தேவிந்தர் சர்மா
உணவு
மற்றும் விவசாய நிபுணர்
ட்ரிப்யூன்
சர்ச்சைக்குரிய மூன்று வேளாண்
சட்டங்களை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள திடீர் முடிவானது, இந்திய
விவசாயத்தின் எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், மறுவடிவமைப்பதற்கும், என்றென்றைக்குமான
பசுமைப்புரட்சிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதற்குமான அரிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
பொருளாதார வளர்ச்சியின் அதிகார மையமாக விவசாயத்தை மாற்றியமைத்துக் கொள்ளும்
அடிப்படைக் குறிக்கோளுடன் பொருளாதார வடிவமைப்பை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டிய தேவை
இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள்
முடிந்ததும் தலைமையின் முன்பாக இருக்கும்.
புதிய தாராளமயப் பொருளாதார
வல்லுநர்கள் கூக்குரலிடுவார்கள் என்றாலும் விவசாயத்தை லாபகரமானதாக, பொருளாதார
ரீதியாக நீடித்திருக்கக்
கூடியதாக,
சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு நிலையானதாக மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இந்த
உலகம் ஆரோக்கியமற்ற, நிலையற்ற உணவு முறைகளுக்கு தன்னை மாற்றிக் கொள்கின்ற
அவசரத்தில் இருந்து கொண்டிருக்கும் நேரத்தில், சுற்றுச்சூழலியல் ரீதியாக
பாதுகாப்பான, மக்களுக்கும், இந்த
பூமிக்கும்
தேவையான வியூகத்தை வடிவமைத்துத்
தருகின்ற
திறன் இந்தியாவிடம் இருக்கிறது. விவசாயத்துறையில் தன்னால் முன்மொழியப்பட்ட சந்தை
சீர்திருத்தங்களை திரும்பப் பெறுவதில் பிரதமர் மோடியிடமிருந்த தைரியமான, ஆனால்
தாமதமான முயற்சியால் வேளாண் சீர்திருத்தத்திற்கான முதல் அடி ஏற்கனவே எடுத்து வைக்கப்பட்டு விட்டது.
வேளாண் சீர்திருத்தம்
என்று அதை ஏன் சொல்கிறேன் என்றால், இதுவரையிலும் விவசாயத்தில் முன்மொழியப்பட்டுள்ள
சந்தை சீர்திருத்தங்கள் பல நாடுகளிலும், கண்டங்களிலும் தோல்வியையே கண்டிருக்கின்றன.
ஏற்கனவே நிலவுகின்ற விவசாய நெருக்கடியை அதிகரிக்க மட்டுமே அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா
வரை, சிலியிலிருந்து பிலிப்பைன்ஸ் வரை உள்ள சந்தைகள் உதவியுள்ளன. அமெரிக்கா, கனடா
மற்றும் பிற நாடுகளில் உள்ள சந்தைகள் விவசாயக் கடன்களை அதிகரித்து, சிறு
விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றி, பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தின்
முக்கிய பங்களிப்பாளராக விவசாயத்தை மாற்றியிருக்கின்றன எனும் போது, இந்தியாவில் அதே
சந்தைகள் பேரதிசயத்தை நிகழ்த்தப் போவதாக வைக்கப்படுகின்ற வாதம் நிச்சயம் தவறானதாகவே இருக்கும். கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கும்
மேலாக, அதிக முதலீடுகள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், அதிக உற்பத்தித்திறன், அதிநவீன சர்வதேச மதிப்புச் சங்கிலிகளின்
பரிணாமம் போன்றாவை வட அமெரிக்காவில் இருந்து வந்துள்ள போதிலும், அங்கே வேளாண் வருமானம்
தொடர்ந்து சரிவையே சந்தித்து வந்திருக்கிறது. 2018ஆம் ஆண்டில் இறுதி நுகர்வோர்
விலையின் ஒவ்வொரு டாலரிலும் விவசாயிகளுக்கான பங்கு வெறுமனே எட்டு சென்ட்டுகளாகக்
குறைந்து அழிவை நோக்கி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை
கணித்திருக்கிறது.
