நெருக்கடியில் சிக்கியிருக்கும் விவசாயிகள் - அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தவாலே உடன் நேர்காணல்
அனுபமா கடகம்
ஃப்ரண்ட்லைன்
2021 செப்டம்பர் 24
டாக்டர் அசோக் தவாலே
தேசியத் தலைவர், அகில இந்திய விவசாயிகள்
சங்கம்
முப்பதாண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் இயக்கத்தை முன்னின்று
நடத்தி வருகின்ற இந்தியாவின் மிகப்பெரிய விவசாயிகள் அமைப்பான அகில இந்திய விவசாயிகள்
சங்கம் (AIKS) ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (சம்யுக்த் கிசான் மோர்ச்சா - SKM)
முன்னணி அமைப்புகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. இந்திய மக்கள்தொகையில் அதிக
எண்ணிக்கையில் உள்ள விவசாயிகள் தங்களுக்கான அதிகாரத்தைப் பெறுவதற்கான தவாலேயின்
தொடர் முயற்சிகள், கிராமப்புற ஏழைகளின் உரிமைகள் மீது அவருக்கு இருக்கின்ற இடைவிடாத
நாட்டம் போன்றவை இந்திய வேளாண் நிலைமை குறித்த முக்கியமான பார்வையை அவருக்கு ஏற்படுத்திக்
கொடுத்திருக்கின்றன. இந்திய வேளாண் துறையைப் பற்றிய விரிவான அறிவும், பொருளாதார சீர்திருத்தங்களுக்குப்
பிறகு ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் பற்றிய ஆழமான புரிதலும் அவரிடம் உள்ளன. இந்தப்
போரில் வெற்றி பெறும் வரை ஐக்கிய விவசாயிகள் முன்னணி தில்லியின் எல்லையில்
இருக்கும் என்று கூறுகின்ற தவாலே விவசாயிகளே உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்
என்றும், ஆட்சி செய்பவர்கள் இந்த அடிப்படைத் தேவையைப் புரிந்து கொள்ளாவிட்டால்,
நாடு இருண்ட எதிர்காலத்தையே எதிர்நோக்கி நிற்கும் என்று எச்சரிக்கை செய்கிறார்.
ஃப்ரண்ட்லைனுக்கு அவர் அளித்த நேர்காணலிலிருந்து சில பகுதிகள்:
இந்திய
மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து
வருகின்றனர். பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக, விவசாயத்
துறையில் கவனம் செலுத்தி நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக,
இன்றுவரையிலும் தொடர்கின்ற வேளாண் நெருக்கடிக்குள் இந்தியா படிப்படியாகக் சிக்கிக்
கொண்டுள்ளது. இதுபற்றி உங்களுடைய கருத்துகளைக் கூறுங்களேன்.
சுதந்திரம் அடைந்து எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும்
இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக
விவசாயத்தை நம்பியிருப்பதே இந்திய விவசாயத்தின் துயரம் மற்றும் நெருக்கடிக்கான
அறிகுறியாக இருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தின் கட்டமைப்பு மாற்றத்தை
விரைவுபடுத்த பொருளாதார தாராளமயமாக்கல் தவறி விட்டது. விவசாயத்தில் மோசமான
வளர்ச்சியின் காரணமாக, விவசாயக் குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வறுமைக்
கோட்டுக்குக் கீழே தவித்து வருகின்றனர். கிராமப்புறத் தேவைகளுக்கு நிரந்தரமான முக்கியத்துவம்
அளிக்கப்படுவதில்லை. கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியில் வளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை.
விளைவாக விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள மோசமான வளர்ச்சி தொழில்துறையின் வளர்ச்சியையும்கூட
மிகவும் மோசமாகப் பாதித்திருக்கிறது.
