‘குண்டா’ ஆவணப்பட இயக்குநர் விக்டர் கோசகோவ்ஸ்கியுடன் நேர்காணல்

 யுன்-ஹுவா சென்


குண்டா என்ற ஆவணப்படம் பன்றிகள், கோழிகள், மாடுகளின் கண்மட்டத்தில் அவற்றுடன் தொடர்பு கொள்ளும் அரியதொரு வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. பொதுவான சாதாரணமான நிகழ்வுகளையும், நீண்ட காலமாக அலட்சியம் செய்யப்பட்டு வருகின்ற உயிரினங்களையும் காண்பதற்கும், மிகச் சாதாரணமான, வழக்கமானவற்றின் அழகை, ஆன்மாவைக் கண்டறிவதற்கும் புதிய வழியைத் திறந்து வைத்திருப்பதன் மூலம் விக்டர் கோசகோவ்ஸ்கி மீண்டுமொரு முறை திரைமொழிக்கென்று தனித்துவமான ஆற்றல் இருப்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். தண்ணீரைப் பற்றி எடுக்கப்பட்டிருந்த அவரது முந்தைய படமான அக்வரேலாவைப் போலவே இந்தப் படத்திலும் அவருக்கு பேச்சுமொழி தேவைப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவருக்கு இந்த முறை நிறங்கள் கூடத் தேவைப்பட்டிருக்கவில்லை.     

சியாரோஸ்குரோ பாணியில் கறுப்பு, வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ள குண்டா படம் மனிதனை மையமாகக் கொண்ட வழக்கமான கண்ணோட்டத்தில் இருந்து விலகி, விலங்குகள் தங்களுடைய சொந்தக் கதைகளைச் சொல்ல  அனுமதித்துள்ளது. குரலற்றவர்களுக்கு குரல் கொடுத்திருப்பதன் மூலம் பன்றி,  அதன் குட்டிகள், ஒரேயொரு காலுடன் உள்ள கோழி,  உணவுத் தொழிலில் வளர்க்கப்படுகின்ற பசுக்கள் என்று சில விலங்குகளைப் பற்றிய கதையை கோசகோவ்ஸ்கியின் குண்டா படம் சொல்லிச் செல்கிறது. எந்தவிதமான மனித உரையாடல்களுமே இல்லாத இந்தப் படத்தில் அந்த விலங்குகள் அனைத்தும் பார்வையாளர்களால் மனிதர்களைப் போலவே பார்க்கப்படுகின்றன, கேட்கப்படுகின்றன. கணிசமான அளவு அழுத்தமான, மிகநெருக்கமான காட்சிகளுடன் இந்த ஆவணபப்டம் படமாக்கப்பட்டிருப்பதால், விலங்குகளின் நுட்பமான வெளிப்பாடுகள் நாம் கவனித்துக் கொள்ளும் அளவிற்கு நன்கு தெரிகின்றன. அந்த விலங்குகள் நம்மைப் போலவே நன்கு சிந்திக்கக்கூடிய இருப்பை, அதிநவீன உணர்ச்சிகளைக் கொண்டிருப்பதை அவற்றின் பார்வைகளும், நடத்தைகளும் வெளிப்படுத்திக் காட்டுகின்றன. ஆனாலும் அந்தப் படத்தில் விலங்குகள் கார்ட்டூன் உருவங்களைப் போன்று மனிதமயமாக்கப்பட்டிருக்கவில்லை.   


