சஞ்சுக்தா பாசு
நேஷனல் ஹெரால்டு
ஒன்றிய அமைச்சரவையால் 2020 ஜூலை மாதம்
அங்கீகரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2040ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் கல்வி
முறையை முழுமையாக 'மாற்றம்'
செய்து விட முயல்கின்றது. கல்வியை இணையவழியில் எளிதான, நெகிழ்வான முறையில்
அணுகுவதற்கான உதவி, கல்லூரிகளுக்கான தன்னாட்சியையும், கல்விக்கான தனியார் நிதியுதவியையும் உறுதி
செய்வது, தொழில்நுட்பம் மற்றும் தொழில்சார் கற்றலுக்கான முக்கியத்துவத்தை அளிப்பது
போன்ற அரசின் லட்சியங்களை காகிதத்தில் மட்டுமே பிரதிபலிப்பதாக அது இருக்கிறது.
மேலும் கற்றுக் கொள்ளப் போகின்ற பாடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பை அதிக
அளவிலே மாணவர்களிடமே வழங்குவது, திறமையானவர்களாக, பொறுப்பேற்றுக் கொள்ளக்
கூடியவர்களாக ஆசிரியர்களை மாற்றுவதுடன் கல்வியை தாராளமயமாக்குகின்ற முயற்சிகளிலும்
ஈடுபடப் போவதாக அது கூறுகிறது.
தில்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின்
(DUTA) தலைவராக இரண்டு முறை இருந்த செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியின் கணிதப் பேராசிரியை
நந்திதா நரேன் தேசிய கல்விக் கொள்கை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை
மாணவர்களும் பெற்றோர்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்று சஞ்சுக்தா பாசு
நடத்திய நேர்காணலின் போது தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கை மிகப் பெரிய அளவிலே பின்னுக்குத் தள்ளப்பட வேண்டிய தேவையிருப்பதாக அப்போது
அவர் கூறினார்.
உரையாடலின்
பகுதிகள்:
எந்த
அளவிற்கு தேசிய கல்விக் கொள்கை - 2020 நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது?
ஏற்கனவே தேசிய கல்விக் கொள்கைக்கு பல
மாநிலங்கள் ஒப்புதல் அளித்து உத்தரவுகள் அல்லது தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன
என்றாலும் அதனை நடைமுறைக்குக்
கொண்டு வருவதற்கு முன்பாக பாராளுமன்றத்தில் விவாதங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
கல்வியாளர்களும், எதிர்க்கட்சிகளும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தே
வந்துள்ளனர்.
தேசிய
கல்விக் கொள்கை - 2020இல் உள்ள எந்த அம்சங்கள் மிகவும் கவலையளிப்பவையாக
இருக்கின்றன?
தேசிய கல்விக் கொள்கை - 2020 கல்வி, நிர்வாகம் என்று இரு முனைகளிலிருந்தும் கல்வியை மறுசீரமைக்கிறது. மேலும் கல்வியை தனியார்மயமாக்கவும் அது முயல்கிறது. கல்வியின் தரத்தைப் பாதிக்கும் வகையிலே இருக்கின்ற இந்த கல்விக் கொள்கை ஆசிரியர்களைத் தேவையற்றவர்களாக ஆக்குகிறது. பல்கலைக்கழகங்களை வெறும் பட்டம் வழங்கும் அமைப்புகளாக தரம் தாழ்த்துகிறது.