விவசாயம் என்று வரும்போது, கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா
ஆகிய மாநிலங்களுக்கு அப்பால் வேளாண் சீர்திருத்தங்கள் முழுமையாக இல்லாததாலும்,
கிராமப்புற உள்கட்டமைப்பில் அரசின் மோசமான பொது முதலீடுகளாலும் வரலாற்றுரீதியாகவே இந்திய
விவசாயம் என்பது மிகவும் மோசமான நெருக்கடி நிலையில் இருந்து வருகிறது. விளைவாக
இந்தியாவில் இருக்கின்ற கிராமப்புற ஏற்றத்தாழ்வுகள் உலகிலேயே மிக அதிக அளவிலே
இருக்கின்றன. ஏற்கனவே கிராமப்புற சமூகத்தில் இருந்து வந்த அத்தகைய முரண்பாடுகள்
1991க்குப் பிறகு வேளாண் சமூகத்தை மூழ்கடித்திருக்கும் நெருக்கடியால் மிகவும் மோசமாக்கப்பட்டுள்ளன.
வேளாண் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அரசின் பொது முதலீடும் குறைந்துள்ளது.
உள்ளீட்டு மானியங்கள் குறைக்கப்படுவதால், இடுபொருள் விலை அதிகரித்திருக்கிறது.
தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகள் மக்களைக் கொள்ளையடிக்கும்
இறக்குமதியின் பெரும் வரவுக்கே வழிவகுத்துக் கொடுத்துள்ளன. அதன் விளைவாக பல
பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்ததால், அனைத்து பயிர்களின் லாப விகிதம்
சுருங்கிவிட்டது. விவசாயக் கடன்கள் சிறு, குறு விவசாயிகளிடமிருந்து பணக்கார
மற்றும் பெருநிறுவன வேளாண் வணிக நிறுவனங்களை நோக்கித் திருப்பி விடப்படுகின்றன. கடந்த
முப்பதாண்டுகளாக இருந்து வருகின்ற புதிய தாராளமயக் கொள்கைகளே உண்மையில் நம்மைச்
சுற்றி நாம் காண்கின்ற தற்போதைய விவசாய நெருக்கடிகளுக்குக் காரணமாக இருக்கின்றன. புதிய
தாராளமயக் கொள்கைகள் தொடங்கிய ஓராண்டிற்குள்ளாக 1992ஆம் ஆண்டில் ஹரியானா மாநிலம்
ஹிசாரில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் தாராளமயக் கொள்கைகளின் ஆபத்து குறித்து கணித்து
அகில இந்திய விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை செய்திருந்தது.
பொருளாதாரச்
சீர்திருத்தம் ஏன் தோல்வியடைந்தது
பொருளாதார
வளர்ச்சி இருந்தபோதிலும், இந்திய விவசாயம் அதிவேக வளர்ச்சியை அடையவில்லை அல்லது
சிறு விவசாயிகள் விடுதலை பெறவில்லை அல்லது விரிவான கிராமப்புற வளர்ச்சி இல்லை.
ஏன்?
வேளாண்துறையில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தோல்வியையே கண்டிருக்கின்றன.
ஏனெனில் வேளாண்துறையின் தேவைகளை அவர்கள் தவறாகவே புரிந்து கொண்டிருந்தனர். வேளாண்
சீர்திருத்தங்கள், பொது முதலீடு, அரசின் ஆதரவு போன்றவை இந்த துறைக்குத் தேவைப்பட்டன.
ஆனால் கொள்கை வகுப்பாளர்களோ தங்கள் கைகளில் எந்தவொரு ஆதாரமுமில்லாமல் விவசாயத்தில்
வெளி மற்றும் உள்நாட்டு சந்தைகளைத் திறந்து விட்டால் அந்தத் துறை தானாகவே வளரத்
தொடங்கும் என்று கருதினர். மேற்கத்திய உலகைப் பாருங்கள். தங்கள் சந்தைகளை அவர்கள் இந்தியாவில்
நாம் செய்ததைப் போல திறந்து விட்டிருந்தால் அவர்களுடைய விவசாயம் ஓராண்டிற்குக்கூட
பிழைத்திராது. அதனால்தான் உலக வர்த்தக அமைப்புடனான பேச்சுவார்த்தைகளில் மேற்கத்திய
விவசாயத்தில் உள்ள பாதுகாப்புக் கொள்கைகளை நீக்குவதற்கு அவர்கள் மறுத்து விட்டனர்.
தங்களுடைய சொந்த விவசாயத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் அதே வேளையில் முரண்பாடாக அந்த
நாடுகளே சந்தையைத் திறந்து விடுமாறு இந்தியா போன்ற நாடுகளிடம் அறிவுறுத்துகின்றன. அவர்களின்
இந்த இரட்டை நிலைக்கு, முற்றிலும் பகுத்தறிவற்ற கோரிக்கைக்கு நமது அரசும் அடிபணிந்து
செல்கிறது.