சந்தைகள் உலகெங்கிலும் வேளாண்
வருமானத்தை அதிகரிக்கத்
தவறி
விட்டன என்பது பொது விவாதத்திற்கு உட்பட்டதாக இருந்து வருகின்ற நிலையில், சீர்திருத்தங்கள்
என்று அழைக்கப்படுகின்ற நடவடிக்கைகள் விவசாயத்திற்கு புத்துயிர் அளிப்பது,
விவசாயத்தின் பெருமையை மீட்டுக் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளுக்கான பாதைகளைச்
சீரழித்திருக்கும் நிலையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுகின்ற முடிவு பொருளாதார
காரணங்களுக்காக எடுக்கப்பட்டதா அல்லது வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு
எடுக்கப்பட்டதா என்ற கேள்விகள் எழுப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புதுதில்லியின்
எல்லையில் தங்கியிருந்த ஓராண்டு
காலத்தில் மிகவும் மோசமான வானிலையை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் வெளிப்படுத்திய
விடாமுயற்சி வேளாண் சமூகத்தின் அவலநிலையை நோக்கி நாட்டின் கவனத்தை ஈர்த்தது. அவ்வாறு
உருவாக்கப்பட்டிருக்கும் கொள்கை வெளியைக் கட்டியெழுப்புவதற்கும், என்றென்றைக்கும்
நீடித்திருக்கும் ஆரோக்கியமான, துடிப்பான வேளாண் முறையை மறுவடிவமைப்பு செய்வதற்குமான
நேரமாகவே இது அமைந்துள்ளது.
சட்டங்களைத் திரும்பப் பெற்றிருப்பது
போரில் வென்றெடுத்துள்ள பாதி வெற்றியாகவே இருக்கின்றது. சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களைத்
திரும்பப் பெறுவது என்பது தற்போதிருக்கும் நிலைக்கே மீண்டும் திரும்புவதாகும். அது ஏற்கனவே தாங்கள்
வாழ்ந்து கொண்டிருந்த கடுமையான விவசாய நெருக்கடியில் இருந்து விவசாயிகளுக்கு
விடிவு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதையே காட்டுகிறது. வேளாண் சட்டங்களைத்
திரும்பப் பெற்றிருப்பது நிச்சயமாக விவசாயிகளுக்கு முதல் சுற்றில் கிடைத்திருக்கும்
வெற்றிதான். ஆனாலும் இந்தப் பந்தயம் இன்னும் முழுமையடையவில்லை என்பதை நினைவில் கொள்ள
வேண்டும். விவசாயிகளுக்கான வாழ்வாதாரம் உறுதி செய்து தரப்படாத வரை, பொருளாதார
வல்லுநர்கள் பலரும் நம்புவதைப் போல வழங்கல்-தேவை கொள்கைகளே விலையை உறுதி செய்வதற்கு வழிவகுக்கும் என்றிருப்பது விவசாயிகளை
மேலும் சுரண்டுவதற்கு மட்டுமே வழிவகுத்துக் கொடுக்கும். வேளாண் வருமானத்திற்கு
உத்திரவாதம் அளித்திடாமல் உணவு முறை மாற்றங்களைக் கொண்டு வர முடியாது. இந்தியாவில்
மட்டுமல்ல, உலக அளவிலும் இதுதான் விவசாயம் பெரிதும் எதிர்பார்த்து நிற்கின்ற சீர்திருத்தமாக
இருக்கின்றது.
இருபத்தி மூன்று பயிர்களுக்கு
அரசாங்கம் அறிவித்திருக்கும் குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஒப்பிடும்போது, விவசாயிகள்
சராசரியாக நாற்பது சதவிகிதம் குறைவாகவே சந்தையில் பெறுகிறார்கள் என்பதைக்
கருத்தில் கொண்டால். உற்பத்திச் செலவைக் கூட அவர்களால் திரும்பப் பெற முடியவில்லை
என்பது தெரிய வரும். உண்மையில்
தாங்கள் நஷ்டத்தையே அடைகிறோம் என்பதைக்கூட உணராமலேயே சாகுபடியை மேற்கொண்டு வரும் விவசாயிகள்
இருக்கிறார்கள். கோதுமை, நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அமல்படுத்தப்பட்டிருக்கும்
பகுதிகளில் உள்ளவர்களைத் தவிர, நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தங்களுக்கு
என்ன இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது கூடத் தெரியவில்லை. பதினேழு மாநிலங்களில் - ஏறத்தாழ
நாட்டின் பாதிப் பகுதியில் - விவசாயிகளின் சராசரி வேளாண் வருமானம் ஆண்டுக்கு இருபதினாயிரம்
ரூபாய் மட்டுமே என்று 2016ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை ஒப்புக் கொண்டிருக்கிறது.
