கரண் தாப்பர்
நசிருதீன் ஷா உடன் நேர்காணல்
வயர் இணைய இதழ்
நடிகர் நசீருதீன் ஷாவுடன் கரண்
தாப்பர் நடத்திய நேர்காணல் தி வயர் யூடியூப் சேனலில் 2021 டிசம்பர் 28 அன்று பதிவேற்றம்
செய்யப்பட்டது. வகுப்புவாத துருவமுனைப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள நாட்டில் இப்போது
ஒரு முஸ்லீமாக இருப்பதன் பொருள் பற்றி நடிகர் நசீருதீன் ஷா அந்த முப்பத்தைந்து
நிமிட உரையாடலில் விரிவாகப் பேசினார். இந்திய முஸ்லீம்களை இனப்படுகொலை செய்வதற்கான
அழைப்புகள் எந்தவொரு விளைவுகளுமில்லாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் சூழலில் முஸ்லீம்கள்
உணர்ந்துள்ள காயங்களுக்கு சாளரத்தைத் திறந்து வைப்பதாக அந்த உரையாடல் இருந்தது.
அவர்களுடைய உரையாடலின் முழுமையான
எழுத்தாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முழு நேர்காணலை இங்கே காணலாம்.
§
கரண் தாப்பர்: ஹரித்துவாரில் பத்து நாட்களுக்கு
முன்பு நடந்த தர்ம சன்சத் கூட்டத்தில் முஸ்லீம்களை இனப்படுகொலை செய்வது, இனச் சுத்திகரிப்பு
செய்வது என்று ரத்தவெறி கொண்ட குரல் எழுப்பப்பட்டது. ரோஹிங்கியாக்களுக்கு மியான்மரில்
என்ன நடந்ததோ அதை இங்கே முஸ்லீலிம்களுக்கு நாம் செய்ய வேண்டும் என்று அந்தக்
கூட்டத்தில் ஹிந்துக்களுக்கு கூறப்பட்டது. இந்திய குடிமக்கள் தங்களுடைய சக
குடிமக்கள் மீதே இதுபோன்று திரும்புவார்கள் என்று என் வாழ்நாளில் ஒருபோதும் நான்
நினைத்ததில்லை. ஆனால் அதுதான் இப்போது நடந்தேறியிருக்கிறது. எனவே நான் இன்றைக்கு
உங்களிடம் ‘நரேந்திர மோடியின் இந்தியாவில் ஒரு முஸ்லீமாக இருப்பதை எவ்வாறு
உணர்கிறீர்கள்?’ என்று ஓர் எளிய, வெளிப்படையான கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்...
இன்றைக்கு எனது விருந்தினர் இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர்.
அவரது வாழ்க்கையில் ஒரேயொரு அடையாளம் மட்டுமே அவரிடம் இருந்து வந்திருக்கிறது. மதம்
என்பது முக்கியமில்லை என்று தன்னை இந்தியர் என்று அவர் நினைத்தது சரிதான்.
இருப்பினும் இன்றைக்கு அவரது சொந்த நாட்டு மக்களில் பலரும் அவர் மீது மத
அடையாளத்தைத் திணிக்கிறார்கள். இப்போது அனைவராலும் நன்கு அறியப்பட்ட, மிகவும்
மதிக்கப்படுகின்ற நடிகர் நசிருதீன் ஷா என்னுடன் இணைகிறார்.
நசீருதீன் ஷா! ஹரித்துவாரில் பத்து நாட்களுக்கு முன்பு நடந்த அந்த தர்ம
சன்சத் கூட்டத்தில், இன அழிப்புக்காக முஸ்லீம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும்
என்று ரத்தவெறி கொண்ட அழைப்பு விடுக்கப்பட்டது, மேலும் மியான்மரில்
ரோஹிங்கியாக்களுக்கு செய்யப்பட்டதை இங்கே ஹிந்துக்களுக்குச் செய்ய வேண்டும் என்று
அவர்கள் சொன்னார்கள். உங்கள் சொந்த நாட்டு மக்கள், சக குடிமக்கள், உங்கள் சமூகத்தைப்
படுகொலை செய்யுமாறு அழைப்பு விடுத்தது குறித்து உங்களிடம் என்ன மாதிரியான உணர்வு
இருந்தது?
நசிருதீன் ஷா: என்னிடம் ஏற்பட்ட முதல் எதிர்வினை கோபம். இங்கே நடந்து கொண்டிருப்பது
முஸ்லீம்களிடம் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துகிற கூட்டு முயற்சியாகும். அவுரங்கசீப்
மற்றும் முகலாய ஆக்கிரமிப்பாளர்களை துணைக்கழைத்து தலைமையில் இருப்பவர்களிலிருந்து
தொடங்கி பலரும் பேசுவதன் மூலம் பிரிவினைவாதமானது ஆளும் கட்சியின் கொள்கையாக மாறி விட்டதாகவே
தோன்றுகிறது.
அவர்களுக்கு (வலதுசாரி ஆர்வலர்கள்)
என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்வதற்கு நான் ஆர்வமாக இருந்தேன். ஆனால்
அவர்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்பதில் எனக்கு எந்தவொரு ஆச்சரியமுமில்லை.
ஏனெனில் இங்கே விவசாயிகளை மோதிக் கொன்ற அமைச்சருக்கு எதுவும் நடக்கவில்லை. அவர்
பதவி நீக்கம் செய்யப்படவில்லை, தண்டிக்கப்படவில்லை, அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை, அமைச்சர் பதவியை விட்டு விலகுமாறு அவர் கேட்டுக்
கொள்ளப்படவில்லை. அந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் நான் அதிக விவரங்களுக்குள்
செல்லவில்லை. ஆனாலும் இப்போது இங்கே எங்களை (சிறுபான்மை சமூகத்தினர்)
பயமுறுத்துவதற்கான முயற்சி நிச்சயமாக இருக்கிறது. ஆனாலும் ‘நாம் பயந்து விடக் கூடாது’
என்பதை ஒரு பலகையில் எழுதி நான் எப்போதும் கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறேன்.
வேடிக்கையாகச் சொல்வதென்றால்
பயப்படுவது என்பது - ‘நீங்கள் இந்தியாவில் இருக்கப் பயப்படுகிறீர்கள்’ என்று எப்போதும்
என் மீது சுமத்தப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டு. அது ஏன் சொல்லப்பட்டதென்றால், சில
மாதங்களுக்கு முன்பு எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்படுவதைப்
பற்றி பேசியிருந்தேன். ‘என் வாழ்க்கை முடிந்துவிட்டது. என் வாழ்க்கையில் இன்னும்
எனக்கு பத்து ஆண்டுகளே எஞ்சியிருக்கின்றன. அதனால் நான் அதைக் காண்பதற்கு உயிருடன் இருக்க
மாட்டேன். ஆனால் என்னுடைய குழந்தைகளின் நிலை என்னவாகும் என்பது குறித்து எனக்கு கவலையாக
இருக்கிறது. காவல்துறை ஆய்வாளரின் மரணத்தைக் காட்டிலும் 'பசுவின் மரணம்' இப்போது முக்கியத்துவம்
பெறுவது மிகவும் சோகமானது’ என்று நான் அப்போது கூறியிருந்தேன்.
சில காரணங்களால் அந்த அறிக்கை
என்னை கேலி, வெறுப்பு மற்றும் தவறான அச்சுறுத்தல்களின் தொடர் இலக்காக ஆக்கியது.
அதனால் நான் முற்றிலும் குழம்பிப் போனேன். ஏனென்றால் நான் ஆத்திரமூட்டுகின்ற வகையில்
எதையும் பேசியிருக்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் நடித்திருந்த ஒரு திரைப்படம்,
எ வெட்னஸ்டே அந்த நேரத்தில் இழுத்துக் கொண்டு வரப்பட்டது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு
முன்பு நான் நடித்த 'சர்ஃபரோஷ்' படமும் அப்போது
இழுக்கப்பட்டது.