குண்டா எனும் பெண்பன்றியின் அருகமையில் இருக்கின்ற பன்றிக்குட்டிகள் எவ்வாறு எழுந்து நிற்கவும், நடக்கவும் ஆரம்பிக்கின்றன, சுற்றுப்புறத்தை ஆராய்ந்து பார்ப்பது, பால் அருந்துவதற்கான நல்ல இடத்தை தங்கள் தாயிடம் தேடி உடன்பிறந்தோருடன் சண்டையிட்டுக் கொள்வது போன்ற அவற்றின் செயல்பாடுகளை நாம் மிகவும் நெருங்கி காண்கின்றோம். அந்தக் குட்டிகள் பின்னர் தங்கள் தாயுடன் சேர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடன் களத்தை ஆராயத் துணிகின்றன. அழகாக, சீராக வடிவமைக்கப்பட்ட பொருத்தமான காட்சிகளுக்கு இடையில் அந்தக் குட்டிகள் வளர்கின்றன. தங்களுக்கென்று குணங்களை உருவாக்கிக் கொள்ளும் அந்தப் பன்றிக்குட்டிகள் இறுதியில் மனிதர்களால் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தலையெழுத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது. அந்த ஒற்றைத்தாயின் குழந்தைகளின் சோகமான தலையெழுத்தைப் பற்றியதாக இருக்கின்ற குடும்ப மெலோடிராமாவை அந்த பன்றிக் குடும்பம் எதிரொலிக்கிறது என்றால், ஒற்றைக்கால் கோழியின் கதையோ வேலிக்கு அப்பால் சுதந்திரத்தைத் தேடுகின்ற ‘எ மேன் எஸ்கேப்ட்’ (1956) என்ற திரைப்படத்தைப் போன்றிருக்கிறது. திறந்த புல்வெளிகளில் மேய்வதற்காக திறந்து விடப்பட்ட கதவுகளுக்கு வெளியே வருகின்ற பசுக்கூட்டத்தில் இருக்கின்ற பசுக்கள் வால்களை அசைத்துக் கொண்டும், கால்களை மாறி மாறி எடுத்து வைத்துக் கொண்டும் நிற்கின்றன; நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்ற, மிகநெருக்கமான காட்சிகள் மூலம் காட்டப்படுகின்ற அந்த பசுக்களின் சோகம் தளும்புகின்ற பெரிய வட்டக் கண்களில் அவற்றின் உணர்வுகளும், சொந்தக் கதைகளும் நிரம்பி வழிகின்றன.   


அலெக்சாண்டர் டுடரேவின் ஒலி வடிவமைப்பில் அந்த விலங்குகள் எழுப்புகின்ற ஒலிகள் திரையில் காட்டப்படும் காட்சியுடன் மிகவும் இணக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இயற்கையின் முரட்டுத்தனத்தைக் காட்டுகின்ற போது, குறிப்பாக வைக்கோலில் இருந்து தன்னைப் பிரித்துக் கொள்வதற்காகப்  போராடுகின்ற தன்னுடைய குட்டியை குண்டா மீட்கின்ற போது கேமரா குறிப்பிடத்தக்க வகையில் சளைக்காமல் அவளைப் பின்தொடர்கிறது. பிரம்மாண்டமான வாகனம் ஒன்றின் சக்கரங்களின் மிகநெருக்கமான காட்சிகள், அந்த வாகனத்தின் இயந்திரம் எழுப்புகின்ற சத்தம், பன்றிக்குட்டிகள் எழுப்புகின்ற கீச்சொலி ஆகியவற்றின் மூலம் மனிதனின் மிருகத்தனத்தை கேமரா மிகநுட்பமாகச் சுட்டிக்காட்டவும் செய்கிறது.     


பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவின் (பெர்லினேல்) போது விலங்குகள், திரைப்படம் எடுத்தல், குண்டாவின் பின்னணியில் உள்ள செய்திகள் பற்றி விக்டர் கோசகோவ்ஸ்கி உரையாடினார்.   

இந்தப் படத்தை எப்படி துவங்கினீர்கள்?