குறைவான
உற்பத்தித்திறன்
சீர்திருத்தங்களின்
பின்னணியில் விவசாயத்தில் இருந்து வரும் குறைவான உற்பத்தித்திறனும், அதிகரித்து
வருகின்ற தொழிலாளர்களை உள்வாங்க இயலாமையும் கண்கூடாகத் தெரிகின்றன. விவசாயிகள்,
குறிப்பாக சிறு விவசாயிகள் இன்னும் ஓரங்கட்டப்பட்டே இருக்கின்றனர். அதற்கான காரணங்களைக்
கூற முடியுமா?
விவசாயத்தில் குறைவான உற்பத்தித்திறன் என்பது தீவிரமான
பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்திய வேளாண் பண்ணைகளில் மகசூல் குறைவு மிகவும்
அதிகமாக உள்ளது. உற்பத்தித்திறன் வளர்ச்சியில் இருக்கின்ற மோசமான நிலைக்கு பொது
விவசாய ஆய்வுகளில் இருக்கின்ற பலவீனமே காரணம் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம்
தொடர்ந்து கூறி வருகிறது. பொது விவசாய ஆய்வுகளில் முதலீடு செய்வதற்கு நமது விவசாய
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது இரண்டு சதவிகிதம் தேவைப்படும். அதைத்தான்
சீனா செய்து வருகிறது.
பொது விவசாய ஆய்வுகளை வலுப்படுத்தி, அதிக மகசூல் தரும்
விதைகளை மான்சாண்டோவின் விலையில் சுமார் இருபத்தைந்து சதவிகிதம் என்ற அளவிலே உற்பத்தி செய்ததன் மூலம் தங்களுடைய நாட்டிலிருந்து
மான்சாண்டோவை சீனா வெளியேற்றியது. அவர்களுடைய ஆய்வு அமைப்பின் வலிமை அதிக
பொது முதலீட்டில் இருந்தே கிடைத்துள்ளது. ஆனால் நாம் அதில் தோல்வியடைந்திருக்கிறோம்.
இங்கே மான்சாண்டோ மற்றும் விவசாயத்தில் உள்ள அதுபோன்ற பெருநிறுவனங்களின் அடிமைகளாகவே
நாம் இருந்து வருகிறோம். அதேபோல அரசு சாரா நிறுவனங்கள், தனியார் உள்ளீட்டு
விநியோகஸ்தர்களால் நமது விரிவாக்க அமைப்பு முற்றிலுமாக கையகப்படுத்தப்பட்டுள்ளது.
பொது ஆய்வு பலவீனமடைந்ததால், பொது விரிவாக்கமும் சரிவைக் கண்டுள்ளது.
தடையற்ற வர்த்தகத்தின் ஆபத்துகள்
தடையற்ற வர்த்தகம், பொதுச்
செலவினங்களைக் குறைப்பது போன்ற செயல்பாடுகள் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பிற்கு
ஆபத்தானவை என்று பொருளாதார வல்லுநர்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள்.
தடையற்ற
வர்த்தகம் ஓர் அமைப்பாக இன்றைக்கு உலகம் முழுவதும் மதிப்பிழந்து நிற்கிறது. வளர்ந்த
நாடுகள் கூட நம்பகமான நிறுவனம் என்று உலக வர்த்தக அமைப்பை நினைக்கவில்லை. அதனால்தான்
அதிக அளவிலான பிராந்திய, இருதரப்பு தடையற்ற
வர்த்தக ஒப்பந்தங்களுக்கு அந்த நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. உலக வர்த்தக
அமைப்பு செயல்படக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் இருக்குமென்றால், இத்தகைய புதிய
ஒப்பந்தங்கள் ஏன் தேவைப்படுகின்றன? ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆசியா
முழுவதும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் வேளாண் சமூகங்களில் அழிவையே
ஏற்படுத்தியுள்ளன. அந்த நாடுகளின் மீது மலிவான இறக்குமதிகள் கொட்டப்பட்டுள்ளன. அதன்
விளைவாக விலை வீழ்ச்சியடைந்து விவசாய நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.
