இந்தியாவில் தடுப்பூசிகளால் ஏற்படுகின்ற பாதகமான நிகழ்வுகள் குறித்த தகவல் சேகரிப்பு முறையில் நிலவுகின்ற அவலத்தை கோவிட்-19 தடுப்பூசிகள் வெளிப்படுத்திக் காட்டியுள்ளன
பிரியங்கா புல்லா
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்
கோவிட்-19
தடுப்பூசி செயல்முறை குறித்து மிகவும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்ட பகுதிகளில்
பாதகமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. ஆனாலும் அதனை எதிர்கொள்வதற்குத் தயாராக
இல்லாத அதே நேரத்தில் மதிப்புமிக்க தகவல்களை மறைத்திருக்கின்ற இந்திய அமைப்புமுறை பாதிக்கப்பட்ட
குடும்பங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அத்துடன் தடுப்பூசி குறித்த
தயக்கத்தையும் அது சமூகங்களுக்குள் விதைத்திருக்கிறது
என்று பிரியங்கா புல்லா தெரிவிக்கிறார்.
அஸ்ட்ராஜெனிகாவின்
கோவிட்-19 தடுப்பூசியின் இந்தியப் பதிப்பான கோவிஷீல்டின் முதல் டோஸை இருபது வயது
ரிஜுதா பெற்றுக் கொண்டார். தடுப்பூசி
பெற்றுக் கொண்ட ஒரு வாரத்திற்குப் பிறகு தாங்கவே முடியாத தலைவலி அவருக்கு ஏற்பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள மிகப் பெரிய கார்ப்பரேட்
மருத்துவமனையில் அவர் 2021 ஜூன் 2 அன்று அனுமதிக்கப்பட்டார். ‘அவரிடம் மேற்கொள்ளப்பட்ட
இமேஜிங் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் அவரது மூளையில் ரத்த உறைவு இருப்பதை
வெளிப்படுத்திக் காட்டின. அதே நேரத்தில் அவரது பிளேட்லெட் எண்ணிக்கை வேகமாகக்
குறைந்து கொண்டே வந்தது’ என்று அவரது நண்பர் அஜய் கூறுகிறார்.
கவலையடைந்த
அவரது குடும்பத்தினர் மற்றுமொரு மருத்துவரிடம் ஆலோசனை பெறும் வகையில் புகழ்பெற்ற நரம்பியல் அறுவை
சிகிச்சை நிபுணரை அணுகினர். ரிஜுதாவிடம் இருந்த த்ரோம்போசிஸின் அறிகுறிகள், ஒரு லட்சம் தடுப்பூசிகளுக்கு 0.5 முதல் 6.8
என்ற அளவில் ஏற்படக் கூடிய மிகவும் அரிதான த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (TTS)
உடன் ஒத்துப்போகின்ற வகையில் இருப்பதாக அந்த
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ரிஜுதாவின் குடும்பத்தாரிடம் தெரிவித்ததாக பிரிட்டிஷ்
மெடிக்கல் ஜர்னலிடம் அஜய் கூறினார். அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் ரிஜுதாவின்
நோய் தடுப்பூசியுடன் தொடர்புடையதாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி ரிஜுதாவின்
குடும்பத்தினர் கேள்விகளை எழுப்பினர். ஆனால் அந்த மருத்துவர்கள் அதுபோன்றதொரு
யோசனையை முற்றிலுமாக நிராகரித்தனர். கலைப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பயின்று வந்த
ரிஜுதா ஜூன் 20 அன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
அஸ்ட்ராஜெனிகா
தடுப்பூசியால் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் ஏற்படக் கூடும் என்பதற்கான வலுவான
சான்றுகள் இருந்த போதிலும், இந்திய கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு
அமைப்பிடம் ரிஜுதாவிற்கு நேர்ந்தது குறித்து போபால் மருத்துவமனை தெரிவிக்கவில்லை. ரிஜுதாவின்
குடும்பத்தாரலும் அதைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது என்பது தெரியாததால் அதைச்
செய்ய முடியவில்லை என்று அஜய் கூறுகிறார்.
