அஞ்சலிக் கூட்டங்களில் விரைவில் சந்திப்போம்!!!

ரவீஷ் குமார்

என்டிடிவி தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்

வயர் இணைய இதழ்

முஸ்லீம்களுக்கும், ஹிந்துக்களுக்கும் இடையே ஏற்பட்ட நிலத்தகராறு குறித்த செய்திகளைச் சேகரிப்பதற்காக கேரவன் பத்திரிக்கை நிருபரான பாசித் மாலிக் 2017 ஜூன் 9 அன்று தில்லியில் இருக்கும் சோனியா விகாருக்கு சென்றிருந்தார். முஸ்லீம் என்று அவரை அடையாளம் கண்ட அங்கிருந்த கும்பல் அவரைத் தாக்கியது மட்டுமல்லாமல், உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தானி ஒருவனைப் பிடித்திருக்கிறோம் என்று கூறி காவல்துறையிடம் அவரை ஒப்படைத்தது. பாசித் மாலிக் தாக்கப்பட்டது, ஊடகங்களின் மீது ஏற்பட்டிருக்கும் சகிப்பற்ற தன்மை ஆகியவை குறித்து தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கின்ற வகையில் தில்லியில் உள்ள இந்தியப் பத்திரிக்கையாளர் மன்றத்தில் 2017 ஜூன் 24 அன்று நடைபெற்ற கூட்டத்தில் என்டிடிவி தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியரான ரவீஷ் குமார் உரையாற்றினார். ஹிந்தியிலிருந்த அவரது உரை ஆங்கிலத்திற்கு சித்ரா பத்மனாபனால் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

§

ரவீஷ் குமார் உரை

தில்லியில் அண்மையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நாரதரைப் போல பத்திரிக்கையாளர்கள் நடந்து கொள்ள வேண்டும்; அவர்கள் விரும்பத் தகாத உண்மைகளை வெளியிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஏராளமான அறிவுரைகளை வழங்கியுள்ளார். அரசாங்கத்தைப் பற்றி ஏதாவது கூற வேண்டுமென்றால், அதனை தேனொழுகும் மொழியில் சொல்லுங்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார் - இது பத்திரிக்கைகளில் வெளியான செய்தி. அவர் கூறியிருக்கும் கருத்துகளை முழுமையாகப் பார்க்க வேண்டும்.      


விஷ்ணுவின் பக்தர்களில் ஒருவராக தொடர்ந்து ’நாரயணா, நாராயணா’ என்று முழங்கிக் கொண்டிருப்பவராக நாரதர் புராணங்களின் மூலம் அறியப்படுகிறார். நாரதராக எங்களைக் காண வேண்டுமென்றால், நீங்கள் முதலில் இந்திரனின் அவையில் இருக்கின்ற அவ்வாறான கடவுளர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தும் வாகையில் இருக்க வேண்டும். நாரதாக இருக்கலாம் என்று நாங்கள் விரும்பிய பிறகு விரும்பத்தகாத உண்மைகளை நாங்கள் பேசாமல் இருக்கும் அளவிற்கு கடவுளாக இருக்கத் தகுதியுடையவர்கள் யார் என்பதை நீங்கள் எங்களுக்குக் காட்ட வேண்டியிருக்கும். மேலும் சபாநாயகர் அம்மையார் விரும்பத்தகாத உண்மைகள் என்றால் எவை என்பது பற்றியும் முடிவெடுத்துக் கூற வேண்டியிருக்கும்.   

இது குறித்துப் பேசும் போது கர்நாடகா மாநில சபாநாயகர் செய்திருப்பதையும் நாம் காண வேண்டியுள்ளது. பத்திரிக்கையாளர்களைப் பயமுறுத்தி அடக்குவதற்கான திட்டங்கள் இப்போது அனைவருக்கும் மிகத் தெளிவாகத் தெரியும்படியாகவே தீட்டப்படுகின்றன. இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைப் பற்றி தரக்குறைவாக எழுதியதாகக் குற்றம் சாட்டி, கன்னடச் செய்தித்தாள் ஒன்றைச் சேர்ந்த இரு பத்திரிக்கையாளர்களுக்கு (பிரபல பத்திரிக்கையாளர் ரவி பெலகெரேயும் அவர்களில் ஒருவர்) கர்நாடகா மாநில சபாநாயகரான கோலிவாட் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.     

