அந்த நடுநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் போராடிப் பார்த்த போதிலும், அவர்களால் அது முடியவில்லை. அவ்வாறான நிலைமை குறித்து தங்களிடம் எழுந்த உணர்வுகளை கோபம், பயம், கையறு நிலை போன்ற வார்த்தைகளாலேயே அவர்களால் விவரிக்க முடிந்தது.                    

‘மக்கள் ஏன் தெருக்களில் இறங்கி போராட்டம் செய்யவில்லை? தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு அவர்கள் ஏன் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை?’ என்ற கேள்விகள் தேசப்பிரிவினை குறித்து அந்த மாணவர்களிடமிருந்து எழுந்தன. வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, தங்களுக்குச் சொந்தமான இடங்களுக்குச் செல்லுமாறு கூறப்பட்டவர்களின் கதைகள் அந்த மாணவர்களைத் திகைப்பில் ஆழ்த்தின. அந்த மக்களின் வாழ்க்கை அடுத்த நொடியிலேயே தலைகீழாக மாறப் போகிறது, அதுகுறித்து தங்கள் கருத்தைத் தெரிவிப்பதற்கான எந்தவொரு உரிமையும் அவர்களுக்கு இருக்காது என்பது போன்ற உண்மைகளுடன் சமரசம் செய்து கொள்வது ‘இந்தியா ஒரு ஜனநாயக நாடு’ என்று கற்று வைத்திருக்கின்ற, அதிகப் பாதுகாப்புடன் இருக்கின்ற, ஆங்கிலத்தில் பேசுகின்ற அந்தக் குழந்தைகளுக்கு மிகவும் கடினமான காரியமாகவே இருந்தது.  

குடிமக்கள் என்பவர்கள் யார், அந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் யார், அந்த இடத்தைச் சேராதவர்கள் யார், அதுபோன்ற முடிவுகளை எடுப்பவர்கள் யார் என்பது போன்ற கேள்விகள் தற்போதைய அரசியல் தருணம் குறித்து நடந்த உரையாடலில் இருந்த மாணவர்களிடம் ஓரளவிற்கு உடனடியாகவே எழுந்தன. அதுபோன்ற கேள்விகளே 2020 ஜூன் முதல் செப்டம்பர் வரை நடந்த அந்த பாடத்தின் உருவாக்கம் மற்றும் கற்பித்தலின் போது அதிகம் எழுந்த கேள்விகளாக இருந்தன. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த போராட்டங்கள், ‘கறுப்பர் உயிரும் உயிரே’ போன்ற இயக்கங்கள் குறித்த செய்திகள் அப்போதைய தலைப்புச் செய்திகளில் மிகப்பரவலாக இடம் பிடித்திருந்தன. நாடு முழுவதும் கோவிட்-19 அகதிகளின் இடப்பெயர்வும் அப்போது தொடங்கியிருந்தது. 

                  

‘பெருமை கொள்ள வேண்டியது’ என்று தங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்ற சுதந்திரம் உண்மையில் கோடிக்கணக்கானவர்களின் துயரமாக இருப்பதையும், சுதந்திர தினமும் தேசப்பிரிவினையும் பிரிக்க முடியாதவாறு நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருப்பதையும் அப்போது அந்த மாணவர்கள் உணர்ந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15, ஜனவரி 26 ஆகிய நாட்களில் பள்ளிகளில் நடைபெறுகின்ற கொண்டாட்டங்களிலோ அல்லது பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்ற தேசம் குறித்த வரலாற்றிலோ பிரிவினையின் போது நிகழ்ந்த துயரங்கள் ஒருபோதும் வலியுறுத்திச் சொல்லப்படுவதே இல்லை. அந்த வரலாறு குறித்த அறிவு, இப்போதுள்ள மாணவர்களைக் காட்டிலும் பெரும்பாலும் இளையவர்களாக இருந்த தங்களுடைய வாழ்க்கையை இழந்த பலரின் தனிப்பட்ட கதைகள் போன்றவை தங்களுடைய தேசம் ஆலோசனைகள், சமரசங்கள் என்று பேச்சுவார்த்தை வடிவத்திலிருந்தே பிறந்தது என்ற கருத்தை உருவாக்கிடவே வழிவகுத்துக் கொடுத்திருந்தன. நாங்கள் நடத்திய அந்தப் பட்டறை ஒரு தேசத்தின் - இந்த தேசத்தின் - பகுதியாக இருப்பதன் பொருள் குறித்த பரந்த அளவிலான புரிதலை மாணவர்களுக்கு வழங்கியது. தேசத்தின் எதிரி உங்களுக்கும் எதிரியா, அதன் கதாநாயகர்கள் உங்களுக்கும் கதாநாயகர்களா, தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்ற போது அதனுடன் சேர்ந்து நீங்களும் பாதுகாக்கப்படுவீர்களா என்பது போன்ற கேள்விகளுடன் தங்களுக்குள்ள தனிப்பட்ட தொடர்பு குறித்து சிந்திக்கும் வகையில் அந்த மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். 

