தேசிய தகுதித் தேர்வுகளின் முட்டாள்தனம்

அவிஜித் பதக்

பேராசிரியர்

சமூக அமைப்பு ஆய்வு மையம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்


நான் ஓர் அதிர்ஷ்டசாலி என்றே நினைக்கிறேன். பல்கலைக்கழக மாணவனாக நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நெட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு என்ற ஒன்றே இருந்திருக்கவில்லை. எனவே தாஸ்தோவெஸ்கியின் அபத்தமான மனிதனைப் போன்று கனவுகளுடன், கற்பனைகளுடன் மிகுந்த ஆர்வத்துடன் என்னால் அப்போது இருக்க முடிந்தது. துல்லியமானவனாக, உணர்வு சாராதவனாக, கட்டமைக்கப்பட்டவனாக இருப்பதற்கு மாறாக என்னிடமிருந்த அறிவுசார் அராஜகத்தை நேசித்தவனாகவே நான் இருந்திருக்கிறேன். ஒருமுறை என்னுடைய பேராசிரியர் ஒருவர் அமெரிக்கப் பேராசிரியர் டேல்க்காட் பார்சன்ஸ் குறித்த கட்டுரை ஒன்றை எழுதுமாறு என்னைக் கேட்டுக் கொண்டார்.  அந்தக் கட்டுரைக்காக பார்சன்ஸ் எழுதிய புகழ்பெற்ற ‘சமூக நடவடிக்கைகளின் அமைப்பு’ (The Structure of Social Action) என்ற புத்தகத்தைப் பெறுவதற்காக நான் நூலகத்தை முழுமையாகச் சுற்றி வந்தேன். அந்தப் புத்தகத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் அதற்குப் பதிலாக கிரகாம் கிரீன் எழுதிய ‘அதிகாரமும், பெருமையும்’ (The Power and the Glory) என்ற புத்தகத்தை தற்செயலாகக் கண்டுபிடித்தேன். அதற்குப் பிறகு பார்சன்ஸை முற்றிலுமாக மறந்து விட்ட நான் கிரீனின் இலக்கியப் படைப்புகள், அரசியல் - ஆன்மீக உணர்வுகளைப் பற்றி அதிகம் கற்றுத் தெரிந்து கொண்டேன். ஆமாம்… என்னிடமிருந்த பைத்தியக்காரத்தனத்தின் விளைவாகவே என்னால் சமூகவியலைக் கற்றறிந்து கொள்ள முடிந்தது. என்னுடைய பேராசிரியர்களும் அந்த பைத்தியக்காரத்தனத்திற்குள் இருந்த எனது திறமையைக் கண்டு கொண்டனர். பின்னர் பிஎச்.டி பட்டம் பெறுவதற்காகச் சேர்ந்த எனக்கு இறுதியில் மாணவர்களுக்குக் கற்பிக்கும் வாய்ப்பு கிட்டியது.      