ரிஜுதாவிற்கு
நேர்ந்தது இந்திய கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பு முறையைப் பாதிக்கின்ற பல தடைகளில்
இரண்டை மட்டுமே எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. மருத்துவமனைகள் நோய்த்தடுப்பு
நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்படுகின்ற பாதகமான நிகழ்வுகள் (AEFI) குறித்து புகாரளிப்பதற்குத்
தவறி வருகின்றன. அதே நேரத்தில் அதை எவ்வாறு எங்கே தெரிவிப்பது என்பது பற்றி நோயாளிகள்
மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தெரிந்திருக்கவில்லை. பாதகமான நிகழ்வுகள்
உண்மையில் தடுப்பூசிகளால் நிகழ்ந்திருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்காக
அதிகாரிகள் செய்யும் ஆய்வுகளில் உள்ள சுணக்கம் மற்றும் தங்களுடைய கண்டுபிடிப்புகளை
நோயாளிகளுக்குத் தெரிவிக்காதது போன்ற சிக்கல்களால் அந்த பாதுகாப்பு அமைப்புமே நிர்ப்பந்தத்திற்கு
உள்ளாகியுள்ளது.
இந்தியாவில்
தடுப்பூசி பாதுகாப்பு குறித்து முழுமையான தகவல்களைச் சேகரிப்பது இல்லாதுள்ளது
என்பதை மட்டுமல்லாது, நோய்த்தடுப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்படுகின்ற பாதகமான நிகழ்வுகளால்
தீவிரமாகப் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக மரணம் அல்லது நீண்டகாலமாக மருத்துவமனையில்
சேர்க்கப்படுவது என்று பாதிக்கப்படுகின்ற குடும்பங்களுக்கு மத்தியில்
குழப்பத்தையும் இந்த நிலைமை ஏற்படுத்தியுள்ளது.
ககன்தீப்
காங்
இந்தியாவின்
முதல் ரோட்டா வைரஸ் தடுப்பூசியை உருவாக்க உதவிய வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்
கல்லூரியின் பொது சுகாதார நுண்ணுயிரியலாளர் ககன்தீப் காங் ‘இத்தகைய சூழ்நிலை பொதுமக்களிடம்
தடுப்பூசி தயக்கத்தையே தூண்டி விடும்’ என்கிறார். மேலும் அவர் ‘தங்களுடைய
குழந்தையை தாங்கள் இழந்ததற்கான காரணத்தைக் குடும்பங்களிடம் தெரிவிக்காமல் இருப்பது
மிகவும் மோசமான செயல்’ என்கிறார்.
பல வகையிலான சவால்கள்
தற்போது
இருந்து வருகின்ற குழந்தைகளுக்கான தடுப்பூசித் திட்டத்தை பெரியவர்களுக்கு
மாற்றியமைப்பதில் உள்ள சிரமம் இந்தியாவில் கோவிட் தடுப்பூசி பாதுகாப்பு அமைப்பு
எதிர்கொண்ட தடைகளில் ஒன்றாகும். இந்திய அரசின் தடுப்பூசித் திட்டம் 2021 ஜனவரிக்கு
முன்பாக குழந்தைகளை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்தது. இந்திய நாடு தன்னுடைய சுகாதாரப்
பணியாளர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கிய அந்த மாதத்தில் குழந்தைகளுக்கான
தடுப்பூசிகள் செலுத்தியதற்குப் பிந்தைய பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு வயது
வந்தோருக்கான தடுப்பூசி இயக்கங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டிருக்க
வேண்டும்.
அந்த
கண்காணிப்பு அமைப்பு மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது. மருத்துவமனையோ அல்லது
சுகாதாரசேவை வழங்குநரோ தானாக முன்வந்து
நோய்த்தடுப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்படுகின்ற தீவிரமான பாதகமான நிகழ்வுகளை
(AEFI) பற்றி தகவல் அளித்தவுடன், மாவட்டக் குழு அது குறித்த அனைத்து தொடர்புடைய
தரவுகளையும் சேகரித்து அவற்றை மாநிலக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறது.
நோய்த்தடுப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்படுகின்ற பாதகமான நிகழ்வு
தடுப்பூசியுடன் தொடர்புடையதாக இருக்கிறதா என்பதை மாநிலக் குழு ஆராய்ந்து, அதைச்
சரிபார்த்துக் கொள்வதற்காக அந்த தரவை தேசியக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறது.
சரிபார்ப்புக்குப் பிறகு அந்தத் தரவுகள் நோய்த்தடுப்பு மருந்துகள் மற்றும்
தடுப்பூசிகளைப் பெற்றவர்களிடமே திரும்பச் செல்ல வேண்டும் என்று கருதப்படுகிறது. இத்தகைய
பின்னூட்ட வளையம் நோய்த்தடுப்பாளர்கள் இழைக்கக்கூடிய பிழைகளைத் தவிர்க்கவும்,
நோய்த்தடுப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து
ஏற்படுகின்ற பாதகமான நிகழ்வுகளைச் சிறப்பாகக் கையாளவும் மிகவும் முக்கியமானதாக
இருந்து உதவுகிறது. அதே நேரத்தில் பாதகமான நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்
தீர்வையும் கொண்டு வருவதாகவும் இருக்கிறது.