உணவு
தானிய உற்பத்தியில் மோசமான அடித்தளத்துடன் உள்ள நாடுகளில் தடையற்ற வர்த்தகம்
உணவுப் பாதுகாப்பையும் பாதிப்பதாக இருக்கின்றது. பணப்பயிர்களை ஏற்றுமதி செய்து
அன்னியச் செலாவணியைப் பெற்று அந்த நாடுகள் உணவு தானியங்களை வாங்குகின்றன. பணப்பயிர்களின்
விலை குறையும் போது ஏற்றுமதி வருவாய் குறைவதால் முன்பு இருந்த அதே அளவுகளில் உணவு
தானியங்களை இறக்குமதி செய்வது அந்த நாடுகளைப் பொறுத்தவரை கடினமாகிறது. அவர்களுடைய உணவுப்
பாதுகாப்பை அது மிகவும் மோசமாகப் பாதிக்கின்றது.
அத்துடன்
சிறு,குறு விவசாயிகள் நியாயமான லாபத்துடன் உற்பத்தி செய்யக் கூடிய திறனை பொதுச்
செலவினங்கள் மீதான வெட்டுக்கள் கடுமையாகப் பாதிக்கின்றன. மானியக் குறைப்பு,
பெருநிறுவனங்களின் லாபவெறி ஆகியவற்றால் இடுபொருள் விலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
பன்னாட்டு நிறுவனங்களை நம்பியே விவசாயிகள் வாழ வேண்டியதாகிறது. இவையனைத்தும் சேர்ந்து
சிறு, குறு விவசாயிகள் மீதான கடுமையான அழுத்தத்திற்கு வழிவகுத்துக் கொடுக்கின்றன.
சீர்திருத்தங்களுக்குப் பிறகு
அவற்றில் குறிப்பிடப்பட்டவாறு வேளாண்துறை வளர்ச்சி அடைந்திருந்தால் இந்தியாவின்
வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்திருக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?
1980களில்
இந்தியாவிலிருந்த விவசாய வளர்ச்சி விகிதம், கடந்த முப்பது ஆண்டுகால புதிய தாராளமயக்
கொள்கைகளால் ஏற்பட்ட வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாகவே இருந்தது என்பது மிகவும் எளிமையான
உண்மை. இந்த ஒன்றே சீர்திருத்தங்கள் விவசாயத்தில் எந்த வளர்ச்சியையும் கொண்டு வரத்
தவறி விட்டன என்று வாதிடுவதற்குப் போதுமானதாக உள்ளது.
ஆனால்
இங்கே மற்றொரு விஷயமும் இருக்கிறது. விவசாய வருமானத்தை 2015 மற்றும் 2022க்கு
இடையில் இரட்டிப்பாக்கப் போவதாக நரேந்திர மோடி அரசாங்கம் கூறியது. அது தற்போதைய
பாஜக ஆட்சியின் மிகப்பெரிய தோல்வியாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் விவசாயிகளுக்கு
கிடைத்த வரவுகள் உண்மையில் குறைந்தே இருக்கின்றன. பேரழிவை ஏற்படுத்திய பணமதிப்பு
நீக்கம், தவறாகக் கொண்டு வரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமைப்பு,
கோவிட்-19 நெருக்கடியை மனிதாபிமானமற்ற கடுமையான பொதுமுடக்கத்தின் மூலம்
எதிர்கொண்டது... என்று பாஜக அரசின் செயல்பாடுகள் விவசாயிகளை மிகமோசமாகக்
காயப்படுத்தியுள்ளன. விவசாயிகள் மிகுந்த கோபத்துடன் இருக்கிறார்கள். நிச்சயமாக சீர்திருத்தங்கள்
தங்கள் நிலைமையை மிகவும் மோசமாக்கியிருப்பதாகவே அவர்கள் உணர்கின்றார்கள்.
விவசாயிகள் இயக்கத்தின் பரிணாமம்
கடந்த முப்பதாண்டுகளாக
விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றிருக்கிறீர்கள்.
உங்களுடைய பிரச்சாரங்களின் மையமாக இருப்பது என்ன? விவசாயிகளின் அணிதிரட்டல் எவ்வாறு பரிணமித்துள்ளது
என்று பார்க்கிறீர்கள்?