சர்ஃபரோஷ் திரைப்படத்தில்
உளவுத்துறை ஏஜெண்டாக வரும் நான் பாகிஸ்தான் கஜல் பாடகராக நடித்திருந்தேன். எ
வெட்னெஸ்டே திரைப்படத்தில் கொல்லவில்லையெனில் அவர்கள் தப்பித்து விடுவார்கள் என்று
அஞ்சி நான்கு பயங்கரவாதிகளை தனியொரு ஆளாகக் கொல்ல முடிவு செய்கின்ற பாத்திரத்தில் நான்
நடித்திருந்தேன். என்னைப் பற்றி பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோவில் லாகூருக்கு
ஒருமுறை சென்றிருந்த போது நான் பேசியதுடன் அந்த இரண்டு படங்களும் அருகருகே
இணைத்துக் காட்டப்பட்டன. லாகூருக்கு சென்றிருந்த சமயத்தில் என்னிடம் லாகூருக்கு
வந்திருப்பதை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. ‘வீட்டில்
இருப்பதைப் போலவே உணர்கிறேன்’ என்று சொன்னேன். அது அவர்களைக் கோபமடையச் செய்திருக்கும் என்று தோன்றுகிறது. ‘வீட்டில்
இருப்பது போல உணர்ந்தால் நீங்கள் அங்கேயே சென்று விடுங்கள்’ என்று கூற ஆரம்பித்தார்கள்.
அவ்வாறு ஏன் அவர்கள் நடந்து கொள்ள
வேண்டும் என்று எனக்குப் புரியவே இல்லை. ஒருவரின் வீட்டிற்கு செல்லும் நீங்கள், அங்கே
உங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தால், அவர்கள் உங்களை நன்றாக நடத்தினால் ‘என்
வீட்டைப் போலவே இருக்கிறது’ என்று சொல்ல மாட்டீர்களா? அவர்களுக்கு அந்தப் பேச்சு எ
வெட்னெஸ்டே திரைப்படத்தில் கரப்பான் பூச்சிகள் போன்றவற்றிடமிருந்து வீட்டைச்
சுத்தம் செய்வது பற்றி நான் பேசிய பேச்சுக்கு முரண்பட்டதாக இருந்திருக்கிறது.
‘இவர் மிகப் பெரிய துரோகி. ஒருபுறம் அவரது திரைப்பட பிம்பம் இவ்வாறு சொல்கிறது -
ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் சொல்வது இதுதான்’ என்று அவர்களால் காட்டப்பட்டது.
நான் இங்கே நன்கு
வரவேற்கப்பட்டிருக்கிறேன், மிகவும் வசதியாக உணர்கிறேன் என்றுதான் நான் நிஜ
வாழ்க்கையில் சொல்லியிருந்தேன். நமது பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் பள்ளி
மாணவிகள் போல கைகளைப் பிடித்துக் கொண்டு லாகூர் விமான நிலையத்தின் தரைப்பாலத்தில் அதே
சமயத்தில் நடந்து கொண்டிருந்தனர்.
கரண் தாப்பர்: முற்றிலும் உண்மை. நான் இப்போது
தெரிந்தே தர்ம சன்சத் கூட்டத்தில் இருந்த இரண்டு நபர்கள் பேசியவற்றை மேற்கோள்
காட்டப் போகிறேன், ஏனென்றால் அங்கு பேசப்பட்ட சில விஷயங்கள் எந்த அளவிற்கு
அதிர்ச்சியூட்டுபவையாக, ரத்தவெறி கொண்டவையாக, பயங்கரமானவையாக இருந்தன என்பதை
பார்வையாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
‘மியான்மரைப் போல இங்குள்ள காவல்துறையினர், அரசியல்வாதிகள், ராணுவம் மற்றும் ஒவ்வொரு ஹிந்துவும் ஆயுதம் ஏந்தி இந்த சுத்திகரிப்பு இயக்கத்தை நடத்த வேண்டும். அதைத் தவிர வேறு தீர்வு எதுவுமில்லை’ என்று சுவாமி பிரபோதானந்தா அங்கே பேசினார். பின்னர் பூஜா ஷகுன் பாண்டே ‘அவர்களில் இருபது லட்சம் பேரைக் கொல்வதற்கு நம்மில் நூறு பேர் தயாராக இருந்தால் போதும், இந்தியாவை ஹிந்து நாடாக மாற்றுவதில் நாம் வெற்றி பெற்று விடுவோம்’ என்று பேசினார். உங்கள் வாழ்நாளில் நீங்கள் எப்போதாவது முஸ்லீம்களைப் பற்றி அவர்களுடைய சொந்த ஹிந்து சகோதர சகோதரிகளே இவ்வாறாகப் பேசுவார்கள் என்று நினைத்திருப்பீர்களா? சக குடிமக்களே இப்போது உங்கள் மீது தாக்குதலை நடத்தப் போவதாகச் சொல்கிறார்கள்.
ஹரித்துவாரில் நடந்த தர்ம சன்சத்
கூட்டம்
நசிருதீன் ஷா: இது போன்ற விஷயங்களைக் கேட்கும் போது மன உளைச்சலே ஏற்படுகிறது. மேலும்
தாங்கள் என்ன பேசுகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியுமா என்பது உண்மையில் எனக்கு
ஆச்சரியமாகவே இருக்கிறது. அவர்கள் இப்போது அழைத்துக் கொண்டிருப்பது முழு அளவிலான
உள்நாட்டுப் போருக்கே ஆகும்... நம்மிடையே இருந்து வருகின்ற இருபது கோடிப் பேர் இதை
எங்கள் தாய்நாடு என்றும் நாங்கள் இந்த இடத்திற்குச் சொந்தக்காரர்கள் என்றும் கூறி
திரும்ப எதிர்த்துப் போராடும் போது அவர்கள் அனைவரையும் அவ்வளவு எளிதில் அழித்து
விட முடியாது.
நாங்கள் இங்கேதான் பிறந்தோம்,
எங்கள் தலைமுறைகள் இங்கேயே வாழ்ந்து மடிந்திருக்கின்றன. அத்தகைய இயக்கம் ஏதேனும்
தொடங்குமானால், அது மிகப் பெரிய எதிர்ப்பையும், கோபத்தையும் நிச்சயம் சந்திக்கும்
என்றே நான் உறுதியாக நம்புகிறேன். இப்போது அதுபோன்று பேசுபவர்களுக்கு எதிராக
எதுவும் செய்யப்படுவதிவில்லை. ஆனால் அதேசமயத்தில் ஒரு கவிஞர், நகைச்சுவை நடிகர்
தான் சொல்லப் போகின்ற நகைச்சுவைக்காக கைது செய்யப்படுகிறார். ஆனால் யதி
நரசிங்கானந்த் இதுபோன்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்... வெறுக்கத்தக்க வகையில்
பேசுகின்ற இந்த யதி நரசிங்கானந்த் சொல்வது... முற்றிலும் அருவருப்பானவையாக,
அபத்தமானவையாகவே இருக்கின்றன. அச்சுறுத்தல்கள் இல்லையென்றால் அந்த பேச்சுகள்
உண்மையில் வேடிக்கையானவையாகவே இருக்கும்.
கரண் தாப்பர்: தாங்கள் ஓர் உள்நாட்டுப் போருக்குச்
சாத்தியமான சூழ்நிலையை உருவாக்கி வருகிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை என்று நீங்கள்
மிக முக்கியமான ஒன்றை சொன்னீர்கள். இருபது கோடி முஸ்லீம்களைத் தாக்கி கொல்லப்
போவதாக தர்ம சன்சத் மிரட்டுவதாலேயே நாட்டில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் கீழே
விழுந்து அவர்களிடம் சரணடைந்து விடப் போவதில்லை. அவ்வாறு பேசுபவர்கள் நமது
நாட்டின் ஒருமைப்பாட்டிற்கே அச்சுறுத்தலை விடுத்துள்ளனர்.
