ஜி.ஆர்.
கோபிநாத்
வயர்
இணைய இதழ்
ஜி.ஆர். கோபிநாத்
ஏர்
டெக்கான் நிறுவனர், எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர்
பிரதமரின்
மன்னிப்புடன் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை அவரது அரசாங்கம் திரும்பப்
பெற்றுள்ள போதிலும், ஓராண்டிற்கு முன்பாகத் தொடங்கிய விவசாயிகளின் போராட்டங்கள்
இன்னும் தொடர்கின்றன. 2014ஆம் ஆண்டு தேர்தலில் தனது கட்சியை வெற்றிப் பாதைக்கு
அழைத்துச் சென்று நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதிலிருந்து நரேந்திர
மோடி எதிர்கொண்டிருக்கும் மிகவும் கடினமான உள்நாட்டுச் சவாலாகவே அது இருக்கிறது. பின்னோக்கிப்
பார்த்தால் மூன்று வேளாண் சட்டங்களை அவசரச் சட்டம் மூலம் அவசரப்படுத்தியது, அவற்றை
நாடாளுமன்றத்தில் பின்னர் அவசரப்படுத்தி நிறைவேற்றிக் கொண்டது அவர் இழைத்த
மிகப்பெரிய தவறுகள் என்று ஒருவரால் கூற முடியும். விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு
கோருவது, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது போன்றவை அவரது எதிரிகளால் குற்றம்
சாட்டப்பட்டுள்ளவாறு தேர்தல்களுக்குப் பயந்து செய்யப்பட்ட செயல்களாக இருந்த
போதிலும், இப்போதைய சூழ்நிலையில் அவர்
எடுத்திருக்கும் புத்திசாலித்தனமான முடிவாகவே உள்ளது. அவரது முடிவு விவசாயிகளுடனான
விவாதம் மற்றும் உரையாடல்களுக்கான கதவுகளைத் திறந்து வைத்து அரசுக்கும்,
விவசாயிகளுக்குமிடையிலான முட்டுக்கட்டையைத் தகர்க்கும் நம்பிக்கையைத்
தூண்டியுள்ளது.
அதிகார
உச்சத்தில் அமர்ந்திருக்கும் அரசியல் தலைவர்கள் களத்திலுள்ள உண்மைகளிலிருந்து குறைபாடுள்ள
தங்கள் பார்வையை வெகு தொலைவிற்கு விலக்கி வைத்துக் கொள்வதால் அவர்களால் சிக்கல்கள்
ஏற்படப் போவதை உணர முடிவதில்லை. பெரும்பாலும் தேர்தல் வெற்றிகளையே நோக்கமாகக்
கொண்டிருப்பதால் அரசியல் முற்சார்புகளின்றி முடிவுகளை மிகவும் அரிதாகவே
எடுக்கிறார்கள். அத்துடன் அவர்களுடைய இறுமாப்பும் இணைந்து கொள்ளும் போது அவர்களால்
உண்மையை எதிர்கொள்ள முடியாமல் போகிறது. மோடியும் இத்தகைய போக்கிற்கு
விதிவிலக்கானவராக இருக்கவில்லை.
சீன
ராணுவம் கட்டமைக்கப்பட்டிருப்பது பற்றி தன்னுடைய தளபதிகளிடமிருந்து வந்த
அறிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்காத ஜவஹர்லால் நேருவும், நமது பலவீனமான ராணுவத்
திறன்களுமே திபெத்தை சீனா ஆக்கிரமிப்பதற்கான வழியை வகுத்தன. இந்திரா காந்தியோ
நிறுவனங்களின் சுயாட்சியை அழித்தார். மதச்சார்பற்றவராக, புலமை மிக்கவராக,
சாமர்த்தியசாலியாக இருந்த போதிலும், ஹிந்துக்களைத் திருப்திப்படுத்த வேறு வழியில்
சென்ற நரசிம்மராவ் பாபர் மசூதியை இடிப்பதற்கு வசதியேற்படுத்திக் கொடுத்தார். ஷா
பானோ வழக்கில் முஸ்லீம் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டுமென்று வழங்கப்பட்ட
உச்சநீதிமன்ற உத்தரவை ராஜீவ் காந்தி ஏற்றுக் கொள்ளவில்லை. ஆக இதுபோன்ற தவறுகளின்
பட்டியல் மிக நீளமானது.