அதுபோன்ற கருத்துகளை கோவிட்-19 இடப்பெயர்வுகள் வாய்மொழி வார்த்தைகள் எதுவுமின்றி மிகுந்த ஆற்றலுடன் வலியுறுத்திச் சென்றன. ஓரிடத்திலிருந்து இடம் பெயர்ந்து செல்வது, தொடர்ந்து நடப்பது, சைக்கிளில் செல்வது, ரயில்களின் மேலே, மாட்டு வண்டிகளில், ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பயணிப்பது, தங்கள் உடைமைகளைத் தலையில் சுமந்து கொண்டு, தோள்களில் சிறுகுழந்தைகளை அமர்த்திக் கொண்டு என்று இடப்பெயர்வு குறித்து அப்போது வெளியான புகைப்படங்கள் தேசப்பிரிவினை காலத்திய அகதிகளின் படங்களையே ஒத்திருந்தன. 

   

இன்றைய நிலைமையைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் ‘ஒரே’ தேசத்தைச் சேர்ந்தவர்களாக நாம் அனைவரும் கருதப்பட்ட அன்றைய நிலைமையில் - தன்னுடைய நிலம் என்பதாக இருந்த ஓரிடத்திலேயே ஒருவரால் எவ்வாறு அகதியாகவும் இருந்திருக்க முடியும்? அந்தக் கேள்வியில் உள்ள உண்மையை வெளிக்கொணர பிரிவினை குறித்த வரலாறு உதவுகின்றது. இரண்டு நாடுகளிலும் இடம் பெயராமல் அப்படியே தங்கிக் கொண்டவர்களுக்கு தாங்கள் தங்கிக் கொண்ட இடமே ‘நாடு’ என்றாகிப் போனது. அந்த அடிப்படையிலேயே அந்தக் காலத்தில் உருவான ரத்தக்களரி, துயரங்கள் போன்ற அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தியா என்ற நாடு அனைவருக்கும் சமமாக இருக்கும் வகையில் முன்னறுதி செய்யப்பட்ட அமைப்பு என்ற எண்ணத்தை அகற்றுவதற்கு உதவிய கோவிட்-19 இடப்பெயர்வுகள் இந்த நாடு எந்த அளவிற்கு இன்னும் தனக்கான பணியிலே ஈடுபட வேண்டியுள்ளது என்பதை வலியுறுத்திச் சென்றுள்ளன. 