தொற்றுநோய்க்கு
முன்பாக இதுபோன்ற மாநில மற்றும் தேசிய அளவிலான குழுக்களில் இடம் பெற்றிருந்த
பெரும்பாலான நிபுணர்கள் குழந்தை மருத்துவர்களாகவே இருந்தனர். ஆனால் கோவிட்-19
தடுப்பூசிகள் உருவாக்கப்பட்ட பிறகு அந்தக் குழுக்களில் இருதயநோய் நிபுணர்கள், நரம்பியல்
நிபுணர்கள் போன்று வயதுவந்தவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை அவசர
அவசரமாக நியமித்து, காரணம் குறித்த மதிப்பீடுகள் செய்வது பற்றி அவர்களுக்குப் பயிற்சி
அளிக்க வேண்டியிருந்தது.
ஆனாலும்
தடுப்பூசி குறித்து ஏற்படுகின்ற பாதகமான நிகழ்வுகளைப் பற்றி தகவல் தெரிவிக்க
வயதுவந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்ற மருத்துவர்கள் பயன்படுத்தப்படவில்லை.
‘அவர்களில் பலரும் நோய்த்தடுப்பு நடவடிக்கையைத்
தொடர்ந்து ஏற்படுகின்ற பாதகமான நிகழ்வுகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவே
மாட்டார்கள். அவற்றைப் பற்றி எங்கே புகாரளிப்பது என்று அவர்களுக்குத் தெரியாமலும்
இருக்கலாம்’ என்று இந்திய சுகாதார அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு திட்டங்களுக்கு
ஆலோசனை அளித்து வருகின்ற புதுதில்லி நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆதரவு பிரிவில் முன்னர்
பணிபுரிந்து வந்த ஜோதி ஜோஷி ஜெயின் கூறுகிறார்.
அறிக்கையளிப்பது
குறித்து மருத்துவமனைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு மத்திய
அரசு கடிதம் அனுப்பியிருந்தது. ஆனாலும் இந்தியாவில் மிகப் பெரிய அளவிலே இருக்கின்ற
தனியார் சுகாதாரத் துறையிலிருந்து ஒப்பீட்டளவில் மிகமிகக் குறைவான அறிக்கைகளே
வருகின்றன என்று தடுப்பூசியைத் தொடர்ந்து ஏற்படுகின்ற பாதகமான நிகழ்வுகள் குறித்து
விசாரித்து வருகின்ற தேசியக் குழுவை வழிநடத்தி வருகின்ற சதீந்தர் அனேஜா
கூறுகிறார். நோய்வாய்ப்படுகின்ற இந்தியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்
சிகிச்சைக்காக தனியார் துறையையே அணுகுவதால் இத்தகைய தரவு இடைவெளி
குறிப்பிடத்தக்கதாகவே உள்ளது.
அதற்கும்
மேலாக - தொற்றுநோய் மற்றும் நோய்த்தடுப்பு திட்டமே பாதுகாப்பு அமைப்பிற்கான தேவையை
அதிகரிக்கவும் செய்துள்ளது. எடுத்துக்காட்டாக
தேசியக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் குழந்தைப் பருவ நோய்த்தடுப்பில் உருவாகின்ற
பாதகமான நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து மதிப்பீடு செய்வது மட்டுமல்லாமல், கோவிட்
கொள்கை தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நோய்த்தடுப்பு அலுவலர்களும்
அதிக தடுப்பூசி இலக்குகளை அடைய வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட வேண்டிய அதே
நேரத்தில் பாதகமான நிகழ்வுகள் பற்றி தகவல் அளிக்க மருத்துவமனைகளை வலியுறுத்துவது,
அவற்றை விசாரிப்பதற்குத் தேவையான மருத்துவ பதிவுகளைச் சேகரிப்பது போன்ற பணிகளிலும்
ஈடுபட வேண்டியுள்ளது.