குடியரசு
நாட்டில் அரசாங்கத்தை நடத்திச் செல்கின்ற கட்சியின் வலிமையான தலைவர் எப்போதும்
தனக்கான, தனக்கு ஒத்து ஊதுகின்ற சிறு குழுவால் சூழப்பட்டிருப்பார். அந்தக்
குழுவில் உள்ளவர்கள் இந்த உலகிடமிருந்து அவரைத் தனிமைப்படுத்தி விடுவார்கள். அவர் அப்போது
பொதுமக்களிடம் தொடர்பை இழந்து நிற்கும் மன்னரைப் போல முட்டாள்தனங்களுக்கு ஆளாவார்.
பொதுவான
அரசியல் போராட்டங்களுக்கு மாறாக தன்னுடைய மண்ணில் வேரூன்றி, அரசியலற்று, பொதுவான
காரணங்களால் ஈர்க்கப்பட்டிருந்த விவசாயிகள் இயக்கம் போன்றதொரு மக்கள் இயக்கம்
தோல்வியடைவதற்கான வாய்ப்புகளே இல்லை. பருவ காலங்களின் சுழற்சி, விதைப்பு, அறுவடை எனும்
தொடர் வேலைகள், பண்ணை விலங்குகளைப் பராமரிப்பது போன்ற விவசாயிகளின் கடமைகளும்,
கடன்களும் தங்களுடைய மண்ணுடன் அவர்களைப் பிணைத்து வைத்திருக்கின்றன. ஆட்சியாளர்கள்
இயற்றுகின்ற சட்டங்கள் நல்ல நோக்கத்துடன் அல்லது அவர்கள் கொண்டு வருகின்ற
சீர்திருத்தங்கள் முற்போக்கானவையாக இருந்த போதிலும், ஜனநாயகச் செயல்முறைகள்
குழிதோண்டிப் புதைக்கப்பட்டு முக்கிய பங்குதாரர்களைக் கலந்தாலோசிக்காமல் அவை
நிறைவேற்றப்படும் போது எதிர்ப்பையே சந்திக்க நேரிடும் என்பதே ஆட்சியாளர்களுக்கு இப்போது
விடுக்கப்பட்டிருக்கும் தெளிவான செய்தியாக உள்ளது.
தீர்வுகளைப்
போலவே அவற்றிற்கான வழிமுறைகளும் புனிதமானவை என்பதால் தற்போதைய சூழலில் வேளாண்
சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கு வழிவகுத்துக் கொடுத்துள்ள விவசாயிகளின்
போராட்டம் நமது ஜனநாயகத்தைச் சரிபார்த்துக் கொள்வதுடன், கொண்டாட்டத்திற்கான
காரணமாகவும் இருக்கிறது.
ஆட்சி
செய்வதைக் காட்டிலும் தேர்தலில் வெற்றி பெறுவதென்பது மிகவும் எளிது. பேரரசுகளை
ஆண்ட அனைத்து பேரரசர்களுமே ரத்தக்களரியுடனான போர்கள், முறியடிக்கப்பப்ட்ட
கிளர்ச்சிகள், பிராந்தியங்களை இணைத்தல் போன்றவற்றின் மூலம் சாதித்த தங்களுடைய
வெற்றிகளுக்குப் பிறகு இந்தப் பாடத்தையே கற்றுக் கொண்டிருக்கின்றனர். ‘கிரீடத்தை
அணியும் தலையில் அமைதியின்மை குடியேறுகிறது’ என்று கவிஞர் ஒருவர் பாடியுள்ளார். மோடியைப்
பொறுத்தவரை அதிக எடையுள்ள கிரீடங்களைக் காட்டிலும் கனமானவையாகவே அவர் அடிக்கடி
அணிய விரும்புகின்ற, பளபளப்பான நிறங்கள் கொண்ட பிரமாண்டமான தலைப்பாகைகள் இருந்திருக்கும்.