உண்மையில் அது எளிதாகவே இருந்தது. மிக எளிதாக இருந்தது. பன்றிகள் வளர்கின்றன... முதலில் அவை பிறக்கின்றன. பின்னர் அவை வளர்ந்து பெரிதாகின்றன. தனித்தனியாக தங்கள் இதயங்களை நமக்குக் காட்டுகின்றன. அவற்றின் ஆளுமையை நீங்கள் பார்க்கிறீர்கள். இறுதியாக தாயிடமிருந்து அவை பிரிக்கப்படுகின்றன. சூழ்நிலைகளைக் கொண்டே படத்தின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நான் அதற்கென்று எதையும் செய்யவில்லை. உண்மையாகவே அது நடந்தது. எடிட் செய்வது எனக்கு மிகவும் எளிதாகவே இருந்தது. இந்தப் படத்தை காலவரிசைப்படி மட்டுமே எடிட் செய்ய முடியும். பன்றிக்குட்டிகள் பெரிதாக இருக்கும் போது உள்ள காட்சிகளை அவை சிறிதாக இருக்கும் தருணங்களைக் கொண்டு எடிட் செய்திட முடியாது. அது எளிதாகவே இருந்தது. நான் மிகவும் அதிகமாகப் படம் பிடிக்கவில்லை. ஏழு மணிநேர அளவிலான காட்சிகளை மட்டுமே மொத்தத்தில் நான் படமாக்கியிருந்தேன். அந்தப் படம் இப்போது தொன்னூறு நிமிடங்கள் நீளத்துடன் இருக்கிறது. உண்மையில் படமாக்குவதற்கு மிக எளிதான படமாகவே அது இருந்தது. எடிட் செய்வதற்கு ஒரு வார காலம் ஆனது. கோழிகளுக்கு இரண்டு நாட்கள், மாடுகளுக்கு இரண்டு நாட்கள், பன்றிக்குட்டிகள் பிறந்தபோது ஐந்து நாட்கள் என்று படம் பிடித்தேன். அதற்குப் பிறகு பன்றிக்குட்டிகள் வளர்வதற்கு சற்றே இடைவெளி விட்டுக் கொண்டோம். பன்றிக்குட்டிகள் பிறந்து ஒரு மாதமாக இருந்த போது இன்னும் மூன்று நாட்கள் படமாக்கினோம். மேலும் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு கடைசிக் கட்டப் படப்பிடிப்பிற்காக ஐந்து நாட்கள் எடுத்துக் கொண்டோம். அவ்வளவுதான். என்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவே மிகவும் எளிதான படமாகும்.   

கேமராவிற்கு முன்பாக அந்த விலங்குகள் உங்களுக்கு வசதியாக இருந்தனவா?

படம் எடுப்பதற்கு முன்பாக ஏராளமாகப் படித்திருந்தேன். நிறைய புத்தகங்களை வாசித்தேன். ஆங்கிலேய, பிரேசில், நார்வே, அமெரிக்க அறிவியலாளர்களிடம் விலங்கு நடத்தைகள் குறித்து பேசினேன். பண்ணை விலங்குகள் பற்றி எடுக்கப்பட்டிருந்த அறிவியலாளர்கள் பலரின் வீடியோக்களைப் பார்த்தேன். துரதிர்ஷ்டவசமாக அவர்களில் பெரும்பாலோர் விலங்குகளின் உற்பத்தியையே தங்களுடைய நோக்கமாகக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் உற்பத்திக்கு உதவுவதற்காகவே அவர்கள் அந்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். விலங்குகளிம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அவற்றைப் புரிந்துகொள்வதற்காக என்றில்லாமல், அவற்றை அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே இருந்தன.   


படப்பிடிப்பைத் தொடங்கும்போதே, என்னால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பது அதனால் எனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அவை வசிக்கும் இடத்தைப் பார்த்து விட்டு, கேமரா வீட்டிற்குள் இருக்குமாறும், அந்த வீட்டிற்கு வெளியே நான் தங்கிக் கொள்ளுமாறும் இடைவெளியுடன் அதேபோன்றதொரு வீட்டை நான் வடிவமைத்துக் கொண்டேன். அந்த வீட்டிற்கு வெளியிலேயே கேமராமேன் உள்ளிட்ட எனது குழுவினர் இருந்தனர். வீட்டிற்கு உள்ளே எட்டு மைக்ரோஃபோன்களையும், கேமராவையும் வைத்தோம். அவள் எங்கே சென்றாலும், எங்கே படுத்தாலும் நாங்கள் தொடர்ந்து அவளுடன் பயணம் செய்து கொண்டே இருந்தோம். பல கோணங்களில் எங்களால் படம் எடுக்க முடிந்தது.    