      

பெங்களூருவிற்கும், தேசப்பிரிவினைக்கும் இடையிலான தொடர்பு தெளிவாகத் தெரிந்திராத நிலைமையில் பிரிவினை குறித்து அந்த வகுப்பறையில் கற்றுக் கொடுப்பதற்கான ஆய்வுகள் எங்களுக்குத் தேவைப்பட்டன. ஆனாலும் பிரிவினை குறித்து 2020 டிசம்பர் - 2021 ஜனவரியில் மற்றுமொரு இணையவழி பட்டறையை பாகிஸ்தானிய, இந்திய இளங்கலை மாணவர்களுக்காக நடத்திய போது அதுபோன்று எந்தவொரு சிரமமும் எங்களுக்கு இருக்கவில்லை. அந்தப் பணி மானுடவியலாளர், வடிவமைப்பாளர் என்று எங்களிடம் இருந்த இருவரைக் கொண்டு மிகவும் எளிதாக்கிக் கொள்ளப்பட்டது. அந்தப் பட்டறையின் போது இந்தியர்கள், பாகிஸ்தானியர்களிடையே பொதுவாகப் ‘பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்த மரபுகள்’ குறித்து நாங்கள் அதிகக் கவனம் செலுத்தினோம். அத்தகைய கதைகளிலிருந்து ஒருவர் எதைக் கற்றுக் கொள்கிறார் என்பதே அங்கிருந்த பிரச்சனைகளில் கூடுதல் ஒன்றாக மாறியது. பாகிஸ்தானிய, இந்திய மாணவர்களை ஒன்றாக வைத்துக் கற்பிக்கின்ற போது பிரிவினையின் வரலாற்றை எவ்வாறு எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து எங்களுக்குள் நாங்கள் சண்டையிட்டுக் கொண்டோம். பிரிவினை எவ்வாறு உருவானது, அதுகுறித்து முக்கிய நபர்களிடம் இருந்த உந்துதல்கள் மற்றும் சார்பு நிலைகள் யாவை, உண்மையில் முக்கிய நபர்கள் என்று யாரைக் கருதுவது, கதாநாயகர்கள், வில்லன்களின் கருத்துகளை எவ்வாறு தீர்மானிப்பது என்று பிரிவினை குறித்த கதையை எங்கள் மாணவர்களுக்காக நாங்கள் மறுவடிவமைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.  


இந்திய தேசிய காங்கிரஸ், முஸ்லீம்லீக் ஆகியவற்றின் தோற்றம்; ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர் என்ற பிம்பத்திலிருந்து தன்னால் உருவாக்கப்பட்ட ‘செல்லரித்த’ பாகிஸ்தான் என்ற ஏமாற்றத்திற்கு ஆளான முகம்மது அலி ஜின்னா; முஸ்லிம்லீக்கிற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுத்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய முஸ்லீம் தலைவரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்; ‘விதியுடன் ஓர் ஒப்பந்தம்’ என்ற ஜவஹர்லால் நேருவின் உரை போன்றவற்றை உள்ளடக்கியிருந்த அந்த வரலாற்றைக் கற்பிக்கும் பணி நட்பு மற்றும் புரிதலுக்கான பாதையில் மோசமான, கூர்மையான கற்களைப் பரப்பியது என்றாலும் அந்த கூர்மையான கற்கள் கடந்து செல்ல முடியாதவையாக அமைந்திருக்கவில்லை.  

இருபுறமும் இருந்த மாணவர்கள் பிரிவினை உருவாக்கியிருந்த ஆபத்துகளை நன்கு அறிந்த இளைஞர்களாகவே இருந்தனர். எல்லைக்கு அப்பால் உள்ள தங்களுடைய சகாக்களின் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வத்துடன் இருந்தது மட்டுமல்லாது, அவர்கள் தங்களுடைய சகாக்கள் மீது நல்லெண்ணம் கொண்டவர்களாகவும் இருந்தனர். பாகிஸ்தானியர்களுக்கும், இந்தியர்களுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்த மரபு நம்மில் சிலரை - காலிப், அமீர் குஸ்ராவ், ஃபைஸ் அகமது ஃபைஸ், இக்பால் பானோ, மாண்டோ என்று - தாஜ் பற்றி சொல்லவே வேண்டாம் - கவிஞர்களாக உருவாக்கி இருக்கிறது.  இசை, கவிதை, உணவு, திரைப்படம், இலக்கியம், நகைச்சுவை உணர்வு, காதல், ஒற்றுமை குறித்த கட்டற்ற உணர்வுகளுடனே நாம் இருந்து வருகிறோம். பாகிஸ்தானியர்கள், இந்தியர்களுக்கிடையில் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்த அழகும், கருணையும் நிறைந்த அந்த மரபு அவர்கள் கலந்து கொண்டதொரு கூட்டத்தில் குறிப்பாக பிரிவினையையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் அச்சத்திலும், ஆறுதலற்ற துயரத்திலும் உறைந்து போனதுதான் பிரச்சனையானது. 