உண்மையில் நான் ஓர் அதிர்ஷ்டசாலியேதான். தற்போதைய நிலைமையில் மாணவனாக இருந்திருப்பேன் என்றால், பாட அறிவு மட்டுமல்லாது கற்பித்தல், ஆய்வு ஆகியவற்றில் ஒருவருக்கு இருக்கின்ற திறமைகளையும் கண்டறிந்து ஆய்வு செய்வது, பயிற்சியளிப்பது போன்றவற்றிற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக மையப்படுத்தப்பட்ட பொதுத்தேர்வாக இப்போது நடத்தப்படுகின்ற நெட் தேர்வில் நிச்சயம் தோற்றே போயிருப்பேன். எடுத்துக்காட்டாக நெட் தேர்வில் சமூகவியல் என்றால் என்ன என்று கேட்கப்படுகின்ற கேள்விக்கு ஒரேயொரு ‘சரியான’ விடையைத் தேர்ந்தெடுத்து அளிப்பது என்னைப் பொறுத்த வரை எவ்விதத்திலும் சாத்தியமே இல்லாத காரியமாகும். சமூகவியல் உண்மைகள் குறித்த டர்ஹாமியன் ஆய்வுகளில் துவங்கி, அர்த்தமுள்ள சமூக நடவடிக்கைகளின் வெபேரியன் பொருள் விளக்கத்தைப் புரிந்து கொள்வது வரை, தோற்ற நிகழ்வுக் கொள்கையாளர்களால் பயன்படுத்தப்படுகின்ற வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொள்வதிலிருந்து, நிறுவனம், அமைப்பு ஆகியவற்றிற்கிடையில் உள்ள இயங்கியல் தொடர்புகளை கட்டமைப்பு செய்வது என்று அந்தோனி கிடன்ஸ் வரையறை செய்திருக்கும் செயல்பாடுகளை எடுத்துக் கொள்வது வரையிலும் என்பதாக இருக்கின்ற பல்வேறு சாத்தியங்களைக் கொண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்க விரும்புபவனாகவே நான் இருக்கிறேன். அதுவே நெட் தேர்வு கேள்விகளுக்கான சரியானதொரு விடையை மட்டும் என்னால் தேர்ந்தெடுக்க முடியாததற்கான முக்கிய காரணமாக இருந்திருக்கும்.  

       

நிச்சயமற்ற தன்மை அல்லது பன்முகத்தன்மை கொண்ட என்னுடைய பார்வைகள் தங்களிடமுள்ள கருத்துகளின் வழியாக நெட் போன்ற தேர்வுகளை உருவாக்கியிருக்கின்ற, ‘சரியான’ பதில்களின் நிச்சயத்தன்மையில் மூழ்கிப் போயிருக்கின்ற கல்வி அதிகார வர்க்கத்துடன் நிச்சயம் ஒத்துப் போகாது என்றே  நான் கருதுகிறேன். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக கற்பித்து வருகின்ற நான் என்னுடைய மாணவர்கள் ஒருபோதும் என் மீது வருத்தமடைந்திருக்க மாட்டார்கள் என்பதை உறுதியாக நம்புகின்றேன். ஆனாலும்

மெய்யான கற்பித்தல் என்பது

அ) ஆசிரியரின் திருப்தி

ஆ) ஆசிரியரின் நேர்மை, அர்ப்பணிப்பு

இ) மாணவர்களைக் கற்றுக் கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வைத்தல்

ஈ) தன்னுடைய தொழில்முறையில் சிறந்து விளங்குவதற்காக கடுமையாக முயற்சிகளை மேற்கொள்வது’

என்பது போன்று நெட் தேர்வில் கேட்கப்படுகின்ற கேள்விகளுடன் இருக்கின்ற நான்கு பதில்களில் ‘சரியான’ பதிலை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொடுப்பது என்னால் முடியாத காரியமாகவே இருக்கும்.  

ஆசிரியரின் படைப்புத்திறனும், ஆய்வாளரின் திறனாய்வும்

இந்தக் கட்டுரை வெறுமனே நெட் தேர்வு குறித்து எனக்கிருக்கும் சிக்கலைப் பற்றியதாக மட்டுமே இருக்கவில்லை. ‘இந்த தேர்வுமுறை மிகவும் மோசமாக இருக்கிறது; என்னால் கவனத்தைச் செலுத்த முடியவில்லை. இயந்திரத்தனமாக என்னால் எப்படி பதிலளிக்க முடியும்?' என்று கற்பனைத்திறம் மிக்க, சிந்தனைத்திறமுள்ள என்னுடைய மாணவர்கள் கேள்விகளையெழுப்புகிறார்கள். இந்த தேர்வுமுறை குறித்து அவர்கள் தங்களுடைய கவலையை, வேதனையை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து வெளிப்படுகின்ற இந்த அலுப்புத்தன்மை என்னை இன்னும் தீவிரமான கேள்விகளைக் கேட்க வைக்கிறது. கலை மற்றும் சமூக அறிவியல் துறைகளில் இருக்கின்ற பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆய்வாளர்களுக்கு என்னவிதமான திறமைகள், செயல்திறன்கள், பயிற்சிகள், பண்புகள் தேவைப்படுகின்றன, அத்தகைய தேவைகளோடு இந்த நெட் தேர்வு ஒத்துப் போகிறதா என்பது போன்ற கேள்விகள் என்னிடம் இருக்கின்றன.     