அவை மிகவும் புத்திசாலிகளாக இருந்தன. பிறந்தது முதலே அவற்றில் ஒன்று ஆக்ரோஷமாக, மற்றொன்று சோம்பேறியாக, மற்றொன்று பயத்துடன், இன்னுமொன்று மிரளுவதாக இருப்பதைக் காண முடிந்தது. அவற்றில் ஒன்று கள்ளத்தனத்துடனும் இருந்தது. ஆரம்பம் முதல் இறுதி வரையிலும் எது ஆக்ரோஷமானது, எது புத்திசாலி, எது செயல்திறன் மிக்கது என்று எங்களுக்கு ஏற்கனவே நன்றாகத் தெரிந்திருந்தது. எங்களுக்கு அது முதல் நாளிலேயே தெரிய வந்தது.

இது மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது. மனிதர்களின் குழந்தைகள் சாப்பிடுகின்ற அதே இடத்திலேயே சிறுநீர் கழிக்கின்றன. ஆனால் பன்றிக்குட்டிகள் அவ்வாறு இருப்பதில்லை. ஏதாவதொரு மூலைக்குச் சென்றே  பன்றிக்குட்டிகள் சிறுநீர் கழிக்கின்றன. சாப்பிடுகின்ற அதே இடத்தில் அவை சிறுநீர் கழிப்பதில்லை. பிறந்த முதல் கணத்தில் இருந்தே அவை சில விதிகளைக் கடைப்பிடிக்கின்றன; சாத்தியமானவை, சாத்தியமற்றவை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கின்றன. அங்கேயே அவற்றுடனிருந்து அவை என்ன செய்கின்றன என்று பார்க்கும் போது, உங்களுக்கு உடனடியாக அவற்றின் மீது மதிப்பு வரும். அவை இந்தப் பூமியில் ஐம்பது லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. மனிதர்களோ இரண்டு முதல் மூன்று லட்சம் ஆண்டுகளாகவே இங்கே வாழ்கிறோம். மனிதர்களாகிய நம்மைக் காட்டிலும் நீண்ட காலமாக அவை வாழ்ந்து வருகின்றன.       

அவற்றின் அமைப்பு மிக மேம்பட்டதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக பசுக்கள் ஒருபோதும் தாமதமாக வருவதில்லை. ஏழு மணிக்குத் தண்ணீர் கிடைக்கும் என்பதை நன்கு அறிந்து கொண்டதால் சரியாக ஏழு மணிக்கு அவை அங்கே வருவதை படத்தின் முடிவில் காண முடிந்தது. கூகுள் மேப் தோன்றிய போது, அதுவரையிலும் மக்கள் அல்லது அறிவியலாளர்கள் அறிந்திராத ஒரு விஷயம் கவனத்திற்கு வந்தது. அதாவது அதற்குப் பிறகே பசுக்கள் பெரும்பாலான நேரங்களில் தெற்கு-வடக்காக இருப்பது கவனிக்கப்பட்டது. அடைக்கப்படாது சுதந்திரமாக இருக்கும் நேரத்தில், பெரும்பாலான நேரங்களில் பசுக்கள் வடக்கு திசையைப் பார்த்தே நிற்கின்றன. கூகுள் மேப் தோன்றும் வரை இது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. உண்மையில் அது குறித்து நமக்கு எதுவும் தெரியாது.  

பசுக்களின் குரல் நம்மை விட ஏழு மடங்கு அதிக சப்தத்துடன் இருக்கின்றது. அதனால் மிகத் தாழ்வாகவும், அதிகமாகவும் அவற்றால் ஒலி எழுப்ப முடியும். பசுக்கள் எழுப்புகின்ற ‘மோ’ என்ற ஒலியைக் கவனித்த போது, குறைந்தபட்சம் முந்நூறு வெவ்வேறான ‘மோ’களை எங்களால் எண்ண முடிந்தது. பசுக்களின் அந்தக் குரலைப் பதிவு செய்து அதிவேகத்தில் ஓடச் செய்து கேட்கும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான ‘மோ’ இருப்பதை எங்களால் உணர முடிந்தது. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் குறிப்பிட்ட வகையான ‘மோ’ ஒலியை அவள் எழுப்புவதை நாங்கள் கண்டறிந்தோம்.   