யார் குறி வைக்கப்படுகிறார்கள், எதற்காக அவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள் என்பதைக் கண்டறிவதற்கே சிரமமாக இருக்கும் வகையில் இத்தகைய நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சர்வசாதாரணமாக அவை நடக்கின்றன. உங்களைப் பற்றி அறிந்திருப்பவர்கள் சந்துகளிலும், குறுக்குச் சாலைகளிலும் உங்களுக்காகக் காத்துக் கொண்டு நிற்கிறார்கள். உங்களை சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் அவர்கள், பத்திரிக்கையாளராக உங்களுடைய வேலையைத் துவங்கியதுமே சரமாரியாக கண்மூடித்தனமாக உங்களைத் தாக்க ஆரம்பிக்கிறார்கள்.   

அன்றைய தினம் நடந்த விஷயங்கள் குறித்து கேரவனில் பாசித் மாலிக் விவரித்திருப்பதை வாசிப்பதற்கு மிகுந்த தைரியம் தேவைப்படுகிறது. அந்த விவரணையில் வருகின்ற வழக்கறிஞர் பாத்திரம் தனித்தன்மையுடன் நிற்கிறது. கும்பல்கள் அனைத்திலும் இருக்கின்ற அந்தக் கதாபாத்திரத்தின் இருப்பு யாராலும் தவறாக எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை. அந்தக் கதாபாத்திரம் அந்தக் கும்பலில் என்ன செய்து கொண்டிருந்தது என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. ஒருவகையில் அந்தக் கும்பலின் சட்ட விழிப்புணர்வுத் துறையைச் சார்ந்தவர் என்பதாகக்கூட அவரை விவரிக்கலாம்.


அண்மைக்காலங்களில் நடந்துள்ள வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட இதுபோன்ற மூன்று அல்லது நான்கு நிகழ்வுகள் என்னுடைய நினைவிற்கு வருகின்றன. பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெற்ற நிகழ்வுகளில், அங்கே என்ன நடந்தது என்பது பற்றி  நம்மால் இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள முடியாமலேயே இருக்கிறது. அங்கே நடந்த குற்றச்சம்பவங்கள் வழக்கறிஞர்கள் படை ஒன்றை முன்னிறுத்தியே நிகழ்த்தப்பட்டன. உத்தரப்பிரதேசத்தில் தாக்குதலுக்குள்ளான மூத்த காவல்துறை அதிகாரிகள் பேசுவதற்கே இரண்டு நாட்கள் ஆயிற்று.    


அச்சத்தை உருவாக்குவதற்காகப் போடப்பட்டிருக்கும் தேசிய அளவிலான திட்டம் முழுமை அடைந்திருக்கிறது. மக்களுக்கு புதிய சாலைகள், வேலைகளைத் தருவதற்கு முன்னதாக அவர்கள் அனைவரிடமும் அச்ச உணர்வு தவறாமல் தரப்படுகிறது. இப்போது அச்சம் என்பதே அனைவருக்கும் வாழ்வியல் முறையாக மாறியிருக்கிறது. வீட்டை விட்டு காலை வெளியே எடுத்து வைக்கும் போதே - இங்கே பாருங்கள்... அதைப் பாருங்கள்... கவனத்துடன் இருங்கள் என்று பல எச்சரிக்கைகள் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. ஆக நாம் அனைவருமே அச்சம் என்பதை பல்வேறு வடிவங்களில் எதிர்கொண்டு வருகிறோம். அரசின் மடியில் இருக்கின்ற ‘லேப்டாக்’ ஊடகங்கள் மட்டுமே இன்றைக்கு இந்தியாவில் மிகவும் பாதுகாப்பானவை.  அதிகாரத்தின் மடியில் தாவி விழுந்து புரண்டாலும் அவற்றை யாரும் ஒன்றும் சொல்லப் போவதில்லை. பக்திப் பாடல்களுக்குள் உங்களை இழந்தவராக, நாரதரைப் போல தம்புராவை மீட்டிக் கொண்டு தொலைக்காட்சித் திரைகளில் நாராயணா, நாராயணா என்ற கானத்தைப் பாடிக் கொண்டிருப்பவராக மட்டுமே நீங்கள் இருக்கலாம். ஜனநாயகத்தின் மிக உயரிய இடத்தில் அமர்ந்திருக்கும் நமது சபாநாயகரின் இத்தகைய எண்ணங்களுக்கு மிகவும் நன்றிக்கடன்பட்டவர்களாக நாம் இருப்போம்.   