உயிர்ப்புடன் இருக்கின்ற வகுப்பறையொன்றின் தன்னாட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஆசிரியரொருவர் மிகவும் சிறந்த தகவல் தொடர்பாளராக இருந்திட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கூகிள் அல்லது விக்கிப்பீடியாவால் மாற்றமடையாத ஆழ்ந்த அறிவு, விமர்சனக் கூர்மை, ஆக்கப்பூர்வமான சிந்தனை ஆகியவற்றைத் தன்னிடத்தே சுயமாகக் கொண்டிருக்கும் ஆசிரியர் ஒருவரால் மட்டுமே அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றித் தர முடியும். எடுத்துக்காட்டாக ப்ரொனிஸ்லா மாலினோவ்ஸ்கி ‘பண்பாடற்ற சமூகத்தில் பாலியல் மற்றும் அடக்குமுறை’ (Sex and Repression in a Savage Society) என்ற புத்தகத்தை எந்த ஆண்டு வெளியிட்டார் என்பது போல கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு வினாடி-வினா நிகழ்ச்சியை நடத்துகின்ற ஒருவரால் உடனடியாகப் பதில் அளித்து விட முடியும். ஆனால் நல்லாசிரியர் ஒருவரால் வினாடிவினா நிகழ்ச்சி நடத்துபவரைப் போன்று ஒருபோதும் இருக்க முடியாது.    

கருத்துகளால் நிறைந்த இந்த உலகை அறிந்து கொள்ளும் வழியில் இளைஞர்களை இட்டுச் செல்வதே ஆசிரியர் ஒருவரின் முதன்மையான பணியாகும். அத்தகைய பணிக்கு புத்தகம் வெளியிடப்பட்ட ஆண்டு போன்ற தகவல்களை மனப்பாடம் செய்வது முற்றிலும் தேவையற்றது. மாறாக மாலினோவ்ஸ்கி உருவாக்கிய புத்திசாலித்தனமான வாதங்களைப் புரிந்து கொள்வதன் மூலம் வித்தியாசமான கலாச்சார, உளவியல் அனுபவங்களைக் கொண்டிருக்கின்ற ட்ரோப்ரியண்ட் தீவுவாசிகளுக்கிடையே இருந்து வருகின்ற ஒடுக்குகின்ற விக்டோரியன் நடத்தைகளைக் கொண்டுள்ள ஆணாதிக்க/தனிக்குடும்ப அமைப்பில் நிலவுகின்ற பிராய்டியன் கோட்பாட்டின் வரம்புகளை அறிந்து கொள்ளும் திறனே இங்கே தேவைப்படுவதாக இருக்கிறது.    