மோடிக்கும்
அவரது உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அது நன்றாகவே புரிந்திருக்கும். தேர்தல்
வெற்றியைப் பெறுகின்ற போரிலும், உள்கட்சி முரண்பாட்டால் எதிர்க்கட்சிகள் ஆட்சி
செய்யும் மாநிலங்கள் ஸ்திரமற்று இருக்கும் நிலையில் சூழ்ச்சிகள் மூலம் அதிவேகமாக ஆட்சியைக்
கைப்பற்றிக் கொள்ளும் கலையிலும் அவர்கள் இருவரும் சிறந்து விளங்குகின்றனர். ஆயினும்
அத்தகைய செயல்பாடுகளை நிறைவேற்றிக் கொள்கின்ற நிர்வாகமானது சமமான வளர்ச்சி, ஸ்திரத்தன்மை,
வகுப்புவாத நல்லிணக்கத்தை உறுதி செய்யும் நிர்வாகத்திடமிருந்து முற்றிலும்
வேறுபட்டது என்பது நிச்சயம்.
புவிசார்
அரசியலும், உலகமயமாக்கலும் பின்னிப் பிணைந்துள்ள இந்த நிலையில் மிகவும்
சிக்கலானதாக பொருளாதாரம் மாறி வருகிறது. நிபுணர்களின் பேச்சைக் கேட்பது நல்லது
என்றாலும் பெரும்பாலும் அவர்கள் முரண்பட்ட கருத்துக்களையே கூறுவார்கள். ‘அனைத்து
பொருளாதார நிபுணர்களையும் ஓரிடத்தில் வரிசையாக வைத்தாலும், எல்லாத் திசைகளையும் அவர்கள்
உங்களுக்குச் சுட்டிக் காட்டுவார்கள்’ என்று ஜார்ஜ் பெர்னார்ட் ஷா ஒருமுறை
கூறினார். அரசியல் உறுதி கொண்டதாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் மிக
விரிவான ஆலோசனையாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர எளிமையான தீர்வு என்று எதுவுமிருக்கப்
போவதில்லை. அது பெரும்பாலும் ஒருமித்த கருத்துக்கு வழிவகுத்துத் தருவதாகவும்
இருக்கும்.
2021 நவம்பர் 30 அன்று
புதுதில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் போது மக்களவையில்
இருந்த உறுப்பினர்கள்
தங்கள்
விளைபொருட்களை சுதந்திரமாக சந்தைகளில் விற்பதற்கான பல தேர்வுகளைக் கொண்ட, லட்சக்கணக்கான
விவசாயிகளுக்கு பெருமளவில் நன்மைகளைச் செய்ய முடிந்திருக்கக்கூடிய தொலைநோக்குச்
சீர்திருத்தங்களை இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்கள்
கொண்டிருந்தன என்று கூறப்பட்டாலும் அந்த சட்டங்களில் பல அபாயங்களும் சேர்ந்தே
இருந்தன. மூன்று வேளாண் சட்டங்களின் பயன்பாட்டால் வேளாண் விளைபொருள் சந்தைக்
குழுக்கள் வீழ்ச்சியடையக் கூடும்; விவசாயிகள் பன்னாட்டு நிறுவனங்களின் பிடிகளில்
மட்டுமல்லாது, இந்தியப் பெருநிறுவனங்கள் மற்றும் அரசு ஆதரவு முதலாளிகளின் தயவிலேயே
இருக்க வேண்டி வரும் என்ற உண்மையான அச்சங்களும், நியாயமான கவலைகளும் விவசாயிகளிடம்
இருந்தன.