  

வேறுபாடுகளைத் தெளிவாக ஒப்புக்கொள்வதே கதாநாயகர்கள், வில்லன்களின் தாக்குதல்கள், தற்காப்புகள் போன்ற எதிரெதிர் பண்புகளைச் சமாளிப்பதற்கான சிறந்த வழியாகும். ‘பிரிவினை வரலாறுகள்: உங்கள் கதையின் மறுபக்கம்’ என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) வெளியிட்டுள்ள வரலாற்று மின்-பாடநூல் இதுபோன்ற கற்றலுக்கு உதவக்கூடிய சாத்தியம் நிறைந்ததாக இருக்கின்றது. அந்த நூல் சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்த பாகிஸ்தான், இந்தியா ஆகிய இரு நாடுகளின் பதிவுகளைக் கொண்டதாக இருக்கிறது.   

திரிக்கப்பட்ட வரலாறுகளைக் கற்றுக் கொள்வது அவற்றையெல்லாம் தவிர்த்து, புறக்கணித்து விட்டு நாம் முன்னேறிச் செல்வதற்காக மட்டும் என்பதாகவே இருக்கின்றதா? பின்னோக்கிப் பார்க்காத ஒருவரால் முன்னேற முடியாது என்பது வரலாற்று ஞானம். வடிவமைக்கப்பட்ட வரலாற்றை அதற்காக ஒருவர் எவ்வளவு தூரத்திற்குப் பின்னோக்கி நீட்டித்துக் கொள்ளலாம் என்பது நிச்சயம் எழுப்பப்பட வேண்டிய கேள்வி. வரலாற்றுப் பதிவின் இருப்பு குறித்த உரையாடல்களில் துவங்கி கருத்தியல் வரையிலும் உள்ள பல்வேறு காரணிகளாலேயே எந்தவொரு வரலாற்றுப் புள்ளியும் தீர்மானிக்கப்படுகின்றது. இந்த விஷயத்தில் பிளவு அனுபவத்தைக் காட்டிலும் பகிர்தலுக்கான விருப்பத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையிலேயே நம்முடைய தேர்வு தீர்மானிக்கப்பட்டது.              

பாகிஸ்தானிய, இந்தியக் கலாச்சாரங்கள் எவ்வாறு ஒத்திருக்கின்றன என்பதை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட உரையாடல்கள் பிரச்சனைக்குரியவையாகவே இருக்கின்றன. ஏனெனில் ஏற்கனவே அந்தக் குறிப்பிட்ட கதை படுகொலையில் முடிவடைந்திருப்பதை நாம் நன்கு அறிந்திருக்கிறோம். எனவே பிரிவினை குறித்து ஆழமாகப் பதிவு செய்து கொள்வதைத் தவிர்த்து விட்டு, அவற்றை நாம் ஏன் பிரிவினை என்பது தவிர்க்க முடியாததாக மாறிய தருணத்தில் இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் தங்களுக்கிடையே பகிர்ந்து வாழ்ந்து வந்த அனுபவங்களிலிருந்து தொடங்கக் கூடாது?    

