‘உரிமைகளை மறந்து விட்டு கடமைகளில் கவனம் செலுத்துங்கள்’ என்று சொல்கின்ற நரேந்திர மோடி தனக்கான கடமைகளை ஆற்றியிருக்கிறாரா?

  ஜானவி சென்

வாசுதேவன் முகுந்த்

வயர் இணைய இதழ்

இந்திய குடிமக்கள் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற விதம் குறித்து அதிருப்தி அடைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி. ‘மக்களுடைய ஒட்டுமொத்த கவனமும் சிதறடிக்கப்பட்டுள்ளது. உரிமைகளைப் பற்றி பேசுவது, உரிமைகளுக்காகப் போராடுவது என்று நேரத்தை வீணடிப்பதிலேயே அவர்கள் பிஸியாக இருக்கின்றனர்’ என்று சமீபத்திய உரையில் கூறியுள்ளார்.    

மேலும் தன்னுடைய உரையில் ‘ஓரளவிற்கு, சில காலத்திற்கு, குறிப்பிட்ட சூழ்நிலையில் உரிமைகள் பற்றிய பேச்சுகள் சரியானவையாக இருக்கலாம். ஆனால் ஒருவர் ஒட்டுமொத்தமாக தன்னுடைய கடமைகளைச் செய்ய மறந்து விடுவதே இந்தியாவைப் பலவீனப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. புதிய உச்சத்தை நாடு எட்ட வேண்டுமானால், அனைவரும் தங்களுடைய கடமையைத் தவறாமல்  தொடர்ந்து ஆற்றிட வேண்டும்’ என்றே அவர் வலியுறுத்தியிருந்தார்.  

அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பதினோரு அடிப்படைக் கடமைகளை இந்திய அரசியலமைப்பு பட்டியலிட்டுக் கொடுத்திருக்கிறது. அரசியலமைப்பின் நாற்பத்தியிரண்டாவது திருத்தம் மூலமாக 1976ஆம் ஆண்டு நெருக்கடி நிலைக் காலச் சட்டமாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அந்தக் குறிப்பிட்ட கடமைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. குடிமக்களுக்கு அந்த நேரத்தில் பத்து கடமைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. அதன் பிறகு அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் 2002ஆம் ஆண்டு எண்பத்தியாறாவது சட்டத்திருத்தத்தின் மூலமாக பதினோராவது அடிப்படைக் கடமை சேர்க்கப்பட்டது.     


பிரதமர் என்பவர் முதலில் இந்த நாட்டின் குடிமக்களில் ஒருவராக - பல வழிகளில் முன்னணி குடிமகனாக - இருக்கிறார். எனவே நாம் அனைவரும் நமது உரிமைகளுக்காகப் போராடுவதில் ‘நேரத்தை வீணடிப்பதை’ நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக நமது கடமைகளில் மட்டுமே கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற அவரும் அதே தரத்திலேயே இருக்க வேண்டும் என்றே நாம் கருத முடியும்.    

அவ்வாறாக அவர் இருந்திருக்கிறாரா? பிரதமராக இருந்த காலத்தில் இந்த பதினோரு அடிப்படைக் கடமைகளை மோடி எந்த அளவிற்கு  நிறைவேற்றி இருக்கிறார்  என்பதைப் பார்க்கலாம்.   

1. அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டு அதன் லட்சியங்கள், நிறுவனங்கள், தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியவற்றை மதிப்பது

* அரசியலமைப்பின் லட்சியங்களுக்கு மதிப்பளிப்பதை உள்ளடக்குவதாக உள்ள கடமைகளை அவர் மீறியிருக்கிறார் என்பதை ‘அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட நமது உரிமைகள் மீது கொள்ளும் கவனமே இந்தியாவைப் பலவீனப்படுத்தியிருக்கிறது’ என்று மிக சமீபத்தில் மோடி ஆற்றியிருக்கும் உரையே நமக்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இந்திய அரசியலமைப்பு நீதி, சுதந்திரம், சமத்துவம் என்று மூன்று அடிப்படை உரிமைகளாக அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பட்டியலிடுகின்ற முகப்புரையுடனேயே தொடங்குகிறது. அந்த உரிமைகளுக்காகப் போராடுவதை நேரத்தை வீணடிப்பதாக யாராவது கருதுவார்களா?  

* சுதந்திரமான தேர்தல் ஆணையம், சுதந்திரமான நீதித்துறை, கூட்டாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதி, பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், காரணமின்றி கைது செய்யப்படுவதிலிருந்து சுதந்திரம் என்று அரசியலமைப்பின் நிறுவனங்கள், லட்சியங்களின் எண்ணற்ற மீறல்களை அவரது பதவிக்காலம் கண்டிருக்கிறது. மிகவும் நீளமான இந்தப் பட்டியல் போதுமான அளவிற்கு ஆவணப்படுத்தப்பட்டதாகவும் உள்ளது.  