நசிருதீன் ஷா: ஆம், நீங்கள் சொன்னதைப் போல் அவர்கள் தங்களால் இயன்றவரையிலும் இங்கே இருக்கின்ற சக குடிமக்களை மிரட்டி வருகிறார்கள்.
முகலாயர்கள் செய்த 'அட்டூழியங்கள்' என்று சொல்லப்படுபவை மீது தொடர்ந்து வெளிச்சம்
போட்டுக் காட்டிக் கொண்டிருப்பது உண்மையில் ஆச்சரியமளிப்பதாகவே இருக்கிறது. அவர்கள்
முகலாயர்கள் இந்த நாட்டிற்குப் பங்காற்றியவர்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்;
நீடித்து நிற்கின்ற நினைவுச்சின்னங்கள், வரலாறு, கலாச்சாரம், நடனம் மற்றும் இசை
மரபுகள், ஓவியம், கவிதை மற்றும் இலக்கியம் ஆகியவற்றை நமக்கு விட்டுச் சென்றவர்கள் முகலாயர்கள்
என்பதை மறந்து விடுகிறர்கள். தைமூர், கஜினி முகமது அல்லது நாதர் ஷா பற்றி யாருமே
பேசுவதில்லை. ஏனென்றால் அந்த வரலாறு குறித்த அறிவு கொண்டவர்களாக அவர்கள் இல்லை.
அவர்களைப் பொறுத்தவரை முகலாயர்கள் இங்கே வந்த கொள்ளையர்கள், கொள்ளையடித்து
விட்டுச் சென்றவர்கள் எனப்து மட்டுமே… இந்த இடத்தை தங்கள் தாயகமாக்கிக்
கொள்வதற்காக முகலாயர்கள் இங்கே வந்தனர். விரும்பினால் நீங்கள் அவர்களை அகதிகள்
என்று வேண்டுமானால் அழைத்துக் கொள்ளலாம், மிகவும் வசதியுடன் இருந்த அகதிகள். ஆனால்
முகலாயர்கள் மீது இப்போது தேவையில்லாமல் குற்றம் சாட்டப்படுகிறது. 'அட்டூழியங்கள்'
என்று அவர்களால் விவரிக்கப்படுகின்ற செயல்களுக்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு
முஸ்லீமும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்வது உண்மையில் கேலிக்குரியதாகவே
இருக்கிறது.
கரண் தாப்பர்: நசீருதீன் ஷா, உங்களுக்குத்
தெரிந்திருக்கும். மக்களை கலங்கச் செய்திருப்பது தரம் சன்சத்தில் பேசிய பேச்சுகள்
மட்டும் அல்ல… அதற்கான எதிர்வினையும்தான். காவல்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும்
எடுக்காமலே நாட்கள் பல கடந்து சென்று விட்டன. இன்று வரையிலும் யாரும் கைது
செய்யப்படவில்லை. இறுதியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டபோது, அது
வெறுமனே ‘மத விரோதத்தைத் தூண்டுகின்ற’ என்ற மிகக் குறைவான குற்றத்திற்கானதாக மட்டுமே
இருந்தது.
உத்தரகாண்ட் காவல்துறை தலைமை இயக்குனர் மிக முக்கியமான ஊபா சட்டம்
(சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) பயன்படுத்தப்படவில்லை என்றும் அது
பயன்படுத்தப்படாமலேகூட போகலாம் என்றும் தி ஹிந்து பத்திரிகையிடம் உறுதி
செய்துள்ளார். கடந்த ஆண்டு கோவிட்-19 பரவியதாக தப்லிகி ஜமாஅத் மீது குற்றம்
சாட்டப்பட்ட வேளையில் சிலர் மீது கொலைக் குற்றமே
சுமத்தப்பட்டது. பாகிஸ்தானின் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள்
மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. காவல்துறை மிக நியாயமாக,
நேர்மையாக இருக்கிறது என்று நீங்கள், முஸ்லீம்கள் நம்புகிறீர்களா? இந்த கொடூரமான
குற்றவாளிகளை சட்டத்தின் முன்பாக கொண்டு வந்து காவல்துறை நிறுத்தும் என்று
முஸ்லீம்கள் நம்புகிறார்களா?
நசிருதீன் ஷா: அது காவல்துறைக்கு யார் உத்தரவு பிறப்பிக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது.
நீதித்துறையின் இந்த வகையான பாகுபாடு மிக மேலே இருந்து தொடங்குகிறது. எல்லா
வழிகளிலும் அது அங்கிருந்தே பரவுகிறது. உயர்மட்டத்தில் இருப்பவர்களே
முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். எனவே உத்தரவின் பேரிலேயே காவல்துறை செயல்படலாம்.
மக்களை அடிப்பதில் காவல்துறையினரிடம் மகிழ்ச்சி அல்லது ஏதாவது ஒரு உணர்வு
இருக்கிறதா என்பது இங்கே முக்கியமாக இருக்கிறது. பொதுமுடக்கத்தின் போது நாம்
பார்த்த காட்சிகளிலிருந்து காவல்துறையினர் அவ்வாறு செய்து வருவதை நம்மால்
வெளிப்படையாகக் காண முடிந்திருக்கிறது. காவல்துறையில் முஸ்லீம்களின்
பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக அல்லது கொஞ்சம் அதிகமாகவே இருந்தாலும்,
கூட்டத்தின் மீது லத்தி கொண்டு அடிக்க உத்தரவைப் பெற்றுக் கொண்ட முஸ்லீம் காவலர்
ஒருவர் மிகவும் மகிழ்ச்சியுடன் அதற்கு கீழ்படிவார் என்றால் என்ன செய்வது? இந்த
விஷயத்தில் அவருக்கான தேர்வு என்று எதுவும் இருக்கவில்லை.
கரண் தாப்பர்: காவல்துறை எவ்வாறு நடந்து
கொள்கிறது, எப்படி எதிர்வினையாற்றுகிறது, நேர்மையாக அல்லது நியாயமாக அவர்கள்
நடந்து கொள்வார்களா, சட்டத்தின் முன்பு குற்றவாளிகளைக் கொண்டு வந்து
நிறுத்துவார்களா என்பது மேலிட உத்தரவுகளைப் பொறுத்தது என்று மிக முக்கியமான
விஷயத்தைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். அரசியல் எதிர்வினை எவ்வாறு இருக்கிறது
என்று பார்ப்போம். கண்டிக்கின்ற வகையில் ஒரு வார்த்தையைக்கூட வெளியிடாத
உத்தரகாண்ட் அரசு, ஒன்றிய அரசு, பிரதமர் ஆகியோரின் மௌனம் காதைச் செவிடாக்குகிறது. அது
எதுவும் நடக்கவில்லை அல்லது நடப்பவற்றை பொருட்படுத்தவில்லை என்று அவர் கூறுவதைப் போலவே
உள்ளது.
நசிருதீன் ஷா: அவர் கவலைப்படவில்லை. உண்மையில் அவர் கவலைப்படுவதே இல்லை. தான் வருந்தத்
தேவையில்லை என்று கருதுகின்ற விஷயத்திற்காக தன்னுடைய வருத்தத்தை
வெளிப்படுத்துபவராக அவர் இருப்பதால் அவரை ஒரு பாசாங்குக்காரர் என்றுகூட உங்களால்
குற்றம் சாட்ட முடியாது. அவர் ஒருபோதும் அகமதாபாத் படுகொலைகளுக்காக மன்னிப்பு
கேட்டதில்லை, அதுமட்டுமல்ல… அவர் வேறு எதற்குமே மன்னிப்பு கேட்டதாக இருக்கவில்லை.
விவசாயிகள் விஷயத்தில் அரை மனதுடன் அவர் கேட்டிருந்த மன்னிப்பும்கூட வஞ்சகம்
நிறைந்த மன்னிப்பாகவே இருந்தது.