நாங்கள் ஒலிப்பதிவை மேற்கொண்டிருந்த போது சில சமயங்களில் ஒலிப் பொறியாளர் எனது குரலை காட்சியிலிருந்து நீக்க வேண்டியிருந்தது. ஆனால் குண்டா மாறுபட்ட சூழலில் எழுப்புகின்ற ஒலிகள் வித்தியாசமானவையாக இருந்தன. அவர் ஒலிப்பதிவு மிகச் சரியாக அமைந்திருக்க வேண்டும் என்று விரும்பியதால், எங்களால் அந்த இடைவெளியை நிரப்ப முடியவில்லை. பொறியாளர் தவறான நேரத்தில் தவறான ஒலியைப் பயன்படுத்த விரும்பவில்லை. குண்டா தன்னுடைய குட்டிகளை அழைக்கும் போது குறிப்பிட்ட ஒலியையே எழுப்புகிறாள்.     

அதை ஒரு யதார்த்தமான படமாக்க வேண்டும் என்று விரும்பிய அதே நேரத்தில் புராணக்கதைகளில் வருகின்ற உயிரினமாக குண்டாவை உருவாக்கிடவும் விரும்பினீர்களா?

நிச்சயமாக. கதைகளை நாம் பொதுவாகவே விரும்புகிறோம். மனிதர்கள் புராணக் கதைகளை அதிகம் விரும்புகிறார்கள். சினிமா குறித்து என்னிடம் உள்ள சிந்தனை முற்றிலும் மாறுபட்டது. கதைகளிலிருந்து தனித்து பிரிந்துதான் சினிமா பிறந்தது என்ற நிலைப்பாட்டை நான் கொண்டிருக்கிறேன். அதுவரை நீங்கள் பார்த்திராத ஒன்றை உங்களுக்கு ஒரேயொரு காட்சியின் மூலம் காட்டும் வகையிலேயே சினிமா பிறந்தது என்பதே சினிமா பற்றிய என்னுடைய எண்ணம். அதை நீங்கள் பார்த்திருக்கலாம் என்றாலும் அதைக் கவனித்திருக்க மாட்டீர்கள். நான் பார்க்கின்ற அதே திசையிலேயே நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்றாலும், என்னுடைய கண்கள், கேமரா மூலம் நான் பார்ப்பதை நீங்கள் ஒருபோதும் பார்த்திருக்கப் போவதில்லை. எல்லா காட்சிகளுக்குள்ளும் ஒரு கதை இருக்கலாம் என்றாலும் அது இரண்டாம்பட்சம்தான். எனக்குத் தெரிந்தவரை, கதைகளைக் கேட்க விரும்பும் வகையிலேயே நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். வாழ்க்கை ஏற்கனவே தனக்கான அர்த்தங்களைக் கொடுத்துள்ளது.   


அக்வரேலா படம் பற்றி பேசியபோது, ​​அது ஆவணப்படம் இல்லை என்று சொன்னீர்கள். குண்டாவும் அவ்வாறாக இருப்பதாக உணர்கிறீர்களா?

அது சினிமா. வெறும் சினிமா. உங்களுடைய வாழ்க்கையில் வேறு எங்காவது பன்றிகளைப் பார்க்கும் போதும் உங்களை அழவைக்கும் வகையில் பன்றிகளை நீங்கள் பார்ப்பதற்கு என்னால் ஏதாவது செய்ய முடிந்திருக்கிறது.

சிறுவயதில் நீங்கள் வளர்த்த பன்றி இறந்த போது அழுததாகச் சொன்னீர்கள்...

ஆம்… அது என்னுடைய மிகச்சிறந்த நண்பனாக இருந்தது. குண்டா படத்தின் கடைசி அத்தியாயத்தைப் படமாக்கிய போது நான் அழுதேன். அவள் என்னிடம் வந்து, என்னையே பார்த்தாள்… அவள் என்னிடம் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்பது போன்று எனக்குத் தோன்றிய போது, நான் அழ ஆரம்பித்தேன். எனது குழுவிலிருந்த இளைஞர்களும் அழுததாக பின்னர் கேள்விப்பட்டேன். 