இதுபோன்ற
நடவடிக்கைகளால் இறுதியில் மிகக் குறைந்த அளவிலான அறிக்கைகள், மருத்துவப் பதிவுகளைச்
சேகரிப்பதில் உள்ள தாமதம், மிகவும் தாமதமான காரணம் குறித்த மதிப்பீடுகள் போன்றவையே
நிகழ்கின்றன. நாடாளுமன்ற மக்களவையில் இந்தியாவின் சுகாதார அமைச்சகம் தாக்கல் செய்த
பதிலில் 2021 நவம்பர் 30 நிலவரப்படி தேசியக் குழு 49,819 பாதகமான நிகழ்வுகள்
குறித்த அறிக்கைகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தது. இந்தியா அதற்குள்ளாக 123 கோடி
தடுப்பூசி டோஸ்களை வழங்கியிருந்தது. அதாவது இந்திய சுகாதாரசேவை வழங்குநர்கள் ஒவ்வொரு
ஒரு லட்சம் தடுப்பூசி டோஸுக்கும் நான்கு பாதகமான நிகழ்வுகளை மட்டுமே இருப்பதாக
அறிவித்துள்ளனர். அதற்கு நேர்மாறாக கனடா பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு 2021
டிசம்பர் 3 வரை ஒரு லட்சம் தடுப்பூசி டோஸ்களுக்கு நாற்பத்தியெட்டு பாதகமான
நிகழ்வுகள் குறித்த அறிக்கைகளைப் பெற்றிருக்கிறது. அதே சமயம் ஐக்கியப் பேரரசு
2021 டிசம்பர் 16 வரை ஒரு லட்சம் தடுப்பூசி டோஸ்களுக்கு 300
முதல் 700 வரை பாதகமான நிகழ்வுகள் குறித்த அறிக்கைகளைப் பெற்றுள்ளது.
இதேபோன்று
த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (TTS) குறித்த அறிக்கைகளும் இந்தியாவில் மிகக் குறைவாகவே
உள்ளன. இதுவரையிலும் இருபத்தியாறு அறிக்கைகள் மட்டுமே தேசியக் குழுவிற்கு
கிடைத்துள்ளன. இவ்வாறு பெறப்படுகின்ற குறைவான அறிக்கைகளும் தேசியக் குழுவால் மிகவும்
மெதுவாகவே விசாரிக்கப்படுகின்றன. அந்தக் குழு 2021 நவம்பர் வரை பதிவாகியுள்ள 946
இறப்புகளில் எண்பத்தியொன்பது இறப்புகளுக்கு மட்டுமே விசாரணையை முடித்துள்ளது.
மேலும் 2021 டிசம்பர் நடுப்பகுதியில் இந்தக் கட்டுரை எழுதுகின்ற நேரம் வரையிலும் அந்தக்
குழுவால் இருபத்தியாறு த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் தொடர்பான வழக்குகளில்
வெறுமனே ஆறு நிகழ்வுகள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளன. அதில் ஐந்து நிகழ்வுகளுக்கு
கோவிஷீல்டு தடுப்பூசி காரணமாக இருந்துள்ளது.
மருத்துவப்
பதிவுகள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை அனுப்புவதற்கு மாநிலங்கள் அதிக கால
அவகாசம் எடுத்துக் கொள்வதாலேயே விசாரணையின் வேகம் தடைபடுவதாக அனேஜா கூறுகிறார். தடுப்பூசி
எனும் காரணத்துடன் தொடர்பு கொண்டவையாக
இருக்கின்ற பாதகமான நிகழ்வுகளை தற்செயலாக நிகழ்கின்ற பாதகமான நிகழ்வுகளிலிருந்து
வேறுபடுத்துவதற்கு அதிநவீன மருத்துவ ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இப்போதுள்ள
தொற்றுநோய்க் குழப்பத்தில் மருத்துவமனைகளால் அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
‘பாதுகாப்பு அமைப்பு சுகாதார அமைப்பையே சார்ந்திருக்கின்றது. ஆனால் கடந்த இரண்டு
ஆண்டுகளாகவே சுகாதார அமைப்பு அதிகச் சுமையுடனே இருந்து வருகிறது’ என்று அவர்
கூறினார்.
அமைப்பைச் சரிசெய்தல்
இந்திய
கோவிட் தடுப்பூசி பாதுகாப்பு அமைப்பில் உள்ள பல சிக்கல்கள் இந்தியாவின்
குழந்தைகளுக்கான தடுப்பூசி பாதுகாப்பு அமைப்பால் உருவானவையாகவே இருக்கின்றன. இந்த
அமைப்பு வேகமாக வளர்ந்திருப்பதை ஜெயின் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்களுடைய 2017ஆம்
ஆண்டு ஆய்வறிக்கையில் விவரித்திருந்த போதிலும் குறிப்பிடத்தக்க அளவிலே இன்னும் குறைவான
அறிக்கையே இருந்து வருகிறது. ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கும் குறைந்தபட்சம் பத்து பாதகமான நிகழ்வுகள் என்பதாக
இருந்து வருகின்ற உலகளாவிய அளவுகோலுக்கு எதிராக இந்தியா இப்போது 4.2 பாதகமான
நிகழ்வுகளை மட்டுமே அறிக்கை செய்து வருகிறது.