மோசமாகப் பேசியவர்களில் யாரையும்
தண்டிக்கும் வகையில் ஒரு வார்த்தைகூட அவரிடமிருந்து வரவில்லை. உண்மையில் அந்த
நபர்களை ட்விட்டரில் பின்தொடர்பவராகவே அவர் இருக்கிறார். அதை அவர் ஏன் செய்கிறார்
என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதில் ஒருவித மகிழ்ச்சியை அவர் பெறுகிறார்.
கரண் தாப்பர்: இந்த நாட்டின் தலைவராக இருக்கின்ற பிரதமர் மௌனம் சாதிப்பது
தார்மீக ரீதியாக மட்டுமே சிக்கலானதாக இருக்கவில்லை. அவருடைய மறைமுகமான ஆதரவு இனப்படுகொலைக்கு
அழைப்பு விடுப்பவர்களுக்கு இருக்கிறது என்பதைக் காட்டுகின்ற தெளிவான அறிகுறியாகவே
அவரது மௌனம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அவர்களை ஒரு விதத்தில் அவர்
ஊக்குவித்தே வருகிறார். அவர்களை நீங்கள் சொல்வதைப் போல அவர் தண்டிக்கவில்லை,
அவர்களைக் கண்டிக்கவில்லை. உங்கள் சமூகத்தைப் படுகொலை செய்ய நினைக்கும்
அவர்களுக்கு மேல்மட்டத்தில் இருந்து மௌன ஆதரவு இருப்பது உங்களுக்கு கவலை அளிப்பதாக
இருக்கிறதா?
நசிருதீன் ஷா: அதுவொன்றும் முழுக்க ஆச்சரியமளிப்பதாக இருக்கவில்லை என்றாலும். கவலைக்குரியதாகவே
இருக்கிறது. ஆனாலும் அது ஏறக்குறைய நாம் எதிர்பார்த்ததுதான். இப்படி நடந்து விடுமோ
என்று நான் பயந்து கொண்டிருந்தேன். ஆனாலும் அனைவரின் மோசமான எதிர்பார்ப்புகளையும் தாண்டி
மிகவும் மோசமாக விஷயங்களாக அவை எவ்வாறு மாறின என்பதை நான் சொல்ல வேண்டும். இவ்வாறு
ஆத்திரமூட்டப்பட்டாலும் மௌனம் காக்கின்ற தலைவர், எல்லோரிடமும் அக்கறை காட்டுபவராக
தன்னைக் கூறிக் கொள்பவர், மக்களுடைய வளர்ச்சிக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக்
கொள்பவர், எந்தவொரு மதத்துக்கும் எதிராக தனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்று
சொல்லிக் கொள்பவர் நம்மிடையே இருந்து வருகிறார் என்பதுதான் இப்போதுள்ள பிரச்சனை. அவர்
கணக்கிலடங்கா கேமராக்களின் துணையுடன் தனது சொந்த மத நம்பிக்கைகளை அணிவகுத்துச் சென்று
காட்டுபவராக இருக்கிறார். அதே நேரத்தில் அவர் முஸ்லீம்களைப் பற்றி குறிப்பிட்டவர்களின்
ஆதரவைப் பெறும் வகையில் பேசுவதற்கான நேரத்தையும் கண்டுபிடித்து வைத்துக் கொள்கிறார்.
அது நிச்சயமாக கவலைக்குரியதாகவே இருக்கிறது. ஆனாலும் இதுகுறித்து என்ன செய்ய
முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
கரண் தாப்பர்: முஸ்லீம்களுக்கு எதிராக நடந்துள்ள
சமீபத்திய சீற்றமாக ஹரித்துவாரில் நடந்திருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. 2014ஆம்
ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளாக
முஸ்லீம்கள் மிது லவ் ஜிகாத் என்று பலமுறை குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது. பசுக்
கொலைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். காவலர்கள் மற்றும் கும்பல்களால்
தாக்கப்பட்டுள்ளனர். யோகி ஆதித்யநாத் போன்ற பாஜக மூத்த தலைவர்கள் பகிரங்கமாக
அவர்களை மீண்டும் மீண்டும் பரிகாசம் செய்து வருகிறார்கள். தங்கள் சொந்த நாட்டிலேயே
இரண்டாம் தர குடிமக்கள் என்ற நிலைக்கு முஸ்லீம்கள் தள்ளப்பட்டிருக்கிறார்களா?
நசிருதீன் ஷா: இரண்டாம் தரக் குடிமக்களாகத் தாழ்த்துவதற்கான செயல்பாடுகளிலேயே அவர்கள் ஈடுபட்டு
வருகின்றனர். எல்லாத் துறைகளிலும் அது நடந்து வருகிறது. ‘திரைப்படங்கள் சமூகத்தைப்
பிரதிபலிக்கின்றன அல்லது சமூகம் திரைப்படங்களைப் பிரதிபலிக்கிறது’ என்று கூறியது
உண்மைதான். திரைப்பட உலகில் நடப்பது நிச்சயமாக நாட்டில் பிரதிபலிக்கிறது.
மலேர்கோட்லா மாவட்டத்தில் உள்ள
ஜித்வால் கலான் கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக முஸ்லீம் குடும்பங்களுக்கு தனது
பூர்வீக நிலத்தை வழங்கிய விவசாயி ஜக்மெல் சிங் (நடுவே வெள்ளைத் தலைப்பாகை
அணிந்துள்ளவர்)
அது முஸ்லீம்கள் மத்தியில்
அச்சத்தை உருவாக்கிப் பரப்புகின்ற முயற்சியாகவே இருக்கிறது. முஸ்லீம்கள் அதற்கு ஒருபோதும்
அடிபணிந்து விடக்கூடாது என்பதையே நான் எப்போதும் கடைப்பிடித்து வருகிறேன்.
நெருக்கடி என்று வந்தால் அதை எதிர்த்து நின்று போராடுவோம் என்பதால் ஒரு விஷயம்
நம்மைப் பயமுறுத்துகிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. நம்மிடம் ‘ஹிந்துக்களும்
முஸ்லீம்களும் ஒன்றாக வாழ முடியாது’, ‘இருவரின் கலாச்சாரங்கள் ஒன்றுக்கொன்று
வேறுபட்டவை’ என்று வெளிப்படையாகக் கூறுகின்ற மூத்த தலைவர் அரசியலமைப்பிற்கு முரணாகவே
நடந்து கொள்கிறார் இல்லையா? அவர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே நடந்து
கொள்கிறார் இல்லையா? அவர் அதைப் பற்றி எதுவும் நினைத்தவராகத் தெரியவில்லை. அவர்
தொடர்ந்து ‘தகனம் செய்யும் மயானம் - கல்லறை’ (சம்ஸ்தான் - கப்ரிஸ்தான்), ‘மசூதி - கோவில்’
போன்ற வேறுபாடுகள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். முக்கிய பெரும்பான்மை என்று
தாங்கள் உணர்கின்ற ஹிந்துப் பெரும்பான்மையினரை ஒருங்கிணைப்பதற்காக அவர்களைப் பிரித்தாண்டு ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக்
கொள்ளும் மிகச் சிறந்த வழியை பாஜக கண்டுபிடித்து வைத்திருக்கிறது. அவர்கள்
யாருக்கும் பிடி கொடுப்பதில்லை. முஸ்லீம்கள் ஓரங்கட்டப்பட்டு தேவையற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள்.
அவர்களைத் தேவையற்றவர்கள் என்று நிரூபிக்கும் வகையிலான செயல்முறைகள் படிப்படியாகத்
தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
கரண் தாப்பர்: நீங்கள் மிக முக்கியமான ஒன்றைச்
சொன்னீர்கள். ஆனால் அதை மெதுவாகச் சொன்னீர்கள். அவ்வாறு நீங்கள் அதைச் சொன்னதாலேயே
அது மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது. நெருக்கடி வந்தால் எதிர்த்துப் போராடுவோம்
என்று சொன்னீர்கள். அதுதான் அவர் உங்களுக்கு விட்டுச் செல்கின்ற கடைசி வழி
இல்லையா? உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உங்கள் நிலையைத் தற்காத்துக் கொள்ளவும்
நீங்கள் ரகசியமாகப் போராட வேண்டும்.