அதேபோன்று
கூட்டாட்சி தத்துவமும் இங்கே மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளது. குஜராத்தில்
முதலமைச்சராக இருந்தபோது கூட்டாட்சிக்கான பாதுகாவலராக மோடி இருந்தார். விவசாயம் மாநிலப்
பொறுப்பில் உள்ளது. மாநில அரசுகள், விவசாயிகள், வேளாண் அறிவியலாளர்கள், பொருளாதார
நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களையும் உள்ளடக்கிய நிபுணர் குழுவை அமைக்கப்
போவதாக மோடி ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அது வரவேற்கத்தக்கது.
அந்த
மசோதாக்கள் விவாதங்கள் எதுவுமின்றி நிறைவேற்றப்பட்டதால், மக்களுடைய பார்வையில்
பிரதமர் மீதிருந்த சில நல்லெண்ணங்கள் பறிபோய் விட்டன. வேளாண் சட்டங்களைச்
சுற்றிலுமிருந்த அவநம்பிக்கைகளை ஆழமான, தீவிரமான விவாதங்கள் களைந்திருக்கக் கூடும்.
புதிய சட்டங்களை இயற்றுவதற்கும், அனைவரையும் ஒருங்கிணைப்பதற்கும் அது வழிவகுத்துக்
கொடுத்திருக்கும். அவையை நிர்வகிப்பவர்களும், சபாநாயகர்களும் விவாதங்களுக்கான
வழியைக் கண்டறிவதில் கூடுதல் கவனத்தைச் செலுத்தியிருக்கலாம். மசோதாவை
நிறைவேற்றியது, திரும்பப் பெற்றுக் கொண்டது என்று இரண்டுமே விவாதங்களின்றி மேற்கொள்ளப்பட்டுள்ள
நிலையில், ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் எவ்விதப் பயனுமற்றுப் போய் விட்டன.
வேளாண்
சட்டங்களைத் திரும்பப் பெறுவது என்ற மோடியின் முடிவு, அனைவரும் நிம்மதிப்
பெருமூச்சை வெளிப்படுத்தும் வகையிலே அமைந்தது. முற்றிலுமாக மன்னிப்புக்
கேட்காவிட்டாலும், ஒருபோதும் பின்வாங்கத் தெரிந்திராத இந்தப் பிரதமர் கொஞ்சம்
கருணை கொண்டு விவசாயிகளுடன் பேச்சு வார்த்தைக்கும், பேரத்திற்கும் கதவுகளைச் சற்றே
திறந்து வைத்துள்ளார். அனைவரும் விவசாயிகள் தங்கள் வயல்களுக்கும்,
குடும்பங்களுக்கும் திரும்பிச் செல்வார்கள் என்றே எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள்
மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பிற கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்றனர்;
உத்தரவாதமான குறைந்தபட்ச ஆதார விலைக்கான கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல்
உள்ளது. கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை
என்று கூறி வீட்டுக்குத் திரும்பிச் செல்ல விவசாயிகள் மறுத்து வருகின்றனர்.
விவசாயிகளின்
கோரிக்கைகளை மோடி கண்டுகொள்ளாமல் இருந்து விடக்கூடாது அல்லது தனிப்பட்ட அவமானமாகவோ,
தனது அதிகாரத்திற்கு விடப்பட்ட சவாலாகவோ அவர் அதை எடுத்துக் கொள்ளக் கூடாது.
இணக்கமான, ஒருமித்த அணுகுமுறையை அவர் விவசாயிகளிடம் காட்ட வேண்டும். விவசாயிகளைச்
சந்தித்து அவர்களிடமுள்ள கவலைகளைக் கேட்டறிந்து தீர்வு காணும் வகையில்
பேச்சுவார்த்தைக்கு அவர்களை அழைத்திட வேண்டும்.
‘ஒருபோதும்
அச்சம் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. அதேபோன்று பேச்சுவார்த்தைக்கு ஒருபோதும்
அஞ்சக் கூடாது’ என்று ஜான் எஃப். கென்னடி முன்பொரு முறை கூறியதை நமது பிரதமர்
நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.
https://thewire.in/government/the-farm-laws-have-been-repealed-but-the-need-for-dialogue-remains
Comments