இணையவழி வகுப்புகளைக் கொண்டு ஆசிரியர்கள் செய்து வருவதை ஈடுசெய்ய முடியாது

தில்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத் தலைவர் ராஜிப் ரே உடன் நேர்காணல்

அதுல் கிருஷ்ணா

கேரியர்ஸ் 360


தேசிய கல்விக் கொள்கை - 2020க்கு எதிராகப் போராடி வருகின்ற தில்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் அந்தக் கல்விக் கொள்கையை 2022ஆம் ஆண்டிலிருந்து அமல்படுத்துவது என்ற தில்லி பல்கலைக்கழகத்தின் முடிவை மிகக் கடுமையாக எதிர்த்தது. இணையவழியிலான படிப்புகளுக்கு எதிராக தன்னுடைய கடுமையான எதிர்ப்பை அந்த ஆசிரியர் அமைப்பு பதிவு செய்ததன் விளைவாக பட்டப்படிப்புகளில் இணையவழி படிப்புகளுக்கு அனுமதி தருகின்ற முடிவை பல்கலைக்கழகக் கல்விப் பேரவை ஒத்தி வைக்க வேண்டியதாயிற்று. தில்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ராஜிப் ரே பொதுக்கல்வியில் இணையவழியிலான படிப்புகளுக்குத் தரப்படுகின்ற உந்துதலுக்கும், அவ்வாறாக மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள் மாணவர்கள் பெறுகின்ற பட்டத்தின் மதிப்பை எந்த அளவிற்கு நீர்த்துப் போகச் செய்யும் என்பதற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து கேரியரஸ்360 உடன் பேசிய போது விளக்கினார். 


கலப்பு கற்றல் அணுகுமுறை உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை எவ்வாறு  பார்க்கிறீர்கள்?

பரந்த அளவில் அரசின் நிதியுதவியுடன் அளிக்கப்பட்டு வருகின்ற கல்வியையும், அதன் தரத்தையும் நாம் பார்க்க வேண்டும். தரம், அளவு என்ற இரண்டின் கலவையாக அது இருக்க வேண்டும். இதுபோன்று மாற்றங்கள் கொண்டு வரப்படுவதற்கான வெளிப்படையான காரணம் அரசுக்கு ஏற்படும் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதாகவே இருக்கின்றது. கல்வி வளாகத்தில் ஆசிரியர்கள் நேரடியாக இருக்கும் போது அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் தொடர்ந்து நீண்ட காலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் மூன்று மாதங்களில் அந்தப் பாடங்களைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் ரூ.90,000க்கு குறைவான பணம் ஆசிரியர் ஒருவருக்கு ஊதியம் வழங்குவதற்காக ஒரே மாதத்தில் தேவைப்படும். ஆக ஆசியர்களைப் பணியில் அமர்த்திக் கொள்வதைக் காட்டிலும் தில்லி பல்கலைக்கழகம், அனைத்து அரசு பல்கலைக்கழகங்கள், மேலும் நாற்பதுக்கும் மேற்பட்ட மத்திய பல்கலைக்கழகங்கள் என்று பல கல்வி நிறுவனங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாகத் தயாரிக்கப்படுகின்ற பாடங்கள் நிச்சயம் மிகவும் குறைந்த செலவு கொண்டவையாகவே இருக்கும்.       

தில்லி பல்கலைக்கழகம் போன்ற இந்திய பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையில் பிஎச்.டி மாணவர்களை உருவாக்கி வருகின்றன. உயர் தகுதி கொண்ட அந்த ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு பற்றிய கேள்வியும் இங்கே முக்கியத்துவத்துடன் உள்ளது. இணையவழி படிப்புகள் வழங்கப்படுவதன் மூலம் ஆசிரியர் பணிச்சுமை (இந்த பணிச்சுமையின் அடிப்படையிலேயே தேவைப்படுகின்ற ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது) குறையும் போது, ஆசிரியர்கள் பலரும் தங்களுடைய வேலையை இழக்க நேரிடலாம். இணையவழி வகுப்புகளைக் கொண்டு ஒருபோதும் ஆசிரியர்கள் செய்து வருவதை ஈடுசெய்ய முடியாது.  

தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளுக்கு நாடு முழுவதிலுமிருந்து மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அந்த மாணவர்களுக்கிடையே டிஜிட்டல் இடைவெளி நிச்சயமாக இருக்கிறது. இணையவழியிலான வகுப்புகளுக்கான வளங்கள் உருவாக்கப்படுகின்றன என்ற போதிலும் நம்மால் அந்த வளங்களைப் பெற்றிராத மக்களை உண்மையில் சென்றடைய முடிந்திருக்கிறதா? அதுகுறித்து எனக்கு பெரும்பாலும் சந்தேகமே இருக்கிறது. வெறும் மொபைல் போனை வைத்திருப்பது மட்டுமே ஒருவரை மின்-எழுத்தறிவு கொண்டவராக நிச்சயம் மாற்றி விடாது.    

இந்தப் படிப்புகள் யாருக்கானவை என்று நினைக்கிறீர்கள்?

பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிக்கைகளின் அடிப்படையில் நாம் இப்போது 27 அல்லது 28 சதவிகித அளவிலே மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை எட்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது அதிலேயே எனக்குச் சந்தேகம் இருக்கிறது. ஆனாலும் கல்விக் கொள்கையில் 2030க்குள் ஐம்பது சதவிகித மாணவர் சேர்க்கையை எட்டுவது என்று இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட வயதுள்ள குழுவை அல்லது பிரிவுனரை இணையவழிக் கல்வி அல்லது தொலைதூரக் கல்வியைப் பெறுவதற்கென்று ஒதுக்குவதற்கான முயற்சிகளையே அரசு மேற்கொண்டு வருகிறது. எப்போதுமே பட்டம் பெற விரும்புகின்றவர்களுக்கான சந்தை இருக்கும். பட்டம் பெறுவதைத் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்காக விரும்புகின்ற செயலாகவே இந்திய நடுத்தர வர்க்கம் கருதுகின்றது.       

இணையவழி படிப்புகள் என்று வரும்போது தரம் குறித்த கேள்விகள் எழுகின்றனவா?

உண்மையில் உயர் கல்விக்கென்று  மிகப் பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடு மட்டுமே தேவைப்படுகின்றது. ஆனால் அந்த அளவிற்கு நிதி ஒதுக்கீடு இதுவரையிலும் செய்து தரப்படவே இல்லை. எடுத்துக்காட்டாக மத்திய பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கென்று 27 சதவிகித இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 2010ஆம் ஆண்டிற்குள் மாணவர்களுக்கான இடங்கள் விரிவாக்கம் செய்து முடிக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கேற்றவாறு ஆசிரியர் பணியிடங்களும் இருமடங்காக அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இரண்டாவது கட்டம் இதுவரையிலும் வந்திருக்கவில்லை. இதுதான் தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள நிலைமை. கல்லூரிகளுக்கான ஆசிரியப்  பணியிடங்கள் 2019 செப்டம்பரிலேயே ஒதுக்கப்பட்டு விட்ட நிலையிலும், ஒதுக்கப்பட்ட அந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரங்கள் இதுவரையிலும் வெளியிடப்படவே இல்லை.   

2020 டிசம்பர் 5 அன்று எங்களை அழைத்த கல்வித்துறை அமைச்சகம் முப்பது நாட்களுக்குள் பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தது. எட்டு மாதங்கள் கடந்து விட்டன - அந்த ஆசிரியர் பணியிடங்கள் எங்கே போயின என்று தெரியவில்லை.    

பாடத்திட்டத்தை நான்கு ஆண்டுகளாக ஓராண்டு காலத்திற்கு கூடுதலாக நீட்டிக்கும் போது 25% கூடுதல் மாணவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கென்று கூடுதல் உள்கட்டமைப்பு தேவைப்படுகின்ற நிலைமையில் வகுப்பறைகள், ஆசிரியர்களுக்கு எங்கே போவது? அதற்காக இதுவரையிலும் ஒரு பைசாவாவது செலவழிக்கப்பட்டுள்ளதா? எதுவுமில்லை. மத்திய பல்கலைக்கழகங்களுக்குக்கூட அரசு நிதியை வழங்கிட முன்வரவில்லை.

இந்தச் சூழ்நிலையில் பலரும் இணையவழி படிப்புகளைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. இணையவழிப் படிப்புகள் மூலம் மாணவர்கள் தங்கள் பாடங்களுக்கான கிரெடிட்டைப் பெற்றுக் கொண்டு அவற்றை கிரெடிட் வங்கியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு தரப்படுகிறது. மேலும் மாணவர்களால் பல்வேறு இடங்களிலிருந்து கிரெடிட்டுகளைப் பெற்று சேகரித்துக் கொள்ளவும் முடியும். ஏற்கனவே பட்டம் பெறுவதற்குத் தேவையான செயல்முறைகள் அனைத்தும் நீர்த்துப் போயிருக்கின்றன.    