நசிருதீன் ஷா: ஆம். அப்படி ஒரு நிலைமை வந்தால் நாங்கள் அவ்வாறே செய்வோம். எங்கள்
வீடுகளையும், தாயகத்தையும், குடும்பங்களையும், குழந்தைகளையும் நாங்கள் பாதுகாத்து
வந்திருக்கிறோம். எங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி நான் பேசவில்லை; நம்பிக்கைகள்
மிக எளிதாக அச்சுறுத்தலுக்குள்ளாகின்றன. அதாவது அவ்வப்போது ‘இஸ்லாம் ஆபத்தில்
உள்ளது’ என்று கூறபப்டுவதை நான் கேட்டு வந்திருக்கிறேன். இப்போது ஹிந்து மதம்
அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக நாம் கேள்விப்பட்டுக் கொண்டிருப்பதை நீங்கள்
எவ்வளவு அபத்தமானவராக இருக்க வேண்டும் தெரியுமா? எங்களை விட பத்துக்கு ஒன்று என்ற
அளவிலே அதிக எண்ணிக்கையில் இருந்து கொண்டு ‘என்றாவது ஒரு நாள் ஹிந்துக்களைக்
காட்டிலும் முஸ்லீம்கள் அதிகமாக இருக்கப் போகிறார்கள்’ என்று இன்னும் பிரச்சாரம்
செய்து வரப்படுகிறது. ஹிந்துக்களின் எண்ணிக்கையை என்றாவது ஒரு நாள் முஸ்லீம்கள் மிஞ்சுவதற்கு
எந்த விகிதத்தில் நாங்கள் சந்ததியை உருவாக்க வேண்டும் தெரியுமா? நாங்கள் ஏன் அதை
விரும்ப வேண்டும்? இருக்கின்ற இடத்தில் நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்;
எங்களால் முடிந்ததை நாட்டிற்காகச் செய்திருக்கிறோம்.
நிம்மதியுடன் வாழத் தகுதியானவர்கள் என்றே எங்களை நாங்கள் முழுமையாக உணர்கிறோம்.
கரண் தாப்பர்: இன்னும் ஒருபடி மேலே செல்ல
விரும்புகிறேன்... இன்றைக்கு அந்தக் கும்பல் குர்கானில் முஸ்லீம்களை தொழுகை நடத்த
விடுவதில்லை. உத்தரப்பிரதேசத்து கிராமங்கள், சிறு நகரங்களில் காய்கறிகள் மற்றும்
வளையல்களை முஸ்லீம்கள் விற்பதை அந்தக் கும்பல் அனுமதிப்பதில்லை. குஜராத் நகரங்களில்
முஸ்லீம்கள் அசைவ உணவுக் கடைகளை நடத்துவதற்கு அந்தக் கும்பல் அனுமதிக்காது.
குஜராத்தில் உள்ள ‘தொந்தரவுக்குள்ளான பகுதிகள் சட்டம்’ ஹிந்துக்களுக்கானது என்று
கருதப்படும் பகுதிகளில் முஸ்லீம்கள் சொத்துக்களை வாங்குவதை அனுமதிக்காது. நீங்கள்
வாழ்ந்து வருகின்ற நாடு மிகக் கூர்மையாக துருவப்படுத்தப்படுவதை, ஹிந்துக்களுக்கும்
முஸ்லீம்களுக்கும் இடையிலான பிளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நீங்கள்
காண்கிறீர்களா?
நசிருதீன் ஷா: அது அதிகரிப்பதற்கு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதற்கு ஊக்கமளிக்கப்படுகிறது.
வெவ்வேறு விஷயங்களைப் போதிக்கின்ற இரண்டு வெவ்வேறு மதத்தினரிடையே உள்ள வெறுப்பு
இயல்பானது என்றால், சீக்கியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வெறுப்பும்
குரோதமும் அதிகமாக இருக்க வேண்டும் அல்லவா? சீக்கியர்களும், முஸ்லீம்களும் தேசப்
பிரிவினையின் போது எதிரிகளாக இருந்தவர்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டவர்கள்,
இருதரப்பிலும் சிந்திய ரத்தத்தைக் கண்டவர்கள். ஆனால் இன்றைக்கு தொழுகை நடத்த
விரும்பும் முஸ்லீம்களுக்காக சீக்கியர்கள் தங்களுடைய குருத்வாராக்களை திறந்து
வைத்திருக்கும் நேரத்தில் ஹிந்து அடிப்படைவாதிகள் கூட்டம் வந்து முஸ்லீம்களின் தொழுகையைச்
சீர்குலைக்க முயல்கிறது. சீக்கியர்கள் மட்டுமே இப்படியானதொரு நற்காரியத்தைச்
செய்யும் அளவிற்கு உன்னதமானவர்களாக இருக்கிறார்கள். இந்த வகையான நற்செயலை
முஸ்லீம்கள் பிரதிபலிப்பார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.
கரண் தாப்பர்: இந்திய முஸ்லீம்களைப் போன்றவராக நீங்கள்
இல்லை என்பது எனக்குத் தெரியும் என்றாலும் நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க
விரும்புகிறேன். அது இரண்டு ஆண்டுகளாக உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கேள்வி.
நரேந்திர மோடியின் இந்தியாவில் ஒரு முஸ்லீமாக இருப்பதை நீங்கள் எவ்வாறு
உணர்கிறீர்கள்?
நசிருதீன் ஷா: மிகவும் கோபமாக, வெறுப்பாக உணர்கிறேன். அன்புத் தலைவரை கேள்வி எதுவும்
கேட்காமல் வணங்கி வருபவர்கள் அவரைப் பற்றி நகைச்சுவையாகப் பேசுவதைப் பொறுத்துக்
கொள்ள மாட்டார்கள் என்பதால் அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன். நான்
பாதுகாப்பற்றவனாக உணரவில்லை. ஏனென்றால் இது எனது வீடு என்று எனக்கு நன்கு
தெரியும். என்னை யாரும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது. எனக்கான இடத்தைக் கொண்டிருப்பதற்குத் தேவையான வகையில்
எனது பணிகளை நான் செய்திருக்கிறேன். ஆனாலும் ஆளுங்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களிடமுள்ள
வெளிப்படையான உணர்வுரீதியான வெறுப்பே என்னை அதிகம் கோபப்படுத்துகிறது. அது என்னை
அதிகம் தொந்தரவு செய்கிறது. எதிர்காலத்தில் அது அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கப்
போகிறது என்பதை அறிந்தே இருக்கிறேன்.
கரண் தாப்பர்: இதை இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்:
நீங்கள் பாரபங்கியில் பிறந்தவர். அஜ்மீர் மற்றும் நைனிடாலில் படித்தவர்.
இந்தியாவின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறீர்கள். உங்கள் சகோதரர்
ராணுவத்தின் துணைத்தலைவர் பதவி வரை உயர்ந்தவர். ‘பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்’
என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்ற போது உங்கள் இருவருக்குள்ளும் என்ன
மாதிரியான உணர்வு எழுகிறது?