பூமியில் மொத்தம் எழுநூறு கோடி மக்கள் உள்ளனர். அவர்களில் நூறு கோடி பேருக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் இருக்கின்ற அதே நேரத்தில்தான் நூற்றைம்பது கோடி மாடுகள் நம்மிடம் இருக்கின்றன. ஒவ்வொரு மாட்டுக்கும் இப்போது மனிதர்களைக் காட்டிலும் முப்பது மடங்கு தண்ணீர் அதிகமாகத் தேவைப்படுகிறது. மாடுகளுக்குக் கொடுப்பதற்கு முப்பது மடங்கு தண்ணீர் நம்மிடம் உள்ளது - ஆனால் நூறு கோடி மக்களுக்குத் தருவதற்குத் தண்ணீர் இல்லை. மாடுகளுக்கு உணவளிப்பதற்கு காடுகளை அழித்து பயிர்களை வளர்க்க வேண்டும். காடுகளை வெட்டும்போது நிலம் வறண்டு போகும். அது ஒரு மிகப் பெரிய பேரழிவாகவே இருக்கும். இப்போது ஒவ்வொரு ஆண்டும் நூறு கோடி பன்றிகள், ஐம்பது கோடி  பசுக்கள் மற்றும் ஐயாயிரம் கோடி கோழிகளை ​​நாம் கொன்று வருகிறோம். அவற்றைக் கொல்வதற்குத் தேவையான வசதிகள், பொதுவாக மூன்று மாடிக் கட்டிடங்கள் நம்மிடம் இருக்க வேண்டும். பிறகு அவற்றை நன்கு உறைய வைத்து, எடுத்துச் சென்று, வெட்டி, பேக் செய்திட வேண்டும். நாம் செய்வது உண்மையில் மிகப் பெரிய தவறு. குண்டா கஷ்டப்படுவதை நீங்கள் காணலாம்.  


குண்டாவை உங்களுடைய மெரில் ஸ்ட்ரீப் என்று சொன்னீர்கள். உங்களிடம் எடித் பியாஃப் என்ற ஒற்றைக்கால் கோழியும் இருந்திருக்கிறது.

நன்றி. அப்படித்தான் அவளை நானும் அழைப்பேன். அவள் ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதற்கும் முன்னால் நன்கு யோசித்திட வேண்டும். அவளைப் பொறுத்தவரை ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதும் மிகவும் கடினமான வேலை.  


உங்களிடமிருந்த ஒட்டுமொத்த காட்சிகளின் நீளம் அதிகமாக இருந்த நிலையில், எடிட்டிங் முடிவுகளை எப்படி எடுத்தீர்கள்?

எடிட்டிங் செய்வது எனக்கு மிகவும் எளிதாகவே இருந்தது. நான் ஏழு மணி நேரத்திற்கு படம் எடுத்திருந்தேன். அவையனைத்தையும் மிக எளிதாகக் காட்ட முடியும். ஆனால் நீண்ட படங்களைப் பார்ப்பதை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும் என்பதால் மிகவும் கலைநயத்துடன் இசையமைத்து, படத்தின் தொடக்கத்தையும், முடிவையும் அந்த வாசலுக்கு முன்னால் வைத்தேன். நான் மிகுந்த உள்ளுணர்வு கொண்டவன். அந்தக் குணம் என்னிடம் உள்ளது என்றே நினைக்கிறேன். ஓரிடத்திற்கு வருகிறேன் என்றால், கேமராவை அங்கே எங்கே வைக்க வேண்டும் என்பது எனக்கு நன்கு தெரியும். அங்கே அடுத்து என்ன நடக்கும் என்பதை என்னால் கணிக்க முடியும். கேமராவை இங்கே வைத்தால், சரியாக நான் வைத்திருக்கும் ஃபிரேமிற்கு நடுவிலுள்ள அந்த ஜன்னல் விரைவில் உடைந்துவிடும் என்பது எனக்குத் தெரியும். எதையும் தவறவிடாமல் இருப்பதற்கு கேமராவை எங்கே வைக்க வேண்டும் என்பது ஆரம்பத்திலேயே எனக்கு நன்றாகத் தெரியும்.