கல்வியைப் பொறுத்தவரையில் தில்லி பல்கலைக்கழகம்
சமீபத்தில் ஏபிசி (அகாடமிக் பேங்க் கிரெடிட்) ஒழுங்குமுறை, ஸ்வயம் விதிமுறைகள், கற்பித்தல்
மற்றும் கற்றலில் கலப்பு முறை என்று மூன்று விதிமுறைகளை முன்மொழிந்தது. ஏபிசி
ஒழுங்குமுறை ஒரு ‘கிரெடிட் வங்கியை’ உருவாக்குகிறது. அதன் மூலம் தில்லி
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இந்தியாவில் உள்ள A அல்லது A+ தரம் பெற்ற எந்தவொரு
பல்கலைக்கழகத்திடமிருந்தும் ஐம்பது சதவிகித கிரெடிட்களைப் பெற்றுக் கொண்டு பல தடவை
வெளியேறி-நுழைகின்ற வகையிலே ஏழு ஆண்டுகளுக்குள் தன்னுடைய படிப்பை முடித்துக் கொள்ள
முடியும். பெரும்பாலும் இணையவழியில் இருகின்ற இந்த ஐம்பது சதவிகித
கிரெடிட்களுக்கான கற்றல் தரத்தின் மீது தில்லி பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு
எந்தவொரு கட்டுப்பாடும் இருக்காது.
தொற்றுநோய் காலத்தில் வழங்கப்பட்ட இணையவழிக்
கல்வியின் தரம் சொல்லிக் கொள்ளுமாறு இருக்கவில்லை என்பதை நாம் அனைவருமே
கவனித்திருக்கிறோம். அவற்றை மாணவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது
மட்டுமல்லாது, அவர்கள் பொதுவாக படிப்பின் மீது உரிய கவனத்தைச் செலுத்தாமல்
பக்கத்திலேயே வேறு ஏதாவதொரு வேலையைச் செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள்.
மிகவும் வசதியாக இருப்பதாக மாணவர்கள் கருதுகின்ற
வெளிப்படையாக புத்தகத்தைக் கொண்டு இணையவழியில் நடத்தப்படுகின்ற தேர்வுகளில்
பெருமளவிற்கு மற்றவர்களைப் பார்த்து பிரதி எடுத்துக் கொள்வதே மிகவும் சாதாரண
நடைமுறையாகி விட்டது. ஆசிரியர்களுக்கும் இணையவழிப் பயன்பாடு மிகவும் வசதியானதாகி
விட்டதால் அவர்களும் போதுமான முயற்சிகளை எடுப்பதில்லை. டிஜிட்டல் இடைவெளி, ஏழைகள்
மற்றும் விளிம்புநிலை குழுக்களின் அணுகல் குறித்து எழுந்துள்ள சிக்கல்களுக்கு
தேசிய கல்விக் கொள்கை எந்தவொரு தீர்வையும் கொண்டிருக்கவில்லை.
உலகின் பிற பகுதிகளில் தோல்வியடைந்த மிகப்பெரிய திறந்தவெளி இணையவழி படிப்பு (MOOC)
மாடலையே
இணையவழி
படிப்புகளுக்கான கிரெடிட் கட்டமைப்பான ‘ஆர்வமுள்ள இளம் மனங்களுக்கான தீவிர கற்றல்
வலைகள் (ஸ்வயம்)’ தீவிரமாகப் பின்பற்றுகின்றது. பல்கலைக்கழகத்தால்
நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களால் தயாரிக்கப்படுகின்ற இந்த மிகப்பெரிய திறந்தவெளி இணையவழி படிப்புகள் ஸ்வயம்
எனப்படும் அரசு தளத்திலே பதிவேற்றப்படுகின்றன. ஸ்வயம் தளத்திலிருந்து நாற்பது
சதவிகித பாடத்திட்டத்தை மாணவர் ஒருவர் தேர்வு செய்து கொள்ளலாம் என்று ஒழுங்குமுறை
கூறுகிறது.
ஆக ஐம்பது சதவிகிதப் பாடங்களை மற்ற
பல்கலைக்கழகங்களிடமிருந்தும், நாற்பது சதவிகித பாடங்களை ஸ்வயம் தளத்திலிருந்தும் ஒரு
மாணவர் எடுத்துக் கொள்ளலாம் என்பதால், தொன்னூறு சதவிகித கற்றல் பணி வகுப்பறை
ஆசிரியரின் கட்டுப்பாட்டில் இருந்து மிகவும் திறம்பட நீக்கி வைக்கப்படுகிறது. ‘இனிமேல்
எங்களுக்கு ஆசிரியர்களே தேவையில்லை’ என்பதுதான் அதிலிருந்து கிடைக்கின்ற பாடமாக உள்ளது.