நசிருதீன் ஷா: அதைக் கேட்டு நாங்கள் சிரித்துக் கொள்வோம். ‘பாகிஸ்தானுக்குப் போ’ என்று
சொல்பவர்களைப் பார்த்து ‘கைலாசத்திற்கு போ’ என்று சொல்ல நினைக்கிறேன். உண்மையில் அது
மிகவும் அபத்தமானது… ‘உருது பாகிஸ்தானிய மொழி’ அல்லது அந்த வார்த்தை… தீபாவளி
விளம்பரத்தில் வந்த அந்த வார்த்தை என்ன… ‘ரிவாஸ்’ - ‘ரோஷ்னி கா ரிவாஸ்’ அல்லது
அதுபோன்று ஏதாவது… அவையெல்லாம் எவ்வளவு அபத்தமானவை? ஹிந்தி, உருது, மராத்தி,
குஜராத்தி மொழிகளில் எத்தனை பார்சி வார்த்தைகள் உள்ளன தெரியுமா? அரேபிய மொழி
வார்த்தைகள் எத்தனை உள்ளன என்று தெரியுமா? முஸ்லீம்களின் மொழி உருது என்று தவறாகக்
கருதப்படுகிறது. அது முஸ்லீம்களின் மொழி அல்ல, பஞ்சாப், மத்தியப் பிரதேசம்,
உத்தரப்பிரதேசத்தின் மொழி என்று பலமுறை ஜாவேத் அக்தர் கூறியிருக்கிறார்.
துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் உருதை முஸ்லீம் மொழி என்பதாக முத்திரை குத்தி
விட்டது.
‘இருபத்தைந்து வேதாள கதைகள்’
புத்தகத்தின் உருது பதிப்பை வாசித்துக் கொண்டிருக்கும் தில்லி மெட்ரோ பயணி
கரண் தாப்பர்: நரேந்திர மோடியின் இந்தியாவில்
வாழ்ந்து வருகின்ற முஸ்லீம் என்ற முறையில் கோபம், வெறுப்பை நீங்கள் உணர்கிறீர்களா?
நசிருதீன் ஷா: சரிதான்.
கரண் தாப்பர்: அவ்வாறு உணர்வது மகிழ்ச்சி தருகின்ற வழியாக யாருக்கும் இருக்கப்
போவதில்லை.
நசிருதீன் ஷா: இல்லை. அது அப்படி இருக்காது. நமது பிரதமர் நகைப்புக்குரிய அறிவியல்
அறிக்கைகளை வெளியிடுவதைப் பார்க்கும் போது, நிறைய நேரம் உண்மையை அவர்
மூடிமறைப்பதைப் பார்க்கும் போது, உண்மைகளை அவர் சிதைப்பதைப் பார்க்கும் போது, எதிரிகள்
மீது குற்றம் சாட்டுகின்ற போது அவர் என்ன செய்கிறார் என்பதைப் பார்க்கும் போது, இந்த
அளவிற்கு அரசியல் உரையாடல்கள் தரம் தாழ்ந்தவையாக ஒருபோதும் என் நினைவில் இருந்ததில்லை
என்றே தோன்றுகிறது.
கரண் தாப்பர்: உங்களிடம் நான் பேச விரும்புவது
முஸ்லீம்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மட்டும் அல்ல என்பதால் இந்த
கட்டத்தில் நமது விவாதத்தைச் சற்று விரிவுபடுத்திக் கொள்ளலாம். ஒட்டுமொத்த
இந்தியாவிலும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி உங்களிடம் பேச விரும்புகிறேன்.
உங்கள் மனைவி ஹிந்து. உங்கள் குழந்தைகள் நவீன, மதச்சார்பற்ற, முன்னோக்குப்
பார்வையுடன் வளர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா இந்த மாதிரியான நாடாக மாறியதை நீங்கள்
எவ்வாறு பார்க்கிறீர்கள்?
நசிருதீன் ஷா: அதைச் சொல்வது மிகவும் கடினம். அதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்
என்றாலும் நமது மத அடையாளங்களை முன்னிறுத்திச் செல்லாமல் இருப்பது முக்கியம்
என்பதை உறுதியாக அறிந்திருக்கிறேன். நான் மதம் முக்கியத்துவம் பெறாத நாள் என்று
ஒரு நாள் வரும் - நிச்சயமாக அது ஒரு கற்பனாவாத விருப்பமாக இருந்தாலும் - என்றே நம்புகிறேன்.
நாங்கள் திருமணம் செய்து கொள்ளவிருந்த போது, எங்கள்
குடும்பத்தில் இருந்த பெரியவர் ஒருவரைக் கலந்தாலோசித்தோம். அவர் அப்போது எங்களிடம்
‘அரசியல் பிரச்சனை எதுவும் இருக்காது. ஆனால் வீட்டில் ஹிந்து மதம் இருக்குமா
அல்லது முஸ்லீம் நெறிமுறை இருக்குமா, மது அனுமதிக்கப்படுமா, இறைச்சி சாப்பிடலாமா,
ஹோலி கொண்டாடப்படுமா… என்பது போன்ற சமூகப் பிரச்சனைகள் நிச்சயமாக இருக்கும்’ என்று
கூறினார்.
அரசியல் பிரச்சனை இருக்காது என்ற
அவரது கூற்று முற்றிலும் தவறாகிப் போனது. எந்தவொரு சமூகப் பிரச்சனையும் எங்களுக்கு
இருக்கவில்லை. எங்களுடைய நண்பர்கள் பலரும் மதங்களை மறுத்தே திருமணம் செய்து
கொண்டுள்ளனர். சொல்லப் போனால் என்னுடைய பிள்ளைகள் ஒரே மதத்தைச் சேர்ந்த ஒரு
தம்பதியை முதன்முதலாகச் சந்தித்த போது ஆச்சரியப்பட்டுப் போனார்கள். எங்கள்
நண்பர்களில் பலரும் ஹிந்து-முஸ்லீம், முஸ்லீம்-கிறிஸ்துவர், ஹிந்து-கிறிஸ்துவர்,
யூதர்-சீக்கியர் அல்லது அது போன்று திருமணம் செய்து கொண்டவர்களே. அவர்களை அவ்வாறு வைத்திருப்பதற்கான
நம்பிக்கையுடன் இருந்த நாடு. இது அப்படிப்பட்ட நாடாக இருந்தது என்று பிள்ளைகளிடம்
சொன்னோம். எனக்கும் அதுபோன்ற நாடாக இருந்தது என்றே சொல்லப்பட்டிருந்தது.
பாகிஸ்தானுக்கு செல்வதற்கு எனது
தந்தை மறுத்தார். அப்போது அவரது சகோதரர்கள், என் அம்மாவின் சகோதரர்கள் மற்றும்
எனது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் இங்கிருந்து வெளியேறினர் என்ற போதிலும் என்
தந்தை இங்கிருந்து செல்வதற்கு மறுத்து விட்டார். நமக்கு அங்கே எவ்வளவு எதிர்காலம்
இருக்குமோ அதே அளவு இங்கேயும் இருக்கும் என்று நன்கு உணர்ந்தவராக அவர் இருந்தார்.
இன்றைய இந்தியாவில் இப்போது நான் குழந்தையாக இருந்திருப்பேன் என்றால் என்ன
மாதிரியான எதிர்காலம் எனக்காகக் காத்திருக்கிறது என்று சொல்ல எனக்கு நிச்சயம்
தெரிந்திருக்காது.
கரண் தாப்பர்: இன்றைய இந்தியா உங்களை வெளியேற்றியிருக்கலாம். உண்மையில் அது
வெளியேற வேண்டுமென்று உங்களை விரும்பச் செய்திருக்கலாம்.
நசிருதீன் ஷா: அவ்வாறு செய்திருக்கலாம் என்றாலும் அவ்வாறு செய்து விடக்கூடாது என்பதில் உறுதியாக
இருக்கிறேன். ‘ஓடி ஒளிந்து கொள்’ என்பது என் வழி அல்ல. நான் அதைச் செய்யப்
போவதில்லை. எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் அதுபற்றி எனக்கு கவலையில்லை. இங்கே
எவ்வளவு அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அது பற்றி எனக்குக் கவலையில்லை. இங்கிருந்து
கொண்டே நான் அதைச் சமாளிப்பேன். அதுபோன்று இருக்குமாறு என் குழந்தைகளுக்கும்
கற்பிப்பேன்.