கவனமான வாசிப்பிற்கு வெறுமனே மனனம் செய்வது மட்டும் போதாது. அதற்குப் பதிலாக நன்முறையில் உருவாக்கப்பட்ட, பொருளை முழுமையாக விளக்குகின்ற, பகுப்பாய்வு செய்கின்ற திறமையே தேவைப்படும். சந்தேகங்களுடன் வருகின்ற மாணவர்களை உற்சாகப்படுத்துகின்ற வினையூக்கியாகச் செயல்படுகின்ற ஆசிரியர்களின் வெளிப்படையான உரையாடலுக்கான போதுமான இடமும் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால் காந்தி தவறு செய்தாரா, அம்பேத்கர் சரியாகச் செயல்பட்டாரா என்ற விவாதங்களுக்குப் பதிலாக, புத்தமதத்துடன் அம்பேத்கர் கொண்டிருந்த ஈடுபாடு, சாதிகளை ஒழிப்பதற்கு தார்மீக/ஆன்மீக மாற்றம் தேவைப்படுகிறது என்பதை அம்பேத்கர் உணர்ந்து கொண்டது போன்ற செயல்பாடுகள் ஆன்மீகவாதியான காந்திக்கு நெருக்கமாக - அதை அவர் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் கூட - அம்பேத்கரைக் கொண்டு சென்றதா என்பது குறித்து மாணவர்களை சிந்திக்க வைக்க வேண்டியுள்ளது.    

நல்லாசிரியராக இருப்பவர் நிரந்தரமாக 'சரியான' பதில் என்ற நிச்சயத்தன்மையுடன் வாழ்ந்து விடாமல் அதிலிருந்து ஒதுங்கி நின்று 'சரியானதாகத்' தோன்றுவது பற்றி மறுபரிசீலனை செய்யுமாறு தனது மாணவர்களை ஊக்குவிப்பார். ஆய்வாளர் ஒருவருக்கு புத்தம்புதுக் கேள்விகளை எழுப்புவதற்கான திறமை தேவைப்படுகிறது. பகுத்தாயும் சிந்தனை, உணர்வுப்பூர்வமான புரிதல், எச்சரிக்கையுடன் கவனித்தல், சுயபிரதிபலிப்பு ஆகியவற்றுடன் உண்மையின் பின்னால் இருக்கின்ற விழுமியங்களை, ஒழுங்கமைக்கப்பட்ட எழுத்தைக் (தற்போதைய ஆய்விதழ்களை மனதில் வைத்துக் கொண்டு கல்வித்துறையில் இயந்திரமயமாக/முன்னரே அறிந்து கொள்ளக் கூடிய வகையில் எழுதப்படுகின்ற எழுத்து அல்ல) கண்டறிவது என்று அனைத்து திறமைகளையும் ஆய்வாளர் தன்னிடம் பேணி வளர்த்தெடுத்துக் கொள்ள வேண்டும்.   

மற்றுமொரு எடுத்துக்காட்டைச் சொல்வதானால், இந்த நெட் தேர்வு என்னவெல்லாம் எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறதோ அவையெல்லாம் எனக்கு நன்கு தெரிந்திருந்தாலும்கூட காரல் மார்க்ஸ், நோம் சாம்ஸ்கி, ஆல்பிரட் சோவி ஆகியோரில் 'முதலாம் உலகம்' என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார் என்ற கேள்விக்கான விடை என்னிடம் கேட்கப்படுகின்ற போது, காலனித்துவத்தின் கொடூரமான வரலாறு, அமெரிக்க ஏகாதிபத்தியம், தார்மீக வன்முறை, நன்னெறிகளை மறுக்கும் கலாச்சார உலகமயமாக்கல் போன்றவற்றைத் தனக்குள் கொண்டிருக்கும் அந்த 'முதலாம் உலகத்தை' நாம் ஏன் ‘முதலாம்’ என்று அழைக்க வேண்டும் என்று எனக்குள் எழுகின்ற சங்கடமான கேள்வி சிறந்த ஆய்வாளானான என்னைத் தோல்வியடையச் செய்வதாகவே இருக்கிறது. அது பட்டியலிடப்பட்டிருக்கும் நுட்பங்களோடு இயைந்திருக்கும் நினைவுகளுக்கு அப்பால் உள்ள உண்மைகளின் அரசியல் குறித்து ஆய்வை மேற்கொள்கின்ற உணர்வுப்பூர்வமான விமர்சன சிந்தனை என்றே பொருள்படுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது கூருணர்வுத் திறம் கொண்ட இளைஞர்களே நமது கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் நல்லாசிரியர்களாகவும், ஆக்கப்பூர்வமான ஆய்வாளர்களாகவும், ஆழ்ந்த சிந்தனையாளர்களாகவும் தேவைப்படுகிறார்கள். ஆனால் அவர்களை எவ்வாறு கண்டறிவது என்பதுதான் இங்கே நமக்கு முன்னிருக்கின்ற முக்கியமான கேள்வியாக இருக்கின்றது.     