இன்றளவும் ஐம்பது சதவிகித ஆசிரியர்கள் தற்காலிகப் பணியிடங்களில் இருந்து வருகின்ற
நிலையில், இதுபோன்ற முயற்சிகளால் அவர்கள் அனைவரும் படிப்படியாக
வெளியேற்றப்படுவார்கள். இனிமேல்
ஆசிரியர்
- மாணவருக்கிடையிலான விகிதம் முக்கியமில்லாமல் போய் விடும்.
மூன்றாவது ஒழுங்குமுறை தில்லி
பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒவ்வொரு
பாடமும் நாற்பது சதவிகிதம் வரை முன் தயாரிக்கப்பட்ட, முன் பதிவு செய்யப்பட்ட
விரிவுரைகள் மூலமாகவே வழங்கப்படும் என்றிருக்கிறது. மீதமுள்ள நேரத்தில் வழிகாட்டுதல்,
தரப்படுத்தல் போன்ற வேலைகளை ஆசிரியர்கள் செய்வார்கள். அதன் மூலம் மாணவர்-ஆசிரியருக்கிடையிலான
உரையாடல் என்ற கருத்தே நடைமுறையில் இல்லாமல் போய் விடும்.
இதுபோன்ற
மாடல் மற்ற நாடுகளில் எங்காவது இருக்கிறதா?
இல்லை. வழக்கமான பட்டப்படிப்பின் ஒரு
பகுதியாக இணையவழி படிப்புகள் இவ்வளவு அதிகமாக இருக்கின்ற வகையிலான மாடல் உலகில் வேறெங்கும்
கேள்விப்படாததாகவே இருக்கிறது. தொற்றுநோய்கள் என்ற போர்வையில் பல்கலைக்கழகம்
மற்றும் ஆசிரியர்களின் பங்கை நீர்த்துப் போகச் செய்கின்ற, மிகவும் எளிதில்
பெற்றுக் கொள்ளக் கூடிய பட்டங்கள் என்ற கேரட்டை மாணவர்கள் முன்பாகத் தொங்கவிட்டு ஆசை காட்டுகின்ற
மிகப்பெரிய மாற்றங்களை இந்தக் கல்விக் கொள்கை
மூலமாக அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது.
வகுப்பறைகளில் நாம் என்ன சொல்லித் தருகிறோம்
என்பதைப் பொறுத்ததாக மட்டுமே கல்வியின் தரம் இருப்பதில்லை. மாணவர்களும்,
ஆசிரியர்களும் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதைப்
பொறுத்ததாகவே அது இருக்கும். பலதரப்பட்ட மாணவர்கள் பல்வேறு பின்னணியில் இருந்து
தில்லி பல்கலைக்கழகத்திற்குப் படிக்க வருகிறார்கள். அவர்களில் பலர் விளிம்பு
நிலைக் குழுக்கள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து வருகிறார்கள். ஒருவருக்கொருவர்
மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளும்போது உலகத்தைப் பற்றிய பார்வை மாணவர்களிடம்
மாறுகிறது. ஆனால் தேசிய கல்விக் கொள்கையோ இந்த மாணவர்களை முற்றிலுமாக எவ்விதத்
தொடர்பும் இல்லாமல் தனிமைப்படுத்தி வைக்கிறது. மனித தொடர்புகள், நிறுவனத்
திறன்கள், கலை, நாடகம், விவாதங்கள் நிறைந்த கற்றல் வெளியை அது சுருக்குகிறது.
மனிதர்களிடையே உள்ள பிணைப்பு, நிறுவனரீதியான உறவுகள், தொடர்ச்சி போன்றவை
முற்றிலுமாக நிராகரிக்கப்படுகின்றன.
