வேளாண் சட்டங்களை மோடி ரத்து செய்துள்ளதற்கு விவசாயிகள் மீது அவர் கொண்டுள்ள 'மரியாதை' காரணமா?

ஜானவி சென்

வயர் இணைய இதழ்

2021 நவம்பர் 19


2021 நவம்பர் 19 வெள்ளிக்கிழமையன்று காலை வேளாண் சட்டங்களை ரத்து செய்து அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சி விவசாயிகள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றிருப்பது தெரிகிறது. இந்த வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விவசாயிகள் அனைவரையும் எங்களால் நம்ப வைக்க முடியவில்லை என்பது எங்களைப் பொறுத்தவரை முக்கியம் என்று கூறிய அவர் ஒன்றிய அரசு அதனாலேயே அந்த சட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.     

சற்றே கடந்த காலத்தை நினைவு கூர்ந்து பார்த்தால் பிரதமரின் வார்த்தைகள் நம்பிக்கையளிக்கும் வகையில் இருக்கவில்லை என்பதை எளிதில் நம்மால் உணர முடியும். கடந்த ஓராண்டிற்கும் முன்னதாகவே இந்த மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள் தங்களுடைய கவலைகளை வெளிப்படுத்தத் தொடங்கினர். பின்னர் தில்லியின் எல்லைகளிலும் பிற மாநிலங்களிலும் விவசாயிகள் போராடத் துவங்கியதிலிருந்தே அவர்கள் மீது பாஜக தலைவர்கள் ஆத்திரமூட்டும், அச்சுறுத்தும் கருத்துகளை வெளியிட்டு வந்துள்ளனர்.  

போராடிய விவசாயிகளுக்கு எதிராக இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பாஜக தலைவர்கள் கூறிய கருத்துகளில் பெரும்பாலானவை விவசாயிகளின் போராட்டங்களை இழிவுபடுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. வேளாண் சட்டங்களுக்கெதிரான போராட்டம் விவசாயிகளால் நடத்தப்படவில்லை; சில அன்னிய சக்திகளே தங்களுடைய சொந்த நலன்களுக்காக போராட்டத்தை நடத்துவதாகத் தெரிகிறது என்றே பாஜகவினரின் கருத்துகள் இருந்து வந்திருக்கின்றன. இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல் முழுமையானது அல்ல என்றாலும் மக்களுடைய போராட்டங்கள் மீது பாஜக தலைவர்களிடம் இருக்கின்ற பொதுவான அணுகுமுறையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே இருக்கின்றது.   

1. ‘உங்களை ஒழுங்குபடுத்த இரண்டு நிமிடங்கள் போதும்’: அஜய் குமார் மிஸ்ரா

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் குறித்து பேசியவர்களில் அதிக அளவில் தலைப்புச் செய்தியில் இடம்பிடித்தவர் ஒன்றிய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா ஆவார். ‘என்னை எதிர்த்து நின்று பாருங்கள். உங்களை ஒழுங்குபடுத்த இரண்டு நிமிடங்கள் போதும்’ என்று ஒரு வீடியோவில் மிஸ்ரா கூறுவதைக் கேட்க முடிகிறது. ‘நான் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ. மட்டுமல்ல... என்னைப் பற்றி தெரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்பே நான் சவால்களை எதிர்கொள்வதிலிருந்து ஒருபோதும் ஓடி ஒளிந்ததில்லை. நான் சவாலை ஏற்கும் நாளில் நீங்கள் அனைவரும் பாலியா (மாவட்டத்தின் உள்ளூர் இடம்) மட்டுமல்ல, லக்கிம்பூரையே (அவரது தொகுதி) விட்டுச் செல்ல வேண்டியிருக்கும்’ என்று கூறியிருந்தார்.  

லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளுக்கு எதிரான வன்முறையில் அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஈடுபட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அஜய்குமார் மிஸ்ரா வெளியிட்ட கருத்துகள் குறிப்பிட்ட கவனத்தைப் பெற்றன. ஆஷிஷ் மிஸ்ரா உட்பட பலர் கலந்து கொண்ட வாகன ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது வாகனத்தைக் கொண்டு மோதித் தள்ளியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். தற்போது ஆஷிஷ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலும், மோடியின் அமைச்சரவையில் அவரது தந்தை தொடர்ந்து அமைச்சராகவே இருந்து வருகிறார்.  