கரண் தாப்பர்: நசீர்! அனைவரும் சேர்ந்து ஈத், கிறிஸ்துமஸை ஒன்றாகக்
கொண்டாடிய அறுபது, எழுபதுகளில் வளர்ந்தவர்கள் நீங்களும் நானும் என்பது உங்களுக்குத்
தெரிந்திருக்கும். மூன்று நாட்களுக்கு முன்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ்
கொண்டாடப்பட்டது. ஆனால் அசாமில் கிறிஸ்தவ கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஹிந்துக்கள்
மீது பஜரங் தளம் வன்முறையில் ஈடுபட்டது. குர்கான் மற்றும் பட்டோடியில் பள்ளிக்குள்
அத்துமீறி நுழைந்தவர்களால் பள்ளியில் சிறுவர்களுக்காக நடந்து கொண்டிருந்த அபிநய
நாடக நிகழ்ச்சி சீர்குலைந்தது. அம்பாலாவில் தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன.
கர்நாடகாவில் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன. ஹிந்துக்கள்
சகிப்புத்தன்மையற்றவர்களாக மாறி வருகிறார்களா என்ற கேல்விக்கு இல்லை என்று பதில் இங்கே
இருக்குமானால் இதுபோன்ற சகிப்பின்மை எங்கே இருந்து வருகிறது?
நசிருதீன் ஷா: நான் சொன்னதைப் போல இது முற்றிலும் உருவாக்கப்பட்ட வெறுப்பு. அடுத்தவர்
கொண்டுள்ள நம்பிக்கைகளை சகித்துக் கொள்ளாத தன்மை. மத நம்பிக்கை என்பது மிகவும்
ஆபத்தான விஷயம். அது உங்களைத் தீவிர வன்முறைக்கு இட்டுச் செல்லக் கூடியது.
தேவாலயங்கள், மசூதிகள் சேதப்படுத்தப்படுவதைப் போல யாராவது ஒருவர் கோவிலைச்
சேதப்படுத்த முயன்றால் என்ன நடக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். அவ்வாறு
சேதப்படுத்துபவர் மீது நடவடிக்கை எடுப்பதில் நீதி ஒருபோதும் தாமதிக்காது. ஆனால்
மற்ற வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்துபவர்களுக்கு அதுபோன்று எதுவும் நடக்காது.
‘உங்கள் கடவுளை விட என்னுடைய கடவுள் பெரியவர்’, ‘நீங்கள் நம்புவதை வணங்குவதற்கான
உரிமை உங்களுக்குக் கிடையாது’ என்று சொல்வது உண்மையில் மிகவும் அபத்தமானது. நிலைமை
அபத்தமான நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது.
கரண் தாப்பர்: அன்னை தெரசாவின் மிஷனரி ஆஃப் சேரிட்டிக்கு வெளிநாட்டில்
இருந்து நிதி பெற அனுமதி இல்லை என்று சொல்லப்பட்டதை நேற்று பார்த்தோம். அது
கிறிஸ்துமஸ் தினத்தன்று அறிவிக்கப்பட்டது. அதை தற்செயல் நிகழ்வு என்று
நினைக்கிறீர்களா? தேதி, நேரம் போன்றவை திட்டமிட்டு தந்திரமாக நிகழ்த்தப்பட்டது
என்று நினைக்கிறீர்களா? கிறிஸ்தவர்களுக்கான
மோசமான செய்தியை கொண்டு சென்று சேர்ப்பதற்கான மற்றொரு வழியாகவே அது இருந்தது.
வாக்குச்சாவடி ஒன்றில் வரிசையில்
நின்று கொண்டிருக்கிற
மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியைச்
சார்ந்த கன்னியாஸ்திரிகள்
நசிருதீன் ஷா: அது நிச்சயமாக வேண்டுமென்றே செய்யப்பட்டதுதான். வேண்டுமென்றே
செய்யப்படாமல் உள்ளதாக நிச்சயம் இருக்க முடியாது. கிரீன்பீஸ், அம்னெஸ்டி இந்தியா
அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற
நிதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சமூகத்தின் நலனுக்காக உழைக்கின்ற பலருக்கும்
எல்லா வகையிலும் தடை ஏற்படுத்தப்படுகிறது. அது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள
முடியவில்லை. முற்போக்காகத் தெரியும் அனைத்தும் அரசுக்கு எதிரானவையாகவே
தோன்றுகின்றன. அமைதியான தேவாலய பிரார்த்தனையைச் சீர்குலைக்கும் வன்முறைக் கும்பல் அங்கேயே
அமர்ந்து பஜனை பாடத் தொடங்குகிறது என்ற இன்றைய உண்மை நினைத்துப் பார்க்கவே
முடியாததாக உள்ளது. இதற்கு முன்பாக இதுபோன்று ஒருபோதும் நடந்ததே இல்லை. இந்தச்
செயல்கள் வெளிப்படையாக மேலிருந்து ஒப்புதலைப் பெற்றே நடைபெறுகின்றன.
கரண் தாப்பர்: பெரும்பாலும் இதுபோன்ற செயல்கள் நிறுத்தப்படும் அல்லது
கண்டிக்கப்படும். செயலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் இப்போது
அப்படி எதுவுமே நடக்கவில்லை.
நசிருதீன் ஷா: அப்படி எதுவும் நடக்கவில்லை, நடப்பதற்கான வாய்ப்பில்லை. அது இன்னும் மோசமாகக்
கூடிய வாய்ப்பே இருந்து வருகிறது.
கரண் தாப்பர்:
யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிலே நமது நாடு மாறிக் கொண்டிருப்பது
மதத்தின் அடிப்படையில் மட்டுமல்ல. விமர்சகர்கள் மற்றும் கருத்து வேறுபாடு
கொண்டவர்களுக்கு இப்போது என்ன நேர்கிறது என்பதைப் பாருங்கள். அவர்கள் மீது
தேசத்துரோகக் குற்றம் சாட்டப்படுகிறது. பாராளுமன்றத்தைப் பாருங்கள். அது
செயல்படாதது மட்டுமல்ல, பொருத்தமற்றதாகவும் ஆகிவிட்டது. ஊடகங்களைப் பாருங்கள் --
பெரும்பாலானவை உறுமுகின்ற காவல் நாய்களாக இருப்பதைக் காட்டிலும் அரசின் மடியில் கிடக்கின்ற நாய்களாக இருக்கவே
விரும்புகின்றன. நீதித்துறையும் கூட அரசாங்கத்தை சங்கடப்படுத்தக்கூடிய வழக்குகளை
வேண்டுமென்றே, தெரிந்தே ஒத்தி வைக்கிறது. நம்முடைய இளமைக் காலத்தில் நம்மை மிகவும்
பெருமைப்படுத்திய ஜனநாயகத்தின் மீது இந்தியாவிற்கு இருந்த உறுதி, அரசியலமைப்பு
விழுமியங்களுக்கான நமது அர்ப்பணிப்பு போன்றவையெல்லாம் தோல்வியடையும் நிலையில்
இருக்கின்றனவா?
நசிருதீன் ஷா: நிச்சயமாக அது சில பிரிவுகளில் அவ்வாறுதான்
இருக்கின்றது. நீதித்துறை மிகப்பெரிய அழுத்தங்களின் கீழ் செயல்பட்டு வருவதால் அவை
குறித்து அவ்வாறு தீர்மானிப்பது மிகவும் அவசரப்படுவதாக இருக்கும் என்றே
நினைக்கிறேன். இப்போதெல்லாம் உச்சநீதிமன்றம் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு வருவது
மிகவும் நம்பிக்கைக்குரிய அறிகுறியாக இருக்கிறது.
அழிவும், இருளும் நம்மைச் சூழ்ந்துள்ள
போதிலும் நம்பிக்கைக்குரிய அறிகுறிகளும் இருப்பதாகவே நான் கூறுவேன்.
ஜனநாயகத்திலிருந்து நாம் விலகிச் செல்கிறோம் என்று சொல்வது முன்கூட்டியதாகவே
இருக்கலாம். சில சமயங்களில் நாம் ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984இல் வாழ்கிறோம் என்று தோன்றுகிறது.