ராஜஸ்தானில் ஆசாத் அஷ்ரப், அனுபம் பாண்டே ஆகியோருக்கு நடந்தவற்றை எண்ணிப் பாருங்கள். காவல்துறையைச் சேர்ந்த ஒருவரே ’எனது வேலை போனாலும் பரவாயில்லை. நான் உன்னை அடிப்பேன். இழிவுபடுத்துவேன்’ என்று கூறியிருக்கிறார். அச்சத்தை உருவாக்குகின்ற தேசிய அளவிலான திட்டத்தை நிர்வகிக்கின்ற அதிகார அமைப்பே தன்னுடைய அரசியல் தலைவராக, எஜமானராக இருப்பதைப் புரிந்து கொண்ட தைரியத்திலேயே அவர்  இவ்வாறு பேசியிருப்பதாகத் தோன்றுகிறது.  

§

உண்மையான குடியரசு என்றால் என்னவென்று மறந்தவர்களாக, இந்தச் செய்திச் சேனல்களின் வழியாக மட்டுமே இந்தியாவைப் பார்த்து, இதுதான் இந்தியா என்று பலரும் கூறப் போகிற காலம் வெகுதூரத்தில் இல்லை என்பது இந்தச் செய்திச் சேனல்கள் போகிற போக்கைப் பார்த்தாலே தெரிகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாக அல்லது பத்து நாட்களுக்குள்ளாக அந்தத் திட்டமும் நிறைவேறி விடும். மிகவிரைவில் தங்களுடைய வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தி எண்பது சதவீத வாக்குகளைப் பெற்று அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.   

இந்திய நாடு கும்பலால் வழிநடத்தப்படுவதாக மாறி வருகிறது என்றே நான் கருதுகிறேன். இந்தக் கும்பல் நம்மைச் சார்ந்திருப்பவர்களையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது. நம்மோடு ரத்த உறவைப் பகிர்ந்து கொண்டுள்ள  பலரும், தாங்கள் விரும்புகிறவர்களை லத்தியால் அடித்துக் கொல்லவும், திட்டவும் செய்கிற இந்தக் கும்பலுடன் இருக்கின்றனர்.  

தனது தாயோடு ரயிலில் பயணம் செய்த நண்பரொருவரின் கதையைக் கூறுகிறேன். மாறுதலை விரும்பாத பழமைத்தனம் கொண்டவரான அவரது தாய் அந்தப் பயணத்தின் போது பர்கா அணிந்திருந்தார். அந்தப் பயணத்தில் அவர்களைச் சுற்றிக் கூடியிருந்த கும்பல் தொடர்ந்து அவர்களைப் பழித்துக் கொண்டே வந்தது. முதல் இரண்டு மணி நேரப் பயணத்திற்குள்ளாகவே அவர்கள் இருவரும் தங்களுடைய தன்னம்பிக்கையை முழுவதுமாக இழந்து விட்டனர். முஸ்லீம் பயணிகள் தங்களது பயணத்தின் போது சாப்பிடுவதற்கு என்ன கொண்டு வருகிறார்கள் என்பது பற்றி சிறிய ஆய்வை மேற்கொண்டு பாருங்கள். தங்களுக்குப் பிடித்தமான முட்டைக்கறி போன்ற உணவு வகைகளை வைத்திருப்பதை - ஒருவேளை யாராவது சோதித்துப் பார்த்து தெரிந்து கொண்டு விட்டால் என்ன ஆகும் என்ற பயத்திலேயே அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான உணவைக்கூட தங்களுடைய பயணத்தின் போது இப்போது எடுத்து வருவதில்லை.