இந்த
அமைப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்ற கேள்விக்கு, நோயாளிகள் மற்றும் அவர்களது
குடும்பத்தினரே சுய-அறிக்கையை அளிக்கின்ற வகையிலே நடைமுறையை எளிதாக்கித் தருவதுதான்
இப்போது அவசரத் தேவையாக இருக்கிறது என்கிறார் தன்னுடைய பெயரை வெளிப்படுத்திக்
கொள்ள விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர். மருந்து மற்றும் தடுப்பூசி ஏற்படுத்துகின்ற
பாதகமான எதிர்விளைவுகளைப் பற்றி நோயாளிகள் தகவலளிக்க இந்திய பார்மகோபோயியா கமிஷன்
எனப்படுகின்ற அரசு அமைப்பு அனுமதிக்கின்றது என்றாலும் அந்தச் சேவை குறித்து
இருக்கின்ற மோசமான விழிப்புணர்வு அதிக அளவில் பாதகமான நிகழ்வுகள் குறித்த
அறிக்கைகள் உருவாக அனுமதிக்கவில்லை. அந்த அதிகாரி 2021 டிசம்பர் நடுப்பகுதியில் இருந்த
49819 அறிக்கைகளில் சுமார் 225 அறிக்கைகளை மட்டுமே கமிஷன் பெற்றிருப்பதாக பிரிட்டிஷ்
மெடிக்கல் ஜர்னலிடம் தெரிவித்தார்.
மற்றுமொரு
முக்கியமான தலையீடாக த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் மற்றும் மல்டிசிஸ்டம்
இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் போன்ற அரிய நிகழ்வுகளை அடையாளம் காண்பதற்கான தீவிர கண்காணிப்பு
திட்டம் இருக்கலாம். பாதகமான நிகழ்வு பற்றி தகவல் அளிப்பது பற்றி மருத்துவர்கள்
தேர்வு செய்து கொள்ளலாம் என்று தற்போதுள்ள செயலற்ற அமைப்புடன் ஒப்பிடுகையில், அந்த
தீவிர கண்காணிப்பு திட்டம் சுகாதார சேவை வழங்குநர்களிடமிருந்து அத்தகைய தகவலைக் கோரிப்
பெறலாம். தீவிர கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவதற்கான திட்டங்கள் 2020ஆம் ஆண்டு
முதலாகவே இந்திய அரசாங்கத்திடம் இருந்து வருகின்றன. ஆனாலும் அதற்கான வளங்களின்
தேவை மிகவும் அதிகமாக இருப்பதால், அந்த முயற்சி தாமதமாகிறது என்று கூறுகிற அனேஜா, அடுத்த
ஆண்டிலிருந்து சுய-அறிக்கை முறையும் செயல்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக்
கூறினார்.
‘தேசிய,
மாநிலக் குழுக்களுக்குத் துணையாக இருப்பதும் அவசியம். கோவிட் நோய்த்தடுப்பு
திட்டத்தைத் தொடங்கியதிலிருந்து இருபத்தியேழு உறுப்பினர்களைக் கொண்ட தேசியக் குழுவிற்கு
உதவியளிக்கின்ற வகையில் கோவிட் தடுப்பூசி காரண பகுப்பாய்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட
முப்பது உறுப்பினர்களைக் கொண்ட துணைக் குழுவை இந்திய அரசாங்கம் நியமித்துள்ளது
என்றாலும் குறுகிய காலத்திற்குள் இந்தியா முழுமைக்குமான காரணங்களைச் சரிபார்க்கும்
பெரிய சுமையை அந்தக் குழுக்களால் கையாள இயலவில்லை. எனவே மூன்று அல்லது நான்கு பிராந்திய குழுக்களை ஏற்படுத்தி அந்த அமைப்பை பரவலாக்கிட
வேண்டும்’ என்று அனேஜா மேலும் கூறுகிறார்.
இத்தகைய
தலையீடுகளின் தேவை மிகவும் அவசரமாக இருக்க முடியாது. இந்தியாவில் வயது
வந்தவர்களில் பாதிப் பேருக்கு மட்டுமே நோய்த்தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டிருக்கின்ற
நிலைமையில் ஓமிக்ரானின் அச்சுறுத்தலும் அதிகமாக இருப்பதால், தடுப்பூசி போடபப்டும்
வேகத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியமாகிறது. அந்த இலக்கை எட்டுவதற்கு மக்களிடையே உள்ள தயக்கம் குறிப்பிடத்தக்க தடையாக
இருக்கும் என்று ஒரு சில ஆய்வுகள் காட்டுகின்றன.