பட்டத்தின் தரம் அது அச்சிடப்பட்டுள்ள
காகிதத்தின் மதிப்பில்கூட இல்லை என்ற நிலையில் பல்கலைக்கழகங்கள் வெறுமனே பட்டம்
வழங்குகின்ற அமைப்பாக மட்டுமே கருதப்படுகின்றன. இளைஞர்களைப் பேச முடியாதவர்களாக்குகின்ற
கல்வி நிறுவனங்கள் அரைகுறையாகப் படித்தவர்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு, கிக் பொருளாதாரத்திற்குத் தேவையான மலிவான
உழைப்பாளிகளாக உருவாக்கித் தருகின்றன.
இனிமேல்
‘இதை நான் ஏன் செய்ய வேண்டும்’, ‘என்னுடைய ஊதியம் ஏன் இவ்வளவு குறைவாக இருக்கிறது’
என்று கேள்விகளைக் கேட்கின்ற எண்ணம் இளைஞர்களிடம் தோன்றப் போவதில்லை. சுதந்திரமான
விமர்சன சிந்தனைக்கான வெளி முற்றிலுமாக வறண்டு போய் விடும்.
நிர்வாகத்தில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு
வரப்படுகின்றன?
தற்போது
அனைத்து பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழகங்களுடன் இணைவிக்கப்பட்டுள்ள கல்லூரிகளும்
பல்கலைக்கழக மானியக் குழு, அது விதித்துள்ள ஆசியர்களுக்கான பணிநிலைமைகள் குறித்த
வழிகாட்டுதல்கள் மூலமாகவே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக மானியக்
குழுவின் விதிகளின்படி கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவிலான உள்கட்டமைப்பு,
மாணவர்-ஆசிரியர் விகிதம், படிப்புகளின் தரம், தேர்வுகள் போன்றவற்றை சரியாகப் பராமரித்து
வர வேண்டும். நாடு முழுவதற்கும் இந்த ஒழுங்குமுறைகள் ஒரேமாதிரியாக இருப்பதாலேயே
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்களும் ஒரே மாதிரியான பணிநிலைமைகளில்
பணியாற்றி வருகின்றனர்.
ஆனால் இனிமேல் பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை வகுக்காது என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. பல்கலைக்கழகங்களுடன் கல்லூரிகளை இணைவிக்கும் அமைப்புமுறை இனிமேல் இருக்காது என்று கூறுகிறது. அனைத்துக் கல்லூரிகளும் இனி ‘முழுமையாக ஆய்வு’, ‘ஆய்வு மற்றும் கற்பித்தல்’ அல்லது ‘முழுமையாக கற்பித்தல்’ போன்ற பணிகளுக்காகன தனித்த நிறுவனங்களாக மாறப் போகின்றன. அதனால் கல்லூரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று அனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இல்லாத வகையில் தனித்து வைக்கப்படுகின்ற நிலைமையே உருவாகும்.
ஒவ்வொரு
கல்வி நிறுவனத்திலும் இனிமேல் நிர்வாக வாரியம் (BoG) என்பது இருக்கும். இதுவரையிலும்
பல்கலைக்கழகத்தில் இருந்து வருகின்ற நிர்வாகக் குழு, கல்லூரியில் உள்ள ஆட்சிக்
குழுவை அது முற்றிலுமாக மாற்றியமைக்கப் போகிறது. தற்போது செயற்குழு உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து
சிலர், கல்லூரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பிரதிநிதிகள் சிலர் என்று
பெரும்பாலும் கல்வியாளர்களாகவே இருந்து வருகின்றனர். இனிமேல் கார்ப்பரேட்
நிறுவனங்களின் ஆதரவில் இருப்பவர்கள், அரசு பிரதிநிதிகள், 'பொதுஎண்ணம் கொண்ட
அறிவுஜீவிகள்' என்று கல்வியாளர்களாக இல்லாதவர்களே மூன்றில் இரண்டு பங்கு செயற்குழு
உறுப்பினர்களாக இருக்கப் போகின்றனர்.
கல்வி
நிறுவனங்கள் 2030ஆம் ஆண்டிற்குள் சுயநிதி கொண்டு செயல்படுபவையாக மாறி விடும் என்று
கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது கல்விக்கான பொது நிதியுதவியை நீண்ட
காலத்திற்கு எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே அந்தக் கொள்கை இருக்கிறது.