விக்டர் கோசகோவ்ஸ்கி

படம் எடுக்கும் போது, உடனே எடிட் பண்ணுவேன். காட்சியைப் பார்க்கும் போது அது கேமராவை நானே பயன்படுத்துவதற்கு உதவுகிறது. கேமராமேன் என்று ஒருவர் இடையே இருந்தால், உங்களால் உண்மையில் அந்தக் காட்சியுடன் முழுமையாக இணைய முடியாது. நீங்களே ஒவ்வொரு முறை காட்சியைப் பார்க்கும் போது, படத்தில் அது எப்படி வரும் என்பது உங்களுக்கு உடனடியாகத் தெரிந்து விடும். அதை நீங்கள் உணர்ந்தால், தொகுக்கும் போது அடுத்த கட்டமாக எதைப் படம் எடுக்க வேண்டும் என்பது தெரிந்து விடும். படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போதே, ​​ என்னுடைய மூளையில் எடிட்டிங் வேலையை  நான் ஆரம்பித்து விடுகிறேன்.

வாஹீன் ஃபீனிக்ஸை எவ்வாறு தொடர்பு கொண்டீர்கள்? இந்த படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராக இருப்பதற்கு எவ்வாறு அவரை ஒத்துக் கொள்ள வைத்தீர்கள்? அவருக்கு முதலில் படத்தைக் காண்பித்தீர்களா?

வாஹீன் ஃபீனிக்ஸ்

நான்கு மாதங்களுக்கு முன்பே எங்களுக்கு அவரிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எனது அமெரிக்க இணைத் தயாரிப்பாளரான ஜோஸ்லின் பார்ன்ஸ் படத்தைப் பார்த்தபோது ​​​​‘பீனிக்ஸ் இந்தப் படத்தை விரும்புவார், நாம் அவருடன் பேசலாம், படத்தை விநியோகிக்க அவர் உதவக்கூடும் என்று கூறினார். அவர் கூறியதை நான் அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆஸ்கார் விழாவில் அவர் உரையாற்றிய போது, அனைவரும் என்னை அழைத்து ‘விக்டர், நீங்கள் பேசுவதைத்தான் அவரும் கூறுகிறார், நீங்கள் தினமும் சொல்வதையே அவரும் சொல்கிறார்’ என்றனர். முதலாவதாக எனது குழுவில் இருந்த அனைவரும் வேகன்களாக அல்லது சைவ உணவு மட்டுமே உண்பவர்களாக இருக்கவில்லை. படப்பிடிப்பின் போதும் எடிட்டிங் செய்யும் போதும் நாங்கள் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்.  

அவரைப் பார்க்கச் செல்வதற்கான ஒரு வழி பிறகு எங்களுக்குக் கிடைத்தது. அப்போது அவரது எதிர்வினை ஆச்சரியமாக இருந்தது. தானும் அதில் ஓர் அங்கமாக இருக்க விரும்புவதாகவும், இன்னும் பலரும் படத்தைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ‘இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும், நான் அதை நிறைவேற்றித் தருகிறேன்’ என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு நாளும் நாங்கள் இப்போது அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறோம். ஒன்றிணைந்து வேலை செய்வதற்கான சில யோசனைகள் ஏற்கனவே உள்ளன. எனது படத்தின் டிரெய்லரை அவர் இல்லாமல் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் நிச்சயம் பார்த்திருக்க முடியாது. பால் தாமஸ் ஆண்டர்சன், வாஹீன் இருவரும் மிகுந்த ஆற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள். அவர்களை மக்கள் அதிகமாக மதிக்கிறார்கள். 

எகில் ஹஸ்க்ஜோல்ட் லார்சன்

படத்தில் வரும் தாழ்கோணக் காட்சிகளுக்குப் பின்னால் நீங்கள் இருந்தீர்களா?