கல்விக்காக ஒதுக்கப்படும் செலவை அதிகரிக்கப் போவதில்லை என்பதால் நாற்பது சதவிகித படிப்புகளை டிஜிட்டல் தளங்கள் மூலம் கற்பிக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. தேசிய கல்விக் கொள்கையைச் சந்தைப்படுத்துவதற்காக மட்டுமே அரசாங்கம் பணத்தைச் செலவிட்டு வருகிறது.      

கல்விக்காக அரசு நிதி என்பது வெறுமனே ஆசிரியர்களுக்கான ஊதியத்தை மட்டுமே குறிப்பதாக இருக்கவில்லை. உண்மையில் அதன் பொருள் புதிய உள்கட்டமைப்புகள், புதிய படிப்புகள் போன்றவற்றிற்கான செலவுகள் என்பதாகவே இருக்கின்றது. இப்போது சமூகத்தின் அனைத்து அடுக்கு சார்ந்தவர்களுக்கும் அரசு உதவி பெறும்​​ பொதுநிறுவனங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. இனி வரும் காலங்களில் அதுபோன்ற நிலைமை நீடித்து நிற்கப் போவதில்லை.      

வெகுஜனக் கல்வி விரிவுபடுத்தப்படும் அதே வேளையில் தரத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் தனியாரால் நன்கு நிதியளிக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலாண்மை, சட்டம், நர்சிங் போன்ற துறைகளில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தனியார்மயமாக்கல் நடந்துள்ளது. தாராளவாத கலை, அறிவியல், சமூக அறிவியல் துறைகளிலும் நன்கு நிதியளிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் வந்து கொண்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டின் தலைசிறந்த மத்திய பல்கலைக்கழகங்களும், அரசு நிதியளிக்கப்பட்டு வருகின்ற உயர்கல்வி நிறுவனங்களும் தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள முயல வேண்டும். தேவையான நிதியை அளிக்காமல் அரசு எங்களைக் கொல்லும் என்றால், பள்ளிகளில் நடந்ததைப் போன்றே உயர்கல்வியிலும் நடக்கப் போகின்றது - மத்தியதர வர்க்கத்தினர் தனியார் துறையை நோக்கி முழுமையாக நகர்ந்து செல்லப் போகின்றனர்.     

பல்கலைக்கழக மானியக் குழுவால் நிதியளிக்கப்பட்டு வருகின்ற பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் பொதுமக்களுக்கு உதவுகின்ற முயற்சிகள் என்ற அடிப்படையிலேயே துவங்கப்பட்டன. ஆனால் இன்றைக்கு யாரும் அவ்வாறு செய்ய விரும்புவதில்லை - அனைவரும் லாபம் சம்பாதிக்கவே விரும்புகின்றனர். சுயநிதி முறையில் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி அளித்து வருவதால், மாணவர்கள் அதிக கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் சமதளத்தை ஏற்படுத்தித் தருகிறோம் என்ற பெயரில் நிகழ்துள்ள விளைவுகளால், தாழ்த்தப்பட்ட பின்னணியில் இருந்து வருகின்ற மாணவர்கள் மிகவும் மோசமான நிலையைக் கடந்து செல்ல வேண்டியதாக உள்ளது.  

இணையவழிக் கல்வியில் உங்களுக்கிருக்கின்ற முக்கிய ஆட்சேபணைகள் யாவை?