உள்ளீடற்ற நெட் தேர்வுகளுக்கு அப்பால்

பல்கலைக்கழக மானியக் குழு தற்போதைய வடிவத்தில் இருக்கும் நெட் தேர்வு முறையே மிகச் சிறந்தது என்று நம்மை நம்பச் சொல்கிறது. ஏற்கனவே நான் இந்த வகையிலான தேர்வுகளின் உள்ளீடற்ற தன்மையை நிறுவியுள்ளேன். ஆயினும் அந்தத் தேர்வுமுறை இன்னும் ஏன் நீடிக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. நெட் தேர்வின் முதன்மையான நோக்கம் யாரையும் மதிப்பிடுவதாக இருக்கவில்லை என்பதே உண்மை. முடிந்தவரையில் விரைவாக மக்களை ஒதுக்கி அகற்றுவது என்பதாகவே அதனுடைய நோக்கம் அமைந்திருக்கிறது. திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட உத்திகள் மக்களை வடிகட்டுவதற்காகவே பிற பெரிய போட்டித் தேர்வுகளில் பயன்படுத்தப்படுவதைப் போலவே இந்த நெட் தேர்வும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்நவீனத்துவம் நவீனத்துவத்தின் திடமான அடித்தளங்கள் மீது விமர்சனங்களைக் கொண்டிருந்த போதிலும், நாம் இப்போது அறிவு என்பது அளவிடக் கூடியது, கணித ரீதியாகப் பகுத்தறிதல் மட்டுமே பகுத்தறிவின் வடிவம், அளவிட முடியாத எதுவும் நடைமுறைக்கு ஒவ்வாதது, கற்பனை என்பது நிஜங்களிலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டிய வெறும் கதை என்பது போன்ற நம்பிக்கைகளின் தொகுப்பையே முன்னிலைப்படுத்தி வருகின்றோம்.    


இத்தகைய நம்பிக்கைகளின் முழுமையான வெளிப்பாடாக இருக்கின்ற நெட் தேர்வானது ஒருவரது அறிவை அளவிடுவதற்கான முயற்சியாக இருக்கிறது. அவ்வாறாக இல்லையென்றால், இலக்கியம் மற்றும் கலைத் துறையில் வில்லியம் பிளேக், டி.எஸ்.எலியட், சல்மான் ருஷ்டி, அமிதவ் கோஷ் ஆகியோருடன் ஈடுபாடு கொண்டுள்ள அறிவுத் திறனுள்ள ஆய்வாளர் அல்லது ஆசிரியர் 'ஒரு டப்பாவில் ஐம்பது பைசா, இருபத்தி ஐந்து பைசா, பத்து பைசா நாணயங்கள் 5:9:4 என்ற விகிதத்தில் மொத்தம் 206 ரூபாய் அளவிற்கு இருக்கின்றன. ஒவ்வொரு வகையிலும் எத்தனை நாணயங்கள் இருக்கின்றன என்பதைக் கண்டு பிடிக்கவும்’ என்பது போன்றதொரு கேள்விக்குச் சரியாகப் பதிலளித்து தன்னுடைய தகுதியை நிரூபிக்க வேண்டி இருப்பதன் பின்னணியில் வேறு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா?