* அவரது கட்சியைச் சார்ந்த தலைவர்கள் தேசியக் கொடியை பாரதிய ஜனதா கட்சியின் கொடி கொண்டு மூடி, கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் உடலின் மீது போர்த்திய போது, அதனைக் கண்டித்து பிரதமரிடம் இருந்து எந்தவொரு வார்த்தைகளும்  வரவில்லை. மேலும் இரண்டு முறை -  2015, 2016 ஆண்டுகளில் - தேசியக் கொடி கொண்டே மோடி தன்னுடைய முகத்தைத் துடைத்திருந்தார்.    


* மாஸ்கோவில் 2015ஆம் ஆண்டு தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மோடி நடந்து செல்லத் தொடங்கியிருந்தார். அப்போது அங்கிருந்த ரஷ்ய புரவலர்களே அவரை நிற்குமாறு சொல்லி கட்டுப்படுத்தப்பட வேண்டியிருந்தது.    

2. சுதந்திரத்திற்கான நமது தேசியப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த உன்னத லட்சியங்களைப் போற்றிப் பின்பற்றுவது

* பாஜகவினர், பெரும்பாலான சங்பரிவாரத் தலைவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒருவரான காந்தியின் கொள்கைகளையும், அவரது ஆளுமையையும் அவமதிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். காந்தியை மதிப்பதற்கு மாறாக அவர்கள் காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை  கொண்டாடி வருகின்றனர். காந்தியின் மகத்துவத்தை தன்னுடைய கட்சித் தலைவர்கள் மிகவும் இழிவுபடுத்துவதைப் பற்றி மோடியிடம் எந்தவொரு கவலையும் இருக்கவில்லை.


* இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக யாரை நினைவுகூர்வது என்பதில் மோடியின் தலைமையில் உள்ள பாஜக மிகவும் குறிப்பாக உள்ளது. கடந்த ஆண்டு 1857-1947 இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் அகராதியில் உள்ள கௌரவப்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து 387 மாப்ளா தியாகிகளின் பெயர்கள் நீக்கப்பட்டன.


* 1919ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகளின் கொடூரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த ஜாலியன் வாலாபாக் நினைவகம் கிட்டத்தட்ட அடையாளமே காண முடியாத அளவிற்கு புதுப்பிக்கப்பட்டு பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது. இப்போது அந்த இடம் மிகவும் பிரகாசமாக அலங்கரிக்கப்பட்டு வரலாற்று உணர்வுகளைப் பிரதிபலிக்காமல், அங்கே நினைவு கூரத்தக்க தியாகிகளுக்கு எந்தவொரு மரியாதையையும் தருவதாக இல்லாமல் அமைக்கப்பட்டிருக்கிறது என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள்.      

3. இந்திய இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தி, பாதுகாப்பது

* 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு கூட்டரசில் சேரும் ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்த சுயாட்சி உரிமையை மோடி அரசாங்கம் பறித்துக் கொண்டது. அரசியல் தலைவர்கள், ஆர்வலர்களை அடைத்து முடக்கி வைப்பது, ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் அந்தப் பகுதியைக் கொண்டு வருவது, பொதுமுடக்கத்தை அமல்படுத்துவது, தகவல் தொடர்பைத் தடை செய்வது போன்ற செயல்பாடுகளின் மூலம் பிரதமரும் அவரது அரசாங்கமும் தாங்கள் சேவையளிக்க வேண்டிய மக்களில் ஒரு பிரிவினருக்கான உரிமையை மறுத்து, அவர்களைச் சிறையில் அடைத்து, அவமானப்படுத்துவதையே தேர்வு செய்து கொண்டனர். தீவிரவாதத்தை அப்பகுதியில் இருந்து அகற்றுவதற்காக மேற்கொண்ட அந்த நடவடிக்கையும்கூட எந்தவொரு வெற்றியையும் பெறவில்லை.   


* ஒற்றுமையை ஊக்குவிப்பதற்குப் பதிலாக முஸ்லீம்கள், நகர்ப்புற நக்சல்கள், அந்தோலன் ஜீவிகள் என்று தங்களுக்குப் பிரச்சனைகளாகத் தோன்றியவர்களை - கற்பனையான உள்எதிரிகளைத் துரத்துவதிலேயே தங்களுடைய ஒட்டுமொத்த ஆற்றலையும் மோடியும் அவரது ஆதரவாளர்களும் செலவிட்டுள்ளனர். சங்பரிவாரால் முன்வைக்கப்படுகின்ற 'ஹிந்துக்கள் ஆபத்தில் உள்ளனர்’ என்ற கதை ஹிந்துத்துவா தீவிரவாதத்தை ஊக்குவித்துள்ளது. இந்தியா இப்போது இனப்படுகொலையின் விளிம்பில் இருப்பதாக வல்லுநர்கள் சிலர் நம்புகின்ற அளவிற்கு அந்த தீவிரவாதம் கட்டுப்படுத்தப்படாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

* அதன் கூட்டாட்சியின் வலிமையைப் பொறுத்ததாகவே இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இருக்கிறது. ஆனால் அடிக்கடி மாநிலங்களின் உரிமைகளை அத்துமீறுவதன் மூலம் மோடி மாநிலங்களைத் தரம் தாழ்த்தி வந்துள்ளார்.       