அதனாலேயே பாகிஸ்தான்-இந்திய மாணவர்களின் கூட்டுக் குழுவிற்கு கற்பிக்கப்பட்ட தேசப்பிரிவினை குறித்த எங்களுடைய வகுப்பு பிரிவினை அகதிகளை உருவாக்கிய தருணத்திலிருந்தே தொடங்கியது. எங்கே செல்கின்றோம் என்பதை அறிந்திராது அவசரத்திலும் பயத்திலும் தப்பியோடிய அகதிகளின் அனுபவங்களை அந்த மாணவர்கள் அனைவரும் கேட்டார்கள், வாசித்தார்கள். அவ்வாறு ஓடிய மக்கள், அவர்கள் சார்ந்திருந்த பிராந்தியங்களின் பெயர்கள் எதுவும் அந்த வகுப்பில் பங்கேற்றவர்களிடம்  சொல்லப்படவில்லை. அது பற்றி பின்னர் பேசிய போது - இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, கராச்சி, நாக்பூர், தானே, இந்தூர், மும்பை, பெங்களூரு, சென்னை, அகமதாபாத் போன்ற இடங்களிலிருந்து வந்திருந்த மாணவர்கள் அந்த அகதிகளின் கதைகளுக்குள் ஒற்றுமை இருந்ததை, அவ்வாறு தப்பி ஓடிய அகதிகளின் மதச் சார்பு அவர்களுடைய கதைகளின் உள்ளடக்கத்தில் எந்தவொரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை என்பதைக் கண்டு அவர்கள் வியந்து போயினர். கதைக்குப் பின் கதை என்று கேட்டு அதை உறுதிப்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் பகுத்தறிந்து அதை அறிந்து கொள்வது என்பது வேறாகவே இருந்தது.     

அந்த வகுப்பில் இருந்த இளைஞர்கள் ஒருவருக்கொருவர் நன்கு அறிந்து கொண்டவர்களாக இருந்ததால், பகிர்ந்து கொள்ளப்பட்ட வரலாறு, பகிர்ந்து கொண்டிருக்கும் சமகால யதார்த்தம் குறித்த முக்கியத்துவம் அவர்களிடம் குறைவாகவே இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு. உலகளாவிய பொருளாதார, கருத்தியல் சக்திகள் தனிநபர்கள் மீது செயல்பட்டு வருகின்ற நிலையில், தங்களுக்கான பொதுவான மொழியை - கோக், மெக்டொனால்ட்ஸ், யூடியூப், வாட்ஸ்ஆப் போன்ற மொழிகளை - அவர்கள் மிகவும் ஆழமாகத் தேடிச் செல்ல வேண்டிய தேவையிருக்கவில்லை. கோக் ஸ்டுடியோ, ஹிந்திப் படங்கள், ஒட்டுமொத்த டிஜிட்டல் செயலிகளின் உலகம் பற்றி அதிகமாகச் சொல்ல வேண்டிய தேவையே இருக்கவில்லை.   

ஒரேமாதிரியான பொருளாதார, கருத்தியல் அமைப்புகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது மட்டுமல்லாமல்,  இனங்கள் மட்டத்திலும் உண்மையில் அவர்கள் இனம் பிரித்துக் காண முடியாத வகையிலே இருந்தனர். இன்னும் நெருங்கிச் சென்று பார்த்த போது அனைவரும் இயற்கையுலகின் பங்கேற்பாளர்களாக இருப்பதையே கண்டோம். இந்த உலகத்துடன் அந்த மாணவர்கள் தங்களை எவ்வாறு தொடர்புபடுத்திக் கொண்டனர்? இந்தக் கதைகள் மூலமாக பிரிவினை குறித்த வித்தியாசமான உரையாடல்கள் வெளிப்பட்டன. ஆம்… ‘இந்தியாவின் தேசியப் பறவையாக இருப்பதாலேயே பாகிஸ்தானில் மயில் நடனமாடாது என்று பொருள் கொள்ளத் தேவையில்லை; நாடுகளின் குடிவரவு அலுவலகங்களால் கோவிட்-19 ஒருபோதும் தடுத்து நிறுத்தப்பட மாட்டாது’ என்பதாக…  

நாடெங்கும் 2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் இடம்பெயர்ந்து சென்றவர்களின் பயணங்கள் எழுபது ஆண்டுகளுக்கு முன்பாக பிரிவினையின் போது மேற்கொள்ளப்பட்ட மிகமோசமான பயணங்களை ஒத்திருந்தன. தேசியவாதத்தின் கதை தகர்ந்து போக வேண்டிய, ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு நடக்காத நிலையில், அந்தப் பயணங்கள் காலநிலை நெருக்கடியால் உருவாக்கப்பட்ட அகதிகளைப் பற்றி பேசுவதற்கான தூண்டுதலாகவே அமைந்தன.    