அவர்களால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் அச்சத்தை உருவாக்குகின்ற இந்தத் திட்டத்தால் சிறிதும் பாதிக்கப்படாதவர்களாகவே நாம் இருந்து வந்திருக்கிறோம். இப்போது நமது செய்தியறைகளுக்குள்ளும் அவர்களது திட்டம் வந்து சேர்ந்து விட்டது. இந்த நிலைமை எங்கே கொண்டு சேர்க்கும் என்ற கேள்விக்கு என்னிடம் பதில் கிடையாது. வேண்டுமென்றால் அடி வாங்கியவர்களுக்கும், இறந்து போயிருப்பவர்களுக்கும் உதவக் கூடிய வகையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஹெல்ப்லைன் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். மிக எளிதாக, எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் நாரதரின் அடையாளங்களை செய்தி அறைகள் உள்வாங்கிக் கொண்டு விட்டன. நாரதர் உண்மையில் இன்றைய இதழியலுக்கான அடையாளமாகவே மாறிப் போயிருக்கிறார். இப்போதைக்கு இதற்கு மேல் என்ன ஆகும், எப்போது அது நடக்கும் என்பதைக் கூற முடியாது.      

பெரும்பான்மையான நமது தோழர்கள் மிகச் சில பத்திரிக்கையாளர்களைத் தங்களுடன் வைத்துக் கொண்டு இணையதளத்தில் மாற்று இதழியல் தொழிலை நடத்தி வருகிறார்கள். அந்த நண்பர்கள் இப்போது அவர்களுடைய முக்கிய இலக்காக மாறியிருக்கிறார்கள். அவர்கள் நடத்தி வருகின்ற இணையதளங்கள் ஒரு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரையில் ஹிட்களை கொண்டு இயங்கி வருகின்றன. வழக்கமான பாணியில் செயல்படுபவர்களின் குரல்கள் அனைத்தும் ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சூழலில் இப்போது தாங்களும் தாக்கப்படுவதாக இந்த இணையதளங்கள் தெரிவிக்கின்றன.  யாரோ எங்கோ பகிர்ந்து கொள்ளும் தகவல் இணையதளம் மூலமாக மற்றொரு இடத்தில் உள்ள மற்றொருவரைச் சென்றடைகிறது. இந்த வகையான பத்திரிக்கையாளர்களே இனிமேல் தாக்குதலுக்குள்ளாகப் போகிறார்கள். இவர்களைத் தாக்குவதையே அடுத்து தங்களது இலக்காக அவர்கள் வைத்துக் கொள்வார்கள். இதுபோன்ற செயல்கள் அனைத்தும் சற்றும் குறைவில்லாமல், அரசியல் விளையாட்டின் ஓர் அங்கமாகவே நடந்தேறி வருகின்றன.    

சில்லறை விற்பனை செய்து கொண்டிருக்கின்ற அவர்களுடைய உள்ளூர் அரசியல் முகவர்கள், வாட்ஸ்ஆப் மூலமாக கொலை செய்யும் தொழிலில் இறங்கியிருக்கின்றனர். லத்திகளைக் கொண்டு தாக்கி ஒருவரைக் கொல்வதற்காகப் பத்து பேரைத் திரட்டுவதற்கு அதிக நேரம் ஆகும். ஆனால் இங்கே பாசித் மாலிக் விஷயத்தில், வாட்ஸ்ஆப் மூலமாக ஒரு கும்பலைக் கூட்டுவதற்கு அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை. நமக்கும்கூட களங்களில் இருந்து அறிக்கைகளை அனுப்புவதற்கு அது பயன்படுகின்றது.   