2. போராட்டக்காரர்கள் 'பயங்கரவாதிகள்... காலிஸ்தானி கொடிகளுடன் இருக்கின்றனர்’: ஜஸ்கவுர் மீனா

போராட்டக்காரர்கள் இந்தியாவுக்கு வெளியிலிருந்து கிடைக்கின்ற ஆதரவுடன் உள்ள காலிஸ்தானிகள் என்பதே விவசாயிகளின் போராட்டத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட பாஜக தலைவர்களிடையே இருந்த பொதுவான பல்லவியாக இருந்தது. இதுபோன்ற குற்றச்சாட்டை ஆதாரம் எதுவுமில்லாமல் முன்வைத்தவர்களில் ஒருவராக ராஜஸ்தானின் தௌசாவைச் சேர்ந்த பாஜக எம்பியான ஜஸ்கவுர் மீனா இருந்தார். போராட்டங்கள் மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருந்த நிலையில், ஏகே 47 துப்பாக்கிகளை விவசாயிகள் வைத்திருப்பதாக மீனா கூறினார்.    

‘இப்போது வேளாண் சட்டங்களைப் பற்றியுள்ள இந்த விஷயங்களைப் பாருங்கள். அங்கே பயங்கரவாதிகள் உட்கார்ந்திருக்கிறார்கள். அந்த தீவிரவாதிகள் ஏகே 47 வைத்திருக்கிறார்கள், அவர்களிடம் காலிஸ்தான் கொடிகளும் உள்ளன’ என்று மீனா கூறியது ராஜஸ்தான் பாஜகவின் அதிகாரப்பூர்வ கணக்கு மூலம் ட்வீட் செய்யப்பட்டிருந்த வீடியோவில் கேட்டது.   

3. ‘காலிஸ்தானிகள், மாவோயிஸ்டுகள்’: அமித் மாளவியா

இதே பாணியில் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாளவியாவும் பேசியுள்ளார். மீண்டும் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் அவர் போராடுகின்ற விவசாயிகளுக்கு காலிஸ்தானியர்கள், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறது என்று கூறினார். தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விவசாயிகளுக்குத் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்ததால், டெல்லியை எரிக்க கெஜ்ரிவால் முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.     


4. ‘விவசாயிகள் என்று கூறப்படுகின்ற குண்டர்கள்’: ஒய்.சத்யகுமார்

மூன்று சட்டங்கள் குறித்து விவசாயிகளிடமிருந்த கவலையை பாஜக உண்மையில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்ற வகையில் கட்சியின் தேசிய செயலாளர் ஒய்.சத்யகுமார் மற்றொரு கருத்தை தெரிவித்தார். அவர் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, குண்டர்கள் என்று குறிப்பிட்டார். தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற போராட்டக்காரர்களை காலிஸ்தானிகள், ஜிஹாதிகள் என்றும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

‘விவசாயிகள் என்று அழைக்கப்படும் குண்டர்கள் உத்தரப்பிரதேசத்தில் வன்முறைப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பது தற்செயல் நிகழ்வு அல்ல. நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்படுகின்ற பரிசோதனை’ என்று அவர் தன்னுடைய ட்வீட்டில் தெரிவித்துள்ளார். ஜிஹாதிகளும், காலிஸ்தானிகளும் மாநிலத்தில் அமைதியின்மையை பரப்ப விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.


5. ‘தீவிரவாதிகள் போராட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர்’: துஷ்யந்த் குமார் கெளதம்

பாஜக தேசிய பொதுச் செயலாளரும், உத்தரகாண்ட் மாநிலப் பொறுப்பாளருமான துஷ்யந்த் குமார் கௌதம், காலிஸ்தான், பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்கள் விவசாயிகள் போராட்டத்தில் எழுப்பப்பட்டதாகக் கூறினார். ஆனால் உண்மையில் அத்தகைய முழக்கங்கள் எதுவும் எழுப்பப்பட்டிருக்கவில்லை.

