விலங்குகள் குறித்த புது வகை ஆவணப்படங்கள்

 நிக்கோலஸ் ரபோல்ட்

நியூயார்க் டைம்ஸ்


‘குண்டா’, ‘மை ஆக்டோபஸ் டீச்சர்’ போன்ற ஆவணப்படங்கள் விலங்குகளை மனிதர்களுடன் எந்தவிதத்திலும் தொடர்பில்லாத தனித்துவமான குணங்களைக் கொண்ட உயிரினங்களாக நமக்குக் காட்டுகின்றன.        

விக்டர் கோசகோவ்ஸ்கி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘குண்டா’

பண்ணைக் கொட்டகையில் வளர்க்கப்படுகின்ற விலங்குகள் குறித்து மிகுந்த கலைநயத்துடன் எடுக்கப்பட்டிருக்கின்ற ‘குண்டா’ என்ற ஆவணப்படத்தில் ஆண்டின் சிறந்த காட்சிகளுக்கான பட்டியலில் இடம் பெறக்கூடிய காட்சி ஒன்று இருக்கின்றது. துருதுருவென முண்டிக் கொண்டிருக்கும் குட்டிகளுடன் அந்தக் காட்சியில் தோன்றுகின்ற பெண்பன்றி எனும் நட்சத்திரம் தெளிவான அதிர்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. கேமராவை நோக்கிப் பார்க்காமலேயே தன்னிடமிருக்கின்ற தெளிவான குழப்பத்தையும், உணர்வுகளையும் பண்ணையைச் சுற்றி வருகின்ற அந்தப் பெண்பன்றி வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறாள்.     

இயற்கை குறித்து நாம் ஏற்கனவே பார்த்துப் பழகியிருக்கும் படங்களில் ஒன்றாக இந்த குண்டா ஆவணப்படம் இருக்கவில்லை. குண்டா என்ன நினைக்கிறது என்பதை அந்த ஆவணப்படத்தில் எந்தவொரு வர்ணனையாளரும் நமக்கு விளக்கிச் சொல்லவில்லை என்றாலும் அந்தப் பெண்பன்றியின் உள்மனது குறித்த பார்வையை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. உயிரினங்களை அல்லது இந்த பூமி முழுவதையும் நம்மிடம் விளக்கிச் சொல்வதற்கு மாறாக அந்தப்படம் குண்டாவின் தனித்துவமான உணர்வுகளை நோக்கி உணர்வுப்பூர்வமாக நம்மை ஈர்ப்பதாக இருக்கின்றது.    


நாம் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றிய புரிதலை அடிக்கடி குரல்வழியாக, மிகத் தெளிவான கதையுடன் நம் கவனத்தை வழிநடத்துவதாகவே இயற்கை குறித்த ஆவணப்படங்கள் தங்களை வரையறுத்துக் கொண்டிருக்கின்றன. பொதுவாக நமது கண்களைக் கவரும் வகையில் இருக்கின்ற இதுபோன்ற ஆவணப்படங்களில் காட்டப்படுகின்ற உயிர்பிழைத்து வாழ்தல், பெருந்திரளான இடப்பெயர்வு போன்ற கதைகளுக்குள் நிச்சயமாக நாடகத்திற்கும் பஞ்சம் இருப்பதில்லை. ‘பிளானட் எர்த்’ போன்ற படங்களின் மிகப்பரந்த காட்சியை நம்மால் காண இயலாவிட்டாலும் கூட, அந்தக் காட்சிகளிலுள்ள பெருங்கதைச் சூழல் தனிப்பட்ட விலங்கை நம்மிடம் மறைத்திடவே செய்கிறது.


ஆனால் இப்போது வெளியாகின்ற இயற்கை குறித்த ஆவணப்படங்களில் விலங்குகளைச் சித்தரிப்பதில் புதிய திசைகளுக்கான அறிகுறிகள் உருவாகியுள்ளன. அவ்வாறான இயக்கத்தின் ஒரு பகுதியாக நெட்ஃபிக்ஸில் ஏற்கனவே வெளியாகியுள்ள ‘மை ஆக்டோபஸ் டீச்சர்’ என்ற வித்தியாசமான, அசாதாரணமான படத்தை ஒத்ததாக விர்ச்சுவல் சினிமா வழியாக வெளியிடப்பட்டுள்ள குண்டா என்ற இந்த ஆவணப்படம் இருக்கின்றது. இந்த இரண்டு படங்களுமே விலங்குகளை நமக்கு வெறுமனே ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்ற அல்லது அறிவியல் ஆய்வுப் பொருட்களாகக் காட்டாமல் மனித உணர்வுகளின் நிழல்கள் சற்றும் படியாது தங்களுக்கென்று தனித்த குணங்களைக் கொண்டவையாக, நம்மைப் போன்ற உயிரினங்களாகக் காட்டுகின்றன.      