கடந்த
இருபத்தைந்து ஆண்டுகளில் (1995 முதல்) நான்கு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள்
தற்கொலைக்கு வழிவகுத்த, கடந்த முப்பது ஆண்டு கால புதிய தாராளமயக் கொள்கைகளால்
ஏற்பட்டுள்ள மோசமான விவசாய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்த காலகட்டத்தில்
நடைபெற்ற விவசாயிகள் போராட்டங்களின் மையப் புள்ளிகளைப் பட்டியலிடுகிறேன்.
மூன்று
வேளாண் சட்டங்களை ரத்து செய்வது என்ற அடிப்படையான பிரச்சனையுடன், விரிவான உற்பத்தி
செலவை விட ஒன்றரை மடங்கு (C2+ஐம்பது சதவிகிதம், சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி)
குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) உறுதி செய்கின்ற மத்திய சட்டம்; ஒட்டுமொத்த வேளாண்துறையையும்
தனியார்மயமாக்குகின்ற, அனைவருக்கும் பெருமளவில் மின் கட்டணத்தை அதிகரிக்க வழிவகுக்கின்ற
மின்சார திருத்த மசோதாவைத் திரும்பப்
பெறுதல், வானளாவி உயர்ந்திருக்கும் டீசல், பெட்ரோல், எரிவாயு விலையை பாதியாகக் குறைத்தல்; விவசாயிகள், விவசாயத்
தொழிலாளர்களின் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்தல் (தற்போதைய மத்திய அரசு கடந்த
ஏழு ஆண்டுகளில் பெருநிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி
செய்துள்ளது); பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தின் கீழ் தற்போது
உள்ளதைப் போல, காப்பீட்டு நிறுவனங்களுக்கு இல்லாமல் துயரத்தில் ஆழ்ந்துள்ள
விவசாயிகளுக்கு உதவ பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை முழுமையாக மறுசீரமைப்பு
செய்தல்; சிறு, குறு விவசாயிகள் அனைவருக்கும் மலிவான, போதுமான கடன் வழங்கப்படுதல்;
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதிச் சட்டத்தின் (MGNREGA) கீழ் விவசாயத்
தொழிலாளர்களுக்கான வேலை நாட்களையும் ஊதியத்தையும் இரட்டிப்பாக்குதல்; பழங்குடியின
மக்களுக்கான வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துதல்; விவசாயிகளிடம் இருந்து
வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்துவதை நிறுத்துதல் போன்ற மையப் புள்ளிகளுடன் உண்மையான
நிலச் சீர்திருத்தங்களை நோக்கிய இயக்கமாகவே விவசாயிகளின் போராட்டங்கள் இருந்துள்ளன.
திருத்தப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிலாள
வர்க்கத்திற்கான கோரிக்கையும், தனியார்மயமாக்கல் மூலம் பாஜக ஆட்சி நாட்டை
விற்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையும் விவசாயிகளின்
கோரிக்கைகளுடன் சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த முப்பதாண்டு கால புதிய தாராளமயக் கொள்கைகள் மீதான விவசாயிகள் இயக்கங்களின் பரிணாமம் மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சனைகள் அதிகரித்து வரும் போக்கைத் தெளிவாகக் காட்டுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் பெருநிறுவனச் சார்பு கொள்கைகளைச் செயல்படுத்துவதில் எல்லை மீறி இருந்து வந்துள்ள மோடி அரசாங்கத்தின் மீதான விவசாயிகள் இயக்கத்தின் தீவிரம் தவிர்க்க முடியாத வகையிலேயே இருந்துள்ளது. அரசின் கொள்கைகள் மீது விவசாயிகள் காட்டிய வலுவான எதிர்ப்பு 2017இல் நடைபெற்ற பதினோரு நாள் விவசாயிகள் வேலைநிறுத்தம், 2018இல் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற விவசாயிகளின் மாபெரும் பேரணி உட்பட ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் நடைபெற்ற பெரும் போராட்டங்களில் வெளிப்பட்டது. பின்னர் 2018இல் தேசிய தலைநகரில் அனைத்திந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC) நடத்திய பேரணி, இந்திய தொழிற்சங்கங்களின் மையம்- அகில இந்திய விவசாயிகள் சங்கம்- அனைத்து இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் இணைந்து நடத்திய பேரணி என்று இரண்டு பெரிய பேரணிகள் நடந்துள்ளன.