2019ஆம் ஆண்டு சூழ்நிலை மதிப்பீட்டு கணக்கெடுப்பு பயிர் சாகுபடியின் மூலம்
கிடைக்கின்ற சராசரி பண்ணை வருவாய் ஒரு நாளைக்கு இருபத்தியேழு ரூபாய் என்பதாக நிர்ணயித்துள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலையை
விவசாயிகளுக்கான சட்டப்பூர்வமான உரிமையாக மாற்றுவதே - அதாவது, தரநிலை விலைக்குக்
கீழே வர்த்தகம் செய்யக் கூடாது என்பதுதான் - இந்திய விவசாயத்திற்குத் தேவையான
உண்மையான சீர்திருத்தமாகும். அது வேளாண் சீர்திருத்தத்தின் இரண்டாவது படியாக
இருக்கும். விவசாயிகளின் கைகளில் அதன் மூலம் அதிக அளவில் பணம் இருக்கும் என்பதால்,
பொருளாதார ரீதியாக லாபகரமானதாக விவசாயம் மாறுவது மட்டுமல்லாமல், நாட்டின் மொத்த
உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும். கிராமப்புற வாழ்வாதாரத்தை அது வலுப்படுத்தும்,
நகரங்களில் வேலைகளுக்கான தேவையைக் குறைக்கும், கிராமப்புற பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிப்பதுடன் பெருமளவிற்கு
கிராமப்புறத் தேவையையும் உருவாக்கும். தொழில்துறைக்காக
விவசாயத்தைத் தியாகம் செய்து கட்டமைக்கப்பட்டிருக்கின்ற குறைபாடுள்ள பொருளாதார
வடிவமைப்பை மாற்றியமைக்க வேண்டிய நேரமாக, மனித மூலதனத்தில் முதலீடு தேவைப்படுகின்ற,
மக்களுக்காக வேலை செய்கின்ற பொருளாதாரத்தைக்
கொண்டு மாற்றியமைக்க வேண்டிய நேரமாக இது இருக்கிறது..
குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதத்தை வழங்குவது பெருமளவிலான
விவசாய மக்களை விவசாயத்திற்குள் விட்டு வைக்கும். சந்தைப்படுத்தக்கூடிய உபரி எதுவுமில்லாத,
ஆனாலும் வீட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்து
வருகின்ற சிறு, குறு விவசாயிகளுக்கு பிரதமர் உழவர் நல நிதி திட்டத்தின் கீழ் கிடைக்கின்ற
பலன்கள் அதிகரித்துத் தரப்பட வேண்டும்.
உலகிலேயே மிகப் பெரியதாக, மிக நீண்ட காலம் நடந்துள்ள இந்திய
விவசாயிகளின் போராட்டம் உலகளாவிய கவனத்தைத் தன்வசம் ஈர்த்துள்ளது. விவசாயத்தை வறுமையில்
வைத்திருப்பதையே நம்பியிருந்த காலாவதியாகிப் போன பொருளாதார சிந்தனைக்கு விவசாயிகளால்
சவால் விடுக்க முடிந்துள்ளது. உண்மையில் இது மிகப்பெரிய சாதனை ஆகும். நேர்மையான
மதிப்பீட்டுடன் இதனைத் தொடர்ந்தால், அது என்றென்றைக்குமான பசுமைப்புரட்சிக்கான
விதைகளை விதைக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
பாரம்பரிய அறிவு, இருக்கக்கூடிய பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழலை அழிக்காத வேளாண் நடைமுறைகளைப் பயன்படுத்திக் கொள்கின்ற உற்பத்தி
முறையைக் குறிப்பிடும் வகையில் என்றென்றைக்குமான பசுமைப்புரட்சி என்ற சொல் வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனால்
உருவாக்கப்பட்டது.
வேளாண் முறைகளை மறுவடிவமைப்பு செய்தல், சந்தைகளை விவசாயிகளுக்கு
நெருக்கமாகக் கொண்டு வருதல், ஊட்டச்சத்து பாதுகாப்பை வழங்கும் வீட்டு உணவு விநியோக
முறையை உருவாக்குதல் ஆகியவை மிகவும் அவசியம். ஆனால் நெருக்கடியை
உருவாக்கியவர்களால் இதைச் சாதிக்க முடியாது. அதற்கு முற்றிலும் புதியதொரு
அணுகுமுறை தேவைப்படும். முதலில் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதன் மூலம் அதைச்
சாத்தியமாக்கிடுவதற்கான முயற்சிகளைத் தொடங்க வேண்டும்.
Comments