தனது ஒளிப்பதிவாளரிடம் ‘விலங்குகளையும் மனிதர்களைப் படம்பிடிப்பது போலவே படம் பிடிக்க வேண்டும்’ என்று குண்டா படத்தின் இயக்குனர் விக்டர் கோசகோவ்ஸ்கி கேட்டுக் கொண்டார். மேலும் ‘அவற்றிற்கான இடம் தேவை என்று நினைத்தால், அவற்றை அப்படியே இருக்க விடுங்கள். அவை சௌகரியமாக இருப்பதாக உணர்ந்தால், அவற்றிற்கு அருகில் நெருங்கிச் செல்லுங்கள்’ என்றும் அவர் ஒளிப்பதிவாளரிடம் குறிப்பிட்டிருந்தார்.   

விக்டர் கோசகோவ்ஸ்கி

ஏற்கனவே உங்களுடைய நண்பர்கள் அல்லது குடும்பத்தினரால் ‘மை ஆக்டோபஸ் டீச்சர்’ படம் உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம். சிறிய ஆக்டோபஸ் ஒன்றால் ஈர்க்கப்பட்ட தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரான கிரேக் ஃபாஸ்டர் அந்த ஆக்டோபஸுடன் ஓராண்டு காலத்திற்கு உணர்வுப்பூர்வமாக இணைந்து கொள்கிறார். அந்த ஆக்டோபஸின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற மாறுதல்கள், ஃபாஸ்டருடன் அவள் தொடர்பு கொள்ளும் தருணங்களை அந்த ஆவணப்படத்தில் நம்மால் தொடர்ந்து கவனிக்க முடிகிறது. அவளுடன் தனக்கு ஏற்பட்ட விசித்திரமான அனுபவங்களை படத்தின் இடையிடையே வருகின்ற நேர்காணல் பிரிவுகளில் ஃபாஸ்டர் விளக்குகிறார்.    


அந்தப் படம் ஆக்டோபஸின் வாழ்க்கையைப் பற்றிய கடவுளின் பார்வையாக இல்லை என்பதால் மற்ற படங்களிலிருந்து தனித்து நிற்கின்றது. ஃபாஸ்டரிடம் உள்ள அதீத ஆர்வம் அதிகாரப்பூர்வமான பாதுகாவலர், வழிகாட்டி என்று பாரம்பரியமாக இருந்து வருகின்ற அணுகுமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையைப் பிரதிபலிக்கின்றது.    

கிரேக் ஃபாஸ்டர் அவரை ஈர்த்த ஆக்டோபஸுடன் - ‘மை ஆக்டோபஸ் டீச்சர்’ 

‘அவர்கள் அந்த விலங்குகளை அவற்றின் போக்கிலேயே இருக்க விடுகிறார்கள். தங்களுக்கான முடிவுகளை எடுத்துக் கொள்வதை பார்வையாளர்களிடமே விட்டு விடுகிறார்கள்’ என்று மொன்டானா மாநில பல்கலைக்கழகத்தில் இயற்கை திரைப்படத் தயாரிப்பு குறித்த பாடத்தை நடத்தி வருகின்ற பேராசிரியர் டென்னிஸ் ஏக் கூறுகிறார். மேலும் அவர் ‘பிரம்மாண்டமான வணிகப்படங்களில்கூட, இதுபோன்ற உணர்திறன் இப்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது’ என்கிறார்.  

பிளானட் எர்த்’ தொடர் போன்ற வணிகரீதியாக பெருவெற்றி பெற்ற ஆவணப்படங்கள் நிச்சயம் பார்வையாளர்கள் பலரின் மனதில் பிரம்மாண்டமான இடத்தைப் பிடித்திருக்கும். ஆனால் இயற்கை குறித்த ஆவணப்படங்களும் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கானகச் சவாரிகள் மற்றும் ஆய்வுகள் பற்றிய விவரங்கள் விலங்குகளின் உலகம் பற்றிய டிஸ்னியின் மானுடவியல்தன்மையிலான மதிப்பீடுகளுக்கு வழிவகுத்துக் கொடுத்தன. இறுதியில் கண்கவர் காட்சிகள் மூலமாக (HD தொலைக்காட்சி மற்றும் 2000களில் வந்த மிகப்பெரிய திரைகளால் ஊக்கம் பெற்றன என்பதில் சந்தேகமில்லை) இயற்கை பாதுகாவலருக்கான நெறிமுறைகளும், அறிவியல் கண்டுபிடிப்பு உணர்வுகளும் நிலைபெற்றுக் கொண்டன.   