‘வேளாண் சட்டங்கள் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொருந்துவதாக இருக்கின்றன.  ஆனால் போராட்டங்கள் ஏன் பஞ்சாபில் மட்டும் நடக்கின்றன? காலிஸ்தான் ஜிந்தாபாத், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கங்கள் போராட்டத்தில் எழுப்பப்பட்டன. அதை போராட்டம் என்று எப்படி சொல்வது என்று கேள்வியெழுப்பிய கௌதம். ‘போராட்டத்தைக் கைப்பற்றியுள்ள தீவிரவாத சக்திகள் தேச விரோத முழக்கங்களை எழுப்பி வருகின்றன’ என்றார்.   

6. ‘விரும்பத்தகாத நபர்கள்’: மனோகர் லால் கட்டார்

வெளிப்படையாக காலிஸ்தானை ஆதரிக்கின்ற விரும்பத்தகாத நபர்கள் போராட்டத்தில் இருப்பதாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறினார். ‘இந்திரா காந்தியை நம்மால் கொல்ல முடியுமென்றால், நரேந்திர மோடியை ஏன் கொல்ல முடியாது’ என்பது போன்ற முழக்கங்களும் எழுப்பப்பட்டதாக அவர் கூறினார். இந்த நபர்களை தன்னுடைய அரசாங்கம் கவனித்து வருவதாக கூறியிருந்த போதிலும், இதுவரை எதுவும் நடக்கவில்லை.

7. போராட்டத்தை ‘துக்டே-துக்டே கும்பல்’ கைப்பற்றியுள்ளது: சுஷில் குமார் மோடி

போராட்டங்களைத் தாக்குவதற்கு பாஜகவிற்கு மிகவும் பிடித்தமான குற்றச்சாட்டுகளில் ஒன்றான ‘துக்டே-துக்டே கும்பல் போராட்டத்தைக் கைப்பற்றியுள்ளது’ என்ற குற்றச்சாட்டை பீகார் முன்னாள் துணை முதல்வரான சுஷில் குமார் மோடியும் பயன்படுத்திக் கொண்டார். பாஜகவின் கூற்றுப்படி, மாணவர் ஆர்வலர்கள் முதல் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் வரை அதே கும்பல்தான் நாட்டில் உள்ள அனைத்து கருத்து வேறுபாடுகளுக்கும் காரணமாக இருக்கின்றது.  

‘தில்லியில் சமீபத்திய விவசாயிகள் இயக்கத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்களும், ஷாஹீன் பாக் மாடலில் அந்தப் போராட்டம் நடத்தப்படும் விதமும், 'துக்டே-துக்டே கும்பல்' மற்றும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு சக்திகள் போராட்டத்தைக் மைப்பற்றிக் கொண்டதைத் தெளிவாகக் காட்டுகிறது’ என்று சுஷில் மோடி ஹிந்தியில் ட்வீட் செய்திருந்தார்.


8. ‘அராஜகவாதிகளின் வடிவமைப்புகளுக்குள்ளான கினிப் பன்றிகள்’: பி.எல். சந்தோஷ்

தங்கள் சொந்த கவலைகளின் அடிப்படையில் விவசாயிகள் செயல்படவில்லை என்றும் மாறாக செயல்பாட்டாளர் மேதா பட்கர், ஆம் ஆத்மி தலைவர்கள் உட்பட மற்றவர்களாலேயே அவர்கள் வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளரான பி.எல்.சந்தோஷ் நம்புவதாகத் தோன்றுகிறது. ‘அராஜகவாதிகளின் வடிவமைப்புகளுக்கான கினிப் பன்றிகளாக விவசாயிகள் மாறுவதை அனுமதிக்காதீர்கள்’ என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.   