4. நாட்டைப் பாதுகாப்பது, அழைக்கப்படும் போது தேசத்திற்கான சேவையை ஆற்றுவது

* குறிப்பாக பாகிஸ்தான் என்று வரும்போது தன்னைக் குறித்து வலுவான பிம்பத்தை ​​ வாக்காளர்களுக்கு முன்வைப்பதில் எப்பொழுதும் ஆர்வத்துடன் இருக்கிறார் என்றாலும், இந்தியப் பகுதியின் சில பகுதிகளை சீன இராணுவம் கைப்பற்றிக் கொண்டபோது மோடி வாயே திறக்கவில்லை. அவருடைய அரசாங்கம், ஆயுதப் படைகளின் முந்தைய அறிக்கைகள் போன்றவை வேறுவிதமாகக் கூறிய போதிலும், எந்த ஊடுருவலும் இல்லை என்று கூறுவதன் மூலம் சீன ஊடுருவலை மறுக்கின்ற பாதையையே அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.    

* ஆரம்பத்திலிருந்தே கோவிட்-19 தொற்றுநோய் மீதான நாட்டின் எதிர்வினையை ஒரு 'போர்' என்றே வகைப்படுத்தி வந்த பிரதமர் நரேந்திர மோடி சுகாதாரப் பணியாளர்களை 'கோவிட் போர்வீரர்கள்' என்றும் குறிப்பிட்டு வந்தார். ஆனால் அந்த விஷயத்தில் நாட்டைப் பாதுகாப்பதற்கான தனது கடமையை ஆற்றிட அவர் என்ன செய்தார் தெரியுமா? முன்னறிவிப்பற்ற அவரது பொதுமுடக்க அறிவிப்பு அனைவருக்கும் சொல்லொணாத் துயரத்தையே ஏற்படுத்தியது. அவரது அரசாங்கமும், கட்சியும் ஊக்குவித்த கோவிட்-19 குறித்த வகுப்புவாதக் கருத்துகள் இக்கட்டான நேரத்தில் இந்தியாவைப் பலவீனப்படுத்தின. சரியான மருத்துவரீதியான எதிர்வினையைத் திட்டமிடாதிருந்த அவரது பலவீனம் இறுதியில் அந்தப் ‘போரில்’ லட்சக்கணக்கான தடுத்திருக்கக்கூடிய இறப்புகளுக்கே வழிவகுத்துக் கொடுத்தது. மிகச் சமீபத்தில் பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினருக்கான சர்ச்சைக்குரிய ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவது என்ற அவரது அரசாங்கத்தின் முடிவு, இந்தப் 'போரின்' முன்னணியில் தேவைப்பட்ட ஆயிரக்கணக்கான இளம் மருத்துவர்கள் கிடைப்பதை நடைமுறையில் தடுத்து நிறுத்தியது. அவரது அரசாங்கத்தின் நான்கு அமைச்சகங்கள் சேர்ந்து ஒத்துழைத்தும் அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழியைக் கண்டறிய முடியாததால் பிரச்சனை மேலும் மோசமடையவே செய்தது.   


5. மதம், மொழி, பிராந்தியம் அல்லது பிரிவுகளுக்கு இடையிலான வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்திய மக்கள் மத்தியில் நல்லிணக்கம், பொதுவான சகோதரத்துவ உணர்வை மேம்படுத்துவது; பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்துகின்ற செயல்களைக் கைவிடுவது

* ஒருவேளை இதுவே இந்தியப் பிரதமரால் அடிக்கடி மீறப்படுகின்ற அடிப்படைக் கடமையாக இருக்கக் கூடும். சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள், கொலைகள், வன்முறைகள், இணையவழியில் கொடுமைப்படுத்துதல், அன்றாடப் பாகுபாடுகள் போன்றவை தொடருவது மட்டுமல்லாது, நாடு முழுவதும் உள்ள பாஜக தலைவர்களால் அவை தீவிரமாகத் தூண்டி விடப்பட்டும் வருகின்றன. அவற்றை எதிர்கொள்கின்ற போது மோடி பலத்த மௌனத்தையே கடைப்பிடித்து வருகிறார்.  

* இந்தியாவிலுள்ள மொழிப் பன்முகத்தன்மையை மதித்து கொண்டாடுவதற்குப் பதிலாக, நாடு முழுவதும் ஹிந்தியைத் திணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாஜக, மோடி அரசு மீது தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.   