வலுவான
பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்ட வயதினருக்கான தடுப்பூசியின் நன்மை-ஆபத்து விகிதம்
குறித்த நுணுக்கமான கணக்கீடுகளுக்கும் உதவும். எடுத்துக்காட்டாக வயதில்
இளையவர்களுக்கு த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் ஆபத்து அதிகமாவும், கடுமையான
கோவிட்-19 ஆபத்து குறைவாகவும் இருப்பதைக் காட்டும் தரவுகளின் அடிப்படையில் இங்கிலாந்து
நாற்பது வயதுக்குட்பட்ட ஆரோக்கியமானவர்களிடையே அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிக்கு
மாற்றாக வேறு மாற்றுகளை அளித்து வருகிறது. கடுமையான கோவிட்-19 பாதிப்பு மிகவும்
அரிதாக நிகழ்கின்ற பதினைந்து முதல் பதினேழு வயதுடையவர்களுக்கு 2021 டிசம்பரில்
தடுப்பூசிகளை அளிக்க ஆரம்பித்ததன் மூலம் இந்தியா இந்த பாதுகாப்பு கண்காணிப்பு
அமைப்பை மிகவும் முக்கியமானதாக்கியிருக்கிறது.
தடுப்பூசிகளால்
ஏற்படுகின்ற தேவையற்ற இறப்புகளை அத்தகைய பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு தடுக்கும்.
அளிக்கப்படுகின்ற முறையான சிகிச்சையின் மூலமாக த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம்
விஷயத்தில் ஏற்படுகின்ற இறப்பு குறையலாம். ‘மிகச்சரியான ஆரம்பகட்ட சிகிச்சைக்கு த்ரோம்போசைட்டோபீனியா
சிண்ட்ரோமை அங்கீகரிப்பது உதவுவதால், அதை அங்கீகரிப்பதற்கான
தேவையை நாம் உணர வேண்டும்’ என்று காங் கூறுகிறார். இந்தியாவில் த்ரோம்போசைட்டோபீனியா
சிண்ட்ரோம் குறித்த விசாரணை மெதுவாக நடைபெறுவதால் தற்போது அதுகுறித்த தகவல் இருக்கவில்லை.
தவிக்க விடப்பட்ட குடும்பங்கள்
தமிழ்நாட்டைச்
சேர்ந்த தொழில்முனைவோர் வேணுகோபாலன் கோவிந்தன் 2021 ஜூலை மாதத்தில் வழங்கப்பட்ட
முதல் கோவிஷீல்ட் டோஸிற்குப் பிறகு தொடர்ந்து நோய்வாய்ப்பட்டதன் விளைவாக தனது
இருபது வயது மகள் காருண்யாவை இழந்திருக்கிறார். தரவு அறிவியலில் முதுகலைப் பட்டம்
படித்துக் கொண்டிருந்த காருண்யா மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் என்ற
நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டார். அந்த நோய் உலக சுகாதார
அமைப்பின் கோவிட் தடுப்பூசிகள் தொடர்பான பாதகமான நிகழ்வுகள் குறித்த பட்டியலில்
இடம் பெற்றுள்ளது. அந்த நிகழ்வுகள் கோவிட் தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படக்கூடும்
என்பதற்கான கோட்பாட்டுரீதியான சாத்தியம் காரணமாக ‘கோவிட் தடுப்பூசிகள் தொடர்பான
பாதகமான நிகழ்வுகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இருப்பினும் அதற்கான எந்தவொரு
ஆதாரமும் இதுவரை இல்லை. அதனாலேயே உலக சுகாதார அமைப்பு அதுபோன்ற நிகழ்வுகளை மிகவும்
கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
காருண்யாவுடன்
வேணுகோபாலன் கோவிந்தன்
காருண்யாவிடம்
ஏற்பட்டிருந்த பாதிப்பு தடுப்பூசியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று மருத்துவமனையில்
அவர் அனுமதிக்கப்பட்ட போது கோவிந்தன் சந்தேகப்பட்டார். ஆனால் எங்கே சென்று அது குறித்து
புகாரளிப்பது என்று தெரியாததால் விரக்தியடந்த அவர் கோவிஷீல்ட் தடுப்பூசி
உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவைத் தொடர்பு கொண்டார். அந்த
நிறுவனம் கோவிட் தடுப்பூசி பாதுகாப்பு அமைப்பிடம் அந்த தகவலை அனுப்பி வைக்க
வேண்டிய உற்பத்தியாளர்களுக்கான பார்மகோவிஜிலன்ஸ் திட்டத்திடம் தாங்கள் அந்த தகவலைத்
தெரிவித்து விட்டதாகக் கூறுகிறது.