9. 'இடதுசாரிகள், மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவியுள்ளனர்': பியூஷ் கோயல்

‘இடதுசாரிகள், மாவோயிஸ்ட்டுகள் விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவியிருக்கின்றனர். உண்மையில் அந்தப் போராட்டத்தை விவசாயிகள் நடத்தவில்லை’ என்று போராட்டத்தின் ஆரம்பத்திலேயே ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக அவர்கள் போராட்டம் நடத்தவில்லை என்றும் தேச விரோதச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியே போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

’‘விவசாயிகள் போராட்டம் என்று அழைக்கப்படுவது உண்மையில் விவசாயிகளின் போராட்டமாக இல்லை என்பதை நாம் இப்போது உணர்கிறோம். இதில் இடதுசாரி மற்றும் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவியுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட தேசவிரோதிகளை, தங்களுடைய சட்டவிரோதச் செயல்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என்று விவசாயத்துடன் தொடர்பில்லாத கோரிக்கைகள் கடந்த இரண்டு நாட்களாக இருந்து வருவதை நாம் பார்த்தோம்’ என்று ரயில்வே அமைச்சர் கூறினார்.

10. ‘மோசமான அமைப்பு’: ரவிசங்கர் பிரசாத்

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்த முயற்சிக்கும் பாஜக தலைவர்களின் குழுவில் இணைந்து கொண்டார், துக்டே-துக்டே கும்பல் போராட்டங்களை கைப்பற்றியுள்ளது, இதில் மோசமான அமைப்பு ஈடுபட்டுள்ளது என்றும், அதனால்தான் ஒன்றிய  அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என்றும் அவர் கூறினார். 

11. ‘சீனாவும் பாகிஸ்தானும் போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கின்றன’: ராவ்சாகேப் தன்வே

தெருவில் உண்மையில் விவசாயிகள் இல்லை என்பதை பொதுமக்கள் நம்ப வேண்டும் என்று விரும்பியவராக மற்றுமொரு ஒன்றிய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே இருந்தார். 

நடக்கும் போராட்டம் விவசாயிகளின் போராட்டம் அல்ல. அதன் பின்னணியில் சீனா மற்றும் பாகிஸ்தானின் கை உள்ளது. இந்த நாட்டில் முதலில் முஸ்லீம்கள் தூண்டி விடப்பட்டனர். (அவர்களிடம்) என்ன கூறப்பட்டது? என்ஆர்சி வரும், சிஏஏ வரும், இன்னும் ஆறு மாதங்களில் இந்த நாட்டை விட்டு முஸ்லீம்கள் வெளியேற வேண்டியிருக்கும். யாராவது ஒரு முஸ்லீம் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளாரா? அதுபோன்ற முயற்சிகள் பலனளிக்காது என்பதால், தற்போது விவசாயிகளிடம் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. இது மற்ற நாடுகள் உருவாக்கிய சதி’ என்றார்.  

12. ‘நன்றாகத் திட்டமிடப்பட்ட சதி’: மனோஜ் திவாரி

தில்லி பாஜக எம்பி மனோஜ் திவாரியும் துக்டே-துக்டே கும்பல் குற்றச்சாட்டை முன்னெடுப்பவர்களின் வரிசையில் இணைந்து கொண்டார். அந்தப் போராட்டங்கள் நன்கு திட்டமிடப்பட்ட சதியாக இருப்பதாக அவர் கூறினார்.

‘ஷாஹீன்பாக்கில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் குடியுரிமை சட்டத் திருத்தம் (CAA) ஆகியவற்றை எதிர்த்த தனிநபர்கள் மற்றும் குழுக்களில் இருந்த துக்டே-துக்டே கும்பல் இப்போது ஷாஹீன்பாக் 2.0ஐ பரிசோதிப்பது,  விவசாயிகளின் எதிர்ப்பு என்ற போர்வையில் அமைதியின்மையை உருவாக்க முயற்சிப்பதை தெளிவாக நிறுவுகிறது’ என்று அவர் கூறினார்.

பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் விவசாயிகளின் போராட்டங்களை தொடர்ந்து இழிவுபடுத்த முயன்ற போதிலும், விவசாயிகள் அசைந்து கொடுக்கவில்லை. தங்கள் கோரிக்கைகளில் அவர்கள் பிடிவாதமாக இருந்ததாலேயே ஒன்றிய அரசு இப்போது விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று.  

https://thewire.in/politics/farm-laws-repeal-modi-bjp-leaders-comments


 

Comments