* பெண்களுக்குப் பாதுகாப்பானதாக நாட்டை மாற்றுவதற்கு மோடி அரசாங்கம் சிறிதளவு முயற்சிகளைக்கூட செய்யவில்லை (திருமண பாலியல் பலாத்கார விதிவிலக்கை இன்னும் அது ஆதரிக்கிறதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை), சில தடவை பெண்களைப் பற்றி பெண் வெறுப்பு கருத்துக்களை பிரதமரே பேசியுள்ளார். எடுத்துக்காட்டாக 2015ஆம் ஆண்டு டாக்கா பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய போது ‘ஒரு பெண்ணாக இருந்த போதிலும்’ பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடுமையாக நடந்து கொண்டார் என்று வங்கதேசப் பிரதமரான ஷேக் ஹசீனாவைப் பாராட்டியதற்காக மோடி விமர்சிக்கப்பட்டார். 


6. நமது ஒருங்கிணைந்த கலாச்சாரத்தின் வளமான பாரம்பரியத்தை மதிப்பிட்டு பாதுகாத்தல்

* இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்ற பாஜகவின் கருத்துக்கு பொருந்தாமல் இருக்கின்ற போது வரலாறு மற்றும் அரசியலை மாணவர்களுக்குக் கற்பிக்கும் விதத்தை மாற்றி எழுதுவதன் மூலம் மோடியின் தலைமையின் கீழ் உள்ள அரசு நிறுவனங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த கலாச்சாரத்தை தரம் தாழ்த்த முயல்கின்றன. இதுபோன்ற கோரிக்கைகளையே தொடர்ந்து முன்வைத்து வருகின்ற பாஜக தலைவர்கள் குழந்தைகள் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும், எதைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்று மெதுவாகத் தங்களுடைய தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றனர்.

* இந்தியக் கலாச்சாரத்திற்கு முஸ்லீம்கள் ஆற்றிய வரலாற்றுப் பங்களிப்பை மோடியின் தலைமையில் உள்ள பாஜக தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டே வருகிறது. தாஜ்மஹால் உள்ளிட்ட இஸ்லாமிய நினைவுச்சின்னங்கள் அவர்களால் ஹிந்துக்களை முஸ்லீம்கள் அடிபணியச் செய்ததற்கான அடையாளங்களாகவே காட்டப்படுகின்றன. ‘நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இருந்த அடிமைத்தனம்’ என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு வருகின்ற மோடி தன்னுடைய சமீபத்திய உரைகளில் இதுபோன்ற கருத்துகளையே ஊக்குவித்து வருகிறார்.   

* மோடிக்கு மிகவும் பிடித்தமான திட்டங்களில் ஒன்றாக - கோவிட்-19 தொற்றுநோய்களின் போது உடல்நலம், உயிர்பாதுகாப்பு ஆகியவற்றிற்கான ஆபத்துகள் அதிகரித்திருந்த போதிலும் கட்டாயம் தொடர வேண்டும் என்று அவரது அரசாங்கம் வலியுறுத்திய திட்டமான - புதுதில்லியில் இந்தியா கேட், ராஷ்டிரபதி பவன், பாராளுமன்றம், தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிற கட்டிடங்களைக் கொண்ட சென்ட்ரல் விஸ்டாவை மறுவடிவமைக்கின்ற திட்டம் இருந்து வருகிறது. அந்த திட்டம் குறித்து அழகியல், கலாச்சாரம், சுற்றுச்சூழல், நிதி அடிப்படையில் கட்டிடக் கலைஞர்கள், நகர்ப்புறத்தை திட்டமிடுபவர்கள் மாற்றுக்கருத்தைக் கொண்டிருந்தாலும், இருபதினாயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய ‘அதிகார தாழ்வாரத்தை’ அமைக்கும் முயற்சியில் யாராலும் பிரதமரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.    


* யோகா குருவும், அதிவேகமாக நுகரப்படும் நுகர்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் அதிபருமான பாபா ராம்தேவுடன் தாங்கள் நண்பர்களாக இருந்து வருகின்ற உண்மையை மறைப்பதற்கான முயற்சிகளை பாஜக உறுப்பினர்கள் - முன்னாள் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் - மேற்கொண்டதில்லை. ராம்தேவின் வணிகத்திற்கு அவர்கள் அளித்த ஒப்புதல்கள் - ஆயுர்வேதம் என்றால் என்ன, அதை எதற்காகப் பயன்படுத்தலாம் என்பது போன்ற கருத்துகளைப் பெரும்பாலும் சிதைத்து விட்டன. பண்டைய இந்தியாவில் ஆயுர்வேதம் மிகவும் முக்கியமான புலமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு மோடி அரசாங்கத்தின் கண்மூடித்தனமான ஆதரவால் ஆயுர்வேதத்தின் ஆதரவாளர்கள் தேவையான கருவிகள் அல்லது அறிவு எதுவுமில்லாமல் பெரும்பாலும் நவீன மருத்துவத்தையே நகலெடுத்துக் கொள்ள முயன்று வருகின்றனர்.  

7. காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கை சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவது, உயிரினங்கள் மீது கருணை காட்டுவது

இந்த 'உயிரினங்கள்' என்பதிலிருந்து 'மனிதர்களை' சிறிது நேரம் நம்மால் ஒதுக்கி வைக்க முடியுமானால்…

* ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டிலிருந்தே கொள்கைகள், சட்டங்கள், நிர்வாகக் கட்டமைப்புகளை மாற்றியமைத்து வந்திருப்பதன் மூலம் தொழில்துறை திட்டங்களுக்கு வனவுயிர் பாதுகாப்பு அனுமதியை வழங்குகின்ற செயல்முறையை நரேந்திர மோடி அரசாங்கம் மிகவும் எளிதாக்கியுள்ளது.  

* அவரது பதவிக்காலத்தில் 'பணத்தைக் கட்டி மாசுபடுத்திக் கொள்' என்பது தொழில்துறைச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான மிகவும் சாதாரணமான வழிமுறையாக மாறி விட்டது. மோடி அரசாங்கத்தின் 2020 ஆம் ஆண்டு சூழல் தாக்க மதிப்பாய்வு வரைவு குறித்த அறிவிப்பு அமல்படுத்தப்படும் என்றால், இன்றைக்கு பொதுவாக இருந்து வருகின்ற நடைமுறைக்குப் பதிலாக இனிமேல் தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்திக்கூடங்களை உருவாக்கிக் கொண்ட பிறகு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு அறிக்கையைப் பெற்றுக் கொள்ளலாம். 


* மோடி அரசாங்கம் கடலோரப் பாதுகாப்பை நீர்த்துப் போகச் செய்கின்ற புதிய கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் மோடி தலைவராக இருக்கின்ற தேசிய வனவுயிர் வாரியம் 2014 - 2020 காலகட்டத்தில் ஒரு முறை கூட கூடியிருக்கவில்லை.

* தன்னுடைய மக்களவைத் தொகுதியான வாரணாசி துவங்கி, லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வரையிலும் அவரது அரசாங்கம் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று கூறி (தொடர்புடையவர்களுடன் எவ்வித ஆலோசனையுமின்றி) பல்வேறு தேசிய பூங்காக்கள், சரணாலயங்களை அறிவித்துள்ளது. 

* புந்தேல்கண்ட் பகுதியை எதிர்காலத்தில் பல்லாண்டுகளுக்கு பாதிக்கக்கூடிய அதிக குறைபாடுள்ள ‘நதிகளை இணைக்கும் திட்டத்தில்’ மோடி அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது.


* சுற்றுச்சூழல் எளிதில் பாதிக்கப்படக் கூடிய மண்டலங்களில் அவரது அரசாங்கம் அணைகள், மின்னுற்பத்தி நிலையங்கள், துறைமுகங்கள், தொழிற்சாலைகள் என்று பல உள்கட்டமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.  இந்தியாவின் மிகப் பெரிய கோவிட்-19 முதல் அலைக்கு நடுவில் -  2020 ஏப்ரலில் நடந்த ஒரேயொரு கூட்டத்திலேயே தேசிய வனவுயிர் வாரியத்தின் நிலைக்குழு பதினாறு உள்கட்டமைப்புத் திட்ட முன்மொழிவுகளுக்கு ஒப்புதலை வழங்கியது. அந்த திட்டங்கள் தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள், புலி வழித்தடங்களின் ஊடாக நெடுஞ்சாலைகள், மின்சாரத்தைக் கடத்தும் பாதைகள், ரயில் பாதைகள் ஆகியவற்றில் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ உள்ளடக்கியதாக இருக்கின்றன.     

* தற்போது 'வளர்ச்சி' என்ற பெயரில், யாருக்கான வளர்ச்சி என்பது குறித்த தெளிவில்லாமல் உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் - 2002, வனவுயிர் (பாதுகாப்பு) சட்டம் - 1972 ஆகிய இரண்டு சட்டங்களையும் பலவீனப்படுத்த ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் முயன்று வருகிறது.    

* சுற்றுச்சூழல் அனுமதிகள் வழங்கப்படும் வேகத்திற்கு ஏற்ப மாநிலங்களை வரிசைப்படுத்துவதற்கான குறியீட்டை அறிமுகப்படுத்தவும் மோடி அரசாங்கம் முயன்று வருகிறது.

8. அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், ஆய்வு மற்றும் சீர்திருத்த உணர்வுகளை வளர்த்தெடுப்பது

* விநாயகரின் தலையை வைத்து புராதன பிளாஸ்டிக் சர்ஜரி, காற்றில் இருந்து நீரைப் பிரித்தெடுக்க காற்றாலைகளைப் பயன்படுத்துவது என்று முட்டாள்தனமான கருத்துகளை பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஏற்கனவே பெரும்பாலும் மிக எளிய நிகழ்வாக நடந்து வருகின்ற இந்திய அறிவியல் காங்கிரஸ் அவரது ஆட்சியின் தொடக்கத்திலிருந்தே 'பண்டைய இந்தியர்களுக்கு என்னவெல்லாம் தெரியும்' என்பது பற்றிய போலி அறிவியல் கருத்துகளால் நிரம்பி முழுமையாகக் கேலிக்குரியதாக மாறிப் போய் விட்டது. அறிவியல், சுகாதார அமைச்சர்கள் உட்பட - அவரது அமைச்சர்கள் அனைவருக்கும் அறிவியல் மனப்பான்மை என்றால் என்னவென்றே புரியவில்லை.


டார்வினைக் கேலி செய்ய முயன்ற அவரது கல்வியமைச்சர்களில் ஒருவர் தன்னுடைய செயல்பாட்டின் மூலம் பரிணாமக் கோட்பாடு பற்றி தன்னிடமிருந்த அறியாமையை வெளிப்படுத்திக் காட்டினார். 

* கோவிட்-19 தொற்றுநோய் குறித்த பெரும்பாலான இந்திய நிபுணர்களின் ஆலோசனைகளை நரேந்திர மோடி அரசாங்கம் ஒதுக்கி வைத்தே வந்திருக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில் 2021ஆம் ஆண்டின் நடுவே நாட்டில் வைரஸின் ஆபத்தான திரிபுகள் பரவத் தொடங்குகின்றன என்று விடுக்கப்பட்ட  எச்சரிக்கையை மோடி அரசாங்கம் கவனத்தில் கொள்ளவே இல்லை என்று நாட்டின் கொரோனா வைரஸ் மரபணு வரிசைமுறை முயற்சியில் ஈடுபட்டுள்ள மூத்த உறுப்பினர் ஒருவர் கூறினார். அவற்றில் ஒன்றே டெல்டா திரிபு ஆகும். அதுவே 2021 ஏப்ரல்-ஜூன் மாத காலத்தில் கொடிய இரண்டாவது அலையைத் தூண்டி விட்டது. ஆதாரங்கள் எதுவுமில்லாமலேயே கோவாக்சினை அரசாங்கம் அங்கீகரித்தது. பல்வேறு மருந்துகளுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் கிட்டத்தட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை அரசாங்கம் கையகப்படுத்திக் கொண்டது. 

* தொற்றுநோய் பரவிய போது, நிபா வைரஸ் மாதிரிகளை பொருத்தமற்ற வழிகளில் சேமித்து வைத்திருந்ததாகவும், பெரிய அளவிலான ஆய்வுகளை முறையான அனுமதியின்றி மேற்கொண்டதாகவும் மணிபால் வைரஸ் ஆய்வு மையம் மீது மோடி அரசாங்கம் குற்றம் சுமத்தியது. அந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்பதுடன்,  அந்தச் சம்பவம் வைராலஜி தொடர்பான ஆய்வுகளில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குகின்ற திறனை ஒன்றிய அரசு சமரசம் செய்து கொண்டிருப்பதையும் தி வயர் சயின்ஸ் நடத்திய விசாரணை காட்டியது.


* கோவிட்-19 பரவல் மீதான தனது அரசாங்கத்தின் அறிவியல் பூர்வமற்ற எதிர்வினைக்காக மருத்துவக் கல்விப் பிரிவில் வழங்கப்படுகின்ற 2020ஆம் ஆண்டிற்கான இக்நோபல் பரிசை பிரதமர் மோடி பெற்றிருக்கிறார். வழங்கப்பட்ட அந்த விருதின் மேற்கோளில் ‘அறிவியலாளர்கள், மருத்துவர்களைக் காட்டிலும் அரசியல்வாதிகளே மக்களுடைய வாழ்வு, இறப்புகள் மீது உடனடி விளைவை ஏற்படுத்த முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் கோவிட்-19 வைரஸ் தொற்றுநோயைப் பயன்படுத்தியதற்காக’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


ஜோதிட காரணங்களுக்காக கும்பமேளாவைத் தொடர அனுமதித்ததே அந்த விருதை அவர் பெற்றுக் கொள்வதற்கான முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.  

* ஆயுஷ் துறையை முழு அளவிலான அமைச்சகமாக உயர்த்தியது இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி எடுத்த முக்கியமான முதல் முடிவுகளில் ஒன்றாக இருந்தது. அவரது அரசாங்கம் அந்த அமைச்சகத்திற்கான ஆதரவைத் தொடர்ந்து அதிகரித்து தருவதிலேயே முனைந்திருக்கிறது. அதன் அமைச்சர்கள் BGR-34 போன்ற முழுமையாகச் சோதனை செய்யப்படாத தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து வருகிறார்கள்.    