இத்தகைய கொள்குறிக் கேள்விகளை வலியுறுத்துவதன் மூலமாக ஒரு சமூகமாக அறிவாற்றலற்ற ஓர்மைப்படுத்துதல், தரப்படுத்துதலுக்கே நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம்; புதுமையான கருத்துகள், படைப்பாற்றல் மிக்க சிந்தனைகள், உரையாடுகின்ற மனம் ஆகியவற்றை விரும்பாதவர்களாக நாம் இருக்கின்றோம்; கவிதை, சமூகவியல், தத்துவம் போன்றவை கூட உடனடி வரையறைகளைச் செய்வது, புள்ளிகளைக் கொண்டு வகைப்படுத்துவது என்று புறநிலைப்படுத்தப்படுகின்றன. இயந்திரமயமாக்கல், திரும்பத் திரும்பச் செய்தல், மகிழ்வற்றிருத்தல், எல்லையில்லா ஒழுங்குமுறைகள் என்று மிகச்சாதாரண நிலைக்கான, சர்வாதிகாரத்திற்கான தளங்களையே நாம் தயார் செய்து கொண்டிருக்கிறோம்.    

இது மிகவும் ஆபத்தான போக்காக இருக்கிறது. ஓர் ஆசிரியராக சில சமயங்களில் கையறு நிலையில் இருப்பதாகவே நான் உணர்கிறேன். இந்த அபத்தங்களுக்கு மத்தியில் வகுப்பறைகள் மட்டுமே இன்னும் பேச முடிகின்ற, பரிசோதித்து புது வழிமுறைகளைக் கண்டறியும் இடங்களாக இருக்கின்றன என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கின்றது. மாணவர்களிடம் ‘என்னுடைய போதனைகள் நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு உங்களுக்கு உதவப் போவதில்லை என்றாலும் என்னுடைய போதனைகளின் வழியாக மிகவும் ஆழமான விஷயங்களைக் கற்றுக் கொண்டு, மார்க்சின் பேரார்வம், ஃபூக்கோவின் பித்து, வெபரின் துயரம் ஆகியவற்றை உங்களால் கொண்டாட முடியலாம்’ என்றே கூறி வருகிறேன்.    

எனவே உண்மையை மையமாகக் கொண்ட, இயல்பாக இல்லாத இந்த கொள்குறிக் கேள்விகளைத் தவிர்த்து, வேறுவிதமான சவால்களை அவர்களுக்குத் தர விரும்புகிறேன். எடுத்துக்காட்டாக தியோடோர் அடோரோனோவால் கூட 'பத்து சொற்களுக்குள் வரையறுத்துச் சொல்ல முடியாத - 'கலாச்சாரத் தொழிற்துறை' என்பதற்கான 'சரியான' விளக்கத்தைச் சொல்லுங்கள் என்ற கேள்வியை அவர்களிடம் கேட்பதற்குப் பதிலாக, அந்தக் கேள்விக்கான பதிலை புகைப்படக் கட்டுரையாக எழுதுமாறு நான் அவர்களை ஊக்குவிக்கிறேன். ‘பின் குறிப்பிடப்பட்டுள்ள The Division of Labour, Economic and Philosophic Manuscripts of 1844 and The Protestant Ethic and the Spirit of Capitalism என்ற புத்தகங்களை அவை வெளியிடப்பட்ட ஆண்டின் அடிப்படையில் வரிசைப்படுத்துங்கள்’ என்று கேட்டுக் கொள்ளுவதற்குப் பதிலாக, நகரில் உள்ள விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் முறைகள் குறித்த தகவல்களைச் சேகரித்து அயன்மையாதல், சமூக உறவுக் குலைவு, விரக்தி போன்ற கோட்பாடுகளை மறுபரிசீலனை செய்திடுமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற கேள்விகளுக்கு தனித்துவமான நிலையான பதில் என்று எதுவும் இருப்பதில்லை என்பதால் அந்தக் கேள்விகளுக்கு மாணவர்கள் அளிக்கும் பதில்களை கணினியால் நிச்சயம் மதிப்பீடு செய்ய முடியாது.  