தீவிரமான
பாதகமான அனைத்து நிகழ்வுகளுக்கான காரணம் குறித்த பகுப்பாய்வின் முடிவுகளை
தடுப்பூசி பெறுநர்களுக்கு தெரிவிப்பதே அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கிறது என்று
அனேஜா கூறுகிறார். ஆயினும் மாநில அதிகாரிகள் பலரும் அத்தகைய கொள்கை பற்றி
தங்களுக்கு எதுவும் தெரியாது என்றே பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலிடம் கூறினர். ‘மாவட்டக்
குழுவிற்கு மட்டுமே முடிவுகளை நாங்கள் தெரிவிக்கிறோம். நோயாளிகளிடம் சொல்ல
வேண்டும் என்பதற்கான எந்தவொரு கொள்கையும் இல்லை’ என்று தமிழ்நாட்டிற்கான மாநில நோய்த்தடுப்பு
அதிகாரி வினய்குமார் தெரிவித்தார். இதெல்லாம் ஒருபுறமிருக்க சீரம் இன்ஸ்டிடியூட்
ஆஃப் இந்தியாவிடம் தான் சமர்ப்பித்த தகவல்கள் குறித்து எடுக்கப்பட்ட எந்தவொரு அடுத்தகட்ட
நடவடிக்கையும் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று கோவிந்தன் கூறுகிறார்.
மீண்டும்
விரக்தியடைந்த கோவிந்தன் தன்னுடைய மகள் காருண்யாவிற்கு நிகழ்ந்ததை சமூக
ஊடகங்களுக்கு எடுத்துச் சென்று விளம்பரப்படுத்திய பிறகே, பாதுகாப்பு அமைப்புடன்
தொடர்புடைய மூத்த அதிகாரி ஒருவர் காருண்யாவின் மருத்துவப் பதிவுகளை மீண்டும்
சேகரித்து கோவிந்தனின் முறையீடுகள் குறித்து விசாரித்தார். இறுதியில் 2021
அக்டோபர் 29 அன்று கோவிந்தனிடம் அவரது மகளின் மரணத்திற்கும், தடுப்பூசிக்கும்
இடையே உள்ள தொடர்பை அந்தக் குழு ‘தீர்மானிக்க இயலாதது’ என்று வகைப்படுத்தி இருப்பதாக
அந்த அதிகாரி தெரிவித்தார். அந்த வார்த்தை
தடுப்பூசி போட்ட உடனேயே பாதகமான நிகழ்வு ஏற்படும் போது பயன்படுத்தப்படுகிறது
என்றாலும், அது காரணத்தைக் கண்டறியும் என்பதற்கு போதுமான ஆதாரம் இருக்கவில்லை.
தங்களுக்கு
நிகழ்ந்த பாதிப்புகளைப் பற்றி பகிரங்கமாக வெளியில் சொல்லியிராத குடும்பங்களுக்கு
காரணம் குறித்த பகுப்பாய்வுகளின் முடிவுகளைப் பெறுவதற்கான சாத்தியம்
இருக்கிறதென்றாலும் அது மிகவும் கடினமாகவே உள்ளது. பல குடும்பங்களுக்கு இறப்புகள் குறித்து
தெரிவிக்குமாறு முதலில் மருத்துவர்களிடம் வற்புறுத்துவதே மிகவும் கடினமாக காரியமாக
இருக்கிறது என்று கூறிய கோவிந்தன் ‘அறிக்கையை அளிப்பதற்கான அமைப்பு இருப்பது எவருக்கும்
தெரியாது. ஒருவருக்கு அது பற்றி தெரிந்திருந்தாலும்கூட அவர் இறப்புகளைப் பதிவு
செய்வதற்கு மிகுந்த விடாமுயற்சி கொண்டவராக இருக்க வேண்டும்’ என்கிறார். மேலும் புகாரளிக்கப்பட்ட
பிறகு அந்த அமைப்பு ‘ஒரு கருந்துளை’யாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.
குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு வழக்கு தீர்க்கப்படும் என்பதற்கான எந்தவொரு
உத்தரவாதமும் இருப்பதில்லை. மேலும் தற்போது நாடு தழுவிய அளவிலே தடுப்பூசி தொடர்பான
பாதிப்புகளுக்கான எந்தவொரு இழப்பீட்டுத் திட்டமும் இந்தியாவில் இருக்கவில்லை.
கோவிந்தனைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த நிலைமையும் மோசமாகவே
இருக்கிறது. ஏனெனில் கடந்த ஆண்டில் கோவிட் தடுப்பூசிகளால் ஏற்படும் ஆபத்துகள்
குறித்து இந்திய அரசு அதிகாரிகள் அடிக்கடி தவறாகவே பேசி வந்திருக்கின்றனர்.