அதை எனது இணை ஒளிப்பதிவாளரான எகில் ஹஸ்க்ஜோல்ட் லார்சன் செய்தார். உண்மையில் அதற்காகவே நான் அவரைத் தேர்ந்தெடுத்திருந்தேன்.  இயக்குனராக, ஒளிப்பதிவாளராக சிரியாவிலிருந்து ஸ்வீடனுக்கு குடியேறியவர்களைப் பற்றி அவர் படமாக்கியிருந்த ‘69 மினிட்ஸ் ஆஃப் 86 டேய்ஸ்’ (2017) என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். அந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு எண்பத்தாறு நாட்கள் ஆனது. அந்தப் படத்தில் சிரியப் பெண்ணின் பயணத்தை அவர் பின்தொடர்ந்து சென்றிருந்தார். மிகச் சிறப்பாக அந்தப் படம் தயாரிக்கப்பட்டிருந்தது. ஒரு திரைப்படத்தைப் பார்த்து விட்டு அது நல்ல படமா அல்லது மோசமான படமா என்பதை அறிய எனக்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே போதும். இரண்டு காட்சிகளைக் கொண்டேஅந்தப் படத்தைப் பற்றி என்னால் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

கேமராவிற்கும் கதாபாத்திரங்களுக்கும் இடையிலான தூரம் என்று சினிமாவில் சிறந்த தொழில் வல்லுநர்கள் மட்டுமே அறிந்த ரகசியம் ஒன்று இருக்கிறது. பொதுவாக இந்த உலகில் ஒருசிலரே தவறு செய்திருக்க மாட்டார்கள். எனக்கு மிக அருகே நெருங்கிச் செல்வது வசதிப்படாது. அதிக தூரத்திற்குச் செல்வதோ எனக்குப் போதாது. ஏற்கனவே உறவுகளைப் பொறுத்தும் அருகில் செல்லலாமா வேண்டாமா என்ற கவலை நம்மிடம் இருந்து வருகிறது. கேமராவும் அப்படித்தான். ஒரு திரைப்படத்தைப் பார்க்கின்ற போது, ​​​​நீங்கள் கேமராவின் நிலையில் இருக்கிறீர்கள். கேமரா வெகு தொலைவில் இருந்தால், அதை உங்களால் உணர முடியாது. மிகவும் நெருக்கமாக இருந்தால் அதையே சங்கடமாக உணர்வீர்கள். எகிலைப் பொறுத்தவரை கேமராவிற்கும், கதாபாத்திரங்களுக்குமிடையிலான சரியான தூரத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் ஸ்டேடிக் கேமராவை இயக்க அவரை அழைத்தேன். படத்தில் அனைத்து ஸ்டேடிக் கேமராக்களும் எகிலாலேயே இயக்கப்பட்டன.     

திரைப்படத் தயாரிப்பில் ஏதேனும் சிக்கல்களைச் சந்தித்தீர்களா?

நிதி பெறுவது மட்டுமே எனக்குச் சிரமமாக இருந்தது. அது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகவே இருந்தது. நிதியுதவி பெறுகின்ற முயற்சிகளை 1997ஆம் ஆண்டு முதலே நான் மேற்கொண்டிருந்தேன். அப்போது ஸ்ரேடா திரைப்படத்துடன் நான் 1997இல் பெர்லின் திரைப்பட விழாவில் இருந்தேன்.  


எனக்கு விருது வழங்கப்பட்ட போது, மக்கள் என்னிடம் நான் என்ன செய்யப் போகிறேன் என்று கேட்க ஆரம்பித்தனர். விலங்குகளைப் பற்றிய படம் பண்ண வேண்டும் என்று கூறினேன். யாரும் அதன் மீது கவனம் செலுத்தவில்லை. இருபது ஆண்டுகளாக மக்களை நம்ப வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். அதை உருவாக்க தயாரிப்பாளர் அனிதா ரெஹாஃப் லார்சன் ஒப்புக்கொண்ட போதும், ​​​​அது இன்னும் கடினமாகவே இருந்தது. முதலிலேயே பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தும் வாய்ப்பை அவர் உருவாக்கிக் கொண்டார். எந்த உதவியும் இல்லாமலே நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்கினோம். முதல்கட்டப் படப்பிடிப்பை செய்து முடித்த பிறகுதான், எங்களுக்கு நார்வேஜியன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட், டச்சு ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றின் உதவி கிடைத்தது. அதற்குப் பின்னர் அதை இன்னும் பெரிதாக்கத் துவங்கினோம்.     

http://filmint.nu/chen-interview-with-victor-kossakovsky-on-gunda/

 


Comments