'பொதுஎண்ணம் கொண்ட அறிவுஜீவிகள்' என்றால் யார் என்பதை கல்விக் கொள்கை தெளிவாக
வரையறுக்கவில்லை. நிச்சயம் அவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்தவர்களாகவே
இருப்பார்கள், கருத்தியல் ரீதியாக எதிர்க்கின்றவர்களும், வேறுபட்டவர்களும் முழுமையாக
ஓரங்கட்டப்படுவார்கள் என்றே நாம் கருதலாம். அந்த உறுப்பினர்களே கல்வி நிறுவனங்களுக்குள்
இருக்கின்ற கல்வியாளர்களிடமிருந்து மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கினரை செயற்குழு உறுப்பினர்களாகத்
தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.
நிர்வாக
வாரியத்தில் பதினெட்டு உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றால், அவர்களில் ஆறு பேர்
மட்டுமே கல்வியாளர்களாக இருப்பார்கள். அதுவும் அரசு மற்றும் பெருநிறுவன நலன்களைப்
பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பன்னிரண்டு பேரால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற
கல்வியாளர்களே உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உண்மையில் அரசு
மற்றும் கார்ப்பரேட் சித்தாந்தங்களுக்கு இடையிலான திருமண ஒப்பந்தமாகவே அது இருக்கும்.
இனிமேல் சீனியாரிட்டி அல்லது சுழற்சி முறை என்று எதுவுமே கருத்தில் கொள்ளப்படாது.
தேர்தல் குறித்த கேள்வியே எழப் போவதில்லை. பழைய உறுப்பினர்கள் புதியவர்களை
நியமிப்பதாக இருப்பதால் ஒரு தன்னிறைவுடனான அமைப்பாக அது இருக்கும் என்று அவர்கள் கூறி
வருகிறார்கள்.
நிர்வாக வாரியம் எந்த அளவிற்கு அதிகாரம் மிக்கதாக
இருக்கும்?
இப்போது
பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இருக்கின்ற அனைத்து அதிகாரங்களும் இனிமேல் இந்த நிர்வாக
வாரியத்திடமே இருக்கும். கற்பிக்கப்பட வேண்டிய படிப்புகள், பாடநெறி உள்ளடக்கம்,
கட்டண அமைப்பு, மாணவர்-ஆசிரியர் விகிதம், புதிய பணியிடங்களை உருவாக்குதல்,
பணியமர்த்தும் கொள்கைகள், ஆசிரியர்களின் பணி நிலைமை, அவர்களுடைய பணி மேம்பாடு போன்றவை
அதில் அடங்கும். இவையெல்லாவற்றிற்கும் மேலாக புதிய நிர்வாக வாரியம் யாருக்கும்
பதிலளிக்க வேண்டியதாக இருக்காது.
நிறுவனத் தரங்களை பராமரிப்பதற்கு, மேம்படுத்துவதற்கு
தேசிய கல்விக் கொள்கை எவ்வாறு திட்டமிடுகிறது?
நிறுவனங்கள்
மதிப்பீடு செய்யப்பட்டு தரப்படுத்தப்படும். ஆனாலும் முதன்முறையாக தேவையான
உள்ளீடுகளுக்கு அரசாங்கம் எந்தவிதப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல், உற்பத்தியைக்
கொண்டு மட்டுமே மதிப்பிடுவது என்றே அது இருக்கப் போகிறது. பொதுநிதிக்கு
முக்கியத்துவம் தரப்படவில்லை என்றாலும் சோதனை, கண்காணிப்புக்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால்
அந்த கல்வி நிறுவனம் தனது தரத்தை இழக்க நேரிடும். ஆனாலும் குறிப்பிட்ட கல்வி
நிறுவனம் தொலைதூரத்தில் பின்தங்கிய பகுதியில் உள்ளதா, மாணவர்களின் நிதிப் பின்னணி என்ன,
அவர்களால் ஏன் நன்றாகச் செயல்பட
முடியவில்லை என்பது போன்ற காரணிகள் எதுவும் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது.