முந்தைய போராட்டங்கள் அனைத்தின் உச்சகட்டமாக 2020 நவம்பர் 26 அன்று
தில்லியின் எல்லைகளிலும், நாடு
முழுவதிலும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தலைமையில்
துவங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகளின் போராட்டம் அமைந்துள்ளது. ஒட்டகத்தின்
முதுகின் மீது வைக்கப்பட்ட கடைசி வைக்கோல் என்ற பழமொழிக்கேற்ப மத்திய அரசு இயற்றியுள்ள
மூன்று கொடூரமான வேளாண் சட்டங்கள் இருக்கின்றன. இந்த விவசாயிகள் போராட்டம் மதம்,
ஜாதி, பிரதேசம், மாநிலம், மொழி ஆகியவற்றைக் கடந்ததாக உள்ளது. அரசின் அடக்குமுறைகளையும்,
தன் மீது வைக்கப்பட்ட அவதூறுகளையும் துணிச்சலுடன் அது எதிர்கொண்டுள்ளது. மேலும் பெருநிறுவன
வகுப்புவாதம், புதிய தாராளமயப் பாதை மீது துல்லியமாக தனது இலக்கைக் கொண்டுள்ளது.
வெற்றி கிடைக்கும் வரை போராட்டத்தை விரிவுபடுத்தி, தீவிரப்படுத்துவது என்று விவசாயிகள்
முடிவு செய்துள்ளனர்.
ஒப்பந்த
விவசாயம்
சர்ச்சைக்குரிய
பிரச்சனையாக உள்ள ஒப்பந்த விவசாயம் நம்மைச் சுற்றி இருந்து வருகிறது. மாறுபட்ட விளைவுகளைக்
கொண்டிருந்த போதிலும் அது இன்னும் ஊக்குவிக்கப்பட்டே வருகிறது. ஒப்பந்த
விவசாயத்தின் நன்மைகள், தீமைகளைப் பற்றி விளக்க முடியுமா?
சில காலமாகவே ஒப்பந்த விவசாயம் நம் நாட்டில் செய்து வரப்படுகிறது.
விவசாயிகளுக்கு ஆதரவான சிறப்பான கட்டுப்பாடுகளே
ஒப்பந்த விவசாயத்தைப் பொறுத்தவரை நமக்குத் தேவைப்படுகின்ரன. விவசாயிகளுக்குத்
தருவதாக ஒப்புக்கொண்ட விலையை வழங்கிடாமல் பெருநிறுவனங்கள் ஏமாற்றுவதைத் தடுப்பதை உறுதி
செய்ய வேண்டும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத சாகுபடி முறைகளை விவசாயிகள்
மீது அந்த நிறுவனங்கள் வலியுறுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாயிகளுக்குச்
சாதகமாக இருக்கின்ற குறை தீர்க்கும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
ஆனால் மிகவும் மோசமாக வடிவமைக்கப்பட்ட ஒழுங்குமுறையையே நாம் வேளாண்
சட்டங்களில் கொண்டிருக்கிறோம். ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு
மட்டுமே உதவும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களிடம் தங்கள் நிலத்தை விவசாயிகள் இழக்க
நேரிடும் என்ற அச்சம் தொடர்ந்து இருந்து வருகிறது. ஒப்பந்த விவசாயத்தில் கடுமையான
கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன. அதற்கான விதிமுறைகளை மாநிலம் சார்ந்த சூழல்களைக்
கருத்தில் கொண்டு, மாநில அரசுகள் சிறந்த முறையில் உருவாக்கி பின்பற்றலாம்.
வேளாண் சட்டங்களுக்கு
எதிரான விவசாயிகள் போராட்டங்களில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் தீவிரமாகப்
பங்கேற்று வருகிறது. வேளாண் சட்டங்கள் பற்றி பேசலாமா?