எனது அனுபத்திலிருந்து நான் பேசுகிறேன். பணமதிப்பு நீக்க அறிவிப்பிற்குப் பிறகு, ஓரிடத்திற்குச் சென்று செய்தி சேகரிப்பது என்பது மிகவும் சிரமமான காரியமாக மாறியது. உங்களால் எஸ்பிஜி பாதுகாப்போடு வெளியில் செல்ல முடியாது - சரிதானே? மேலும் உண்மையில் எஸ்பிஜி பாதுகாப்பு என்பதே வெளியில் செல்லாதவர்களுக்கு அளிக்கப்படுவதாகத்தானே இருக்கிறது! வெளியே எங்கும் செல்லாதவர்களுக்கே முழுமையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் பத்திரிகையாளர் ஒருவரால் எங்கே செல்ல முடியும், குறைந்த கால அவகாசத்திற்குள் எவ்வளவு பேரிடம் சென்று உரையாடி தனது வேலையை முடிக்க முடியும்? தங்களை இந்த மாதிரியான நிலைக்கு வந்து சேருவதற்கேற்றவாறு அவர்கள் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.    

அவர்கள் இவ்வாறு உருவாக்குகின்ற அச்சத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பது இப்போது நமது கைகளிலேயே இருக்கிறது. தேசிய அளவில் இன்றைக்கு உருவாக்கப்பட்டிருக்கின்ற அச்சம் இதுவரையிலும் கேள்விப்படாத அளவிலே இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தொலைபேசியில் ஓயாது பேசிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில், மறுமுனையில் இருப்பவனிடம் உன்னுடைய தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்று சொன்னவுடனேயே அவன் தொலைபேசியை அணைத்து விடுவதைக் கவனித்துப் பாருங்கள். அவன் உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படவில்லை என்பது உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா என்று உங்களிடம் திருப்பிக் கேட்கலாம்.  

நான் யாரைப் பற்றி பேசுகிறேன், எதைப் பற்றி விவாதிக்கிறேன் என்பதை உங்கள் மனதிற்கேற்றவாறு, உங்களுக்கான வழியில் தேசம் எங்கும் பரப்புங்கள். உங்களுடைய நோக்கங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று கருதினால், இது குறித்து அனைவரிடமும் பேசுங்கள். இது மிகவும் ஆபத்தான காலமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருப்பது மட்டுமே பயன் தரப் போவதில்லை. அத்தகைய ஒப்புமையைச் செய்வதற்கு என்னிடம் தயக்கம் இருந்தாலும், மிகப் பெரும்பாலானோர் ஹிட்லருடன் ஒப்பிட்டே பேசுகின்றனர். என்னால் ஹிட்லரைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றாலும், நம்முடைய தொழிலுக்குள் கோயபல்ஸ் மிகப் பிரமாண்டமாக நுழைந்திருப்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். கண்ணுக்குப் புலப்படவில்லை என்றாலும், அவர் அங்கே நுழைந்து தன்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டார். ஏழு ஆண்டுகளாகத் தீராமல் இருக்கும் பிரச்சனை குறித்து இரவு வேளையில் தொலைக்காட்சி சேனலில் தனது பிரச்சாரத்தை நடத்துவது நிச்சயம் கோயபல்ஸின் வேலையாக மட்டுமே இருக்க முடியும்.      

கடந்த மூன்று ஆண்டுகளாகவே நான் தொலைக்காட்சியைப் பார்க்காதீர்கள், தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்துங்கள் என்று தொடர்ந்து கூறி வருகிறேன். ‘நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது குப்பை’ என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்வது மிகவும் அவசியமாகிறது. முஸ்லீம்களைக் கொல்வதற்காக உங்களை அவர்கள் தயார்படுத்தவில்லை என்றாலும் அவர்கள் மேற்கொண்டு வருகின்ற பிரச்சாரத்தின் விளைவாக ஒருநாள் யாரையும் கொல்வதற்கு நிச்சயம் தயாராகி விடுவீர்கள். குழந்தைகளைக் கடத்தும் கும்பல் பற்றிய வதந்தி ஜார்கண்ட் மாநிலத்தில் காட்டுத்தீயாகப் பரவிய போது, நயீம், கலீமோடு சேர்த்து உத்தம், காங்கேஷ் போன்றோர் கொல்லப்பட்டனர். நொய்டாவில் தங்களுடைய மாடுகளுடன் சென்ற பூப்சிங், ஜபார்சிங் ஆகியோர் தாக்கப்பட்டனர். ‘எங்களைக் கொன்று விடாதீர்கள். நாங்கள் முஸ்லீம்கள் அல்ல’ என்று அப்போது தங்களைத் தாக்கியவர்களிடம் அவர்கள் கெஞ்ச வேண்டியதாயிற்று.   