காலநிலை மாற்றங்கள் உருவாக்கியிருக்கும் நெருக்கடியின் பின்னணியில் இத்தகைய படங்களின் மீது மட்டுமே மக்களின் ஆர்வம் அதிகரித்ததால், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதன் விளைவாக முன்பை விட அதிகமான இயற்கை குறித்த ஆவணப்படங்கள் வெளியாகின. இயற்கையின் மர்மங்கள் குறித்த ஆய்வுகள், விளக்கங்களைக் கொண்டு பல தசாப்தங்களுக்கு முன்பு உருவான திரைப்படத் தயாரிப்புகளில் இருந்த குறிப்பிட்ட வகையிலான படங்கள் நீடித்து வருகின்றன.    


‘இதுபோன்ற படங்களை சிம்பன்சிகள் குறித்த தன்னுடைய ஆரம்பகட்ட வேலையைக் கொண்டு ஜேன் குடால் துவக்கி வைத்தார்’ என்று சொல்கின்ற மை ஆக்டோபஸ் டீச்சர் படத்தின் இயக்குனர்கள் இருவரில் ஒருவரான பிப்பா எர்லிச், காலப்போக்கில் மெதுவான மாற்றம் நிகழ்ந்துள்ளது என்கிறார். குடாலின் மிக விரிவான ஆய்வுகளுக்குப் பின்னர் வெளியான இயற்கை குறித்த படங்கள் சிம்பன்ஸிகளின் ஆளுமைகள், உணர்வு நிலைகள், தனிப்பட்ட உறவுகள் பற்றி குடாலிடமிருந்த புலனுணர்வுரீதியான மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொண்டன. அந்த அணுகுமுறை அறிவியல்பூர்வமாக இருந்தது என்றாலும் அவரது வெளிப்படையான மனதுடன் இருந்த பார்வையும், உணர்வுரீதியான நுண்ணறிவு கொண்ட ஆழ்ந்த முன்னோக்குகளும் படத் தயாரிப்பில் பங்களிப்பு செய்தன. அனுதாபத்தை மட்டுமே வெளிப்படுத்துவதற்கு மாறாக மை ஆக்டோபஸ் டீச்சர், குண்டா போன்ற படங்களில் விலங்குகளுக்கும், அவற்றின் தனித்துவத்திற்கும் புதியதொரு வெளியை ஏற்படுத்தித் தருவதற்கான வழியை அது ஏற்படுத்தித் தந்தது. எர்லிச்சின் இணை இயக்குனரான ஜேம்ஸ் ரீட் ‘நீங்கள் செல்கின்ற அனைத்து இடங்களிலும் இன்னும் ஆவணப்படுத்தப்படாமல் இருக்கின்ற சிக்கலான ஆளுமைகளை இயற்கை கொண்டிருக்கிறது என்பதே உண்மையில் நமக்குக் கிடைத்திருக்கும் பாடமாகும்’ என்கிறார்.   


மனிதர் ஒருவர் வான்கோழிகள் கூட்டத்தை வளர்த்து, அவற்றின் குணாதிசயங்கள், பழக்கவழக்கங்களை வெளிப்படுத்துவதாக 2011ஆம் ஆண்டில் வெளியான தொலைக்காட்சி ஆவணப்படமான ‘மை லைஃப் அஸ் எ டர்க்கி’ போன்ற முன்னோடிப் படங்களின் பட்டியலுக்குள் குண்டா, மை ஆக்டோபஸ் டீச்சர் போன்ற படங்களும் இப்போது இணைந்து கொண்டுள்ளன.


அதன் சமீபத்திய தாக்கமாக இஸ்தான்புல்லில் உள்ள தெருப் பூனைகள் பற்றிய விரிவான விவரணங்களுடன் இருந்த, பிரபலமான ‘கெடி’ (2017) என்ற படம் இருக்கக்கூடும். புத்துணர்வுடன், உட்கிடையில் அதனை ஒத்ததாகவும் இருக்கின்ற  பெரும்பாலும் வழக்கமான முறையில் எடுக்கப்பட்டுருந்த ‘தி எலிபண்ட் குயின்’ (2019) படமும் நம்மிடம் உணர்வுப்பூர்வமான நெருக்கத்தை ஏற்படுத்தித் தர முயல்கின்றது.  