* அரசாங்கத்தின் சந்தேகத்திற்குரிய பல கூற்றுகளை (யாராலும் தனித்து திரும்பச் செய்ய முடிவதே அறிவியல் முறையின் அடிப்படையாகும்) தனிப்பட்ட வல்லுநர்கள் சரிபார்த்துக் கொள்வதற்காகப் பயன்படுத்தியிருக்கக் கூடிய தரவுகளை அவர்களுக்கு கிடைக்காதவாறு அரசு அதிகாரிகள் பலமுறை மறைத்தோ அல்லது தடுத்து நிறுத்தியோ வைத்துள்ளனர்.  

9. பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பது, வன்முறைகளைக் கைவிடுவது

* கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக தலைவர்கள் வன்முறைகளைக் கைவிடுவதற்கு நேரெதிரான செயல்களையே செய்து வந்துள்ளனர். பிரதமரின் கண்காணிப்பின்கீழ் அவர்கள் என்னவெல்லாம் சொல்லலாம் அல்லது செய்யலாம் என்பதற்கும், அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதற்கும் இப்போது உண்மையில் எந்தவொரு எல்லையுமில்லாமல் போய் விட்டதாகவே தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக வடகிழக்கு தில்லியில் நடத்தப்பட்ட வகுப்புவாத வன்முறைக்கு சற்று முன்பாக கபில் மிஸ்ரா காவல்துறையினரை மிரட்டிய போது, ​​ அவரைக் கண்டிப்பதற்கான வார்த்தைகள் எதுவும் மோடியிடம் இருக்கவில்லை. ‘துரோகிகளைச் சுட்டுக்கொல்லுங்கள்’ என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தபோது பிரதமர் சற்றும் கண்ணிமைக்கவில்லை. போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உட்பட பலர் சென்ற கார் பாய்ந்து நான்கு பேர் கொல்லப்பட்டபோதும் மோடி எதுவும் பேசவில்லை. இந்தப் பட்டியல் இன்னும் தொடரலாம். 


*பொதுச்சொத்துக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அரசாங்கத்தின் நற்பெயரைப்  பாதுகாப்பதற்குத் தேவை என்று தாங்கள் கருதுகின்ற அனைத்தையும் அழிக்கின்ற உரிமையை காவல்துறை உள்ளிட்ட பிற அதிகாரிகளுக்கு மோடி அரசாங்கம் வழங்கியுள்ளதாகவே தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக விவசாயிகள் தில்லிக்குச் செல்வதைத் தடுப்பதற்காக ஹரியானாவில் அதிகாரிகள் பொதுச் சாலைகளில் பள்ளம் தோண்டி வைத்தனர்.


10. தனிநபர் மற்றும் கூட்டுச் செயல்பாடுகளின் மூலம் தன்னுடைய முயற்சிகள், சாதனைகளின் உயர் மட்டங்களைத் தொடர்ந்து எட்டும் வகையில் அனைத்துத் துறைகளிலும் நாடு சிறந்து விளங்கப் பாடுபடுவது   

* ஒரு தேசமாக சிறந்து விளங்குவதற்காகப் பாடுபடுவதற்கு முக்கியமான நிறுவனங்கள், ஏஜென்சிகளின் தலைவர்களாக உண்மையிலேயே மிகவும் தகுதியுள்ள நபர்களே முன்னிறுத்தப்படுவார்கள் என்று நிச்சயம் கருதலாம். ஆனால் மோடியிடம் அதற்கு மாறான வித்தியாசமான சிந்தனை இருப்பதாகவே தோன்றுகிறது - அவரைப் பொறுத்தவரை முக்கியமாகத் தேவைப்படுவது நிபுணத்துவம் அல்ல, சித்தாந்தம் மட்டுமே. பிரதமரைப் பாராட்டிய சர்ச்சைக்குரிய நீதிபதி தலைமையிலேயே தேசிய மனித உரிமைகள் ஆணையம் தற்போது  அமைக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்புப் படைகளின் முதலாவது தலைமைத் தளபதியாக இருந்து மறைந்த பிபின் ராவத் ஆயுதப் படைகளை அரசியல்மயமாக்குவதை ஆதரித்ததன் மூலம் பாஜகவுடன் தன்னை இணைத்துக் கொண்டார். ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் தகவல் ஆணையர் சமூக ஊடகங்களில் பாஜக, ஆர்எஸ்எஸ் உடனான தனது நெருக்கத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். இந்தப் பட்டியலும் தொடரலாம்.


* ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சித்தாந்தத்தின் மீதான விசுவாசத்தின் அடிப்படையில் மட்டுமே முன்னணி பல்கலைக்கழகங்கள், ஆய்வு அமைப்புகளுக்குத் தலைமை தாங்குகின்றவர்களை மோடி அரசு நியமித்து வருகிறது.