நான் மிகச் சரியான ஆசிரியராகவே இருந்து வருகிறேன். ஏனெனில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கணினியாக நான் இருக்கவில்லை. மாணவர்களின் நியாயமான உள்ளுணர்வின் அழகையே நான் நம்புகிறேன். ஆமாம், இது ஒரு முயற்சி - சிறிய ஆனால் அர்த்தமுள்ள முயற்சி. நெட் போன்ற தேர்வுகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ள கற்றல் கலாச்சாரத்தில் தகுந்ததொரு மாற்றை உருவாக்குகின்ற முயற்சி. அதை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு, வருங்காலக் கல்வியாளர்களைத் தேர்வு செய்வதற்கு அறிவற்ற அதிகாரத்துவ இயந்திரத்தை விட ஆசிரியர்களை நம்புகின்ற, பரவலாக்கப்பட்ட, தன்னாட்சி கொண்ட பல்கலைக்கழகங்களே இப்போது நமக்குத் தேவைப்படுகின்றன. மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துவம், கற்பிக்கும் பாங்கு பற்றிய உணர்வின்மையுடன் இருந்து வருகின்ற பல்கலைக்கழக மானியக்குழு உயர்கல்வியின் உண்மையான உயிர்நாடியை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது என்றே எனக்குத் தோன்றுகிறது. 

  

ஆமாம்… மாணவர்களின் படைப்பாற்றலைத் தூண்ட முயற்சிக்கும் இதுபோன்ற என்னுடைய முட்டாள்தனமாக முயற்சிகளையும் மீறி அந்த மாணவர்கள் இந்த ஒற்றைப் பரிமாணம் கொண்ட, அளவிடப்பட்ட, குறுக உள்ளடக்கிய அறிவுலகிற்குள் உயிர் பிழைத்திருக்க வேண்டியிருக்கிறது. எனவே விரும்பத்தகாத இந்த நெட் தேர்வில் அவர்கள் வெற்றி பெறுவதற்கான எனது வாழ்த்துகளை விசித்திர முரண்பாடுகள் கொண்ட உணர்வுடன் தெரிவித்துக் கொள்வதை ஒருபோதும் நான் மறந்து விடப் போவதில்லை.    

 

https://thewire.in/192566/absurdity-national-eligibility-test/


2017 நவம்பர் 02 அன்று வெளியான கட்டுரை 

                                                                                                                       

Comments

மு. மாரியப்பன் said…
கல்வி என்பது, கண்டிப்பாக, வெறும் எண்ணிக்கைகள் அல்லது புள்ளி விவரங்கள் சார்ந்ததல்ல, என்பதையும் ஆசிரியர்களின் கல்வி குறித்த, தற்சமயம் இருந்துகொண்டிருக்கக் கூடிய, அனுகுமுறையில் ஏற்பட வேண்டிய அதி அவசியத்தையும், தற்சமயம் இருக்கக் கூடிய தேர்வு முறையால் எந்த ஒரு அறிவு சார்ந்த விளைவும் ஏற்படப் போவதில்லை என்பதையும், இந்தத் தேர்வு முறையின் மூலம் தேர்ச்சியடையக் கூடிய மாணவர்களால் இச்சமூகத்திற்கு எந்த ஒரு ஆக்கபூர்வமான விளைவையும் உருவாக்கக்கூடிய சிந்தனைத் திறன் எதுவும் அவர்களுக்கு ஏற்படப்போவதில்லை என்பதையும் தெளிவாகவும் எளிமையாகவும் உறுதியாகவும் விளக்கும் கட்டுரை. இருப்பினும் கட்டுரையாளர் விரும்பிய வண்ணம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் இன்னும் சொற்ப எண்ணிக்கையிலாவது இருக்கிறார்கள் என்ற எண்ணம் என் மனதில் உள்ளது