தடுப்பூசியை ஊக்குவிக்கின்ற ஆர்வத்தில் இருக்கின்ற அரசு அதிகாரிகள் ‘கோவிட்
தடுப்பூசிகள் முற்றிலும் பாதுகாப்பானவை’ என்றே தொடர்ந்து கூறி வருகின்றனர். மேலும்
தீவிரமான பாதகமான நிகழ்வுகளுக்கான சிறிய அளவிலான சாத்தியக்கூறுகள் பற்றியும்கூட தடுப்பூசி
பெறுநர்களுடனான சந்திப்புகளின் போது
மிகவும் அரிதாகவே அவர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
அவர்களுக்கு கிடைத்த அந்த ஒட்டுமொத்த அனுபவம் கோவிந்தன்
மற்றும் அவரது குடும்பத்தினர் பலரிடமும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்துக்
கொள்ளும் விருப்பத்தை முழுமையாக அகற்றியிருக்கிறது. இரண்டாவது டோஸ் எடுத்துக்
கொள்ள அவர்கள் யாரும் விரும்பவில்லை. ‘ஒரு டோஸ் மட்டும் எடுத்துக் கொண்டிருக்கும்
நானும் என் மனைவியும் அந்த நச்சிடமிருந்து இப்போது முற்றிலும் விலகி இருக்கிறோம். இப்போது
எங்களுடன் சேர்த்து என் சகோதரனும் அவனுடைய மனைவியும் கூட அவ்வாறாகவே
இருக்கிறார்கள்’ என்று கோவிந்தன் கூறுகிறார்.
References
1. World
Health Organization. Guidance for clinical case management of thrombosis with
thrombocytopenia syndrome (TTS) following vaccination to prevent coronavirus
disease (COVID-19). 19 Jul 2021. https://apps.who.int/iris/bitstream/handle/10665/342999/WHO-2019-nCoV-TTS-2021.1-eng.pdf.
2. Wise J. Covid-19:
Rare immune response may cause clots after AstraZeneca vaccine, say researchers. BMJ2021;373:n954. doi:10.1136/bmj.n954 pmid:33846162
3. National
Family Health Survey (NFHS-4) 2015-16. International Institute for Population
Sciences. Dec 2017. http://rchiips.org/nfhs/NFHS-4Reports/India.pdf.
4. Ministry
of Health & Family Welfare. Answer to Rajya Sabha unstarred question 1068.
7 Dec 2021. https://pqars.nic.in/annex/255/AU1068.pdf.
5. Government
of Canada. COVID-19 vaccine safety: Weekly report on side effects following
immunization. Dec 2021.https://health-infobase.canada.ca/covid-19/vaccine-safety/archive/2021-12-10/.
6. GOV.UK.
Coronavirus vaccine—weekly summary of yellow card reporting. 24 Dec 2021. https://www.gov.uk/government/publications/coronavirus-covid-19-vaccine-adverse-reactions/coronavirus-vaccine-summary-of-yellow-card-reporting.
7. Joshi J, Das MK, Polpakara D, Aneja S, Agarwal M, Arora NK . Vaccine safety and surveillance for adverse
events following immunization (AEFI) in India. Indian J Pediatr2018;85:139-48. . doi:10.1007/s12098-017-2532-9 pmid:29170922
8. Sarkar MA, Ozair A, Sing KK, Subash NR, Bardhan M, Khulbe Y . SARS-CoV-2 vaccination in India:
Considerations of hesitancy and bioethics in global health. Ann Glob Health2021;87:124doi:10.5334/aogh.3530.
9. GOV.UK.
JCVI advises on covid-19 vaccine for people aged under 40. https://www.gov.uk/government/news/jcvi-advises-on-covid-19-vaccine-for-people-aged-under-40.
10.Hindu Bureau. 15-17 age group to
get Covaxin from January 3. The Hindu 2021
Dec 27. https://www.thehindu.com/news/national/covaxin-only-vaccine-option-for-children-in-15-18-years-age-group-says-government/article38049387.ece.
11.World Health Organization.
Covid-19 vaccines: Safety surveillance manual. Monitoring and responding to
adverse events of special interest (AESIS). 2020. https://www.who.int/docs/default-source/covid-19-vaccines-safety-surveillance-manual/covid19vaccines_manual_aesi.pdf.
12.Pulla P. How Covaxin became a
victim of vaccine triumphalism. Livemint 2021 May 27. https://www.livemint.com/science/news/how-covaxin-became-a-victim-of-vaccine-triumphalism-11622022760541.html.
https://www.bmj.com/content/376/bmj.n3146
தொடர்பிற்கு: emailpriyanka@gmail.com
Comments