* பல்வேறு விஷயங்கள் குறித்து தயாரிக்கப்படுகின்ற சர்வதேச தரவரிசைகளில், இந்தியாவின் தரவரிசை மோடி தலைமையின் கீழ் மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. நாடு சிறந்து விளங்க உதவுவதற்கு மாறாக மோடி கோவிட்-19 எதிர்வினை, பசி, லஞ்சம், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு, கல்விச் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் மட்டுமல்லாது மனித சுதந்திரத்திலும் இந்தியா மிகவும் மோசமான செயல்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகின்ற யுகத்தில் பிரதமராகத் தலைமையேற்றிருக்கிறார். 

11. ஆறு முதல் பதினான்கு வயது வரை உள்ள தங்களுடைய குழந்தைக்கு கல்விக்கான வாய்ப்புகளை பெற்றோர் அல்லது பாதுகாவலர் வழங்குவது

* மோடிக்கென்று சொந்தக் குழந்தைகள் இல்லை என்றாலும் பிரதமர் என்ற முறையில் இந்தியாவில் உள்ள குழந்தைகள் - குறிப்பாக ஏழ்மையான சமூகப் பொருளாதாரப் பின்னணியில் உள்ளவர்கள் - நன்கு படித்தவர்களாக இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பு நிச்சயமாக அவரைச் சார்ந்ததாகவே இருக்கிறது. பெரும்பாலும் அந்தக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கும், கல்வியைத் தொடர்வதற்கும் மதிய உணவு என்ற திட்டமே முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. இருப்பினும் அந்த திட்டத்திற்கு நிதி குறைவாகவே ஒதுக்கப்பட்டு வருகிறது. அதை அதிகரிப்பதற்கு மோடி எதுவும் செய்திருக்கவில்லை. அவர் செய்ததெல்லாம் அவருடைய திட்டம் போல் தெரிவதற்காக ஏற்கனவே இருந்த திட்டத்திற்கு மறுபெயரிடுவது மட்டுமே. ஆனாலும் அந்த திட்டமும் இன்னும் போதிய நிதியில்லாமல் தொடர்ந்து போராடியே வருகிறது.  


* கோவிட்-19 பொதுமுடக்கம் குறித்து 2020 மார்ச் மாதம் மோடி வெளியிட்ட திடீர் அறிவிப்பால், நாடு முழுவதும் உள்ள பல அரசு பள்ளிகள் தங்கள் மதிய உணவுத் திட்டங்களை நிறுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும் அத்தகைய பள்ளிகளில் இருந்த இருபது சதவிகித குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களாக மதிய உணவு கிடைக்கவில்லை. பொதுமுடக்கத்தின் போது பள்ளிகளின் நீட்டிக்கப்பட்ட மூடல், மாநிலங்கள் அல்லது ஒன்றிய அரசுகள் வழங்குகின்ற சமூக ஆதரவு போதாமை போன்றவை மாணவிகளின் வாய்ப்புகளை பெரும் ஆபத்திற்குள் ஆழ்த்தின. குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டை சரிசெய்கின்ற முயற்சிகளுக்கு அவை பெரும் பின்னடைவை ஏற்படுத்திக் கொடுத்தன. 


* இந்தியாவில் 1.47 லட்சத்துக்கும் அதிகமான ‘கோவிட் அனாதைகள்’ இருப்பதாக குழந்தை உரிமைகள் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. அவர்களுக்கான முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை நாம் எப்போதாவது  கேள்விப்பட்டிருக்கிறோமா?


* தொற்றுநோய் தொடங்கியதில் இருந்தே குழந்தைகளால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. மேலும் அரசாங்கத்தின் முடிவுகளில் இருந்த மருத்துவ ஞானம் விவாதத்திற்குரியதாக இருந்து வந்த நிலையில், பள்ளிக்குச் செல்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் ஸ்மார்ட்போன், இணைய இணைப்பு என்று மெய்நிகர் வகுப்புகளை அணுகுவதற்கான வசதிகளை உறுதிப்படுத்தித் தர மோடி தவறியதன் மூலம் லட்சக்கணக்கான குழந்தைகள் தங்களுடைய மதிப்புமிக்க இரண்டாண்டு கல்வியை இழக்க நேரிட்டது.   

https://thewire.in/government/narendra-modi-says-focus-on-duties-and-forget-rights-but-hes-let-india-down-on-all-11-duties

Comments

//விஜயகுமார் said…
குடியுரிமைச் சட்டத்தைத் திருத்தி இந்திய மக்களின் ஒற்றுமைக்கு பாதகமான முடிவுகளை எடுத்துள்ளது மோடி அரசு. இஸ்லாமியர்களுக்கு மட்டும் குடியுரிமையை மறுப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.