தேசிய கல்விக் கொள்கை நாட்டில் உள்ள உயர்கல்வி
நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயல்கிறது என்று சொல்ல வருகிறீர்களா?
இந்தியாவில்
சுமார் ஐம்பதாயிரம் உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகின்ற தேசிய
கல்விக் கொள்கை அந்த எண்ணிக்கை பதினைந்தாயிரமாக குறைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
மேலும் அது ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் பல துறைகளுடன் இருக்க வேண்டும்,
ஐயாயிரத்திற்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கக் கூடாது என்றும் கூறுகிறது.
அதன்படி பார்க்கும் போது, ஆயிரத்து இருநூறு மாணவர்களைக் கொண்ட செயின்ட் ஸ்டீபன்
போன்ற கல்லூரிகள் இனிமேல் நீடித்திருப்பதற்கான
சாத்தியம் என்பது காணப்படவில்லை.
தனியார்
நிறுவனங்கள் இதுபோன்ற சாத்தியமில்லாத கல்வி நிறுவனங்களைக் கையகப்படுத்திக் கொள்வதற்கும்,
அவற்றையெல்லாம் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து வைத்துக் கொள்வதற்கும் இந்தக் கல்விக்
கொள்கை அடித்தளம் அமைத்துத் தருகிறது. ஒரு அம்பானி அல்லது அதானி ஐயாயிரத்திற்கும்
குறைவான மாணவர்களைக் கொண்ட மூன்று அல்லது நான்கு கல்லூரிகளை வாங்கி ஒன்றிணைத்து
வைத்துக் கொள்வார். ஆய்வுகளில் நன்கு கவனம் செலுத்தி வருகின்ற ஜேஎன்யூ போன்ற
பல்கலைக்கழகங்கள் இனிமேல் மருத்துவக் கல்லூரி, வணிகக் கல்லூரி போன்றவற்றையும்
உள்ளடக்கியவையாக இருக்கும்!
ஆனால் பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களின்
தனிப்பட்ட சட்டங்களால் உருவாக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் இத்தகைய பெரும்
மாற்றங்களைச் செய்து விட முடியுமா?
தில்லி
பல்கலைக்கழகச் சட்டம் அல்லது ஜேஎன்யூ சட்டம் போன்ற தற்போதுள்ள அனைத்து
சட்டங்களையும் மீறுகின்ற வகையில் புதிய சட்டத்தை இயற்றுவதே அவர்களுடைய திட்டமாக
இருக்கிறது. இந்த பல்கலைக்கழகங்கள் எல்லாம் தேவையில்லை என்று நினைக்கின்ற மோடி,
உலகெங்கிலும் உள்ள மற்ற வலதுசாரி தலைவர்களை விட ஒரு படி மேலே சென்றிருக்கிறார்.
அறிவார்ந்த காலனித்துவத்தை உருவாக்குகின்ற இதுபோன்ற முயற்சிகள் குறித்து
பெற்றோர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் விழித்தெழ வேண்டும்.
தாராளவாதக் குழுக்கள் ஒன்றுகூடி சுதந்திரமான உயர்கல்வி
நிறுவனங்களை அமைத்துக் கொள்ள முடியாதா?
அரசு
தன்னுடைய கட்டுப்பாட்டை முழுமையாக விட்டுக் கொடுத்து விடவில்லை. கார்ப்பரேட்டுகளுடன்
அரசின் பிரதிநிதிகளும் நிர்வாக வாரியத்தில் இருப்பார்கள். லாபத்தை மட்டும்
கருத்தில் கொண்டு அந்த நிறுவனங்கள் அரசின் விதிகளின்படி செயல்படும்.
அதிகாரப்பூர்வமான நிலைப்பாட்டை மீறுகின்ற எந்தவொரு நிறுவனத்தையும்
துன்புறுத்துவதற்கு அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் ஆட்சியாளர்களால்
பயன்படுத்தப்படும்.
Comments