செய்தித்தாளைத் திறக்கும் போதெல்லாம் கள்ளச் சிரிப்புடன் அந்த ‘பிக் பிரதர்’
உங்களை வரவேற்பார். அங்கே ‘இரண்டு நிமிட வெறுப்பு’ அன்றாடம் கொண்டாடப்படுகிறது.
ஃபேஸ்புக் மற்றும் அனைத்து சமூக ஊடக விஷயங்களிலும் அது நடந்து கொண்டிருக்கிறது.
உண்மையாகச் சொல்வதென்றால் அது இரண்டு நிமிட வெறுப்பு அல்ல - இருபத்திநான்கு மணிநேர
வெறுப்பு. அங்கே ‘பிக் பிரதரை நான் நேசிக்கிறேன்’ என்ற கீதம் தொடர்ந்து இசைக்கப்படுகிறது.
குடிமக்கள் அனைவருக்கும் ‘நான் பிக் பிரதரை நேசிக்கிறேன்’ என்று சொல்ல வேண்டிய
கட்டாயம் ஏற்படுத்தப்படுகிறது. அது போல சில சமயங்களில் உணர்கிறேன் என்றாலும் அதைச்
சொல்வது மிகவும் முன்கூட்டியதாகவும் தெரிகிறது. ஜனநாயகம் என்பது இந்தியாவைப்
பொறுத்தவரை சமீபத்திய நிகழ்வாகவே இருக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா
அரசமுறை கொண்டதாக இருந்தது. அதற்கு முன்பு மொகலாயர் காலத்திற்குப் பிறகு
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்ட மகாராஜாக்களின் கூட்டமாக இருந்தது. இந்த
நாட்டில் ஜனநாயகம் தன்னுடைய வெற்றியைக் கண்டடைந்திருக்கிறது என்றும் நடந்து
செல்கின்ற எந்தவொரு நபரும் தவறாக எடுத்து வைக்கின்ற காலடிகளில் அதுவும் ஒன்றாக
இருக்கிறது என்றும் நான் நினைக்கிறேன்
கரண் தாப்பர்:
முற்றிலும் சரி. அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய உரையில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்
ஜனநாயகத்தை மிகவும் மாறுபட்ட பரப்பில் இருக்கும் மேல் மண் என்பதாகக்
குறிப்பிட்டார். நான் முடிப்பதற்கு முன்பாக நீங்கள் பிக் பிரதர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
ஒரு கணம் அதைப் பற்றி பேச விரும்புகிறேன். இப்போது வெளிப்படுகின்ற ஆளுமை
வழிபாட்டில் ஓர் ஒளிவட்டம் உள்ளது. பிரதமரைக் கண்டு அவரது சொந்தக் கட்சியே
பயப்படுகிறது. அவரை விமர்சித்தால் உங்கள் மீது ட்ரோல்களின் பட்டாளமே வந்து
இறங்குகிறது. தன்னை மூன்றாவது நபராக மட்டுமே அவர் குறிப்பிட்டுக் கொள்வதை நான்
கவனித்திருக்கிறேன்.
நசிருதீன் ஷா: ஆமாம். அது முரணாக இருக்கிறது.
உங்களுடைய வார்த்தைகள் மீதே மிகப் பெரிய மதிப்பீட்டைக் கொண்டிருப்பது, முகஸ்துதியால்
எளிதில் பாதிக்கப்படுவது, தவறாக பல விஷயங்களையும் பேசுவது, தனக்குக் கல்வி இல்லை
என்று வெளிப்படையாகப் பெருமை பேசுவது - பிரதமர் ஆவதற்கு முன்பு அவர் இதைச்
செய்திருந்தார். அது வீடியோவில் உள்ளது. அவர் அதில் ‘நான் எதுவும் படிக்கவில்லை’
என்று கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் அது அவைவரையும் வசீகரமான பேச்சாகக்
கருதப்பட்டது. ஆனால் அவர் சொன்ன, செய்திருக்கும் விஷயங்களைக் கொண்டு பார்க்கும்
போது இப்போது அது நம்மையெல்லாம் அச்சுறுத்துவதாக இருக்கிறது. எல்லா இடங்களிலும்
தானே மையமாக இருக்க வேண்டும் என்ற அவரது ஆசை, 'M' என்ற எழுத்தில் தொடங்கும்
மற்றொரு வார்த்தைக்கு மிக அருகே உள்ளது. அதை நான் சொல்லமாட்டேன். ஆனாலும் அவர் ஒரு
ராஜாவாக, கடவுள் போன்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்படுகிறார். நம்மில் எவருக்குமே அது நல்ல
விஷயமாக இருக்க முடியாது.
கரண் தாப்பர்:
இந்த நேர்காணலை இன்னும் ஒரே ஒரு கேள்வியுடன் முடிக்கிறேன்: இந்தியா எப்படியெல்லாம்
மாறி வருகிறது என்பது பற்றி சிந்திக்கும்
போது, உங்களிடம் தோன்றுகின்ற உணர்வுகளை நீங்கள்
எவ்வாறு விவரிப்பீர்கள்? வருத்தப்படுகிறீர்களா? ஏமாற்றமடைந்து,
மனச்சோர்வடைந்திருக்கிறீர்களா அல்லது விரக்தி உணர்வைப் பெறும் அளவிற்குச் சென்றிருக்கிறீர்களா?
நசிருதீன் ஷா: விரக்தி உணர்வை நான் நிராகரிக்கின்றேன். ஏனென்றால் அது எதற்கும் வழிவகுத்துத் தரப் போவதில்லை. சோகமாக, கோபமாக உணர்கிறேன்; இவை தானாகச் சரியாகி விடும் என்று நம்புகின்ற அளவிற்கு நம்பிக்கையுடையவன் நான் இல்லை என்றாலும் ‘அகாதிஸ்ட்’ என்று அழைக்கப்படுகின்ற வகையில் இருப்பவனாக - காலம் வட்டங்களில் நகர்வதாக இருப்பதால், விஷயங்கள் சரியாக இல்லை என்றாலும் இறுதியாக பழைய நிலைக்குத் திரும்பி விடும் என்று நம்புகின்றவனாக இருக்கிறேன். எந்தவொரு கொடுங்கோலரும் இறுதியில் கவலைப்படும் நிலைக்கே வந்து சேர்ந்திருக்கின்றனர். அந்தச் சுழற்சி இந்தியாவிலும் விரைவிலேயே முழுவதுமாக வரும். அதைப் பார்க்க நான் இல்லாமல் போயிருக்கலாம். தாலி கட்டுவது போன்ற மூடநம்பிக்கைகளை நம்புகின்ற தலைவர்களுடன் நாம் இன்னும் சில வருடங்கள் சேர்ந்து வாழ வேண்டியிருக்கலாம். ஆனாலும் ராட்டினம் முழுவதுமாகச் சுழன்று பழைய நிலைக்கு வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
கரண் தாப்பர்:
ஒருவேளை அது ஆறுதல்படுத்திக் கொள்ளும் வகையில் இருக்கலாம். பேச்சுவழக்கில் சொல்வது போல்
‘இதுவும் கடந்து போகலாம்’. ஆனால் இருக்கின்ற ஒரே பிரச்சனை என்னவென்றால், இப்போதைய
நிலைமை எவ்வளவு காலம் நீடிக்கும், எப்போது
முடியும் என்று நமக்குத் தெரியாது.
நசிருதீன் ஷா, இந்த நேர்காணலுக்கு மிக்க நன்றி. கவனமாக இருங்கள்.
பாதுகாப்பாக இருங்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.
நசிருதீன் ஷா: புத்தாண்டு வாழ்த்துகள், கரண்.
வாழ்த்துகள்.
https://thewire.in/communalism/full-text-naseeruddin-shah-karan-thapar-interview
Comments