கூடுகின்ற கும்பலில் இருக்கும் எவரொருவரையும் கொலையாளியாக மாற்றுவது என்பது அவர்களின் திட்டம்தான். கும்பலைச் சமாளிப்பது அவர்களுக்கு மிகவும் எளிதானது. கும்பல் என்பது எந்தவொரு தனிப்பட்ட நபருக்கும் சொந்தமானதாக இருப்பதில்லை. ஆனால் இப்போது எல்லா இடங்களிலும் கும்பலுக்குள் ஓர் அரசாங்கம் இருக்கிறது. அங்கே கூடுகின்ற மக்களின் ஆதரவோடு அந்தக் கும்பல் தனக்கென்று ஓர் அரசாங்கத்தைக் கொண்டிருக்கிறது.   


ஜனநாயகத்திற்கு அத்தியாவசியமாக இருக்கின்ற விவாதங்கள் நசுக்கப்படுவதை மட்டுமே நாம் எதிர்க்கவில்லை. மிக விரைவிலேயே நமது வீட்டை விட்டுக்கூட காலை எடுத்து வெளியே வைக்க நம்மால் முடியாது என்பதுதான் உண்மையில் நமக்கு முன்பாக இருக்கின்ற பிரச்சனையாகும். நன்றாகத் திட்டமிட்டு அவர்கள் வேலை செய்து வருகிறார்கள். எல்லோருக்கும் நன்கு அறிமுகமான ஒருவரே பலத்த ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியவராக இருக்கிறார் என்று ஒருவேளை நீங்கள் கருதக்கூடும். பாசித் மாலிக் என்ன மிகவும் பிரபலமான நபரா? சூழல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், மாலிக் என்ற பெயர் குழப்பும் போது அவர்கள் உருது மொழியை பாகிஸ்தானிய மொழி என்று கூறுகிறார்கள். உருது மொழியில் எழுதப்பட்டிருப்பது எதையாவது காணும் போது, அது பாகிஸ்தானிய மொழி என்று கூறி தாக்குதலை ஆரம்பித்து வைக்கிறார்கள்.    

இங்கே மிகப் பெருமளவிலான ஆதரவு இல்லாதது உண்மையில் கவலையளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளின் மீது நம்மில் பெரும்பாலானோர் கவனத்தைச் செலுத்துவதில்லை. அவர்களும் பத்திரிக்கையாளர்கள்தான். இவ்வாறாகப் பலரும் கொண்டிருக்கும் நிலைப்பாடு, இத்தகைய நிகழ்வுகளுக்கு அவர்கள் அளிக்கும் மௌன ஆதரவு என்பதாகவே நம்மால் உணர முடியும். நான் அடிக்கடி இத்தகைய பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில்தான் இருக்கிறேன். இதுவரை இவ்வாறான செயல்கள் குறித்த வெறுப்பையோ அல்லது எதிர்ப்பையோ நான் ஒருபோதும் அவர்களிடம் கண்டதில்லை. சகபத்திரிக்கையாளர் ஒருவர் தாக்கப்படும் போது அதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பது, அடிப்படை உணர்வாக இருக்க வேண்டிய நமது ஒற்றுமையை நாம் இழந்திருக்கிறோம் என்பதற்கான எச்சரிக்கை மணியாகவே இருக்கிறது.     


நடக்கும் நிகழ்வுகளைப் பட்டியலிட்டு வாரந்தோறும் வெளியிட வேண்டிய தருணம் வந்திருக்கிறது. ஆனால் இப்போது எதிர்ப்பைக் காட்டுவதற்கான இத்தகைய கூட்டங்களை நடத்துகின்ற நிலையில் மட்டுமே நாம் இருந்து வருகின்றோம். விரைவில் நாம் அனைவரும் அஞ்சலிக் கூட்டங்களில் மட்டுமே சந்தித்துக் கொள்கின்ற சூழல் ஏற்படலாம்.     

 

https://thewire.in/151348/media-freedom-ravish-india/


2017 ஜூன் 26 அன்று வெளியான கட்டுரை

 


Comments