பாஜக அரசின் வேளாண் சட்டங்கள் இந்திய விவசாயிகளின்
வாழ்வாதாரத்தின் மீது மிகப் பெரிய தாக்குதலாக அமைந்துள்ளன. விவசாய உற்பத்தி
சந்தைக் குழு, மண்டிகள், அத்தியாவசிய பொருட்கள் சட்டம் போன்றவை 1960களில் இருந்து
விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்காக இருந்து வருகின்ற பாதுகாப்பு அரண்களாகும். விவசாய
உற்பத்தி சந்தைக் குழு, மண்டி அமைப்புகளில் சில குறைபாடுகள் இருந்த போதிலும்,
விவசாயிகள் சந்தைகளை சிறந்த முறையில் அணுகவும், நிலையான விலையைப் பெறவும் அவை உதவி
வந்திருக்கின்றன. அந்த அமைப்புகளில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும் என்பதற்கு மாறாக
குளியலறைத் தொட்டியிலிருந்து குழந்தையை வீசியெறிந்ததைப் போன்று இந்த அரசாங்கம் புதிய
வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. அவர்கள் விவசாய உற்பத்தி சந்தைக் குழு
அமைப்பை விரும்பவில்லை; அந்த அமைப்பை அகற்றி விட்டு, அதானி மற்றும் அம்பானி குழுமங்கள்
போன்ற தனியார் நிறுவனங்களிடம் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டைக் கொடுத்திடவே
விரும்புகிறார்கள். மண்டி அமைப்பின் அழிவு விவசாயிகளை பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள்
தள்ளி விடும். பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அது விவசாயிகளின்
மரணத்தையே விளைவிக்கும். பீகாரில் 2006இல் மண்டி அமைப்பை அகற்றியது அங்குள்ள விவசாயிகளைக்
மிகக் கடுமையாகப் பாதித்தது.
அதேபோன்று, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்தமானது
சில்லறை வணிகத் துறையையும், தளவாடத் துறையையும் பெருநிறுவனத்தின் ஆதிக்கத்திற்கு திறந்து
விடுவதாகவே இருக்கும். அது சந்தையில் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கும்
என்பதால் நுகர்வோருக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் பாஜக ஆட்சியின் இந்த மூன்று வேளாண்
சட்டங்கள் குறைந்தபட்ச ஆதார விலை, அரசாங்க உணவு தானியங்கள் கொள்முதல், இந்தியாவில்
81 கோடிக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் பொது விநியோக முறை ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக
அகற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. அதனால்தான் இந்த வேளாண் சட்டங்கள்
விவசாயிகளுக்கு எதிரானவையாக மட்டும் இல்லாமல், அடிப்படையில் மக்களுக்கு எதிரானவையாகவும்
இருக்கின்றன என்று நாங்கள் தகுந்த காரணங்களுடன் கூறி வருகிறோம்.
மேலும் இந்த வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பிற்கு முரணானவையாகவும்
இருக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். விவசாயம் மாநில அரசாங்கங்களின்
கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். அந்த வகையிலேயே நமது அரசியலமைப்பு செயல்பாடுகளை
வெளிப்படையாக வரையறுத்துள்ளது. ஆனால் மத்திய அரசு, மற்ற பல விஷயங்களைப் போலவே,
அரசியலமைப்புச் சட்டத்தை முற்றிலுமாக அவமதித்து, புறக்கணித்து, கூட்டாட்சிக்
கொள்கைகளை மீறி, மாநில விவகாரங்களை அபகரித்து, இந்த சட்டங்களை நாடாளுமன்றத்தில்
உருவாக்கி நிறைவேற்றியுள்ளது. இடதுசாரிகளும் பிற கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற
உறுப்பினர்களும் இந்தச் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தங்களுடைய கடுமையான
எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். ஆனாலும் அதிர்ச்சியூட்டும் வகையில் எதேச்சதிகார
செயல்முறைகளைப் பயன்படுத்தி இந்த சட்டங்கள் நாட்டின் மீது திணிக்கப்பட்டன.
எங்களுடைய கோரிக்கை மிகவும் தெளிவாக உள்ளது. மூன்று வேளாண் சட்டங்களும்
ரத்து செய்யப்பட வேண்டும். அந்தக் கோரிக்கை நிறைவேறும் வரை எங்களுடைய வரலாற்றுப்
போராட்டம் தொடரும்.
Comments