பிரிவினையைக் கற்பித்தலின் மூலம் சமகாலச் சூழலுடன் வரலாற்றிற்கு உள்ள உறவு, அந்தக் காலகட்டத்தில் அதன் ஆற்றலை அதிகரிக்கும் அல்லது அடக்கும் சக்திகள் பற்றி ஒருவர் கூடுதலாக அறிந்து கொள்ள முடிந்திருக்கலாம். பெங்களூருவில் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பிரிவினையைக் கற்பிப்பதன் மூலம், தேசம் என்பதை - தங்களின் தேசமான இந்தியாவை - அவர்கள் வரலாற்றுச் சட்டகத்தில் வைத்து பார்க்க வேண்டும் என்றே நான் விரும்பினேன். ஒரு நபர், சமூகம், தேசம், பாடல் போன்றவற்றை வரலாற்றுரீதியாகக் காண்பது அவை குறித்து இருந்து வருகின்ற மாயை, கவர்ச்சியைக் களைவதுடன் அவற்றைக் கேள்விக்குட்படுத்துவதாகவும் இருக்கும். கட்டமைக்கப்படாமல், நிலைத்ததாக, இயல்பாக இருந்து வருகின்ற உயிரினத்திற்கு தற்போதைய தருணத்தில் நம்முடைய மனநிலையில் இருக்கின்ற தேசம் என்ற கட்டமைக்கப்பட்டுள்ள சிந்தனை சரியானதாக இருக்காது என்பதை மாணவர்களுக்குக் காட்டுவதாகவே பிரிவினை குறித்த அந்தக் கற்பித்தல் அமைந்தது. மாணவர்களால் இந்தியா குறித்த சிந்தனைக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க முடியும் என்று பரிந்துரைப்பதாகவும், அவர்களை குறைவான தேசியவாதியாக, கூடுதலான பச்சாதாபத்துடன் இருக்கச் சொல்வதாகவும் அந்த வகுப்பு அமைந்தது.       

பிரிவினை பற்றி பாகிஸ்தான்-இந்திய மாணவர்களின் முதல் குழுவிடம் பேசிய போது மதிப்புமிக்க நேரத்தை வரலாற்றுடன் அதிகம் செலவழித்து விடக்கூடாது என்பதிலேயே நான் ஆர்வத்துடன் இருந்தேன். இப்போது அது வேறு கோணத்தில் இருந்தாலும், தேசிய அரசு என்ற சிந்தனைக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது. எடுத்துக்காட்டாக தேசிய அரசு காலநிலை பேரழிவுக்கு எதிர்வினையாற்றுவதில் தெளிவாகப் பயனற்றே இருந்துள்ளது. முன்னெப்போதுமில்லாத காலநிலை நெருக்கடி போன்ற நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது வரலாறு என்ன செய்கிறது? எதிர்மறையான வழியிலேயே வரலாற்றின் வரம்புகளை அது நமக்குக் காட்டுகிறது.          


மானுடவியலாளர் மார்கரெட் மீட் உடன் உரையாடிய எழுத்தாளர் ஜேம்ஸ் பால்ட்வின் ‘கடந்த காலம் என்று நாம் குறிப்பிடுகின்ற காலத்திலிருந்து விடுபடத் தொடங்குகின்ற வகையில் அந்தக் காலத்தைப் புரிந்து கொள்வதற்கே நமக்கு நீண்ட காலம்  தேவைப்படும்’ என்று கூறியதைப் போன்றே அது இருக்கின்றது.      

https://caravanmagazine.in/history/teaching-the-partition-in-2021

Comments