தற்போதைய கட்டமைப்பைக் கொண்டு அவர்கள் செய்ய முயல்கின்ற செயல்கள்தான் பெரும்பாலும் எங்கள் ஆட்சேபணைக்குரியவையாக இருக்கின்றன. தற்போதைய அமைப்பு நாற்பது சதவிகித படிப்புகள் இணையவழியில் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற குறிக்கோள் கொண்டதாக உள்ளது. அது மாணவர் நலன் சார்ந்த கல்விமுறையாக விவரிக்கப்பட்டு வருகிறது. மேலோட்டமாகப் பார்க்கும் போது தங்களுக்குத் தேவையானவற்றை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்பது போல் தெரிகிறது என்றாலும் உண்மையில் அது அவ்வாறாக இருக்கப் போவதில்லை. தேர்வு அடிப்படையிலான கிரெடிட் என்பது கல்வி நிறுவனங்கள் வழங்கத் தயாராக இருக்கின்ற பாடத் திட்டங்களைப் பொறுத்தே இருக்கும். ஆக ஒருவரால் தத்துவம், கணிதத்தை அல்லது வரலாறு, உளவியல் பாடங்களை சேர்ந்து தேர்வு செய்து கொள்ள முடியுமா என்ற கேள்வி இங்கே எழுகின்றது. அந்தப் பாடங்களைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்களை நியமிப்பதற்கென்று கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிதி எதுவும் அளிக்காது என்பதால் தாங்கள் விரும்பிய  பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ள முடியாது என்பதே இறுதியான முடிவாக இருக்கும்.  

தாங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் கல்லூரிகளில் தங்களுக்கு விருப்பமான பாடங்களைத் தேர்வு செய்து கொள்வதற்கான வழியில்லாமல் மாணவர்கள் இருக்கும் போது அவர்கள் வெளியே மற்ற கல்லூரிகளில் அந்தப் பாடங்களைத் தேட வேண்டி வரும். அவ்வாறான நிலைமையில் யார் கல்லூரியிலிருந்து வெளியேறுவார்கள்? பிரபலமில்லாத கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் மிகவும் பிரபலமான கல்லூரிகளுக்கு நகர்ந்து செல்ல வேண்டி வரும் என்பதால் ஒரு சில நிறுவனங்களால் மட்டுமே பணத்தைச் சம்பாதிக்க முடியும். தில்லி பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற பல கல்லூரிகளால் வெற்றிகரமாக நடைபெற முடியும் என்றாலும் மற்ற கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. வழக்கத்தில் உள்ள பாடத்திட்டங்களுக்குத் துணைபுரிகின்ற இணையவழி படிப்புகள் பற்றி நான் கவலைப்படவில்லை. பாரம்பரியமாக இல்லாததொரு புதிய பாடத்தைச் சேர்த்தால் அதுவும் நல்லதே. ஆனால் இப்போதைய மாற்றங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்பட்டு வருவதை மாற்றும் வகையிலேயே இருக்கின்றன. ஆசிரியர்களுக்கு இணையாக வெவ்வேறு தளங்களில் பாடங்கள் உருவாக்கப்படுவது பலரது வேலை வாய்ப்புகளை பறிப்பதாகவே இருக்கும்.  

ஏழை மாணவர்களை அது எவ்வாறு பாதிக்கும்?

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பைப் பெற வேண்டும். இந்த நான்கு அங்குலம் x இரண்டு அங்குல மொபைல் போன்கள் எத்தனை மாணவர்களிடம் இருக்கின்றன? எத்தனை பேரிடம் டேப்லெட் அல்லது லேப்டாப் இருக்கிறது? எனது மாணவர்களில் ஐம்பது சதவிகிதம் பேர் வீட்டில் வைஃபை வசதிகள் எதுவும் கிடையாது. மற்ற கல்வி நிறுவனங்களிலும் இதுபோன்ற வசதிகள் சிறப்பாக இருக்கும் என்பதும் சந்தேகம்தான்.   

நான் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஊகிக்க விரும்பவில்லை. ஆனாலும் பல்வேறு கட்டங்களில் நுழைந்து வெளியேறுகின்ற வகையில் உருவாக்கப்படுகின்ற அமைப்பில் ஏழைகளே அங்கிருந்து முதலில் வெளியேறுவார்கள். இப்போது பட்டப்படிப்பை மூன்றாண்டுகளில் முடிக்க வேண்டும் என்ற அழுத்தம் இருக்கிறது. ஆனால் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்ப்டும் போது, மாணவர்கள் டிப்ளோமா பெறுவதை மட்டுமே கருத்தில் கொள்வார்கள். டிப்ளமோ பெறுவதற்கான அமைப்பு என்பது வேறுபட்டதாக  இருக்க வேண்டும். பட்டப்படிப்பில் ஓராண்டில் டிப்ளமோ பெறுவது என்பது  இருக்குமென்றால், அதைப் பெறுகின்ற மாணவர்கள் எதுவொன்றையும் செய்யத் தகுதியற்றவராகவே இருப்பார்கள்.

https://news.careers360.com/delhi-university-ug-admission-2021-du-colleges-teachers-nep-2020-ugc-national-education-policy

Comments