புல்வெளிக்குள் தன்னுடைய பாதையைத் தொடர்கின்ற கோழிகளின் ஜாக்கிரதையான புத்திசாலித்தனம், குண்டாவின் குட்டிகளிடம் இருக்கின்ற ஆளுமைப் பண்புகள் ஆகியவற்றைப் பற்றி குண்டா படத்திலிருந்து நம்மால் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. மை ஆக்டோபஸ் டீச்சரில் வரும் அந்த ஆக்டோபஸின் வினோதம் பலரையும் ஆச்சரியப்படுத்துவதாக இருக்கிறது. வேறுபடுத்திக் காண முடியாத கண்களைக் கொண்ட அந்த மெல்லுடலி, வலிமையுடன் மிக வேகமாக நகர்ந்து, இரும்பு போன்ற உறுதி கொண்ட தன்னுடைய மனதை அந்தப் படத்தில் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது.


இயற்கை குறித்த ஆவணப்படத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகின்ற வகையில் ஆக்டோபஸின் நடத்தைக்கு மனிதர்களின் நடத்தையை ஒத்த தோற்றத்தை ஏற்படுத்தித் தருகின்ற தூண்டுதலைத் தவிர்ப்பதற்காக - அந்த ஆக்டோபஸை ஒரு பெண் என்று குறிப்பிடுகின்ற போதிலும் - அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் அதற்கென்று ஒரு பெயரைக் கொடுப்பதைத் தவிர்த்துள்ளனர்.   

‘விலங்குகளை மக்களுடன் ஒப்பிடுவது வசதியாக, சில சமயங்களில் கல்விசார் கதைசொல்லல் உத்தியாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்று கூறுகின்ற டென்னிஸ் ஏக் ‘அறிவியலைப் பற்றிய அறிவு அதிகரிக்கும் போது, ​​​​சில உயிரினங்கள் ஏன் அவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதில் வேறுபாடுகள் இருப்பதை நம்மால் உணர முடிகிறது. எனவே விலங்குகளை மனிதர்களுடன் ஒப்பிடுவது பல வழிகளில் வரையறைக்குட்பட்டே இருக்கின்றது’ என்கிறார்.   

விலங்குகளின் நுண்ணறிவு குறித்து நம்மிடையே அதிகரித்து வருகின்ற அறிவு, ஆர்வம் போன்றவையே பெரும்பாலான துறைகளில் நுணுக்கமாக, தனிப்பட்ட விவரங்களுடன் விலங்குகளைச் சித்தரிக்கும் இத்தகைய போக்குகளுக்கு காரணமாக இருக்கின்றன. பூமி குறித்த நமது புதிய புரிதல்கள் விலங்குகளின் சகவாழ்வை அங்கீகரிக்கின்றன. இன்றைய இளைய பார்வையாளர்கள் தங்களுடைய அறிவின் மூலம் ஒருவகையான ஆளுமையை விலங்குகளின் உணர்வுகளின் மீது செலுத்துவதற்குப் பதிலாக அவற்றை இயற்கையுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் தூண்டுதலால் உந்தப்பட்டிருப்பது தெரிகிறது என்று ஏக் கூறுகிறார்.   


விலங்குகளிடம் இருக்கின்ற குறிப்பிடத்தக்க சிந்தனை செயல்முறைகளைத் தேடிக் காண்பதற்கும், அவற்றை அடையாளம் கண்டு கொள்வதற்குமான வாய்ப்பை இப்போதைய தருணம் அகலத் திறந்து வைத்திருக்கிறது. மை ஆக்டோபஸ் டீச்சரில் ஒரு விலங்கின் (அல்லது ஃபாஸ்டரையும் சேர்த்து இரண்டு விலங்குகளின்) மீதான கவனத்தை அந்தப் படம் முழுவதும் செலுத்துவதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்ற ரீட் ‘அவள் தன்னுடைய உலகத்தை எவ்வாறாக  உணர்கின்றாள், அதை எவ்வாறாக அவள் அறிந்து கொள்கிறாள்’ என்பதைக் காட்டுவதற்கு கேமரா அனுமதித்தது என்கிறார்.     

இயற்கை குறித்த ஆவணப்படங்களில் இப்போது உடல்ரீதியான, உணர்வுப்பூர்வமான நெருக்கமான சந்திப்புகள் மிகத் தெளிவாக இடம் பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன.    

https://www.nytimes.com/2020/12/15/movies/gunda-my-octopus-teacher-documentaries.html


 

Comments